ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

German Left Party denounces “Yellow Vest” protests

ஜேர்மன் இடது கட்சி "மஞ்சள் சீருடை" போராட்டங்களைக் கண்டிக்கிறது

By Peter Schwarz
7 December 2018

“பணக்காரர்களின் ஜனாதிபதி" இமானுவல் மக்ரோனுக்கு எதிராக போராடுவதற்காக கடந்த மூன்று வாரங்களாக பிரான்சின் வீதிகளில் இறங்கி உள்ள "மஞ்சள் சீருடையாளர்கள்" பாரீஸ் அரசாங்கத்தை மட்டுமல்ல, மாறாக ஜேர்மன் இடது கட்சியின் பேர்லின் தலைமை அலுவலகத்தையும் பீதியூட்டி உள்ளனர்.

அடிமட்டத்திலிருந்து எழும் எந்தவொரு கிளர்ச்சிக்கும் வெறுப்பு என்பது, மேற்கு ஜேர்மனியின் சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளின் ஒரு குழுவுடன் முன்னாள் கிழக்கு ஜேர்மனியின் ஸ்ராலினிச அரசு கட்சி கலந்து கரைந்து உருவான இடது கட்சியின் உயிரணுக்களிலேயே (DNA) எழுதப்பட்டுள்ளது. பிரெடெரிக் ஏங்கெல்ஸின் பொழிப்புரைகளில் இருந்து கூறுவதானால், அது "அனைத்து அரசாங்கங்களது ஒன்றுதிரண்ட பிற்போக்குத்தனமான சதிகள் அனைத்தையும் விட மிகச் சிறிய மக்கள் இயக்கத்தைக் கண்டு அதிகமாக மிரட்சியடைகிறது". தொழிற்சங்கங்களால் கட்டுப்படுத்தப்படுத்த முடியாத மற்றும் தடுத்து நிறுத்த முடியாத எந்தவொரு சமூக இயக்கத்தையும் இடது கட்சியானது உள்ளுணர்வாக ஒரு வலதுசாரி சதியாக கருதுகிறது.

இடது கட்சியின் உத்தியோக பத்திரிகையான Neues Deutschland (ND) பிரான்ஸ் போராட்டங்களுக்குப் பகிரங்கமான விரோதத்துடன் எதிர்வினையாற்றியதை ஒரு வாரத்திற்கு முன்னர் WSWS சுட்டிக்காட்டி இருந்தது. இப்போது அக்கட்சியின் துணை-தலைவர் பேர்ன்ட் றிக்சிங்கர் (Bernd Riexinger) மஞ்சள் சீருடையாளர்களைக் கண்டித்து பேசியுள்ளார். “இந்த இயக்கத்தின் அணிகளில் அதிதீவிர-வலதுசாரிகளுக்கு இருக்கும் ஆற்றல் கவலையளிக்கிறது,” என்றார். ஜேர்மனியில் "இடது மற்றும் வலதுசாரி உணர்வுகள் இதுபோன்று இணக்கமாக இருப்பதை நினைத்தும் பார்க்க முடியாது,” என்றார்.

Neues Deutschland (ND) அதன் இணைய பதிப்பில் றிக்சிங்கரின் தரக்குறைவான கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததுடன், வீதி போராட்டங்களை ஓர் "அபாயகரமான அபிவிருத்தி" என்று எச்சரித்த ஒரு பிரெஞ்சு தொழிற்சங்கவாதி உடனான ஒரு பேட்டியையும் அவற்றுக்குத் துணையாக வெளியிட்டது.

“அதில் பங்கெடுக்க நான் மறுக்கிறேன் ஏனென்றால் மஞ்சள் சீருடையாளர்கள் வலதுசாரிகளிடமிருந்து பலமாக ஆதரிக்கப்பட்டுள்ளார்,” என்று Solidaires-SUD தொழிற்சங்கத்தின் ஓர் அதிகாரி Michel Poittevin கூறியதை Neues Deutschland மேற்கோளிட்டது. அனைத்திற்கும் மேலாக, ஒவ்வொரு சமூக இயக்கத்தையும் தனிமைப்படுத்தி, உடைத்து, விற்றுத் தள்ளியதில் ஒரு நீண்ட முன்வரலாறு கொண்டுள்ள தொழிற்சங்கங்கள், மஞ்சள் சீருடையாளர்கள் மீது எந்த செல்வாக்கும் கொண்டிருக்கவில்லை என்று Poittevin சீறினார். தொழிற்சங்கத்தில் இல்லாதவர்கள் அல்லது தொழிற்சங்கத்துடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களாக மட்டுமே இருப்பவர்கள், அல்லது அதில் இணைய விருப்பமில்லாமல் இருப்பவர்களும் கூட, அவர்களாகவே அதை ஒழுங்கமைத்து கொண்டார்கள்,” என்றவர் புலம்புகிறார்.

Poittevin, இத்தாலியின் ஐந்து-நட்சத்திர இயக்கத்துடனும் மற்றும் 1950 களில் தற்காலிக தேர்தல் வெற்றிகளைப் பெற்றதும் மற்றும் தேசிய முன்னணியின் ஸ்தாபகர் ஜோன்-மரி லு பென் செயலூக்கத்துடன் இருந்ததுமான ஒரு அதிவலது கட்சியான பிரெஞ்சு Poujadists உடனும் மக்ரோனுக்கு எதிரான இந்த போராட்டங்களை ஒப்பிடுகிறார்.

இதுவொரு வக்கிரமான அவதூறு என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. மஞ்சள் சீருடையாளர் இயக்கமானது, ஊதியங்களும் மற்றும் செல்வவளம் தசாப்தங்களாக ஏழைகளிடமிருந்து பணக்காரர்களுக்கு மறுபகிர்வுக்குச் செய்யப்பட்டு, அது பல தொழிலாள வர்க்க குடும்பங்கள் வாழ்வதையே சாத்தியமில்லாது செய்துள்ள நிலையில், அதற்கு எதிராக திரும்பி உள்ளது. சர்வதேச தொழிலாள வர்க்க தாக்குதலின் ஒரு பாகமாக உள்ள அது, அதிகரித்து வரும் பல்வேறு வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களில் தன்னை வெளிப்படுத்துகிறது. முன்னர் பணக்காரர்களுக்கு வரிகளைக் குறைத்திருந்த, முன்னாள் முதலீட்டு வங்கியாளர் மக்ரோன் விதித்த எரிவாயு வரியுயர்வு, இறுதியாக தாங்கொணாத நிலைமையை உண்டாக்கி இருந்தது.

இந்த இயக்கத்தை எதிர்க்கும் பல முதலாளித்துவ ஊடகங்களும் கூட இந்த உண்மையை ஒப்புக் கொண்டன. டிசம்பர் 4 அன்று Le Monde நாளிதழ் தலையங்கம் குறிப்பிடுகையில், 2008 உலகளாவிய நிதியியல் நெருக்கடிக்கு விடையிறுப்பதில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களின் இயலாமை தான், “சமத்துவமின்மை உணர்வின் விளைநிலத்திற்கான மிகவும் சக்திவாய்ந்த கோபத்திற்கு எரியூட்டி" உள்ளதாக குறிப்பிட்டது.

சமூக சமத்துவத்திற்கான வேட்கை, புரட்சிகரமான நோக்கங்களைக் கொண்டதாகும். முதலாளித்துவத்தைத் தூக்கியெறிவதன் மூலமாக மட்டுமே அதை அடைய முடியும் என்பதோடு, அதற்கு தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச, சோசலிச இயக்கம் அவசியமாகும். இது, தேசியவாதத்தைத் தூண்டிவிடும், தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தும், மற்றும் மூர்க்கமான சக்திகளோடு சேர்ந்து முதலாளித்துவத்தை பாதுகாக்க தயாரிப்பு செய்து வரும் தீவிர வலதின் இலட்சியங்களுக்கு நேரெதிராக நிற்கிறது.

அதீத வலதுசாரிகள் இந்த இயக்கத்தில் மேலாளுமை செலுத்த விரும்புகிறார்கள் மற்றும் அவர்களால் பகுதியாக அவ்வாறு செய்ய முடிகிறது என்றாலும், பின்னர் அதற்கும் கூட காரணம் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களில் முன்னணியில் இருந்துள்ள மற்றும் இருந்து வருகின்ற "இடதுசாரிகள்" என்று கூறிக் கொள்பவர்கள் மீது பரந்த அடுக்குகளுக்கு ஏற்பட்டுள்ள கோபத்தையும் ஏமாற்றத்தையும் அந்த அதீத வலதுசாரிகளால் சுரண்டிக் கொள்ள முடிகிறது என்பதனால் மட்டுமே ஆகும். இது வெறுமனே பிரெஞ்சு சோசலிசகட்சிக்கும் மற்றும் ஜேர்மன் சமூக ஜனநாயக கட்சிக்கு மட்டும் பொருந்துவதில்லை, மாறாக இடது கட்சிக்கும் இது பொருந்தும். ஏனென்றால் இது பேர்லினிலும் மற்றும் ஏனைய கூட்டாட்சி மாநிலங்களின் நிர்வாகங்களுக்குத் தலைமை கொடுக்கும் அல்லது அதன் பாகமாக இருக்கும் இடங்களிலும் அது சமூக செலவினக் குறைப்பு கொள்கைகளுக்குத் தான் அழுத்தமளித்து வருகிறது.

மஞ்சள் சீருடையாளர்களை றிக்சிங்கர் குறைகூறுவது, அதீத வலதுசாரிகளுக்கு நிலைமையைச் சாதகமாக்குகின்றது. “இந்த இயக்கத்தின் அணிகளில் அதிதீவிர-வலதுசாரிகள் இருக்கக்கூடிய சாத்தியக்கூறு" அவரை கவலைப்படுத்தவில்லை, மாறாக அதன் புரட்சிகர சாத்தியக்கூறும், தொழிற்சங்கங்கள் மற்றும் ஸ்தாபக கட்சிகளின் கவசங்களுக்கு வெளியே அது அபிவிருத்தி அடைந்து வருகிறது என்ற உண்மையும் தான் அவரைக் கவலைப்படுத்துகிறது. இடது கட்சியின் தலைமையை ஏற்பதற்கு முன்னதாக, றிக்சிங்கர் ஸ்ருட்கார்ட் நகரின் வேர்டி தொழிற்சங்கத்தில் (பொதுச்சேவை தொழிற்சங்கம்) முழு-நேர செயலாளராக இருந்தார் என்பதோடு, இத்தகைய பிரச்சினைகளுடன் அவர் பரிச்சயப்பட்டிருந்தார்.

இடது கட்சி, கிரீஸில் அதிவலது சுதந்திர கிரேக்கர்கள் கட்சியுடனான கூட்டணியில் ஈரவிக்கமற்ற சமூக செலவின குறைப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்ற கிரீஸில் அதன் முன்னுதாரண மனிதர் அலெக்சிஸ் சிப்ராஸைப் போலவே, தன்னைத்தானே அதிவலதுடன் இணங்குவித்துக் கொள்ளும், கூட்டும் வைத்துக் கொள்ளக்கூடும். ஆனால் முதலாளித்துவ ஒழுங்கை அச்சுறுத்துகின்ற ஓர் இயக்கத்துடன் அது தன்னைத்தானே இணங்குவித்துக் கொள்ளாது, கூட்டும் வைத்துக் கொள்ளாது.

றிக்சிங்கருக்கு எதிர்முரணாக, ஜேர்மன் நாடாளுமன்றத்தில் இடது கட்சி கன்னையின் தலைவர் சாரா வாகன்கினெக்ட் மஞ்சள் சீருடையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். “அரசியல் அவர்களின் வாழ்வை மோசமாக்கும் போது, தங்களைப் பாதுகாத்துக் கொள்ள போராடுவது அவர்களின் உரிமை என்று நான் நினைக்கிறேன்,” என்றார். “சாமானிய மக்களின் நலன்களை விட வணிக தரகர்களின் நலன்களைக் குறித்து அதிக அக்கறை கொள்ளும் ஓர் அரசாங்கத்திற்கு எதிராக ஜேர்மனியில் பலமான போராட்டங்கள்" வருமென அவர் நம்புவதாக தெரிவித்தார்.

உண்மையில், றிக்சிங்கர் மற்றும் வாகன்கினெக்ட் க்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் முற்றிலும் தந்திரோபாயமானது. மஞ்சள் சீருடையாளர்களை றிக்சிங்கர் கண்டிக்கின்ற அதேவேளையில், வாகன்கினெக்ட் அந்த இயக்கம் ஒரு சோசலிச திசையில் அபிவிருத்தி அடைவதிலிருந்து அதை தடுப்பதற்காக அதன் மீது செல்வாக்கு செலுத்துவதை அவசியமென கருதுகிறார்.

வாகன்கினெக்ட் மற்றும் அவரது கணவர் ஒஸ்கார் லாபொன்டைன் உடன் நெருக்கமாக பணியாற்றும் ஜோன்-லூக் மெலோன்சோன் இது குறித்து இன்னும் அதிக வெளிப்படையாக உள்ளார். அடிபணியா பிரான்சின் தலைவர் (La France Insoumise) ஒரு சமீபத்திய வலைப்பதிவில், தற்போதைய சம்பவங்கள் குறித்து அவர் உற்சாகமடைவதாக குறிப்பிடுவதுடன், அதை அவர் "மக்களின் புரட்சி" (révolution citoyenne) என்று வர்ணிக்கிறார். மெலோன்சோனின் கருத்துப்படி, பாட்டாளி வர்க்க மற்றும் சோசலிச புரட்சியின் கருத்துருக்கள் வரலாற்று இயக்கவியலில் ஒரு மத்திய பாத்திரம் வகிக்கவில்லை என்பதை இந்த இயக்கம் உறுதிப்படுத்துகிறதாம்.

இந்த இயக்கம் இன்னும் கூடுதலாக பாட்டாளி வர்க்க தன்மையை ஏற்பதிலிருந்து இருந்தும் மற்றும் சோசலிச புரட்சியை நோக்கி நகர்வதில் இருந்தும், உண்மையில் இதை அவர் தடுக்க விரும்புகிறார். அது "அமைதியாக மற்றும் ஜனநாயகத் தன்மையோடு" இருக்கிறது என்று கூறும் அவர், அது இப்போதைய இந்த அமைப்புகளின் கட்டமைப்புக்குள் தீர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முதலாளித்துவ சொத்துறவுகளையும், முதலாளித்துவ அரசு அமைப்புகளையும் பாதிக்காத "மக்களின் புரட்சியை" அவர் விரும்புகிறார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l'égalité socialiste – PES) மட்டுமே மக்ரோனுக்கு எதிரான இந்த போராட்டத்தை விரிவுபடுத்த, பிரெஞ்சு மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஆதரவை அணிதிரட்ட மற்றும் போராட்டத்தை வழிநடத்துவதற்கும் மற்றும் ஒழுங்கமைப்பதற்கும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான நடவடிக்கைகளைக் குழுக்களை ஏற்படுத்த போராடி வரும் ஒரே அரசியல் போக்காகும்.