ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The demonstrations in France and the global class struggle

பிரான்சின் ஆர்ப்பாட்டங்களும் உலகளாவிய வர்க்கப் போராட்டமும்

Alex Lantier
7 December 2018

பிரெஞ்சு அரசைப் பிடித்திருக்கும் அரசியல் நெருக்கடி தீவிரமடையும் நிலையில், வங்கியாளராக இருந்து ஜனாதிபதியாக ஆன இம்மானுவல் மக்ரோனின் அரசாங்கம், இந்த வார இறுதியிலான “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பிற எதிர்ப்புப் போராட்டங்களுடன் ஒரு பெரும் மோதலுக்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது.

2005 க்குப் பின்னர் முதன்முறையாக சனிக்கிழமையன்று தலைநகரின் வீதிகளில் ஆயுதமேந்திய கார்கள் துணையுடன் பாரிஸில் நிறுத்தப்படவிருக்கும் 8,000 பேர் உள்ளிட, நாடெங்கிலும் 89,000 கலகத் தடுப்பு மற்றும் இராணுவப் போலிஸை நிறுத்துவதற்கு உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. சென்ற சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தின் போது பாரிஸ் மாடிகளில் தொலைதூரத்தில் இருந்து குறிபார்த்து சுடுபவர்களை நிலைநிறுத்தியதற்குப் பின்னர் பின்தொடர்ந்து இது வருகிறது. முந்தைய அனைத்து ஆர்ப்பாட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட மொத்தமான எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையிலான மரணங்களையும் கைதுகளையும் எதிர்பார்ப்பதாக அச்சுறுத்தலை விடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்துவதற்கு போலிஸ் முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

கால அவகாசத்தை பெறுவதற்கான ஒரு ஆற்றோணா முயற்சியில், மக்ரோன் அரசாங்கம், ஆரம்பகட்ட ஆர்ப்பாட்டங்களைத் தூண்டிய எரிபொருள் வரியை தள்ளிப்போட்டு, பின் இரத்துசெய்வதாக அறிவித்தது. ஆயினும், கோபம் தொடர்ந்து பெருகி வருவதோடு, பல தரப்பட்ட வர்க்கப் பிரச்சினைகளால் உந்தப்பட்டு மக்களின் மிகப் பரந்த பிரிவுகளை ஒன்றாகக் கொண்டுவருகிறது. ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களின் அதிகரிப்புகள், செல்வந்தர்களுக்கு வரிவிதிப்பது, செல்வத்தின் ஒரு மறுபங்கீடு ஆகியவற்றுக்கான கோரிக்கைகள் பரவி வருகின்றன.

வியாழனன்று, கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் கல்விக்கட்டண அதிகரிப்புகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான உயர்நிலைப் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பங்குபெற்றனர். ஒடுக்குமுறையைக் கொண்டும், 700க்கும் அதிகமான கைதுகளைக் கொண்டும் போலிஸ் பதிலிறுப்பு செய்தது. மாணவர்களை சுற்றிவளைத்த போலிஸ், டசன்கணக்கான வரிசைகளில் சிலரை சுவற்றுக்கு எதிராக, முழங்காலிட்டு இருக்க நிர்ப்பந்தித்திருந்ததை, இணையத்தில் பரவலாக பகிரப்பட்ட காணொளி ஒன்று காட்டியது. இந்த வார இறுதியில் நடத்தப்பட இருக்கும் அரசு ஒடுக்குமுறைக்கான வெறும் ஒரு முன்னோட்டமாக மட்டுமே இது இருக்கிறது.

பிரெஞ்சு அரசாங்கம் ஒரு பாரிய போலிஸ்-அரசு ஒடுக்குமுறைக்கு தயாரிப்பு செய்கிற நிலையில், அது ஆர்ப்பாட்டக்காரர்களை ஜனநாயகத்திற்கான ஒரு அபாயமாக அபத்தமான முறையில் கண்டனம் செய்தது. எலிசே ஜனாதிபதி மாளிகை நேற்று, “அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் மற்றும் வர்த்தக சமூகமும் அமைதிக்கு விண்ணப்பம் செய்ய” அழைப்பு விடுத்ததோடு, இது “இனியும் அரசியல் எதிர்ப்புக்கான காலமல்ல, மாறாக நமது குடியரசைச் சுற்றிய ஐக்கியத்திற்கான காலமாகும்” என்று அறிவித்தது. இந்த ஆர்ப்பாட்டங்கள் “பிரெஞ்சு மக்களின் மற்றும் நமது ஸ்தாபனங்களின் பாதுகாப்புக்கு” அச்சுறுத்தலாக இருப்பதாக பிரதமர் எட்வார்ட் பிலிப் தெரிவித்தார்.

இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் பிரான்சின் நாஜி-ஒத்துழைப்புவாத சர்வாதிகாரியாக இருந்த பிலிப் பெத்தானை மக்ரோன் சமீபத்தில் புகழ்ந்து பாராட்டிய பின்னர், ஜனநாயகம் குறித்து எவருக்கும் உபதேசிக்கும் அருகதை அவருக்கு இல்லை. ஜனநாயகத்திற்கான ஆபத்து வங்கிகளின் கட்டளைகளுக்கு எதிரான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டங்களில் இருந்து தோன்றவில்லை, மாறாக கலகத் தடுப்பு போலிஸ் மற்றும் தாங்கிகளுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிற மக்ரோன் போன்றவர்களால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிற முதலாளித்துவ ஆளும் உயரடுக்கிடம் இருந்தே தோன்றுகிறது.

ஆர்ப்பாட்டங்கள் அபிவிருத்தி காணும்நிலையில், அடிப்படையான வர்க்கப் பிரச்சினைகள் முன்னுக்கு வந்து கொண்டிருக்கின்றன. நியூயோர்க் டைம்ஸ் வியாழனன்று வெளியிட்ட ஒரு கவலையான கட்டுரையில், பிரான்சிலான ஆர்ப்பாட்டங்கள் “ஒரு வலதுசாரிக் கட்சிக்கு மட்டுமின்றி, எந்தவொரு கட்சிக்கும் கட்டுப்படாததாக இருக்கிறது” என்று குறிப்பிட்டது. மாறாக, “இந்த எழுச்சியானது மிகவும் உயிர்ப்பானதாக, தன்னெழுச்சியானதாக மற்றும் சுய-தீர்மானமிக்கதாக இருக்கிறது. இது பெரும்பாலும் பொருளாதார வர்க்கம் குறித்ததாக இருக்கிறது. செலுத்துமதி தொகைகளை செலுத்த இயலாமை குறித்ததாக இருக்கிறது.”

தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தற்போதுள்ள அமைப்புகளுக்கு வெளியில் இந்த ஆர்ப்பாட்டங்கள் எழுந்திருப்பதே அவற்றுக்கு ஒரு வெடிப்பான தன்மையைக் கொண்டுவந்து தந்திருக்கிறது என்பதே உண்மையாகும். தொழிலாளர்கள் மத்தியில் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு பரவுவதற்கான பதிலிறுப்பாக, தொழிற்சங்கங்கள் அடுத்த வாரத்தில் வரம்புபட்ட வேலைநிறுத்த நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றன. ஆயினும் இந்த இயக்கத்தை மட்டுப்படுத்துவதும் முடிவிற்கு கொண்டுவந்து அதன்மூலம் அதனைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதும் தான் தொழிற்சங்கங்களின் நோக்கமாய் இருக்கிறது.

இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு உந்திக் கொண்டிருக்கக் கூடிய சமூக சமத்துவம் மற்றும் செல்வத்தின் ஒரு மறுபங்கீடு ஆகிய கோரிக்கைகளுக்கு காது கொடுக்க மக்ரோனுக்கு எந்த விருப்பமும் இல்லை. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அது பிரதிநிதித்துவம் செய்கிற வர்க்க நலன்களாலும் உலகச் சந்தைகள் மற்றும் நிதி நிறுவனங்களது கோரிக்கைகளாலுமே உத்தரவிடப்படுவனவாக இருக்கின்றன.

பிரான்சிற்குள்ளான நிகழ்வுகள் ஒரு உலகளாவிய நிகழ்ச்சிப்போக்கின் ஒரு தேசிய வெளிப்பாடு ஆகும். ஒவ்வொரு நாட்டிலுமே, ஆளும் வர்க்கம் ஊதியங்கள் மற்றும் வேலைநிலைமைகள் மீது ஒரு புதிய சுற்றுத் தாக்குதல்களை திணிப்பதற்கு முனைந்து கொண்டிருக்கிறது. ஆயினும், சமூக சமத்துவமின்மையின் அவலட்சணமான மட்டங்களால் உந்தப்படுவதாக இருக்கும் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியும் ஒரு உலகளாவிய நிகழ்ச்சிப்போக்காகவே அபிவிருத்தியடைந்து கொண்டிருக்கிறது.

மக்ரோனுக்கு எதிரான பிரெஞ்சு தொழிலாளர்களும் இளைஞர்களும் ஆதரவுக்காக சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தையே நோக்கி திரும்ப வேண்டும்!

கடந்த ஆண்டு உலகெங்கிலும் வர்க்க மோதல் கணிசமான அளவில் தீவிரப்படும் குணாம்சத்தைக் கொண்டிருந்தது. சமூக வெட்டுக்களுக்கு எதிரான ஈரானிய தொழிலாளர்களது போராட்டங்களுடன் ஆண்டு தொடங்கியது, ஐரோப்பாவில் துருக்கி மற்றும் ஜேர்மன் உலோகத்துறை தொழிலாளர்கள் ஊதிய அதிகரிப்புகளுக்காக நடத்திய வேலைநிறுத்தங்கள் அதனைப் பின்தொடர்ந்தன. அமெரிக்காவில் ஆசிரியர்கள் தொழிற்சங்க அதிகாரத்துவத்தை மீறி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர், பிரிட்டன், துனிசியா மற்றும் பிரான்சில் ஆசிரியர்கள் பின்தொடர்ந்தனர்.

பிரான்சில் மக்ரோனின் தேசிய இரயில்வே தனியார்மயமாக்கத்திற்கு எதிரான வேலைநிறுத்தப் போராட்டங்களும், அதனுடன் சேர்ந்து மக்ரோனின் பிற்போக்கான கல்விச் சீர்திருத்தங்களுக்கு எதிரான மாணவர் ஆர்ப்பாட்டங்களும் வந்தன. ஐரோப்பாவெங்கிலுமான நாடுகளில் Ryanairக்கு எதிராக தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர், அத்துடன் உலகின் மிகப்பெரும் பணக்காரரான ஜெஃப் பெசோஸ் நடத்துகின்ற அமசன் நிறுவனத்தின் மோசமான வேலைநிலைமைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் சர்வதேச அளவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சர்வதேச அளவில் தொழிலாள-வர்க்க கோபம் பெருகுவதன் மத்தியில் இந்த ஆண்டு முடிவுக்கு வருகிறது. இலங்கையில் சென்ற மாதத்தில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், 100 சதவீத ஊதிய அதிகரிப்பைக் கோரி சமூக ஊடகங்களின் வழி ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு வெடிப்பான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர், இப்போது தொழிற்சங்க எதிர்ப்பையும் மீறி வேலைநிறுத்த நடவடிக்கையை முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்காவில், வாகன உற்பத்தித் துறையின் ஒரு உலகளாவிய மறுசீரமைப்பின் பகுதியாக பாரிய ஆட்குறைப்புகளுக்கும் ஆலை மூடல்களுக்கும் தொழிற்சங்கங்களும் பெருநிறுவன நிர்வாகங்களும் கூட்டாக சதி செய்வதை அடுத்து அமெரிக்க வாகன உற்பத்தித் தொழிலாளர்கள் மத்தியில் கோபம் பெருகிக் கொண்டிருக்கிறது. அத்துடன், ஊடகங்களில் பெரும்பாலும் செய்திகள் வெளியாகாவிட்டாலும், நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்குபெறும் வேலைநிறுத்தங்கள் தென்கொரியா, சிலி மற்றும் பிற நாடுகளை உலுக்கிக் கொண்டிருக்கின்றன.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, அதன் 1988 உலக முன்னோக்குகள் தீர்மானத்தில், வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தியில் முதலாளித்துவ உற்பத்தி பூகோளமயமாக்கல் கொண்டிருக்கும் தாக்கங்களை சுட்டிக்காட்டியது: “வர்க்கப் போராட்டமானது அதன் வடிவத்தில் மட்டுமே தேசிய அளவிலானதாக இருக்கிறது, ஆனால் அதன் சாரத்தில் அது ஒரு சர்வதேசப் போராட்டமாகும் என்பது மார்க்சிசத்தின் ஒரு அடிப்படை முன்மொழிவாக நீண்டகாலமாக இருந்து வருவதாகும். ஆயினும் முதலாளித்துவ அபிவிருத்தியின் புதிய அம்சங்களைக் கொண்டு பார்க்கையில், வர்க்கப் போராட்டத்தின் வடிவமும் கூட ஒரு சர்வதேசத் தன்மையைப் பெற்றாக வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் மிக அடிப்படையான போராட்டங்களும் கூட அதன் நடவடிக்கைகளை சர்வதேச அளவில் ஒருங்கிணைப்பதன் அவசியத்தை முன்வைக்கின்றன.”

ஆண்டின் தொடக்கத்தில், உலக சோசலிச வலைத் தளம் 2018 இன் இந்த புது வருடம், எல்லாவற்றுக்கும் மேல்  உலகெங்கிலும் சமூகப் பதட்டங்களின் ஒரு அதி தீவிரப்படலின் மூலமாகவும் வர்க்க மோதல்களின் ஒரு அதிகரிப்பினாலும் குணாம்சப்படுத்திக் காட்டப்படுவதாக இருக்கும் எனக் கூறியது.  நிகழ்வுகள் இப்போது இந்த பகுப்பாய்வை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டிருக்கின்றன. தொழிலாள வர்க்கத்திற்கு, இது அதிமுக்கியமான மூலோபாயப் பிரச்சினைகளை எழுப்புகிறது. கோபமும் எதிர்ப்பும் மட்டும் போதுமானதில்லை. தொழிலாள வர்க்கத்திற்கு தனது சொந்த அமைப்பும் அரசியல் முன்னோக்கும் அவசியமாயுள்ளது.

தொழிலாளர்களுக்கு அவர்களது போராட்டங்களை ஒருங்கிணைப்பதற்கு முதலாளித்துவ-ஆதரவு தொழிற்சங்கங்களில் இருந்து முற்றிலும் சுயாதீனமான, அவர்களது சொந்த அமைப்புகள் அவசியமாய் உள்ளன. பிரெஞ்சு தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒவ்வொரு வேலையிடத்திலும், அண்மைப்பகுதியிலும் மற்றும் பள்ளியிலும் நடவடிக்கைக் குழுக்களை உடனடியாக அமைக்க சோசலிச சமத்துவக் கட்சி (PES) அழைப்பு விடுக்கிறது. இந்த குழுக்கள் இப்போது கட்டவிழ்ந்து கொண்டிருக்கும் போராட்டங்களை ஐக்கியப்படுத்துவனவாகவும், போராட்டங்கள் கலைத்து விடப்படுவதில் இருந்தும் விலைபேசப்படுவதில் இருந்தும் தடுப்பனவாகவும், அத்துடன் தொழிலாளர்களை ஒடுக்குமுறையில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பவையாகவும் இருக்க வேண்டும்.

பிரான்சில் பெரும்பாலும் கிராமப்புற மற்றும் பிராந்திய நகரத் தொழிலாளர்களைக் கொண்டுள்ள இந்தக் குழுக்கள் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டக்காரர்களை பிரான்சின் மிகப்பெரும் நகரங்களின் புறநகர்ப்பகுதிகளில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளுடன் ஐக்கியப்படுவதற்கும், தொழிலாளர்களை இனரீதியாக பிளவுபடுத்துவதற்கு செய்யப்படுகின்ற இனவெறி முயற்சிகளை எதிர்த்துப் போராடுவதற்கும் அனுமதிக்கும்.

தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் சுயாதீனமான அமைப்புகளை உருவாக்குவதானது ஒரு புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதுடன் பிரிக்கவியலாது தொடர்புபட்டுள்ளது. பிரான்சிலும் மற்றும் ஒவ்வொரு நாட்டிலும், தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கிற அடிப்படைக் கடமை ஒன்றுதான் — அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலமாக முதலாளித்துவ அமைப்புமுறையைத் தூக்கிவீசுவது, பெருநிறுவன மற்றும் நிதி உயரடுக்கை பறிமுதல் செய்வது, செல்வத்தை பாரிய அளவில் மறுவிநியோகம் செய்வது மற்றும் பொருளாதார வாழ்வை சோசலிச அடிப்படையில் மறுஒழுங்கமைப்பது.

பிரெஞ்சு மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் ஒரு மார்க்சிசத் தலைமையைக் கட்டுவதே அனைத்திலும் மிக முக்கியமான பிரச்சினையாகும். இந்த வழியில் மட்டுமே வெகுஜன இயக்கமானது, முதலாளித்துவத்தையும் போரையும் எதிர்க்கின்ற, அரசு அதிகாரம் தொழிலாள வர்க்கத்திற்கு மாற்றப்படுகிற பிரச்சினையை முன்வைக்கிற ஒரு நனவான சோசலிசத் தன்மையைப் பெற முடியும்.

இந்தப் போராட்டத்தை பிரெஞ்சு மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் மூலமாக, சர்வதேச சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்தின் அடிப்படையில், விரிவுபடுத்துவதற்காக போராடுகின்ற ஒரேயொரு அரசியல் கட்சியாக இருப்பது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (PES) மட்டுமேயாகும். பிரான்சிலும் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர்களும் இளைஞர்களும் ICFI ஐ தொடர்பு கொள்வதற்கும் அதில் இணைவதற்கும் நாங்கள் அழைக்கிறோம்.