ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The kidnapping of Huawei executive Meng Wanzhou

ஹூவாய் நிறுவன அதிகாரி மென்ங் வான்சொவ் கடத்தல்

Andre Damon
7 December 2018

ஈரானுக்கு எதிரான அமெரிக்க தடையாணைகளை மீறியதாக அமெரிக்க வழக்குதொடுனர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் மீது, சீன ஸ்மார்ட் போன் நிறுவனம் ஹூவாய் இன் துணை தலைவர் மென்ங் வான்சொவ், கனடிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது புதனன்று தெரிய வந்த போது உலகம் அதிர்ந்து போனது. வாஷிங்டன் அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்குமாறு கோரி வருகிறது.

இந்நகர்வுக்கும் "வர்த்தகப் போருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுவது அப்பட்டமான பொய்களாகும், இந்நடவடிக்கையைப் பாதுகாக்கும் ஊடகங்களாலேயே கூட அவை நிராகரிக்கப்பட்டன. டிசம்பர் 1 அன்று மென்ங் கைது செய்யப்பட்டு, 60 ஆண்டுகளுக்கான தண்டனைகள் சாத்தியமாகக்கூடிய ஒருதலைபட்சமான மற்றும் மறைமுகமான குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டமை ஒரு கடத்தல் நடவடிக்கைக்கும் சற்று அதிகமானதொரு சம்பவத்திற்கு ஒத்திருக்கிறது.

அதன் கூட்டாளியின் நடவடிக்கையால் வெளிப்படையாகவே பதட்டமடைந்த பிரிட்டிஷ் பைனான்சியல் டைம்ஸ், அந்நகர்வை "ஆத்திரமூட்டலாக" குறிப்பிட்டதுடன், "நியாயமான சட்ட அமலாக்கம் இல்லாமல், அதன் அரசியல் பொருளாதார முனைகளைப் பின்தொடர்வதற்காக அமெரிக்க அதிகாரத்தினது பயன்பாடு" என்று அதை வர்ணித்தது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஓர் அடாவடித்தன நடவடிக்கையான அது, “கூட்டாளிகளுக்கும்" மற்றும் "எதிரிகளுக்கும்" ஒரு சேதியை அனுப்ப உள்நோக்கம் கொண்டுள்ளது: அதாவது, அமெரிக்காவின் பேச்சைக் கேட்டு செயல்படுங்கள் அல்லது உங்களுக்கும் மென்ங் இற்கு ஏற்பட்டதைப் போல அல்லது அதை விட மோசமானது ஏற்படும் என்பதாகும். அமெரிக்கா, அதன் புவிசார்அரசியல் நோக்கங்களைப் பின்தொடர்வதில், பொறுப்புகளைக் கைவிட்டு சர்வதேச சட்டத்தை மீறி, ஒரு தான்தோன்றித்தனமான அரசாக செயல்படுகிறது.

சர்வதேச கண்ணியத்தை சட்டமீறலை நோக்கி வழிநடத்தும் தலைமை வழிகாட்டியாக அது விளங்குகிறது, இது இரண்டாம் உலக போருக்கு இட்டுச் சென்ற வல்லரசு மோதல் மற்றும் குற்றகர நிலைமைகளை நினைவூட்டுகிறது. அமெரிக்கா அதன் மேலாதிக்க திட்டநிரலுக்கு ஒரு தடையாக கருதும் எந்தவொரு நாட்டின் மீதும் தன்னிச்சையாக மற்றும் சட்டவிரோதமாக தடையாணைகளை விதிப்பதுடன், பின்னர் அதன் கட்டளைகளை மீறும் நாடுகளைத் தண்டிக்க பயங்கரமான அணுகுமுறைகளைப் பயன்படுத்துகிறது.

ஆனால் மென்ங் கைது செய்யப்பட்ட செய்திகள் உலகை உறைய வைத்த பின்னர், அதற்கடுத்த நாள் காலை நியூ யோர்க் டைம்ஸ் மற்றொரு குண்டை வீசியது. அமெரிக்க-சீன வர்த்தக போரில் ஒரு "சமரசத்தை" எட்டுவதற்காக கடந்த சனிக்கிழமை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் டொனால்ட் ட்ரம்ப் இரவு விருந்தில் அமர்ந்திருந்த போது, முன்னொருபோதும் இல்லாத இந்த கைது நடவடிக்கை நடக்கப்பட இருப்பதைக் குறித்து அந்த அமெரிக்க ஜனாதிபதிக்கு தெரிந்திருக்கவில்லை என்று அறிவித்தது.

அந்த கைது நடவடிக்கை குறித்து, ஜனநாயக கட்சி செனட்டர் மார்க் வார்னர் மற்றும் குடியரசு கட்சி செனட்டர் ரிச்சர்ட் புர், அத்துடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன். ஆர். போல்டன் போன்ற பிரமுகர்கள் எச்சரிக்கைப்படுத்தப்பட்டு இருந்தனர் என்ற உண்மைக்கு இடையிலும், இது இவ்வாறு அறிவிக்கப்படுகிறது. அவர் ஏன் ஜனாதிபதிக்குத் தெரிவிக்கவில்லை என்று வினவிய போது, ஜி உடனான சந்திப்பில் ட்ரம்புடன் இருந்த போல்டன், காரணம் காட்டவியலாது என்று இவ்வாறு தெரிவித்தார்: நீதித்துறையிடமிருந்து வரும் அறிவிப்பு "ஒவ்வொன்றையும் நிச்சயமாக ஜனாதிபதிக்கு நாங்கள் தெரிவிப்பதில்லை,” என்றார்.

மென்ங் கைது செய்யப்பட்டமை அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தக போரில் எந்தவொரு சமரசத்திற்கான சாத்தியக்கூறையும் இல்லாது செய்துள்ளது. “நட்புறவு நாடுகளின் குழு, இணக்கத்திற்கு வருவது சாத்தியமில்லை என்பதை ஏற்கனவே கண்டறிந்தது. திருமதி. மென்ங் கைது செய்யப்பட்ட பின்னர், முன்நகர்வதற்கான இறுதிக்கெடு நேரம்குறித்து வெடிக்கும் வெடிகுண்டாக (Time bomb) தெரிகிறது,” என்று பைனான்சியல் டைம்ஸ் எச்சரித்தது.

அமெரிக்க ஜனாதிபதிக்குத் தெரிவிக்காமலேயே இதுபோன்றவொரு ஆத்திரமூட்டும் நடவடிக்கை நடக்கலாம் என்ற உண்மையானது, இரண்டாம் நிலை அதிகாரி ஒருவரின் கருத்துப்படி, ஒரு விடயத்தை அப்பட்டமாக தெளிவாக்குகிறது: அதாவது, சீனாவுடனான அமெரிக்க மோதல் ட்ரம்பின் தனிமனிதயியல்பு அல்லது அவரின் பிரத்தியேக முத்திரையான "அமெரிக்கா முதலில்" வெகுஜனவாதத்தின் விளைபொருள் அல்ல. அதற்கு பதிலாக, ட்ரம்ப் நிர்வாகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினது மட்டுமல்ல, மாறாக உளவுத்துறை அதிகாரத்துவத்தின், அத்துடன் முன்னணி சட்ட வல்லுனர்களின் நிரந்தரமான அல்லது "பின்புல" அரசைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட பிரிவானது ட்ரம்பின் ஆக்ரோஷமான சீன-விரோத கொள்கைக்கு ஆதரவாக உள்ளன என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களது இணைய தணிக்கைக்கு முன்னணி ஆதரவாளராக நின்ற செனட்டர் வார்னர், இந்த கைது நடவடிக்கை குறித்த செய்திகளுக்கு விடையிறுக்கையில், அந்நடவடிக்கையைப் பின்வருமாறு பாராட்டினார்: “ஹூவாய்... நமது தேசிய பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தல் என்பது சில காலமாகவே தெளிவாக இருந்துள்ளது.” அவர் தெரிவித்தார், “தடையாணைச் சட்டத்தை உடைத்ததற்காக, ட்ரம்ப் நிர்வாகம், ஹூவாயை முழு பொறுப்பாக்கும் என்று நம்புகிறேன்.”

ஜனநாயக கட்சிக்கு நெருக்கமான மற்ற பிரமுகர்களும் உடனடியாக அந்நகர்வைப் பாராட்டினர், சீனா மீது ட்ரம்ப் போதுமானளவுக்கு கடுமையாக இல்லை என்று கண்டிக்கும் அளவுக்கு அவர்கள் சென்றார்கள். “சீனாவின் அதிகரித்து வரும் ஆக்ரோஷத்தனத்திற்கு, நீண்டகாலமாகவே அமெரிக்க தலைவர்கள் போதுமானளவுக்கு விடையிறுக்க தவறிவிட்டார்கள்,” என்று நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையாளர் டேவிட் லியோன்ஹார்ட் எழுதினார். “சீனாவை நோக்கிய அதிக போர்வெறி கொள்கையே அர்த்தமுள்ளது,” என்றார்.

டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஆகிய முன்று முன்னணி அமெரிக்க பத்திரிகைகளில் எதுவுமே வெள்ளை மாளிகையின் குற்றகரமான நடவடிக்கையைக் குறித்து ஒரு துளி விமர்சனத்துடன் ஒரேயொரு கட்டுரை கூட பிரசுரிக்கவில்லை.

இது அக்டோபர் 4 இல் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சீனா குறித்து ஒரு பிரதான கொள்கை உரையில் உச்சரித்த கோட்பாடுகளை, இரண்டு கட்சிகளும் ஏற்றுக் கொண்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறது, அந்த உரையை விமர்சகர்கள் சீனாவுடனான ஒரு புதிய "பனிப்போரின்" உதயம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். பென்ஸ் அவர் உரையில், பெய்ஜிங் அதன் "2025 சீனா தயாரிப்பு” திட்டத்தைக் கைவிட வேண்டுமென கோரியதுடன், அதை “தானியங்கி இயந்திரவியல், உயிரிதொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு உளவுபார்ப்பு உட்பட உலகின் மிகவும் முன்னேறிய தொழில்துறைகளில் 90 சதவீதத்தை" கையகப்படுத்துவதற்கான முயற்சி என்று குறிப்பிட்டார்.

பென்ஸ் உரை வழங்கி ஒருசில நாட்களுக்குப் பின்னர், அமெரிக்க பாதுகாப்பு தொழில்துறை அடித்தளத்தின் மீது பென்டகன் ஓர் ஆய்வை வெளியிட்டு, சீனாவுடனான இராணுவ மோதலுக்குத் தயாரிப்பு செய்ய அமெரிக்காவுக்கு ஒரு “ஒட்டுமொத்த சமூக” அணுகுமுறை அவசியப்படுவதாக வாதிட்டது.

முன்னாள் ட்ரம்ப் அரசியல் ஆலோசகரும் நவ-பாசிசவாதியுமான ஸ்டீவ் பானன், மென்ங் கைது செய்யப்பட்டதைச் சீனாவை எதிர்கொள்வதற்காக "அரசாங்கத்தின் ஒட்டுமொத்த" அணுகுமுறையின் பாகமாக பாராட்டினார். அவர் பைனான்சியல் டைம்ஸ் க்கு கூறுகையில், “ட்ரம்பின் கீழ்,” “இறுதியில், சீனாவை எதிர்கொள்வதற்காக, அமெரிக்க அரசு அதிகாரத்தின் மொத்த சக்தியும் முதல்முறையாக ஒன்று திரண்டு வருவதை நீங்கள் பார்க்கிறீர்கள்,” என்றார்.

சீனாவை நோக்கிய அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் அதிக ஆக்ரோஷமான நிலைப்பாடு எந்தவிதத்திலும் ரஷ்யா மற்றும் ஈரான் உடனான மோதலில் இருந்து ஒரு பின்வாங்கலை அர்த்தப்படுத்தாது. உண்மையில், பென்ஸ் சீனாவுடன் புதிய "பனிப்போர்" அறிவித்து இரண்டு மாதங்களில், வாஷிங்டன் அதன் மிகவும் ஆக்ரோஷமான ரஷ்ய-விரோத நடவடிக்கைகளில் இதுவரையில் இல்லாத சிலவற்றை மேற்கொண்டுள்ளது, ரஷ்யா உரிமைகோரும் கடல் எல்லைகளுக்குள் அதன் கூட்டாளியான உக்ரேன் போர்க்கப்பல்களைச் செலுத்துவதற்கு வாஷிங்டன் தூண்டிவிட்டதால், இருதரப்பிலிருந்தும் துப்பாக்கிச்சூடு நடந்தது மற்றும் மத்திய-தூர அணுஆயுத தளவாடங்கள் (INF) சம்பந்தமான உடன்படிக்கையிலிருந்து அது விலகியது ஆகியவை அதில் உள்ளடங்கும்.

ஓர் அணுஆயுத சக்தியான சீனாவுக்கு எதிரான அவர்களின் போர் தயாரிப்பில், அமெரிக்க ஆளும் வர்க்கமும் அதன் இராணுவ-உளவுத்துறை எந்திரமும் சீனாவின் வளர்ச்சியைப் பெருநிறுவன செல்வந்த தட்டுக்களின் பொருளாதார நலன்களுக்குத் தடையாக இருக்கும் ஓர் உயர்-தொழில்நுட்ப போட்டியாளராக மட்டும் அதை பார்க்கவில்லை, மாறாக அமெரிக்க இராணுவ மேலாதிக்கத்தைப் பேணுவதற்கும் ஒரு தடையாக பார்க்கிறது.

உலகம், 5ஜி என்றறியப்படும் அலைபேசி தொழில்நுட்பத்தில் ஒரு தலைமுறை மாற்றத்தின் விளிம்பில் உள்ளது, இதன் ஆதரவாளர்கள் கருத்துப்படி, இது "இணைய பயன்பாட்டு சாதனங்கள்" என்றழைக்கப்படுவதில் ஒரு பாரிய விரிவாக்கத்திற்கு இட்டுச் செல்லும் என்பதோடு, அது இன்னும் மலிவாகவும், இன்றைய "மென்" சாதனங்களை விட கூடுதலாக பரந்தளவில் தகைமை கொண்டதாகவும் இருக்கும். 5ஜி தொழில்நுட்பத்துடன் சம்பந்தப்பட்ட "சாதனங்களில்" வீட்டு உபயோக சாதனங்கள் மற்றும் ஆலை தானியங்கி இயந்திரங்கள் மட்டுமல்ல, மாறாக போர் ஆயுதங்களும் இருக்கும், இவை தொலைதொடர்பு வலையமைப்புகளைத் துல்லியமாகவும் வேகத்துடனும் பயன்படுத்தும்.

5ஜி உள்கட்டமைப்பு வழங்குவதில் ஹூவாய் முன்னனி நிறுவனமாக உள்ளது, சீனாவை ஒதுக்கிக் தள்ளி, அமெரிக்கா அதன் உலகளாவிய பொருளாதார மற்றும் இராணுவ மேலாதிக்கத்தைப் பின்தொடர்வதற்காக அதன் பொருளாதார, இராணுவ மற்றும் புவிசார் அரசியல் சக்தியின் அனைத்து வழிவகைகளையும் பயன்படுத்த முயன்று வருகிறது.

முக்கியத்துவத்தில் குறைவற்ற இரண்டாவது காரணி, உள்நாட்டு சமூக பதட்டங்கள் மற்றும் அரசியல் எதிர்ப்பு வளர்ந்து வருகிறது. அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்புக்கு இடையே அரசுக்கான "சட்டப்பூர்வத்தன்மையின் நெருக்கடி" என்று அட்லாண்டிக் கவுன்சில் எதை குறிப்பிட்டதோ அந்த நிலைமைகளின் கீழ், ஆளும் வர்க்கம், ரஷ்யா ஆகட்டும் அல்லது சீனா ஆகட்டும், ஒரு வெளிப்புற எதிரியை உருவாக்குவதை, வெடிப்பார்ந்த வர்க்க பதட்டங்களை வெளிப்புறத்திற்கு திருப்புவதற்கு ஒரு வழிவகையாக பார்க்கிறது. சமீபத்தில் டைம்ஸ் கட்டுரையாளர் லியோன்ஹார்ட் குறிப்பிட்டதைப் போல, அமெரிக்க பொதுமக்களுக்கான ஒரு "தெளிவான எதிரியை" உருவாக்க சீனாவைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இறுதியாக, அமெரிக்க தொழில்நுட்ப துறையைக் காப்பாற்றுவது மற்றும் அதன் உலகளாவிய ஏகபோகமயமாக்கல்களை விரிவுபடுத்தப்படுவது ஆகியவை, அமெரிக்க உளவுத்துறை எந்திரத்திற்குள் ஆழமாக அவை ஒருங்கிணைக்கப்படுவதில் முக்கிய பாத்திரம் வகிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வார்னர் போன்ற பிரமுகர்களின் விருப்பத்திற்கிணங்க அமெரிக்க தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் எதிர்ப்பு கண்ணோட்டங்கள் மீது பாரியளவில் தணிக்கை நடவடிக்கைகளையும் மற்றும் அமெரிக்க மக்கள் மீது வலை போன்று பரந்து விரிந்த கண்காணிப்புகளையும் நடைமுறைப்படுத்தி உள்ளன. இதற்கு கைமாறாக, அந்நிறுவனங்கள் இராணுவ, பொலிஸ் மற்றும் உளவுத்துறையின் கொழுத்த ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன, அதேவேளையில் ஹூவாய் போன்ற அவற்றின் போட்டியாளர்கள் அமெரிக்க அரசால் இலக்கில் வைக்கப்பட்டுள்ளன.

வாஷிங்டனின் நடவடிக்கைகள் மிகவும் அபாயகரமான விளைவுகளுடன் அச்சுறுத்துகிறது. சீனாவுக்கு எதிரான அதன் தாக்குதலில், அமெரிக்கா கடந்த நூற்றாண்டில் இரண்டு முறை உலக போருக்கு இட்டுச் சென்ற நிலைமைகளைத் தூண்டிவிட்டு வருகிறது.