ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Around 100,000 Sri Lankan plantation workers walk out again for pay rise

இலங்கையில் சுமார் ஒரு இலட்சம் தோட்ட தொழிலாளர்கள் மீண்டும் ஊதிய உயர்வு கோரி வேலை நிறுத்தம் செய்தனர்

By our correspondents
30 November 2018

இலங்கையில் சுமார் ஒரு இலட்சம் தோட்ட தொழிலாளர்கள் தங்கள் நாள் சம்பளத்தில் 100 சதவீத உயர்வு கோரி திங்களன்று ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்தனர். இந்த வேலை நிறுத்தத்தில் நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை உட்பட தீவின் அனைத்து மலை பிரதேசங்களிலும் உள்ள தோட்ட தொழிலாளர்கள் இதில் பங்குபற்றினர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) என்ற பெருந்தோட்ட தொழிற் சங்கம் இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தபோதிலும், எந்த ஒரு போராட்டத்தையும் ஏற்பாடு செய்யவில்லை. ஆனாலும், தொழிலாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை நடத்தினர். ஏனைய தொழிற்துறை சார்ந்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தை ஆதரித்திருந்த அதேவேளை, பிரதான பெருந்தோட்ட நகரங்களில் கடை உரிமையாளர்கள் வர்த்தக நிலையங்களை மூடி தங்கள் ஆதரவை பதிவு செய்தனர்.


நோரவுட் அருகே நடந்த போராட்டம்

தோட்டத் தொழிலாளர்கள் அக்டோபர் முதல் தங்கள் தோட்டங்களில் தினமும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஜனநாயக மக்கள் முன்னணியின் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் ஆதரவுடன், தொழிலாளர் தேசிய சங்கம் இந்த போராட்டங்களை ஐக்கியப்பட விடாமல் தனிமைப்படுத்தி வைத்தது.

அதேபோலவே திங்களன்று நடந்த வேலைநிறுத்தமும் ஒரு தினத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டதோடு இ.தொ.கா. நிர்வாகிகள் தொழிலாளர்களை அவர்களது தோட்டங்களுக்கு உள்ளேயே இருக்க உத்தரவிட்டனர். தொழிலாளர் தேசிய சங்கமும் ஜனநாயக மக்கள் முன்னிணியும் திங்களன்று நடந்த வேலைநிறுத்தத்தை ஆதரிக்க மறுத்து விட்டன. எனினும் அதன் உறுப்பினர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கு பற்றினர்.

அரசியல் கட்சிகளாகவும் வேலை செய்யும் தோட்டத் தொழிற்சங்கங்கள், இந்த சம்பளப் போராட்டங்கள் தங்கள் கட்டுப்பாட்டை விட்டுப் போகாமல் வைத்திருக்க முயற்சிப்பதுடன், அரசாங்கத்துடன் ஒரு அரசியல் முரண்பாட்டுக்கு போகக்கூடியவாறு ஏனைய தொழிற்துறையில் பரந்த அளவிலான போராட்டங்கள் வெடிப்பதையும் தடுக்க முற்படுகின்றன.

இந்த வருட ஆரம்பத்தில் புகையிரத, தபால், தண்ணீர் விநியோகம், பல்கலைக் கழக மற்றும் ஏனைய தொழிலாளர்களும், ஊதிய உயர்வையும் நல்ல வேலை நிலைமைகளையும் கோரி தொழிற்சங்க நடவடிக்கைகளையும் போராட்டங்களையும் நடத்தியபோது, தொழிற்சங்கங்கள் இதே பாகத்தையே வகித்தன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அக்டோபர் 26 அன்று ஜனநாயக விரோதமான முறையில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து இறக்கி அவருக்குப் பதிலாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அமர்த்திய போது, தோட்ட சங்கங்கள் சம்பள உயர்வு போராட்டங்களை கட்டுப்படுத்தவும் தோட்ட தொழிலாளர்கள் இந்த அரசியல் நெருக்கடியை அதிகரிக்கச் செய்யாமல் தடுக்கவும் வேலை செய்தன.

பெருந்தோட்ட தொழிற்சங்கங்களின் தலைவர்கள் இராஜபக்ஷ அரசாங்கத்திலும் சிறிசேன-விக்ரமசிங்கவின் அரசாங்கங்கத்திலும் அமைச்சர்களாகவும் அரசியல் வக்காலத்து வாங்கிகளாகவும் இருந்ததுடன், தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல்களை அவர்கள் விசுவாசமாக ஆதரித்தனர்.


ஊர்வலத்துக்காக தொழிலாளர்கள் புஸ்ஸல்லாவையில் அணி சேர்ந்துள்ளனர்

இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான் புதிதாக நியமிக்கப்பட்ட இராஜபக்ஷவின் நிர்வாகத்தில் அமைச்சரவையில் அமைச்சராகியதுடன் உடனடியாக புது பிரதமர் தோட்டத் தொழிலாளர்களுக்கு 100 சதவீத ஊதிய உயர்வு பெற்றுத் தருவதாக உறுதி அளித்ததாகக் கூறினார். உண்மையில் இராஜபக்ஷவின் "வாக்குறுதி" போலியானதாகும், மற்றும் அது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை தக்கவைத்துக்கொள்வதற்கான அவரது சதிகளின் பாகம் ஆகும்.

தங்கள் பங்கிற்கு, விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்த தொழிலாளர் தேசிய சங்க தலைவர் பி. திகாம்பரமும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனும், பதவி இழந்த பிரதமரையும் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையிலான கன்னையை ஆதரிக்கின்றனர்.

இ.தொ.கா. இந்த வார ஒரு நாள் வேலை நிறுத்தத்தை, தொழிலாளர்களின் கோபத்தை தணிப்பதற்கான அவநம்பிக்கையான முயற்சியாகவே அழைப்பு விடுத்துள்ளது. தோட்ட தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம், அக்டோபர் 31 அன்று முடிவடைகிறது, ஆனாலும் இராஜபக்ஷவின் போலி வாக்குறுதியில் ஒன்றும் நடக்கவில்லை.

இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான் திங்களன்று நடந்த வேலை நிறுத்தத்துக்குப் பின் கொட்டகலையில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பினை கூட்டினார். வேலை நிறுத்தத்தை "மாபெரும் வெற்றி" என அறிவித்த அவர், “தாம் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் மக்களின் சக்தியை அரசாங்கத்திற்கு காட்டுவதாகவும்” கூறினார்.

தொண்டமானின் கூற்றுகள், இராஜபக்சவின் "வாக்குறுதி" போன்று அர்த்தமற்றவை. கடந்த காலத்தைப் போலவே, இ.தொ.கா. மற்றும் ஏனைய தோட்டத் தொழிற்சங்கங்கள் கம்பனிகளுடன் கொல்லைப்புற பேச்சுவார்த்தைகளை நடத்தி, அவற்றின் நிபந்தனைகளை தொழிலாளர்கள் மீது திணிக்க முயற்சிக்கின்றது.

தோட்ட நிறுவனங்கள் தொடர்ந்தும் தொழிலாளர்களின் கோரிக்கையான 100 சதவீத ஊதிய உயர்வை நிராகரித்து, அதற்கு பதிலாக தற்போதைய 500 ரூபா நாள் சம்பளத்தில் 100 ரூபா அற்பத் தொகையை அல்லது 20 சதவீத அதிகரிப்பை வழங்குவதாக முன்மொழிகின்றன.

கடந்த வாரம், இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ரொஷான் ராஜதுரை, தேயிலையின் விலை வீழ்ச்சி மற்றும் உயரும் உற்பத்தி செலவுகளின் மத்தியில் தொழிலாளரின் சம்பள உயர்வு கோரிக்கையை கொடுப்பது இயலாத காரியம், என அறிவித்தார்.

"சுமார் 35 சதவீத எங்களது தேயிலை, சந்தை நிலவரங்கள் காரணமாக விற்காமல் இருக்கின்றன; விலைகள் சரிகின்றன", அவர் கூறினார். "நமது தேயிலைகள் விலையுயர்ந்தவை; இந்தியா போன்ற ஏனைய நாடுகளில் இதே தரத்திலான தேயிலைகள் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன.”

இராஜதுரை, தோட்ட முதலாளிகளின் முந்தைய 20 சதவீத சம்பள "சலுகையை" மீண்டும் வலியுறுத்தி, உற்பத்தி திறனுடன் பிணைக்கப்பட்ட மேலதிக கொடுப்பனவுகள் ஊடாக மேலும் 400 ரூபாவை சம்பாதிக்க முடியும் என்றும் கூறினார்.

திங்களன்று, வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களையும் அரசாங்கத்தையும் கண்டனம் செய்தனர். ஹட்டன் அருகே டிக்கோயாவில் ஓட்டேரி தோட்டத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளி உலக சோசலிச வலைத் தளத்திற்கு கூறியதாவது: "நாங்கள் தொழிலாளிகளின் ஒற்றுமையை நிலைநாட்டவே இந்த வேலை நிறுத்தத்தில் கலந்த கொண்டோம், ஆனால் எங்களுக்கு இ.தொ.கா. அல்லது வேறு எந்த சங்கத்தின் தலைவர்களும் எங்கள் கோரிக்கைகளுக்காக போராடுவார்கள் என்ற எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை.

"நாங்கள், ஜனாதிபதி சிறிசேன, இராஜபக்ஷவை பிரதமராக நியமித்த அக்டோபர் 26 அன்று, டிக்கோயாவில் சம்பள உயர்வு கோரிக்கைக்காக போராட்டம் நடத்தினோம். அதன் பின்னர் தொழிற்சங்க தலைவர்கள் எங்கள் ஊதிய பிரச்சினையை மறந்து விடுமாறு கூறினர்."


தொழிலாளர்கள் டிக்கோயா அருகே மறியல் போராட்டம் செய்கின்றனர்

ஞாயிறன்று, இந்த வார வேலை நிறுத்தத்திற்கு ஒரு நாள் முன்னதாக, ஒரு பகிரங்க அறிக்கையை வெளியிட்ட இராஜபக்ஷ, இலங்கை பொருளாதார சரிவின் உச்சியில் உள்ளது என கூறியதுடன் இதனை மூன்று வருடங்களுக்கு முன் கிரேக்கம் எதிர்கொண்ட நிலைமைகளுடன் ஒப்பிட்டார். தனது அரசாங்கம் அரசாங்க செலவை “கடுமையாக” கட்டுப்படுத்துவதோடு “போர் காலத்தில் போல் நாட்டைக் கட்டியெழுப்ப” மக்கள் தன்னை ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

விக்ரமசிங்க கன்னையின் முன்னாள் நிதி அமைச்சரான மங்கள சமரவீராவும், இலங்கை பொருளாதார சரிவை நெருங்குவதாக எச்சரிக்கை செய்து கிரேக்கத்தை சுட்டிக்காட்டினார். அவர், விக்ரமசிங்க கன்னையை ஆட்சி செய்ய அனுமதிப்பதன் மூலமே அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும் என அவர் கூறினர்.

கிரேக்க நிதி நெருக்கடி பற்றிய இந்த குறிப்புகள், எந்த அரசியல் கன்னை அரசாங்கத்தை கட்டுப்படுத்தினாலும், அது கிரேக்க தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்ட அதே மாதிரியான வேலைகள், கூலிகள் மற்றும் சமூக உரிமைகள் மீதான வெட்டுக்களையும், பெரு வணிக மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் ஆணைகளையும் அமுல்படுத்தும் என்பதையே தெளிவுபடுத்துகின்றன.