ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

France’s “yellow vest” protesters brave repression and mass arrests

பிரான்சின் "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்கள் ஒடுக்குமுறை மற்றும் பாரிய கைது நடவடிக்கைகளைத் துணிச்சலுடன் எதிர்க்கின்றனர்

By Alex Lantier and Kumaran Ira
9 December 2018

தொடர்ச்சியாக இந்த நான்காவது சனிக்கிழமையில், “மஞ்சள் சீருடை" (gilet jaunes) போராட்டக்காரர்கள் நேற்றும் இமானுவல் மக்ரோனின் வலதுசாரி அரசாங்கத்திற்கு எதிராக பிரான்ஸ் எங்கிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் அரசு வன்முறை மற்றும் பாதுகாப்புப் படைகளின் பாரிய அணித்திரட்டலுக்கான முன்னறிவிக்கப்பட்ட அச்சுறுத்தல்களை எதிர்த்து இதை செய்தனர்.

இந்த இயக்கத்திற்கு உந்துதலளித்த எரிவாயு விலை உயர்வுகளை முதலில் தற்காலிகமாக நிறுத்தி வைத்தும், பின்னர் முற்றிலுமாக அவற்றை இரத்து செய்தும், போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பிரெஞ்சு ஜனாதிபதியின் முயற்சிகள், தெளிவாக, தோல்வியடைந்தன. சமூக சமத்துவம் மற்றும் இராணுவவாதம் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக உயர்த்தப்பட்டு வருகின்ற கோரிக்கைகள், இது பிரான்சில் மட்டுமல்ல, மாறாக சர்வதேச அளவில் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதை நோக்கி திரும்பிய ஓர் இயக்கம் என்பதைக் காட்டுகிறது.

நேற்றைய போராட்டங்கள் பிரான்ஸையும் பெல்ஜியத்தின் பெரும் பகுதிகளையும் ஸ்தம்பிக்கச் செய்தது. பிரான்சில் 125,000 “மஞ்சள் சீருடையாளர்கள்" போராடியதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார். ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த பிரதான நகரங்களில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. சனிக்கிழமை மாலை, வின்சி நெடுஞ்சாலை வலையமைப்பு "கணிசமான தொந்தரவுகள்" இருந்ததாகவும், 20 க்கும் அதிகமான நெடுஞ்சாலைகள் அடைக்கப்பட்டதாகவும் தெரிவித்தது, அவற்றில் பல "மஞ்சள் சீருடை" போராட்டங்கள் மற்றும் தடையரண்களால் ஏற்படுத்தப்பட்டதாகும்.

பாரீஸ், லியோன், போர்தோ, துலூஸ், சென்ட் எத்தியான், பெர்பினியோன், மார்சைய், அவினியோன், நாந்தேர், ப்ரெஸ்ட், கம்பேர், லீல் மற்றும் ரென் உட்பட பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

புரூசெல்ஸில் 1,000 போராட்டக்காரர்கள் கலந்து கொண்ட "மஞ்சள் சீருடையாளர்களின்" ஒரு பேரணியின் போது, சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டனர். இது, அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவுகளுக்கு எதிராக பெல்ஜிய தலைநகரில் நடத்தப்பட்ட இரண்டாவது "மஞ்சள் சீருடை" ஆர்ப்பாட்டமாகும். போராட்டக்காரர்கள் பிரதம மந்திரி சார்லஸ் மிஷேலின் இராஜினாமாவைக் கோரி வருகின்றனர்.

பெல்ஜிய மாகாணங்களுக்கும் அமைதியின்மை பரவியுள்ளது. “பணக்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்து ஏழைகளுக்கு வழங்க வேண்டும்,” என்று "மஞ்சள் சீருடை" செவிலியர் ஒருவர் பத்திரிகைக்குத் தெரிவித்தார்.

பாரீசில் களமிறங்கிய போராட்டக்காரர்களுக்கு எதிராக பிரெஞ்சு அரசாங்கம் விஷமத்தனமான குற்றச்சாட்டுக்களைப் பரப்பியது, “ஒழுங்கைப் பேணும் படைகளைப்" "படுகொலை" செய்ய அவர்கள் தயாரிப்பு செய்து வருவதாக குற்றஞ்சாட்டியது. பொலிஸ் வக்கிரமாக தாக்குதல் நடத்தியதோடு, பிரதான நகரங்களில் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கியதுடன், முன்னர் டிசம்பர் 1 சனிக்கிழமையில் செய்ததை விட ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகமாக போராட்டக்காரர்களைக் கைது செய்தது.

நாடு எங்கிலும், பொலிஸ் 1,723 பேரை கைது செய்தது, இந்தளவை பிரெஞ்சு உள்துறை அமைச்சர் கிறிஸ்தோப் காஸ்டனேர் "அசாதாரணமானது" என்று குணாம்சப்படுத்தினார். இவற்றில் 1,220 பேரைக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. பாரீஸ் பொலிஸ் தலைமையகங்களின்படி, 1,082 பேருக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டனர், இவர்களில் 625 க்கும் அதிகமானவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தன.

பாரீஸ், போர்தோ, லியோன் மற்றும் துலூஸ் உட்பட பிரதான பிரெஞ்சு நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும் சட்ட அமுலாக்கத்துறையினருக்கும் இடையே மோதல்களும் கைகலப்புகளும் ஏற்பட்டன. போராட்டக்காரர்களைக் கலைக்க, பொலிஸ் கண்ணீர் புகைக்குண்டு மற்றும் எரி குண்டுகளை வீசியதில் 100 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். பாரீஸ் மற்றும் மார்சைய்யிலின் பழைய துறைமுகத்தில், பாதுகாப்பு படைகள் கவச வாகனங்கள் மற்றும் நீர் பீய்ச்சி வாகனங்களைக் கொண்டு போராட்டக்காரர்களைத் தாக்கினர்.

பாரீஸில், பொலிஸ் அசாதாரண ஆக்ரோஷத்துடன் முன்நகர்ந்தது. போராட்டக்காரர்களை அன்றைய நாளின் தொடக்கத்திலேயே கலைத்து விடுவதற்காக, அதிக பலமான பெருந்திரள் கூட்டமாக அவர்கள் ஒன்றுகூடுவதற்காக முன்னரே, பொலிஸ் ஆரம்பத்திலிருந்தே அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியது. குதிரைப்படை காவலர்கள் உள்ளடங்கலாக இடம் விட்டு இடம் நகரும் ஒருங்கிணைந்த வெவ்வேறு படைகள் மற்றும் கவச வாகனங்களைக் கொண்டு அமைதியான போராட்டக்காரர்களைக் சுற்றி வளைத்து, கலைத்து விடுவதற்காக, சாம்ப்ஸ்-எலிசே மற்றும் அந்நகரின் பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்களைப் பொலிஸ் தாக்கியது.

WSWS செய்தியாளர்கள் பாரீசில் பலரையும் பேட்டி கண்டனர். வடக்கு பிரான்சின் Oise பகுதியைச் சேர்ந்த சில்வி கூறுகையில், “மக்களால் வாழ்க்கை செலவை சமாளிக்க முடியாததால் மக்கள் அங்கு ஆத்திரமடைகின்றனர். அதில் வலதும் இல்லை; இடதும் இல்லை. தொழிற்சங்கங்களும் எங்கள் மீதேறி சவாரி செய்கின்றன. நாங்கள் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறோம். எங்களுக்கு கண்ணியமாக வாழ்வதற்கான உரிமை இருக்கிறது, எங்களைப் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டியவர்களால் நாங்கள் மதிக்கப்பட வேண்டியது எங்களின் உரிமை,” என்றார்.


சில்வி

அவர் தொடர்ந்து கூறினார், “நாங்கள் 99 சதவீதத்தினரின் ஆதாயங்களைப் பறித்துக் கொண்ட அந்த 1 சதவீதத்தினரையும் கண்டிக்கிறோம்; நாங்கள் இதை நிறுத்த விரும்புகிறோம். உண்மையில் அவர்கள் தான் எங்கள் மீது வரி சுமத்துகிறார்கள், அவர்கள் சொத்துக்களை வைத்திருக்கிறார்கள். இதுவொரு நவீனகால அடிமைப்படுத்தல்.”

ஸ்டீபன் எங்களிடம் கூறினார்: “மக்ரோன் செல்வந்தர்களுக்கான வரியை நீக்கி, எனது வீட்டு நிதி மானியத்தில் 5 யூரோ குறைத்த போதே, அவர் எங்கே நகர்ந்து கொண்டிருக்கிறார் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டி விட்டார். இது தான் ஜனநாயகமா? இல்லை, இப்போது நாம் ஒரு நிதியியல் சர்வாதிகாரத்தில் இருக்கிறோம். இதுவொரு இராணுவ சர்வாதிகாரமாக மாறிவிடக் கூடாதென நான் நினைக்கிறேன்.”

கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டு சிறிது நேரத்திற்குப் பின்னர், இரயில்வே தொழிலாளியின் மனைவி WSWS க்குக் கூறுகையில், “திரு. மக்ரோன் எங்களை அவமானப்படுத்துகிறார். அவர்கள் எங்களைச் சுற்றி வளைத்து, வலதுக்கும், பின்னர் இடதுக்குமாக நகர்த்துகிறார்கள், பின்னர் எங்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசுகிறார்கள்,” என்றார். மக்ரோனுக்கு இனி எந்த அரசியல் சட்டப்பூர்வத்தன்மையும் இல்லை என்றவர் வலியுறுத்தினார். “இதற்கும் மேல் எங்களால் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்ய முடியாது; பொலிஸ் படைகள் எங்கள் மீது தடையடி நடத்துகிறது, கண்ணீர் புகைக்குண்டு வீசுகிறது. மக்கள் எழுவார்கள் என்று நான் நம்புகிறேன். மன்னித்து விடுங்கள், மக்களைக் கண்ணீர் புகைக்குண்டுகளுடன் கையாள்வது தான் வழியா?”

அரசாங்கம் "மஞ்சள் சீருடையாளர்களின்" கோரிக்கைகள் நசுக்கி, பிரெஞ்சு மக்களில் பாரிய பெரும்பான்மையினரால் நிராகரிக்கப்பட்டுள்ள சமூக செலவினக் குறைப்பு நடவடிக்கைகளைத் தொடர உத்தேசித்துள்ளதை அது மீண்டுமொருமுறை எடுத்துக்காட்டி உள்ளது.

பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப் சனிக்கிழமை மாலை ஒரு சிறிய பத்திரிகையாளர் சந்திப்பின் போது, அரசாங்க கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்பதை அழுத்தமாக தெரிவித்தார்: “கண்காணிப்பும் அணிதிரட்டலும் இருக்கும், ஏனென்றால் குண்டர்கள் இன்னமும் பாரீசிலும் சில மாகாணங்களின் சிறு நகரங்களிலும் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள் (...) இந்நாளை எதிர்ப்பதற்காக, சட்டத்தின் பலத்தினை பரந்தளவில் அணிதிரட்டுவதன் மூலமாகவும் மற்றும் அவர்களைத் தொடர்ந்து தயார்நிலையில் வைப்பதை உறுதிப்படுத்தி வைப்பதற்கான வழிவகைகளைக் கொண்டும், நாங்கள் ஒரு அசாதாரண திட்டத்தை ஏற்க வேண்டியிருக்கிறது,” என்றார்.

“பேச்சுவார்த்தைகள் மூலமாக, செயல்பாடுகள் மூலமாக, மறுகுழுவாக்கம் மூலமாக நமது தேசிய ஐக்கியத்தை மீளஸ்தாபிதம் செய்வது அவசியமாகிறது. பிரெஞ்சு தேசம் தன்னை அடையாளம் காண்பதை அனுமதிக்கும் நடவடிக்கைகளை (...) முன்மொழிந்து, குடியரசின் ஜனாதிபதி [மக்ரோன்] உரையாற்றுவார்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

உத்தியோகபூர்வ விட்டுக்கொடுப்பின்மையின் முன்னால் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் கோபமானது, தொழிலாள வர்க்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஒரு பகிரங்க மோதலாக அபிவிருத்தி அடைந்து, ஒரு பொது வேலைநிறுத்தத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த வெடிப்பார்ந்த சூழ்நிலையில், தற்போது அரசாங்கம் அனுபவித்துக் கொண்டிருக்கும் பிரதான அனுகூலம் என்னவென்றால், மிகப்பெரிய பெருந்திரளான தொழிலாளர்கள் தெளிவாக ஒரு புரட்சிகர முன்னோக்கை காணவில்லை. அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட விரும்புகின்ற நிலையில், பல தசாப்தங்களாக தங்களை "இடது" என்று காட்டி வந்துள்ள குட்டி-முதலாளித்துவ கட்சிகள் மக்ரோனை ஆதரிப்பதை அவர்கள் எதிர்கொள்கிறார்கள்.

ஜோன்-லூக் மெலோன்சோன் பொலிசை மதிக்குமாறு அழைப்பு விடுக்கிறார். “உங்கள் எதிராளி யார் என்பது தொடர்பாக ஒருபோதும் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். பொலிஸ் படைகளைக் கையாள்வது பொலிஸின் வேலை இல்லை. அது உத்தரவிடும் அரசியல்வாதிகளின் தொழில். அடிபணிந்து சேவையாற்றுவதே பொலிஸின் வேலை. உத்தரவுகள் அரசியல்தன்மையானவை,” என்று அடிபணியா பிரான்ஸ் கட்சியின் (La France Insoumise - LFI) அந்த தலைவர் ட்வீட் செய்தார். பாதுகாப்பு படைகள் மற்றும் பிரெஞ்சு அரசை இவ்வாறு பாதுகாப்பதானது, “மஞ்சள் சீருடையாளர்கள்" மத்தியில் LFI மீது முன்பினும் அதிகமாக அவநம்பிக்கை, விரோதத்தைத் தூண்டுகிறது.


பணம் இருக்கிறது! முதலாளிகளின் வீடுகளில், என பதாகையில் எழுதப்பட்டுள்ளது

"மஞ்சள் சீருடையாளர்கள்" தரப்பில் தான் இருப்பதாக அறிவித்து கொண்டிருந்த LFI நாடாளுமன்ற உறுப்பினர் பிரான்சுவா ரூஃபானிடம் இருந்து, “அரசியல் சுயாதீனம்" என்ற பெயரில், தங்களை விலக்கி நிறுத்தி கொள்ளவிருப்பதாக அவர்கள் வடகிழக்கில் Flixecourt இல் சனிக்கிழமை அறிவித்தனர். அந்த இயக்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையே அவர் ஒரு "பாலமாக" சேவையாற்ற விரும்புவதாக ரூஃபான் அறிவித்திருந்தார். ஆனால் இந்த முன்மொழிவு, தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் LFI போன்ற அவற்றின் அரசியல் கூட்டாளிகள் மீது "மஞ்சள் சீருடையாளர்கள்" கொண்டிருக்கும் கோபத்தினால் ஆதரவை பெறாமல்போனது.

பிரான்சுவா "எங்களுக்கு மிகவும் நேர்மையான ஆதரவை அளித்தார் என்றாலும், நாங்கள் ஊடகங்களாலோ அல்லது அரசியல்வாதிகளாலோ கைப்பற்றப்படுவதை விரும்பவில்லை. எங்கள் அனைவருக்கும் நிச்சயமாக ஓர் அரசியல் நிறம் இருக்கிறது என்றாலும் கூட, நாங்கள் முழுமையான அரசியல் சுயாதீனத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறோம்,” என்று Flixecourt இல் அந்த இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான Christophe Ledoux தெரிவித்தார்.

இந்த நிகழ்வுகளானது, அவர்களின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க போராட்டத்தில் தொழிலாளர்களுக்கு உதவியாக, தொழிற்சங்க எந்திரங்களிடமிருந்து சுயாதீனமான நடவடிக்கை குழுக்களையும், மற்றும் அவர்களின் போராட்டங்களின் குரல்வளையை நெரித்து மூச்சுத் திணறடிக்கும் உத்தியோகபூர்வ வட்டாரங்களது முயற்சிகளை அடையாளம் கண்டு தடுப்பதற்குத் தொழிலாளர்களுக்கு உதவியாக ஒரு மார்க்சிச முன்னணிப்படையையும் கட்டமைக்க வேண்டிய தேவையை அடிக்கோடிடுகிறது.