ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Germany, France step up military, police alliance with Aachen treaty

ஜேர்மனியும் பிரான்ஸூம் ஆஹன் உடன்படிக்கையின் ஊடாக இராணுவ, பொலிஸ் கூட்டுறவை அதிகரிக்கின்றன

By Alex Lantier
23 January 2019

1963 எலிசே உடன்படிக்கை கையெழுத்தாகி ஐம்பத்தி ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனும் மற்றொரு பிரான்கோ-ஜேர்மன் நட்புறவு உடன்படிக்கையில் கையெழுத்திட ஆஹன் நகரில் நேற்று சந்தித்தனர். சர்வதேச நல்லுறவு மற்றும் சமூக உரிமைகள் குறித்த அதன் அலுத்துப்போன குறிப்புகளுக்கு மத்தியில், அந்த உடன்படிக்கையின் வாசகங்கள், ஒரு கூட்டு இராணுவ சக்தியாக இருந்து அமெரிக்காவை எதிர்க்கவும் மற்றும் ஐரோப்பா எங்கிலும் பொலிஸ்-அரசு ஆட்சிகளைத் திணிக்கவும், அந்த உடன்படிக்கை மக்கள் செல்வாக்கிழந்த மூர்க்கமான பரந்த பல திட்டநிரலின் பாகமாக உள்ளது என்பதையே தெளிவுபடுத்துகின்றன.

ஆஹன் மற்றும் எலிசே உடன்படிக்கைகளை குறித்த ஒப்பீடுகள் அடிப்படையிலேயே தவறான கருத்தை வழங்குகின்றன. அல்ஜீரியாவில் பிரான்சின் இரத்தக்களரியான நவ-காலனித்துவ போருக்குப் பின்னர் உடனடியாக, மற்றும் அமெரிக்க டாலர் சம்பந்தமாக வாஷிங்டனுடன் அதிகரித்து வந்த நிதியியல் பதட்டங்களுக்கு மத்தியில், எலிசே உடன்படிக்கை போருக்குப் பிந்தைய பொருளாதார வளர்ச்சிக்கு இடையே கையெழுத்தானது. ஜேர்மன் அரசாங்கம் அமெரிக்காவுடனான நேட்டோ கூட்டணிக்கு தான் அடிபணிந்திருக்கும் என்ற நிபந்தனைகள் எலிசே உடன்படிக்கையில் உள்ளடங்கியிருப்பதை உறுதிப்படுத்த ஜேர்மன் அரசாங்கம் குறுக்கீடு செய்தது.

இப்போதோ, ஸ்ராலினிசத்தால் 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் இருந்து அண்மித்து மூன்று தசாப்தங்களாக ஏகாதிபத்திய போர் மற்றும் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், முதலாளித்துவத்தின் மற்றும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான உறவுகளில் மிக ஆழமான நெருக்கடி கட்டவிழ்ந்து வருகிறது. வர்த்தகப் போர் குறித்த அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், அட்லாண்டிக் கடந்த நாடுகளுக்கு இடையிலான உறவுகள் உடைந்து வருவதுடன், ஜேர்மனி அதன் வெளியுறவு கொள்கையை மீள்இராணுவமயப்படுத்த முனைந்து வருகிறது. பிரான்சில் சமூக செலவினக் குறைப்பு மற்றும் சமத்துவமின்மைக்கு எதிராக கடந்த நவம்பரில் வெடித்த பெருந்திரளான மக்களின் "மஞ்சள் சீருடை" போராட்டங்களுக்குச் சற்று முன்னதாக, மக்ரோன் கூறுகையில் ரஷ்யா, சீனா அல்லது அமெரிக்காவை எதிர்கொள்ள ஐரோப்பா தயாராக இருக்க வேண்டும் என்றுரைத்தார்.

நேற்று ஆஹன் உடன்படிக்கை குறித்து கூறுகையில், மேர்க்கெல் இதுவே இந்த புதிய உடன்படிக்கையின் மத்திய நோக்கம் என்பதை உறுதிப்படுத்தினார்: “நாம் ஒரு பொதுவான இராணுவக் கலாச்சார அபிவிருத்திக்காக, ஒரு பொதுவான பாதுகாப்பு தொழில்துறைக்காக மற்றும் ஆயுத ஏற்றுமதிகளுக்கான ஒரு பொதுவான கொள்கைக்காக நமக்குநாமே பொறுப்பேற்று வருகிறோம். இவ்விதத்தில் தான் ஓர் ஐரோப்பிய இராணுவத்தை அபிவிருத்தி செய்வதில் நமது பங்களிப்பைச் செலுத்த விரும்புகிறோம்,” என்றார்.

அந்த உடன்படிக்கை அதை விவரிக்கிறது, பேர்லினும் பாரீசும் "பலமான மற்றும் நடைமுறைக்கு உகந்த, பொருளாதார மற்றும் நாணய ஒன்றியத்தைப் பலப்படுத்தும் மற்றும் ஆழப்படுத்தும், ஒரு பொதுவான வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கையை ஏற்படுத்த ... இவ்விரு நாடுகளும் வெளியுறவு, பாதுகாப்பு, வெளிப்புற கண்காணிப்பு, உள்நாட்டு கண்காணிப்பு, மற்றும் அபிவிருத்தி ஆகியவை மீதான கூட்டுறவு கொள்கையை ஆழப்படுத்தும், அதேவேளையில் நடவடிக்கைக்கான ஐரோப்பாவின் சுதந்திரமான ஆற்றலை மீளபலப்படுத்த முனையும். அவற்றின் பொதுவான நலன்களைப் பாதிக்கும் எந்தவொரு முக்கிய முடிவுகள் மீதும் பொதுவான நிலைப்பாடுகளை வரையறை செய்ய அவை செயலாற்றும்,” என்று அது சூளுரைக்கிறது.

“இத்தகைய பொறுப்புறுதிகளை வழிநடத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கான ஒரு பிரான்கோ-ஜேர்மன் கவுன்சிலை அரசியல் அமைப்பாக" இந்த உடன்படிக்கை உருவாக்குகிறது. மாலியில் பிரான்சினது போரில் ஏற்கனவே ஜேர்மன் துருப்புகள் சண்டையிட்டு வருகின்றன என்கின்ற நிலையில், “ஒரு பொதுவான கலாச்சாரத்தை உருவாக்கவும் மற்றும் கூட்டு நிலைநிறுத்தல்களைத் திட்டமிடவும் அவற்றின் ஆயுதப்படைகளுக்கு இடையே கூடுதலாக கூட்டுறவை மீளப்பலப்படுத்த" அது சூளுரைக்கிறது. “அமைதி பேணுவது மற்றும் மோதலுக்குப் பிந்தைய நிலைமைகளை நிர்வகிப்பது" உட்பட ஆபிரிக்க கொள்கையில் பேர்லின் மற்றும் பாரீசுக்கு இடையே வருடாந்தர பேச்சுவார்த்தையை அது ஏற்படுத்துகிறது.

டாங்கிகள் மற்றும் போர் விமானங்கள் உட்பட ஐரோப்பிய ஆயுத அமைப்புமுறைக்கான நிதிகளை அதிகரிப்பதற்காக கடந்தாண்டு 13 பில்லியன் யூரோ ஐரோப்பிய பாதுகாப்பு நிதியம் ஒன்றை உருவாக்கிய பின்னர், ஓர் ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்திற்கான அழைப்புகளுக்கு இடையே, இந்த உடன்படிக்கை ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு ஆயுத தொழில்துறைகளை நெருக்கமாக ஒருங்கிணைக்க அழைப்பு விடுக்கிறது. பேர்லினும் பாரீசும் "பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் அவற்றின் பாதுகாப்பு தொழில்துறைகளுக்கு இடையே சாத்தியமானளவுக்கு நெருக்கமான கூட்டுறவுக்கு ஆதரவு வழங்குவதற்கும், கூட்டாக ஆயுதங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதிகள் செய்வதன் மீது ஒரு பொதுவான அணுகுமுறையை இரு நாடுகளும் நெறிப்படுத்தும் என்றும்" அந்த உடன்படிக்கை அறிவிக்கிறது.

பேர்லினும் பாரீசும் நேட்டோ கூட்டணிக்குள் செயல்பட்டு வருவதாக அந்த உடன்படிக்கை பாசாங்குத்தனத்தை பேணுகின்ற அதேவேளையில், உண்மையில் அது ஒரு சுதந்திரமான பிராங்கோ-ஜேர்மன் கொள்கையைச் செயல்படுத்த ஐ.நா., நேட்டோ, மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு அதிகாரிகளுக்கு இடையே கூட்டு ஒத்துழைப்புக்காக அழைப்பு விடுக்கிறது. “ஜேர்மன் கூட்டாட்சி குடியரசை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு நிரந்தர அங்கத்துவ நாடாக சேர்ப்பது, பிரான்கோ-ஜேர்மன் இராஜாங்க நடவடிக்கைகளில் முன்னுரிமையாக இருக்கும்,” என்பதையும் அது சேர்த்துக் கொள்கிறது.

பொருளாதார கொள்கை, அத்துடன் சுற்றுச்சூழல் கொள்கை மற்றும் செயற்கை நுண்ணறிவு உளவுபார்ப்பு மீதான ஆராய்ச்சி மற்றும் "இன்னும் பிற அதிநவீன கண்டுபிடிப்புகளில்" ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் கூட்டு செயல்படுவதற்கு அந்த உடன்படிக்கை பொறுப்பேற்கிறது. அது ஜேர்மன்-பிரெஞ்சு எல்லையை ஒட்டிய பிரதேசங்களில் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு கொள்கைகளை ஒருங்கிணைப்பதற்கும் அழைப்பு விடுக்கிறது. இது முழுமையான ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு அமைச்சரவையின் வருடாந்தர கூட்டுக் கூட்டங்கள் மற்றும் அவர்களுக்கு இடையே ஆண்டுக்கு மும்முறை பரிவர்த்தனைகள் மூலமாகவும் எட்டப்பட இருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சமூக செலவினக் குறைப்பு கொள்கைகள் மற்றும் இராணுவவாத கொள்கைகள் ஜேர்மனியிலும், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய கண்டம் எங்கிலும் தொழிலாளர்களிடையே பரவலாக வெறுக்கப்படுகிறது. ஆகவே வெளிநாடுகளில் இராணுவவாதத்தை நோக்கிய முனைவானது அக்கண்டம் எங்கிலும் உள்நாட்டு உளவுபார்ப்பு நடவடிக்கைகள் மற்றும் பொலிஸ் கூட்டு ஒத்துழைப்பு மற்றும் பொலிஸ்-அரசு நடவடிக்கைகளுக்கான உந்துதலில் இருந்து பிரிக்க முடியாததாகும். பிராங்கோ-ஜேர்மன் கூட்டு பொலிஸ் நடவடிக்கைகள் ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு மண்ணில் மட்டுமல்ல, மாறாக, குறிப்பிடத்தக்க வகையில், வெளிநாடுகளிலும் கூட நடத்தப்படுமென அந்த உடன்படிக்கை குறிப்பிடுகிறது.

“உள்நாட்டு கண்காணிப்பை பொறுத்த வரையில், இவ்விரு நாடுகளது அரசாங்கங்களும் பயங்கரவாதம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிராக அவற்றின் இருதரப்பு கூட்டு நடவடிக்கையைக் கூடுதலாக மீளப்பலப்படுத்தும் என்பதுடன், நீதித்துறை விவகாரங்கள், உளவுபார்ப்பு மற்றும் பொலிஸ் துறைகளிலும் அவற்றின் கூட்டுறவை மீளப்பலப்படுத்தும். அவை கூட்டுப்பயிற்சி மற்றும் நிலைநிறுத்தலுக்கான நடவடிக்கைகளை ஏற்படுத்துவதுடன், மற்ற நாடுகளில் ஸ்திரப்பாட்டு நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பொதுவான பிரிவை உருவாக்கும்,” என்று அது குறிப்பிடுகிறது.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் பிரான்சிலிருந்து வெளியிடப்பட்ட linksunten.indymedia.org ஜேர்மன் வலைத் தளத்தைத் தணிக்கை செய்து முடக்குவதன் மீது ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு அதிகாரிகள் கூடி செயலாற்றியமை பிரான்கோ-ஜேர்மன் பொலிஸ் நடவடிக்கைகளின் தன்மைக்கு ஓர் அறிகுறியாகும். இது பேச்சு சுதந்திரம் மீதான அப்பட்டமான தாக்குதலாக இருந்தது. இப்போதோ, "மஞ்சள் சீருடை" போராட்டங்களால் பிரெஞ்சு பொலிஸ் மூழ்கடிக்கப்படலாம் என்ற அச்சங்கள் பரவலாக செய்திகளில் வெளியாவதற்கு இடையே தான் இந்த ஆஹன் உடன்படிக்கை கையெழுத்திடப்படுகிறது.

ஆஹன் உடன்படிக்கை ஐரோப்பா மற்றும் அதற்கு அப்பாலும் தொழிலாளர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகும். இராணுவவாதம், சமூக செலவினக் குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூக எதிர்ப்பு மீதான பொலிஸ்-அரசு ஒடுக்குமுறை ஆகியவை தற்செயலானவையோ அல்லது அரசு தலைவர்களின் தனிப்பட்ட பிழைகளோ கிடையாது. மாறாக, இராணுவ-பொலிஸ் ஆட்சியை நோக்கி தீவிரமடைந்து வரும் திருப்பம் ஒரு சர்வதேச நிகழ்வுபோக்காக, உலக முதலாளித்துவத்தின் அமைப்புரீதியிலான முறிவில் வேரூன்றி உள்ளது. முதலாளித்துவம், சர்வாதிகாரம் மற்றும் போருக்கு எதிராக ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதன் மூலமாக மட்டுமே அதை எதிர்த்து போராட முடியும்.

மேர்க்கெல்-மக்ரோன் அச்சின் சதிகளுக்கு ஒரே முற்போக்கான எதிர்ப்பு தொழிலாள வர்க்கத்திடம் இருந்தே வருகிறது. அரசியல் ஸ்தாபகத்திற்குள், ஜேர்மன்-பிரெஞ்சு இணைப்பில் உள்ள மற்ற அங்கத்தவர்களை விலையாக கொடுத்து அவற்றின் ஏகாதிபத்திய நலன்களை முன்னெடுப்பதற்காக மட்டுமே நவ-பாசிசவாத அல்லது தேசியவாத அரசியல்வாதிகளிடம் இருந்து விமர்சனங்கள் வருகின்றன.

அதிவலது ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சியின் அலிஸ் வைடெல் அந்த உடன்படிக்கையைப் பிரெஞ்சு நலன்களை ஜேர்மனிக்கு அடிபணிய வைக்கும் ஒரு முயற்சி என்று தாக்கினார்: “மக்ரோன் அவருக்கு என்ன தேவையோ அதை செய்கிறார். ஜேர்மன் முதல் ஷரத்தில் பொருளாதார மற்றும் நாணய ஒன்றியத்தை 'பலப்படுத்த மற்றும் ஆழப்படுத்த' பொறுப்பேற்கிறது, அதாவது, பிரெஞ்சு பணவீக்க கொள்கைகளுக்காக ஜேர்மன் வரிப்பணத்தை இன்னும் சிறப்பாக, விரைவாக பறிக்க ... பணத்தைக் கைமாற்றும் மற்றும் மறுபங்கீடு செய்யும் ஓர் ஒன்றியத்தைக் கட்டமைக்க பொறுப்பேற்கிறது.” ஐரோப்பிய பாதுகாப்புத்துறை கொள்கையில் இருந்து பிரெஞ்சு பாதுகாப்புத்துறை ஒப்பந்த நிறுவனங்களே "முக்கிய இலாபமீட்டுவோராக" இருக்கும் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

பிரான்சின் நவ-பாசிசவாத அரசியல்வாதிகளோ பொது விவாதமின்றி பிரெஞ்சு நலன்களை ஜேர்மனியிடம் காட்டிக்கொடுத்ததற்காக மக்ரோன் மீதான தாக்குதல்களை முன்னெடுத்தனர். மரீன் லு பென் கூறினார், “மக்ரோன் நம் நாட்டை விற்று வருகிறார், அதன் இறையாண்மையை அழித்து கொண்டிருக்கிறார். ... இறுதியாக அவர் நமது ஐ.நா. பாதுகாப்பு அவை ஆசனத்தை ஜேர்மனியுடன் பகிர்ந்து கொள்வதற்கும் கூட கருதக்கூடும், ஒருவேளை நமது அணுஆயுத தளவாடங்களையும் கூட பகிர்ந்து கொள்ள நினைக்கக்கூடும் ஏனென்றால் என்ன விலை கொடுத்தாவது அவர் ஆயுதத் தொழில்துறை உடன்படிக்கைகளைப் பெற விரும்புகிறார்.” பிரான்சின் ஐ.நா. பாதுகாப்பு அவை ஆசனம் சம்பந்தப்பட்ட பிரச்சினை "அதீத முக்கியமானது" என்றார்.

மக்களுக்கு எதிரான ஜேர்மன்-பிரெஞ்சு பொலிஸ் கூட்டுறவைக் குறித்து வாய் திறக்காமல் கடந்து சென்ற லு பென், ஜேர்மனி உடனான எந்தவொரு பாதுகாப்பு தொழில்துறை கூட்டுறவும் பிரெஞ்சு ஆயுத ஏற்றுமதி நலன்களுக்கு கேடானது என்று அதற்கு எதிராக எச்சரித்தார். அவர் கூறினார், “நாம் ஜேர்மனியர்களுடன் கூடி ஆயுதங்களை உற்பத்தி செய்தால், பிரெஞ்சு மக்களாகிய நாம் ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கு முன்னதாக ஜேர்மன் நாடாளுமன்றத்திடம் இருந்து [Bundestag] அனுமதி கோர வேண்டியிருக்கும்.”

ஜேர்மனியின் இடது கட்சி மற்றும் கிரீஸில் சமூக செலவினக் குறைப்பை ஆதரிக்கும் சிரிசா அராங்கம் ஆகியவற்றுடன் இணைந்த, அடிபணியா பிரான்ஸ் (La France insoumise – LFI) கட்சியின் ஜோன்-லூக் மெலோன்சோன், அந்த உடன்படிக்கையை "நமது இறையாண்மையின் ஒரு பின்னோக்கிய படி" என்றும், “ஒரு சமூக மற்றும் சுற்றுச்சூழல் விடயத்தில் பின்னோக்கிய அடி" என்றும் குறிப்பிட்டார். ஜேர்மன்-பிரெஞ்சு கூட்டுறவு என்பது "பொதுச் சேவைகள் குறைப்பு, அரசு முதலீடு குறைப்பு, சம்பள வெட்டுக்கள், வேலைவாய்ப்பின்மை மீதான தாக்குதல்கள்" என்பதை அர்த்தப்படுத்துமென அவர் தெரிவித்தார்.

உண்மையில், சிரிசா 2015 இல் சமூக செலவினக் குறைப்பு நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக சூளுரைத்து அதிகாரத்திற்கு வந்து, ஆனால் வாக்காளர்களின் விருப்பத்தைக் காலில் இட்டு நசுக்கி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வங்கிகளுடனான ஓர் உடன்படிக்கையில் கூடி செயல்படுவதற்காக பில்லியன் கணக்கில் புதிய சமூக வெட்டுக்களைத் திணித்த சிரிசாவின் முன்வரலாறு, தொழிலாளர்களுக்கு எந்த தேசியவாத முன்னோக்கும் இல்லை என்பதற்கான மிகத் தெளிவான எடுத்துக்காட்டாகும். தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வரும் எதிர்ப்பை அணிதிரட்டுவதும் மற்றும் ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்கான ஒரு போராட்டத்தில் அதை ஐக்கியப்படுத்துவதும் மட்டும் தான் சமூக செலவினக் குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் இராணுவ-பொலிஸ் ஆட்சிக்கான நகர்வுகளுக்கு எதிரான ஒரே முன்னோக்கிய பாதையாகும்.