ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Ecuador unveils “special examination” of Julian Assange’s asylum

ஜூலியான் அசான்ஜின் தஞ்சம் குறித்து ஈக்வடோர் "சிறப்பு விசாரணை" கொண்டு வருகிறது

By Mike Head
5 January 2019

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியான் அசான்ஜ் தைரியமாக கசியவிட்ட ஆவணங்கள் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் பாரிய உளவுபார்ப்பு மற்றும் குற்றங்களை அம்பலப்படுத்திய நிலையில், அவர் ஈக்வடோரின் இலண்டன் தூதரகத்தில் இருந்து வெளியேற்றப்படுவதற்கான ஒரு புதிய அச்சுறுத்தலை முகங்கொடுத்து வருகிறார். ஜோடிக்கப்பட்ட தேசத்துரோக குற்றச்சாட்டுக்கள் அல்லது சதி சூழ்ச்சிக்கான குற்றச்சாட்டுகளுக்காக, அமெரிக்காவில் ஒருவேளை ஆயுள் தண்டனையோ, அல்லது மரண தண்டனையே கூட, முகங்கொடுக்கலாம் என்பதால், அவரை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதிலிருந்து காப்பாற்றுவதற்காக 2012 இல் அவருக்கு அங்கே அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டது.

அத்தூதரகத்திலிருந்து அவரை வெளியேற்ற நிர்பந்திக்கும் ஒரு முயற்சியில், கடந்த மார்ச்சில் வெளியுலகு உடனான அசான்ஜின் இணைய அணுகுதல் மற்றும் தகவல் தொடர்புகள் ஏற்கனவே வெட்டப்பட்டுள்ள நிலையில், ஈக்வடோர் ஜனாதிபதி லெனின் மொரேனோ அவர் அரசாங்கத்தின் தஞ்சம் வழங்கும் கடமைப்பாடுகளை மறுத்தளிப்பதற்கு அவரது அரசாங்கத்திற்கு ஒரு மூடிமறைப்பை வழங்கும் ஒரு போலியான சட்ட விசாரணைக்கான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளார்.


ஜூலியான் அசான்ஜ் மற்றும் லெனின் மொரேனோ

வாஷிங்டனிடம் இருந்து அதிகரித்து வரும் கோரிக்கைகளை முகங்கொடுத்துள்ள மொரேனோ அரசாங்கம், அசான்ஜின் தஞ்சம் குறித்தும் குடியுரிமை குறித்தும் ஒரு "சிறப்பு விசாரணை" கொண்டு வந்துள்ளது — இந்த நடைமுறை தெளிவாக இரண்டையுமே மறுத்தளிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் குடியுரிமை பிரச்சினை முக்கியமானது, ஏனென்றால் ஈக்வடோர் சட்டம் குடிமக்களை வேறு நாட்டிடம் ஒப்படைப்பதைத் தடுக்கிறது.

முன்னாள் ஈக்வடோர் ஜனாதிபதி ரஃபேல் கோரேயாவின் அரசாங்கம் தான் அசான்ஜிற்குத் தஞ்சம் வழங்கியது என்கின்ற நிலையில், தேசிய கணக்கெடுப்பு ஆணையத்தின் (Direction National de Auditoria) ஒரு விசாரணை குறித்து அறிவித்து, டிசம்பர் 19 இல் ஈக்வடோர் அரசின் தலைமை கணக்காயரிடம் பெற்ற ஒரு கடிதத்தின் படத்தை கோரேயா ஜனவரி 3 இல் ட்வீட் செய்தார்.

“ஜூலியன் அசான்ஜிற்கு தஞ்சம் வழங்கிய மற்றும் குடியுரிமை வழங்கிய நடைமுறை தேசிய மற்றும் சர்வதேச சட்டத்திற்கு இணங்க நடத்தப்பட்டதா என்பதைத் தீர்மானிப்பதே" குறிப்பாக இந்த கணக்கெடுப்பின் "பொதுவான நோக்கம்" ஆகும். இது ஜனவரி 1, 2012 மற்றும் செப்டம்பர் 20, 2018 க்கு இடையிலான காலகட்டத்தை உள்ளடக்கி இருக்கும்.

இப்போது பெல்ஜியத்தில் வாழ்ந்து வரும் கோரேயா, இந்த விசாரணைக்குத் தேவையான தகவல்களை வழங்குமாறு கேட்கப்பட்டார், என்றாலும் அதற்கான காலவரம்போ அல்லது இறுதி முடிவுக்காக எந்தவொரு தேதியோ குறிப்பிடப்படவில்லை. எவ்வாறிருப்பினும் ஈக்வடோர் மீது தீவிரமடைந்து வரும் பொருளாதார, நிதிய மற்றும் அரசியல் அழுத்தத்துடன், அனைத்திற்கும் மேலாக அமெரிக்க இராணுவ-உளவுத்துறை எந்திரம் மற்றும் அரசியல் ஸ்தாபகத்திடமிருந்து வரும் அழுத்தத்துடன், இந்த நேரம் நேரடியாக தொடர்புபட்டுள்ளது என்பதில் எந்த ஐயமும் இல்லை.

அதே நாளில் விக்கிலீக்ஸ் கோரேயாவின் செய்தியை ட்வீட் செய்தது. வீழ்ச்சி அடைந்து வரும் உலகளாவிய எண்ணெய் விலைகள் மற்றும் நிதிய சந்தைகளின் கட்டளைகளால் எரியூட்டப்பட்டுள்ள மொரேனோ அரசாங்கத்தின் ஆழமடைந்து வரும் கடன்களின் காரணமாக, அது IMF பிணையெடுப்பில் தஞ்சம் அடைய பரிசீலித்து வருவதற்கும் மற்றும் இந்த "சிறப்பு விசாரணைக்கும்" இடையிலான தொடர்பை அது சுட்டிக்காட்டியது.

விக்கிலீக்ஸ் குறிப்பிட்டது: “ஈக்வடோர் 10 பில்லியனுக்கும் அதிக டாலர் IMF பிணையெடுப்பைப் பெற முயன்று வருகின்ற நிலையிலும், இதற்காக அமெரிக்க அரசாங்கம் அசான்ஜை ஒப்படைக்கவும் மற்றும் செவ்ரோனுக்கு எதிரான சுற்றுச்சூழல் உரிமைகோரல்களைக் கைவிடுவதற்கும் கோரி வருகின்ற நிலையிலும், அது ஜூலியான் அசான்ஜின் தஞ்சம் மற்றும் குடியுரிமை மீது (குடிமக்களை வேறு நாடுகளை ஒப்படைக்க முடியாது என்பதால்) ஓர் உத்தியோகபூர்வ 'சிறப்பு விசாரணையை' தொடங்கி உள்ளது.”

நடைமுறையளவில் முதலிடத்தில் உலகின் அரசியல் சிறைக்காவலாளியாக விளங்கும் அமெரிக்காவிடம் அசான்ஜை ஒப்படைப்பதையே எல்லா ஆதாரங்களும் சுட்டிக்காட்டுகின்றன, இதற்கான நிபந்தனைகள் வாஷிங்டனால் மற்றும் மொரேனோ மற்றும் அவர் அரசாங்கம் பிழைத்திருக்க விரும்புகின்ற நிதியியல் உயரடுக்கால் அமைக்கப்படுகின்றன. அசான்ஜிற்கு எதிரான இடைவிடாத மற்றும் பழிவாங்கும் நடவடிக்கையானது, ஆளும் முதலாளித்துவ வர்க்கம் உலகெங்கிலும் தொழிலாள வர்க்க போராட்டங்களின் மீளெழுச்சியை முகங்கொடுத்திருக்கையில், அதிருப்தியை மவுனமாக்குவதற்கு அது தீர்மானமாக இருப்பதால் உந்தப்படுகிறது.

எண்ணெய் விலை குறைவு மற்றும் அதன் சர்வதேச கடன்கள் மீதான கடுமையான வட்டிவிகிதங்களால் பிழியப்பட்ட மொரேனோ IMF பிணையெடுப்பைப் பரிசீலித்து வருவதாக ஒப்புக் கொண்டுள்ளார், அதற்கு கடுமையான செலவு-குறைப்புகளும் தொழிலாள வர்க்க நிலைமைகள் மீதான கூடுதல் தாக்குதல்களும் அவசியப்படும். IMF உடன்படிக்கை சாத்தியமாகுமா என்று கேட்கப்பட்ட போது மொரேனோ கடந்த மாதம் செய்தியாளர்களுக்கு கூறுகையில், “நிச்சயமாக எதுவுமே மேசையில் இருந்து விலக்கி வைக்கப்படவில்லை,” என்றார்.

அதுபோன்ற எந்தவொரு கடனும் பரந்த அமைதியின்மையை தூண்டும். கண்காணிப்பு அமைப்பான Fiscal Policy Observatory இன் இயக்குனர் Jaime Carrera சமீபத்தில் லாஸ் ஏஞ்சல் டைம்ஸிற்குக் கூறுகையில், அனேகமாக 450,000 மத்திய அரசு தொழிலாளர் சக்தியிலிருந்து குறைந்தபட்சம் 10 சதவீத வெட்டுவதற்கான கோரிக்கை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான ஆண்டு எரிபொருள் மானியங்களுக்குச் செலவிடப்படும் 4 பில்லியன் டாலர் மொத்த தொகையையும் அல்லது பெரும்பான்மையை நிறுத்துவதற்கான கோரிக்கைகள் உட்பட, நிச்சயமாக IMF கடினமான நிபந்தனைகளை முன்வைக்கும் என்றார். “அத்தகைய குறைப்புகள் பெரும் எண்ணிக்கையிலான மக்களை போராட்டத்திற்காக வீதிகளுக்கு இழுத்து வரும்,” என்று Carrera தெரிவித்தார்.

இந்த சாத்தியக்கூறை எதிர்கொண்டுள்ள மொரேனோ, சீனா உட்பட ஏனைய நாடுகளிடம் இருந்தும் முதலீட்டு வங்கிகளிடம் இருந்தும் நிதிகள் பெறுவதற்கான பெரும்பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளார். மொத்தம் 6.5 பில்லியன் டாலர் என்று கூறப்படும் சீனக் கடன்களைத் திரும்ப செலுத்துவது மீது மீண்டும் பேரம்பேசல்களை விவாதிக்க அவர் கடந்த மாதம் பெய்ஜிங் விஜயம் செய்தார்.

ஏனைய இலத்தீன் அமெரிக்க நாடுகளைப் போலவே, ஈக்வடோரும் அமெரிக்கா மற்றும் சர்வதேச நிதியியல் அமைப்புகளால் நிதிய மற்றும் அரசியல் இடுக்கிப்பிடியில் நிறுத்தப்பட்டுள்ளது. எஸ்&பி குளோபல் ரேட்டிங் நிறுவனம் தரவரிசைப் பட்டியலில் அர்ஜென்டினாவின் B குறியீடுக்குக் கீழே ஈக்வடோரை B- இல் நிறுத்தி, ஈக்வடோர் மீது பெறுமதியற்ற பத்திர அந்தஸ்தைத் திணித்துள்ளது. ஈக்வடோரின் இறையாண்மை பத்திரங்கள் மீது கடுமையான வட்டிவிகிதங்கள் —10 சதவீதத்திற்கும் மேல்— என்பதே இந்த தரப்படுத்தலின் அர்த்தமாகும்.

சமீபத்திய மாதங்களில், அமெரிக்க ஊடகம் பெய்ஜிங்கிற்கு எதிரான அதன் பிரச்சாரத்தின் பாகமாக வறிய நாடுகளை நிதியியல்ரீதியில் பொறியில் சிக்க வைக்க சீனா "கடன் மூலமாக இராஜாங்க நடவடிக்கை" மேற்கொள்வதாக குற்றஞ்சாட்டி, சீனக் கடனைப் பெரிதுபடுத்திக் காட்டியுள்ளன. அரசு நிறுவனமான பெட்ரோஅமேசனஸ் எண்ணெய் நிறுவனம், இது அந்நாட்டின் எண்ணெய் உற்பத்தியில் 80 சதவீதம் உற்பத்தி செய்கிறது, டெக்சாஸை மையமாக கொண்ட எண்ணெய் வயல் சேவை நிறுவனமான Schlumberger உட்பட ஒப்பந்ததாரர்களுக்கு 3 பில்லியன் டாலர் கடன்களைக் கொண்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒரு குழு கடந்த ஆண்டு ஜூன் 20 இருந்து ஜூலை 4 வரையில் ஈக்வடோருக்கு விஜயம் செய்து, பின்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டது, அதில் அது குறிப்பிடுகையில், மொரேனோ ஏப்ரல் 2017 இல் பதவி ஏற்றதற்குப் பின்னர் இருந்து நிதியியல் சந்தைகளின் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்ய நகர்ந்துள்ளார் என்றாலும், இன்னும் கடுமையான நடவடிக்கைகள் அவசியப்படுவதாக வலியுறுத்தியது. “எண்ணெய் விலை உயர்வு, தற்காலிக வரி விதிப்புகள், மூலதன செலவினங்களில் வெட்டுக்கள், பொதுத்துறை நியமனங்களை முடக்குவது" ஆகியவை அதில் உள்ளடங்கி இருந்தன.

வாஷிங்டன் உடனான ஈக்வடோரின் பொருளாதார மற்றும் இராணுவ உறவுகளை இறுக்குவதைக் குறித்தும், அத்துடன் அசான்ஜின் தலைவிதி குறித்தும் விவாதிப்பதற்காக அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் குவிடோவுக்கு அதே வேளையில் வந்திருந்தார் என்பது தற்செயலானதல்ல. அரசு மாளிகையின் பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றில், ஈக்வடோரின் பொருளாதார மற்றும் நிதியமைச்சர் ரிச்சார்ட் மார்ட்டினேஸ், “ஈக்வடோருக்கு அனுகூலமான நிபந்தனைகளுடன் நிதி வழங்கும் ஆதாரங்களை உருவாக்க, பன்முக அமைப்புகளை அனுமதிப்பதற்கான ஆதரவை" அமெரிக்காவிடம் இருந்து பெறுவது குறித்து, பென்ஸ் உடன் நிற்க உரையாற்றினார், பென்ஸ் மொரேனோவையும் சந்தித்தார்.

ஈக்வடோர் மீது ஆழ்ந்த அழுத்தத்தை அதிகரிப்பதில் பென்ஸ் மற்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மையத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்றாலும், அசான்ஜை ஒப்படைக்க ட்ரம்ப் நிர்வாகம் ஈக்வடோரை பலவந்தப்படுத்த வேண்டுமென மீண்டும் மீண்டும் கோரி வருவதில் அமெரிக்க ஜனநாயக கட்சியினரும் மிகவும் விடாப்பிடியாக உள்ளனர்.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இப்போது ஜனநாயக கட்சியினர் பெரும்பான்மையில் உள்ள நிலையில், இந்த ஆக்ரோஷம் நிச்சயமாக தீவிரப்படுத்தப்படும். இது, ரஷ்யா அத்துடன் சீனாவுடனான ஒரு மோதலுக்காக வெள்ளை மாளிகைக்கு அழுத்தமளிக்க, இராணுவ-உளவுத்துறை முகமைகளுடன் நெருக்கமாக செயல்பட்டு வரும் ஜனநாயக கட்சியினரின் முனைவின் முதன்மை அம்சமாக அமைந்துள்ளது.

ஜனநாயக கட்சியுடன் அணி சேர்ந்து நிற்கும் பெருநிறுவன ஊடக நிறுவனங்களோ, ட்ரம்பின் 2016 ஜனாதிபதி தேர்தலுக்கு ஒத்துழைக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் உடன் சேர்ந்து விக்கிலீக்ஸ் ஒரு தீய சூழ்ச்சியின் பாகமாக இருந்தது என்று அர்த்தமற்ற பகட்டாரவாரமான குற்றச்சாட்டுக்களைச் சுமத்துகின்றன. இது 2016 தேர்தலில் ரஷ்ய குறுக்கீடு இருந்ததாக கூறப்படும் விவகாரத்தில், நீண்டகால முன்னாள் FBI இயக்குனர் ரோபர்ட் முல்லெரின் சிறப்பு விசாரணை குழுவினது வேட்டையாடும் விசாரணைக்குத் தீனி போடுகிறது.

ஜனநாயக கட்சியின் தேசிய குழு "ஜனநாயக சோசலிஸ்ட்" என்றழைக்கப்பட்ட பேர்ணி சாண்டர்ஸைப் பலவீனப்படுத்தி, ஹிலாரி கிளிண்டனை ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக உறுதிப்படுத்த முனைந்தது என்பதை ஊர்ஜிதப்படுத்தும் கசியவிடப்பட்ட மின்னஞ்சல்கள் இத்தகைய குற்றச்சாட்டுக்களின் மையத்தில் இருக்கின்றன. வோல் ஸ்ட்ரீட்டுக்கு ஆதரவை சூளுரைத்தும் காட்டுமிராண்டித்தனமான அமெரிக்க தலைமையிலான 2011 லிபிய போரை ஒழுங்கமைப்பதில் அவர் வகித்த பாத்திரத்தைப் பெருமைப்பீற்றியும் பெருநிறுவன பார்வையாளர்களுக்கு கிளிண்டன் உரைகள் வழங்கினார் என்பதையும் அவை வெளிப்படுத்தின.

முக்கியமாக, அசான்ஜிற்கு இந்த புதிய அச்சுறுத்தலானது சமீபத்திய மழுப்பலான பிரச்சாரம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து வருகிறது: அதாவது, ட்ரம்பின் முன்னாள் தேர்தல் பிரச்சார நிர்வாகி பௌல் மனாஃபோர்ட் இலண்டனின் ஈக்வடோர் தூதரகத்திற்கு உள்ளே அசான்ஜூடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினார் என்று டிசம்பரில் கார்டியன் நிறைய தலைப்புகளில் வாதிட்டது.

ஐந்து வாரங்கள் கடந்து விட்டன, ஜனவரி 3 இல் Intercept இன் கிளின் க்ரீன்வால்ட் குறிப்பிட்டதைப் போல, கார்டியனின் தலைமை பதிப்பாசிரியர் கத் வினெரும் மற்றும் அந்த வாதத்தின் தலைமை எழுத்தாளர் லூக் ஹார்டிங்கும் அந்த செய்தியில் உள்ள வெளிப்படையான பொய்மைப்படுத்தல்கள் மற்றும் முரண்பாடுகள் அம்பலப்பட்டிருப்பதற்கு விடையிறுக்குமாறு கோரிய கோரிக்கைகளைத் தொடர்ந்து மறுத்துள்ளனர். அந்த கூற்றுகள், மனாஃபோர்ட், விக்கிலீக்ஸ் மற்றும் முன்னாள் ஈக்வடோரிய தூதரக அதிகாரிகளால் முறையாக மறுக்கப்பட்டுள்ளன.

உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் சர்வதேச அளவில் அசான்ஜ் மற்றும் விக்கிலீக்ஸைப் பாதுகாக்க தொழிலாள வர்க்கத்திலும் இளைஞர்கள் மத்தியிலும் ஒரு பிரச்சாரத்தை நடத்தி வருகின்றன. இது, போர்-எதிர்ப்பு மற்றும் முதலாளித்துவ-எதிர்ப்பு மனநிலையை மவுனமாக்க அல்லது தனிமைப்படுத்த, கூகுள் மற்றும் பேஸ்புக் போன்ற மிகப்பெரிய பெருநிறுவனங்கள் மற்றும் முதலாளித்துவ அரசாங்கங்களின் தணிக்கை மற்றும் தீவிரப்படுத்தப்பட்டு வரும் ஒடுக்குமுறைக்கு எதிராக பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாக்கும் போராட்டத்தில் முற்றிலும் இன்றியமையா ஒரு விடயமாகும்.

இந்த போராட்டத்தின் பாகமாக, அசான்ஜ் குடியுரிமை கொண்ட ஆஸ்திரேலியாவில் சோசலிச சமத்துவக் கட்சி மார்ச் 3 இல் சிட்னியிலும் மற்றும் மார்ச் 10 இல் மெல்போர்னிலும் அரசியல் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைத்து பரந்த ஆதரவைக் கோரவிருக்கிறது. அமெரிக்கா தலைமையில் அசான்ஜைத் தொல்லைப்படுத்துவதில் ஆஸ்திரேலிய அரசாங்கம் ஒத்துழைப்பதை நிறுத்திக் கொண்டு, பிரிட்டிஷ் அரசாங்கம் விக்கிலீக்ஸ் பதிப்பாசிரியரை ஈக்வடோர் தூதரகத்திலிருந்து வெளியே வரவும் மற்றும் அவர் விரும்பினால் அமெரிக்கா அனுப்பப்படமாட்டார் என்ற உத்தரவாதத்துடன் நிபந்தனையின்றி ஆஸ்திரேலியாவுக்குத் திரும்ப வருவதற்கும் அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி, ஆஸ்திரேலிய அரசாங்கம் அதன் அனைத்து இராஜாங்க மற்றும் சட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி உடனடியாக இதில் தலையீடு செய்ய வேண்டுமென இந்த ஆர்ப்பாட்டங்கள் கோரிக்கை விடுக்கும்.