ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India: Stalinist unions suppress Tamil Nadu auto strikes, promise “industrial peace”

இந்தியா: ஸ்ராலினிச தொழிற்சங்கங்கள் தமிழ்நாடு வாகன தொழிற்சாலை வேலைநிறுத்தங்களை அடக்கி, ”தொழிற்துறை அமைதிக்கு” உத்தரவாதம் அளிக்கின்றன

By Arun Kumar and Yuan Darwin
31 December 2018

தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகள் நிறைவேறாத போதிலும், பிரதான ஸ்ராலினிச கட்சியான மார்க்சிச கம்யூனிஸ்ட் கட்சி அல்லது CPM சார்ந்த தொழிற்சங்கங்கள், போர்குணமிக்க தொடர் வேலைநிறுத்தங்களை முடிவுக்கு கொண்டுவந்தன, இந்த வேலை நிறுத்தத்தில், தமிழ்நாட்டில் சென்னையின் புறநகர் பகுதியின் உற்பத்தி மையமாக இருக்கும் ஓரகடத்தில் பல்லாயிரக்கணக்கான வாகனத் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களான யமஹா மற்றும் ராயல் என்பீல்ட் மற்றும் பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான மயோங் ஷின் இந்தியா (MSI) இவைகளுக்கு எதிராக வேலைநிறுத்தங்கள் செப்டம்பரில் வெடித்தன, இந்த மூன்றும் குறைந்த பட்சம் இரண்டு மாதங்கள் தொடர்ந்த போதிலும், ஸ்ராலினிசவாதிகள் இவைகளை தனிப்படுத்தி வைத்திருந்தனர். ஒரு கூட்டு போராட்டத்தை ஒருங்கிணைத்து இந்த வேலைநிறுத்தங்களை வறுமைக் கூலி, நிலையற்ற வேலை மற்றும் மிருகத்தனமான வேலை நிலைமைகள் போன்றவைகளுக்கு எதிரான ஒரு பரந்துபட்ட தொழிலாளர் வர்க்கத்தை அணிதிரட்டி அதற்கு தலைமை தாங்குவதற்கு பதிலாக, CPM தலைமையில் உள்ள தொழிற்சங்கமான (CITU) தொழிலார்களின் சக்தியை தமிழ்நாட்டின் வலது சாரி அரசாங்கம், மாவட்ட தொழிலாளர் ஆணையர் மற்றும் நீதிமன்றத்தின் மீது கோரிக்கைகள் வைக்க சக்தியை செலவு செய்யுமாறு வற்புறுத்தியது.

வேலைநிறுத்தத்தின் முடிவானது, CPM சார்ந்த CITU பெரும் வணிகத்திற்கு தொழிற்துறை போலீஸாக ,தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பினை ஒடுக்கி மட்டுப்படுத்தும், பணியினை செய்யும் என்பது மேலும் உறுதியாகியுள்ளது. இந்த துரோக ஒப்பந்தத்தின் கீழ் வேலை நிறுத்தங்கள் திரும்ப பெறப்பட்டதன் படி, CITU "தொழிற்துறை அமைதி" பேணி காத்தல் மற்றும் உள்ளிருப்பு போராட்டங்களை தடுத்தல் (யமஹா தொழிலாளர்கள் வேலைநிறுத்ததின் போது கையாண்ட தந்திரோபாயம், போலீஸூடன் மோதலுக்கு வழி வகுத்தது) போன்ற உறுதிகளை அளித்துள்ளது.

பெரும்பாலும் 30 வயது அல்லது அதற்கு கீழ் உள்ள தொழிலாளர்களே வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தியில் இந்தியா முழுக்க வளர்ந்து வரும் போராட்டங்களின் பாகமாக உள்ளனர், இவை தொடர் வறுமை மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மை, பரவலான சமூக சமத்துவமின்மை, மற்றும் சுற்று சூழல் அழிவுக்கும் எதிராக எதிர்ப்பினை எரியூட்டுகின்றன. முதலீட்டாளர்களுடன் பேசுகையில், இந்திய பிரதமர் மோடி, இந்தியாவின் சராசரி தொழித்துறை கூலி சீனாவுடன் ஒப்பிடுகையில், கால் பங்குக்கும் குறைவாக இருப்பதாக, அடிக்கடி பீத்தி கொள்கிறார்.

யமஹாவுக்கு எதிரான வேலைநிறுத்தம் சுமார் 800 நிரந்தர தொழிலாளர்களை உள்ளடக்கி இருந்தது. அது செப்டம்பர் 21 தொடங்கி நவம்பர் 14 இல் முடிந்தது, CITU மற்றும் அதனை சார்ந்த யமஹா வாகன தொழிலாளர் சங்கமும் சேர்ந்து போட்ட ஒப்பந்தமான இதனை CPM மற்றும் CITU தலைவர் சௌந்தராஜன் "மாபெரும் வெற்றி" என்று குறிப்பிடுகின்றார். உண்மையில் இந்த ஒப்பந்தம் தொழிலாளர்களின் முக்கிய இரண்டு கோரிக்கைகளான பணி நீக்கம் செய்த இரண்டு தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தல் மற்றும் சங்க அங்கீகாரம் போன்றவற்றை நிறைவேற்றவில்லை. சங்கவேலைகள் செய்தமைக்காக நீக்கப்பட்ட இரண்டு தொழிலாளர்களும் விசாரணை முடியும் வரை தற்காலிக பணி நீக்கத்தில் உள்ளனர், அதாவது அவர்கள் மீண்டும் பணி நீக்கம் செய்யப்படலாம் என்பது தேற்றம். CITU தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்த நாட்களுக்கு சம்பளம் இல்லை என்பதை ஏற்று கொண்டுள்ளது, ஆனால் இந்தியாவில் நடக்கும் தொழிலாளர் மோதல்களில், இது நியாயம் கிடையாது.

பணிக்கு திரும்பும் ஒப்பந்தத்தின் படி, யமஹாவுக்கு, "தொழிற்துறை அமைதியை நிலைநாட்டுவோம்" மேலும் ”உள்ளிருப்பு போராட்டங்களை எதிர்ப்போம்”, மற்றும் நிறுவனத்துக்கும் அது தொழிலாளர்களை நடத்தும் விதம் குறித்தும் "எந்த அவதூறு கருத்தையும்" கூறாமல் விலகி இருப்போம் என்றும் CITU வாக்குறுதி அளித்துள்ளது.

இதே நிபந்தனையுடன், தென் கொரியாவை தலைமை இடமாக கொண்ட MSI-ன் ஒரகடம் ஆலையிலும் 150 நிரந்தர தொழிலாளர்கள் தொடுத்த 83 நாள் வேலை நிறுத்தத்தை CITU நவம்பர் 29 அன்று முடிவுக்கு கொண்டு வந்தது. நிறுவனம் ஒழுங்கு நடவடிக்கைக்காக குறி வைத்த 22 தொழிலாளர்களும் மீண்டும் பணியில் முழுவதுமாக அமர்த்தப்படவில்லை. நிர்வாகம் அவர்களின் நடத்தையை தொடர்ந்து பரிசீலித்து, அவர்க்ளின் தலைவிதியை தொழிலாளர் ஆணையருடன் கலந்தாலோசித்து முடிவு செய்யும். தொழிலாளர்கள் எந்த ஒரு கூலி உயர்வும் அல்லது வேலைநிறுத்த நாட்களுக்கான கூலியும் பெறமாட்டார்கள் என்பது தெளிவாகிறது.

ராயல் என்பீல்ட் இன் இரண்டு ஆலைகளிலும் அதன் சுற்றுப்புறத்தில் நவம்பர் 12 அன்று ராயல் என்பீல்ட் தொழிலாளர் சங்கத்தின் ஒப்புதலுடன் வந்த ஒப்பந்தத்துடன் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது. இந்த ஒப்பந்தம் கூலிஉயர்வு, சங்க அங்கீகாரம் மற்றும் சுமார் பல பன்னிரண்டுக்கும் மேற்பட்ட பணி நீக்கப்பட்ட "பயிற்சி" தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு அமர்த்தல் போன்ற கோரிக்கைகளை நிராகரிக்கிறது. பல அல்லது அனைத்து வாகன நிறுவனங்களை போல, ராயல் என்பீல்டும் பரந்துபட்ட பழக்கமான, மிக குறைந்த சம்பளத்தில் ஒப்பந்த மற்றும் பயிற்சி தொழிலாளர்களை பணியில் அமர்த்தி இலாபத்தை கூட்டுகிறது மற்றும் தொழிலாளர்களை பிரிக்கிறது. பணிக்கு திரும்பும் ஒப்பந்தத்தின் கீழ், 50 க்கும் மேற்பட்ட நீக்கப்பட்ட பயிற்சி தொழிலாளர்கள் திரும்ப அழைக்கப்பட மாட்டார்கள், யாரெல்லாம் மூன்று வருட பயிற்சி காலத்தை முடித்துள்ளனரோ, அவர்கள் மட்டுமே மீண்டும் சேர்க்கபடுவார்கள்.

ராயல் என்பீல்ட் தொழிலாளர் சங்கம் நேரடியாக CITU வை சார்ந்தது அல்ல. அது குசேலர் தலைமையில் உழைக்கும் மக்கள் மாமன்றம் (WPTUC) சார்ந்தது, இவர் ஒரு ஸ்ராலினிச சார்பு தொழிற்சங்க நிர்வாகி. சென்னையின் பெரிய ஜவுளி ஆலையான B&C ஆலை ,மூடலுக்கு எதிரான தொழிலாளர் எதிர்ப்பினை காட்டிக்கொடுத்ததில், சென்னை தொழிலாளர் சங்கத்தின் தலைவரான குசேலர், முக்கிய பங்க வகித்தார்.

CPM மற்றும் CITU வின் தேசிய தலைமைகளின் கொள்கைகளின் படி, உள்ளூர் ஸ்ராலினிச சங்க மற்றும் கட்சி தலைவர்கள், பழிவாங்கப்பட்ட மாருதி சுசூகியின் (ஹரியானா மனேசரில் உள்ள ஆலை) தொழிலாளர்கள் பற்றி அறிய விடாமல், ஒரகடம் தொழிலாளர்கள் அனைவரையும் இருட்டிலேயே வைத்துள்ளனர். ஜப்பானிய வாகன உற்பத்தியாளருடன் கை கோர்த்து, இந்திய அரசு, 2500 பேர் பலமுள்ள தொழிலாளர்களை பணி நீக்கம் செய்தது, (MSWU) சங்க நிர்வாகிகள் அனைவரும் உட்பட) 13 மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு போலி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்தது- இவை 2011-12 வாக்கில் மனேசர் ஆலை தொழிலாளர் வர்க்க எதிர்ப்பின் மையமாக தோன்றிய பின் நடந்த சம்பவங்கள் ஆகும்.

குர்கான்-மனேசர் தொழிற்துறை பகுதியில் இருக்கும் மற்றும் எங்கெல்லாம் அவர்களது அவல நிலை குறித்து அறிந்தவர்கள், மத்தியில் மாருதி சுசூகி தொழிலாளகள் மீது அனுதாபமும் ஆதவரவும் உள்ளது. அனால் ஸ்ராலினிசவாதிகள் அவர்களை இரக்கமின்றி அனாதைகள் ஆக்கியுள்ளனர். ஏனென்றால், மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு எதிரான சூழ்ச்சி –காங்கிரஸ் மற்றும் பா.ஜ. க தலைமைகள், நீதிமன்றங்கள் மற்றும் பொலிசை அப்படியே சம்பந்தப்படுத்துவது போல்- CPM மற்றும் CITU வின் கூற்றுகளின் திவால்தன்மையையும் அம்பலப்படுத்துகிறது அதாவது தொழிலாளர்கள், முதலாளித்துவ அரசாங்கம் மற்றும் நீதிமன்றங்களிடம் விண்ணப்பிப்பதன் மூலமாக தங்களது நலன்களை முன்னெடுக்க முடியும் என்பதைத் தான். ஏனென்றால் இந்த போலி வழக்கிற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட எடுக்கப்படும் எந்த ஒரு போராட்டமும், ஸ்ராலினிசவாதிகளை அரசியல் அமைப்பில் உள்ள அவர்களது கூட்டாளிகளுடன் நேரடி மோதலுக்கு கொண்டு வரும்.

ஸ்ராலினிசவாதிகள் "இடதாக" பாவனை செய்கின்றனர் மற்றும் மே தினத்தன்று செங்கொடிகளை அசைக்கின்றனர். ஆனால் பல தசாப்தங்களாக அவர்கள் முதலாளித்துவ அரசியல் அமைப்பின் முக்கிய பாகமாக வேலை செய்து வந்துள்ளனர். அது மத்தியில் அடுத்தடுத்த அரசாங்கங்களுக்கு (பெரும்பான்மையானவை, காங்கிரஸ் கட்சி தலைமையில்) முட்டு கொடுத்ததன் மூலம், எடுத்து காட்டப்படுகிறது. இந்த அரசாங்கங்கள், இந்தியாவை உலக முதலாளிகளுக்கான மலிவு கூலியின் புகலிடமாக மாற்றும் நோக்கத்துடன் புதிய பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்தினர். மேலும் இந்திய-அமெரிக்க இராணுவ மூலோபாய கூட்டை உருவாக்கிக் கொண்டன.

கால் நூற்றாண்டாக நிறைவேற்றப்பட்ட சந்தை சார்பு "சீர்த்திருத்தத்தினால்" ஏற்பட்ட சமூக சீரழிவு மற்றும் இந்து மேலாதிக்க பா.ஜ.க மீது, பொது ஜன கோபம் வளர்ந்து வருவதை நன்கு அறிந்தவராய், ஸ்ராலினிசவாதிகள் தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக தடம்புரளச் செய்து ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தின் இன்னொரு கன்னையை மோடிக்கு பதிலாக ஆதரித்து ஏப்ரல்-மே 2019 தேசிய தேர்தலில் ஒரு மாற்று வலதுசாரி அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்த தனது முயற்சிகளை இரட்டிப்பு ஆக்குகின்றனர்.

இந்த பிற்போக்கு அரசியல் நிகழ்ச்சி நிரல் ஸ்ராலினிசவாதிகளின் போக்கினை அல்லது மிகவும் சரியாக சொல்வதென்றால், தவறான தலைமையையும் நாசவேலையையும், தமிழ்நாடு வாகன தொழிற்சாலை வேலை நிறுத்தத்தில் வழி நடத்தியது. மேலும், அது மிகவும் அப்பட்டமாக, அக்டோபர் 30 இல் CITU நடத்திய "அனைத்து கட்சி கூட்டத்தில்" வெளிப்பட்டது. இதில் ஸ்ராலினிசவாதிகள் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை கொண்டு வந்து வேலைநிறுத்தம் செய்பவர்கள் முன்பு நிறுத்தி, அவர்கள் தொழிலாளர் சார்பில் தமிழ்நாட்டின் அ.தி.மு.க அரசாங்கத்தை, நிறுவனத்தில் தலையீடு செய்ய அழுத்தம் கொடுக்கவே அவர்களுடன் இணைவதாக கூறினர்.

அவர்கள் அழைப்பு விடுத்தவர்களில் ஸ்ராலினிசவாதிகள் தி.மு.க மற்றும் அதன் தொழிற்சங்க பிரிவான தொ.மு.ச வுக்கும் முக்கிய பாத்திரம் அளித்தனர். தமிழ்நாட்டை புகலிடமாய் கொண்ட ஒரு வலதுசாரி கட்சியான மற்றும், முன்னர் பா.ஜ.க அரசாங்கத்துக்கு துணை போன தி.மு.க., தற்போது காங்கிரஸ் கட்சியின் நெருங்கிய கூட்டாளியாக உள்ளது. CPM மற்றும் இடது முன்னணியின் உத்தியோகபூர்வ தேர்தல் கூட்டாளியாக தி.மு.க. என்பது அநேகமாக உறுதியாகியுள்ளது. நவம்பர் 13 அன்று, CITU வின் "அனைத்துக் கட்சி" கூட்டத்துக்கு இரண்டு வாரங்களுக்கு பின்னர், CPM பொது செயலாளர், சீதாராம் யெச்சூரி தி.மு.க. தலைவர் மு.க. ஸ்ராலினை சந்தித்தார். சந்திப்பின் முடிவில் அவர் கூறினார், "நாங்கள் தமிழ்நாட்டில் வரும் தேர்தல்களில், தி.மு.கவுடன் இருப்போம் என்று முடிவு செய்துள்ளோம்."