ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Macron launches fraudulent “national debate” on “yellow vest” protests

“மஞ்சள் சீருடை" போராட்டங்கள் குறித்து மக்ரோன் மோசடியான "தேசிய விவாதம்" நடத்துகிறார்

By Alex Lantier
11 January 2019

“மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் மீது அடுத்த வாரம் ஒரு "மிகப்பெரிய தேசிய விவாதம்" தொடங்குவதற்கான பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப்பின் நேற்றைய அறிவிப்பு ஓர் அரசியல் தோல்வியாகும். கொடுப்பனவுகளை அதிகரிப்பதன் மூலமாக தற்காலிகமாக குறைந்தபட்ச கூலிகளை உயர்த்தி வழங்குவதற்கான அவரின் முந்தைய முன்மொழிவைப் போலவே, ஒரு சில வெற்று வார்த்தைகளின் மூடிமறைப்பின் கீழ் பிற்போக்குத்தனமான சமூக செலவினக் குறைப்பு மற்றும் இராணுவவாத கொள்கைகளைத் தொடர்ந்து கொண்டே, இதுவும் அதிகரித்து வரும் எதிர்ப்பின் குரல்வளையை நசுக்குவதற்கான ஓர் அப்பட்டமான முயற்சியாகும்.

அமைச்சரவை சந்திப்பின் தீர்மானங்களைப் பிலிப் எலிசே ஜனாதிபதி மாளிகையில் தொகுத்தளிப்பதற்கு முன்னரே, பொது விவாதத்திற்கான தேசிய ஆணைக்குழு மதிப்பிழந்து விட்டிருந்தது. அதன் தலைவர், வலதுசாரி அரசியல்வாதி சாந்தால் ஜுவானோ (Chantal Jouanno) அவரது 176,400 யூரோ வருடாந்தர ஊதியம் மீதான மக்களின் எதிர்ப்பைக் குறித்து வெறுப்புற்று, அந்த விவாதத்தை ஒழுங்கமைக்க அவர் மறுப்பதாக அறிவித்திருந்தார். இருப்பினும், அவர் பதவியில் இருந்து கீழிறங்க மறுத்ததுடன், அவர் எதற்காக சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறதோ அந்த பணியைக் கூட செய்ய மறுக்கின்ற போதினும், அவர் இன்னமும் அவரின் மிதமிஞ்சிய சம்பளத்தை பெற்று வருகிறார்.

இது "மஞ்சள் சீருடையாளர்கள்" மற்றும் தொழிலாளர்களிடையே பரந்த கோபத்தைத் தூண்டியது. பத்திரிகையாளர் வன்சன் ஜோவேர் France Info இல் குறிப்பிட்டதைப் போல, “இதுபோல உயர் நிர்வாக அதிகாரங்களில் உள்ள தலைவர்களுக்குப் பெரும்பாலும் மிகக் குறைவான வேலைகளுக்காக... மிக அதிகமாக சம்பளம் வழங்கப்படுகின்றன,” என்பதை பிரெஞ்சு செனட் விசாரணைகள் ஸ்தாபித்துள்ளன.

ஜுவானோ மற்றும் பிற உயர்மட்ட அரசு அதிகாரிகளது வேலையின் போலியான தன்மையைக் குறித்த இந்த விபரம், அப்பெண்மணிதான் ஆணைக்குழு ஒழுங்கமைக்க வேண்டுமென மக்ரோன் விரும்புகின்ற "மிகப்பெரிய தேசிய விவாதத்தின்" தன்மையைக் குறித்து பக்கம் பக்கமாக உரைக்கின்றன. இந்த விவாதம் சமூக செலவினக் குறைப்பு, சமூக சமத்துவமின்மை மற்றும் போருக்கு எதிரான மக்களின் எதிர்ப்பை பிரதிபலித்து அவரின் கொள்கைகளை மறுதிருத்தம் செய்வதில் போய் முடிந்துவிடக் கூடாது, மாறாக மக்ரோன் திணித்து வருகின்ற வங்கிகளின் கட்டளைகளை "விற்க" ஒரு சில பிரச்சார வார்த்தைகளைப் பிரசுரிக்க வேண்டுமென அவர் கருதுகிறார்.

“மிகப்பெரிய தேசிய விவாதம்" என்பதன் உள்ளடக்கத்தில் "நிறைய நிச்சயமற்றதன்மை" நிலவுகிறது என்று BFMTV பத்திரிகையாளர்களே குறைகூற விடப்படும் அளவுக்கு, எலிசே மாளிகையில் பிலிப்பின் உரையானது மிகவும் வெற்றுத்தன்மையுடையதாக இருந்தது.

“நம் நாட்டின் தற்போதைய நிலையில், நாம் பயனுள்ள ஆக்கபூர்வமான ஒரு விவாதத்திற்கு மிகவும் ஒளிவுமறைவின்றியும் இருக்க வேண்டும், குடியரசு அமைப்புகளின் செயல்பாடுகள் மீது நிச்சயமாக மிகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும்,” என்று பிலிப் அறிவித்தார். அவர் திங்கட்கிழமை தான் விபரங்களை வெளியிடுவதாக கூறிய அதேவேளையில், அதை பல்வேறு அரங்குகளில் ஒழுங்கமைக்க முன்மொழிந்தார்: “உள்ளூர் தொடக்கநிலை கூட்டங்கள்,” “இடம்பெயரும் மேடைகள்,” டிஜிட்டல் தளங்கள், அல்லது "பிராந்தியளவில் குடிமக்கள் மாநாடுகள்" இதில் கலந்து கொள்பவர்கள் தற்போக்கில் அரசால் தேர்ந்தெடுக்கபடுவார்கள் என்று கூறப்படுகிறது.

பிலிப் என்ன கொள்கைகளை முன்மொழிந்தார் என்பதன் மீது எந்த விபரங்களும் வெளியாகவில்லை. வரிகள், அரசு கொள்கைகளை நடைமுறைப்படுத்தல், சுற்றுச்சூழலுக்கேற்ற மாற்றம், மற்றும் குடியுரிமை ஆகியவையே அந்த விடயத்தின் மீது இதுவரையில் பேசியுள்ள அமைச்சர்கள் அனைவராலும் எழுப்பப்பட்ட நான்கு கருத்துக்களாக உள்ளன. தேசிய அடையாளம் மற்றும் மதச்சார்பின்மை சம்பந்தமாக —அதாவது வெளிநாட்டவர்களும், முஸ்லீம் மதத்தினரும் உடுத்தும் உடைகளுக்கு எதிராக— வெளிநாட்டவர் விரோதம் குறித்த விவாதம் கடைசி அம்சமாக தெரிகிறது, இதை மக்ரோன் டிசம்பர் 10 அன்று, “மிகப்பெரிய தேசிய விவாதத்தை" அவர் முன்மொழிந்த போது, குறிப்பிட்டிருந்தார்.

செல்வந்தர்கள் மீதான வரிவிலக்கை மக்ரோன் திரும்பப்பெற பிடிவாதமாக மறுத்து வருவதால், வரிகள் குறைத்ததன் மூலமாகவும் மற்றும் அனைத்திற்கும் மேலாக தொழிலாளர்களை இலக்கில் வைக்கும் சமூக செலவினக் குறைப்பு கொள்கைகளைத் தீவிரப்படுத்தியும் நிதியியல் பிரபுத்துவத்தின் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக வரிகள் மற்றும் அரசு நடைமுறைப்படுத்தல் மீதான விவாதம் கொதிப்பாக இருக்கும். “சுற்றுச்சூழல்" மூடிமறைப்பின் கீழ் அல்லது வெளிப்படையாகவே வெளிநாட்டவர் விரோத மற்றும் நவ-பாசிசவாத வாய்சவாடலைக் கொண்டு இத்தகைய ஜனநாயக-விரோத கொள்கைகளை முன்னுக்குக் கொண்டு வர முயல்வதன் மூலமாக, அரசாங்கம் சூழ்ச்சி செய்வதற்கான காலத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த விவாதத்திற்கு ஒரு முற்போக்கு வண்ணம் வழங்குவதற்கான முயற்சிகள், பாசாங்குத்தனத்தாலும் பொய்களாலும் நிரம்பியுள்ளன.

மரண தண்டனை மற்றும் பாலியல் தொடர்பான ஜனநாயக உரிமைகளை நீக்குவது ஆகியவை தேசிய விவாதத்தின் வரம்புகளுக்கு அப்பாற்பட்டு இருக்குமென நகர்புறத்துறை அமைச்சர் Julien Denormandie அறிவித்துள்ளார். அவர் விவரித்தார், “ஒரு மிகப்பெரிய விவாதம் என்பது ஒரு மிகப்பெரிய சரணடைவு அல்ல. ... கருக்கலைப்புக்கான உரிமை, மரண தண்டனையை ஒழிப்பது, ஓரினத் திருமணம் ஆகியவை சமூக முன்னேற்றங்கள். ஆனால் ஓரினத் திருமணப் பிரச்சினை மீது நடந்த மிகக் கடுமையான முரண்பட்ட விவாதங்களை நாம் அனைவரும் நினைவில் கொண்டுள்ளோம். ஆகவே இந்த சமூக முன்னேற்றம் மீண்டும் பின்னுக்குச் செல்ல வேண்டிய கேள்வி இல்லை,” என்றார்.

இது 1968 க்குப் பிந்தைய மாணவர் இயக்கத்தில் இருந்தும் பசுமைக் கட்சியிலிருந்தும் மேலெழுந்த செல்வ செழிப்பான நடுத்தர வர்க்கத்தின் சிறிய அடுக்குகளுக்கு மறுஉத்தரவாதமளிக்க நோக்கம் கொண்ட ஒரு எரிச்சலூட்டும் சூழ்ச்சியாகும், இவர்கள் தொழிலாளர்களின் பொருளாதார நிலைமைகள் மீது அலட்சியம் கொண்டவர்கள் என்பதுடன், “மஞ்சள் சீருடையாளர்களுக்கு" அஞ்சுகின்றனர், மேலும் அவர்களின் சொந்த வாழ்க்கை முறைகளை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளனர்.

மக்ரோன் அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து வருகிறார் என்ற கருத்து ஓர் அரசியல் மோசடியாகும். “மஞ்சள் சீருடை" போராட்டங்கள் கருக்கலைப்புக்கு அல்லது ஓரினத் திருமணம் அல்லது மரண தண்டனையை மீண்டும் நிலைநிறுத்த கோரும் கோரிக்கைக்கு விரோதமாக இல்லை. மக்ரோன் அரசாங்கம் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவில்லை மாறாக கவச வாகனங்கள் மற்றும் பத்தாயிரக் கணக்கான கலகம் ஒடுக்கும் பொலிஸை அணித்திரட்டி நிதியியல் பிரபுத்துவத்தின் செல்வவளம் மற்றும் அதிகாரத்தைப் பாதுகாத்து வருகிறது. பாசிசவாத சர்வாதிகாரி பிலிப் பெத்தனை ஆதரிப்பதாக அறிவித்து, மக்ரோன் ஒரு பொலிஸ் அரசைக் கட்டமைக்க விரும்புகிறார் என்பதனை தெளிவுபடுத்தி உள்ளார்.

இந்த உள்ளடக்கத்தில், இப்போது பரவலாக வெறுக்கப்படும் ஒரு பெருவணிக கட்சியான சோசலிஸ்ட் கட்சி (PS) சட்டமாக்கிய இத்தகைய உரிமைகளை அரசே தாக்கக்கூடும் என்பது தான் கருக்கலைப்பு மற்றும் ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கான பிரதான அபாயமாக உள்ளது, அதேவேளையில் அது கலகம் ஒடுக்கும் பொலிஸ் மற்றும் அதிவலதிற்கு நெருக்கமான ஏனைய அடுக்குகளில் அதன் ஆதரவுத் தளத்தைப் பெற முயன்று வருகின்றது.

“மஞ்சள் சீருடை" போராட்டங்கள் நெடுகிலும் உலக சோசலிச வலைத் தளமும் பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சியும் (Parti de l’égalité socialiste - PES) வலியுறுத்தி உள்ளவாறு, மக்ரோனிடம் இருந்தோ அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அவரின் ஆதரவாளர்களிடம் இருந்தோ தொழிலாளர்களுக்கு ஒன்றும் கிடைக்காது. அவர் "மிகப்பெரிய தேசிய விவாதத்தின்" தொடங்குவது இந்த மதிப்பீட்டை மட்டுமே ஊர்ஜிதப்படுத்துகிறது. பிரான்சிலும் உலகெங்கிலும் வர்க்க போராட்டம் எழுகையில், தொழிலாள வர்க்கம் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிரான ஓர் அரசியல் போராட்டத்தில் அணித்திரண்டு ஒழுங்கமைவது மட்டுமே முன்னிருக்கும் ஒரே வழியாக உள்ளது.

இந்த போராட்டத்தில், தொழிலாள வர்க்கம் உருவாக்கும் சுயாதீனமான அமைப்புகளுக்கு அதிகாரத்தை மாற்றுவது மட்டுமே தொழிலாளர்களுக்கான நம்பகமான முன்னோக்கு என்று சோசலிச சமத்துவக் கட்சி (PES) வலியுறுத்துகிறது. முதலாளித்துவ-சார்பு அரசியல்வாதிகள் அல்லது கட்சிகளின் நிவாரணங்கள் அல்லது விவாதங்களுக்கான முன்மொழிவுகள் அனைத்தும் தொழிலாளர்களுக்கு விரிக்கப்படும் வலை என்பது நிரூபணமாகும். சமூக சமத்துவம், கூலி உயர்வுகள், போர் மற்றும் பொலிஸ் ஒடுக்குமுறையைக் கைவிடுவது என "மஞ்சள் சீருடையாளர்களின்" கோரிக்கைகள் முதலாளித்துவத்துடன் இணக்கமற்று இருப்பதுடன், இதற்கு சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச போராட்டம் அவசியப்படுகிறது.

“மஞ்சள் சீருடையாளர்கள்" ஐரோப்பா எங்கிலுமான பல்வேறு முதலாளித்துவ ஜனரஞ்சகவாத கட்சிகளுடன் கூட்டணியில் உள்ளனர் என்ற வாதங்கள் அரசியல் பொய்களாகும். தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் ஒடுக்கப்படும் பிரிவுகளின் அவசர சமூக தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரே வழி, சர்வதேச அளவில் நிதியியல் பிரபுத்துவங்களின் சொத்துக்களைத் தீர்மானகரமாக பறிமுதல் செய்வது மட்டுமே ஆகும்.

இது, அரசின் "புகார்களை பதிவு செய்வதற்கான ஏடுகள்" பிரச்சாரத்தினுள் AMRF தலைவர் வானிக் பேர்பெர்ரியனால் பிரெஞ்சு புறநகர் நகரசபை தலைவர்களுக்கு (AMRF) முன்வைக்கப்பட்ட பிரபல கோரிக்கைகள் மீதான பகுப்பாய்வில் இருந்தும் மேலெழுகிறது.

“நுகர்வு சக்தி மீதான கேள்வி தான் முக்கிய பிரச்சினை. இரண்டாவது சமூக அநீதி. இன்று, பிரெஞ்சு மக்களிடையே பொதுவான வாழ்க்கைத் தரங்கள் இல்லை, அவர்களிடையிலான இடைவெளி முன்னெப்போதையும் விட அதிகமாக உள்ளது. எரிபொருள் மீது வரி விதிப்பது வேலை செய்து வரும் ஒரு நிர்வாகிக்கு எந்த பிரச்சினையும் ஏற்படுத்தாது, ஆனால் மாதத்திற்கு 500 யூரோ ஓய்வூதியத்தில் வாழும் ஒருவருக்கு மற்றும் வேறுவழியின்றி காரைத் தான் பயன்படுத்தி ஆகவேண்டும் என்று இருக்கும் ஒருவருக்குப் பேரழிவுகரமாக இருக்கும். வெளிநாட்டு வரி மீதான தேர்வுமுறை கேள்விகளும் சகிக்கவியலாத சமூக அநீதியாக கருதப்படுகின்றன,” என்று பேர்பெர்ரியன் Le Point க்குத் தெரிவித்தார்.

 “நடுத்தர வர்க்க உயர்மட்ட அடுக்குகள் அடிமட்டத்திற்கு இழுக்கப்பட்டிருப்பதாக உணர்கின்ற நிலையில், அவர்களின் வாழ்க்கை முறைகள் உள்ளடங்கலாக இது பரந்த வீழ்ச்சி அடைந்துள்ளது என்ற விபரமும் கவலைக்குரிய மற்றொரு ஆதாரமாக உள்ளது. இறுதியாக கிராமப்புற பகுதிகளில் பொதுச்சேவைகள் இல்லாமல் ஆக்கப்பட்டிருப்பது, அன்னியப்படுத்தப்பட்டிருக்கும் ஓர் உணர்வைத் தூண்டுகிறது,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

புலம்பெயர்வு குறித்து கேட்கப்பட்ட போது, அவர் கூறினார்: “கிராமப்புற பகுதிகள் 8வது இடத்தில் தான் வருகின்றன என்பதால், இது எந்தவிதத்திலும் கிராமப்புற பகுதிகளின் பிரதான கவலைக்குரிய ஒரு விடயம் என்பதல்ல என்பதை இந்த கோரிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இது நாம் பல ஆண்டுகளாக என்ன கூறி வந்தோமோ அதை உறுதிப்படுத்துகிறது: அதாவது, ஒருசில வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டவரே இல்லாத கிராமப்புற பகுதிகளில் நவ-பாசிசவாதிகள் சில வேளைகளில் மிகப்பெரும் வாக்குகளைப் பெறுகிறார்கள் என்றால், வேறொரு பிரச்சினை இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது என்று ஆகிறது. ... உங்களை நீங்களே கவனித்துப் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன், இதற்கு முரண்பட்ட விதத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வெளிநாட்டவர்கள் வாழ்ந்து வருகின்ற பல கிராமங்களும் அங்கே உள்ளன,” என்றார்.