ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

As global elites gather at Davos

Oxfam: 26 billionaires control as much wealth as poorest half of humanity

உலகளாவிய உயரடுக்குகள் டாவோஸில் ஒன்றுகூடுகையில்

ஆக்ஸ்ஃபோம் அறிக்கை: 26 பில்லியனர்கள் மனித குலத்தின் மிக வறிய அரைவாசியினரின் செல்வவளத்திற்கு இணையானதைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர்

Nick Beams
22 January 2019

உலகின் நிதிய உயரடுக்கின் அங்கத்தவர்கள் உலகப் பொருளாதார பேரவையினது வருடாந்தர கூட்டத்தின் முதல் நாளில் இன்று சுவிட்சர்லாந்தின் டாவோஸில் ஒன்றுகூடுகின்ற நிலையில், பிரிட்டனை மையமாக கொண்ட அறக்கட்டளை ஆக்ஸ்ஃபோம் இன்டர்நாஷனலின் ஒரு புதிய அறிக்கை சமூகத்தின் மிக உயர்மட்டங்களில் செல்வவளம் பாரியளவில் திரண்டு இருப்பதையும், இது சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சியைத் தீவிரப்படுத்தி வருவதையும் உயர்த்திக் காட்டியுள்ளது.

கடந்தாண்டு உலக பில்லியனர்களின் செல்வவளம் 900 பில்லியன் டாலர், அல்லது 12 சதவீதம் அதிகரித்திருந்ததாகவும், அதேவேளையில் 3.8 பில்லியன் மக்கள் —உலக மக்கள்தொகையில் அரைவாசியினர்— அவர்களின் செல்வவளத்தில் 11 சதவீத வீழ்ச்சியைக் கண்டதாகவும் அந்த அறிக்கை எடுத்துக்காட்டியது.

கடந்தாண்டு, இந்த பில்லியனர்களின் செல்வவளம் ஒவ்வொரு நாளும் 2.5 பில்லியன் டாலர் அதிகரித்தது, அதேவேளையில் ஒவ்வொரு இரண்டு நாட்களில் ஒரு மில்லியனர் இவர்களின் மட்டங்களுக்கு நகர்ந்திருந்தார்.

2008 இல் உலகளாவிய நிதியியல் நெருக்கடி வெடித்ததற்குப் பின்னர் இருந்து ஒரு தசாப்தத்தில், அரசாங்கங்களும் நிதிய ஆணையங்களும் அதன் முழு பாதிப்பையும் உலக தொழிலாள வர்க்கத்தின் முதுகில் சுமத்தி உள்ளன, அதன் பாதிப்புகளில் வெறுமனே சிலவற்றைப் பெயரிட வேண்டுமானால், சம்பள உயர்வின்மை மற்றும் குறைந்த சம்பளங்கள், மருத்துவச் சேவைகள் மற்றும் இதர சமூக சேவைகளுக்கு குழிபறித்துள்ள சமூக செலவினக் குறைப்பு திட்டங்கள் ஆகிய வடிவில் செய்துள்ளன. இதற்கிடையே, செல்வவளமோ முன்பினும் அதிகமாக ஒரேயிடத்தில் குவிந்தன. கடந்த ஆண்டு, அதற்கு முந்தைய ஆண்டின் 43 நபர்களுடன் ஒப்பிடுகையில், உலக மக்கள் தொகையில் பாதி மக்களை உள்ளடக்கிய 3.8 பில்லியன் மக்களின் செல்வ வளத்திற்கு நிகரான செல்வ வளத்தை வெறும் 26 பேர் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தனர்.

உலகின் மிகப் பெரிய செல்வந்தரான அமசன் உரிமையாளர் ஜெஃப் பெஸோஸ் குவித்துக் கொண்ட 112 பில்லியன் டாலர் சொத்தில் வெறும் 1 சதவீதமானது 150 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு நாடான எத்தியோப்பியாவிற்கான ஒட்டுமொத்த மருத்துவத்துறை வரவு-செலவுக் கணக்கிற்கு நிகரானது என்று ஆக்ஸ்ஃபோம் குறிப்பிட்டுள்ளது.

அபிவிருத்தி அடைந்த நாடுகளின் செல்வந்தர்களது அதிகபட்ச வரி விகிதம் 1970 இல் 62 சதவீதமாக இருந்ததில் இருந்து 2013 இல் 38 சதவீதமாக குறைந்து விட்டதை கண்டறிந்த ஆக்ஸ்ஃபோம் அறிக்கை, செல்வந்தர்களும் பெருநிறுவனங்களும் ஆதாயமடையும் வகையில் 2017 இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிமுகப்படுத்திய வரி வெட்டை சுட்டிக்காட்டியது.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில், அதிகபட்ச தனிநபர் வரி விகிதம் வெறும் 28 சதவீதமாக உள்ளது. பிரித்தானியாவிலும் பிரேசிலிலும், மக்கள் தொகையில் உயர்மட்ட 10 சதவீதத்தினரை விட அடிமட்ட 10 சதவீதத்தினரே அவர்களின் வருவாயில் வரிக்காக அதிகம் வழங்குவதாக அந்த அறிக்கை கண்டறிந்தது.

வரி ஏய்ப்பு சர்வசாதாரணமாக உள்ளது. பெரும் செல்வந்தர்கள் வருமான வரித்துறையிலிருந்து 7.6 ட்ரில்லியன் டாலர்களை மறைத்திருப்பதாகவும், அதேவேளையில் பெருநிறுவனங்களோ மிகப் பெருமளவிலான பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி இருப்பதையும், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் இருந்து வருவாயாக ஆண்டுக்கு 170 பில்லியன் டாலர்கள் பறித்திருப்பதையும் அந்த அறிக்கை வெளிப்படுத்திக் காட்டியது.

ஒரு விளைவாக, மொத்த வரி வருவாயில் வெறும் 4 சதவீதம் மட்டுமே செல்வவளம் மீதான வரிவிதிப்பிலிருந்து வந்தது.

“வறுமை ஒழிப்பு விகிதம் 2013 க்குப் பின்னர் இருந்து பாதியாக குறைந்துள்ளது,” “சொல்லப்போனால், அதீத வறுமை துணை-சஹாரா ஆபிரிக்காவில் அதிகரித்து வருகிறது,” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

1980 க்கும் 2016 க்கும் இடையே, உலக மக்கள் தொகையில் மிக வறிய 50 சதவீத மக்களுக்கு உலகளாவிய வருவாய் வளர்ச்சியின் ஒவ்வொரு டாலரிலும் வெறும் 12 சென்ட் மட்டுமே கிடைத்துள்ளது, அதேவேளையில் உயர்மட்ட 1 சதவீதத்தினரோ ஒவ்வொரு டாலரிலும் 27 சென்ட்டை அபகரித்தது என்பதையும் அது சேர்த்துக் கொண்டது.

ஒரு தசாப்தத்திற்கு முன்னர், டாவோஸில் நடந்த ஆளும் உயரடுக்கின் வருடாந்தர கூட்டம், மிகப் பெரியளவிலான மோசடி மற்றும் உலகின் மிகப்பெரிய நிதிய அமைப்புகளின் குற்றகரத்தன்மையால் உருவாக்கப்பட்ட மிகவும் கடுமையான பொருளாதார மற்றும் நிதியியல் நெருக்கடியை அடுத்து நடந்தது.

ஆனால் அந்த "பெரும் செல்வவளத்தின் குற்றகர கூறுகள்" சிறைக்கு அனுப்பப்படுவதற்கு பதிலாக, அவற்றிற்கு பிணையெடுப்பு வழங்கப்பட்டன. அடுத்த தசாப்தத்தில், அவற்றுக்கு ட்ரில்லியன் கணக்கிலான டாலரில் அதி-மலிவு பணம் வழங்கப்பட்டது, இது அவர்களின் செல்வவளம் இன்னும் அதிவேக விகிதத்தில் தொடர்ந்து குவிவதற்கு உதவியது.

புளூம்பேர்க்கின் ஒரு புதிய செய்தியின்படி, டாவோஸில் கலந்து கொண்ட 12 மிகப் பெரிய பணக்காரர்களின் செல்வவளம் ஒட்டுமொத்தமாக 175 பில்லியன் டாலராக அதிகரித்திருந்தது, அதேவேளையில் உலகின் பில்லியனர்களின் ஒட்டுமொத்த செல்வவளமும், அதே காலகட்டத்தில், 3.4 ட்ரில்லியன் டாலரில் இருந்து 8.9 ட்ரில்லியன் டாலராக அதிகரித்திருந்தது.

புளூம்பேர்க் அறிக்கை இந்த அசாதாரண அதிகரிப்பை உயர்த்திக் காட்டியிருந்தது:

ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பேர்க் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் 3 பில்லியன் டாலராக இருந்த தனது செல்வவளத்தை 55.6 பில்லியனாக உயர்த்தியுள்ளார், இது 1853 சதவீதம் அதிகரிப்பாகும்.

தனியார் முதலீட்டு நிறுவனமான பிளாக்ஸ்டோனின் தலைவர் ஸ்டீபன் சுவார்ஸ்மனின் நிறுவன சொத்துக்கள் 2008 இன் முடிவில் 95 பில்லியன் டாலரில் இருந்து 457 பில்லியன் டாலராக அதிகரித்தன, அதேவேளையில் அவரின் தனிப்பட்ட சொத்து 486 சதவீத உயர்வுடன் 2.1 பில்லியன் டாலரில் இருந்து 10.1 பில்லியன் டாலருக்கு அதிகரித்துள்ளது.

ஊடகத்துறை ஜாம்பவான் ரூபேர்ட் முர்டோக்கின் செல்வவளம் 472 சதவீத உயர்வுடன் 3.2 பில்லியன் டாலரில் இருந்து 15.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது, அதேவேளையில் ஜேபி மோர்கன் தலைவர் ஜேமி டெமன் 276 சதவீத செல்வவள அதிகரிப்புடன் 0.4 பில்லியன் டாலரில் இருந்து 1.1 பில்லியன் டாலர் உயர்வை அனுபவிக்கிறார்.

இந்த பட்டியல் இவ்வாறு நீண்டு செல்கிறது.

ஆனால் ஆக்ஸ்ஃபோம் உருவாக்கிய பொருளாதார புள்ளிவிபரத்தின் பலம், சமூக சமத்துவமின்மையின் இத்தகைய அதீத மட்டங்களைக் கையாள்வதற்கான அதன் பரிந்துரைகளுடன் கூர்மையாக முரண்படுகிறது. அது எதை "மனித பொருளாதாரம்" என்று அழைக்கிறதோ அந்த அபிவிருத்தியின் மையம் அது எதை "வளர்ச்சி பொருளாதாரம்" என்று குறிப்பிடுகிறதோ அதன் வெவ்வேறு கோட்பாடுகள் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த “மனித பொருளாதாரமானது" மருத்துவச் சேவை, கல்வி மற்றும் பாலின சமத்துவத்தை வழங்கி இருக்கும், செல்வவள பகிர்வுடன் சிறந்த நிலைமைகளை உருவாக்கி இருக்கும். மிகப் பெரிய செல்வந்தர்கள் மீதான வரிகளில் வெறும் 0.5 சதவீத வரி உயர்வே தற்போது கல்வி பெற முடியாது உள்ள 262 மில்லியன் குழந்தைகளுக்குக் கல்வி வழங்க போதிய பணத்தை உயர்த்தும் என்பதோடு, தடுக்கக் கூடிய உயிரிழப்புகளில் இருந்து 3.3 மில்லியன் மக்களைக் காப்பாற்றும் மருத்துவக் கவனிப்பை வழங்கும் என்கின்ற நிலையில், அத்தகைய பொருளாதாரம் உலகின் மிகப் பெரிய செல்வந்தர்கள் மற்றும் பெருநிறுவனங்கள் மீது வரிகளை அதிகரித்து நிதி திரட்டியிருக்கும்.

ஆனால் ஆக்ஸ்ஃபோம் கடந்த எட்டு ஆண்டுகளாக இத்தகைய முன்மொழிவுகளைச் செய்து வருகிறது, எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது, கொள்கை மாற்றத்திற்கு அழைப்பு விடுத்து வருகிறது. ஆனால் எதுவும் பயனில்லை. ஒவ்வொரு ஆண்டும் நிலைமை இன்னும் அதிக தீவிரமான விகிதத்தில் மோசமடைகின்றன, இதை ஆக்ஸ்ஃபோம் அதுவே ஒப்புக் கொள்கின்றது.

சமூக சமத்துவமின்மை அவலத்தை, தற்போதைய அமைப்புமுறைக்குத் தலைமை தாங்கி வரும் அதே சக்திகளிடம் போக்கை மாற்றிக் கொள்ளுமாறு பயனற்ற முறையீடுகளைச் செய்வதன் மூலமாக முடிவுக்குக் கொண்டு வர முடியாது. அவை, 1789 புரட்சிக்கு முன்னர் பிரான்சின் பண்டைய ஆட்சியைப் போலவே, அல்லது 1917 க்கு முன்னர் ரஷ்யாவில் ஜாரிச பிரபுத்துவத்தைப் போலவே, இனி அதற்கு இலாயகற்றவை.

ஒரு நிஜமான "மனித பொருளாதாரத்திற்கான" ஒரே பாதை சோசலிச புரட்சியில் அரசியல் அதிகாரத்தைத் தொழிலாள வர்க்கம் கையிலெடுப்பது மட்டுமே ஆகும், அவ்விதத்தில் தான் தனியார் இலாபம் மற்றும் நிதியியல் சந்தைகளின் சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியும். இந்த வழியில் மட்டுந்தான் தொழிலாள வர்க்கம் உருவாக்கிய பரந்த ஆதாரவளங்களை அனைத்து சமூக தேவைகளையும் பூர்த்தி செய்யவதற்காக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த முன்னோக்கு தான், மெக்சிகோவில் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தித்துறை வேலைநிறுத்தங்கள், இருந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் இருந்து, இந்திய தொழிலாள வர்க்கத்தின் மிகப் பெரிய போராட்டங்கள் வரையில் உலகெங்கிலும் வெடித்து வருகின்ற சமூக மற்றும் வர்க்க போராட்டங்களில் இப்போது முன்னெடுக்கப்பட வேண்டிய முன்னோக்கு ஆகும். இதற்கு ஒவ்வொரு நாட்டிலும் அவசியமான தலைமையை வழங்க, சோசலிச புரட்சியின் உலக கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவைக் கட்டமைக்க வேண்டியது அவசியமாகும்.