ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

“1000 ව්‍යාපාරයවතු කම්කරු අරගලය සමාගම්වලට බලපෑම් දැමීමේ උගුලකට කොටුකිරීමේ තැතක්

"1,000 ரூபா இயக்கம்" தோட்டத் தொழிலாளர் போராட்டத்தை கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் பொறிக்குள் சிக்க வைக்கும் முயற்சி

By our correspondents
25 January 2019

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் போராட்டத்திற்கு “ஒத்துழைப்பு” வழங்கும் பெயரில், “1,000 ரூபா இயக்கம்” என அழைத்துக்கொண்ட ஒரு அமைப்பும் தொழிற்சங்கங்களின் கூட்டணிகளும், புதன்கிழமை பல பிரதேசங்களில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தன. "தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா அடிப்படை சம்பளம் கொடு!" என்பது அதன் கோஷமாக இருந்தது.


கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதி

முன்நிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.), புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சி, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், பக்ஸிஸ் குழு, சுதந்திரத்துக்கான இயக்கம், மலையக இளைஞர் கூட்டமைப்பு, சுதந்திர வர்த்தக வலய பொதுச் சேவைகள் சங்கம், இலங்கை வர்த்தக மற்றும் பொது தொழில்துறை சங்கம், ஒருங்கிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம், ஊடக சேவை தொழிற்சங்க கூட்டணி உட்பட போலி இடது அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பே இந்த கூட்டணியாகும்.

பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அன்றைய தினம் கொழும்பு ஐந்து லாம்பு சந்தியில் தொடங்கி, கொழும்பு கோட்டை இரயில் நிலையம் ஊடாக ஊர்வலம் வந்த பின்னர், புறக்கோட்டை அரச மரச் சந்தியில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. தோட்டத் தொழிலாளர்கள் பங்குபற்றி இருக்காத இந்த பிரச்சாரத்திற்கு மேற் குறிப்பிடப்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கொழும்பில் பணியாற்றும் இளைஞர்கள் உட்பட சுமார் 200 பேர் பங்குபற்றினர். யாழ்ப்பாணம், வவுனியா, கந்தபளை, ஹட்டன், பொகவந்தலாவை, இரத்தினபுரி, கண்டி உட்பட பல நகரங்களிலும் பேராதனை, ருஹுணு, வயம்ப மற்றும் ரஜரட உட்பட பல்கலைக்கழகங்களுக்கு முன்னாலும் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன.


தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக போராட்டத்தில் இறங்கிய பொகவந்தலாவை தொழிலாளர்கள்

சம்பளத்தை அதிகரித்துக்கொள்வதற்கான கடும் தேவை மற்றும் முதலாளிமாரும் அரசாங்கமும் 1,000 ரூபா நாள் சம்பள கோரிக்கையை நிராகரிப்பது சம்பந்தமாக நிலவும் கோபத்தினதும் காரணமாக, இந்த ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக ஊடகங்களில் அறிவிக்கப்பட்ட உடனேயே, பொகவந்தலாவை மற்றும் பதுளை உட்பட பிரதேசங்களில பல தோட்டங்களில் தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக வேலை நிறுத்தங்களில் இறங்கினர்.

கடந்த நான்கு மாத காலங்களாக தோட்டத் தொழிலாளர்கள், 1,000 ரூபா அன்றாட ஊதிய கோரிக்கைக்காக வேலை நிறுத்தம், மறியல், ஆர்ப்பாட்டங்கள், உட்பட வர்க்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். டிசம்பர் மாதம் சுமார் ஒரு இலட்சம் தோட்டத் தொழிலாளர்கள் காலவரையறை அற்ற வேலை நிறுத்தம் செய்தனர். ஒன்பது நாட்கள் கடந்த பின்னர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உட்பட தொழிற்சங்கங்கள், ஜனாதிபதி பிரச்சினையை தீர்க்க வாக்குறுதி கொடுத்துள்ளதாக கூறி, வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் கூறுவதை நிராகரித்துவிட்டு, மேலும் இரண்டு நாட்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தோட்டக் கம்பனிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளிமார் சம்மேளனம், அடிப்படை சம்பளம் 1,000 ரூபா கொடுப்பதை முற்றாக நிராகரித்துவிட்டது.

இந்த கசப்பான போராட்டத்தின் மத்தியில், புதனன்று ஆர்ப்பாட்டங்களை நடத்திய அமைப்புகள் எங்கு இருந்தன? போராட்ட மத்திய நிலையம் என்ற பெயரில் காளான் முளைப்பது போல் அமைப்புகளை உருவாக்கும் முன்நிலை சோசலிசக் கட்சி, அந்த நாட்களில் புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி மற்றும் இன்னம் பல குழுக்களுடன் சேர்ந்து, ஒன்று இரண்டு மறியல் போராட்டங்களை நடத்தி, தொழிலாளர்களின் ஊதிய கோரிக்கையை கொடுக்குமாறு கம்பனிகளுக்கு வேண்டுகோள் விடுத்து, தோட்டத் தொழிற்சங்கங்களின் வால்களாக செயற்பட்டன. கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால் சில இளைஞர்கள் நடத்திய, கம்பனிகளுக்கும் அரசாங்கத்துக்கும் அழுத்தம் கொடுக்கும் அர்த்தமற்ற உண்ணா விரதப் போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்து, மறியல் போராட்டம் நடத்தியமை, அவர்களது சமீபத்திய செயற்பாடாகும். (பார்க்க: தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தை தடம்புரளச் செய்ய போலி இடதுகள் தலையிடுகின்றனர்).

புதன்கிழமை ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்து, அந்த அமைப்பு விடுத்துள்ள துண்டுப் பிரசுரத்தில், ரூபா 1,000 தினசரி ஊதியம் கொடுப்பதற்காக “அரசாங்கத்துக்கு, தோட்ட அதிகாரிகளுக்கு மற்றும் தொழிற்சங்கங்களுக்கும் அழுத்தம் கொடுக்குமாறு" வேண்டுகோள் விடுத்துள்ளது. எனினும், தொழிலாளர்கள் கேட்கின்ற அதிகரிப்பை கம்பனிகளும் அரசாங்கமும் முழுமையாக நிராகரித்துள்ள ஒரு சூழ்நிலையில், மேலும் அழுத்தம் கொடுத்து அவற்றை தொழிலாளர்களின் கோரிக்கைகளைக் கொடுக்க வைக்க முடியும் எனக் கூறுவது முழுப் பொய்யாகும். கம்பனிகளுடனும் அரசாங்கத்துடனும் இரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டங்களை நாசப்படுத்துவதற்கு செயற்படும் தொழிற்சங்கங்களை, தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக இயங்க வைக்க முடியும் எனக் கூறுவது வேண்டுமென்றே பரப்பப்படும் இன்னொரு பொய்யாகும்.

கொழும்பு ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய, முன்நிலை சோசலிசக் கட்சியின் தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் அழைப்பாளர் துமிந்த நாகமுவ, 1,000 ரூபா இயக்கத்தை சூழ இணைந்திருக்கும் சக்திகளின் தைரியத்துடன் போராட்டத்தை வெற்றி வரை கொண்டு செல்வதாக வாய்ச்சவடால் விடுத்தார். "நாங்கள் இன்னும் நெருப்பு வைக்க வேண்டும். அப்போதுதான் நாற்காலி சூடேறும். அப்போதுதான் பதில் கிடைக்கும்."

அதற்குச் சமாந்தரமாக வாய்ச்சவடால் விடுத்த பக்சிஸ் குழுவின் விதர்ஷன கன்னங்கர, "இது தொழில் உரிமைகளுக்காகப் போராடுவதற்கான ஒரு புதிய கூட்டணியாகும். இறுதியாக ஒரு எச்சரிக்கை விடுக்கின்றேன். உங்களுக்கு இந்த ஆயிரம் ரூபாவை கொடுக்க முடியாது என்றால், இதை அடுத்து ஒரு கிளர்ச்சி எழும். அந்த கிளர்ச்சி அனைத்து தோட்ட மக்களையும் உள்ளடக்கி இருக்கும். அதன் பின்னர் அந்த கிளர்ச்சியில் தோட்டத் தொழிலாளர்கள் தோட்டங்களை சொந்தமாக்கிக்கொள்ளத் தொடங்குவர். அதனால் விளையாடாதே. ஆயிரம் ரூபாவை கொடு. இங்கே சொல்ல இருப்பது அது மட்டும்தான், வேறு எந்த நிபந்தனையும் கிடையாது," என்று அவர் கத்தினார்.

நாகமுவ முதலாளிமாரின் பிட்டத்தை சூடாக்குவதைப் பற்றி வாய்ச்சவடால் விடுப்பதும், கன்னங்கர தோட்டத் தொழிலாளர்களின் கிளர்ச்சியைப் பற்றி எச்சரிக்கை விடுப்பதும், தோட்டத் தொழிலாளர்களை தவறாக வழிநடத்துவதை இலக்காகக் கொண்டு செய்யும் போலியான போர்க்குண மிகைப் படுத்தலாகும்.

தோட்டத் தொழிற்சங்கங்கள் அதிருப்திக்கு உள்ளாகியுள்ள நிலைமையின் கீழ், தொழிலாளர்களின் சுயாதீனமான போராட்டம் வெடிக்குமோ என்ற பீதியில், அவர்களை அரசாங்கத்துக்கும் கம்பனிகளுக்கும் அழுத்தம் கொடுக்கும் இயக்கத்துக்குள் அடைத்து வைப்பதற்காக இந்த போலி இடது அமைப்புக்களும் தொழிற்சங்கங்களும் தலையீடு செய்து வருகின்றன.

இப்பொழுது தொழிலாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்வதற்கு, கடந்த சில மாதங்களாக மட்டுமன்றி, கடந்த காலங்களில், தங்களுடையதும் மற்றும் ஏனைய இடங்களில் வாழும் தொழிலாளர்களதும், அத்தோடு சர்வதேச ரீதியில் தமது வர்க்க சகோதரர்களினதும் கசப்பான அனுபவங்களில் இருந்து படிப்பினைகளை கிரகித்துக்கொள்ள வேண்டும். சமூக மற்றும் வாழ்க்கை உரிமைகளை அபகரித்துக்கொண்டு, இலாப நோக்கு அமைப்பு முறையின் நெருக்கடியை தொழிலாளர்கள் மீது சுமத்த செயற்படும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் அதன் அரசாங்கங்களுக்கும் அழுத்தம் கொடுத்து, அந்த உரிமைகளை பாதுகாக்க வளைத்துக்கொள்ள முடியாது.

ஒரு சில முதலாளிகளின் இலாபத்திற்காக உற்பத்தி மற்றும் விநியோகத்தை மட்டுப்படுத்தி வைத்திருக்கும் நிலைமையை தகர்த்து, அவற்றை உழைக்கும் மக்கள் உட்பட சமூகத்தின் பெரும்பான்மையானவர்களின் தேவைகளை இட்டு நிரப்பக்கூடியவாறு மறுசீரமைப்பதன் மூலம் மட்டுமே சமூக மற்றும் தொழிலாளர் உரிமைகளை நசுக்குவதை நிறுத்த முடியும். முதலாளித்துவ அமைப்பை பாதுகாத்துக்கொண்டு, அதன் நெருக்கடியின் முழு சுமையையும் தொழிலாள-ஒடுக்கப்பட்ட மக்கள் மீது திணிப்பதற்காக பொலிஸ் ஆட்சிக்கு மாற்றுவதற்காக நடவடிக்கைகளை எடுத்துவரும் அரசாங்கங்களுக்கு எதிரான அரசியல் போராட்டத்துடன் இது பிணைந்துள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் அனுபவமும் இதுவே.

முதலாளித்துவ அமைப்பு முறையுடனும் தேசிய அரசுடனும் பிணைந்துள்ள இடது முகமூடி அணிந்த அமைப்புகளும் தொழிற்சங்கங்களும், அத்தகைய போராட்டத்திற்கு முற்றிலும் எதிராக நிற்கின்றன. அவை தற்போதுள்ள அமைப்பிற்குள் தீர்வு இருப்பதாக கூச்சலிடுவது அதனாலேயே ஆகும்.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி, இத்தகைய பொறிகளை உருவாக்கும் அமைப்புக்களின் முதலாளித்துவ சார்பு கொள்கைகளை நிராகரிக்குமாறு தொழிலாளர்களை வலியுறுத்துகிறது. அவர்கள் ஒரு மாற்று பாதையில் செல்ல வேண்டும். அதனால்தான் சோசலிச சமத்துவக் கட்சியானது தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக தொழிலாளர்களின் நடவடிக்கை குழுக்களை தோட்டங்களிலும், வேலைத் தளங்களிலும் மற்றும் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியிலும் கட்டியெழுப்பிக்கொண்டு, தங்களது உரிமைகளுக்கான போராட்டத்தை கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கின்றது.

சோசலிச சமத்துவக் கட்சியின் வழி காட்டலின் கீழ், ஹட்டனில் எபோட்சிலி தோட்டத்தில் தொழிலாளர்கள் இத்தகைய நடவடிக்கைக் குழு ஒன்றை உருவாக்க செயற்பட்டுள்ளனர். அமெரிக்காவிலும் உலக சோசலிச வலைத் தளத்தினதும் சோசலிச சமத்துவக் கட்சியினதும் தலையீட்டின் மூலம், ஜெனரல் மோட்டர்ஸ் வாகனத் தொழிலாளர்கள் இத்தகைய குழுவொன்றை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த போராட்டம் முதலாளித்துவ வர்க்க ஆட்சிக்கு எதிராக, சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்தக்கூடிய தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்துடன் பிணைந்துள்ளது. அதற்குத் தலைமைத்துவம் கொடுக்கக் கூடிய புரட்சிகரக் கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புவது தீர்க்கமானதாகும்.