ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Oppose French unions’ attempts to strangle the “yellow vest” protests!

“மஞ்சள் சீருடை" போராட்டங்களின் குரல்வளையை நெரிப்பதற்கான பிரெஞ்சு தொழிற்சங்கங்களின் முயற்சிகளை எதிர்ப்போம்!

By Anthony Torres and Alex Lantier
26 January 2019

“மஞ்சள் சீருடையாளர்களின்" இயக்கம் மீது வன்முறையான அரசு ஒடுக்குமுறைக்கு இடையே, அவர்கள் மக்ரோன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் பரந்த ஆதரவை அணிதிரட்டுவதற்கான வழிகளைத் தேடி வருகிறார்கள். அவர்கள் மக்ரோன் முன்வைத்த மோசடியான "மாபெரும் தேசிய விவாதத்தை" பெருவாரியாக நிராகரித்துள்ளனர். இப்போதைய தீர்க்கமான கேள்வி இதுதான்: “மஞ்சள் சீருடையாளர்கள்,” மிகவும் பரந்தளவில் ஐரோப்பா எங்கிலுமான தொழிலாளர்களும் எந்த அரசியல் முன்னோக்கைக் கொண்டு, சமூக சமத்துவம், சம்பள உயர்வுகள், மேம்பட்ட சமூக நிலைமைகள் மற்றும் போருக்கு எதிரான அவர்களின் கோரிக்கைகளுக்காக போராடுவார்கள்?

முதலாளித்துவத்திற்கு எதிராக சோசலிசத்தைக் கட்டமைப்பதற்கான அதிகாரத்திற்காக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச போராட்டத்தை நோக்கிய நோக்குநிலையிலிருந்து அபிவிருத்தி அடைந்து வரும் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை திசைதிருப்புவதற்கான முயற்சிகள், ஒரு சிக்க வைக்கும் பொறி என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. பப்லோவாத புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியின் (NPA) ஒலிவியே பெசன்ஸெநோ இதை தான் செய்து கொண்டிருக்கிறார், பெரும்பாலான "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்களால் ஆழ்ந்த அவநம்பிக்கையுடன் பார்க்கப்படுகின்ற தொழிற்சங்கங்கள் அந்த இயக்கத்தைக் கைப்பற்ற வேண்டுமென அவர் முன்மொழிகிறார்.

“மஞ்சள் சீருடை" செய்தி தொடர்பாளர் எரிக் துருவே “France en colère” (பிரான்ஸ் கோபத்தில் உள்ளது) என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட ஓர் அறிவிப்பின் மீது பெசன்ஸெநோ தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார். ஸ்ராலினிச சங்கமான தொழிலாளர் பொது கூட்டமைப்பு (CGT) முன்மொழிந்த ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை ஒரு பரந்த இயக்கத்தைத் தொடங்குவதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள துருவே முன்மொழிகிறார்: “நமது கோரிக்கைகளை மவுனமாக்கும் ஒரு மாபெரும் தேசிய மோசடி மீதான அரசாங்கத்தின் அவசர ஒலி அழைப்புகளில் இருந்து விலகி, அதற்கு பதிலாக பெப்ரவரி 5, 2019 இல் தொடங்கி ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுங்கள். அனைத்தையும் முடக்குங்கள், இனியும் அடிமைகளாக வாழ வேண்டாம்!”

BFM-TV செய்தி சேனலில் வரவழைக்கப்பட்டிருந்த பெசன்ஸெநோ அறிவிக்கையில், துருவேயின் அழைப்பு "ஒரு நல்ல யோசனை. ... நாம் பல போராட்டக்காரர்கள் முன் நிறுத்தும் கண்ணுக்குத் தெரியாத தடைகளைக் கடந்து செல்ல வேண்டும். ஒடுக்குமுறைக்கு எதிராகவும், சம்பளங்கள் மற்றும் செல்வவள மறுபகிர்வுக்காகவும் நமக்கு ஒரு தெளிவான அணிதிரள்வு அவசியப்படுகிறது. நாம் ஒன்றிணைவதற்கு இதுவே உரிய தருணமாக இருக்கலாம்,” என்றால். “தொழிற்சங்க அமைப்புகளிடம் இருந்து எதிர்வினையைத் தூண்டும்" “ஒரு முன்னோக்கிய படியை" “மஞ்சள் சீருடையாளர்கள் எடுத்துள்ளார்கள்" என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

பிரான்சிலும் சர்வதேச அளவிலான போராட்டத்தில் தொழிலாளர்களை அணிதிரட்டுவது இன்றியமையாததாகும், ஆனால் அதை செய்ய NPA போன்ற குட்டி-முதலாளித்துவ கட்சிகளிடம் இருந்தும் மற்றும் தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பிடம் (CGT) இருந்தும் நனவுபூர்வமான அரசியல் உடைவு அவசியமாகும். தொழிற்சங்கங்கள் மக்ரோனுக்கு எதிராக ஓர் அரசியல் தாக்குதலை ஒழுங்கமைக்காது. தொழிலாளர் பொது கூட்டமைப்பு (CGT) 1936 மற்றும் 1968 இல் இரண்டு மிகப் பெரிய பொது வேலைநிறுத்தங்களின் குரல்வளையை நெரித்து விற்றுத் தள்ளின. 1968 இக்குப் பிந்தைய அரை நூற்றாண்டில் சமூக செலவினக் குறைப்பு கொள்கைகளைத் திணிக்க அவை உதவியதன் காரணமாக இது அது தொழிலாள வர்க்கத்தில் அவற்றின் அடித்தளங்களை இழந்துள்ளது, தொழிற்சங்கங்கள் வெற்றுக்கூடுகளாக உள்ளன, அவை மக்ரோனை எதிர்த்துப் போராடாது.

தொழிலாளர் பொது கூட்டமைப்புக்கும் "மஞ்சள் சீருடையாளர்களுக்கும்" இடையே ஒரு "நல்லிணக்கத்திற்கு" அழைப்பு விடுப்பதன் மூலமாக, பெசன்ஸெநோ இந்த இயக்கத்தின் குரல் வளையை நெரித்து அதைக் கைப்பற்றுவதற்கு, அரசு மற்றும் பெருவணிகங்களின் நிதி வழங்கப்பட்டு அவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு உதவ விரும்புகிறார். புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி இதை செய்வதற்கு "மஞ்சள் சீருடையாளர்கள்" அனுமதிப்பார்களேயானால், அது இந்த இயக்கத்தைத் தானே-அழிப்பதற்கு ஒப்பானதாகும். பிரெஞ்சு முதலாளித்துவத்துடன் "சமூக பேச்சுவார்த்தை" என்ற தேசிய உள்ளடக்கத்தில் மக்ரோன் உடன் ஒரு பிற்போக்குத்தனமான பேச்சுவார்த்தையை நடத்துவதே தொழிற்சங்கங்களின் முன்னோக்காகும்.

உண்மையில், “மஞ்சள் சீருடை" போராட்டமானது பழைய, தேசியளவில்-அடித்தளத்தைக் கொண்ட அதிகாரத்துவவாதிகளுக்கு எதிரான ஒரு கிளர்ச்சியில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த உலகளாவிய மேலெழுச்சியின் பாகமாக உள்ளது. தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அல்லது அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிக்கன் வாகனத்துறை தொழிலாளர்களின் போராட்டங்களைப் போல, இவர்களின் போராட்டமும் உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்கள் மற்றும் NPA போன்ற போலி-இடது கட்சிகளுக்கு எதிராக அபிவிருத்தி அடைந்து வருகிறது. ஆனால் பெசன்ஸெநோ, “மஞ்சள் சீருடையாளர்கள்" நிராகரிக்கும், அரசுடன் தொடர்பு வைத்துள்ள தேசியவாத, முதலாளித்துவ-சார்பான மற்றும் ட்ரொட்ஸ்கிச-விரோத கட்சிகளின் ஒட்டுமொத்த அடுக்குகளை அவரால் ஆனமட்டும் ஊக்குவிக்க அனைத்தையும் செய்து வருகிறார்.

“பெப்ரவரி 5 பொது வேலைநிறுத்தத்தை ஆதரிக்கவும் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒருங்கிணைந்து போராடவும் திங்கட்கிழமை ஒரு மிகப்பெரிய ஒன்றுபட்ட கூட்டத்தில்" ஒருங்கிணைந்து வருவதற்காக "இடதின் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும்" பெசன்ஸெநோ முன்மொழிகிறார். அவர் "ஜோன்-லூக் மெலோன்சோன், பிரான்சுவா ருஃபான், பெனுவா அமோன், ஃபாபியான் ரூஸ்ஸெல், நத்தலி ஆர்த்தோ, பசுமை கட்சி மற்றும் தொழிற்சங்க இடது" ஆகியவற்றுக்கு இதில் இணையுமாறு அழைப்பு அனுப்பியுள்ளார்.

அதாவது, பெசன்ஸெநோ "மஞ்சள் சீருடையாளர்கள்" மீது கட்டுப்பாட்டை எடுத்து முதலாளித்துவ-சார்பு போக்கிற்கு அவர்களை அடிபணிய வைப்பதற்காக, புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சிக்கும், பெனுவா அமோன் மற்றும் ஜோன்-லூக் மெலோன்சோன் போன்ற பெருவணிக சோசலிஸ்ட் கட்சியின் (PS) முன்னாள் அமைச்சர்கள், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் (PCF) புதிய உயர்மட்ட உறுப்பினரான ஃபாபியான் ரூஸ்ஸெல், தொழிலாளர்கள் போராட்டத்தின் (PO) ஜனாதிபதி வேட்பாளர் நத்தலி ஆர்த்தோ மற்றும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே ஒரு கூட்டணியை கட்டமைக்க விரும்புகிறார்.

மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் பல ஆண்டுகளாக ஏகாதிபத்திய போர்களை ஆதரித்து வந்துள்ள சோசலிஸ்ட் கட்சியின் (PS) துணை அமைப்புகளை ஒன்றுசேர்த்து கொண்டு வந்து ஒரு "சமூக முன்னணி" அமைப்பதற்கான இத்தகைய அழைப்புகள் சிக்க வைப்பதற்கான ஓர் அரசியல் பொறி என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இவை இடதுசாரியோ அல்லது தொழிலாள வர்க்க அமைப்புகளோ இல்லை. இவை "மஞ்சள் சீருடையாளர்களின்" கோரிக்கைகளுக்கு விரோதமானவை. தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் கல்வித்துறையில் குட்டி-முதலாளித்துவ வர்க்க நலன்களைப் பேசும் இவற்றின் நோக்கம், உலக சந்தையின் கட்டளைகளுக்கு ஏற்ப கூலிகளை மாற்றியமைப்பதற்காக சமூக உரிமைகள் மீதான வெட்டுக்களை மக்ரோனுடன் பேரம்பேசுவதாகும்.

பெசன்ஸெநோ அவரே நடைமுறையளவில் இதை ஒப்புக் கொண்டார், ஒன்று திரள்வதற்காக அவர் முன்மொழியும் அமைப்புகள் தசாப்த காலமாக நடத்தப்பட்ட வேலைநிறுத்தங்களின் தோல்விகளை ஒழுங்கமைத்தன என்று குறிப்பிட்டார். “மஞ்சள் சீருடையாளர்கள்" குறித்து பேசுகையில், அவர்கள் "முன்னொருபோதும் இல்லாத வரலாற்று அணிதிரள்வு, அது வெறுமனே ஏதோவொன்றுக்கு எதிரானது அல்ல மாறாக ஏதோவொன்றுக்காக நடத்தப்படுகிறது. ... மே 1968 க்குப் பின்னர் முதல்முறையாக ஏதோவொன்றை ஜெயித்துக் கொண்டிருக்கும் ஓர் இயக்கத்தை நாம் பெற்றுள்ளோம்,” என்றார்.

வெளிப்படையாகவே தற்செயலாக, பெசன்ஸெநோ NPA இன் பாத்திரம் குறித்தும் மற்றும் தசாப்தங்களாக பிரான்சிலும் ஐரோப்பா எங்கிலும் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களை தனிமைப்படுத்தி வந்துள்ள அதன் அரசியல் மற்றும் தொழிற்சங்க கூட்டாளிகள் வகிக்கும் பாத்திரம் குறித்தும் ஒரு அழிவுகரமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதற்கு காரணம், "மஞ்சள் சீருடையாளர்கள்" நீண்டகாலமாக தொழிலாள வர்க்கத்திற்கு தோல்விகளை ஒழுங்கமைத்து வந்துள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் கட்சிகளை அவமதிப்புடன் எதிர்ப்பதன் தாக்கம் அந்தளவுக்கு இருக்கிறது. "மஞ்சள் சீருடையாளர்களை" கோபம் மற்றும் அச்சத்துடன் பார்க்கின்ற இந்த கட்சிகள், அவர்களை நிராகரிக்கவும் செய்கின்றன. புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி பின்வருமாறு அறிவித்து "மஞ்சள் சீருடை" போராட்டங்களின் ஆரம்ப வெடிப்பை எதிர்த்தது:

நாங்கள் எந்த தவறும் செய்ய மாட்டோம். CGT மற்றும் Solidarity தொழிற்சங்கங்களைப் போல, நாங்கள் நவம்பர் 17, சனிக்கிழமை அதிவலதால் சாதகமாக கைப்பற்றப்பட்ட முதலாளிமார்களின் சூழ்ச்சிகளுடன் எங்களின் கோபத்தைக் கலக்க மாட்டோம், அது ஒரு தற்காலிக கூட்டாளி அல்ல மாறாக ஓர் அபாயகரமான எதிரி. ஆமாம், சம்பளங்களைத் தவிர ஒவ்வொன்றும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது, அடிமட்ட வர்க்கங்கள் எரிபொருள் விலை உயர்வுகள் மற்றும் பொதுவான விலையுயர்வுகளைப் பொறுத்தது போதும் என்பது சரியானதே... ஆனால் அதை நாம் நவம்பர் 17 சனிக்கிழமை நடவடிக்கைகளிலோ அல்லது அதிவலது குண்டர்கள் போல தோன்றும் குடிமக்கள் என்று கூறிக் கொள்பவர்களின் கூட்டங்களில் கூற முடியாது, அதில் நாம் தொழிலாளர்களின் இயக்கத்தின் உயிராபத்தான எதிரிகளுடன் நிற்பதாக இருக்கும்.

என்ன தயாரிக்கப்பட்டு வருகிறது என்றால் ஏற்கனவே நடந்திருப்பதை விட வர்க்க போராட்டத்தின் இன்னும் அதிகமான ஒரு வெடிப்பு தயாராகி வருகிறது. இந்த வேலைநிறுத்தங்களது அபிவிருத்தியின் புறநிலையான போக்கு இப்போது 20 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய பொது வேலைநிறுத்தங்களை விட பெரியதாக, கண்டந்தழுவிய தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் வெடிப்பதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இத்தகைய போராட்டங்களை CGT அல்லது பெசன்ஸெநோ தலைமை கொடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பது அவற்றின் தோல்வியை உறுதிப்படுத்துவதாகவே இருக்கும்.

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தாக்குதலை அபிவிருத்தி செய்வதற்கு முதலில் NPA போன்ற போலி-இடது குழுக்களிடம் இருந்து கிடைக்கும் நச்சார்ந்த ஆதரவை நனவுபூர்வமாக நிராகரிப்பது அவசியமாகும். வெடித்து வரும் நெருக்கடிகளுக்குத் தயாரிப்பு செய்வதற்கு, தொழிலாளர்கள் போராட்டங்களைத் தொழிற்சங்கங்களின் கரங்களில் இருந்து கையிலெடுப்பது அவசியமாக உள்ளது. முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைக்கவும் ஒன்றிணைக்கவும், அவர்களுக்கு ஐரோப்பா எங்கிலும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான நடவடிக்கை குழுக்கள் அவசியமாகும்.

இது ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தலைமையாக பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste – PES) மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவைக் (ICFI) கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிடுகிறது. குட்டி-முதலாளித்துவ, போலி-இடது அமைப்புகளுக்கு எதிரான ஓர் அரசியல் மற்றும் தத்துவார்த்த போராட்டத்தின் மூலமாக மட்டுமே, தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பைக் கைப்பற்றி குரல்வளையை நெரிப்பதற்கான அரசியல் ஸ்தாபகத்தின் முயற்சிகளைத் தோற்கடிப்பதும், சமூகத்தின் சோசலிச மாற்றத்திற்கான ஓர் உண்மையான போராட்டத்தை நோக்கி தொழிலாளர்கள் போராட்டங்களை வழிநடத்துவதும் சாத்தியமாகும்.