ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian government intensifies retaliatory threats against Pakistan

இந்திய அரசாங்கம் பாகிஸ்தானுக்கு எதிரான பழிவாங்கும் அச்சுறுத்தல்களை தீவிரப்படுத்துகிறது

By Deepal Jayasekera
19 February 2019

இந்திய அரசாங்கம், சென்ற வியாழக்கிழமை காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் குறித்து பாகிஸ்தானுக்கு எதிராக பழிவாங்கும் தாக்குதல்களை தொடுக்கும் வகையிலான அதன் அச்சுறுத்தல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த குண்டுவீச்சு தற்கொலைத் தாக்குதலில் 40 க்கும் அதிகமான மத்திய பாதுகாப்பு படையினர் (Central Reserve Police Force-CRPF) கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஸ்-இ-முகமது (Jaish-e-Mohammed-JeM) என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், உடனடியாக இஸ்லாமாபாத்தை இந்தியா குற்றம்சாட்டியது.

ஞாயிறன்று, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒடிசாவில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுகையில், JeM அமைப்பு தான் இந்த தாக்குதலை அரங்கேற்றியுள்ளது என்றும் அதற்கு காரணம் “பாகிஸ்தான் ஆதரவிலான சக்திகளின்”, “ஆற்றொணா நிலை” தான் என்றும் கூறினார். மேலும், தேவையான நடவடிக்கை எடுக்க இந்திய இராணுவத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி “முழு சுதந்திரத்தை” வழங்கியுள்ளது பற்றியும் அவர் பாராட்டினார் என்ற நிலையில், பாகிஸ்தானுக்குள் பழிவாங்கும் தாக்குதல்களை நிகழ்த்த இந்தியா தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது என்பதற்கான தெளிவான அறிகுறி தென்படுகிறது.

அத்துடன், பாகிஸ்தானுக்கு எதிரான இராணுவ நகர்வுக்கு அநேகமாக அனைத்து ஸ்தாபகக் கட்சிகளும் ஆதரவளிப்பதையும் சிங் மிகவும் வரவேற்றார். அனைத்து கட்சியினரும், “ஒருமித்த குரலில் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர், அதே நேரத்தில் அண்டை நாடான பாகிஸ்தானையும் அவர்கள் கண்டனம் செய்துள்ளனர்,” என்று கூறியதோடு, இராணுவத்தினருடனும் அவர்கள் ஐக்கியப்பட்டு நின்றனர் என்றும் தெரிவித்தார்.

தங்களது ஆதரவை வழங்க கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகளுக்கு மத்தியில், இந்தியாவின் இரு முக்கிய ஸ்ராலினிச பாராளுமன்றக் கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (CPI) மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது CPM உம் தமது ஆதரவை வழங்கின. அனைத்து கட்சிக் கூட்டத்தில் ஆதரவளிக்கும் தீர்மானம் அங்கீகரிக்கப்பட்ட பின்னர், ஜம்மு காஷ்மீர் எங்கிலும் பிஜேபி வகுப்புவாதத்தை தூண்டிவருவதை எதிர்த்தும், காஷ்மீர் மாணவர்கள் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பு பற்றிய “கவலைகளை” எழுப்பியும், CPI இன் தேசியச் செயலர் டி. ராஜா சிடுமூஞ்சித்தனமாக ஆளும் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக் கட்சி (BJP) இடமிருந்து தன்னை விலக்கிக் கொள்ள முயன்றார்.

மோடி அரசாங்கம், இந்த பிராந்தியத்தில் புது தில்லியின் புவிசார் அரசியல் அபிலாஷைகளை பலப்படுத்தவும், மேலும் பிற்போக்குத்தன வகுப்புவாத வழிமுறைகள் ஊடாக அதன் சந்தை சார்பு பொருளாதார மறுசீரமைப்புக்கு இந்தியாவில் நிலவும் மக்கள் எதிர்ப்பை திசை திருப்பும் நோக்கத்துடன், பாகிஸ்தான் எதிர்ப்பு பேரினவாதத்தை தூண்டிவிட்டு பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப் போவதாக அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக, வரவிருக்கும் ஏப்ரல்-மே பொதுத் தேர்தல்களில் எதிர்பார்க்கப்படும் இழப்புக்களைத் தடுக்கவும் அது தீவிரமாக உள்ளது.

காஷ்மீர் இந்திய இராணுவத் தளத்தில் நடத்தப்பட்ட செப்டம்பர் 2016 தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிரான “துல்லிய தாக்குதலுக்கு” உத்தரவிட்டது குறித்து பிஜேபி பெருமிதம் கொண்டது என்பது, பாகிஸ்தானுக்கு ஒரு பெரும் பதிலடி கொடுப்பதையும், இந்த பிராந்தியத்தில் இந்திய மூலோபாய சக்தியை வலியுறுத்துவதையும் குறிப்பதாக இருந்தது.

ஒரு இந்திய இராணுவத் தாக்குதல், அளவிலும் காலத்திலும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தாலும் கூட, அது தெற்காசியாவின் போட்டி அணுவாயுத நாடுகளிடையே பழிக்குப் பழி வாங்கும் வெடிப்புக்கு எளிதாக இட்டுச்சென்று, அதுவே ஒரு ஒட்டுமொத்தப் போராக அடுத்தடுத்து விரைவில் வளர்ச்சி காணும் அபாயத்தை கொண்டுள்ளது. இரு நாடுகளும், 1947 இல் அவை உருவாகியதில் இருந்து மூன்று அறிவிக்கப்பட்ட போர்களையும், எண்ணற்ற அறிவிக்கப்படாத மோதல்களையும் சந்தித்துள்ளன. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான ஒட்டுமொத்தப் போர் என்பது, தெற்காசிய மக்களுக்கு பேரழிவுகரமான ஒன்றாக இருக்கும் என்பதுடன், இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்காவையும், பாக்கிஸ்தானுக்கு ஆதரவாக சீனாவையும் விரைவாக அது உள்ளிழுத்துவிடும் அபாயமும் உள்ளது.

மோடி அரசாங்கம், அமெரிக்காவும், உலகின் ஏனைய சக்திகளும் அதற்கு வழங்கும் ஆதரவினால், பாகிஸ்தானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள குறிப்பாக தைரியமாக உள்ளது. வெள்ளியன்று, அமெரிக்க தேசிய பாதுகாப்புச் செயலரான ஜோன் போல்டன், அவரது இந்திய சமதரப்பான அஜீத் தோவலுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக தன்னை பாதுகாத்துக் கொள்ளும் இந்தியாவின் உரிமைக்கு” அமெரிக்காவின் ஆதரவு உண்டு எனும் செய்தியை பகிர்ந்தார்.

முதன்முதலாக, “எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக சுய-பாதுகாப்பு” எனும் பேரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் எந்தவித இராணுவ நடவடிக்கைக்கும் முன்கூட்டியே அமெரிக்கா பகிரங்கமாக பச்சைக்கொடி காட்டியுள்ளது. செப்டம்பர் 2016 இந்திய இராணுவத் தளம் மீதான தாக்குதல் குறித்து இந்தியா பதிலடி கொடுக்கையில், அமெரிக்கா ஆரம்பத்தில் திரைமறைவில் இருந்து அதற்கு ஆதரவளித்தது. ஆனால் பாகிஸ்தானின் பதிலிறுப்பு ஒப்பீட்டளவில் தாழ்வானதாகவும், எல்லைக்குட்பட்ட எல்லை தாண்டிய குண்டு வீச்சுக்களை அது நடத்துவதுடன் மட்டுப்படுத்திக் கொள்ளும் என்பது தெளிவானதை அடுத்த பல வாரங்களுக்கு பின்னர்தான் இந்தியா “துல்லிய தாக்குதல்” நடத்துவதற்கு அதன் பகிரங்கமான ஆதரவை அமெரிக்கா வழங்கியது.

சென்ற வார அமெரிக்காவின் பதிலிறுப்பு, சீனாவுடனான அமெரிக்காவின் இராஜதந்திர, பொருளாதார மற்றும் மூலோபாய மோதலில் இந்தியாவை தன் பின்னால் அணிதிரட்டுவதில் ட்ரம்ப் நிர்வாகம் எந்தளவிற்கு போகத் தயாராக உள்ளது என்பதை அடிக்கோடிட்டுக்காட்டுகிறது. மோடி அரசாங்கத்தின் கீழ், பெய்ஜிங்கிற்கு எதிரான அமெரிக்க போர் தயாரிப்புகளில் முன்னணி வகிக்கும் ஒரு நாடாக இந்தியாவை அது மாற்றிவைத்துள்ளது. இந்த ஆழ்ந்த இராணுவ-மூலோபாய பங்காளித்துவம் என்பது, பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் இன் முந்தைய பிஜேபி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் தொடங்கிவைக்கப்பட்டு, அடுத்தடுத்த காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கங்களால் தொடரப்பட்டதான நெருக்கமான உறவுகளின் தொடர்ச்சியாகவும் கூடுதல் வளர்ச்சியாகவும் உள்ளது.

பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலுக்கு இருக்கும் திறந்த வெளிப்படையான அமெரிக்கத் தூண்டுதல்கள் அனைத்தும் மிகவும் அதிர்ச்சியூட்டுவதாகவே உள்ளன, ஏனென்றால், சமீபத்திய வாரங்களில், தாலிபான் உடனான “சமாதான பேச்சுவார்த்தைகளுக்காக” பாகிஸ்தானின் ஆதரவையும் உதவியையும் பெறுவதற்கான முயற்சியில் வாஷிங்டன் ஈடுபட்டு வந்துள்ளது. இந்நிலையில், தாலிபான் உடன் ஏதேனும் உடன்பாட்டை எட்டிய பின்னர் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா பின்வாங்கக்கூடிய ஒரு சாத்தியம் இருப்பது பற்றி இந்திய ஆளும் உயரடுக்கு அதன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது, காரணம் என்னவென்றால், அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி அதன் பரம எதிரியான பாகிஸ்தான் அங்கு தனது பெரும் கால்பதிப்பை ஊன்றும் ஆதாயத்தைப் பெறக்கூடும் என்பதை தெளிவுபடக் காண்கிறது. எனவே சந்தேகத்திற்கு இடமின்றி, அமெரிக்க-பாகிஸ்தான் உறவுகளை தகர்ப்பதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகவே இந்த வியாழக்கிழமை தீவிரவாதத் தாக்குதலை இந்தியா கருதுகிறது.

மோடி அரசாங்கம், “பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும்” ஒரு நாடாக பாகிஸ்தான் முத்திரைகுத்தப்பட வேண்டும் என்பதை இந்த தாக்குதல் நிருபித்துள்ளதாக கூறி, சர்வதேச அளவில் இஸ்லாமாபாத்தை தனிமைப்படுத்துவதற்காக ஒரு “இராஜதந்திரப் போரை”யும் கூட தொடங்கியுள்ளது. வெள்ளியன்று, இந்திய வெளியுறவு அமைச்சகம், அதன் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் வகையில், அமெரிக்கா மற்றும் சீனா உட்பட, புது தில்லியை சேர்ந்த தூதர்களுக்கு ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.

இந்தியாவிற்குள், பிஜேபி உடன் இணைந்த இந்து தீவிரவாதிகள், காஷ்மீருக்கு வெளியே படித்துக் கொண்டிருக்கும் காஷ்மீர் மாணவர்கள் மீதான தாக்குதல்களை தீவிரமாக ஊக்கப்படுத்தி வருகின்றனர். தங்கள் மீது கற்களை எறிந்தும், அத்துடன் ஏனைய வகைகளில் சரீர ரீதியாக தங்களை தாக்கியும், மேலும் ஜம்மு, புது தில்லி மற்றும் உத்தரகண்டில் இருந்து வெளியேறும்படி தாம் அச்சுறுத்தப்பட்டு வருவதாகவும் காஷ்மீர் மாணவர்கள் புகார் செய்துள்ளார்கள். மேலும் ஜம்முவில், அத்தகைய சம்பவங்களை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், கும்பல்கள் அவர்களைத் தாக்கிய போது பொலிசார் நிச்சலனமாக நின்றனர் என்று பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறுகின்றனர்.

காஷ்மீர் பிராந்திய முதலாளித்துவக் கட்சியான, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரான, உமர் அப்துல்லா, பிஜேபி அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அந்த மாணவர்களை காஷ்மீருக்கு மீண்டும் திரும்பும் நிலைக்கு தள்ளி பிரிவினைவாதக் குழுக்களில் அவர்கள் சேர்ந்துவிட ஊக்குவிப்பதாக உள்ளது என தெரிவித்தார். மேலும், அத்தகைய குழுக்களில் சேர விரும்பாத காரணத்தால் தான் அவர்கள் படிப்பதற்கு காஷ்மீரை விட்டு துல்லியமாக வெளியேறி இருந்தனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த வார தீவிரவாத தாக்குதலில் அதன் பங்கு எதுவுமில்லை என்று அறிவித்து இந்தியாவின் பழிவாங்கும் அச்சுறுத்தல்களுக்கு பாகிஸ்தான் எதிர்வினையாற்றியுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுச் செயலரான டெர்மினா ஜாஞ்சுவா (Termina Janjua) சனியன்று, காஷ்மீரில் அதன் மனித உரிமை மீறல்களில் இருந்து உலகின் பார்வையை திசை திருப்பும் வகையிலான அதன் “வழக்கமான வாய்வீச்சு மற்றும் தந்திரோபாயத்தின்” ஒரு பாகமாகவே புது தில்லியின் தற்போதைய பிரச்சாரமும் உள்ளது என்று கூறினார். இராஜதந்திர ரீதியிலான தனிமைப்படுத்தலுக்கு அஞ்சி பாகிஸ்தான், இந்தியாவிற்கு கடந்த காலத்தில் விடுத்தது போன்ற போர்க்குணமிக்க வாய்வீச்சுக்களை தற்போது அது பிரயோகிக்கவில்லை.

காஷ்மீர் முஸ்லீம்களுக்கு எதிராக இந்தியா நிகழ்த்தும் அதன் இராணுவரீதியான அட்டூழியங்கள் நிச்சயமாக இழிவானவையே. மேலும், பிரிவினைவாத குழுக்களின் நடவடிக்கைகளை குறிப்பிட்டு காஷ்மீரில் அதன் கடுமையான இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிரான எந்தவித ஆர்ப்பாட்டங்களையும் அது குறைகூறுகிறது. ஆனால், காஷ்மீர் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை புது தில்லி துஷ்பிரயோகம் செய்வதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இத்தகைய அமைப்புக்கள் மட்டுமே கிளர்ச்சி செய்கின்றனர். இருப்பினும், பாகிஸ்தானின் விமர்சனங்கள், காஷ்மீரில் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக எதையும் செய்துவிடவில்லை, மாறாக அதன் சொந்த பூகோள அரசியல் நலன்களை மேலும் மேம்படுத்துவதாகவே அவை உள்ளன. இது, காஷ்மீரில் ஏனைய இந்திய எதிர்ப்பு அரசியல் சக்திகளுக்கு கேடு விளைவிக்கும் வகையில் இஸ்லாமிய கிளர்ச்சி குழுக்களை ஊக்குவித்தும் ஆதரித்தும் வருகிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் எந்தவொரு பழிவாங்கும் நடவடிக்கையும், தெற்காசியாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு கொடிய விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் இரு அணுவாயுத சக்திகளுக்கு இடையே ஒரு பெரும் யுத்தத்தைத் தூண்டும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. அத்தகைய மோதலைத் தடுக்க, இந்த பிராந்தியம் முழுவதிலும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவது மிக அவசியமாகவுள்ளது. பிரிட்டிஷ் இந்தியாவை, 1947 இல் பிரிவினை செய்ததன் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு முஸ்லீம் பாகிஸ்தான் மற்றும் ஒரு இந்து மேலாதிக்கவாத இந்தியா என்ற இந்த பிற்போக்குத்தனமான தேசிய-அரசு அமைப்பு தூக்கியெறியப்பட வேண்டும் என்பதுடன், சர்வதேச அளவிலான சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக தெற்காசியாவின் சோசலிச குடியரசுகளின் ஒரு ஒன்றியமும் அங்கு ஸ்தாபிக்கப்பட வேண்டும்.