ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Iranian Revolution—Forty Years On

ஈரானிய புரட்சி நடந்து நாற்பதாண்டுகள்

Keith Jones
13 February 2019

அமெரிக்காவினால் ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் 1953 இல் நிறுவப்பட்டு, ஒரு கால் நூற்றாண்டு காலம் அமெரிக்க ஏகாதிபத்திய வன்முறைக்கும் மத்திய கிழக்கு மற்றும் யுரேஷியாவில் சதிகளில் ஈடுபடுவதிலும் அச்சாணியாக சேவையாற்றிய ஷாவின் கொடுங்கோல் சர்வாதிகார ஆட்சியை, நாற்பதாண்டுகளுக்கு முன்னர் இதே வாரம் ஈரானிய புரட்சி வீழ்த்தியது.

ஷா மொஹம்மத் ரெஜா பஹ்லாவி, அவரது பரிவாரங்கள், போலி முதலாளித்துவவாதிகள் மற்றும் SAVAK சித்திரவதையாளர்களின் ஆட்சியை வரலாற்றின் குப்பையில் தூக்கியெறிந்த அந்த மக்கள் மேலெழுச்சியானது, ஓராண்டாக தீவிரமடைந்து வந்த பெருந்திரளான மக்கள் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் விளைவாக இருந்தது. தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளும், நகர்புற ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரும் ஷாவின் முடியாட்சி சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்தனர். ஆனால் ஈரானிய எண்ணெய் துறைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தான் அவரது அமெரிக்கா-ஆதரவிலான எதேச்சதிகார ஆட்சியின் முதுகெலும்பை முறித்தது.

1979 இல்  ஈரானுக்கும் 1917 இல் ரஷ்யாவுக்கும் இடையிலான சமாந்தரங்கள் மலைப்பூட்டுவதாக இருந்ததுடன், அந்நேரத்தில் முதலாளித்துவ ஊடகங்களிலும் கூட பெரிதும் அது குறித்து கருத்துரைக்கப்பட்டன. ஷா தூக்கியெறியப்பட்ட பின்னரும், புரட்சிகர மேலெழுச்சி விரிவடைந்து ஆழமடைந்தது. ஆனால் தொழிலாளர்கள் ஆலைகளை ஆக்கிரமித்து போராட்டத்திற்கான புதிய வேலையிட அமைப்புகளை உருவாக்கிய போதினும், தலைமறைவாகிய நில உரிமையாளர்களிடம் இருந்து கிராமத்தவர்கள் நிலங்களைப் பறிமுதல் செய்த போதினும், அதிகாரமோ நகர்புற ஏழைகள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகளைச் சார்ந்த ஒரு தொழிலாளர்களின் அரசாங்கத்தின் கரங்களுக்குள் மாற்றப்படவில்லை.

அதற்கு பதிலாக வன்முறை அதிர்ச்சிகளுடன் இடது மற்றும் சுயாதீனமான தொழிலாள வர்க்க அமைப்புகளின் அனைத்து வடிவங்கள் மீதான மூர்க்கமான ஒடுக்குமுறை மூலமாக மட்டுமே ஒரு புதிய முதலாளித்துவ ஆட்சி அதற்கடுத்த மூன்று ஆண்டுகளில் அதிகாரத்தில் அதன் பிடியைத் தக்க வைத்துக் கொண்டது.

ஈரானில் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த எண்ணெய் வளங்களை ஷாவும், அவர் பரிவாரங்களும் ஏகாதிபத்தியமும் தமக்கு மட்டுமே ஏகபோகமயமாக்கிக்கொண்டதை  ஆட்சேபித்த ஈரானிய முதலாளி வர்க்கத்தின் பாரம்பரிய பிரிவுகள் மற்றும் சந்தை வியாபாரிகளின் மீது அந்த ஆட்சி வேரூன்றவேண்டி இருந்தது. அரசியல்ரீதியில் அந்த ஆட்சியானது, ஏகாதிபத்திய-எதிர்ப்பு மேலெழுச்சியைக் கடிவாளமிட, அரசியல்ரீதியில் தணியச் செய்ய மற்றும் நசுக்குவதற்காக, ஷியா வெகுஜனவாத முறையீடுகளைப் பயன்படுத்தி வந்த, மரபார்ந்த கொள்கைகளை மறுத்த மதகுருமார்களின் ஒரு பிரிவின் தலைமையில் இருந்தது. முதலாளித்துவ சொத்துடைமையின் பாதுகாவலர்களாக, ஷியா மதகுருமார்கள் இஸ்லாமிய குடியரசின் அரசியல் அமைப்புகளுக்குள் ஒரு மேதகு இடத்தைத் தங்களுக்குப் பாதுகாத்துக் கொள்ள முடிந்தது, இது தலையாய தலைவர் அயெத்துல்லா கொமெனி 1989 இல் மரணமடையும் வரையிலும் மற்றும் அதற்கு பின்னர் இருந்து அயெத்துல்லா காமெனியும் தக்க வைத்திருக்கும் பதவியால் எடுத்துக்காட்டப்பட்டது.

ஸ்ராலினிச துடேஹ் கட்சியின் எதிர்-புரட்சிகர பாத்திரம்

ஸ்ராலினிச துடேஹ் கட்சியும் ஸ்ராலினிசவாத அரசியலும் தான், ஈரானிய புரட்சி துயரகரமாக தடம் புரண்டதற்குப் பிரதான பொறுப்பாகின்றன.

ஈரானிய தொழிலாள வர்க்கத்திற்கும் புரட்சிகர சோசலிசத்திற்கும் இடையே 20 ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தம் வரை நீளுகின்ற, ஒரு நீண்ட ஆழ்ந்த தொடர்பு உள்ளது, அப்போது தெற்கு ரஷ்யாவின் எண்ணெய் வயல்களிலும் பிற தொழில்துறைகளிலும் பணியில் இருந்த புலம்பெயர்ந்த ஈரானிய தொழிலாளர்கள் போல்ஷிவிக் கட்சி காரியாளர்களால் அரசியல் கற்பிக்கப்பட்டிருந்தார்கள்.

துடெஹ் கட்சி இரண்டாம் உலக போரின் முடிவில், ஈரானின் முதல் பாரிய அரசியல் கட்சியாக, நூறாயிரக் கணக்கான தொழிலாளர்களைக் கொண்டிருந்த ஒரு போர்குணமிக்க தொழிற்சங்க இயக்கத்தின் தலைமையாக, அதிகாரத்திற்கு போட்டியிடக் கூடிய பலமான போட்டியாளராக மேலெழுந்திருந்தது. ஆனால் மென்ஷிவிக்-ஸ்ராலினிச இரண்டு கட்ட புரட்சித் தத்துவத்தை ஏற்று, துடெஹ் கட்சி திட்டமிட்டு தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்தின் "முற்போக்கு பிரிவு" என்று கூறி வந்தவர்களிடம் அடிபணிய செய்தது, அதன் மூலம் ஷாவின் எதேச்சதிகாரவாத ஆட்சியை ஸ்தாபித்த, 1953 இல் சிஐஏ-வடிவமைத்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கான அரசியல் நிலைமைகளை உருவாக்க உதவியது.

நாடு கடத்தப்பட்ட நிலையில் இருந்த துடெஹ் கட்சியின் தலைமை, 1953 ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர் அக்கட்சி மீது மூர்க்கமான ஒடுக்குமுறையை மேற்பார்வையிட்டிருந்த தளபதி உட்பட ஷாவின் ஆட்சியிலிருந்து விட்டோடி வந்தவர்களை கூட்டாளிகளாக ஆக்க முனைந்து, மேற்கொண்டும் வலதுக்கு நகர்ந்தது. ஈரானிய தொழிலாள வர்க்கத்தை எட்டுவதற்கு எந்த ஆழ்ந்த முயற்சியையும் கைவிட்டிருந்த ஸ்ராலினிசவாதிகள், 1978 இல் ஷாவின் ஆட்சிக்கு எதிராக பெருந்திரளான மக்கள் எதிர்ப்பு வெடித்த போது அவற்றை எதிர்பார்க்காமல் இருந்தனர்.

அதற்குப் பின்னர், அவர்கள் கொமெனியை "தேசிய ஜனநாயக புரட்சியின்" தலைவர் என்று புகழ்ந்துரைத்து அவரின் பின்னால் விழுந்ததுடன், வேறுவிதத்தில் தொழில்துறை தொழிலாளர்களின் ஒரு பிரிவினர் இடையே துடெஹ் கட்சி கொண்டிருந்த செல்வாக்கை ஈரானிய முதலாளித்துவ வர்க்கத்திற்கு சேவைசெய்ய உட்படுத்தினர். டிசம்பர் 1979 இல், துடெஹ் கட்சி பொது செயலாளர் நூர்தீன் கியாநூரி, கொமெனி ஆட்சி உடனான ஸ்ராலினிவாதிகளின் கூட்டுறவு "மூலோபாயமானது", ஏனென்றால் "ஷியா பிரிவு இஸ்லாம் (Shiism) ஒரு புரட்சிகரமான முற்போக்கான சித்தாந்தம், அது சோசலிசத்திற்கான நமது பாதையை ஒருபோதும் தடுக்காது,” என்று அவமானகரமாக அறிவித்தார்.

துடெஹ் கட்சியின் வலதுசாரி அரசியலுக்கு எதிரான ஒரு பகுதியான எதிர்வினையாக, 1970 களின் தொடக்கத்தில் மேலெழுந்த ஆயுதமேந்திய பல்வேறு கொரில்லா குழுக்கள், சோசலிச-சிந்தனை கொண்ட இளைஞர்களைக் குழப்புவதில் ஒரு குறிப்பிடத்தக்க துணைப் பாத்திரம் வகித்தன. ஸ்ராலினிசம், மாவோயிசம், குவேராயிசம், மூன்றாம் உலகமயமாக்கல், இன்னும் சில விடயங்களில் "இஸ்லாமிய சோசலிசம்" என பன்முக கோட்பாட்டு கலவையாக, மக்களின் பெத்தாயின் (People's Fedayeen) மற்றும் மக்களின் முஜ்ஹிதீன் (People's Mujahedin) போன்ற குழுக்கள் சோசலிச சிந்தனை கொண்ட இளைஞர்களைத் தொழிலாள வர்க்கத்திடமிருந்து தடுத்து வைக்கவும், ஷியா மதகுருமார்கள் மற்றும் ஈரானிய முதலாளித்துவ வர்க்கத்தின் புரட்சிகர ஏகாதிபத்திய-எதிர்ப்பு ஆற்றல்கள் மீது பிரமைகளை விதைக்கவும் சேவையாற்றின.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பொறுத்த வரையில், ஈரானிய புரட்சி சரியான அடியாக இருந்தது. ஷா தூக்கியெறியப்படுவதற்கு வெறும் 14 மாதங்களுக்கு முன்னர் தான், அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் ஷாவின் ஆட்சியை "ஸ்திரத்தன்மையின் தீவு" என்று புகழ்ந்திருந்தார்.

ஆனால் ஏகாதிபத்திய-எதிர்ப்பு கிளர்ச்சி சோசலிச புரட்சியில் போய் முடியக்கூடும் அல்லது அமெரிக்க பனிப்போர் சித்தாந்தத்தின் முப்பட்டகத்தின் மூலமாக பார்க்கையில், துடெஹ் கட்சி அதிகாரத்திற்கு வந்து விடக்கூடும் என்பது தான், முல்லாக்களின் மயில் சிம்மாசனம் (Peacock Throne) கவிழ்க்கப்பட்டதை ஒட்டி வாஷிங்டனின் மேலோங்கிய கவலை மற்றும் அச்சமாக இருந்தது. புரட்சிக்கு முந்தைய இறுதி மாதங்களில் கொமெனி தங்கியிருந்த, 1965 வரையில் நாடு கடந்து இருந்து வந்த பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுடன் சேர்ந்து அமெரிக்கா, அயெத்துல்லாவுடனும் மற்றும் அவர் பெப்ரவரி 1979 இல் நியமித்த இடைக்கால அரசாங்கத்துடனும் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக சமிக்ஞை செய்தது.

விரைவிலேயே உறவுகள் சீர்குலைந்தன, ஏனென்றால் தெஹ்ரான் முற்றிலுமாக அமெரிக்க மூலோபாய நோக்கங்களுக்கு அடிபணிய வேண்டுமென வாஷிங்டன் கோரியது. இது கொமெனி யாருக்காக பேசி வந்தாரோ அந்த ஈரானிய முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்கான கன்னைகளின் நலன்களை மட்டும் குறுக்காக வெட்டவில்லை, மாறாக வாஷிங்டனுக்கு மண்டியிட கூடியதாக தெரியும் எந்தவொரு ஈரானிய அரசாங்கமும் கிளர்ச்சிகரமான மக்களுடன் கண்மூடித்தனமான மோதலுக்கு வர வேண்டியிருக்கும் என்பதையும் அயெத்துல்லா உணர்ந்திருந்தார்.

வாஷிங்டனுடன் நெருக்கமாக செயல்படுவதற்கான உறவை மீண்டும் தொடங்கவும் மற்றும் வேறுவிதத்தில் வெளிப்பார்வைக்கு புரட்சியை முடிவுக்குக் கொண்டு வர அழைப்புவிடுப்பதில் ஆர்வமுடன் இருந்த பாரம்பரிய முதலாளித்துவ வர்க்க ஷா-எதிர்ப்பின் ஏனைய பிரிவுகளையும் மற்றும் பிரதம மந்திரியாக கொமெனி முதலில் தேர்வு செய்திருந்த மெஹ்தி பஜர்கனையும் (Mehdi Bazargan) ஓரங்கட்ட, கொமெனி நவம்பர் 1979 அமெரிக்க தூதரக சிறைப்பிடிப்பை (“பிணை நெருக்கடி”) பயன்படுத்தினார்.

ஆனால் இது அயெத்துல்லாவும் அவரின் நெருக்கமான ஆதரவாளர்களும் இஸ்லாமிய குடியரசு கட்சியில் இப்போது ஒழுங்கமைத்திருந்தவர்களை நோக்கி திரும்புவதற்கான கொமெனி ஆட்சியின் ஆரம்ப தயாரிப்பாக மட்டுமே இருந்தது, மேலும் ஈரானிய முதலாளித்துவ வர்க்கம் தொழிலாள வர்க்கத்தையும் இடதையும் பிரதான அச்சுறுத்தலாக பார்த்தது. துடெஹ் கட்சியின் ஸ்ராலினிசவாதிகளின் ஆதரவுடன் —அவர்களும் இலக்கு வைக்கப்படும் வரையில்— ஈரானிய "புரட்சிகர" அரசாங்கமானது, தொழிலாள வர்க்கத்தின் உணர்ச்சிகரமான சுய-வெளிப்பாடுகளது அனைத்து வடிவங்களையும் மற்றும் இடதுசாரி விமர்சனங்களையும், அவை "தேசிய நல்லிணக்கத்திற்கு" குழிபறிக்கின்றன மற்றும் ஏகாதிபத்தியத்தைப் பலப்படுத்துகின்றன என்ற அடித்தளத்தில், அதிகரித்த வன்முறையைக் கொண்டு ஒடுக்கியது.

அதேபோல பலமான ஒடுக்குமுறைக்கான ஒரு சாக்குபோக்காகவும், ஒரு பிற்போக்குத்தனமான போரைப் பயன்படுத்திக் கொள்வதற்கான ஓர் இயங்குமுறையாகவும், கொமெனி ஆட்சி, ஷாவைத் தூக்கிவீசிய ஏகாதிபத்திய-எதிர்ப்பு மேலெழுச்சியால் திரண்டிருந்த புரட்சிகர அபிலாஷைகள் மற்றும் சக்தியை எட்டாண்டு காலம் நீண்ட ஈரான்-ஈராக் போரில் பயன்படுத்த இருந்தது, அப்போரில் 1 மில்லியன் என்று மதிப்பிடப்பட்ட ஈரானியர்களும் அரை மில்லியன் வரையிலான ஈராக்கியர்களும் கொல்லப்பட்டனர்.

ஏகாதிபத்தியத்துடன் சமரசமும், சந்தை-சார்பு "சீர்திருத்தமும்"

இஸ்லாமிக் குடியரசைத் தாக்குவதற்கு வாஷிங்டன் ஈரான்-ஈராக் போரை ஒரு சாக்குபோக்காக பயன்படுத்த அச்சுறுத்தி கொண்டிருந்த நிலைமைகளின் கீழ், கொமெனி அவர் மரணத்திற்கு சற்று முன்னதாக, திடீரென போக்கில் மாற்றத்திற்கு உத்தரவிட்டார். இஸ்லாமிக் குடியரசு ஈராக்கிடம் இருந்து கோரி வந்த போர் நஷ்டஈடுகளைக் கைவிட்டதுடன், ஏகாதிபத்தியத்துடன் ஒரு சமரசம் கோருவதை நோக்கி மறுநோக்குநிலை கொண்டது. கொமெனியால் நியமிக்கப்பட்டு அவருக்குப் பின் வந்த தலையாய தலைவர் அயெத்துல்லா காமெனி மற்றும் ஜனாதிபதி ரஃப்சான்ஜனியின் (Rafsanjani) கீழ், ஈரான், ஐரோப்பாவுடன், சாத்திமானால், அமெரிக்க மூலதனத்துடன் நெருக்கமான பொருளாதார உறவுகளுக்குப் புத்துயிரூட்டும் வெளிப்படையான நோக்கத்துடன், தனியார்மயமாக்கல், நெறிமுறைகள் தளர்த்தல் மற்றும் சமூக செலவின வெட்டுக்கள் உட்பட IMF “கட்டமைப்பு சீரமைப்பு" கொள்கைகளைத் திணிக்க விரைவாக நகர்ந்தது.

1989 இல் இருந்து, “பழமைவாதி" மற்றும் "கோட்பாட்டாளரில்" இருந்து "சீர்திருத்தவாதி" வரையில், இஸ்லாமிக் குடியரசின் அரசியல் உயரடுக்கின் பிரதான கன்னைகள் அனைத்தும் ஆதரித்து வந்த ஜனாதிபதிகளின் கீழ், புரட்சி உச்சத்திலிருந்த போது தொழிலாள வர்க்கத்திற்கும், கிராமப்புற மற்றும் நகர்புற ஏழைகளுக்கும் வழங்கப்பட்ட சமூக விட்டுக்கொடுப்புகளை, "சந்தை-சார்பு சீர்திருத்தம்" என்ற பெயரில் ஈரான் அரசாங்கம் அமைப்புமுறையிலிருந்தே கலைத்து விட்டுள்ளது. ரஃப்சான்ஜனியின் கீழ் இருந்த அரசாங்கங்கள், நவதாராளவாதத்திற்கு அர்பணித்திருந்த 2013 இல் இருந்து ஈரானின் ஜனாதிபதியாக இருந்து வரும் ஹாசன் ருஹானி மற்றும் “சீர்திருத்தவாதி" கத்தாமி ஆகியோருக்கு குறைவின்றி வெகுஜனவாதி மஹ்மத் அஹ்மதினஜத் (Ahmadinejad) தலைமையிலான அரசாங்கங்களுக்கும் இது உண்மையென பொருந்தும்.

ஈரான் இன்று கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மை, பாரிய வேலையின்மை மற்றும் நிலையற்ற ஒப்பந்த வேலைகளால் அடையாளம் காணப்படுகின்றது.

இதேபோல, உலக அரங்கில், இஸ்லாமிக் குடியரசின் இந்த மதகுருமார்-முதலாளித்துவ ஆட்சி, கடந்த மூன்று தசாப்தங்களாக ஏகாதிபத்திய சக்திகளுடன் இசைந்துபோவதற்கு முனைந்து வந்துள்ளது. இதில் அமெரிக்க ஏகாதிபத்தியமும் முக்கியமாக உள்ளடங்கும், ஜிம்மி கார்ட்டர் காலத்திலிருந்து ஒவ்வொரு ஜனாதிபதியிடம் இருந்தும் போர் அச்சுறுத்தல்கள் உட்பட கிட்டத்தட்ட இடைவிடாது விரோதத்துடன் தெஹ்ரானின் சிநேகிதபூர்வமான முயற்சிகளை வாஷிங்டன் தொடர்ந்து விரோதத்துடன் நிராகரித்து வந்துள்ளது.

2001 இல், ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க தாக்குதலுக்கும் மற்றும் அந்நாட்டின் கைப்பாவை ஜனாதிபதியாக ஹமீத் கர்சாயியை வாஷிங்டன் நியமிப்பதற்கும் ஈரான் தளவாட பரிவர்த்தனை மற்றும் அரசியல் ஆதரவை வழங்கியது. 2003 இல் அமெரிக்கா ஈராக் மீது படையெடுக்க தயாரான போது, ஈரான் புஷ் நிர்வாகத்துடன் இரகசிய பேச்சுக்களைத் தொடங்கியது. அமெரிக்க துருப்புகள் பாக்தாத்தை ஆக்கிரமித்த உடனேயே, அமெரிக்கா ஆட்சி மாற்றத்திற்கான முன்னெடுப்பை கைவிடுவதாக உறுதியளித்தால், தெஹ்ரான் இஸ்ரேலை அங்கீகரிப்பது உட்பட ஹமாஸ் இற்கான அனைத்து உதவிகளையும் வெட்டுவது மற்றும் ஹெஸ்பொல்லாவை ஆயுதங்களைக் கைவிட செய்ய அழுத்தமளிப்பது உட்பட அனைத்து அமெரிக்க மூலோபாய நலன்களுக்கும் அடிபணிய அது முன்வந்தது.

ஈரான் மீது கடுமையான பொருளாதார தடையாணைகளை விதித்த ஒபாமா, மீண்டும் மீண்டும் அதை தாக்குவதற்கு அச்சுறுத்தினார். பின்னர் 2015-2016 இல் அவர் 1979 புரட்சிக்குப் பிந்தைய முதல் முக்கியமான அமெரிக்க-ஈரானிய இராஜாங்க உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்ள முன்வந்தார், அத்துடன் தெஹ்ரான் அதன் அணுஆயுதத்திற்கு அல்லாத அணுசக்தி திட்டத்தின் பெரும்பகுதியைக் கைவிட்டால் அதற்கு பிரதிபலனாக தெஹ்ரான் மீது அமெரிக்க தடையாணைகளைத் தளர்த்தவும் அவர் உடன்பட்டார்.

அந்நேரத்தில் உலக சோசலிச வலைத் தளம் விவரித்ததைப் போல, ஒபாமாவின் மாற்றத்திற்குப் பின்னால் இரண்டு சூறையாடும் கணக்கீடுகள் இருந்தன: தெஹ்ரான் உடனான முற்றுமுதலான மோதல் அதன் மிகவும் குறிப்பிடத்தக்க விரோதிகளான ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ-மூலோபாய தாக்குதல்களைக் குறுக்காக வெட்டும்; மற்றொன்று, ஈரானை மீண்டும் ஐரோப்பாவுக்குத் திறந்துவிடுவதாக இருக்கும் என்பதோடு, ஈரானை ஓர் அடிபணிந்த அமெரிக்க கூட்டாளியாக மாற்றுவதற்கு "திருப்பும்" வகையில் அல்லது "நகர்த்தும்" வகையில் வாஷிங்டன் உடனான ஒரு பங்காண்மைக்குக் கணிசமான கன்னை ஆர்வத்துடன் இருந்தன என்பது உட்பட, ஈரானின் மதகுருமார்-முதலாளித்துவ உயரடுக்கிற்குள் பிளவுகளை ஊக்குவிக்க அமெரிக்க முதலீடு புதிய சந்தர்ப்பங்களை வழங்கும் என்ற கணக்கீடுகள் இருந்தன.

ஈரான் அணுசக்தி உடன்படிக்கையானது அது அச்சிடப்பட்டிருக்கும் காகிதத்தின் மதிப்புக்கும் கூட பெறுமதியற்றது என்பதையும் WSWS எச்சரித்தது: வாஷிங்டன் அதை முறிப்பது ஆதாயமாக இருக்கும் என்று உணர்கையில் உடனேயே அதை முறித்துவிடும்.

சொல்லப்போனால், போருக்கு வழிவகுக்கும் ஓர் ஆக்ரோஷ நடவடிக்கையாக ஈரானின் பொருளாதாரத்தை முறிக்கும் வெளிப்படையான நோக்கில் ட்ரம்ப் அதனுடனான வர்த்தகம் மீது ஒருதலைபட்சமான உலகளாவிய தடைகளை விதித்து, துல்லியமாக அதை தான் செய்தார்.

இதற்கிடையே, ஈரானிய தொழிலாள வர்க்கமோ பல ஆண்டுகால சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வர அது தீர்மானமாக இருப்பதை அறிவிக்கும் செய்தியை வெளிப்படுத்தியது. ஈரானுக்கு எதிரான வாஷிங்டன் சூறையாடல்களின் முழுச் சுமையை அது சகித்துக் கொண்டிருக்க செய்வதற்கான, அதுவும் தனியாக சகித்துக் கொண்டிருப்பதற்கான, ஆளும் உயரடுக்கின் முடிவில்லா முயற்சிகளையும் ஏற்க முடியாது என்பதை வெளிப்படுத்தியது.

தனியார்மயமாக்கல், குறைந்த மற்றும் வழங்கப்படாத சம்பளங்கள், வேலை வெட்டுக்கள் மற்றும் பொதுச்சேவைகள் தகர்க்கப்படுவதற்கு எதிராக தொழிலாளர் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் அலையை சமீபத்திய ஆண்டுகள் கண்டுள்ளன. மக்கள் அடித்தளத்தின் ஒரு முக்கிய பகுதியைக் கொண்டு நீண்டகாலமாக அந்த ஆட்சிக்கு ஆதரவளித்திருந்த பிராந்திய நகரங்கள் மற்றும் சிறுநகரங்களின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தலைமையில், வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான பாரிய போராட்டங்களுடன் 2018 தொடங்கியது, சில வன்முறையாக இருந்தன. தெஹ்ரானின் விடையிறுப்போ காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையாக இருந்தது மற்றும் வெளிநாட்டால் தூண்டிவிடப்பட்ட ஆட்சி மாற்றத்திற்கான நடவடிக்கையென அந்த போராட்டங்கள் மீது கரும்புள்ளி குத்தும் நோக்கில் அது அவதூறுகளின் ஒரு பேரலையைக் கட்டவிழ்த்து விட்டது.

இருப்பினும் ஆசிரியர்கள், ட்ரக் ஓட்டுனர்கள், சுரங்க தொழிலாளர்கள், எஃகுத்துறை தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவுகள் கடந்த ஆண்டு நெடுகிலும் போலிஸ் வன்முறை மற்றும் கைது நடவடிக்கைகளை முகங்கொடுத்த போதினும் போராட்டங்களை நடத்தி வந்ததுடன், சமூக எதிர்ப்பானது தொடர்ந்து இருந்துள்ளது. அதிகரித்து வரும் போராட்டங்கள் மீதான ஆட்சியின் அச்சத்திற்கு ஒரு அறிகுறியாக, கடந்த மாதம் ஈரானின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு, Haft Tapeh கரும்பு ஆலையில் 4,000 தொழிலாளர்களின் நீண்டகால வேலைநிறுத்தத்தில் சம்பந்தப்பட்ட நடவடிக்கையாளர்கள் வன்முறையை வேண்டுமென்றே தூண்டியதாக சுய-ஒப்புதல் வாக்குமூலங்கள் வழங்குவதை ஒளிபரப்பியது, இதில் வெளிநாட்டு "கம்யூனிஸ்டுகளின்" சார்பாக அவர்கள் செயல்பட்டு வருவதாக கூற அவர்கள் தூண்டிவிடப்பட்டிருந்தார்கள்.

கண்கூடாக, முதலாளித்துவ நிலைமுறிவு நிலைமைகளின் கீழ் மற்றும் அதை தொடர்ந்து ஏகாதிபத்திய ஆக்ரோஷம் அதிகரித்து வரும் நிலைமைகளின் கீழ், ஏகாதிபத்தியத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே சமநிலையைப் பேணுவதற்கும் மற்றும் சூழ்ச்சி செய்வதற்கும் ஈரானிய முதலாளித்துவத்திற்கு இருக்கும் இடம் விரைவாக குறைந்து வருகிறது, இது இஸ்லாமிக் குடியரசின் நெருக்கடியைப் பண்புரீதியில் புதிய மட்டத்திற்கு உயர்த்தி வருகிறது.

அமெரிக்கா மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்கள் வாஷிங்டனின் பொருளாதாரப் போர் மற்றும் ஈரான் மீதான ஓர் இராணுவ தாக்குதலுக்கான தயாரிப்புகளை தீவிரமாக எதிர்க்க வேண்டும். ஆனால் ஈரானுக்கு எதிரான ஏகாதிபத்திய ஆக்ரோஷத்தை எதிர்க்க, ஈரானிய முதலாளித்துவம் மற்றும் அதன் இஸ்லாமிக் குடியரசிடம் மன்றாட வேண்டியதில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், அவற்றின் அரசியல் ஆதரவைப் பெற கூட இம்மியளவுக்கும் வளைந்து கொடுக்க வேண்டியதில்லை. அதற்கு பதிலாக, ஈரானிலும் உலகெங்கிலும் ஏகாதிபத்திய எதிர்ப்புக்கான ஒரே நம்பகமான அடித்தளம் தொழிலாள வர்க்கமாகும்.

ஈரானிய தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் இயக்கத்தை, ட்ரொட்ஸ்கிச நிரந்தரப் புரட்சி மூலோபாயத்தைக் கொண்டு ஆயுதபாணியாக்குவதே முக்கிய பிரச்சினையாகும்: அதாவது, ஏகாதிபத்தியம் மற்றும் போருக்கு எதிராக ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க இயக்கத்துடன் சேர்ந்து, ஈரான், அரபு, குர்திஷ், துருக்கி மற்றும் இஸ்ரேல் என மத்திய கிழக்கின் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட உழைப்பாளிகளை ஐக்கியப்படுத்தவும் மற்றும் தொழிலாளர்களின் அதிகாரத்திற்காகவும் போராடுவதில் தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியில் தயார்படுத்துவதை நோக்கி நோக்குநிலை கொள்ள செய்வதே முக்கிய பிரச்சினையாகும்.

ஈரானிய தொழிலாள வர்க்கம் 1979 புரட்சியிலிருந்து கசப்பான படிப்பினைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏகாதிபத்தியத்தால் வரலாற்றுரீதியில் ஒடுக்கப்பட்ட நாடுகளில், மதத்தை அரசில் இருந்து பிரிப்பதற்கான உண்மையான சுதந்திரத்தில் இருந்து, அனைத்து தேசிய இனங்களிடையேயும் உண்மையான சமத்துவத்தை ஸ்தாபிப்பது மற்றும் வகுப்புவாத பாரபட்சத்திலிருந்து சுதந்திரம் தொடங்கி, சமூக உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் அனைவருக்கும் சமூக சமத்துவம் வரையில்— ஏகாதிபத்தியத்திற்கும் மற்றும் முதலாளித்துவத்தின் அனைத்து கன்னைகளுக்கும் எதிராக, தொழிலாள வர்க்கம் தனக்குப் பின்னால் உழைப்பாளர்களையும் அணிதிரட்டி தன்னை ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக அமைத்துக் கொண்டு, தொழிலாளர்களின் ஒரு சோசலிச குடியரசுக்கான போராட்டத்தை ஏற்படுத்தாமல், பெருந்திரளான மக்களின் கொதித்து கொண்டிருக்கும் சமூக பிரச்சினைகளில் எதையும் தீர்க்க முடியாது.