ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

இலங்கையின் வடக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை அரசாங்கம் உதவியின்றி கைவிட்டுள்ளது

By our reporters
09 February 2019

டிசம்பர் பிற்பகுதியில் இலங்கையின் வடக்கில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மக்களை அரசாங்கம் உதவிகள் எதனையும் வழங்காது கைவிட்டுள்ளது. இந்த மக்கள் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட மூன்று தசாப்த கால இனவாத யுத்தத்தின் அழிவுகரமான பாதிப்பை இன்னமும் எதிர்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 25,281 குடும்பங்களைச் சேர்ந்த 78,528 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மரணமடைந்து இருவர் காயமடைந்துள்ளனர். 388 வீடுகள் முழுமையாகவும் 2225 வீடுகள் பகுதியாகவும் சேதமைடைந்துள்ளன. வரப்போகும் பேரழிவு பற்றி எந்த முன்கூட்டிய எச்சரிக்கையும் விடுக்கப்படாததால் அவர்கள் அதில் சிக்கினர்.

புதிதாகப் புனரமைக்கப்பட்ட இரணமடுக் குளத்தின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்தபோது, அதிகாரிகள் போதுமான அறிவித்தல்களை வழங்காது, அதன் ஏழு கதவுகளையும் திறந்து விட்டனர். இதன் விளைவாக கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கின. நெல்வயல்களும் மற்றும் கால்நடைகளும் அழிவடைந்தன.

வெள்ளத்தால் சேதமடைந்துள்ள பூநகரி வீதி

தர்மபுரம், புளியம்பொக்கணை, பெரியகுளம், முரசுமோட்டை, புன்னைநீராவி, பிரபந்தனாறு, கோரக்கன்கட்டு, ஊரியான், தட்டுவன்கொட்டி, உமையாள்புரம் மற்றும் குமரபுரம் போன்ற பல கிராமங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டன. வெள்ளத்தின் பின்னரான தொற்றுநோய்கள் சில பரவுவதாக குற்றம் சாட்டும் பொதுமக்கள், வெள்ளத்துடன் வந்த முதலைகள் பிரதேசங்களில் உள்ள குட்டைகளில் தங்கியிருந்து கால்நடைகளை தொடர்ச்சியாக வேட்டையாடி வருவதாகவும் தெரிவித்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் இன்னமும் திருத்தப்படவில்லை.

உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர், வடக்கில் நடைபெறும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகள் யாவும் சரியான வகையில் திட்டமிடப்படாமல் இலாபத்தினை நோக்கமாக கொண்ட தனியார் பெரு நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டமையே இவ்வாறான அனர்த்தங்களுக்கு காரணம் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். (பார்க்க: இலங்கையின் யுத்த்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாவட்டங்களில் வெள்ள அழிவுகள்)

வெள்ள அனர்த்தம் சம்பந்தமாக கட்டுரை ஒன்றை எழுதியிருந்த, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறை சிரேஸ்ட்ட விரிவுரையாளர் நா. பிரதீபராஜா, அரசாங்கத்தின் அனர்த்த முகாமைத்துவத்தில் உள்ள அலட்சியத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார். “தொடர்ச்சியான கண்காணிப்பின் பிரகாரம் இரணமடு குளத்தின் நீரேந்துப் பிரதேசத்தில் மழை வீழ்ச்சி (மேலதிகமாக) 50 மில்லி மீட்டரை எட்டியவுடன், உரியதரப்பு அதிகாரிகளுக்கு இது தொடர்பாக அறிவித்திருந்தால், முன்னரே மக்களை அதிகாரிகள் விழிப்பூட்டி, போதுமான பாதுகாப்பிடம் ஒன்றுக்கு நகர்த்தியிருக்க முடியும். மக்களில் பலருக்கு, தங்கள் வீட்டுக்குள் வெள்ளம் வந்ததன் பின்னரே வெள்ளப்பெருக்கை உணரமுடிந்தது,” என அவர் தெரிவித்துள்ளார்.

“கிளிநொச்சி, முல்லைதீவு மாவட்டத்தில் பாதிப்பினை ஏற்படுத்திய வெள்ள பெருக்குக்கு குறுகிய காலத்தில் கிடைத்த கனமழை மட்டுமல்லாது, இயற்கை மற்றும் செயற்கை வடிகாலமைப்புக்களைக் கருத்திற்கொள்ளாத அபிவிருத்திச் செயற்பாடுகளுமே அடிப்படைக் காரணமாகும். வீதிகள் பெருந்தெருக்கள், கட்டிடங்கள், மதில்கள் போன்றன இந்த இயற்கை மற்றும் செயற்கை வடிகால் பாதைகளை மறித்துக் கட்டப்பட்டதுடன் அவற்றின் ஊடாக வெளியேறும் நீரின் அளவு மட்டுப்பட்டமையும் பிரதான காரணமாகும்,” என அவர் மேலும் எழுதியுள்ளார்.

முகாம்களில் தஞ்சமடைந்த குடும்பங்கள் வீடு திரும்பியிருந்தாலும், அவர்களுக்கு அரசாங்க உதவிகள் அல்லது நிவாரணங்கள் கிடைக்கவில்லை என்று கிராம மக்கள் கூறுகின்றார்கள். அனர்த்தத்தின் போதும், அது முடிந்த பின்னரும் பொதுமக்கள் மத்தியில் இருக்கும் சுயாதீன அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களின் உதவிகளே கிடைத்தன. அவையும் அன்றாட பாவனைப் பொருட்கள் மட்டுமே.

அரசாங்கம் அரிசி, சீனி, பருப்பு போன்ற பொருட்கள் மட்டுமே அடங்கிய, ஒரு அங்கத்தவர் கொண்ட குடும்பத்துக்கு 900 ரூபா பெறுமதியான பொதிகளும், 5 பேருக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு 1800 ரூபா பெறுமதியான பொதிகளையுமே வழங்கியுள்ளது.

பேரழிவினைத் தொடர்ந்து, ஆட்சியாளர்கள் மீது பரந்த வெறுப்பில் இருக்கும் மக்களின் மனங்களை வெல்லும் அவநம்பிக்கையான முயற்சியாக, ஆளும் மற்றும் எதிர்தரப்பு அரசியல் தலைவர்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சென்று போலி வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர். இவர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் அடங்குவர்.

போர் குற்றங்களுக்குப் பொறுப்பான இராணுவத்தினருக்கு மனிதாபிமான நற்சான்றை பெறும் முயற்சியில், அவர்களும் பாசாங்குத்தனமான மீட்பு முயற்சியிலும் நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதிலும் தலையீடு செய்திருந்தனர். இத்தகைய விஜயத்தின் பட்டியல் ஒன்றையே உருவாக்க முடியும்.

டிசம்பர் 24, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் மகனுமான நாமல் ராஜபக்ஷ கிளிநொச்சிக்கு தனது குழுவினருடன் சென்று மக்களுக்கு உதவும் காட்சிகளை கமராக்களில் பதிவு செய்திருந்தார்.

டிசம்பர் 27, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இரண்டு மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் விஜயம் செய்து கிளிநொச்சியில் ஒரு கூட்டத்திலும் உரையாற்றினார். அதில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் உடனடியாக 10,000 ரூபா வழங்கப்படும் என்றும், முழு மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காப்புறுதி மூலம் 2.5 மில்லியன் ரூபா வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஜனவரி 3, பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் அவரைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் வடக்கிற்கு சென்றிருந்தனர்.

எவ்வாறெனினும், உலக சோசலிச வலைத் தளத்துடன் உரையாடிய பாதிக்கப்பட்ட கிராம மக்கள், இந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும், பெரும்பான்மையான கிணறுகள் இன்னமும் துப்புரவு செய்யப்படவில்லை என்றும் குளோரின் மட்டுமே விநியோகிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

ஊரியான் கிராமத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான ஸ்ரீ, 55, “வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் நட்ட ஈடோ அல்லது உதவியோ வழங்கவில்லை, உலர் உணவுப் பொருட்களை மட்டுமே தந்துள்ளது”, என்றார். “பத்தாயிரம் ரூபா தருவதாக விக்கிரமசிங்க வாக்குறிதியளித்த போதிலும், எங்கள் கிராமத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே அது கொடுக்கப்பட்டதாக கேள்விப்பட்டோம்,” எனவும் அவர் கூறினார்.

பாடசாலையில் தஞ்சமடைந்திருந்த போது உதவி நிறுவனங்களும் பொதுமக்களுமே பாய் தலயணை போன்றவற்றை தந்து உதவினார்கள் என அவர் மேலும் கூறினார். அவரது இரண்டு ஏக்கர் நெல் வயலும் வாழைத் தோட்டமும் முற்றாக அழிந்துவிட்டன. ஏழு மாடுகள் மற்றும் கோழிகள் காணாமல் போயுள்ளன. நீர் நிரம்பியுள்ள குட்டைகளில் முதலைகள் தங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

தான் உட்பட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களால் தொழிலுக்குச் செல்ல முடியவில்லை என அவர் மேலும் விளக்கினார். “அரசாங்கம் எந்தவிதமான வேலைவாய்பினையும் வழங்கவில்லை. கூடுதலான இளைஞர்கள் வேலையற்றவர்களாக இருக்கின்றார்கள். எனது மகள் தாதியர் டிப்ளோமாவைப் பூர்த்தி செய்துள்ளார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. எனது வருமானத்திலேயே நாங்கள் 6 பேர் சீவிக்கின்றோம். வறுமை மற்றும் கடன் பிரச்சினைகளால் பல தற்கொலைகள் இடம்பெற்றுள்ளன.”

தங்களால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுப்பதாக அரசியல் வாதிகளை ஸ்ரீ சாடினார். “நாங்கள் ஜனாதிபதி சிறிசேனவுக்கு வாக்களித்தோம், எந்த பிரயோசனமும் இல்லை. கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களித்தோம். நாங்கள் வெள்ளப் பேரழிவில் சிக்கியபோது யாரும் வந்து பார்க்கவில்லை.” மக்கள் இவ்வாறான அரசியல் வாதிகளை வெறுக்கின்றனர், என அவர் கூறினார்.

தில்லைநாயகி

தில்லைநாயகியின் கணவர் நெருக்கடியான சூழ்நிலை காரணமாக தற்கொலை செய்துகொண்டார். “எனது குடும்பத்தை கொண்டு நடத்த நான் பெரும் கஸ்டப்பட்டேன். இரண்டு மகன்மார் இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்டார்கள். எனது மகளின் கணவரும் அவளை கைவிட்டுச் சென்றுவிட்டார். மகளையும் அவளது பிள்ளையையும் நானே பராமரிக்கின்றேன்,” என அவர் கூறினார்.

வெள்ளத்தினால் அவரது நெல் வயல்கள் அழிந்துவிட்டன. அவரது 58 மாடுகளும் ஆடுகளும் அடிபட்டு போய்விட்டன அல்லது வெள்ளத்துடன் வந்த முதலைகள் தின்றுவிட்டன. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவருக்கு அரசாங்கம் வீடு கட்டுவதற்காக, 850,000 ரூபா தந்தது. அது போதாததால் தனியார் நிறுவனங்களிடம் அதிக வட்டிக்கு அவர் கடன்பட்டுள்ளார். அவரிடம் மாடுகள் இருந்ததைக் காரணம் காட்டி அதிகாரிகள் சமுர்த்தி திட்டத்தில் இருந்து அவரை நீக்கிவிட்டார்கள். “இப்போதும் மாடும் இல்லை சமுர்த்தி கொடுப்பனவும் இல்லை.”

திருமதி முருகையா

தாங்கள் குடிசையில் வாழ்வதாக பன்னங்கண்டிக் கிராமத்தைச் சேர்ந்த திருமதி முருகையா தெரிவித்தார். யுத்தத்தின் முடிவில் புதுக்குடியிருப்பில் இருந்து அகதிகளாக வவுனியாவில் உள்ள மெனிக்பாமுக்கு இரண்டு வருடங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தனர். “அங்கிருந்து இங்கு வந்து குடியேறியபோது, அரசாங்கம் எங்களுக்கு தகரப் பந்தலையே தந்தது. அதற்கு நாங்கள் கழிமண்ணினால் சுவர் அமைத்து வாழ்ந்தோம். வெள்ளம் வந்து எமது சுவரை அடித்துச் சென்றுவிட்டது. கழுத்து வரையான தண்ணீர் ஊடாகவே நாங்கள் வெளியேறினோம். எங்களுடைய சாமான்கள், குறிப்பாக சமையல் பாத்திரங்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன,” என அவர் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: “இந்தக் காணிக்கு உறுதி இல்லாத படியினால் அரசாங்கம் எங்களுக்கு வீட்டுத் திட்டம் கூட தர மறுக்கின்றது. குடியிருப்புக்கு நல்ல நிலத்தினை வழங்குமாறு கேட்டால், தூரப் பிரதேசத்தில் உள்ள காட்டினைக் காட்டுகின்றார்கள். தொழில்கள் இல்லாமல் எப்படி நாங்கள் அங்கு வாழமுடியும். சுமார் 15 குடும்பங்கள் இவ்வாறான நிலையில் இங்கு வாழ்கின்றோம். விவசாயக் கூலித் தொழிலாளிகளான எமக்கு தினமும் வேலை கிடைக்காது. வேலை இல்லாத நாட்களில் அரைவயிற்றுச் சாப்பாட்டுடன் தான் நாங்கள் வாழ்கின்றோம்.“

யுத்தகாலத்தின்போது இடம்பெயர்ந்த இந்த வறுமைப்பட்ட மக்கள் கடந்த 45 வருடங்களாக இங்கு வாழ்ந்து வருகின்றார்கள். அரசியல்வாதிகள் உறுதிமொழிகள் வழக்குகின்றபோதிலும் கூட நாங்கள் பெற்றுக் கொண்டது எதுவுமில்லை. என அவர் கூறுகின்றார். விக்ரமசிங்கவினால் அறிவிக்கப்பட்ட 10,000 ரூபா நட்ட ஈடு அவர்களுக்கு கிடைத்திருக்கவில்லை.