ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Wave of walkouts in Matamoros, Mexico builds toward general strike

மெக்சிக்கோ, மத்தாமோரொஸின் வேலைநிறுத்த அலை ஒரு பொது வேலைநிறுத்தமாக கட்டமைந்து வருகிறது

By Alex González 
7 February 2019

மெக்சிக்கோ, மத்தாமோரொஸில், 45 “மக்கில்லாடோரா” ஆலைகளில் தொடங்கியதான 70,000 தொழிலாளர்களின் ஆரம்பகட்ட வேலைநிறுத்த அலையின் துணிவும், அது கண்டிருக்கும் வெற்றியும், மேலும் புதியதும் பரந்த தொழிலாளர் பிரிவுகளும் இவ்வேலைநிறுத்தத்தில் இணைய ஊக்கமளித்துள்ளது.

அரசாங்க புள்ளிவிபரப் படி, கடந்த ஒரு வாரமாக 15,000 க்கும் அதிகமான தொழிலாளர்கள், அதிலும் முதலில் வேலைநிறுத்தம் தொடங்கப்பட்ட 45 ஆலைகளில் பெரும்பாலான தொழிலாளர்கள் அவர்களது கோரிக்கைகளை தற்போது வென்றுள்ள போதிலும், நான்கு தொழிற்சங்கங்கள் மற்றும் அவர்களது நிறுவனங்களுக்கு எதிரான ஒரு கிளர்ச்சியில் அவர்கள் திடீர் வேலைநிறுத்தங்களை தொடங்கியுள்ளனர். இந்த வெளிநடப்புக்கள், வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்தி, இலத்திரனியல், குப்பை சேகரிப்பு, பல்பொருள் அங்காடி, ஜவுளி, உணவு பதப்படுத்துதல் மற்றும் பிற தொழில்களைச் சார்ந்த அனைத்து தொழிலாளர்களையும் சூழ்ந்து கொண்டுள்ளது. இப்படியாக, இந்த இயக்கம் ஒரு பொது வேலைநிறுத்தமாக வளர்ச்சியடைந்து வருகிறது.


ஒரு பதாகை குறிப்பிடுகிறது: “20 சதவிகித ஊதிய உயர்வுக்கு பிப்ரவரி 15 அன்று பிரதிபலிக்கப்பட்டது, மேலும், 1,200 பெசோக்கள் (62 டாலர்) இலாப பங்கீடும் வேண்டும்”  

 

தொழிலாளர்கள் மற்றும் மக்கில்லாடோரா தொழில்துறை தொழிலாளர்கள் சங்கம் (Unions of Laborers and Industrial Workers of the Maquiladora Industry – SJOIIM), தொழிற்சங்கங்கள் மற்றும் நிறுவனங்களை எதிர்த்து கிளர்ச்சி செய்த 41 நிறுவனங்களைச் சேர்ந்த 45 ஆலைகளின் தொழிலாளர்களை ஒழுங்கமைத்த பின்னர், இந்த புதுப்பிக்கப்பட்ட வேலைநிறுத்த அலை செயலாற்றத் தொடங்கி, 20 சதவிகித ஊதிய உயர்வையும், 32,000 பெசோக்கள் (1,700 அமெரிக்க டாலர்) கொண்ட மேலதிக கொடுப்பனவு, அல்லது அவர்களது “20 மற்றும் 32” என்று தொழிலாளர்கள் அழைக்கும் தொகையையும் வென்றெடுத்துள்ளனர். இந்த எச்சரிக்கை தாக்குதலை பின்பற்றி, மற்றுமொரு 32 நிறுவனங்களின் தொழிலாளர்களும் வழக்கு தொடுத்து, அவர்களது சொந்த திடீர் வேலைநிறுத்தங்களைத் தொடங்கியுள்ளனர்.

 

குறிப்பாக, ஜனவரி 12 இல், முதல் வேலைநிறுத்த அலையின் ஆரம்பகட்ட உந்துதலாக இருந்த, மக்கில்லாடோரா மற்றும் வாகன ஒருங்கிணைப்பு ஆலைகளின் தொழிலாளர்களின் தொழில்துறை தொழிற்சங்கம் (Industrial Union of Workers at Maquiladora and Assembly Plants (SITPME), மற்றும், மக்கில்லாடோரா மற்றும் வாகன ஒருங்கிணைப்பு தொழில்துறை தொழிலாளர்களின் தொழில்துறை தொழிற்சங்கம் (Industrial Union of Workers at Maquiladora and Assembly Industry (STIME) ஆகியவற்றின் தொழிலாளர்கள் அவர்களது ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பதோடு இணைந்ததான வருடாந்திர மேலதிக கொடுப்பனவை கூட பெறாத நிலையில் தான், இந்த வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன. மாறாக, ஒரு மணி நேரத்திற்கு ஒரு டாலருக்குக் குறைவாக ஊதியம் வழங்கி நாளொன்றுக்கு 12 மணி நேரங்களுக்கும், வாரத்திற்கு 6 நாட்களுக்கும் என அவர்களது உழைப்பை சுரண்டி வரும் பெருநிறுவனங்களில் இருந்து இன்னும் பெறுவதற்கான தகுதியை அவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்ற ஒரு நனவான புரிதலோடு தான் தற்போது தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.

இந்த வேலைநிறுத்தத்தின் விஸ்தீரணமானது, தொழிலாளர்களது தொழில்துறை அல்லது ஏனைய இரண்டாம் நிலை பிரச்சினைகளை மட்டும் பொருட்படுத்தாமல், அனைத்து பிரிவுகளின் தொழிலாளர்களது  பொதுவான நலன்களுக்காகப் போராடுகிறது. தொழிலாள வர்க்கத்தின் மீதான தொழிற்சங்கங்களின் பல தசாப்த கால ஒடுக்குமுறைக்கு பின்னர் பூகோள அளவிலான வர்க்கப் போராட்ட எழுச்சியின் ஒரு பாகமாக இது இருப்பதுடன், ஆலை மூடல்கள், பணிநீக்கங்கள் மற்றும் பிற சலுகை வெட்டுக்கள் போன்றவற்றிற்கு எதிரான ஒரு போராட்டத்தில் அமெரிக்க, கனேடிய, இலத்தீன் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வாகனத் தொழிலாளர்களும் ஈடுபடும் வகையில் பெரிதும் உருவெடுத்துள்ளது. Tridonex, Adient, FisherDynamics மற்றும் Tricon போன்ற வாகன உதிரிப் பாக உற்பத்தியாளர்களும் உட்பட, இன்னும் சில ஆலைகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

SJOIIM இல் உள்ள அவர்களது சக தொழிலாளர்களைப் போலவே, தொழிற்சங்கங்களுக்கு எதிராக சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட்ட திங்கள் கிழமை பெரும் கூட்டத்தைத் தொடர்ந்து தொழிலாளர்கள் ஒரு திடீர் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். SITPME வெறுக்கப்படும் ஜேசுஸ் மென்டோசா (Jesus Mendoza) மூலம் வழிநடத்தப்படுகிறது, புதனன்று இவர் வேலைநிறுத்தக்காரர்களிடம், இங்கே தொழிலாளர்கள் தமது ஊதியத்தில் இருந்து வெறும் மூன்று சதவிகிதத்தை மட்டுமே தொழிற்சங்கங்களுக்கு கொடுப்பதால் அவர்கள் “அதிர்ஷ்டசாலிகள்” என்று வெட்கமின்றிக் கூறினார். நிறுவனங்கள் உடனான தொழிற்சங்கங்களின் கூட்டை அங்கீகரித்து, வேலைநிறுத்தத்தின் முக்கிய கோரிக்கையாக தொழிற்சங்க கட்டணத்தை நீக்குவது குறித்து பல தொழிலாளர்கள் குரலெழுப்பினர்.       


வேலைநிறுத்தம் செய்யும் மத்தாமோரொஸ் கோகோ கோலா தொழிலாளர்கள்

பல்வேறு தொழில்துறை வேலைநிறுத்தங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து விரிவடைந்து வருகின்றன. கடந்த மூன்று நாட்களாக, நாட்டின் இரண்டாவது மற்றும் நான்காவது பெரும் மளிகை சங்கிலித் தொடர்களான Soriana மற்றும் Chedraui போன்ற பல்பொருள் அங்காடிகளில் 500 தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்யத் தொடங்கியுள்ளனர். அத்துடன், வரவிருக்கும் நாட்களில் Walmart தொழிலாளர்களும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ளப் போவதாக வதந்திகள் நிலவுகின்றன.

இதற்கிடையில், கோகோ கோலா, வகிதா பால் (Vakita milk) மற்றும் ப்ளான்குய்ட்டா (Blanquita) நீர் சுத்திகரிப்பு ஆலைகளிலும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்யத் தொடங்கி ஐந்து நாட்களை எட்டியுள்ளனர். இலத்தீன் அமெரிக்காவில் கோகோ கோலா நிறுவனத்தின் இரண்டாவது மிகப்பெரிய போத்தல் தயாரிப்பாளராகத் திகழும், மத்தாமோரொஸ் கோகோ கோலா ஆலையில் கிட்டத்தட்ட 500 ஓட்டுநர்கள், ஊதியமின்றி கூடுதல் நேரம் பணியாற்ற அவர்கள் நிர்பந்திக்கப்படுவது மற்றும் போக்குவரத்தின் போது உடைந்துபோகும் போத்தல்களுக்கு அவர்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்படுவது போன்ற உண்மை நிலைமைக்கு அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். “நாங்கள் இழப்பதை முடித்துக் கொண்டுள்ளோம். இங்கே இனியும் பணம் சம்பாதிக்க முடியாது,” என்று தொழிலாளர்கள் கூறினர். Vakita milk ஆலையில், இந்த வேலைநிறுத்தம் காரணமாக, நாளொன்றுக்கு சுமார் 200,000 லிட்டருக்கான பால் பொருட்களை விநியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது.

இந்த வேலைநிறுத்தம், பொதுத்துறை ஊழியர்களிடத்திலும் கூட பரவியுள்ளது. புதனன்று, மத்தாமோரொஸ் குப்பை சேகரிப்புத் தொழிலாளர்களும் அவர்களது சொந்த ஊதிய உயர்வு மற்றும் மேலதிக கொடுப்பனவுக்கான கோரிக்கையை முன்வைத்து வேலைநிறுத்தத்தில் இறங்கினர். சுமார் 70 தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்த நிலையில், மேயர் எடுத்த அவசரகால நடவடிக்கைகளின் மூலமாக, நாள் முழுவதிலுமாக 450 டன் குப்பை சேகரிக்கப்பட்டது.

அதே நேரத்தில், வேலைநிறுத்தத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பணிநீக்கம் செய்யப்பட்ட 600 தொழிலாளர்களை, அதில் பலரும் ஆலைக் குழுக்களின் தலைவர்களாக இருந்த நிலையில், அவர்களை பாதுகாக்க மீண்டும் வேலைநிறுத்தத்திற்குத் திரும்ப முதலில் வேலைநிறுத்தம் செய்த 45 ஆலைகளின் தொழிலாளர்களுக்கு அதிகரித்தளவில் அழைப்புகள் விடுக்கப்பட்டு வருகின்றன.


மத்தாமோரொஸ் குப்பை சேகரிப்பாளர்களின் வேலைநிறுத்தம்

முதலாளித்துவத்தின் ஒட்டுமொத்த பொருளாதார மற்றும் அரசியல் அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாளர்கள் தங்களின் வெற்றிகளை விரிவுபடுத்துவதும் பாதுகாப்பதும் ஆகும். வேலைநிறுத்தங்களின் விஸ்தீரணத்தால் ஆளும் உயரடுக்கு பீதியடைந்து இருப்பதுடன், சகித்துக்கொள்ள முடியாத மட்டங்களிலான சமத்துவமின்மை, சமூக சேவைகளுக்கு எதிரான தாக்குதல்கள், விரிவடையும் இராணுவமயமாக்கம் போன்றவற்றை எதிர்த்துப் போராட வர்க்கப் போராட்டத்தின் சர்வதேசளவிலான மறுசீரமைப்பை அவர்கள் முன்வைப்பதையிட்டும் எச்சரிக்கையடைந்துள்ளனர்.

Tamaulipas மாநில அரசாங்கத்தால் வெளியிட்ட ஒரு புதிய காணொளி, ஏனைய நகரங்களின் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டாமென முன்மொழிகின்றது. மத்தாமோரொஸில் இருந்து வெறும் 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மற்றொரு நகரத்தைப் பற்றி குறிப்பிட்டு, அந்த காணொளி இவ்வாறு தெரிவிக்கிறது: “Reynosa வேலை செய்யவே விரும்புகிறது, Reynosa வேலைநிறுத்தங்களை விரும்பவில்லை, மேலும், Reynosa அமைதியை விரும்புகிறது.”

அரசாங்கமும், நிறுவனங்களும் மத்தாமோரொஸில் இருந்து தொழிலாளர்களை வெளியேற்றுவதற்கும், மேலும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலையில்லாமல் கைவிடுவதற்கும் அச்சுறுத்துகின்றன. தொழில்துறை அரசு செயலர், Chavira Martinez, செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்: “நிறுவனங்கள் சராசரியாக ஆறு மாதங்களை மட்டுமே கணக்கில் கொண்டு வெட்டுக்களை முன்கணிப்பு செய்கின்ற நிலையில், எதிர்பார்க்கப்பட்ட [வேலை வெட்டுக்கள்] 5,000 க்கும் கூடுதலாக இருக்கும் என்பது 20,000 ஆகவும் இருக்கலாம்.”


Shumex இலத்திரனியல் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்

மத்தாமோரொஸில் காணப்படும் அபிவிருத்திகளின் புறநிலை தர்க்கம் என்பது, சமூக சமத்துவத்திற்கான ஒரு பொதுவான போராட்டத்தில் முன்னெப்போதையும் விட மக்களில் பரந்த பிரிவினர்களை ஈர்க்கும் ஒரு பொது வேலைநிறுத்தமாக தற்போது உருவெடுத்துள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி (Socialist Equality Party) அதன் ஐந்தாவது காங்கிரஸ் தீர்மானத்தில் குறிப்பிட்டது போல:  

“அமெரிக்காவானது ஒரு சமூக வெடிமருந்து பீப்பா ஆகும். அமெரிக்காவில் முன் கண்டிராத அளவிற்கு சமூக போராட்டங்கள் வெடிப்பது தவிர்க்க முடியாதது ஆகும். தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவினர் மத்தியிலான சமூக நலன்கள் பற்றிய பொதுத்தன்மை, வேறுபட்ட தொழிற்பிரிவுகள் இடையிலான வேறுபாடுகள் அழிந்து போகின்றமை, தொழிலாள வர்க்கத்தின் இன, இனம்சார்ந்த ஒருங்கிணைப்பு, இணைய அடிப்படையிலான சமூக ஊடகத்தின் தாக்கம் ஆகிய பல சமூக காரணிகள், வெகுஜன எதிர்ப்புப் போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதை நோக்கி செயற்படுகின்றன. எனவே, உடனடிப் பிரச்சினை எதுவென்றாலும் அல்லது எங்கென்றாலும், தீவிரமான சமூக எதிர்ப்புக்கள் வெடித்து, வேகமாக விரிவடைந்து, மில்லியன் கணக்கான தொழிலாளர்களை போராட்டத்தில் செயலூக்கமான பங்களிப்புச் செய்வதற்கு உந்தித் தள்ளும். தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று அனுபவத்தை எடுத்துக்கொண்டாலும் கூட, சமூக போராட்டங்களின் ஒன்றிணைவுகளின் தர்க்கரீதியான விளைவு ஒரு பொது வேலைநிறுத்தம் ஆகும். இது அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவது பற்றிய பிரச்சினையை எழுப்பும்”.

மத்தாமோரொஸில் நிலவுகின்ற ஆலை மூடல்கள் மற்றும் பெரும் பணிநீக்கங்கள் போன்ற அச்சுறுத்தல்களை, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான பலத்தை ஒன்றுதிரட்டுவதன் மூலமாக மட்டுமே தோற்கடிக்க முடியும். எப்போதையும் விட இப்போது அதிகளவாக, தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவுகளையும் அணிதிரட்ட ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்ட தொழிலாளர் பிரதிநிதிகளை பிற நகரங்களுக்கு மத்தாமோரொஸ் தொழிலாளர்கள் அனுப்பி வைத்திருப்பது மிகவும் முக்கியமானது.

முதலாளித்துவ சார்பு மற்றும் தேசியவாத தொழிற்சங்கங்களில் எந்தவொரு நம்பிக்கையையும் வைக்க முடியாது, இது அவர்களின் சொந்த சலுகை பெற்ற பதவிகளைப் பாதுகாப்பதற்காக தொழிலாளர்களை விற்பதில் கூர்ந்த கண்காணிப்பை மேற்கொள்ளும்.

அனைத்திற்கும் மேலாக, வளர்ந்து வரும் வேலைநிறுத்த அலையானது, உற்பத்தியின் பொருளாதாரச் செயல்முறை மூலம் மத்தாமோரொஸ் தொழிலாளர்களுடன் புறநிலை ரீதியாக இணைந்த, அமெரிக்க மற்றும் கனேடிய தொழிலாளர்களும் உட்பட, அமெரிக்கா எங்கிலும் உள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த வேண்டும். மிச்சிக்கன், டெட்ராய்ட்டில் வாகனத் தொழிலாளர்கள் நடத்தும் பிப்ரவரி 9 ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஆதரவளிக்க தொழிலாளர்களை நாங்கள் வலியுறுத்துகிறோம், இது, தொழிற்சங்கங்களில் இருந்து தனிப்பட்டு, தொழிலாள வர்க்கத்தின் சமூக வலிமையைக் கொண்டு, எல்லைகளை கடந்து தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான முன்னோக்குடன் நடத்தப்பட்டு வருகிறது.