ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Washington issues ultimatum to Venezuela over “humanitarian aid” ploy

"மனிதாபிமான உதவி" சூழ்ச்சியில் வெனிசுவேலாவிற்கு வாஷிங்டன் எச்சரிக்கை விடுக்கிறது

By Bill Van Auken 
7 February 2019

புதன்கிழமை, ஜனாதிபதி நிக்கோலா மதுரோவின் வெனிசுவேலா அரசாங்கத்திற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பேயோ (Mike Pompeo) ஒரு இறுதிக்காலக்கெடு ஒன்றை விடுத்தார். அதில் “மனிதாபிமான உதவியை” வழங்குவதற்காக அமெரிக்காவால் ஒழுங்கமைக்கப்பட்ட திட்டத்திற்கு அதன் எல்லைகளை திறக்க வேண்டும் என்று கோரினார். வாஷிங்டனின் நோக்கம், நாட்டின் ஆயுதப் படைகளுக்குள் ஒரு பிளவை ஏற்படுத்துவது அல்லது அமெரிக்கத் தலைமையிலான இராணுவத் தலையீட்டிற்கு அரங்கு அமைத்தல் ஆகும்.

"வெனிசுவேலா மக்களுக்கு அவசியமாக மனிதாபிமான உதவி தேவை” என்று பொம்பேயோ டுவீட் செய்தார். "அமெரிக்காவும் மற்ற நாடுகளும் உதவ முயற்சிக்கின்றன. ஆனால் வெனிசுவேலாவின் இராணுவம் மதுரோ உத்தரவின் கீழ், லாரிகள் மற்றும் டாங்கர்களைக் கொண்டு தடுக்கிறது. மதுரோ ஆட்சியானது உதவிகள் பட்டினியிலிருக்கும் மக்களை சென்றடைய அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

வெனிசுவேலாவில் "பட்டினியில் மக்கள்" இருக்கிறார்கள் என்ற திடீர் கவலை, வெனிசுவேலா பொருளாதாரத்தை தகர்த்தெறிய திட்டமிட்டுள்ள, ஆகஸ்ட் 2017 ல் ஒரு நிதி முற்றுகையையும், கடந்த வாரம் ஒரு எண்ணெய் தடைகளையும் சுமத்திய ஒரு அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து வருகிறது. இந்த தடை அரசுக்கு சொந்தமான எரிசக்தி நிறுவனமான PDVSA அனைத்து விற்பனைகளையும் தடுத்து அந்நியச் செலாவணியின் முக்கிய மூலத்தை இழப்பதன் மூலம் உணவு, மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான அதன் திறனை இழக்கச் செய்ய நாட்டை அச்சுறுத்துகிறது.

வாஷிங்டனின் நோக்கம் தெளிவாக வரையறுக்கப்பட்டது. இது வெனிசுவேலா மக்களை பட்டினியில் தள்ளுவதற்கு வழிகோலுகிறது. நாட்டை ஆளமுடியாமல் செய்து ஒரு வலதுசாரி கைப்பாவை அரசாங்கத்தை நிறுவ ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கையை மேற்கொள்கிறது.

இறுதியில், ஜனவரி 23 ம் தேதி ஜுவான் குவைடோவின் சுய-சத்தியப்பிரமாணம் மூலம், "இடைக்கால ஜனாதிபதியாக" ஆதரவளிக்கப்பட்டு, அமெரிக்க அரசாங்கத்தால் ஒரு அரசியல் சதித்திட்டம் தொடங்கப்பட்டது. ட்ரம்ப் நிர்வாகத்தினால் முன்கூட்டியே ஒரு திட்டமிட்ட இந்த நடவடிக்கையை கொண்டு வாஷிங்டன் உடனடியாக குவைடோவை அங்கீகரித்தது. இவர் அதிதீவிர வலதுசாரி, அமெரிக்காவால் நிதியளிக்கப்பட்ட Voluntad Popular (மக்கள் விருப்பம்) கட்சியின் அங்கத்தவராவார். ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு சற்றுமுன்னர் எதிர்க்கட்சியினால் கட்டுப்படுத்தப்படும் தேசிய சட்டமன்றத்தின் தலைவராக திடீரென உயர்த்தப்பட்டார். அதே நேரத்தில் ட்ரம்ப் நிர்வாகம் மதுரோ அரசாங்கத்தை "சட்டவிரோதமானது" என அறிவித்தது.

இலத்தீன் அமெரிக்காவின் வலதுசாரி அரசாங்கங்கள், கனடா மற்றும் முக்கிய ஐரோப்பிய சக்திகளுடன் சேர்ந்து, பூமியிலுள்ள எந்த நாட்டிலும் இல்லாத மிகப் பெரிய வெனிசுவேலாவின் எண்ணெய் இருப்புக்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் ஒரு குற்றவியல் மற்றும் கொள்ளையடிக்கும் திட்டம் என்று பொருத்தமாக கூறப்படுவதை பின்தொடர்கின்றன.

குவைடோவும் வெனிசுவேலாவின் வலதுகளும் சி.ஐ.ஏ (CIA) மற்றும் வெளிவிவகார துறையுடன் நெருக்கமாக ஒத்துழைத்து செயல்பட்டு, வாஷிங்டன் (20 மில்லியன் டாலர்), கனடா (40 மில்லியன் அமெரிக்க டாலர்) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (5 மில்லியன் அமெரிக்க டாலர்) வாக்குறுதியளித்திருக்கும் உதவி பற்றி ஒரு பொது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளன. அவை ஒரு "மனிதாபிமான பாதை" திறக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, கொலம்பிய எல்லையில் உள்ள கூக்குட்டா நகரத்திற்கு வந்துசேரும் விநியோகங்கள், வலதுசாரி எதிர்க்கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் வெனிசுவேலாவிற்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்று கோருகின்றன.

இந்த பிரச்சாரத்தின் பிரதான இலக்கு வெனிசுவேலா இராணுவம் ஆகும், இது மதுரோ அரசாங்கத்தின் ஒரு முக்கிய தூணாக உள்ளது. இது இதுவரை அவரிடமிருந்து உடைத்துக்கொள்ளவில்லை.

குவைடோ தலைமையிலான தேசிய சட்டமன்றத்தின் ட்விட்டர் கணக்கு அதன் முன்னணி செய்தியில் பின்வருமாறு உள்ளது: "இப்பொழுது, தந்தைநாட்டின் சிப்பாய்களே! நீங்கள் உங்கள் தாய்க்கு மனிதாபிமான உதவிகளை மறுக்கப் போகிறீர்களா?"

இதற்கிடையில், புதன் அன்று குவைடோ டுவீட் செய்ததாவது: "எதிர்வரும் மணித்தியாலங்களில், மனிதாபிமான உதவியின் அளவு என்ன என்பதை நாங்கள் வழங்குவோம், தேசிய ஆயுதப்படைகளுக்கு நான் சொல்கிறேன்: இது உங்கள் குடும்பத்தினருக்காகவும் இருப்பதால் இந்த உதவியை உள்ளே விடுங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த பிரச்சாரத்திற்கு வெனிசுவேலா இராணுவத்தின் பிரதிபலிப்பாக, கொலம்பியாவில் உள்ள கூக்குட்டாவை வெனிசுவேலாவில் உள்ள யுரேனாவுடன் இணைக்கும் பிரதான பாலத்தை மூடினர். பாலத்தின் மூன்று பாதைகள் முழுவதும் ஒரு டேங்கர் டிரக் மற்றும் இரண்டு பெரிய கொள்கலன்களை நிறுத்தி பாலத்தை மூடினர்.

கொலம்பியா-வெனிசுவேலா எல்லைக்கு கொண்டுவரப்படும் உணவு மற்றும் மருந்து வண்டிகளினால் வெனிசுவேலாவில் நிலவும் ஆழமான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை தீர்க்கும் என்பது முட்டாள்த்தனமானது. இந்த உதவி வருமானால், இது ஒரு இராணுவம் உள்ளே நுழைய சிறந்த ஏமாற்று குதிரையாகும் (Trojan Horse) ஆகும். இது வெனிசுவேலா மக்களின் துன்பத்தை ஒழிப்பதற்கு அல்ல, மாறாக ஒரு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை அல்லது ஒரு ஆயுத மோதலை தூண்டிவிடுகிறது.

செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் கரிதாஸ் (கத்தோலிக்க தேவாலயம் சார்ந்த உதவி குழு) இரண்டும் தமது நடுநிலை மற்றும் சுயாதீனத்தின் கொள்கைகளை மேற்கோளிட்டு அமெரிக்க "மனிதாபிமான பாதை" சம்பந்தப்பட்ட எந்த நடவடிக்கையிலும் பங்கேற்க மறுத்துவிட்டன.

அமெரிக்கா தனது "மனிதாபிமான நடைபாதையை" திறக்க முன்மொழியும் வெனிசுவேலாவை எல்லையாகக் கொண்ட கொலம்பியா மற்றும் பிரேசில் ஆகிய இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் வாஷிங்டனில் செவ்வாயன்று பொம்பேயோ மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் ஆகியோருடன் ஒரு கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். அதன் பின்னர் ஒரு பத்திரிகை மாநாட்டில், "5000 துருப்புக்கள் கொலம்பியாவில்" என்ற வார்த்தைகளுடன் எழுதப்பட்ட ஒரு அறிவிப்பு குறிப்பை ஜோன் போல்டன் வைத்திருந்தமை வெளியானது.

சந்தேகத்திற்கு இடமின்றி, அமெரிக்காவி்ன் விருப்பம் வெனிசுவேலாவில் இராணுவம் தனது பக்கத்தை மாற்றிக்கொள்ள ஒரு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைத் தூண்டி மதுரோவை தூக்கியெறிந்து, ஒரு அமெரிக்க கைப்பாவை ஆட்சிக்கு பின்னால் அவற்றை செல்ல வைப்பதே ஆகும். இந்த முடிவை அடைய தவறிவிட்டால், ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறியது போல், அமெரிக்க இராணுவ தலையீட்டின் தேர்வு "மேசையில்" நிலைத்திருக்கும்.

அமெரிக்க ஜனாதிபதி செவ்வாயன்று தனது ஜனாதிபதி உரையில், குவைடோவின் "சட்டபூர்வமான அரசாங்கத்தை" அங்கீகரித்ததை, குடியரசுக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும் பாராட்டியுள்ளனர். அக் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் அமெரிக்க ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சிக்கு ஆதரவை கொடுத்தனர்.

இதற்கிடையில், அமெரிக்க பெருநிறுவன ஊடகங்கள், முன்னர் ஈராக், லிபியா மற்றும் பிற இடங்களில் அமெரிக்கப் போர்களுக்கு செய்தது போலவே, வாஷிங்டனின் ஆட்சி மாற்ற நடவடிக்கையின் பின்னணியில் உள்ளன. வெளியுறவுத்துறை, வெள்ளை மாளிகை மற்றும் சி.ஐ.ஏ ஆகியவற்றின் அறிவுரை காரணமாக, வெனிசுவேலாவில் பசி பற்றிய தகவல்கள் ஒளிபரப்பப்பட்டு, அமெரிக்காவின் "உதவிப்பொருட்களுக்கு" எல்லைகளை திறக்காமைக்காக மதுரோவை ஒரு வில்லனாக காண்பிக்கி்ன்றன.

தனியார் சொத்துடமை மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதிய மூலதனத்தின் நலன்களை பாதுகாக்கும் ஒரு முதலாளித்துவ அரசாங்கத்திற்கு தலைமை வகிக்கும் மதுரோ, தன்னுடைய அரசாங்கத்திற்கும் அமெரிக்க ஆதரவுடைய வலதுசாரி எதிர்ப்பிற்கும் நடுவராக செயல்பட பாப்பரசருக்கு அழைப்பு விடுத்துள்ளார். உருகுவே மற்றும் மெக்சிக்கோவால், பொலிவியா, ஈக்வடோர், கோஸ்டா ரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் எட்டு உறுப்பினர்கள் (ஸ்பெயின், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்த்துக்கல், சுவீடன் மற்றும் இங்கிலாந்து) ஆகியோருடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு "தொடர்புக் குழு" தலையீட்டை வரவேற்கிறது. அது இன்றைய தினம் மொன்டிவீடியோவில் (Montevideo) நெருக்கடிக்கு ஒரு சமாதான தீர்வு காண சந்திக்கின்றது.

எவ்வாறிருந்த போதினும், அதன் பகுதியாக, வாஷிங்டனின் உத்தரவின் பேரில் செயல்படும் குவைடோவின் தலைமையிலான வலதுசாரி எதிர்ப்பானது எந்தவொரு "பேச்சுவார்த்தை" அல்லது பேச்சுவார்த்தை மூலமான தீர்வையும் நிராகரித்துவிட்டது; நிபந்தனையற்ற ஆட்சி மாற்றத்தை கோருவதும், அமெரிக்க இராணுவம் அதனை அடைய வேண்டுமென்றும் கணிப்பிடுகின்றது.

உலகின் எண்ணெய் வளம் மிகுந்த நாடு மீது, சீனா மற்றும் ரஷ்யாவின் செல்வாக்கை பின்னடிக்கசெய்து தனது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்திக்கொள்ள முனையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தீர்மானம்தான் இந்த விட்டுக்கொடுப்பற்ற தன்மைக்கான அடிப்படை ஆகும், சீனா மற்றும் ரஷ்யா இரு நாடுகளும் கராக்கஸ் உடன் பரந்த பொருளாதார மற்றும் இராணுவ உறவுகளைக் கொண்டுள்ளன.

வெனிசுவேலா மீது உலகின் பிரதான அணுசக்தி ஆயுத சக்திகளுக்கு இடையே ஒரு பெரும் மோதலுக்கு ஒரு மும்முரமாக மாறும் அச்சுறுத்தல் உண்மையானது மற்றும் வளர்ந்து வருகிறது. புதனன்று ஒரு தலையங்கத்தில் நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகை பொதுவாக மதுரோ அரசாங்கத்தை தூக்கியெறிவதற்கு ஆதரவு தருகிறது வெளியிட்டது; ஆனால் வெனிசுவேலாவிற்கு எதிராக தொடர்ச்சியான வெறித்தனமான போர்நாடும் கொள்கைக்கு எதிராக அமெரிக்க ஆளும் ஸ்தாபகத்தின் பிரிவுகளுக்குள்ளே இருக்கும் பதட்டத்தையும் வெளிப்படுத்தியது.

"ஒரு ஆட்சி மாற்றத்திற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் முற்றுமுழுதான ஆதரவின் காரணமாக, நெருக்கடி, ஒரு ஆபத்தான உலகளாவிய போராட்டமாக மாறிவிட்டது" என டைம்ஸ் எச்சரித்தது. “வெனிசுவேலாவினருக்கு இதுவே கடைசியாக தேவையான ஒன்றாகும்."

கராக்கஸ் மற்றும் மாஸ்கோ மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையிலான உறவுகளை மேற்கோளிட்டு டைம்ஸ் கூறுகிறது: "திரு. குவைடோ மற்றும் திரு. மதுரோவின் ஆதரவாளர்கள் இடையே பேச்சுவார்த்தைகள் மூலம் வெனிசுவேலாவை தூய்மையற்ற கூட்டிலிருந்து விடுவிப்பதே அமெரிக்க மற்றும் மேற்கத்திய நலன்களில் மிகவும் அதிகமானதாகும்."

அத்தகைய பேச்சுவார்த்தைகள் வரவிடாமல் இருக்க வேண்டுமா? ஆட்சி மாற்றத்திற்கான மற்றொரு அமெரிக்க யுத்தத்தின் மீது ஆளும் தட்டுக்களுக்குள் கவலைகள் இருப்பதற்கு ஏராளமான காரணம் உள்ளது. அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு எந்த உறுதியான ஆதாயத்தையும் அடையமுடியாத ஈராக்கிலும் லிபியாவிலுமான முந்தைய இரத்தம்தோய்ந்த இராணுவ சாகசங்களின் இழிவான மற்றும் மோசமான தோல்வியே இதற்கு காரணமாகும். ஆனால் இறுதியில், அமெரிக்க ஆளும் வர்க்கம் ஒன்றாக சேர்ந்து வெனிசுவேலாவில் ஒரு அத்தியாயத்தை தொடங்குகிறது, இது சிலி, ஆர்ஜென்டினா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் வேறு இடங்களில் சி.ஐ.ஏ மற்றும் பென்டகன் ஆகியவற்றால் 1960 கள் மற்றும் 1970 களில் போன்று பரந்த யுத்த அச்சுறுத்தலைக் கொண்ட, ஒரு சர்வாதிகாரத்தை சுமத்த மட்டுமே முடியும்.

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சர்வதேசரீதியாக தொழிலாள வர்க்கம் வாஷிங்டனினதும் ஐரோப்பிய சக்திகளினதும் "மனிதாபிமான" மற்றும் "ஜனநாயக" போலிக்கதைகளை உதாசீனத்துடன் நிராகரித்து ஏகாதிபத்திய தலையீட்டிற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிரான போராட்டத்தில் ஒட்டுமொத்தமாக வெனிசுவேலா மற்றும் இலத்தீன் அமெரிக்க தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்பட வேண்டும்.