ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Pence threatens war in Venezuela at Colombia summit: “There is no turning back”

கொலம்பியா மாநாட்டில் பென்ஸ் வெனிசுவேலா போர் குறித்து மிரட்டுகிறார்: “அங்கே பின்வாங்கல் இருக்காது"

By Eric London
26 February 2019

அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் நேற்று கொலம்பியாவின் பொகாடாவில் லிமா குழு கூட்டத்தில் 14 இலத்தீன் அமெரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் போர்நாடும் உரையொன்றை வழங்கினார். இக்கருத்துக்கள் இவ்வாரயிறுதியில் வெனிசுவேலா எல்லையில் அமெரிக்கா-முடுக்கிவிட்ட ஆத்திரமூட்டல்களுடன் சரியாக பொருந்தி வருகின்றன, அந்நடவடிக்கைகள் பலர் உயிரிழக்க இட்டுச் சென்ற மோதல்களை ஏற்படுத்தி இருந்தது.

பென்ஸ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிய போர்களுக்கு முன்னர் ஜோர்ஜ் டபிள்யு. புஷ் வழங்கிய உரைகளில் இருந்து களவாடிய வார்த்தைகளை, சோசலிசம் மீதான கண்டனங்களுடன் இணைத்து, மறுபிரயோகம் செய்தார்.

“அங்கே பின்வாங்கல் இருக்காது,” என்று கூறிய பென்ஸ், “அனைத்து தெரிவுகளும் மேசையில் உள்ளன,” என்றார்.

“இலத்தீன் அமெரிக்காவில் ஒரு புதிய தினம் வந்து கொண்டிருக்கிறது,” என்று தொடர்ந்து கூறிய அவர், “வெனிசுவேலாவிலும் மேற்கு புவிமண்டலம் எங்கிலும், நமது கண்களுக்கு முன்னால் சோசலிசம் மரணித்து வருகிறது, சுதந்திரமும், செல்வவளமும், ஜனநாயகமும் மீண்டும் பிறக்கின்றன,” என்றார். வெனிசுவேலா இராணுவம் மதுரோவைத் தூக்கியெறியவில்லை என்றால், “உங்களுக்குப் பாதுகாப்பான புகலிடம் கிடைக்காது, எளிதில் வெளியேறவும் முடியாது, வெளியேறுவதற்கு வழியும் இல்லை. நீங்கள் அனைத்தையும் இழப்பீர்கள்,” என்று அச்சுறுத்திய, பென்ஸ் வெனிசுவேலா இராணுவத்திற்கு ஓர் இறுதி எச்சரிக்கை விடுத்தார்.

அமெரிக்கா வெனிசுவேலா அரசாங்க அதிகாரிகள் மீது கூடுதல் தடையாணைகள் விதிக்கும் என்று அறிவித்த பென்ஸ், “உங்கள் நாட்டில் வெனிசுவேலா சொத்துக்கள் மீதான சொத்துரிமையை" அமெரிக்க கைப்பாவை குவான் குவைடா அரசாங்கத்திற்கு "மாற்றுமாறு" இலத்தீன் அமெரிக்காவின் வலதுசாரி அரசாங்கங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்கா அந்த அரைகோள பிரதேசத்தில் எல்லை கடந்த நெடுஞ்சாலை கொள்ளையடிப்பை நடத்தி வருகிறது.

வெனிசுவேலாவுக்கு எதிரான அமெரிக்க போர் அச்சுறுத்தல்களைத் தீவிரப்படுத்துவதற்கு பென்ஸ் அவர் உரையில் பல்வேறு நியாயப்பாடுகளை வழங்கினார். வெனிசுவேலா நெடுங்காலமாக வசித்து வரும் பழங்குடியினத்தவரின் நிலங்களைச் சுரண்டுவதாகவும், எண்ணெய் அகழ்வு மூலமாக சுற்றுச்சூழலைச் சேதப்படுத்துவதாகவும் அதன் மக்களை வறுமைக்குட்படுத்துவதாகவும் பென்ஸ் தெரிவித்தார்.

அச்சுறுத்தல்களின் தீவிரத்தன்மையைத் தவிர்த்து பார்த்தால் இத்தகைய வாதங்கள் நகைப்பிற்கிடமாக இருக்கும். இத்தகைய பிரிவுகள் ஒவ்வொன்றிலும் அமெரிக்கா தான் உலகின் மிகவும் மோசமான குற்றவாளியாக இருக்கிறது.

வெனிசுவேலா அதன் எல்லையில் புலம்பெயர்ந்த "இடம்பெயர்ந்தவர்களுக்கு புகலிடம் தர" மறுக்கிறது என்ற வெனிசுவேலா மீதான பென்ஸின் தாக்குதல் குறிப்பாக அருவருப்பாக உள்ளது.

பென்ஸ் வெனிசுவேலாவுக்குள் நுழைய காத்திருந்த ஒரு புலம்பெயர்வோரான "அழுது கொண்டிருந்த வயதான முதியவர் ஒருவரை ஆரத்தழுவியதாக" வாஷிங்டன் போஸ்ட் எழுதியது. அவர்களின் கண்களில் கண்ணீர் தழும்பி இருந்ததாக எழுதிய போஸ்ட் செய்தியாளர்கள், பென்ஸ் "ஆங்கிலத்தில் அந்த மனிதரிடம், 'நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்' என்று கூறியதாக" எழுதினார்கள்.

ஆயிரக் கணக்கான புலம்பெயர்ந்தவர்கள் தஞ்சம் கோர விண்ணப்பிப்பதற்காக அமெரிக்காவுக்குள் நுழைவதிலிருந்து அவர்களை அமெரிக்கா தடுத்ததும், அவர்கள் அமெரிக்க-மெக்சிகோ எல்லையை ஒட்டிய மெக்சிகன் நகரங்களின் வீதிகளில் தற்போது படுத்துறங்கி கொண்டிருப்பவர்களைக் குறித்து போஸ்ட் செய்தி ஒன்றும் குறிப்பிடவே இல்லை.

இந்த வாரயிறுதியில் திட்டமிடப்பட்ட எதிர்கொள்ளல்களின் அதேநேரத்தில், அமெரிக்க இராணுவம் அதன் போர் திட்டங்களைத் தீவிரப்படுத்தியது. சிஎன்என் அறிவித்தது, ஓர் இராணுவ தலையீட்டுக்குச் சாத்தியமான தயாரிப்புக்காக "அமெரிக்க இராணுவம் இரகசிய உளவுத்தகவல்களைச் சேகரிக்க கடந்த சில நாட்களாக வெனிசுவேலா கடற்கரையை ஒட்டிய சர்வதேச வான்வெளியில் உளவுபார்ப்பு போர்விமானங்களை அதிக எண்ணிக்கையில் பறக்கவிட்டுள்ளது.”

சனிக்கிழமை போர்த்தோ ரிக்கோ கவர்னர் ரிக்கார்டோ ரொசெல்லொ குறிப்பிடுகையில் வெனிசுவேலா இராணுவம் அனுமதியின்றி வெனிசுவேலா கடல் எல்லையில் நுழைந்த ஓர் அமெரிக்க கப்பல் மீது "பகிரங்கமாக துப்பாக்கிச்சூடு" நடத்த எச்சரிக்கை விடுத்ததாக தெரிவித்தார். அந்த கப்பல் வனுவாட்டு இல் பதிவு செய்யப்பட்டிருந்தது என்றபோதும், அது சர்வதேச கடல்வழி போக்குவரத்துச் சட்டத்தை மீறி அமெரிக்க கொடியைப் பறக்க விட்டிருந்தது. அக்கப்பல் 200 டன்கள் "மனிதாபிமான உதவிப்பொருட்களை" கொண்டிருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொலம்பியாவுக்கு ஆயுதங்களை அனுப்புவது உட்பட அமெரிக்க "மனிதாபிமான உதவியை" வெனிசுவேலா அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர். கடந்த புதனன்று கொலம்பிய ஆயுதப்படைகளின் தலைவர் மேஜர் ஜெனரல் Luis Navarro Jiménez புளோரிடாவுக்குப் பயணம் செய்து, அங்கே அமெரிக்க தெற்கு கட்டளையகத்தின் தலைவர்களைச் சந்தித்தார்.

பொகோட்டா காட்சிகளுக்குப் பின்னால் குவைடா "அவசியமானால் அமெரிக்கா படைகளைப் பயன்படுத்தும் என்பதற்கு உத்தரவாதங்கள் கோரினார்" என்று நேற்று வாஷிங்டன் போஸ்ட் எழுதியது. வெனிசுவேலா வலதுசாரி எதிர்க்கட்சி தலைவர் ஜூலியோ ஃபொர்கேஸ் ஞாயிறன்று, எதிர்க்கட்சி "இராஜாங்க அழுத்தத்தைத் தீவிரப்படுத்தவும், மற்றும் நிக்கோலாஸ் மதுரோவின் சர்வாதிகாரத்திற்கு எதிராக படைகளைப் பயன்படுத்தவும் வலியுறுத்தும்" என்று ட்வீட் செய்தார்.

ஜனாதிபதி ட்ரம்ப் நீண்ட நாட்களுக்கு முன்னரே வெனிசுவேலா மீது போர் தொடுக்க அவர் ஆர்வமாக இருப்பதை தனிப்பட்டரீதியில் வெளிப்படுத்தி உள்ளார். முன்னாள் காபந்து FBI இயக்குனர் ஆண்ட்ரூ மெக்காப், சமீபத்தில் பிரசுரிக்கப்பட்ட அவரின் நூலில், “நாம் போருக்குள் செல்ல வேண்டிய நாடு அது தான். மொத்த எண்ணெய்யும் அவர்களிடம் உள்ளது, நமது கொல்லைப்புறத்தில் அவர்கள் சரியான இடத்தில் இருக்கிறார்கள்” என்று கூறி, ட்ரம்ப் மீண்டுமொருமுறை வெனிசுவேலாவை அவர் முன்னிலைக்குக் கொண்டு வந்திருப்பதாக குறிப்பிடுகிறார்.

வாஷிங்டனில் நிலவும் போர்நாடும் மனோபாவம், “Group of 50” எனும் சிந்தனைக் குழாம் நடத்தி வரும் பிரான்சிஸ்கோ டொரா நேற்று எழுதிய வாஷிங்டன் போஸ்டின் ஒரு பொறுப்பற்ற கருத்துரை கட்டுரையில் எடுத்துக்காட்டப்பட்டது. அந்த சிந்தனைக் குழாம் ஏகாதிபத்தியத்தின் சர்வதேச அமைதிக்கான கார்னிஜ் அறக்கட்டளையின் ஆதரவுடன் முன்னாள் உலக வங்கி அதிகாரி ஒருவரால் நிறுவப்பட்டது.

“அமெரிக்க இராணுவ நடவடிக்கையுடன், வெனிசுவேலா கரீபியனின் லிபியாவாக மாறும்,” என்ற அக்கட்டுரையின் தலைப்புக்கு அப்பாற்பட்டு, டொரொ அப்பிராந்தியத்தை போர் விளிம்புக்குத் தள்ளும் விடயமாக ஆக்குகிறார். கடந்த வாரயிறுதி எல்லை மோதல் "வெனிசுவேலா ஆட்சியைக் கலைப்பதற்கான இராணுவ நடவடிக்கையை விளிம்போர அனுமானம் என்பதில் இருந்து தீவிர கொள்கை முடிவு என்ற நிலைக்கு நகர்த்தியது,” என்று டொரொ எழுதுகிறார்.

அவர் தொடர்ந்து எழுதுகிறார், வெனிசுவேலா இராணுவம் "உண்மையிலேயே அமெரிக்க இராணுவ நடவடிக்கை உடனடியாக நிகழுமென கணக்கிடாத வரையில், மதுரோவுக்கு எதிரான கிளர்ச்சி நடக்காமல் போகலாம்... அப்படியானால் வெனிசுவேலா தளபதிகள் விரைவில் மதுரோவைக் கவிழ்க்கவில்லையானால், அவர்கள் உயிர்பிழைக்க முடியாதவாறு அவர்கள் மீது குண்டுவீசப்படும் என்பதை அவர்களுக்கு புரிய வைக்கும் ஒரு மூலோபாயத்தை வடிவமைப்பது தான் இப்போது நல்லதொரு தீர்வாக இருக்கும்—உயிர்பிழைக்க முடியாதவாறு அவர்கள் மீது குண்டுவீசுவது ஒரு பேரழிவாக இருக்கும் என்று உண்மையில் நம்புபவர்களுக்கு இந்த சேதி வழங்கப்பட வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் அமெரிக்கா என்ன செய்ய வேண்டுமென்றால், வெனிசுவேலா தளபதிகளின் உணர்வில் ஓர் அச்சுறுத்தலை அதிகரிக்கும் கூடுதல் நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், உளறிக் கொண்டே இருக்க வேண்டும்,” என்றார்.

“நம் எல்லோருக்கும் கடவுள் உதவட்டும்,” என்று அக்கட்டுரை நிறைவடைகிறது.

இந்த கலகம் உண்டாக்கும் மூலோபாயம் அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்திற்குள் இரண்டு கட்சிகளின் ஆதரவைப் பெற்றுள்ளது. முன்னாள் புஷ் நிர்வாக அதிகாரி ஜோஸ் கார்டினெஸ் Foreign Policy சஞ்சிகையில் பின்வருமாறு எழுதினார்:

“வெனிசுவேலாவை நோக்கிய அமெரிக்க கொள்கை அடுத்தடுத்து வந்த நிர்வாகங்கள் மூலமாக காங்கிரஸில் இரண்டு கட்சிகளது கருத்தொற்றுமையைப் பெற்றிருந்தது. செனட் வெளியுறவுத்துறை குழுவின் இரண்டாம் நிலை முக்கிய உறுப்பினர் செனட்டர் பாப் மெனென்டெஸ் போன்ற ஜனநாயக கட்சியினர், மற்றும் பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகாரங்களுக்கான குழுவின் தலைவர் குடியரசு கட்சியின் எலியட் ஏஞ்சல் ஆகியோர் பல ஆண்டுகளாகவே வெனிசுவேலா ஜனநாயகத்தின் முறிவு குறித்து மும்முரமான விமர்சகர்களாக இருந்துள்ளனர்.”

ஆனால் அமெரிக்கா அதன் இராணுவ தலையீடு குறித்த அச்சுறுத்தல்களுக்குப் பின்னால் அதன் கூட்டாளிகளை வரிசையில் நிறுத்த வல்லமை கொண்டிருக்குமா என்பது நிச்சயமற்று உள்ளது. அதிகரித்த போர் அச்சுறுத்தல்கள், வாஷிங்டனுக்கும் மற்றும் அப்பிராந்தியத்திலும் ஐரோப்பாவிலும் உள்ள அதன் கூட்டாளிகளுக்கும் இடையே பிளவுக்களை ஆழப்படுத்தி உள்ளது.

லிமா குழு பிரகடனம், மதுரோவை உடனடியாக இராஜினாமா செய்யக் கோரிய அதேவேளையில், அது "ஜனநாயகத்திற்கு மாறுவது படைகளைப் பயன்படுத்தி அல்ல, வெனிசுவேலா மக்களாலேயே ... அரசியல் மற்றும் இராஜாங்க வழிவகைகளைக் கொண்டு, அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும்,” என்று குறிப்பிடவில்லை.

பிரேசிலின் துணை ஜனாதிபதி Hamilton Mourão திங்களன்று பொகோட்டாவில் இருந்து கூறுகையில், “ஓர் இராணுவ தெரிவை" பிரேசில் "ஒருபோதும் ஒரு தெரிவாக எடுத்துக் கொள்ளவில்லை", “எந்த தலையீடும் கூடாது என்பதையே நாங்கள் அறிவுறுத்துகிறோம்,” என்றார். ஸ்பெயின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசப் பொர்ரெல் ஞாயிறன்று Efe செய்தி நிறுவனத்திற்கு கூறுகையில், “எந்தவொரு வெளிநாட்டு இராணுவ தலையீட்டையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்பதை நாங்கள் தெளிவாக எச்சரித்துள்ளோம்—மேலும் முழுமையாக கண்டிப்போம்,” என்றார்.

அமெரிக்க ஆட்சி-மாற்ற நடவடிக்கைக்கு அப்பிராந்திய மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்களின் ஆதரவு ஒருபுறம் இருந்தாலும், இதுபோன்ற அறிக்கைகள், ஒட்டுமொத்த அரைகோளத்தையும் முன்பில்லாத மட்டத்திற்கு குழப்பத்திற்குள் வீசும் அபாயங்களை பொறுப்பற்ற கோணத்தில் அமெரிக்க முன்னெடுத்து வருகிறது என்பதன் மீதான கவலைகளைப் பிரதிபலிக்கின்றன.

ட்ரம்ப் நிர்வாகம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஓர் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது, இது செவ்வாயன்று திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்கா அனேகமாக ரஷ்யா மற்றும் சீனாவைக் கண்டிக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தக்கூடும், இவை தென் அமெரிக்காவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சிகளுக்கு ஒரு சர்வதேச போலி-சட்ட மூடிமறைப்பைத் தடுப்பதற்கு, அவற்றின் நிரந்தர அங்கத்துவ அந்தஸ்தைக் கொண்டு வீட்டோ தடுப்பதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடும்.