ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Algerian regime pledges fraudulent political “transition” as strikes spread

வேலைநிறுத்தங்கள் பரவியுள்ள நிலையில் அல்ஜீரிய ஆட்சி மோசடியான அரசியல் "மாற்றத்துக்கு" உறுதியளிக்கிறது

By Will Morrow 
12 March 2013

இரண்டாவது நாளாக, அல்ஜீரியா எங்கிலும் பாரிய வேலைநிறுத்தங்கள் பரவி வரும் நிலையில், நேற்று மாலை, பெயரளவில் ஜனாதிபதியாக ஆட்சியில் இருக்கும் அப்தலசீஸ் புட்டஃபிளிக்காவின் பெயரில் காலவரையின்றி தேர்தல்களை ஒத்திவைத்தும், ஐந்தாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் புட்டஃபிளிக்கா போட்டியிடமாட்டார் என்று உறுதியளித்தும் தற்போதைய ஆட்சி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் கோரிக்கைகளில் எதையுமே கருத்தில் கொள்ளாத இந்த ஆட்சியின் அறிவிப்பு ஒரு மோசடியானது. புட்டஃபிளிக்கா மீண்டும் மறுதேர்தலில் போட்டியிடமாட்டார் என்று அது தெரிவிக்கும் அதேவேளை, தற்போதைய காலத்தை காலவரையின்றி நீட்டிக் கொள்வதன் மூலம் மேலதிக ஆட்சிக் காலத்தை அவர் அடைவதற்கும் திட்டமிடுகிறது. முன்னதாக ஏப்ரல் 18 ம் திகதியில் நடத்த திட்டமிடப்பட்ட தேர்தல்கள் ஆகக் குறைந்தது 2019 க்குப் பின்னர் வரையாவது தள்ளிவைக்கப்படும்.

இந்த ஆட்சி ஒரு "உள்ளடங்கிய மற்றும் சுதந்திர தேசிய மாநாடு" என்று அழைக்கப்படும் ஒன்றை நியமித்து, ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கி புதிய தேர்தல்களுக்கான தேதியை தீர்மானிக்கும். ஒரு தெளிவற்ற "தேசிய ஒற்றுமைக்கான அரசாங்கம் உருவாக்கப்படும்." அதாவது, புட்டஃபிளிக்கா —2013 இல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பின்னர் பொதுவிடங்களில் பேசவியலாத ஒரு அரசியல் வெற்றுடலாக அவர் இருப்பதுடன், இராணுவத்தின் இரகசிய ஆளும் குழுவிலும், பாதுகாப்பு சேவைகளிலும் மற்றும் அவரது குடும்பத்திலும் என பரந்தளவில் பெயரளவிலான தலைவராக இருக்கிறார்— புதிய "அரசியலமைப்பு நிறுவனங்கள் அவர்களது நோக்கங்களை கவனமாக நிறைவேற்றுவதை உறுதிப்படுத்த" மேற்பார்வை செய்ய வேண்டும் என்பதாகும்.


குல்மாவில் இரண்டாவது நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் சோனெல்காஸ் தொழிலாளர்கள்

“பொதுவான சமாதானம், அமைதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்கு வழியைத் திறப்பதற்கு வெளிப்பட்டுள்ள பதட்டங்களை தணிக்கும்” நோக்கில் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவதாக இந்தக் கடிதம் குறிப்பிடுகிறது. "மேலும், புட்டஃபிளிக்கா அமைச்சரவையை மாற்றியமைப்பதும், பிரதமரில் ஒரு மாற்றமும் "என் மீது நீங்கள் வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளுக்கு போதுமான பதிலை வழங்கும்" என்றும் இந்த கடிதம் தெரிவிக்கிறது. அதாவது, விரிவடைந்து வரும் வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் கடுமையான அடக்குமுறையை எதிர்கொள்ளும் என்பதற்கான மறைமுகமான அச்சுறுத்தல்களாக இவை இருக்கின்றன.

கடந்த இரவு அறிவிப்புக்கு முன்னதாகவே ஜெனரல் கேயல் சலாஹ் கலந்துரையாடலில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம், "அல்ஜீரியாவில் வெளிப்படும் முன்கணிக்க முடியாத அச்சுறுத்தல்கள் எதற்கும்" எதிராக “பாதுகாப்பையும் ஸ்திரப்பாட்டையும்” பாதுகாக்க இராணுவம் தயாராக உள்ளது என்று அவர் அச்சுறுத்தினார்.

இந்த அறிவிப்பு உடனடியாக, முன்னாள் காலனியாதிக்க சக்தியான பிரெஞ்சு அரசாங்கத்தால் பாராட்டப்பட்டது, இது, இந்த ஆட்சியுடனும் மற்றும் அதன் பாதுகாப்பு படைகளுடனும் நெருக்கமான உறவுகளை கொண்டுள்ளது. வெளியுறவு அமைச்சர் ஜோன்-ஈவ் லு திரியோன், "ஜனாதிபதி புட்டஃபிளிக்கா ஒரு ஐந்தாவது தேர்தலைச் சந்திக்க மாட்டார் என்றும், அல்ஜீரிய அரசியல் அமைப்புகளை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளை அவர் எடுப்பார் என்றும் தெரிவித்ததான இந்த அறிவிப்புக்கு தலைவணங்குகிறேன்" என்று அவர் கூறினார்.

ஞாயிறன்று ஒரு பொது வேலைநிறுத்தமாக வெடிப்புற்று நேற்று தீவிரமடைந்ததான புட்டஃபிளிக்கா ஆட்சிக்கு எதிரான இயக்கத்திற்குள் தொழிலாள வர்க்கத்தின் நேரடி நுழைவைக் கண்டு அல்ஜீரியாவிலும் சர்வதேச அளவிலும் ஆளும் வர்க்கம் பீதியடைந்துள்ளது. இந்த வேலைநிறுத்தங்கள், சமூக ஊடகங்களினூடாக இணையவழியில் தொழிலாளர்களே செய்திகளை பரப்பி, தொழிற்சங்கங்களை புறக்கணித்து அவர்களே சுயாதீனமாக நடத்தும் பெரும் ஆர்ப்பாட்டங்களாக அபிவிருத்தி கண்டுள்ளன.


திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தில் சோனாட்ராக் (ENGAGEO) தொழிலாளர்களும் இணைகின்றனர்

குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தது என்னவென்றால், அல்ஜீரியாவின் ஏற்றுமதி வருமானத்தில் 90% க்கும் அதிகமானதை வழங்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் கணிசமான அளவு விரிவாக்கம் கண்ட நேற்றைய வேலைநிறுத்தங்களைப் பற்றிக் குறிப்பிடலாம். ஞாயிறன்று, அரசு எரிவாயு நிறுவனமான சோனட்ராக்கின் துணை நிறுவனம் GTP இன் ஊழியர்கள் ஹாஸ்ஸி மௌசாத் எண்ணெய் வயல்களில் வேலைகளை புறக்கணித்து வெளியேறிச் சென்றனர். இந்நிலையில், வேலைநிறுத்தங்கள் பற்றி முகநூலில் பதிவிடப்பட்ட ஒரு காணொளி 100,000 முறைகளுக்கு அதிகமாகப் பா்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று, அதே பிராந்தியத்தில் இன்னொரு சோனட்ராக் துணை நிறுவனமான ENGAGEOவின் தொழிலாளர்களும் அவர்களுடன் இணைந்து கொண்டனர். ENGAGEO தொழிலாளர்கள் வேலைகளை புறக்கணித்து அணிவகுத்து செல்லும் ஒரு புகைப்படத்தில் ஒரு வேலைநிறுத்தக்காரரின் சுலோகம், "முகநூலிற்கு மிகப்பெரும் நன்றி! என தெரிவிக்கிறது." மத்திய அல்ஜீரியாவின் அட்ராரில் உள்ள Oued Ezzine எரிவாயு தொகுதியின் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும் திங்களன்று வேலைநிறுத்தத்தில் இணைந்தனர். குல்மாவில் உள்ள சோனேல்காஸ் தொழிலாளர்கள் தங்கள் அலுவலகங்களுக்கு வெளியே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சில மருத்துவ வசதிகள் தவிர, துறைமுகங்களும், அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் மூடப்பட்டு வேலைநிறுத்தங்கள் தீவிரமடைந்த நிலையில், நேற்று துறைமுக நகரமான பெஜையா முற்றிலும் தொடர்ந்து ஸ்தம்பித்துப் போனது. அத்துடன் Kabylie பிராந்தியத்தில் உள்ள டிஸி-ஓஸு நகரமும் முழுமையாக மூடப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.

ரூயிபாவில் உள்ள தொழிற்சாலை வளாகத்தில், கார் மற்றும் பஸ் தயாரிப்பாளர்களான மெர்சிடெஸ் மற்றும் SNVI போன்ற இரண்டினது ஆலைகளிலும் வாகனத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். அல்ஜீரிய தினசரி L  Expression வெளியிட்ட ஒரு அறிக்கை, ஞாயிறன்று தொழிலாளர்கள் ஆலைக்குள்ளேயே உள்ளிருப்பு செய்ய ஆரம்பித்து, வெளியேறுவதற்கு ஒரு வாக்கெடுப்பையும் நடத்திய நிலையில் அன்றே வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டது என்று தெரிவிக்கிறது. மேலும், இரண்டு ஆலைகளிலும் நடந்த தொழிலாளர்களின் அணிவகுப்பு பொலிசாரின் கண்ணீர்ப்புகை தாக்குதலுக்குள்ளானது என்றும் அது அறிவித்தது.

தலைநகரான அல்ஜியர்ஸின் பெரும்பகுதி தொடர்ந்து மூடப்பட்டிருந்தது. பாபா அலியில் உள்ள தொழிற்சாலை வளாகம் மூடப்பட்டது. சுரங்கவழி இரயில் போக்குவரத்து ஓரளவு மீள ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் நகருக்கு வெளியேயும் உள்ளேயும் செல்லும் இரயில்கள் தொடர்ந்து முடங்கிக் கிடந்தன. நேற்று, தஹராச்சிட் எனும் முக்கிய தொழில்துறை மண்டலத்தில் 15 பெரிய விவசாய உணவு நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு குழு, உணவுச் சந்தைக்கு ஏற்படும் "ஒரு ஆபத்தான தடையை" தவிர்க்கும் பொருட்டு இன்று காலை 5 மணிக்கு தொழிலாளர்களை தங்களது பதவிக்குத் திரும்ப வருமாறு கோரும் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டது.

தொழிற்சங்கங்கள், இந்த இயக்கத்தை நசுக்குவதற்கான கட்டுப்பாட்டை தானே மீளகையிலெடுப்பதற்காக முண்டியடித்துக் கொண்டு நேற்று வெடித்த வேலைநிறுத்தங்களுக்கு பதிலிறுத்தன. ஞாயிறன்று, தொழிலாளர்கள் சுயாதீனமாக ஒரு ஐந்து-நாள் வேலைநிறுத்தத்தை தொடங்கிய பின்னர், ரூயிபாவில், SNVI இன் தொழிலாளர்களை உள்ளடக்கியதான தொழிற்சங்கம் நேற்று, திங்கட்கிழமை தொடங்கும் ஒரு "நான்கு-நாள்" வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது.

ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அடுத்த நாளில் "போராட்டத்தை ஆதரிப்பதாக" அவர்கள் அறிவிக்கும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற ஞாயிறன்று இரவு தாமதமாக டிஸி ஓஸு இல் 20 க்கு அதிகமான தொழிற்சங்கங்கள் ஒன்றுகூடின. வெளிப்படையாக புட்டஃபிளிக்காவை ஆதரிக்கும் பிரதான தேசிய தொழிற்சங்க கூட்டமைப்பான அல்ஜீரிய தொழிலாளர்களின் பொது ஒன்றியத்தின் (UGTA) நீண்ட கால தலைவராக இருந்த Sidi Said இன் மேல் "அவர்களுக்கிருந்த நம்பிக்கையை திரும்பப் பெறுவதாக" அறிவித்தனர்.

ஆளும் வர்க்கம் குறிப்பாக தொழிலாள வர்க்கத்தின் வேலைநிறுத்தங்களின் எழுச்சியைக் கண்டு பீதியடைந்துள்ளது, ஏனென்றால், வாழ்க்கை நிலைமைகளின் மீது ஒரு தசாப்த காலமாக அதிகரித்து வரும் தாக்குதல்களுக்கு பின்னரும், மற்றும் உலகெங்கிலும் தொழிலாளர்களின் போராட்டங்கள் எழுச்சி கண்டு வரும் நிலைமைகளின் கீழும், அத்தகைய நடவடிக்கைகள் மக்ரெப் முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் விரைவாக பரவ முடியும் என்பதை அது அறியும்.

அண்டை நாடான மொரோக்கோவில் "சமூக ஊடக வலைத் தளங்களில்", "எதிர்ப்புக்கான ஆதரவு தெரிகின்றது" என நேற்று பெனின் இணையத் தொலைக்காட்சி தெரிவித்தது. அல்ஜீரியாவின் கிழக்கே, துனிசியாவை, கடந்த மாதம் 700,000 தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தம் உலுக்கியது. மேலும், அல்ஜீரிய ஆர்ப்பாட்டங்களுடன், மொன்ட்ரியால், கனடா மற்றும் பிரான்சில் உள்ள பல நகரங்கள் உட்பட, உலகெங்கிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான அல்ஜீரிய வம்சாவளியினர் செய்யும் ஆர்ப்பாட்டங்களும் இணைந்து கொண்டன.


திங்கட்கிழமையன்று Oued Ezzine எரிவாயு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில்

தொழிலாளர்கள், புட்டஃபிளிக்கா மற்றும் அவரது நெருங்கிய கும்பல்களுக்கு எதிராக மட்டும் போராடவில்லை என்பதை தொழிற்சங்கங்களும் முதலாளித்துவ வர்க்கமும் அறியும். தலைவிரித்தாடும் சமூக சமத்துவமின்மை, வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றிற்கு எதிராகவே அவர்கள் போராடி வருகின்றனர் என்ற வகையில், அவர்களின் வாழ்க்கை உண்மையில் சடத்துவ ரீதியாக மேம்படுத்தப்பட வேண்டும் என்ற உறுதிப்பாட்டினால் தான் இயக்கப்படுகிறது.

அதனால்தான் தொழிற்சங்கங்கள், ஊதிய உயர்வுகள், சமூக சேவைகள், மற்றும் வேலைகள் ஆகியவற்றிற்காக “வர்க்க” மற்றும் “பிரிவினைவாத” கோரிக்கைகளை தொழிலாளர்கள் எழுப்பக் கூடாது என பதட்டமான எச்சரிக்கைகளை வெளியிடுகின்றன. ஜவுளி, தோல் மற்றும் ஆடைத் தொழிலாளர்கள் தேசிய கூட்டமைப்பின் தலைவரான அமார் ஹட்ஜ்வுட், நேற்று El Watan இடம், இவ்வாறு கூறினார்: "சமாளிக்கும், மற்றும் எந்த பிரிவுகளையும் தோற்கடிக்கும் திறனைப் பெற, மற்றவர்களின் மரியாதைக்குரிய வரம்புகளுக்குள்ளேயே கோரிக்கைகள் இருக்க வேண்டும். பொருளாதாரத் துறையில் எட்டப்பட்டதை கண்காணிக்காமல் நம்மால் இருக்க முடியாது."

எது தொழிலாள வர்க்கத்தை போராட்டத்திற்குள் உந்தித்தள்ளுகிறது? 4,500 குடும்பங்களின் ஆய்வின் அடிப்படையில், 2015 இல் அல்ஜீரிய மனித உரிமைகள் குழு வெளியிட்ட ஒரு அறிக்கை, மக்கள் தொகையில் 35 சதவிகிதம் பேர், அல்லது 14 மில்லியன் மக்கள், நாளொன்றுக்கு 1.25 அமெரிக்க டாலருக்கும் குறைவான வறுமை ஊதியத்தில் வாழ்கின்றனர் என்று கண்டறிந்துள்ளது. 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள், 2014 இல் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததில் இருந்து, தங்களது வாழ்க்கைத் தரங்கள் வீழ்ச்சியடைந்துவிட்டது எனவும், அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு குடும்பத்தின் சராசரி வாங்கு சக்தியும் 60 சதவிகித அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது எனவும் அறிக்கை தெரிவிக்கிறது. இளைஞர்களுக்கான வேலையின்மை விகிதம் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காக இருப்பதுடன், மொத்த மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கிற்கு அதிகமானோர் 30 வயதிற்கும் குறைவாக உள்ளனர்.

இதற்கிடையில், ஆட்சியையும் எதிர்க்கட்சிகளையும் கட்டுப்படுத்தும் பில்லியனர்கள் மற்றும் பன்முகமில்லியனர்களின் ஒரு சிறிய வர்க்கத்தின் கைகளில் செல்வம் முழுவதும் குவிந்து கிடக்கின்றது. மேலும், அல்ஜீரிய ஜனத்தொகையில் 10 சதவீதத்தினர் நாட்டின் செல்வத்தில் 80 சதவிகிதத்தை சொந்தமாகக் கொண்டுள்ளனர் என்றும் அறிக்கை கூறுகிறது.

புட்டஃபிளிக்காவுக்கு எதிரான இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் லூயிசா ஹனூனின் தொழிலாளர் கட்சி போன்ற மோசடி "எதிர்ப்பு" கட்சிகள் உட்பட, அரசியல் ஸ்தாபகத்தின் ஒவ்வொரு பிரிவும், தொழிலாள வர்க்கத்தின் சொந்த நலன்களுக்கான எந்தவொரு போராட்டத்தையும் எதிர்க்கிறது. இவர்கள் அனைவரும், சமூகத்தின் மீதான செல்வந்தர்களின் மேலாதிக்கத்தை பராமரிக்கவும் ஆட்சியில் தங்களுக்கென ஒரு உயர்ந்த நிலையை தக்கவைத்துக் கொள்ளவும் அத்தோடு தொழிலாள வர்க்கத்திடமிருந்து எடுக்கப்பட்ட பணத்தில் பங்குபோடவும் விரும்புகின்றனர்.

அல்ஜீரியாவில் அபிவிருத்தி கண்டு வரும் போராட்டம், தொழிலாள வர்க்கத்தை, இலாப நோக்கு அமைப்புமுறையுடனும், மேலும் அதன் அனைத்து அரசியல் பாதுகாவலர்ளுடனும் மோதலுக்கு இட்டுச் செல்வதான ஒரு புறநிலை தர்க்கத்தை கொண்டுள்ளது. இந்த சூழ்நிலைக்கான ஒரே முற்போக்கான தீர்வு என்பது, அல்ஜீரியா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலும், மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறை தூக்கியெறியப்படுவதிலும், மற்றும் அதற்கு பதிலீடாக சோசலிசத்தை ஸ்தாபிப்பதிலும் தங்கியுள்ளது.