ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

As strikes and protests escalate, Algeria’s army chief demands Bouteflika’s ouster

வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் தீவிரமடைகையில், அல்ஜீரிய இராணுவ தலைவர் புட்டஃபிளிக்காவை வெளியேறுமாறு கோருகிறார்

By Bill Van Auken
27 March 2019

அல்ஜீரியாவின் இராணுவ-பின்புல தேசிய சுதந்திர முன்னணி (FLN) ஆட்சியைப் பாதுகாப்பதற்கான ஒரு பெரும்பிரயத்தன முயற்சியில், ஆயுதப்படைகளுக்கான தலைமை தளபதி ஜெனரல் அஹ்மத் கெய்த் சலாஹ் செவ்வாயன்று, அந்நாட்டின் பெயரளவிற்கான ஜனாதிபதி அப்தலசீஸ் புட்டஃபிளிக்காவை "ஆட்சிக்குத் தகுதியற்றவர்" என்று அறிவிக்க வேண்டுமென கோரினார்.

ஒரு மாதத்திற்கும் அதிகமாக நீடித்து வருகின்ற மக்கள் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் அலை தொடர்ந்து தீவிரமடைந்து வருவதன் பின்புலத்தில் வழங்கப்பட்ட ஒரு தொலைக்காட்சி உரையில், ஜெனரல் சலாஹ் பின்வருமாறு அறிவித்தார்: “இந்த சூழலில், இந்த நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கான ஒரு தீர்வை ஏற்க வேண்டியிருப்பது அவசியமாகும், தவிர்க்கமுடியாத நிர்பந்தமாகவும் கூட உள்ளது, அத்தகைய தீர்வு அல்ஜீரிய மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு விடையிறுக்க வேண்டும் என்பதோடு, அது அரசியலமைப்பு வழிவகைகளை மதித்து அரசின் இறையாண்மையைப் பேணுவதாக இருக்க வேண்டும்,” என்றார்.

சலாஹ் அல்ஜீரிய அரசியலமைப்பின் ஷரத்து 102 ஐ பயன்படுத்த அழைப்புவிடுத்தார், இது அந்நாட்டு நாடாளுமன்றத்தின் மேல் சபையான அரசியலமைப்பு கவுன்சில், புட்டஃபிளிக்கா "ஆட்சி நடத்த தகுதியற்றவர்" என்று அறிவிக்கும் அதிகாரத்தை அதற்கு வழங்குகிறது, அது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளுடன் பதவியிலிருந்து அவரை நீக்க களம் அமைக்கும்.

பிரெஞ்சு காலனித்துவத்திடமிருந்து சுதந்திரத்திற்கான போரில் முக்கிய பிரமுகராக இருந்த புட்டஃபிளிக்கா 1999 இல் இருந்து பதவியில் இருந்து வருகிறார். 2013 இல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இந்த 82 வயதான ஜனாதிபதி, ஒரு சக்கர நாற்காலியில் முடங்கியதுடன் அப்போதிருந்து மக்களிடையே பகிரங்கமாக உரையாற்றியதில்லை.

புட்டஃபிளிக்கா ஐந்தாவது முறையாக பதவி வகிக்க உத்தேசித்திருப்பதை அறிவித்ததும், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அல்ஜீரியாவின் வீதிகளுக்கு இறக்கிய இந்த பெருந்திரளான மக்கள் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. பாரிய போராட்டங்களை முகங்கொடுத்த அரசாங்கம், ஜனாதிபதி ஐந்தாவது முறையாக பதவி கோர மாட்டார், ஆனால் ஒரு புதிய அரசியலமைப்பு வகுக்கப்படும் வரையில் தேர்தல்கள் தள்ளி வைக்கப்படும் என்று அறிவித்து, அதாவது அவர் ஆட்சியைக் காலவரையின்றி நீடிப்பது என்று, அதன் தந்திரோபாயங்களை மாற்றியது. அவரது தற்போதைய பதவிக்காலம் ஏப்ரல் 29 இல் முடியவிருக்கிறது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த நகர்வுக்கு, “இப்போது தேர்தல்கள் இல்லாத புட்டஃபிளிக்கா இருக்கிறார், எங்களுக்கு புட்டஃபிளிக்கா இல்லாத தேர்தல்கள் வேண்டும்,” என்று கோஷமிட்டு பதிலளித்தனர்.

79 வயதான ஜெனரல் சலாஹின் உரை ஆட்சி அவமானகரமாக கீழிறங்கி வருவதைக் குறிக்கிறது, அது உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டதுடன் செவ்வாயன்று அல்ஜீயேர்ஸில் கொம்பொலி எழுப்பப்பட்டது. பெருந்திரளான மக்கள் போராட்டங்கள் தொடங்கிய போது, இராணுவத்தின் தலைமை தளபதி ஆர்ப்பாட்டக்காரர்களை "சாகசக்காரர்கள்" என்று கண்டித்தார். அதற்குப் பின்னர் அவர், அந்நாட்டின் ஊழல்பீடித்த ஆளும் உயரடுக்கின் பெரும்பான்மையைப் போலவே, அவர் தொனியை மாற்றிக் கொண்டு, போராட்டக்காரர்களுக்கு அனுதாபம் காட்டுவதைப் போல பாசாங்கு செய்தார், அதேவேளையில் புட்டஃபிளிக்கா பதவியில் இருப்பதைத் தொடர்ந்து ஆதரித்து வந்தார்.

சலாஹின் நடவடிக்கை முற்றிலும் அரசியலமைப்புக்குப் புறம்பானது. ஷரத்து 102 ஐ பயன்படுத்துவது அரசியலமைப்பு கவுன்சிலைச் சார்ந்த விடயம், இராணுவ தலைவரைச் சார்ந்ததில்லை. ஆனால் அவரின் தலையீடு அல்ஜீரியாவில் முதலாளித்துவ அரசு கட்டமைப்பின் யதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது, இதில் இராணுவம் அந்த ஆட்சியின் முதுகெலும்பாக சேவையாற்றுகிறது, மீண்டும் மீண்டும் அரசு பிரச்சினைகளுக்குள் தலையிட்டு மத்தியஸ்தம் செய்து வருகிறது.

அரசியலமைப்பு கவுன்சில் மிகவும் பணிவுடன் தளபதியின் கோரிக்கைக்கு விடையிறுத்தது, புட்டஃபிளிக்கா ஆட்சிக்குத் தகுதியற்றவர் என்ற அடித்தளத்தில் அவரை வெளியேற்றுவதைக் குறித்து பரிசீலிக்க அது ஓர் அசாதாரண அமர்வைக் கூட்டும் என்று அறிவித்தது.

தளபதியின் இந்த தொலைக்காட்சி உரையானது, அல்ஜீயேர்ஸின் மையத்தில் பாரிய போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் மற்றும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் அந்நாட்டை மூழ்கடித்திருந்த நிலையில் வந்தது.

ஒரு பிரதான அல்ஜீரிய துறைமுகமும் LNG (திரவ இயற்கை எரிவாயு) ஏற்றுமதி செய்வதற்கான சுத்திகரிப்பு ஆலையை உள்ளடக்கிய தொழில்துறை பகுதியுமான அர்ஜூவில், தொழிலாளர்கள் சமூக ஊடகங்களில் சுயாதீனமாக அழைப்புவிடுக்கப்பட்டதற்கு விடையிறுப்பாக அந்நாட்டின் தொழிற்சங்கங்களை எதிர்த்து, மூன்று நாள் வேலைநிறுத்தத்திற்காக செவ்வாயன்று காலை வெளிநடப்பு செய்தனர். அந்த ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதையும் மற்றும் அந்நாட்டின் சமூக அமைப்புமுறையில் ஆழ்ந்த மாற்றங்களையும் கோரியதற்குக் கூடுதலாக, வேலைநிறுத்தக்காரர்கள் "தொழிற்சங்கங்களே வெட்கக்கேடு," என்ற ஒரு பதாகையை ஏந்திருந்தனர், கடந்த 20 ஆண்டுகளாக அல்ஜீரிய தொழிலாளர்களின் பொது சங்கத்தின் பொது-செயலாளர் Abdelmadjid Sidi-Saïd ஐ பதவியிலிருந்து விலகுமாறும் கோரினர், இவர் பாரிய போராட்டங்களுக்கு எதிராக புட்டஃபிளிக்காவை ஆதரிக்கிறார்.

தபால் நிலையங்கள் மற்றும் பொதுச் சேவைகளும் நாட்டின் பல பாகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

திங்களன்று, ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுடன் இணைந்து, அல்ஜீரியாவின் வட மத்திய பாகத்தில் உள்ள அல்ஜிரியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான டிசி ஓவ்சௌ இல் அணிவகுத்தனர். அந்த அணிவகுப்பு ஆட்சிக்கு எதிராகவும் மற்றும் அதற்கு UGTA தலைவர் Sidi-Saïd ஆதரவளிப்பதையும் எதிர்த்து இரண்டுக்குமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. “அமைப்புமுறையும் மற்றும் Sidi-Saïd உம் உடனடியாக வெளியேற வேண்டும்,” என்று பதாகைகளில் எழுதப்பட்டிருந்தன. மற்றவர்கள் அந்த தொழிற்சங்க தலைவரை புட்டஃபிளிக்காவின் "கூஜா" என்று கண்டித்தனர்.

UGTA அதிகாரத்துவத்தின் பிரிவுகள் ஆட்சியை அப்படியே பின்பற்றியுள்ள நிலையில், தொழிலாளர்களின் மனக்குறைகளுக்கு தீர்வாக புட்டஃபிளிக்காவைப் போலவே Sidi-Saïd உம் வெளியேற வேண்டுமென முன்வைப்பதற்கான முயற்சியிலிருந்து, தொழிலாள வர்க்கத்தின் வெறுப்பானது வர்க்க போராட்டத்தை நசுக்க சேவையாற்றி அரசாங்கம் மற்றும் முதலாளிமார்களின் பெருநிறுவ பங்காளிகளாக செயல்பட்டு வந்துள்ள உத்தியோகப்பூர்வ தொழிற்சங்கங்களின் ஒட்டுமொத்த அமைப்புமுறைக்கு எதிராக திரும்பி உள்ளது.

இதற்கிடையே அல்ஜீயேர்ஸில், செவ்வாய்கிழமை ஆயிரக் கணக்கான மாணவர்களின் வாராந்தர ஆர்ப்பாட்டமாக மாறியுள்ள ஒன்றைக் கண்டது, அத்துடன் கட்டிடத்துறை நிபுணர்கள், நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் பிற பொதுத்துறை தொழிலாளர்களின் போராட்டங்களையும் கண்டது.

மத்திய தரைக்கடல் துறைமுக நகரமான பெஜையாவில், பல நூறு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர், அந்நகரின் மையத்திற்குள் தங்களின் டிராக்டர்களை ஓட்டி வந்து விவசாயிகளும் மற்றும் அரசுத்துறை வனத்துறையின் பணியாளர்களும் அதில் இணைந்தனர்.

அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பலையால் புட்டஃபிளிக்கா அந்தஸ்தின் மீது எதிர்பாராமல் முகத்தைத் திருப்பிக் கொள்ள ஆட்சி நிர்பந்திக்கப்பட்டுள்ள அதேவேளையில், ஜெனரல் சலாஹின் போலி-அரசியலமைப்பு தீர்வானது வீதிகளில் இறங்கியுள்ள மில்லியன் கணக்கான அல்ஜீரியர்களால் கொண்டு வரப்பட்டுள்ள எந்த அரசியல் கோரிக்கைகளுக்கும், இன்னும் குறைந்தபட்சம் சமூக கோரிக்கைகளுக்கும் கூட, பதிலாக இருக்கப் போவதில்லை.

அரசியலமைப்பு கவுன்சில் இராணுவ தளபதியின் உத்தரவுகளைப் பின்தொடர்கிறது என்றால், அது அவ்வாறு செய்வதைத் தான் விரும்பும் என்கின்ற நிலையில், புட்டஃபிளிக்கா நாடாளுமன்ற அவையின் அவைத்தலைவர் அப்தெல்காதர் பென்சலாஹால் பிரதியீடு செய்யப்படுவார், இவர் குறைந்தபட்சம் 45 நாட்களில் இருந்து 90 நாட்கள் வரையில் காபந்து ஜனாதிபதியாக சேவையாற்றக்கூடும். 76 வயதான பென்சலாஹ், புட்டஃபிளிக்காவின் தேசிய சுதந்திர முன்னணியின் (FLN) ஒரு கூட்டணி பங்காளியான ஜனநாயக தேசிய பேரணி (DNR) இன் ஸ்தாபகர்களில் ஒருவர் என்பதோடு, அந்த நலிந்த ஜனாதிபதியின் ஒரு நெருக்கமான கூட்டாளியும் ஆவார்.

அரசியலமைப்பு விதிமுறைகளின்படி, 90 நாட்களுக்குள் பென்சலாஹின் காபந்து அரசாங்கத்தின் மேற்பார்வையில் தேர்தல் நடத்தப்பட்டாலும், இது ஆளும் கட்சிகளது மற்றும் செல்வந்த வியாபாரிகள், ஊழல் அதிகாரிகள் மற்றும் அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் இராணுவ தளபதிகளின் ஆளும் வர்க்கம் தொடர்ந்து மேலாதிக்கம் செலுத்துவதையும் மற்றும் கட்டுப்பாட்டை பேணுவதையும் உறுதி செய்யும்.

எதிர்கட்சிகளின் பிரிவுகள் சலாஹின் உபாயத்தைக் குறைகூறியுள்ளன. சோசலிஸ்ட் சக்திகளின் முன்னணியின் (FFS) ஒரு வழக்கறிஞரும் முன்னணி பிரமுகருமான Mustapha Bouchachi செவ்வாயன்று கூறுகையில், “அரசாங்கம், அல்லது இந்த அமைப்புமுறையின் அதிகாரத்திற்கான அடையாளம், இடைமருவு காலத்தை நிர்வகிப்பதை அல்ஜீரிய மக்கள் ஏற்க மாட்டார்கள்,” என்றார்.

முதலாளித்து வர்க்க எதிர்கட்சிகளையும், தொழிலாளர் கட்சி மற்றும் பிரெஞ்சு புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சியுடன் அணி சேர்ந்த பப்லோவாத சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி போன்ற போலி-இடது குழுக்கள் அனைத்தையும் உள்ளடக்கிய இத்தகைய கூறுபாடுகள், தாங்களும் இந்த "திருத்தியமைப்பில்" உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை மட்டும் கோருவதுடன், இராணுவ மேலாதிக்க ஆட்சிக்கு ஓர் அரசியல் பொலிவை வழங்க தங்களை அர்ப்பணித்துள்ளன.

ஆனால் பெருந்திரளான தொழிலாளர்களையும் இளைஞர்களையும் எது வீதியில் இறக்கி உள்ளது என்றால், உயர்மட்டத்தில் இதுபோன்ற ஓர் அரசியல் திருத்தியமைப்பு வேண்டுமென்ற விருப்பம் அல்ல, மாறாக சமூக அமைப்பில் ஓர் அடிப்படை மாற்றத்திற்கான கோரிக்கையாகும், இந்த சமூக அமைப்பில் 80 சதவீத செல்வவளம் உயர்மட்ட 10 சதவீதத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது, அதேவேளையில் உத்தியோகப்பூர்வ இளைஞர் வேலைவாய்ப்பின்மை விகிதமோ 30 சதவீதத்தில் நிற்கிறது, சுமார் 14 மில்லியன் பேர் நாளொன்றுக்கு 1.50 டாலருக்கும் குறைவாக வெட்கக்கேடான வறுமையில் வாழ விடப்பட்டுள்ளனர்.

ஆட்சியால் புட்டஃபிளிக்கா எந்தளவுக்கு வெளிப்படையாக கைவிடப்படுகிறாரோ அதேயளவுக்கு அல்ஜீரியாவை உலுக்கி உள்ள பாரிய போராட்டங்களின் தாக்கத்தைப் பொறுத்த வரையில் அது இத்தகைய நிலைமைகளை மாற்றுவதற்கு அல்ஜீரிய தொழிலாள வர்க்க போராட்டத்தின் தொடக்கத்தை மட்டுமே குறிக்கிறது. வயதான அந்த ஜனாதிபதியின் தலைவிதி என்ன ஆனாலும், அதிகாரமோ பல தசாப்தங்களாக அல்ஜீரியாவில் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு அச்சாணியாக சேவையாற்றி உள்ள இராணுவ உயர்மட்ட அதிகாரிகளின் கரங்களில் தான் தங்கியிருக்கும்.

இது வரையில் பாதுகாப்பு படைகள் புட்டஃபிளிக்காவை வெளியேற கோரும் ஆர்ப்பாட்டங்களின் பரந்த பெருந்திரளான தன்மையால் அழுத்தப்பட்டு, பெரும்பாலான பகுதிகளில் கண்ணீர் புகைக்குண்டுகளைக் கொண்டும் போராட்டக்காரர்களைக் கைது செய்து அடுத்த நாள் விடுத்துவிடுவதன் மூலமாகவும் விடையிறுத்துள்ளது. அரசு எந்திரத்திற்குள் ஒரு திருப்பத்தை நோக்கி இராணுவ கட்டளைப்பிரிவுகள் பொறுப்பேற்பது, எகிப்தில் அதன் சமதரப்பினரால் பயன்படுத்தப்பட்ட அணுகுமுறைகளுக்கு ஒத்த இன்னும் அதிக ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்குத் திரும்புவதையும் உள்ளடக்கி இருக்கலாம்.

புட்டஃபிளிக்கா வெளியேறுவது அல்ஜீரியா எங்கிலும் மகிழ்ச்சி ஆரவாரத்தைச் சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றாலும், ஒரு சுயாதீனமான அரசியல் மூலோபாயத்தை அபிவிருத்தி செய்வதும் மற்றும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு புதிய புரட்சிகர தலைமையை உருவாக்குவதுமே முக்கிய கேள்வியாகும்.

புட்டஃபிளிக்கா ஆட்சியின் எச்சசொச்சங்களைத் தூக்கியெறியவும் ஒரு தொழிலாளர்களின் அரசாங்கத்தைக் கொண்டு பிரதியீடு செய்யவும் போராடுவதற்கு, தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாக கொண்ட, மக்கள் அதிகார அங்கங்களை உருவாக்குவது தான் அல்ஜீரிய தொழிலாளர்கள் முகங்கொடுத்து வரும் மத்திய பணியாகும். இந்த புரட்சியின் வெற்றியானது அல்ஜீரியாவைக் கடந்தும் அதை விரிவாக்குவது, அல்ஜீரிய தொழிலாளர்களை மத்தியக் கிழக்கு எங்கிலும் உள்ள மற்றும் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் உள்ள அவர்களின் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்படுத்துவதைச் சார்ந்துள்ளது.