ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The assault on Jeremy Corbyn is a warning that must be heeded

ஜெர்மி கோர்பின் மீதான தாக்குதல் மிகுந்த எச்சரிக்கையுடன்  கவனத்திற்கெடுக்கப்பட வேண்டும்

By Chris Marsden,
6 March 2019

தொழிற் கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பின் மீதான மார்ச் 3 தாக்குதல்களை சோசலிச சமத்துவக் கட்சி கண்டனம் செய்கிறது. சோசலிச சமத்துவக் கட்சிக்கும் கோர்பினுக்கும் இடையில் உள்ள அரசியல் வேறுபாடுகள் நன்கு அறியப்பட்டவையும் இணங்கமுடியாதவையும் ஆகும். ஆனாலும், அதி-வலதுசாரிகளின் எந்த தாக்குதலில் இருந்தும் அவரை பாதுகாப்பதற்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாங்கள் எந்த நிபந்தனையுமின்றி அழைப்பு விடுக்கிறோம்.

மார்ச் 3 ஆம் திகதி நிகழ்வுகள் பிரித்தானியாவின் ஆளும் உயரடுக்கும் மற்றும் அதன் செய்தி ஊடகங்களும் ஆபத்தான வலதுசாரி அரசியல் சூழலை தூண்டிவிட்டிருப்பதை காட்டும் ஒரு தீவிர எச்சரிக்கையாகும். இது அதிகரித்த அரசியல் விழிப்புணர்வு தேவை என்பதையும் மற்றும் தீவிர வலதுசாரிகளுக்கு ஆதரவு கொடுக்கும் அனைத்து அரசியல் சக்திகளுக்கு எதிராக ஒரு உறுதியான அரசியல் போராட்டத்திற்கான தேவையும் சுட்டிக்காட்டுகிறது.

கோர்பின் வடக்கு லண்டனில் உள்ள ஃபின்ஷ்பரி பூங்கா மசூதியுடன் இணைக்கப்பட்டுள்ள முஸ்லீம் நலன்புரி நிலையத்துக்கு வருடாந்த "எனது மசூதிக்கு விஜயம் செய்யுங்கள்" என்ற நாள் நிகழ்வுக்காக சென்றிருந்தார். அங்கு வருகை தந்திருந்த 31 வயதுடைய ஜோன் மேர்பி என்பவர் கோர்பினை பின்னால் இருந்து அணுகி உள்ளங்கையினுள் வைத்திருந்த முட்டையினால் கோர்பினின் தலையில் அடித்தார்.

"நீங்கள் வாக்களித்தால் நீங்கள் எதற்காக வாக்களித்தீர்களோ அதனை பெறுவீர்கள்" என்று மேர்பி கத்தினார். பிரித்தானியாவின் பிரதமர் தெரசா மே இனால் முன்மொழியப்பட்ட பிரெக்ஸிட் ஒப்பந்தம் அல்லது தொழிற் கட்சியின் மாற்றுத் முன்மொழிவு தோல்வியடைந்தால், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கான ஒரு சாத்தியமான இரண்டாவது பொது வாக்கெடுப்பை கோர்பின் ஏற்றுக்கொண்டமைக்கு எதிரான ஒரு தாக்குதல் என பின்னர் அவர் தெளிவுபடுத்தினார்.

ஞாயிறன்று நிகழ்வில் கோர்பினுடன் நிழல் உள்துறை செயலர் டயான் அபோட்டும் இணைந்திருந்தார். அவர் சமூக ஊடகங்களில், "நான் அங்கு இருந்தேன். அவர் ஜெர்மியை மிகவும் கடுமையாக குத்தினார். அதிஷ்டவசமாக அவர் தனது உள்ளங்கையில் ஒரு முட்டையை வைத்திருந்தார். ஆனால் அது ஒரு கத்தியாக கூட இருந்திருக்க முடியும். மிகவும் பயங்கரமானது" என்று எழுதினார்.

அருகில் நின்றவர்கள் கோர்பினுக்கு உதவியதோடு மேர்பியை சுற்றிவளைத்து பொலிஸை அழைத்தார்கள். தொழிற் கட்சித் தலைவருக்கு பாதுகாப்பளிக்க எந்த போலீஸ் அதிகாரிகளும் அங்கு இல்லாதது ஆச்சரியமளிப்பதாக உள்ளது. தகவல்களின்படி, தாக்குதலுக்கு பின்னரே சீருடை அணிந்த அதிகாரிகளோடு ஒரு பொலிஸ் வாகனம் நலன்புரி நிலையத்தின் வாயிலை வந்தடைந்தது. பிரித்தானியாவின் மிக முக்கியமான அரசியல் நபர்களில் ஒருவருக்கு முற்றாக பாதுகாப்பு ஏற்பாடு இல்லாதமைக்கு எந்தவொரு கவனமான விளக்கமும் வழங்கப்படவில்லை.

மேர்பி உடலியல்ரீதியாக தாக்கிய குற்றத்திற்காக ஸ்காட்லாண்ட் யார்ட் லண்டன் மாநகர பொலிஸ் தலைமையகம் மூலம் கைது செய்யப்பட்டார், அத்துடன் மார்ச் 19 ஆம் திகதி ஹைபரி கார்னர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

ஒரு முன்னணி அரசியல்வாதி மீது உடல் ரீதியான தாக்குதல்கள் பொதுவாக விரிவான ஊடக பிரசித்தத்தைப் பெறும். எனினும், இந்த சம்பவத்திற்கான ஊடக பிரதிபலிப்பு தாமதப்படுத்தப்பட்டதாகவும் மற்றும் பிரச்சினைக்கு அவ்வப்போது மற்றும் வேண்டுமென்றே குறைந்த முக்கியத்துவம் கொடுக்கும்வகையிலும் இருந்தது.

அரசியல் ஸ்தாபகம் முழுவதும், இந்த தாக்குதல் கோர்பின் "முட்டையடிக்கப்பட்டார்” என்று விவரிக்கப்பட்டது. அரசாங்க ஒளிபரப்பாளரான பி.பி.சி, ஒரு முட்டை "எறியப்பட்டது" என்று எழுதியது. சன் அதன் தலையங்கத்தில் “Br-Eggs-it.” (Breggsit - ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராஜ்ஜியம் வெளியேறல்) என்று எழுதியது. சம்பவத்தைப் பற்றிய அபோட்டின் விவரங்களை சில பத்திரிகைகள் பதிவு செய்திருந்தாலும் அல்லது நன்கு அறியப்பட்ட தொழிற் கட்சியின் Skwawkbox வலைப்பதிவில் "வெறும் முட்டை அடியல்ல அவரது முகத்தில் குத்த முயற்சி..." என்றது.

குறிப்பிடத்தக்க வகையில், லண்டன் மாநகர பொலிஸ் அறிக்கையும் முறைகேடாக முட்டை "எறியப்பட்டது" என்று குறிப்பிட்டுள்ளது.

மேர்பி உடனான ஒரு நேர்காணலை நடத்தி பெரும்பாலும் பிரதான ஊடகங்களில் மேற்கோள் காட்டப்படும் வலதுசாரி Guido Fawkes வலைப் பதிவில் ஜெர்மி கோர்பின் தலையில் ஒரு முட்டையை உடைத்தமை பற்றிய மேர்பினின் நகைச்சுவைகளை வெளியிட்டது. மேர்பி, கோர்பினை ஹமாஸ் மற்றும் IRA இன் கூட்டாளியாக இகழ்ந்து கூறியதுடன் தனது சொந்த நடவடிக்கைகள் "நமது நாட்டின் பெரும்பான்மையினரின் ஜனநாயக உரிமைகள்" ஐ பாதுகாப்பதாகக் கூறினார்.

பாசிச சிந்தனையுடைய கருத்துப் பதிவாளர்கள் வலைப் பதிவில் தாக்குதலை ஆதரித்து கர்ஜித்தனர். ஒருவர் கோர்பினை “போலி யூதர்” எனவும் மற்றவர் "வெட்கம், இது ஒரு கைக்குண்டாக இருக்கவில்லையே" எனவும் குறிப்பிட்டனர்.

மேர்பி தாக்குதலுக்கு தூண்டுதலளித்தது, பிரெக்ஸிட் உருவாக்கிய தீமையான சூழ்நிலைமைகளும் மற்றும் கோர்பினுக்கும் "இடதிற்கும்" எதிரான தீவிரமான, வெறித்தனமான அரசு பிரச்சாரம் என்பவையாகும். இந்த தாக்குதல்களுக்கு ஒரு வஞ்சகத்தனமான மற்றும் மரணகரமான தர்க்கம் உள்ளது.

ஜூன் 19, 2017 இல், டார்ரன் ஆஸ்போர்ன், ஃபின்ஷ்பரி பூங்கா மசூதி மற்றும் முஸ்லீம் நல மையத்திற்கு வெளியே ஒரு வாடகை வண்டியை ஓட்டி வந்து தெருவில் சென்ற பக்தர்களுடன் மோதி 12 பேரை காயமடையச் செய்ததுடன் மற்றும் பலத்த காயமடைந்த மக்ரம் அலியும் கொல்லப்பட்டார். ஆஸ்போர்ன் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் சிறையிலடைக்கப்பட்டார். கொலை மற்றும் கொலை முயற்சி என்பவற்றுக்காக நீதிபதி "அவர் பயங்கரவாத கொலைகாரன்" என்று குற்றஞ்சாட்டி 43 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

விசாரணையின்போது, ஜூன் 18 ம் தேதி மத்திய லண்டனில் அல் குட்ஸ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கோர்பின் மற்றும் லண்டனின் தொழிற் கட்சி மேயர் சதிக் கான் ஆகியோரைக் கொலை செய்ய திட்டமிட்டிருந்தார் என்று ஆஸ்போர்ன் ஒப்புக் கொண்டார். "இது ஜெர்மி கோர்பின் தொகுதியில் இருந்ததமையால்" ஃபின்ஸ்பரி பூங்காவை அவர் தேர்வு செய்தார். ஆஸ்போர்ன் பிரிட்டன் முதலில் (Britain First) இன் பாசிச பிரச்சாரம் மற்றும் ரொமி ரொபின்சனின் முஸ்லீம்-எதிர்ப்பு வாதங்களால் ஈர்க்கப்பட்டு தீவிரமயப்படுத்தப்பட்டார்.

ஆஸ்போர்ன் இன் தாக்குதலுக்கு ஒரு வருடம் முன்பு, பாசிசவாதியான தோமஸ் மையர் தொழிற் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோ கொக்ஸைக் கொலை செய்தார். அவரை பலமுறை சுட்டுக் காயப்படுத்தி, "பிரிட்டன் முதலில்! இது பிரிட்டனுக்கு, பிரிட்டன் எப்போதுமே முதலில் வரும்" என்று கத்தினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரிட்டனின் தொடர்ச்சியான உறுப்புரிமை மீதான வாக்கெடுப்புக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் கொக்ஸ் கொல்லப்பட்டார். அவர் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருக்கவேண்டும் என்பதற்கான பிரச்சாரத்தின் உயர் ஆதரவாளராக இருந்தார்.

இங்கிலாந்தில் அரசியல் வெறித்தனம் அதிகரித்து வருகிறது. ஆளும் வர்க்கம் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டுச் செல்லலாமா அல்லது நிலைத்திருக்க வேண்டுமா என்பது தொடர்பாக போராடும் குழுக்களாக பிளவுபட்டுள்ளது. ஆனால் முழு ஆளும் வர்க்கத்தின் நோக்குநிலை இன்னும் கூடுதலாக வலதுநோக்கி உள்ளது. பிரெக்ஸிட் மீது தங்கள் வேறுபாடுகளுக்கு அப்பால் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான சிக்கன நடவடிக்கைகளை பெருமளவில் விரிவுபடுத்துவதற்கும், சமூக எதிர்ப்பின் வளர்ந்து வரும் அச்சத்தை இட்டும் ஒரு பொதுவான நோக்கத்தை கொண்டுள்ளனர்.

கோர்பின் அவரது நிலையான அரசியல் பின்வாங்கல்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவை அவர் வென்ற ஒவ்வொரு கொள்கையையும் கைவிடுவதற்கான விருப்பத்தை கொண்டிருப்பதாக இழிவுபடுத்தப்பட்டார். இது முதலாளித்துவத்திற்கு ஒரு இடதுசாரி மாற்றீட்டை நாடும் நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களே அரச வேட்டையின் உண்மையான இலக்கு என்பதை நிரூபிக்கிறது. இடதுசார்பான கட்சி உறுப்பினர்களின் உள்வருகையை ஈர்ப்பதன் மூலம், தொழிற் கட்சியை கிட்டத்தட்ட "அழித்துவிட்டார்" என்று கோர்பின் தேசிய பாதுகாப்புக்கு ஒரு அச்சுறுத்தலாக தொடர்ந்து கண்டிக்கப்படுகிறார்.

இந்த தாக்குதல்கள் எவ்வித மாற்றமுமின்றி உத்தியோகபூர்வ அரசியல் கட்சிகளான பழமைவாத மற்றும் தொழிற் கட்சிகளை அவர்களின் பொதுவான கம்யூனிச-விரோத வார்த்தையாடல்களால் வலதுசாரிகளுடன் இணைக்கின்றது. கடந்த மாதம், ஹைகேட் மயானத்தில் உள்ள கார்ல் மார்க்சின் கல்லறையில் பாசிஸ்டுகளின் தாக்குதல்களைத் தொடர்ந்து கோர்பின் மீதான உடல் தாக்குதலையும் ஊடகங்களும், பொலிசாரும் புறக்கணித்தமை ஒரு தவறுதலான செயல் அல்ல.

ஐரோப்பா முழுவதும் தீவிர வலது மற்றும் பாசிசக் கட்சிகளின் வளர்ச்சியால் தோற்றுவிக்கப்பட்ட தெளிவான மற்றும் தற்போதைய ஆபத்து இருந்தபோதிலும், யூத எதிர்ப்புவாதத்தை தொழிற் கட்சி ஊக்குவிப்பதாக சித்தரித்து ஒரு தொடர்ச்சியான அவதூறுப் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இப் பிரச்சாரம் தொழிற் கட்சியின் பிளேயரிச வலதுசாரிகள், பழமைவாதிகள் மற்றும் செய்தி ஊடகங்கள் ஆகியவற்றின் கூட்டணியால் வழிநடத்தப்படுகின்றது. இந்த இழிந்த பிரச்சாரத்தின் உண்மையான இலக்கை Momentum அமைப்பின் தலைவர் ஜோன் லான்ஸ்மன் "கடுமையான யூத-விரோத கருத்துக்களுக்கு" ஆதாரமாக இருப்பது தொழிற் கட்சியின் "300,000 அல்லது அதற்கு மேற்பட்ட புதிய உறுப்பினர்களாகும்" என்று உளறினார்.

லான்ஸ்மன், தொழிற் கட்சியின் பிரதித் தலைவர் டொம் வாட்சன் மற்றும் சுயமாக நியமிக்கப்பட்ட சுயேட்சை குழு பாராளுமன்ற உறுப்பினர் லூசியானா பேர்கர் ஆகியோரால் ஆக்கிரமிக்கப்பட்ட ஓர்வெல்லிய பிரபஞ்சத்தில், சியோனிசத்தின் எதிரிகளான இடதுசாரிகள், பாசிசத்தை விட யூத மக்களுக்கு பாலஸ்தீன மக்களே அதிக ஆபத்தை முன்வைக்கின்றனர் என குறிப்பிட்டனர். யூத-எதிர்ப்பு மற்றும் முஸ்லீம்-எதிர்ப்பு வன்முறை தொடர்ந்து அதிகரித்த போதிலும், விக்டர் ஓர்பனின் ஃபிடெஸ் கட்சியிலிருந்து சல்வீனியின் லெகா நோர்ட் கட்சி வரையான பாசிச மற்றும் யூத-விரோத கட்சிகளுடன் இஸ்ரேலின் சொந்த இணைப்பு இருந்தபோதிலும் இந்த பொய் முடிவில்லாமல் தொடர்கிறது.

கோர்பின் மீதான தாக்குதலுக்குப் பின்னர் காலையிலேயே இந்த பிரச்சாரம் தடையின்றி நடைபெற்றது. பிளேயரிச பாராளுமன்ற உறுப்பினர் சியோபயின் மெக்டோனாக் பி.பி.சி வானொலி நான்கிற்கு ஜோன் ஹம்பிரிஸுக்கு பேட்டியளித்தார். “யூத-விரோதம் என்பது..., முதலாளித்துவத்திற்கு எதிராகவும், மூலதன நிதியாளர்களாக யூதர்களைப் பார்க்கும் கடுமையான இடதுசாரி அரசியலின் பெரும்பகுதி ஆகும். ஆகவே நீ யூத மக்களுக்கு எதிரானவன்.

"வேறு வார்த்தைகளில் சொல்வதானால், முதலாளித்துவ-எதிர்ப்பு வாதியாக இருக்க ஒருவர் யூத-விரோதியாக இருக்க வேண்டுமா?" என ஹம்பிரிஸ் கேட்டபோது, மெக்டோனாக் "ஆம்." என்று பதிலளித்தார். சோசலிசத்திற்கு எதிரான இந்த அதிர்ச்சியூட்டும் அவதூறு பற்றி பி.பி.சி இன் பேட்டியாளரால் எதுவும் கூறப்படாமல் கடந்து செல்லப்பட்டது.

கட்சியின் இரண்டு வலதுசாரி பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் கோர்பின் மீதான தாக்குதலை கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டனர். மீதமுள்ளோர் அமைதி காத்ததோடு, மிகவும் மும்முரமாக யூத-எதிர்ப்பு போலி குற்றச்சாட்டுக்களை பயன்படுத்தி கட்சியின் "முதலாளித்துவ-எதிர்ப்பு" உறுப்பினர்களை வெளியேற்றுவதற்கு சதித்திட்டம் தீட்டினர்

கோர்பின் கூட ஃபின்ஷ்பரி பூங்கா உடலியல் ரீதியான தாக்குதல் மற்றும் அதற்கு வழிவகுத்த வலதுசாரி தாக்குதல் பற்றி மெளனமாக இருந்தார். சமூக ஊடகங்களில் கோர்பினை தாக்கியவர் வலதுசாரியில் இருந்து வந்திருக்கிறார் என அவரது ஆதரவாளர்கள் பலதடவை குறிப்பிட்டதைக்கூட அவர் சுட்டிக்காட்ட முடியாதிருந்தார். அவர் இவ்வாறு செய்வதை வடிவமைத்தது, பிளேரிச ஆதரவாளர்களால் இடதுசாரி சார்பானவர்களை அரக்கர்களாகவும் மற்றும் சட்டபூர்வமற்றவர்கள் எனக்காட்ட செய்யப்பட்ட முயற்சிகளாகும்.

கோர்பினின் சிலி நாட்டு தைரிய மனிதரான சல்வடோர் அலெண்டேயின் தலைவிதி உட்பட வரலாறு முழுவதும் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது போல், சோசலிசத்திற்காக போராடுவதற்கு அதன் ஆற்றலற்ற தன்மை மட்டுமல்ல தன்னை பாதுகாத்துக் கொள்ளக்கூட தகமையற்ற சீர்திருத்த வாதத்தின் பரிதாபகரமான நிலையாகும். ஜனநாயக உரிமைகளுக்கான மிக அடிப்படையான போராட்டத்திற்கு கூட, கோர்பினால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதற்கு முற்றிலும் எதிரான ஒரு உண்மையான ஒரு சோசலிச அரசியல் அவசியப்படுகிறது.