ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Grenoble, France: Thousands march for teenagers killed in police chase

கிரெநோபிள், பிரான்ஸ் இல் போலீஸ் துரத்தலில் கொல்லப்பட்ட இளைஞர்களுக்காக  ஆயிரக்கணக்கான  மக்கள்  அணிவகுப்பு

By Will Morrow 
8 March 2019

17 வயது ஆடம், மற்றும் அவரது 19 வயது நண்பர் ஃபாத்தி கராகுஸ் (Fatih Karakuş), ஆகியோருக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும் அவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாகவும் ஏறத்தாழ 2,000 நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், மாணவர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் புதன்கிழமை பிற்பகல் பிரெஞ்சு நகரான கிரெநோபிளில், ஒரு அமைதி ஊர்வலத்தில் இணைந்து கொண்டனர். இவ் இரண்டு நண்பர்களும் கடந்த வாரம் பொலிசாரால் துரத்தப்பட்டபோது ஸ்கூட்டர் விபத்தில் கொல்லப்பட்டனர்.


புதன்கிழமை
ஊர்வலம். பதாகை தெரிவிக்கிறது: ஆடம் மற்றும் ஃபாத்தி, மீண்டும் இல்லை

ஆடம் மற்றும் ஃபாத்தி ஆகியோரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அவர்கள் ஏன் இறந்தார்கள் என்பதற்கான பதில்களைக் கோருகின்றனர். கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில், இரு இளைஞர்களும் ஒன்றாக வாகனத்தில் செல்கையில், அவர்கள் இருவரில் ஒருவர் கூட தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை என்றபோதிலும் அத்துடன் அவர்கள் ஒரு பாதுகாப்பற்ற ஸ்கூட்டரில் சவாரி செய்திருந்ததாலும் பொலிஸ் அதிகாரிகள் அவர்களை நகரின் இணைப்பு சாலை வழியாக துரத்த முடிவு செய்தனர்.

அதன் பின்னர் அவர்கள் தப்பி ஓடுகையில், ஒரு ஜூனியர் கால்பந்து அணியை பயிற்சியிலிருந்து அழைத்து சென்ற பேருந்து சாரதி அவரது பின்புற பார்வை கண்ணாடியில் அவர்கள் பின்தொடர்வதை பார்த்து, அது முந்திச் சென்று கொண்டிருந்த வேளையில் ஸ்கூட்டரை தவிர்க்கும் நம்பிக்கையுடன் சடுதியாக பேருந்தை வலப்பக்கம் திருப்பியபோது பேருந்து தாக்கி விபத்து நடந்தது என போலீஸ் கூறுகிறது.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்வில் அரசின் அலட்சியம் பற்றிய அடக்கிவைக்கப்பட்ட சமூக கோபத்தின் வெடிப்பு சமீபத்திய ஆர்ப்பாட்டத்தை தூண்டிவிட்டது. சனிக்கிழமை இரவு, 40 இளைஞர்களைக் கொண்ட குழு ஒன்று கிரெனோபிள் பொலிஸ் நிலையத்தில் கலகத்தில் ஈடுபட்டனர். கலகம் அடக்கும் பொலிஸ் அவ் இடத்துக்கு அனுப்பப்பட்டு இளைஞர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் இரப்பர் தோட்டாக்கள் ஆகியவற்றை பயன்படுத்தியது. பொலிஸ் நிலையத்திற்கு வெளியே பல கார்கள் தீ மூட்டப்பட்து. இந்த வாரம் நான்கு இரவுகளாக பொலீஸ் மற்றும் இளைஞர்களிடையே மோதல் நடைபெற்றுள்ளது.

"ஆடத்தையும் ஃபாத்தியையும் பொலீஸ் கொன்றது", மற்றும் "பிள்ளைகளை பாதுகாகாப்போம், போலீஸ் அவர்களைக் கொல்கிறது" என்ற சுலோகங்கள் உள்ளூர் கட்டிடங்களின் சுவரில் எழுதப்பட்டிருந்தது.

புதன் அன்று மிஸ்ரால் எனும் இடத்தில் பிற்பகல் 5 மணியளவில் ஒன்றுகூடி, சம்பவம் நடந்த காரேன் பாலம் நோக்கி அமைதியாக ஊர்வலமாக நடந்து சென்றனர். ஆடமினுடைய குடும்பத்தினர் மற்றும் ஃபாத்தியின் நெருங்கிய உறவினர்களின் தலைமையில், “ஆடம் மற்றும் ஃபாத்தி, மீண்டும் இல்லை” என்று எழுதியுள்ள ஒரு பதாகையை ஏந்திய படி சென்றனர். ஃபாத்தியின் பெற்றோர்கள் துருக்கியர்கள் என்பதால் அவர்கள் மரணச்சடங்கு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்ய துருக்கிக்கு பயணித்ததால் ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. பல மாணவர்களும் இளைஞர்களின் நண்பர்களும் வெள்ளை ரோஜாக்களை ஏந்தியபடி "ஆடம் மற்றும் ஃபாத்தி, 02-03-2019" என்று எழுதப்பட்ட டி-ஷர்ட்களை அணிந்திருந்தனர்.

புதன்கிழமை ஊர்வலத்தில் மாணவர்கள்

ஆனால் குடும்பங்கள் இந்த இழப்பின் வலியை மட்டுமே தாங்க வேண்டியிருக்கவில்லை.  சோக நிகழ்விற்குப் பின்னர் காலையில் இருந்து, அவர்கள் பெருநிறுவன செய்தி ஊடகங்களாலும் மற்றும் அரசாங்கத்தாலும் அவதூறு பிரச்சாரத்துக்கு உட்பட்டனர். இரண்டு இளைஞர்களின் நடத்தையை இழிவாக்கி முழுமையாக அவர்களின் இறப்புகளை நியாயப்படுத்துகிறது.

அந்த இளைஞர்கள் ஒரு குற்றவியல் பதிவை கொண்டிருப்பார்கள் அல்லது முன்பு "பொலிசுக்கு அறியப்பட்டவர்கள்" என வழக்கம்போல் வலியுறுத்துகின்றன. புதன்கிழமை பிற்பகல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், இறப்புக்கள் பற்றிய விசாரணையில் இரண்டு குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் ஃப்ளோரோண்ட் ஜிரோ, "பொலிஸ் மற்றும் செய்தி ஊடகத்தால் வெளியிடப்பட்டவற்றிற்கு மாறாக, இரு இளைஞர்களுமே சட்ட ரீதியான குற்றவியல் பதிவுகளைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் ஒருபோதும் நீதிமன்ற தீர்ப்புக்கு உள்ளாகவில்லை அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படவில்லை" என்று தெரிவித்தார்.

இந்தக் கூற்று ஊடகங்களில் அரிதாகவே எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், இது இளைஞர்களை குற்றவாளிகளாகவே தொடர்ந்து குறிப்படுகிறது. ஸ்கூட்டர் திருடப்பட்டது என்றும் உரிமத் தகடுகள் இல்லை என்றும் பொலிசாரால் பரவலாகப் புகாரளிக்கப்பட்டது.

ஃபாத்தி (இடது) மற்றும் ஆடம்

அரசதரப்பு வழக்கறிஞரால் ஊடகங்களுக்கு "விளக்குகள் இல்லாத ஸ்கூட்டர்" என்று கூறப்பட்டதாக ஜிரோ தெரிவித்தார்." இணையத்தில் இருக்கும் வீடியோக்கள் மற்றும் அந்தக் குடும்பங்களுக்கு இந்த நேரத்தில் அணுகக்கூடிய வீடியோக்கள், துரத்தப்பட்ட ஸ்கூட்டரின் முன்,பின் புற, மற்றும் பிரேக் லைட் ஆகியவற்றைக் கொண்டிருப்பதை தெளிவாக்குகின்றன" என்று அவர் மேலும் கூறினார்.

"இது அசாதாரணமான வகையில் உத்தியோகபூர்வ அறிக்கையுடன் முரண்பாடாக உள்ளது" என்று அவர் கூறினார். எல்லாவற்றுக்கும் மேலாக, "குடும்பத்தினரால் தனிப்பட்ட முறையில் பெற்ற தகவல்களின்படி, இணையத்தில் வீடியோவை வெளியிட்ட நபர் நேற்று பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது."

"ஏன் பொலிஸ் ஒரு சிறுவன் மற்றும் ஒரு இளம் வயது இளைஞன் சென்ற ஒரு ஸ்கூட்டரை துரத்தினார்கள்”, மற்றும் "அத்தகைய அபாயத்தை அவர்கள் எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?" என்பதை குடும்பத்தினர் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்  என்று அவர் கூறினார்.

அவ் இளைஞர்களை பற்றிக் கூறும் அவதூறுகளுக்கு எதிராக இரு இளைஞர்களது நண்பர்கள், அவர்களது நற்பெயர்களைப் பாதுகாக்கும் அறிக்கைகளை வெளியிட்டனர். புதனன்று ஊர்வலத்துக்கு முன்னதாக, 16 வயதான எமிரானின் அறிக்கைகளை Mediapart எனும் சஞ்சிகை நேற்று வெளியிட்டது. "ஆடம் ஒரு நல்ல மாணவன்" என்று அவர் கூறினார். "அவர் இறந்துவிட்ட உடனேயே அவரது பெயருக்கு இழுக்கு ஏற்பட்டமை அதிர்ச்சியாக இருக்கிறது, இனி அவர் இங்கே இல்லை என்று நம்புவதற்கு கடினமாக உள்ளது." "பத்திரிகையாளர்கள் எல்லாவற்றையும் தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள், அத்துடன் நம்மை வன்முறைக்கு கொண்டு செல்கிறார்கள். ஆனால் இன்று, அவர்கள் ஏமாற்றமடைய போகிறார்கள், ஏனென்றால் நாங்கள் கோபப்படாமல், அமைதியாக அணிவகுத்துச் செல்லப்போகிறோம். அவர்கள் சலிப்படைய போகிறார்கள்” என்று அவர் மேலும் கூறினார்.

மற்றொரு இளைஞர் கரீம் ட்விட்டரில் வீடியோ அறிக்கையை வெளியிட்டார். "இரண்டு நாட்களுக்கு முன்பு நாங்கள் இரண்டு சிறிய சகோதரர்களை இழந்தோம்," என்று அவர் கூறினார். "இரண்டு சகோதரர்களும் சிறந்த எதிர்காலத்தைக் கொண்டிருந்தனர். எனவே, பொலிசார் அவர்களைக் கொல்லும் நோக்குடன் அவர்களைத் துரத்தினர். அவர்கள் வகிக்காத ஒரு பாத்திரத்தை வகித்ததாக கூறும் முயற்சிகள் உருவாகி வருகின்றன. அவர்களின் குடும்பங்களின் மரியாதைகளை கெடுக்கின்றனர். இன்று முதல், உண்மை மீண்டும் நிறுவப்பட வேண்டும்."

"ஆடம் மற்றும் ஃபாத்திக்கு நீதி கிடைக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று அவர் கூறினார். "அது யாராக இருந்தாலும் சரி— நல்லது, கெட்டது, பிரெஞ்சு, மெக்ரெப், கறுப்பு, உங்களுக்கு எதுவாக இருந்தாலும் வாழ்க்கைக்கும் இறப்புக்கும் இடையே தேர்ந்தெடுக்கும் உரிமை காவல்துறையினருக்கு கிடையாது" "எங்கள் கடைசி மூச்சுவரை போராடுவோம்" என்று அவர் மேலும் கூறினார்.

இரு இளைஞர்களில் ஒருவரைக் கூட அறிந்திராத மற்ற தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்துடன் தங்கள் ஆதரவைக் காண்பிப்பதற்கும் அவர்களுக்கு எதிரான அவதூறை எதிர்க்கவும் புதன்கிழமை அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

தனது ஒன்பது வயது மகனுடன் அணிவகுப்பில் கலந்து கொண்ட 43 வயதான வங்கி ஊழியர் அனிஸ்ஸா Mediapart இடம், "அவர்களது மரணத்திற்குப் பின்னர் காலையில் இருந்து, அவர்கள் குற்றவாளிகள் எனக் கூறப்பட்டனர், அவர்கள் அதற்கு தகுதியானவர்கள் எனக் குறிப்பிடுகின்றனர்," என்று அவர் கூறினார். "இது ஒரு கோபத்தை உண்டாக்கும் விடயம். எந்த உறுதிப்படுத்தலும் இல்லாமல் பத்திரிகையாளர்கள் பொலிஸ் அவர்களிடம் கூறுவதை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே எடுக்கிறார்கள்."

"அந்தக் குடும்பங்களுக்கு ஆதரவாக நான் இங்கு வந்தேன். பிள்ளைகள் என்ன செய்திருந்தாலும் அல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை. அவர்கள் ஒரு ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை, அவர்கள் முன்னரே திருடப்பட்ட ஒரு ஸ்கூட்டர் மீது இருந்தனர். ஆனால் ஒரு ஆபத்தான மாற்றுப் பாதையில் வாகனத்தை செலுத்த வைத்து மற்றும் இறுதியில் அவர்களின் உயிரை ஆபத்தாக்கியமை அவர்களை பின்தொடர இது ஒரு காரணமா? இரண்டு இளைஞர்களின் மரணங்களை தூண்டுவதை தவிர போலீசார் செய்ய வேண்டியது வேறெதுவுமே இல்லையா? எங்கள் பிள்ளைகளை பாதுகாக்க வேண்டிய போலீஸ் பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன். இது எனது மகனுக்காக எனக்கு கவலையளிக்கிறது.”


பதாகை கூறுகிறது: ஆடம் மற்றும் ஃபாத்திக்கு நீதி கிடைக்கப்பட வேண்டும்.

50 வயதான தொழிலாளி கரீமாவை அதே வெளியீடு மேற்கோள் காட்டியது: "20 ஆண்டுகளாக அலுவலகங்களை சுத்தம் செய்வதற்காக நான் அதிகாலை 4.00 மணிக்கு எழுந்திருக்கிறேன். நான் 1,200 யூரோக்களை ஒரு மாதம் சம்பாதிக்கிறேன் அத்துடன் வரியும் செலுத்துகிறேன். நான் எல்லோரையும் போல ஒரு குடிமகன், அத்துடன் மரியாதை செலுத்தப்பட வேண்டிய உரிமையை நான் கொண்டிருக்கிறேன். அத்துடன் எனது பிள்ளைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் அது எப்போதும் அதே மாதிரித் தான். புறநகர்ப்பகுதிகளுக்கு நீதியே இல்லை."

ஆடம் மற்றும் ஃபாத்தி ஆகியோரின் மரணம் 2005 கலவரங்களைத் தூண்டிய நிகழ்வுகளின் வலுவான எதிரொலிகளைக் கொண்டுள்ளது. அக் கலவரங்கள் பாரிஸ் மற்றும் பிற முக்கிய பிரெஞ்சு நகரங்களின் புறநகர் பகுதிகளில் மூன்று வாரங்களுக்கு நீடித்தது. பொலிசார் இளைஞர்களின் குழுவொன்றை துரத்தினர், அவர்களில் 3 பேர் வன்முறையை தவிர்ப்பதற்காக ஒரு மின்சார மின்மாற்றி நிலையத்தில் மறைத்து இருந்தனர். மின்சாரம் தாக்கியதில் அவர்களில் இரண்டு இளைஞர்கள் இறந்தனர். அவர்களது இறப்புக்கள், வேலையின்மை, வறுமை மற்றும் பொலிஸ் துன்புறுத்தல் ஆகியவற்றின் மீது பரந்த சமூக சீற்றத்தால் உந்தப்பட்ட ஒரு கிளர்ச்சியைத் தூண்டிவிட்டது.

ஜனாதிபதி ஜாக் சிராக்கின் அரசாங்கம் வன்முறை அடக்குமுறையுடன் பதிலளித்தது. 1954-1962 அல்ஜீரிய யுத்தம் மற்றும் 2,500 க்கும் அதிகமானவர்களை கைதுசெய்தமைக்கு பின்னர் பிரான்சின் முதலாவது அவசரகால நிலையை அறிவித்தது.