ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India and Pakistan issue fresh war threats

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் புதிய போர் அச்சுறுத்தல்கள்

By K. Ratnayake
1 March 2019

புதனன்று, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் விமானப்படைகள் நேரடியாக மோதிக் கொண்டதையடுத்து, அவ்விரு நாடுகளுக்கு இடையே உருவான பதட்டங்கள் தொடர்ந்து கொதி நிலையில் இருப்பதானது, தெற்காசியாவின் இரண்டு அணுவாயுத சக்திகளுக்கு இடையே முழுப் போர் வெடிக்கும் அச்சுறுத்தலை கொண்டுள்ளது.

நேற்று, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகையில், பிடித்து வைக்கப்பட்டுள்ள இந்திய விமான படையணிப் பிரிவு தளபதி அபிநந்தன் வர்த்தமானை ஒரு “சமாதான சமிக்ஞை” செய்யும் விதமாக விடுவிக்க அவரது அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அறிவித்தார். இருப்பினும், நிலைமை “கைமீறிப் போகுமானால்” “பாகிஸ்தான் பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும்” என்றும் கான் எச்சரித்தார்.

புதனன்று, இந்திய இராணுவத் தளங்களை தாக்குவதற்கான ஒரு தெளிவான முயற்சியாக இந்திய நிர்வகிப்பில் இருக்கும் காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பாகிஸ்தானின் போர் விமானங்கள் பறந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானின் விமானப்படை போர் விமானங்களுக்கு இடையே நேரடியான மோதல் வெடித்தபோது வர்த்தமான் கைப்பற்றப்பட்டார். இந்தியா அத்தாக்குதலை முறியடித்த போதிலும், பாகிஸ்தான் விமானப் படை இந்தியாவின் MiG-21 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதுடன், அதன் விமானியையும் கைப்பற்றியது.

நேற்று பிற்பகலில் தாமதமாக ஒரு செய்தியாளர் கூட்டத்தை இந்திய முப்படை தளபதிகள் நடத்தினர். விமான படையணிப் பிரிவு தளபதி விடுதலையை அவர்கள் வரவேற்கின்றனர் என்றாலும், பாகிஸ்தான் உள்ளே இராணுவத் தாக்குதல்களை தொடர்வதற்கும் அவர்கள் உறுதிபூண்டுள்ளதாக கூறினர். “பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்குவதை பாகிஸ்தான் தொடரும் வரையில், பயங்கரவாத முகாம்களை இலக்கு வைத்து தாக்குவதை நாங்களும் தொடர்வோம்,” என்று மேஜர் ஜெனரல் சுரேந்திர சிங் மஹல் அறிவித்தார். மேலும், இந்திய இராணுவ நிலைகளை பாகிஸ்தான் இலக்கு வைப்பதை அவர் கண்டித்ததுடன், இதையும் சேர்த்து கூறினார்: “அவர்கள் இன்னும் ஏதேனுமொரு வகையில் எங்களை தூண்டுவார்களானால், அவசர நிலைமைகளை எதிர்கொள்ளவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.”

அதேபோல, பாகிஸ்தானின் இராணுவ செய்தித் தொடர்பாளர், மேஜர் ஜெனரல் ஆசிப் கஃபூரும், சற்றளவும் குறையாத ஆக்கிரோஷத்துடன், இன்று முற்பகல் இவ்வாறு எச்சரித்தார்: “இந்தியாவின் எந்தவித ஆக்கிரமிப்பையும் முறியடிக்கும் வகையில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LoC) பகுதியில் பாகிஸ்தான் இராணுவமும் உச்சபட்ச எச்சரிக்கையுடன் தயார் நிலையில் இருக்கின்றன.” இந்தியா மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிகளை இந்த LoC பிரிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான அச்சுறுத்தல்கள் எடுத்துக் காட்டுவது என்னவென்றால் இரண்டுக்கும் இடையிலான மோதலுக்கான தீர்வை, இஸ்லாமாபாத் விமானியை விடுவிப்பதன் மூலமோ அல்லது புது தில்லி அந்த நல்லெண்ண சமிக்ஞையை வரவேற்பதன் மூலமோ காண முடியாது.

1947 தெற்காசிய வகுப்புவாத பிரிவினையைத் தொடர்ந்து ஒரு பிற்போக்குத்தன இராணுவ-மூலோபாய போட்டியில் சிக்கிக் கொண்டுள்ள, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் முதலாளித்துவ மேல் தட்டினர், தங்களது நன்மைக்காக முண்டியடித்து போராடியும், உள்நாட்டு சமூக அதிருப்திகளை திசைதிருப்பும் ஒரு வழியாக தங்களது பகைமையை பயன்படுத்தியும் வந்துள்ள நிலையில், மூன்று அறிவிக்கப்பட்ட போர்களையும், எண்ணிலடங்கா எல்லைப்புற மோதல்களையும் அவர்கள் நடத்தினர்.

ஆனால் சமீபத்திய மோதல்களோ, இரு நாடுகளிலும் பெருகிவரும் அரசியல் நெருக்கடிகளிலும், மேலும் சீனாவுடனான தனது மோதலில் இந்தியாவை ஒரு “பூகோள மூலோபாய பங்காளியாகவும்”, மற்றும் முன்னணி வகிக்கும் ஒரு நாடாகவும் மாற்றுவது குறித்த வாஷிங்டனின் உந்துதலுடனும் பின்னிப் பிணைந்துள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியாவின் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக் கட்சி (BJP) அரசாங்கம், ஜெய்ஷ்-இ-முகமது எனும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஒரு இஸ்லாமிய பயங்கரவாதக் குழு, காஷ்மீரில் புல்வாமா பகுதியில் நடத்திய பிப்ரவரி 14 தாக்குதலை பிடித்து தொங்கிக் கொண்டு, இஸ்லாமாபாத் உடனான பதட்டங்களை பெரிதும் விஸ்தரித்து வருகிறது. அந்த தாக்குதல் 40 க்கும் அதிகமான இந்திய சிப்பாய்களை பலி கொண்டது.

அதற்கு பதிலடியாக, செவ்வாயன்று, பாகிஸ்தானுக்கு உள்ளே ஆழமாக சென்று பாலக்கோட் பகுதியில் ஒரு தாக்குதலை நடத்தி புது தில்லி பழி தீர்த்தது, அது 1971 இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பின்னர் பாகிஸ்தான் உள்ளே நடத்தப்பட்ட புது தில்லியின் முதல் விமானத் தாக்குதலாக உள்ளது. உயர்மட்ட அரசாங்க அதிகாரி ஒருவர் வழங்கிய செய்தியை அடிப்படையாகக் கொண்டு, பாலக்கோட் தாக்குதல் 200 முதல் 300 வரையிலும் உயிர்களை பலி கொண்டிருக்கும் என இந்திய ஊடகங்கள் வலியுறுத்திக் கூறி வருகின்றன.

பாகிஸ்தானை தண்டிக்கும் பொருளாதார தடைகளைத் திணிப்பதன் மூலமாக மோடி அரசாங்கம், தாக்குதலை தயார் செய்தது, அதில் உள்ளடங்குவது, அதற்கு வழங்கப்பட்ட மிகுந்த விருப்பமான தேசிய வர்த்தக நிலையை இரத்து செய்வது, மேலும் பாகிஸ்தானின் நீர்பாசனத்திற்கும் மின்சார உற்பத்திக்கும் தேவைப்படுவதான அந்நாட்டிற்குள் பாயும் நீர்நிலைகளை குறைப்பதற்கு சிந்து பள்ளத்தாக்கு நீர் ஒப்பந்தத்தின் (Indus Valley Water Treaty) கீழ் அதன் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான தீர்மானமும் ஆகும்.

இந்த இராணுவ மோதலை அரசியல் ரீதியாக சுரண்டும் மோடியின் முயற்சி, “உலகின் மிகப்பெரிய காணொளி மாநாட்டை”, 15,000 இடங்களில் பிஜேபி ஆர்வலர்களுக்கான ஒரு கூட்டத்தை அவர் நேற்று கூட்டியபோது அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. அக்கூட்டத்தின் போது 10 மில்லியன் மக்களுடன் மோடி கலந்துரையாடியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அப்போது மோடி இவ்வாறு சபதமேற்றார்: “இந்தியா தொடர்ந்து போராடும், நிலைத்து நிற்கும், வேலை செய்யும் மேலும் வெற்றியும் பெறும், எனவே முன்னேற்றத்தை நோக்கிய அதன் அணிவகுப்பில் யாரும் தடைகளை உருவாக்க முடியாது.” மேலும் அவர், பிஜேபி இன் 2014 தேர்தல் வெற்றி, “மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான கட்டளையாக” இருந்தது, ஆனால் இப்போது “2019 வாக்கெடுப்பு மக்களுடைய அபிலாஷைகளை நிறைவேற்றுவது பற்றி இருக்கும்” என்றும் சேர்த்துக் கூறினார்.

போர் காய்ச்சலை தூண்டுவதற்கு முனைந்து, மோடி இதையும் தெரிவித்தார்: “நமது பாதுகாப்பு படைகளின் திறமைகள் மீது நாம் முழு நம்பிக்கை வைத்திருக்கிறோம். எனவே, அவர்களது உறுதிப்பாடுமிக்க நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் எதுவும் நடக்கக்கூடாது என்பது மிக முக்கியம்.”

மேலும், இந்திய எதிர்க்கட்சிகளுக்கு விடுக்கும் ஒரு மெல்லிய மறைமுக அச்சுறுத்தலாக, “ஒரு வலுவான அரசாங்கத்தை” நிராகரிப்பவர்களை அவர் கண்டித்தார்.

2014 இல் ஆட்சிக்கு வந்த பின்னர், மோடி, இந்தியாவின் மிக உயர்ந்த செல்வந்த தட்டின் முழு ஆதரவுடனும், அனைத்திற்கும் மேலாக சீனா மற்றும் பாகிஸ்தானின் பின்தள்ளியும், இந்தியாவின் பெரும் வல்லரசாகும் அபிலாஷைகளை முன்னெடுப்பதற்கு, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான புது தில்லியின் மூலோபாய பங்காளித்துவத்தை மேலும் ஆழப்படுத்தினார். வரவிருக்கும் ஏப்ரல்-மே தேர்தல்களிலும் அதிகாரத்தை கைப்பற்ற அவர் உறுதியாக இருக்கிறார், அதன் பின்னர் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை நலன்களை இன்னும் கடுமையாக தொடரும் வகையில் அவரது சர்வாதிகார ஆட்சியை பலப்படுத்தவும், அத்துடன் சமூக எதிர்ப்பை ஒடுக்குவதன் மூலம் ஆளும் வர்க்கத்தின் பொருளாதார கட்டளைகளை செயல்படுத்தவும் அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்.

இத்தகைய சூழலில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட எதிர்க் கட்சித் தலைவர்கள் அனைவரும், மோடி தனது மறுதேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவதற்காகவே இந்த நெருக்கடியை அரசியல்மயமாக்குகிறார் என்று குற்றம்சாட்டினர். இருப்பினும், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அழைப்பு விடுத்திருந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் அனைவரும் முனைப்புடன் கலந்து கொண்டதுடன், பாகிஸ்தானுக்கு எதிரான அரசாங்கத்தின் போர் உந்துதலை “ஒருமித்த குரலில்” அங்கீகரிக்கவும் செய்தனர்.

இன்னும் பொதுவாக கூறுவதானால், இந்திய நிர்வகிப்பிலான காஷ்மீர் பகுதியில் பிரிவினைவாத கிளர்ச்சிக்காக பாகிஸ்தான் வழங்கும் அனைத்து தளவாட உதவிகளையும் அது தடைசெய்யும் வரை ஒரு சமாதான தீர்வை எட்டுவது குறித்த பேச்சுவார்த்தைகளை கூட, பாகிஸ்தான் உடனான உயர்மட்ட தொடர்புகளை புது தில்லி மீண்டும் தொடராது என்ற மோடி அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அவர்கள் நீண்டகாலமாகவே ஆதரித்து வந்துள்ளார்கள், இந்த நிலைப்பாடு குறித்து நேற்று கூட பிரதமர் மீண்டும் தெரிவித்தார்.

பல இந்திய ஊடக வர்ணனையாளர்கள் இந்தியாவின் பாகிஸ்தான் எதிர்ப்பு பிரச்சாரத்தை உரத்த குரலெழுப்பி ஆதரித்து வருகின்றனர்.

Times of India நாளிதழ் புதனன்று பிரசுரித்த ஒரு கட்டுரை, அணுவாயுதங்களின் இருப்பு நிலை உட்பட, இரு தரப்பு இராணுவ ஆயுதங்களின் கொள்ளளவைப் பற்றி ஒரு ஒப்பீடு செய்கிறது. இந்திய இராணுவ மேலாதிக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவது தான் அந்த கட்டுரையின் குறிப்பிடத்தக்க நோக்கமாக இருந்தது என்றாலும், இரு நாடுகளின் ஆளும் உயரடுக்குகள் அந்த பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் மில்லியன் கணக்கில் மக்களை அடியோடு அழிக்கும் வகையிலான ஒரு அணுவாயுத பேரழிவை கட்டவிழ்த்துவிடக் கூடும் என்பதையும் அது உறுதி செய்தது.

Times பத்திரிகை செய்தியின் படி, இந்தியா 140 முதல் 150 வரையிலான அணுசக்தி ஆயுதங்களை கொண்டிருக்கும் அதேவேளையில், 130 முதல் 140 வரையிலான அணுசக்தி ஆயுதங்களை பாகிஸ்தான் கொண்டுள்ளது. இரு நாடுகளுமே, அணுவாயுதங்களை ஏந்திச் சென்று தாக்குதல் நடத்தும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கொண்டுள்ளன, குறிப்பாக, 2,000 கிலோமீட்டர் வரம்பு கொண்ட பாகிஸ்தானின் Shaheen ஏவுகணையுடன் ஒப்பிடும் போது, இந்தியாவின் Agni-V ஏவுகணை 5,000 கிலோமீட்டர் தொலைவு வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டது.

1.2 மில்லியன் சிப்பாய்களை கொண்ட இந்திய இராணுவம், 336 கவச வாகனங்களையும், 3,565 டாங்கிகளையும், மேலும் 9,719 இராணுவ பீரங்கிகளையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது, அதேவேளையில், பாகிஸ்தான் இராணுவம் 1,605 கவச வாகனங்களையும், 2,496 டாங்கிகளையும், மேலும் 4,472 பீரங்கிகளையும் கொண்டுள்ளது. இப்படியாக இந்தப் பட்டியல் நீளுகிறது.

மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் ஏழை விவசாயிகளும் பட்டினியில் கிடந்து வாடுவதுடன், அடிப்படை சமூக நலன்களையும் அணுக முடியாத நிலையில் இருக்கும் அவர்களை புறம் தள்ளிவிட்டு, புது தில்லி மற்றும் இஸ்லாமாபாத் இரண்டுமே அத்தகைய கொடிய வெடிக்கச் செய்யும் இராணுவ ஆயுதங்களை வாங்குவதற்கு பெருமளவு செலவழித்துள்ளன. இந்தியாவின் 2018 பாதுகாப்புத்துறை வரவு செலவு திட்ட ஒதுக்கீடு மிகப்பெரும் அளவினதாய் 58.1 பில்லியன் டாலர் ஆகும், அல்லது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) அது 2.1 சதவிகிதமாகும், அதேவேளையில், பாகிஸ்தான் 11 பில்லியன் டாலரை, அல்லது அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.6 சதவிகிதத்தை பாதுகாப்புக்காக செலவிட்டது.

பாலக்கோட் வான்வழி தாக்குதலை நடத்தவிருந்த போதே, இந்திய அரசாங்கம் முழுப் போருக்கான தயாரிப்புக்களைத் தொடங்கிவிட்டது என ஊடகங்கள் உறுதி செய்தன. அதாவது, தாக்குதலுக்கு ஆறு நாட்களுக்கு முன்பாகவே, அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களிடம் வடக்கு விமானத் தளங்களில் அவற்றின் ஜெட் எரிபொருட்களின் இருப்பை அதிகரிக்கும்படி கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஊடகங்களால் தூண்டப்பட்ட கடுமையான பாகிஸ்தான் எதிர்ப்பு பிரச்சாரத்தின் மற்றொரு வெளிப்பாடாக, வலதுசாரி புவி மூலோபாய நிபுணர் பிரம்மா செல்லனே குறிப்பிட்டது இருந்தது: “பாகிஸ்தானுடன் சமாதானம் என்பது ஒரு காணல்நீரே, மேலும் பயங்கரவாதிகள் மீதான குண்டுவீச்சு தாக்குதலுக்கு அதன் Mirage 2000 ரக போர் விமானத்தை சமயத்திற்கேற்ப இந்திய விமானப்படை (IAF) பிரயோகித்தது குறிப்பிடத்தக்கது.”

மேலும், JeM நடத்தியதாகக் கூறப்பட்ட, இந்திய பாராளுமன்றம் மீதான டிசம்பர் 2001 தாக்குதல் பற்றியும் செல்லனே குறிப்பிட்டார் என்பதுடன், அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அத்தாக்குதலுக்கு “விரைவான பதிலடி கொடுக்கும் வகையில் தண்டனைக்குரிய விமானத் தாக்குதல்களை” தொடுக்க அவர் ஆணையிடாமல் போனதையும் விமர்சித்தார். மேலும் அவர் இவ்வாறு தெரிவித்தார்: “பாலக்கோட் தாக்குதலானது, ஒரு அணுசக்தி நாடு மற்றொரு அணுசக்தி நாட்டின் உள்ளே சென்று முதன்முதலாக நடத்திய விமானத் தாக்குதலாகும்.” அதாவது, இந்தியா “மிகக் கடுமையான அணுசக்தி நெருக்கடியை அதிவிரைவாகத் தூண்டும் வகையில் அது எடுத்த பழிவாங்கல் நடவடிக்கைகளின் தவிர்க்க முடியாத தன்மையைப் பற்றி குறிப்பிட்டு மேற்குலக கல்வியியல் கோட்பாடுகளை உடைத்தெறிந்துள்ளது.”

இந்த நிகழ்வுகள் கட்டுப்பாட்டை இழக்கச் செய்து ஒரு சக்திவாய்ந்த அணுசக்தி பரிமாற்றத்தை வெடிக்கச் செய்யும் சாத்தியங்களை செல்லனே நிராகரிக்கின்ற போதிலும், மிக வெளிப்படையாக, பாகிஸ்தானில் “பயங்கரவாதிகளை” ஒழிக்க அதன் அணுசக்தியை பயன்படுத்துமாறு புது தில்லியை செல்லனே வலியுறுத்தினார். இது இந்திய ஆளும் உயரடுக்கின் பொறுப்பற்றத் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

உலக சோசலிச வலைத் தளம், மே 31, 2002 இல், “இந்திய துணைக்கண்டம் மீதான போரை எதிர்க்கும் ஒரு சோசலிச மூலோபாயம்” என்ற தலைப்பில் பிரசுரித்த ஒரு ஆசிரியர் தலையங்கக் கட்டுரையில் இவ்வாறு எச்சரித்திருந்தது: “ஒரு அணுவாயுதப் போர் வெடிப்பதற்கு சாத்தியமில்லை என்பதை நம்புவதானது தொழிலாள வர்க்கத்திற்கு ஆபத்தான முட்டாள்தனமாக இருக்கும். பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்களை மட்டும் தாக்குவதான கட்டுப்பாட்டைக் கொண்ட, “ஒரு மட்டுப்படுத்தப்பட்ட போருக்கான” வாய்ப்புக்கள் இருப்பதாக ஊகிப்பதன் மூலம் பொதுமக்கள் அச்சங்களை குறைப்பதற்கு இந்திய பாதுகாப்பு ஆய்வாளர்கள் முயன்று வருகின்றனர். இருப்பினும், வெடிப்புறும் எந்தவொரு மோதலும், அதன் சொந்த இராணுவ மற்றும் அரசியல் சார்பு சக்தியைக் கொண்டிருக்கும் என்பது மட்டும் உறுதி.”

இந்த பிராந்தியத்தில் அதிகார சமநிலை 17 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வியத்தகு மாற்றம் கண்டுள்ளது. இந்திய-பாகிஸ்தான் மோதல் என்பது சீனாவுடனான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மோதலுடன் பின்னிப் பிணைந்துள்ளன. ஆசிய-பசிபிக்கில் அதன் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டில், வாஷிங்டன் புது தில்லியுடன் அதன் இராணுவ உறவுகளை மேலும் மேலும் ஆழப்படுத்தி வந்துள்ளது. இதற்கு பதிலிறுப்பாக, பெய்ஜிங் இஸ்லாமாபாத் உடன் அதன் இராணுவ மற்றும் பொருளாதார உறவுகளை பெரிதும் விஸ்தரித்துள்ளது.

எனவே, அணுவாயுதம் ஏந்திய இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடையேயான எந்தவொரு போரும், ஒரு பேரழிவுகரமான மூன்றாம் உலகப் போர் வெடிப்பதற்கு தூண்டுதல் அளிக்கும் வகையில் அமெரிக்க மற்றும் சீனத் தலையீட்டிற்கு முன்கூட்டியே வகைசெய்யும் யதார்த்தமான சாத்தியத்தைக் கொண்டுள்ளது.

பிப்ரவரி 14 புல்வாமா குண்டுவீச்சுத் தாக்குதல் குறித்து பாகிஸ்தானை இந்தியா “தண்டிப்பதற்கு” அதன் ஆதரவை முன்கூட்டியே பகிரங்கமாக அறிவித்த, ட்ரம்ப் நிர்வாகம், இருதரப்பையும் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கவும், மேலும் அடுத்தகட்ட இராணுவ நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கவும் கேட்டுக்கொண்டது. ஆனால், இவ்வாறெல்லாம் அறிக்கை வெளியிட்டாலும் கூட, புது தில்லி உடனான அதன் சீன-விரோத கூட்டணியை பலப்படுத்துவது நல்லது எனக் கருதி, இந்தியா உடனான அதன் கூட்டாண்மையை வாஷிங்டன் வலியுறுத்தி வருவதுடன், இஸ்லாமாபாத் “பயங்கரவாதிகளின்” புகலிடங்களை அழித்தொழிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.