ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The New Zealand terrorist attack and the international danger of fascism

நியூசிலாந்து பயங்கரவாத தாக்குதலும் பாசிசத்தின் சர்வதேச ரீதியான ஆபத்தும்

Tom Peters
18 March 2019

கடந்த வெள்ளியன்று நியூசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச்சில் இரண்டு மசூதிகளில் நடாத்தப்பட்ட பாசிச பயங்கரவாதத் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை வார இறுதியில் 50 ஆக அதிகரித்தது. கொல்லப்பட்டவர்களில் ஆகக் குறைந்த வயதுடையவர் ஒரு மூன்று வயது சிறுவன் ஆவான். கடுமையாகக் காயமடைந்த நான்கு வயது சிறுமி உட்பட,  மோசமான நிலையில் 12 பேருடன் சேர்த்து முப்பத்து நான்கு பேர்  ஞாயிறன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்பாவி முஸ்லிம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கொடூரமான, இனவெறி படுகொலைகளால் உலகெங்கிலும் உள்ள மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் நியூசிலாந்திலும் சர்வதேச ரீதியிலும் வார இறுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆதரவைக் காட்டவும், முஸ்லிம்கள், குடியேறியோர் மற்றும் அகதிகள் ஆகியோரை பாதுகாக்கவும் ஊர்வலங்களில் இணைந்து கொண்டனர்.

அவுஸ்ரேலியாவில் பிறந்த 28 வயதான ப்ரெண்டன் டாரன்ட் (Brenton Tarrant) என்பவர் தனித்த துப்பாக்கி ஏந்தியவர் என்றும் மற்றவர்களிடமிருந்து எந்தவித உதவியும் பெறவில்லை என்றும் நியூசிலாந்து பொலிஸ் தற்போது கூறுகிறது. அவர் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார். அவர் எந்த நேரத்திலும் உளவுத்துறையினரினதோ அல்லது பொலிசாரினதோ கவனத்திற்கு வந்ததில்லை, எனவே எந்தவிதமான கண்காணிப்பிலும் அவர் இல்லை என்று நியூசிலாந்திலும் அவுஸ்திரேலியாவிலும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

டாரன்ட் ஒரு திசைதிருப்பப்பட்ட "தனி ஓநாயாக" சித்தரிக்கப்படுவதற்கான முயற்சியும், குறிப்பாக "கண்காணிப்பில் இல்லை" என்று கூறப்படுவதும் நம்பகரமானதாக இல்லை. டாரன்ட் வெளியிட்டுள்ள 74 பக்க நோக்க அறிக்கையானது, அவர் பல ஆண்டுகளாக வெளிப்படையாக கூடி இயங்கிய பாசிசவாதிகள் மற்றும் வெள்ளையின மேலாதிக்கவாதிகளின் ஒரு சர்வதேச வலையமைப்பின் சார்பிலேயே பயங்கரவாத அட்டூழியத்தை அவர்  தயாரித்து மேற்கொண்டார் என்பதை தெளிவுபடுத்துகிறது.

டாரன்ட் அறிக்கையானது, நவீன கால Mein Kampf (ஹிட்லரின் எனது போராட்டம் என்ற புத்தகம்) ஆகும். ஐரோப்பா, இது அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இருந்து முஸ்லீம், யூத, ஆபிரிக்க, ஆசிய மற்றும் ரோமா பின்னணியிலான அனைத்து மக்களும் அடங்கும் ஐரோப்பியர் அல்லாத "படையெடுப்பாளர்கள்" மீதான இனப்படுகொலை வன்முறை மற்றும் உள்நாட்டுப் போருக்கான அழைப்புகளை சோசலிசத்தின் மீதான கட்டுக்கடங்காத வெறுப்புடன் ஒருங்கிணைக்கிறது. 1920 கள் மற்றும் 1930 களில் நாஜிசம் மற்றும் பிற பாசிச இயக்கங்களுக்கு ஊக்கமளித்த வெள்ளை இனவெறி மற்றும் தீவிர தேசியவாத திட்டங்களான "மனிதர்களும் அவர்களின் பூர்வீக மண்ணும்" என்பதில் ஊறிப்போயுள்ளன.

துப்பாக்கிதாரி, "பல தேசியவாத குழுக்களுக்கும் நன்கொடை அளித்துள்ளார்... மேலும் பலவற்றுடன் தொடர்பு வைத்துள்ளார்" என்று எழுதியுள்ளார். 2012 இல் இருந்து, அவர் பல்கேரியா, ஹங்கேரி, சேர்பியா, குரோஷியா, பொஸ்னியா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின், துருக்கி, பாக்கிஸ்தான் மற்றும் வட கொரியாவிற்கு கூட பயணம் செய்துள்ளார், அத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு திரும்பி வந்து மீண்டும் நியூசிலாந்துக்கு பயணம் செய்துள்ளார்.

பிரெஞ்சு தேர்தலில் தீவிர வலதுசாரி தேசிய முன்னணியின் தோல்வியைத் தொடர்ந்து, 2017 ல் ஐரோப்பாவிற்கு இரண்டு மாத சுற்றுப்பயணத்தின் போதே பயங்கரவாதத்தை நோக்கி திரும்ப தீர்மானித்ததாக அவர் கூறுகிறார். டாரன்ட், நோர்வே பாரிய பாசிச கொலைகாரர் ஆன்டர்ஸ் பிரைவிக்குடன் தொடர்புபடுத்தப்பட்ட நைட்ஸ் டெம்ப்ளர் (Knights Templar) என்றழைக்கப்படும் ஒரு அமைப்புடன் தொடர்பு கொண்டதுடன் மேலும் கிறிஸ்ட்சேர்ச்சின் தாக்குதலுக்கு அதனிடமிருந்து "வாழ்த்து" கிடைத்திருப்பதாகக் கூறினார். அவர் தீவிர வலதுசாரி சமூக ஊடகங்கள் மற்றும் வலைப்பதிவுகளில் அதிகளவில் ஈடுபட்டு இருந்ததுடன் நியூசிலாந்தை வந்தடைந்து சிறிது காலத்திற்கு பின் ஒரு துப்பாக்கி சுடும் கழகத்தில் சேர்ந்தார். "வெள்ளையர் அல்லாதோருக்கு" "உலகில் எங்கும் பாதுகாப்பு இல்லை" என்பதை நிரூபிப்பதற்கே நியூசிலாந்தை தனது தாக்குதலை நடத்தும் நாடாக தேர்ந்தெடுத்ததாக அவர் அறிவித்தார்.

இவை அனைத்தும் உலகம் முழுவதும் உள்ள பாதுகாப்பு நிறுவனங்களின் "கண்காணிப்புக்கு உட்படாதவை" என்றால், டாரன்ட்டின் அறிக்கை அது எவ்வாறு என்பதற்கு ஒரு விளக்கத்தை அளிக்கிறது. அரச எந்திரம், இராணுவம் மற்றும் பொலிஸ் ஆகியவற்றுடன் ஆழமாக பிணைந்துள்ள பாசிச குழுக்களை அவர் பெருமைப்படுத்தினார். "இந்த அமைப்புக்களில் உள்ள மொத்த மக்களின் எண்ணிக்கை மில்லியன் கணக்கில் உள்ளது... ஆனால் பொருத்தமற்ற விகிதாசாரத்தில் இராணுவ சேவைகள் மற்றும் சட்ட அமுலாக்கத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆச்சரியத்திற்கு இடமற்றவகையில், இனவாதிகளும் தேசியவாதிகளும் தங்களது நாடுகளுக்கும் சமூகத்திற்கும் சேவையாற்றும் பகுதிகளில் வேலைகளை தேடுகின்றனர்." [வலியுறுத்தம் சேர்க்கப்பட்டது]. "நூறாயிரக்கணக்கான" ஐரோப்பிய இராணுவத்தினர்கள் மற்றும் போலிசார் "தேசியவாத குழுக்களில்" உள்ளனர் என்று டாரன்ட் மதிப்பிட்டார்.

கிறிஸ்ட்சேர்ச் தாக்குதல் மற்றும் அதை ஊக்குவிக்கும் கருத்துக்களை சர்வதேச தொழிலாள வர்க்கம் மற்றும் மத்தியதர வர்க்கத்தின் முற்போக்கான பிரிவுகள் ஒரு கடுமையான எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். தீவிர வலதுசாரி தேசியவாதம் ஒவ்வொரு நாடுகளிலும் முதலாளித்துவ அரசுகளில் மிக உயர்ந்த மட்டத்தில் வேண்டுமென்றே விதைக்கப்படுவதின் விளைபொருளாகும். முன்னோடியில்லாத அளவிலான சமூக சமத்துவமின்மை மற்றும் போர் ஆபத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டத்தின் எழுச்சிக்கு தொழிலாள வர்க்கம் சர்வதேச ரீதியாக பெருமளவில் அணிதிரண்டு வருகின்ற அதே வேளையில், முதலாளித்துவத்தின் திவால்நிலை மற்றும் தேசிய அரச அமைப்பு ஆகியவற்றிற்கான எதிர்ப்பை பிளவுபடுத்தவும், அச்சுறுத்தி ஒடுக்கவும் 1920 மற்றும் 1930 களில் செய்தது போல, ஆளும் வர்க்கம் மீண்டும் ஒருமுறை பாசிச சக்திகளைப் பயன்படுத்த முனைகின்றது.

ப்ரெண்டன் டாரன்ட் இன் அதே மாதிரியான கருத்துக்களை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளையும் தனிநபர்களையும் அமெரிக்க காங்கிரஸ் மற்றும் வெள்ளை மாளிகையிலிருந்து ஐரோப்பிய அரசாங்கங்கள் மற்றும் பாராளுமன்றங்களிலும், கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வரை காண முடியும்.

ஜேர்மனியில், மேர்க்கெலின் கூட்டணி அரசாங்கம் ஜேர்மனிய பாராளுமன்ற எதிர்க் கட்சியான பாசிச ஜேர்மனிக்கான மாற்றீட்டின் (AfD), கொள்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளது. உள்துறை அமைச்சர் ஹோர்ஸ்ட் சீஹோபர் கடந்த செப்டம்பர் மாதம் கெம்னிட்ஸ் நகரில் இடம்பெற்ற ஒரு நவ-நாஜி ஆர்ப்பாட்டத்திற்கு பின்னால் ஆதரவாக இருந்தார், அவர் ஒரு அமைச்சராக இல்லாவிட்டால், பாசிசவாதிகளுடன் சேர்ந்து அவர் ஊர்வலம் சென்றிருப்பார் என்று கூறினார். ஜேர்மனிய இரகசிய சேவையின் அப்போதைய தலைவரான ஹான்ஸ்-கியோர்க் மாஸன் இதேபோல் கெம்னிட்ஸ் கும்பலின் வெளிப்படையான குடியேற்ற எதிர்ப்பு மற்றும் பாசிச தன்மையை மறுத்து அதைக் காப்பாற்றினார்.

ஒரு இரகசிய வலதுசாரி பயங்கரவாத வலைப்பின்னல், நூற்றுக்கணக்கான உறுப்பினர்களுடன் ஜேர்மனிய ஆயுதப்படைக்குள் இருப்பது வெளிப்பட்டுள்ளது. வலையமைப்பின் உறுப்பினர்கள் நீதி அமைப்பு மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தில் முக்கிய நபர்களைக் கொலை செய்வதற்கும் யூத மற்றும் முஸ்லீம் அமைப்புக்களுக்கு எதிரான தாக்குதல்களை நடாத்தவும் விரிவான திட்டங்களைக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில், ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் அமெரிக்காவிலுள்ள சமூக நெருக்கடிக்கு புலம்பெயர்ந்தோரை பலிக்கடாவாக்க முயல்கின்றனர். தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தும் முயற்சிக்கு அவை இரண்டும் இனவாத அரசியலைப் பயன்படுத்துகின்றன.

ஒரு பாசிச அரசியல் அடித்தளத்தை வளர்ப்பதற்கு முயலும் ஜனாதிபதி ட்ரம்ப்பை, "புதுப்பிக்கப்பட்ட வெள்ளை அடையாளத்தின் ஒரு சின்னம்" என டாரான்ட் விபரிக்கிறார். ட்ரம்ப், கிறிஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் தனது பாசிச ஆதரவாளர்களுக்கு ஒரு ஆதரவளிக்கும் செய்தியாக, "வெள்ளை தேசியவாதத்தை" ஒரு அச்சுறுத்தலாக அவர் கருதவில்லை என்று கூறினார். நியூசிலாந்து படுகொலைகளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், அவரது எதிரிகளுக்கு எதிராக, இராணுவம், பொலிஸ் மற்றும் “Bikers for Trump” போன்ற அடிதடிக்கும்பல்களில் இருந்து தனது ஆதரவாளர்களை அணிதிரட்டுவதற்கான தெளிவான அச்சுறுத்தலை அவர் வெளியிட்டார். Breitbart News க்கு அவர்கள் "இடதை" விட "உறுதியானவர்கள்" என்று கூறினார்.

பெப்ரவரி மாதம் முக்கிய ஆபிரிக்க-அமெரிக்க மற்றும் யூத நபர்களையும் அமெரிக்க ஜனநாயக சோசலிச கட்சி (DSA) உறுப்பினர்களையும் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த பாசிச அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரியும் ட்ரம்ப் இன் ஆதரவாளருமான கிறிஸ்தோபர் போல் ஹஸன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இது இடம்பெற்றுள்ளது.

கிறிஸ்ட்சேர்ச்சின் தாக்குதலுக்கு முன்னரான வாரங்களில், இஸ்ரேலிய அரசாங்கத்தின் பாலஸ்தீனர்கள் மீதான மிருகத்தனமான நடவடிக்கை மீதான இடதுசாரி விமர்சகர்களுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதியான லான் ஒமர் ஒரு முஸ்லிம், இரு கட்சிகளுடனுமான சியோனிச ஆதரவாளர்களின் செல்வாக்கை சுட்டிக்காட்டியமையால் ஒரு "யூத-விரோதி" என்று முத்திரையிடப்பட்டார். இந்த பிரச்சாரம் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இடதுசாரி எதிர்ப்பை இல்லாமல் செய்வதையும், சட்டவிரோதமானதாக்குவதையும் இலக்காகக் கொண்ட, இங்கிலாந்து தொழிற் கட்சியின் தலைவர் ஜெர்மி கோர்பின் மற்றும்  நூற்றுக்கணக்கான தொழிற் கட்சி உறுப்பினர்களைக் "யூத-எதிர்ப்புவாதிகள்" என்று குற்றஞ்சாட்டும் வேட்டையை எதிரொலிக்கிறது.

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் அரசியல்வாதிகள் இனவெறி மற்றும் வன்முறையை கண்டித்து பாசாங்குத்தனமான அறிக்கைகளை வெளியிடுகின்றபோது, 2001 ல் இருந்து அவ் அரசாங்கங்கள், முஸ்லீம் அகதிகள் ஒரு அச்சுறுத்தல் மற்றும் சாத்தியமான பயங்கரவாதிகளின் ஐந்தாம்படை என்று அச்சுறுத்தலாக சித்தரித்து ஒவ்வொரு சமூக பிரச்சனைகளுக்கும் குடியேற்றத்தை குற்றஞ்சாட்டின.

தொழிற் கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில், பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகாரங்கள் ஆகிய அமைச்சுக்களை வசப்படுத்தியுள்ள நியூசிலாந்து முதல் கட்சி, டாரன்ட் மற்றும் பிற வலதுசாரி தீவிரவாதிகளால் பயன்படுத்தப்படுவதிலிருந்து வேறுபட்ட மொழியை பயன்படுத்தாத முஸ்லீம் மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து "பாரிய குடியேற்றத்தை" நிறுத்துவதற்கு தொடர்ச்சியாகக் கோருகிறன.

கிறிஸ்ட்சேர்ச்சின் காட்டுமிராண்டித் தாக்குதல், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) ஜனவரி 3, 2019 அறிக்கையின் எச்சரிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது: 2019 இல் சர்வதேச வர்க்கப் போராட்டத்திற்கான மூலோபாயமும் முதலாளித்துவ பிற்போக்குத்தனத்திற்கு எதிரான அரசியல் போராட்டமும் என்பதில் இதுவரையில், பாசிச இயக்கங்களுக்கு ஒரு வெகுஜன அடித்தளம் இல்லாதபோதும், இருக்கின்ற முதலாளித்துவ கட்சிகளது பிரிவுகளது ஆதரவையும் வெகுஜன ஊடகங்களின் ஊக்குவிப்பையும் அவை நம்பியிருக்கின்றன. எவ்வாறாயினும் அவ்வாறான அபாயம் தெளிவாக இருக்கிறது.

"பரந்த மக்கள் உணர்கின்ற அதிருப்தியையும் கோபத்தையும் வலது-சாரி இயக்கங்கள், ஆளும் வர்க்கத்தின் மற்றும் அரசின் பிரிவுகளது ஆதரவுடன், வாய்வீச்சில் சுரண்டிக் கொள்ள" முனைகின்றது என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. "அனைத்து வரலாற்று அனுபவங்களும் குறிப்பாக 1930 களின் நிகழ்வுகளும், பாசிசத்திற்கு எதிரான போராட்டமும் முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதன் அடிப்படையில் மட்டுமே அபிவிருத்திசெய்யப்பட முடியும் என்பதை நிரூபிக்கிறது" என அது வலியுறுத்துகிறது.

ஜேர்மனி, ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் பாசிச சக்திகளை ஊக்குவிப்பதற்கு எதிரான போராட்டத்தில், வரலாற்றின் முக்கிய பாடங்களைக் கொண்டு வருவதற்கான போராட்டத்தை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுத்துள்ளது.

இந்த போராட்டம் அதன் ஐரோப்பிய பிரிவுகளின் தேர்தல் பிரச்சாரத்தின் மையத்திலும், "பாசிச அச்சுறுத்தல் மற்றும் எவ்வாறு போராட வேண்டும்" என்ற தலைப்பில் அமெரிக்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு தொடர்ச்சியான பொதுக் கூட்டங்களிலும் மையமாக உள்ளது. ஜேர்மனியில் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினரும் ஏன் அவர்கள் மீண்டும் வருகிறார்கள்? வரலாற்று பொய்மைப்படுத்தல், அரசியல் சதி மற்றும் ஜேர்மனியில் பாசிசம் திரும்புதல் நூலின் ஆசிரியருமான கிறிஸ்டோப் வான்ட்ரேயர் இதுபற்றி கூட்டங்களில் கலந்துரையாடுகிறார்.

1920 கள், 30 கள் மற்றும் 40 கள் ஆகியவற்றைக் காட்டிலும் சமுதாயத்தை மூழ்கடிக்க முயலும் பாசிசத்தின் அச்சுறுத்தலைத் தடுக்கக்கூடிய ஒரு ஐக்கியப்பட்ட, சர்வதேச மற்றும் சோசலிச தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் தலைமையாக நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு கட்டமைக்கப்பட வேண்டும்.