ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Governments and media seek to cover up culpability for fascist attack in New Zealand

நியூசிலாந்தில் பாசிசத் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததை மூடிமறைக்க அரசாங்கங்களும் செய்தி ஊடகங்களும் முயல்கின்றன

By James Cogan
19 March 2019

கடந்த வெள்ளியன்று கிறிஸ்ட்சேர்ச்சில் உள்ள இரண்டு மசூதிகளில் நடைபெற்ற பாசிச பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக விழிப்புணர்வு மற்றும் பிற நினைவஞ்சலி நிகழ்வுகளில் நியூசிலாந்து முழுவதிலும், அவுஸ்ரேலியாவிலும் ஏனைய பல நாடுகளிலும் பாரியளவிலான மக்கள் தமது உணர்வை காட்டும்  கலந்துகொண்டனர்.

இந்தக் கொடுஞ்செயல் நியூசிலாந்தின் வரலாற்றில் மிக மோசமான பாரிய கொலையாகவும், சர்வதேச ரீதியாக பாசிச பயங்கரவாதத்தின் மிகவும் காட்டுமிராண்டித்தன செயல்களில் ஒன்றாகவும் காணப்படுகிறது. ஐம்பது பேர் தங்கள் உயிர்களை இழந்துள்ள அதே நேரத்தில் ஒன்பது பேர் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பது உட்பட 31 பேர் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் மருத்துவமனையில் இருக்கிறார்கள். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாலஸ்தீனத்திலிருந்து புலம்பெயர்ந்து நியூசிலாந்தில் பல தசாப்தங்களாக வசித்தவர்கள் ஆவர். மற்றவர்கள் மத்திய கிழக்கில் இஸ்லாமியவாத "பயங்கரவாதத்தை" எதிர்த்தல் என்னும் போலிக் காரணத்தை கொண்ட அமெரிக்க தலைமையிலான போர்கள் மற்றும் நிழல் யுத்தம் காரணமாக தங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்த அகதிகள் ஆவர்.

தமது ஐக்கியத்தை காட்டும் இந்த நிகழ்வுகள், முஸ்லீம்-விரோத இனவெறி, தீவிர வலதுசாரி கண்டனம், பயங்கரவாத நடவடிக்கைக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்ட 28 வயதான அவுஸ்ரேலிய பிரெண்டன் டாரன்ட் இன் பாசிச கருத்துக்கள் என்பவற்றுக்கு எதிரான ஆழ்ந்த எதிர்ப்பின் வெளிப்பாடுகளாகும்.

டாரன்ட் "தனி ஓநாய்" மற்றும் ஒரு "பைத்தியக்காரன்" மட்டுமே என்பதை நிரூபிப்பதற்கு இன்னும் அதிகமான தகவல்கள் வெளிவந்துள்ளன. பல ஆண்டுகளாக, சர்வதேச பாசிச வலையமைப்புக்களுடன் தொடர்பை கொண்டு, அவ் வலையமைப்புக்களின் அரசியலால் வடிவமைக்கப்பட்டு, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து, ஐரோப்பா, அமெரிக்காவின் அரசியல் நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களினால் குடியேற்ற எதிர்ப்பு மற்றும் முஸ்லீம்-எதிர்ப்பு பகையுணர்வு ஆகியவை உலகம் முழுவதும் தூண்டப்பட்டதால் இது உருவாக்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பா முழுவதும் பரந்தளவில் பயணம் மேற்கொண்டதுடன், துருக்கி, பாகிஸ்தான் மற்றும் வட கொரியாவிற்கு கூடச் டாரன்ட் பயணித்துள்ளார். அவர் 8chan வலைத் தளத்தில் தீவிர வலதுசாரி விவாதங்களில் பங்குபற்றியதுடன், அதே போல் பேஸ்புக் மற்றும் பிற ஊடகங்களின் பதிவுகள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அவர் தன்னுடய பெயரையோ அல்லது அவரது கருத்துக்களை மறைக்கவில்லை.

பிரான்சில் இருந்த வேளையி்ல், பயங்கரவாத வெகுஜன படுகொலை செயலை நடத்த முடிவு செய்ததாக அவர் தனது விளக்க அறிக்கையில் கூறுகிறார். 2017 தேர்தல்களில் பாசிச தேசிய முன்னணி தோல்வி அடைந்தது. "முஸ்லீம் படையெடுப்பாளர்களுக்கு" எதிராக கடந்த காலங்களில் சண்டைகள் இடம்பெற்ற பல்கேரியா, ருமேனியா, ஹங்கேரி, சேர்பியா மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அவ்விடங்களைப் பார்வையிட்டு, நவம்பர் 2018 முதல் ஜனவரி 2019 வரையான காலப்பகுதியில் வெள்ளிக்கிழமை தாக்குதலுக்கு திட்டமிட்டார்.

அவுஸ்ரேலிய மற்றும் நியூசிலாந்து அரசாங்கங்கள், 2001 இல் "பயங்கரவாதத்தின் மீதான போர்" தொடங்கியதில் இருந்து அளவிலும் மற்றும் அதற்கான வளங்கள் பரந்த அளவில் விரிவடைந்துள்ள தங்களின் உளவுத்துறை அமைப்புகளின் "கண்காணிப்பில் டாரன்ட் இல்லை" என்று தொடர்ந்து வலியுறுத்துகின்றன. இரு நாடுகளினதும் முஸ்லீம் சமூகங்கள் 18 ஆண்டுகள் கண்காணிப்பு மற்றும் பல பொலிஸ் நடவடிக்கைகளுக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால் தீவிர வலதுசாரி ஆதரவைக் கொண்டிருக்கும் அமைப்புக்களுடன் தொடர்பு கொண்ட, 2017 இறுதியில் துப்பாக்கி உரிமத்திற்கு விண்ணப்பித்த பின்னரும் மற்றும் நாடு திரும்பியதும் நியூசிலாந்தில் இந்த ஆண்டு துப்பாக்கி சங்கத்தில் சேர்ந்த ஒரு நபரை புறக்கணித்திருக்கின்றனர்.

மேலும், டாரன்ட் அவரது கொலை செய்யும் நோக்கங்களை மறைக்க முற்பட வில்லை. தாக்குதலுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக, தனது ட்விட்டர் கணக்கில் வெள்ளை மேலாதிக்க சுலோகங்களை கொண்ட அவரது அரை-தானியங்கி துப்பாக்கியின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்தார். அவரது பாசிச அறிக்கையில் குறிப்பாக அவர் தாக்குதல் நடத்தவிருந்த இரண்டு மசூதிகளின் பெயர்களை குறிப்பிட்டு படுகொலைகளை ஆரம்பிப்பதற்கு சுமார் எட்டு நிமிடங்களுக்கு முன்னர் டஜன் கணக்கான அரசாங்க மற்றும் ஊடக கணக்குகளுக்கு அனுப்பினார். அவர் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டிருந்தால், இந்த அட்டூழியத்தை முற்றிலும் தடுத்திருக்கலாம்.

மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் அதிர்ச்சியையும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ள நிலையில், நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் சர்வதேச அளவில் அரசியல் மற்றும் செய்தி ஊடக அமைப்புகளின் இப்பயங்கரம் தொடர்பான உத்தியோகபூர்வ கருத்து பாசிச பயங்கரவாதத்தின் வளர்ச்சியில் தங்கள் சொந்த பங்கை  மூடிமறைப்பதாக உள்ளது.

அவுஸ்ரேலியாவில், தாராளவாத-தேசிய கூட்டணி மற்றும் தொழிற் கட்சி அரசாங்கங்கள் 18 ஆண்டுகாலமாக முஸ்லீம்-விரோத வெறுப்பையும், ஒரு கொடூரமான இனவாத கொள்கையையும் வலியுறுத்துவதால் முஸ்லீம் அகதிகளை பெரும்பாலும் "பயங்கரவாதிகள்" என்ற பெயரில் நாட்டில் புகலிடம் கோருவதைத் தடுக்கிறது. பிரதமர் ஸ்கொட் மோரிசன், உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் மற்றும் முன்னாள் பிரதமர் ரொனி அபோட் உள்ளிட்ட தற்போதைய கூட்டணி அரசாங்கத்தின் முக்கிய நபர்கள், இந்த கொள்கைகளுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையவர்களாவர்.

பல தசாப்தங்களாக புலம்பெயர்ந்தோருக்கு எதிரான இனவெறி "One Nation" போன்ற இனவாதக் கட்சிகளுக்கு மட்டுமல்ல பல எண்ணிலடங்காத வலதுசாரி மற்றும் நவ பாசிச குழுக்களுக்கும் எழுச்சியைக் கொடுத்துள்ளது. தீவிர வலதுசாரி குறிப்பாக தமக்கு ஆதரவைச் சேர்ப்பதற்கான அதன் முயற்சிகளை மையமாகக் கொண்டிருந்த நச்சு அரசியல் சூழ்நிலை உள்ள அவுஸ்ரேலிய பிராந்திய நகரத்தில்தான் டாரன்ட் வளர்ந்தார்.

நியூசிலாந்தில், ஜசிந்தா ஆர்டர்ன் தலைமையிலான தொழிற் கட்சி- நியூசிலாந்து முதல் கூட்டணி அரசாங்கம் குடியேற்றக் குறைப்பு எனும் ஒரு வெளிப்படையான திட்டத்தினால் அதிகாரத்திற்கு வந்தது. அது தவறான அடிப்படையில் வீட்டுவசதி மற்றும் பிற சமூக பிரச்சினைகளுக்கு பொறுப்பாக குடியேற்றத்தை காரணமாக காட்டியது. துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான நியூசிலாந்து முதலின் தலைவரும் வெளிப்படையான இனவெறியாளருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ், முஸ்லீம், ஆபிரிக்க மற்றும் சீன குடியேறிகளுக்கு எதிரான இனவெறியை விதைப்பதில் அதிகளவில் செயற்பட்டார். நியூசிலாந்தில் உள்ள தீவிர வலதுசாரி கட்சிகள் பீட்டர்ஸ் ஐ பாராளுமன்றத்தில் தமது சிறந்த பேச்சாளராக புகழ்ந்துரைக்கின்றன.

குடியேற்ற எதிர்ப்பு மற்றும் தேசியவாத வார்த்தையாடல்கள், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் பெருமளவில் அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மை மற்றும் அத்தியாவசிய சேவைகளின் செயலிழப்பு ஆகியவற்றிற்காக புலம்பெயர்ந்தவர்களை பலிக்கடா ஆக்குவதற்கும் சர்வதேச அளவில் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தால் பயன்படுத்தப்படுகின்றன. ட்ரம்ப் நிர்வாகத்தின் மிகத்தெளிவான "அமெரிக்கா முதல்" போன்ற இனவெறிக் கொள்கைகள் ஒரு உலகளாவிய போக்கின் முரட்டுத்தனமான வெளிப்பாடு ஆகும். பிரான்சிலும் ஜேர்மனிலும் உள்ளது போல் தற்போது ஐரோப்பாவிலும் தீவிர வலதுசாரிக் கட்சிகள் ஏராளமான அரசாங்கங்களின் ஒரு அங்கமாக அல்லது பிரதான உத்தியோகபூர்வ எதிர்க் கட்சியாக காணப்படுகின்றன.

முதலாளித்துவத்தின் நெருக்கடி மற்றும் தோல்வி காரணமாக பாசிசம் எழுகின்றது. புரட்சிகர சமூக மற்றும் அரசியல் மாற்றத்திற்கான அபிவிருத்தியில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன மற்றும் ஐக்கியப்பட்ட சோசலிச இயக்கத்தை தடுத்து நிறுத்துதல் மற்றும் உடைத்தலே முதலாளித்துவ வர்க்கத்திற்கு அது வழங்கும் அடிப்படை பாத்திரமாகும்.

ஒரு முழு பாசிச கும்பல்களின் கருத்துக்களால் செல்வாக்கு செலுத்தப்பட்டதை டாரன்ட் அவரது அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடுகிறார். சோசலிசவாதிகள், புலம்பெயர்ந்தோர், முஸ்லீம்கள் மற்றும் யூதர்கள் போன்ற சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக இராணுவ சர்வாதிகாரங்கள் மற்றும் இன அழிப்புக் கொள்கைகளை நிறுவுவதற்கான போலிக்காரணத்தை வழங்குவதன் மூலம் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற நாடுகளிலும் இனவெறியைத் தூண்டும் வன்முறைகளை அவர் ஊக்குவித்தார்.

நியூசிலாந்தில் ஆர்டன், ஆஸ்திரேலியாவில் மோரிசன் ஆகியோர் இப்போது சமூக ஊடக தளங்களில் உள்ள அறிக்கைப் பலகைகள் மற்றும் பதிவுகளை தணிக்கை செய்வதற்கும், நேரடி வீடியோ ஒளிபரப்பில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதையும் கோருகின்றனர். இத்தகைய நடவடிக்கைகள் பாசிச கருத்துக்களை தடுக்க முக்கியமாக பயன்படுத்தப்படாது, மாறாக சமூக சமத்துவமின்மை மற்றும் போருக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மற்றும் போராட்டங்களை இல்லாதொழிக்கவே பயன்படுத்தப்படும்.

இதுவே 2011 ல் நோர்வே தொழிற் கட்சி முகாமில் முக்கியமாக இடதுசாரி இளைஞர்கள் 77 பேரைப் படுகொலை செய்த ஆண்டர்ஸ் பெஹ்ரிங் பிரைவிக்கின் இரத்தக்களரி பாசிச பயங்கரவாத தாக்குதலை அடுத்து நிகழந்ததாகும். இது நடைமுறை ஊடகங்களில் மற்றும் அரசாங்கத்தின் மிக உயர்ந்த மட்டத்தில் தீவிர வலதுசாரி பிரச்சாரத்தின் திறந்த ஊக்குவிப்பிற்கு பின் தொடர்ந்து வந்துள்ளது.

தீவிர வலதுசாரி கருத்துக்களை உத்தியோகபூர்வமாக ஊக்குவித்தல், ஆதரவளித்தல் என்பவை, டாரன்ட் போன்ற நபர்களின் குற்றங்களுக்கும் பல்வேறு நாடுகளில் பாசிசக் கட்சிகளில் சேரும் நோக்குநிலை தவறிய அடுக்குகளின் முடிவுகளுக்கும் பொறுப்பாக உள்ளது. இத்தகைய அமைப்பு இன்னும் வெகுஜன இயக்கங்களாக இல்லை என்றாலும், அவர்கள் தரும் ஆபத்தைக் குறைவாக மதிப்பிடப்படக் கூடாது.

1920 கள் மற்றும் 1930 களின் இருந்து பெறும் பாடம் என்னவெனில் பாசிசத்திற்கு எதிரான போராட்டம் முதலாளித்துவ வர்க்கத்திடமோ அல்லது எந்த பிரிவினராலோ அல்லது கட்சியாலோ நிறைவேற்ற முடியாது என்பதுதான். சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு அரசியல்ரீதியாக சுயாதீனமான இயக்கத்தின் மூலம் மட்டுமே முதலாளித்துவத்திற்கும் அதன் காலத்திற்கு ஒவ்வாத தேசியப் பிளவுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவும், சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்கும் நனவுபூர்வமாக போராடுவதன் மூலம் அது அடையப்பட முடியும். நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் உலகெங்கிலும் அவ்வாறான ஒரு இயக்கத்தை கட்டியெழுப்புவது அவசரமான பணியாக உள்ளது.