ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Office workers killed in building fires in Bangladesh

பங்களதேஷில் நிகழ்ந்த கட்டிட தீ விபத்தில் அலுவலக பணியாளர்கள் பலி

By Rohantha De Silva
6 April 2019

உலகிலேயே மிக நெருக்கமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஒன்றான பங்களதேஷின் தலைநகரம் டாக்காவை பெரும் தீ விபத்துக்கள் தொடர்ந்து தாக்கி வருகிறது. கடந்த வாரம் பிற்பகுதியில், நகரின் ஒரு உயர்சந்தை வணிக மாவட்டத்தில் உள்ள ஒரு 23 அடுக்கு கட்டிடமான FR Tower இல் ஏற்பட்ட தீ விபத்தில் 26 அலுவலக பணியாளர்கள் கொல்லப்பட்டதுடன் குறைந்தபட்சம் 70 பேர் படுகாயமடைந்தனர். இரண்டு நாட்களுக்குப் பின்னர், நகரின் வடக்குப் பகுதியில் ஒரு சந்தை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 300 சிறிய கடைகளை மற்றொரு தீ விபத்து தரைமட்டமாக்கியது.


FR Tower இல் பற்றியெரியும் தீ [புகைப்பட உதவிக்கு நன்றி: Twitter user @iamkanizliza]

இந்த வாரம், டாக்காவில் மேலும் மூன்று தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதனன்று இரவு, வாரியில் சலாலுதின் சிறப்பு மருத்துவமனையிலும், பால்டனில் Tropical Tower இலும் தீ பற்றிக் கொண்டது, இரண்டுமே நகரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளன, மேலும் வியாழனன்று அதிகாலையில் 1,300 கடைகள் கொண்ட ஒரு வரிசையில் பற்றிய தீ 25 சிறு கடைகளை எரித்து நாசமாக்கியது. அதில் உயிரிழப்புக்கள் எதுவுமில்லை என்றாலும், குறைந்த கட்டிட தரங்கள் மற்றும் தீ பாதுகாப்பு, அத்துடன் தேவைக்குக்குறைந்த அவசர சேவைகள் போன்றவை நகரத்தை அதன் குடியிருப்பாளர்களுக்கு ஒரு மரணப் பொறியாக ஆக்கியுள்ளது.

அடுத்தடுத்த பங்களதேஷ் அரசாங்கங்கள், பாதுகாப்பு மற்றும் கட்டிட குறியீட்டு மீறல்கள் குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறி வந்துள்ளன, என்றாலும் எந்தவொரு உண்மையான மாற்றங்களும் செயல்படுத்தப்படவில்லை, ஏனென்றால் திட்டமிடல், கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் என அனைத்தும் இலாபத்தை நோக்கிய உந்துதலுக்கு அடிபணிந்தவையாக உள்ளன.

மார்ச் 28 அன்று FR Tower தீ விபத்து நிகழ்ந்தது. கட்டிடத்திற்குள்ளே பத்தொன்பது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன, மேலும் கம்பியூட்டர் ஈயத் தகடுகள் மற்றும் ஏனைய கேபிள்களை கயிறுகளாகப் பயன்படுத்தி அந்த பல மாடி கட்டிடத்தில் இருந்து தப்பிக்க முயன்றதில் மேலும் பலர் இறந்து போயிருந்தனர்.

இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் மற்றும் சாதனங்களின் உதவியுடன் கூட 22 தீயணைக்கும் அலகுகள் நான்கு மணித்தியாலங்கள் போராடிய பின்னரே தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்தது. கட்டிடத்தின் மீது நீரைப் பாய்ச்ச விமானப்படை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. பெரும்பாலான டாக்கா கட்டிடங்களில் நிலவும் பொதுவான நிலைமையைப் போல அந்த பல மாடி கட்டிடத்திலும் தண்ணீர் தெளிப்பான்கள் அமைக்கப்படவில்லை.

டாக்கா தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஷாஜகான் சிக்தெர், கட்டிடத்திற்குள்ளே தீ பாதுகாப்பு சாதனங்கள் குறைவாக அமைக்கப்பட்டிருந்த நிலையில், பூட்டியிருந்த பல தளங்களுக்கு தீ பரவுவதற்கு அது இட்டுச் சென்றது என BBC க்கு தெரிவித்தார். சரியான வெளியேறும் வழிகள் இல்லாததால், சாளரங்கள் வழியாக உதவி கேட்டு பாதிக்கப்பட்டவர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்ததையும் காண முடிந்தது.

2006 க்கு முன்பாகவே கட்டப்பட்டிருந்த FR Tower, தீ பாதுகாப்பு கொண்ட ஒரு ஒற்றை மாடி படிக்கட்டு மற்றும் புகை நிரப்பப்பட்ட முக்கிய படிக்கட்டு என எதையும் கொண்டிருக்கவில்லை. விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்ட அலுவலக பணியாளர்கள் மட்டுமே கட்டிடத்தின் மேல்கூரைப் பகுதியை சென்றடைய முடிந்தது. செய்தி அறிக்கைகளின் படி, பங்களதேஷ் தீயணைப்புத் துறை, கட்டிடத்திற்குள் நிலவும் அபாயகரமான பாதுகாப்பு குறைபாடு பற்றி எடுத்துக்காட்டி கடந்த இரண்டு வருடங்களில் இரண்டு கடிதங்களை அதற்கு அனுப்பியுள்ளது தெரிய வருகிறது.

FR Tower அமைந்துள்ள நிலத்திற்கு சொந்தக்காரரான S.M.H.I. ஃபரூக் என்பவரும் மற்றும் கட்டிடத்தின் மேல் தளங்களை சட்ட விரோதமாகக் கட்டிய உரிமையாளர்களில் ஒருவரான உல் இஸ்லாம் என்பவரும் மார்ச் 30 இல் கைது செய்யப்பட்டு ஏழு நாட்களுக்கு விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

ஒரு பொலிஸ் அதிகாரியான அப்துல் பீட்டென் என்பவர், “கவனக்குறைவு மற்றும் அலட்சியத்தினால் பலர் இறப்பதற்கு” காரணமாக இருந்த அந்த இருவரை குற்றம்சாட்டினார். FR Tower ஐ ஒரு “பணம் தயாரிக்கும் தொழிற்சாலை” போன்று அவர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்று அவர் கூறினார். இத்தகைய அறிக்கைகள் பேரழிவுகள் குறித்த மக்களின் பெரும் சீற்றத்தை தணிப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன, என்றாலும் எப்போதும் போல எதிர்காலத்தில் அவர்களை தடுப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த பல மாடிக் கட்டிடம் பாதுகாப்பற்றது என்பது அதிகாரிகள் அறிந்ததே. உண்மையில் அந்த பல மாடி கட்டிடம் வெறும் 18 மாடிகளை மட்டுமே கொண்டிருக்க வேண்டும், ஆனால் சட்டவிரோதமாக 23 மாடிகளாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது என்பதாகக் கூறப்படுகிறது.

FR Tower இன் தவறான கட்டுமானமும், சட்டவிரோத விஸ்தரிப்பு, அவசர வெளியேற்ற வழிகள் இல்லாமை, புகை உணர்வு கருவிகள் பற்றாக்குறை மற்றும் தீயணைக்கும் சாதனங்கள் இல்லாமை போன்ற அனைத்தும் டாக்காவில் பெரும்பாலான கட்டிடங்களில் நிலவும் நிலைமையை ஒத்திருப்பதாகவே உள்ளன.

FR Tower தீ விபத்து குறித்த அவாமி லீக் தலைமையிலான அரசாங்கத்தின் பதிலிறுப்பு முற்றிலும் சிடுமூஞ்சித்தனமாக இருந்தது. முந்தைய துயரங்களைப் போலவே, தீயணைப்பு சேவைகள் மூலமாக கட்டிட ஆய்வுகளை அதிகரிப்பது உட்பட, பல்வேறு ஒப்பனை நடவடிக்கைகளை பிரதமர் ஷேக் ஹசினா எடுத்தார்.

FR Tower தீ விபத்திற்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர், மார்ச் 30 அன்று, Gulshan DNCC சந்தையில் பற்றிய தீ நூற்றுக்கணக்கான சிறிய கடைகளை அழித்து நாசமாக்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், 2017 இல், மற்றொரு தீ விபத்து சுறுசுறுப்பாக இயங்கும் சந்தைப் பகுதி ஒன்றை அழித்தது, அச்சம்பவம், வியாபாரிகள் தங்களது சொந்த கடைகளை மீண்டும் கட்டமைக்க அளவுக்கதிகமான கடன்களை நாடிச் செல்லும் நிலைக்கு அவர்களைத் தள்ளியது. இன்னும் கூட, தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவரான ஜாஹிருல் இஸ்லாம் ஊடகத்திற்கு இவ்வாறு தெரிவித்தார்: “500,000 டாக்கா (கிட்டத்தட்ட 6,000 அமெரிக்க டாலர்) அளவிற்கு சமீபத்தில் நான் ஒரு கடன் பெற்று கடையில் புதிய பொருட்களை வாங்கி இருப்பில் வைத்தேன். எனது உழைப்பு அனைத்தும் இன்று சாம்பலாகிப் போனது.

ஒவ்வொரு பாதிக்கப்பட்ட வியாபாரிக்கும் அற்ப நஷ்ட ஈடாக 10,000 டாக்கவையும், மேலும் பாதிக்கப்பட்ட சந்தை தொழிலாளர்களுக்கு 20 கிலோ கிராம் அரசியையும் அரசாங்கம் வழங்கியுள்ளது.

சமீபத்திய வருடங்களில் டாக்காவிலும் மற்றும் ஏனைய பங்களதேஷ் நகரங்களிலும் ஏற்பட்ட கட்டிட தீ விபத்துக்களில் நூற்றுக்கணக்கான குடியிருப்புவாசிகள் பலியாகியுள்ளனர். ஆகவே மிகவும் அடிக்கடி நிகழும் இத்தகைய பேரழிவுகள் குறித்து, Daily Star பத்திரிகை மார்ச் 29 அன்று, “எரியும் நகரம்” (“The City That Burns”) என்று அதன் பிரதான கட்டுரைக்கு தலைப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில், பிப்ரவரி 21 அன்று, நகரில் ஏற்பட்ட ஒரு பெரும் இரசாயன தீ மற்றும் வெடிப்பில் 78 பேர் கொல்லப்பட்டனர், மேலும் சிட்டகாங் என்ற கடற்கரையோர நகரில் ஒரு சேரிப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மற்றொரு ஒன்பது பேர் பலியாகினர்.

மார்ச் 2 அன்று, சவுக் பஜாரில் சுரிஹட்டாவில் உலோக துண்டு விற்பனை கடை ஒன்றில் தீ விபத்து நிகழ்ந்தது. ஒரு எரிவாயு உருளை வெடித்து, மூன்று தொழிலாளர்களின் உடல்களில் 30 சதவிகித அளவிற்கு எரித்து பாதிப்புக்குள்ளாக்கியது. அதே நாளில், ரப்பர் குவியலில் இருந்து பற்றிய தீயில் ஒரு சேரிப் பகுதியில் 50 வீடுகள் எரிந்து நாசமாகின.

மூன்று நாட்களுக்குப் பின்னர், பழைய டாக்காவின் நவாப்பூர் பகுதியில் ஒரு டயர் கிடங்கில் ஒரு தீ விபத்து ஏற்பட்டது, அதனைத் தொடர்ந்து நாக்கௌபராவில் ஒரு சேரிப் பகுதியில் தீ பற்றிக் கொண்டது, அதனை கட்டுக்குள் கொண்டுவர எட்டு அலகுகள் தேவைப்பட்டது.

மார்ச் 11 அன்று, காக்ஸ் பஜாரில், மோஹேஸ்காளி உபாஜிலாவில், ஒரு சந்தையில் பற்றிக் கொண்ட தீயில் 50 க்கும் அதிகமான கடைகள் அழிந்து போயின.

நாட்டின் வரலாற்றிலேயே மிக மோசமான தொழிற்சாலை தீ விபத்து 2012 இல் நிகழ்ந்தது, அதில் டாக்கா புறநகர் பகுதியில் அமைந்திருந்த எட்டு அடுக்குமாடி கட்டிடங்கள் கொண்ட Tazreen ஆடை தொழிற்சாலை பேரழிவுகரமான நெருப்பு ஜ்வாலையில் எரிந்து அழிந்து போனது. அதில் குறைந்தபட்சம் 117 பேர் வரை பலியாகினர் என்பதுடன் 200 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த பட்டியல் மிக நீண்டதாக இருந்தபோதிலும், ஊடகங்களில் 1 சதவிகித அளவிலான செய்திகளே வெளியிடப்படுகின்றன என்று Daily Star பத்திரிகை குறிப்பிடுகிறது. உண்மையில், தீயணைப்பு துறை புள்ளி விபரங்களின் படி, கடந்த மூன்று வருடங்களாக நாளொன்றுக்கு சராசரியாக 43 தீ விபத்துக்களுக்கு தீயணைப்பு வீரர்களின் தேவை இருந்து வருவதாக அறிய முடிகிறது.

டாக்கா நகரம் ஒரு குண்டு வெடிப்பின் மீது அமர்ந்திருக்கிறது. 2017 இல் மேற்கொள்ளப்பட்ட தீயணைப்பு சேவை மற்றும் சிவில் பாதுகாப்பு தலைமையகம் நடத்திய ஒரு கணக்கெடுப்பு தீயினால் நகரம் எந்த அளவிற்கு நலிவடைந்துள்ளது எனத் தெரிவிக்கிறது.

அடிப்படை தீ-பாதுகாப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கிய பின்வரும் கேள்விகளை இந்த கணக்கெடுப்பு விசாரணையில் எழுப்பியுள்ளது: கட்டிடத்தில் தீயணைப்பு சாதனங்கள் உள்ளனவா? கட்டிடம் மிகுந்த மக்கள் நெருக்கம் கொண்டதா? கட்டிடம் அவசரகால வெளியேற்ற வழிகளை கொண்டுள்ளதா? வெளியேற்ற பயிற்சிகள் செய்வது நடைமுறையில் உள்ளதா? மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? நிலத்தடி நீர்த்தேக்கம் ஏதும் இருக்கிறதா?

கணக்கெடுக்கப்பட்ட மொத்தம் 3,786 ஸ்தாபனங்களில் பெரும்பாலானவை மிகவும் ஆபத்தானவையாக கருதப்பட்டன. அதில் 129 கட்டிடங்கள் மட்டுமே “அபாயம்” அல்லது “மிகுந்த அபாயம்” அற்றவை என தரம் பிரிக்கப்பட்டிருந்தன.

பங்களதேஷின் தீயணைப்பு சேவை மற்றும் சிவில் பாதுகாப்பு தலைமையக செயல்பாட்டு இயக்குநரான, மேஜர் AKM ஷாகில் நிவாஸ், டாக்கா நகரில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், உணவகங்கள், வங்கிகள், மருத்துவமனைகள், ஊடக அலுவலகங்கள் மற்றும் சந்தைகள் என அனைத்திலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் “அச்சுறுத்துபவையாக” இருந்தன என்று தெரிவித்தார்.

பங்களதேஷின் தேசிய கட்டிட குறியீடு (Bangladesh National Building Code-BNBC) 2006 இல் தான் அமலுக்கு வந்தது என்பது அடிப்படை கட்டிட பாதுகாப்பு குறைபாட்டில் உள்ள ஒரு முக்கிய காரணியாக உள்ளது. எனவே, அந்த ஆண்டிற்கு முன்னர் கட்டப்பட்ட அனைத்து கட்டிடங்களும் உண்மையான தீ பாதுகாப்பை கொண்டிருக்கவில்லை.

தீ பாதுகாப்பு குறைபாட்டிற்கு அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அவாமி லீக் மற்றும் பங்களதேஷ் தேசிய கட்சி (Bangladesh National Party-BNP) அரசாங்கங்களும் அரசியல் ரீதியாக பொறுப்பானவை என்றாலும், இந்த துயரங்களுக்கான உண்மையான காரணம் முதலாளித்துவ அமைப்பு முறையிலும், மற்றும் தொழிலாளர் நலனையும் வாழ்க்கையையும் பணயம் வைத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலாபம் ஈட்ட முனையும் அவர்களது உந்துதலிலும் தங்கியுள்ளது.