ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

After terrorist bombings, Sri Lankan government imposes draconian national emergency

பயங்கரவாத குண்டுவெடிப்புகளுக்குப் பின்னர், இலங்கை அரசாங்கம் கடுமையான தேசிய அவசரகால நிலையை திணிக்கிறது

K. Ratnayake and Peter Symonds
23 April 2019

இலங்கை அரசாங்கம் ஞாயிற்றுக் கிழமை குறைந்தபட்சம் 320 உயிர்களைக் கொன்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களை, தேசிய அவசரகால நிலையை அமுல்படுத்த சுரண்டிக்கொண்டது. இது, கைது செய்யவும் தடுப்புக் காவலில் வைக்கவும் பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு கொடூரமான அதிகாரங்களை கொடுக்கின்றது.

அநேக விபரங்கள் வெளியிடப்படாத அதேவேளை, ஞாயிறன்று சில விநாடிகள் வித்தியாசத்தில், உயிர்த்த ஞாயிறு ஆராதனையால் நிரம்பி வழிந்த மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று ஆடம்பர ஹோட்டல்கள் மீது ஒருங்கிணைந்த குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. காயமடைந்த 500 க்கும் அதிகமானோரில் பலர் கவலைக்கிடமாக இருப்பதால், இறப்பு எண்ணிக்கை உயரக் கூடும்.

உலக சோசலிச வலைத் தளம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுமாக அப்பாவிகளை கண்மூடித்தனமாக கொன்ற பயங்கரமான குண்டுத் தாக்குதல்களை கண்டனம் செய்கின்றது. இந்த தாக்குதல்கள் ஏற்கனவே ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கடுமையாக்குவதற்கு சாக்குப் போக்கை வழங்கியுள்ளன.


கட்டுவப்பிட்டிய தேவாலயத்தில் உடல்களை மீட்க தேடுகின்றனர்

அவசரகால நிலை அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, அரசாங்கம் "பொய் செய்தி" பரப்பப்படுவதை தடுப்பதற்கான என்ற பெயரில் முகநூல், யூடியூப் மற்றும் வட்ஸ்அப் உட்பட சமூக ஊடகத்தின் மீது முன்னெப்போதும் இல்லாத நாடு தழுவிய தடையை திணித்துள்ளது. ஊரடங்குச் சட்டம் ஏற்கனவே அமுலில் உள்ளது.

இந்த அவசரகால பிரகடனம், அவப்பெயர் பெற்ற பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிரதான பகுதிகளை நடைமுறைக்கு கொண்டுவரும். இது எவரையும் பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் எதேச்சதிகாரமாக கைது செய்வதற்கு இராணுவத்துக்கும் பொலிசுக்கும் அனுமதியளிப்பதோடு கைதிகளை குற்றச்சாட்டுக்கள் இன்றி நீண்ட காலத்துக்கு தடுத்து வைக்கவும் அனுமதிக்கின்றது.

சித்திரவதைகள் மூலம் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் பயன்படுத்த அனுமதிக்கும் பயங்கரவாத தடைச் சட்டம், கொழும்பில் அடுத்தடுத்து ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான மூன்று தசாப்தகால கொடூரமான இனவாத யுத்தத்தை முன்னெடுத்த போது பரவலாக பயன்படுத்தப்பட்டது.

இந்த அவசரகால அதிகாரங்கள், "கலவரம், வன்முறை அல்லது சிவில் கலகங்களை" பலாத்காரமாக நசுக்கவும் மற்றும் கடந்த காலத்தில் வேலைநிறுத்தங்களை அடக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட அத்தியாவசிய சேவை சட்டத்தை பயன்படுத்தவும் அனுமதிக்கின்றன. பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு நினைத்த இடத்தில் நுழையவும் தேடுதல் நடத்தவும், சொத்தை கைப்பற்றுவதற்கும், நிலம் தவிர வேறு சொத்துகளை கட்டாயமாக வாங்குவதற்கும் அதிகாரம் கொடுக்கின்றது.

அரசாங்கத்தின் கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் மீண்டும் எழுச்சியடையும் நிலைமையின் மத்தியில், இந்த ஆழ்ந்த ஜனநாயக-விரோத நடவடிக்கைகள், எல்லாவற்றுக்கும் மேலாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டதாகும் என்று WSWS எச்சரிக்கின்றது. தொழிற்சங்கங்களால் விற்றுத் தள்ளப்படுவதற்கு முன்னதாக இலட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் கடந்த டிசம்பர் மாதம் தங்களுடைய வறுமை நிலை ஊதியத்தை இரட்டிப்பாக்குமாறு கோரி வேலைநிறுத்தம் செய்தனர்.

அவசரகால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் முதல் நடவடிக்கைகளில் ஒன்று, மே தினக் கூட்டங்கள் மற்றும் கூட்டங்கள் அனைத்தையும் தடை செய்வதாக இருந்தது. இது, அடக்குமுறையின் உண்மையான இலக்கு தொழிலாள வர்க்கம் என்பதற்கு ஒரு தெளிவான அடையாளம் ஆகும். சர்வதேச தொழிலாளர்களின் ஒற்றுமை தினமாக மே 1 பாரம்பரியமாக இலங்கை தொழிலாள வர்க்கத்தால் பரவலாக கொண்டாடப்படுகின்றது.

வளர்ச்சியடைந்து வரும் வர்க்கப் போராட்டம் மற்றும் அமெரிக்காவிற்கும் சீனாவுக்கும் இடையில் ஆழமடைந்து வரும் பூகோள-அரசியல் போட்டிகளாலும் தூண்டிவிடப்பட்ட, கொழும்பில் உள்ள ஆளும் வட்டாரங்களுக்கு இடையில் நிலவும் ஒரு கடுமையான அரசியல் நெருக்கடியின் மத்தியிலேயே இந்த குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

தற்போதைய இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்கவின் உதவியுடன் வாஷிங்டனால் திட்டமிடப்பட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையின் மூலம் 2015 தேர்தலில் மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தை அகற்றி அதிகாரத்திற்கு வந்தார். பின்னர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார். சீனா உடனான இராஜபக்ஷவின் நெருங்கிய உறவுகளுக்கு அமெரிக்கா எதிராக இருந்தது.

எவ்வாறெனினும், மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மீதான அதன் பெரும் தாக்குதல்களின் விளைவாக அரசாங்கம் அவப்பேறு பெற்றதால், சிறிசேன மற்றும் விக்கிரமசிங்கவும் முரண்பட்டுக்கொண்டனர். கடந்த அக்டோபரில், சிறிசேன விக்கிரமசிங்கவை பதவி நீக்கி, இராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார், பின்னர், பாராளுமன்றத்தை கலைத்தார். வாஷிங்டனின் அழுத்தத்தின் கீழ், உயர் நீதிமன்றம் அவரது நடவடிக்கைகளை அரசியலமைப்பிற்கு முரண்பாடானது என அறிவித்ததை அடுத்து, அவர் மீண்டும் விக்ரமசிங்கவை பதவியில் அமர்த்த நிர்பந்திக்கப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமை குண்டுத் தாக்குதல்கள், இந்த கசப்பான போட்டிகள், சதிகள் மற்றும் சூழ்ச்சிகளின் சூழ்நிலையிலேயே நடந்துள்ளன. மிகவும் அசாதாரணமான ஒரு அம்பலப்படுத்தல் என்னவெனில், குண்டுவீச்சுக்கு 10 நாட்களுக்கு முன்னதாகவே, தேசிய தௌஹீத் ஜம்மா’ஆத் என்ற இஸ்லாமிய அமைப்பினால் "முக்கியமான தேவாலயங்களை இலக்கு வைத்து தற்கொலை தாக்குதல்கள் நடத்தவுள்ள" திட்டங்களை பற்றி ஒரு வெளிநாட்டு புலனாய்வு அமைப்பின் எச்சரிக்கையை இலங்கை பொலிஸ் பெற்றிருந்தமை ஆகும்.

பொலிஸ் நடவடிக்கை எடுக்கத் தவறியமை சம்பந்தமாக பொதுமக்களின் கோபத்தை திசைதிருப்பும் அவநம்பிக்கையான முயற்சியில் விக்கிரமசிங்க, சிறிசேன மற்றும் இராஜபக்ஷ தலைமையிலான போட்டி கன்னைகள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொள்கின்றனர். எவ்வாறாயினும் தெளிவான கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை: முன்னர் பௌத்த சிலைகளை உடைத்ததாக மட்டுமே அறியப்பட்ட ஒரு சிறிய, பெரும் பிரசித்தி அற்ற இஸ்லாமிய குழு, மாதக் கணக்கான தயாரிப்புகள் தேவைப்படும் தற்கொலைக் குண்டுவீச்சாளர்கள் அடங்கிய ஒரு நவீன ஒருங்கிணைந்த தாக்குதலுக்கு தேவையான வளங்களையும் திறன்களையும் எவ்வாறு பெற்றிருக்க முடிந்தது?

மேலும், தாக்குதல்காரர்களின் பெயர்களைக் குறிப்பிட்டே புலனாய்வு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட பின்னரும் கூட, பல தசாப்தங்களாக உள்நாட்டுப் போரில் கட்டியெழுப்ப்பட்ட பொலிஸ், இராணுவ மற்றும் புலனாய்வு சேவைகள், எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காதது ஏன்? கொழும்பு அரசியல் ஸ்தாபகமும் பாதுகாப்பு எந்திரமும் சிங்கள பௌத்த பேரினவாதத்தில் ஆழமாக மூழ்கியுள்ளதோடு, கடந்த காலத்தில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது அவர்களின் வழிபாட்டு தலங்களில் வைத்து தாக்கிய பௌத்த தீவிரவாத குழுக்களுடனும் அவற்றுக்கு வலுவான தொடர்புகள் உள்ளன.

அரசாங்க அமைச்சர்கள் ஒரு கெட்ட "சர்வதேச வலையமைப்பை" சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை, குற்றவாளிகள் உள்நாட்டிலேயே இருந்துள்ளனர் என்பதை மறுக்க முடியாது. இராணுவ-பொலிஸ் எந்திரத்தின் ஒரு பிரிவால், வரவிருக்கும் தாக்குதல் சம்பந்தமாக கண்டும் காணாதது போல் இருக்க முடியுமா? அல்லது அரசியல் நோக்கங்களை முன்னெடுப்பதன் பேரில் குண்டுவீச்சாளர்களை கையாள முடியுமா? தீவின் நீடித்த உள்நாட்டு யுத்தத்தின் போது பாதுகாப்புப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட அழுக்குத் தந்திரங்கள் மற்றும் குற்றங்களின் நீண்ட வரலாற்றை எடுத்துப் பார்க்கும் போது இது நிச்சயமாக சாத்தியமாகும்.

பிபிசி இற்கு ஒரு குறிப்பிடத்தக்க அம்பலப்படுத்தும் விடயங்களை தெரிவிக்கையில், தொலைத் தொடர்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ பின்வருமாறு அறிவித்தார்: "நாம் இதைப் பார்க்க பல வழிகள் உள்ளன, ஆனால் இப்போது எட்டு அல்லது 10 அல்லது 12 பேர்களால் இத்தகைய தாக்குதல் முன்னெடுக்கப்படுவதற்கு வழிவகுத்தது என்ன என்பதை கண்டு பிடிப்பதே எமது பெரும் முன்னிரிமை ஆகும். ஆனால் நாங்கள் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சதியை நிராகரிக்கவும் இல்லை." (அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது)

குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னால் எத்தகைய கபடத்தனங்கள் இருந்திருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம், அவர்களுக்கு இடையிலான பகைமைகள் ஒரு புறம் இருக்க, ஆளும் வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளும், ஒரு அடிப்படைப் பிரச்சினையில் அவர்கள் முற்றிலும் ஒற்றுமையாக இருக்கின்றனர்: அது தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் போராட்டங்களையிட்டு அவர்களுக்கு உள்ள ஆழ்ந்த அச்சமும் எதிர்ப்பும் ஆகும்.

முதல் தடவையாக சமூக ஊடகங்கள் மீதான தடை உட்பட இலங்கையில் பொலிஸ்-அரச நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படுகின்றமை, உலகெங்கிலும் நடைமுறைப்படுத்தப்படும் ஜனநாயக விரோத செயற்பட்டியலின் ஒரு பகுதியாகும். கடந்த மாதம், நியூசிலாந்தில் மசூதிகளின் மீது நடந்த பாசிச தாக்குதலை அடுத்து, நியூசிலாந்து அரசாங்கம் இணைய தணிக்கை செய்ததோடு இப்போது அரச அடக்குமுறை எந்திரத்தை விரிவுபடுத்தி வருகின்றது. இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகள் புதிய உதாரணங்களை அமைப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை ஆசியாவிலும், சர்வதேச ரீதியிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.