ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Severe police-state measures come into force in Sri Lanka

இலங்கையில் கடுமையான பொலிஸ்-அரச நடவடிக்கைகள் அமுலுக்கு வருகின்றன

By Pani Wijesiriwardena and K. Ratnayake 
24 April 2019

இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களை அடுத்து, நேற்று தேசிய அளவிலான அவசரகால நிலைமை அமுல்படுத்தப்பட்டு இராணுவம், அதே போல் பொலிசுக்கும் மிகப் பரந்த ஜனநாயக விரோத அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடும் சாக்குப் போக்கின் கீழ், உலகம் முழுவதும் உள்ள அதன் சம தரப்பினரைப் போலவே, கொழும்பு அரசாங்கமும் அதன் பொலிஸ்-அரச இயந்திரத்தை பலப்படுத்துகிறது. இது தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் எழுச்சியை அடக்குவதற்கு பயன்படுத்தப்பட உள்ளன.

அவசரகாலச் சட்டங்கள் "ஆட்சி எதிர்ப்பு, வன்முறை அல்லது கலகங்களை ஒடுக்குவதற்கு, அல்லது சமுதாயத்தின் வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் மற்றும் சேவைகளை பராமரிப்பதற்கான" நடவடிக்கைகளை எடுக்க பாதுகாப்புப் படைகளை அனுமதிக்கின்றன. அத்தியாவசிய சேவைகள் சட்டவிதியின் உட்பிரிவு கடந்த காலத்தில் வேலைநிறுத்தங்கள் மற்றும் பிற தொழிற்சங்க நடவடிக்கைகளை தடைசெய்யப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அவசரகால நிலைமையின் கீழ், "நபர்களை தடுத்து வைத்தல்; எந்தவொரு சொத்தையும் கைப்பற்றுவது அல்லது கட்டுப்படுத்துவது அல்லது உத்தரவின்றி பொறுப்பேற்பது உட்பட” பொலிஸ் அதிகாரங்களை இராணுவத்துக்கு வழங்கியுள்ளது. பயங்கரவாத சந்தேக நபர்கள் என அழைக்கப்படுபவர்களை குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் அல்லது விசாரணையின்றி நீண்டகாலமாக தடுத்து வைப்பதற்கு இந்த விதிமுறைகள் அனுமதிக்கின்றன.

தமிழ் மக்கள் மற்றும் ஒட்டு மொத்த உழைக்கும் மக்களை நசுக்குவதற்காக பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தீவின் மூன்று தசாப்தகால இனவாத யுத்தத்தின் போது பாதுகாப்புப் படைகளால் பரவலாக பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தின் உறுப்புரைகள் இந்த அவசரகால நிலைமையில் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த பயங்கரவாத தடைச் சட்டமானது ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்களை எதேச்சதிகாரமாக கைது செய்யவும், சித்திரவதை மூலம் ஒப்புதல் வாக்குமூலங்களை கறந்தெடுக்கவும் மற்றும் குற்றத்தை நிரூபிக்க அதை பிரயோகிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவசரகால நிலைமை என்ற போர்வையைப் பயன்படுத்திக்கொண்டு இன்னும் கூடுதலாக முன் சென்ற பாதுகாப்புப் படைகள், விடுதலைப் புலி சந்தேகநபர்களை மட்டுமன்றி அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் மற்றும் விமர்சிப்பவர்களுமாக நூற்றுக்கணக்கான கடத்தல்கள் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான படு கொலைகளையும் முன்னெடுத்தன.

அரசாங்கம் இப்பொழுது இந்த நடவடிக்கைகளை விரிவுபடுத்துகிறது. பேஸ்புக் மற்றும் யூடியூப் உட்பட சமூக வலைத் தளங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடு தழுவிய ரீதியில் தடை செய்யப்பட்டுள்ளதோடு, பரவலாகப் பயன்படுத்தப்படும் மற்றும் பிரபலமான தகவல்தொடர்பு முறை தணிக்கை செய்யப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில், இலங்கையில் 23 மில்லியன் பேர் கை தொலைபேசி பாவனையாளர்கள், 6.4 மில்லியன் பேர் இணையப் பயனாளர்கள் மற்றும் 5 மில்லியன் பேர் முகநூல் பாவனையாளர்களாக இருந்தனர்.

இத்தகைய பரந்தளவிலான பாய்ச்சலானது, சமூக ஊடகங்கள், கருத்துக்களை பரப்புவதற்கு மட்டுமல்லாமல் கூட்டு நடவடிக்கைகளையும் ஒழுங்குபடுத்தக் கூடிய ஒரு சக்திவாய்ந்த கருவி என்பதையிட்டு இலங்கை மற்றும் சர்வதேச அளவில் ஆளும் வட்டாரங்கள் மத்தியில் காணப்படும் ஆழமான பீதியை பிரதிபலிக்கின்றது. வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்ட அலை அதிகரித்து வரும் சூழ்நிலையில், அரசாங்கம் "பொய்யான செய்திகளை" தடுக்கும் சாக்குப் போக்கில் முழுமையான தணிக்கையை திணித்துள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உலகத் தலைவர்கள் இலங்கைக்கு தமது ஆதரவை தெரிவித்ததாக குறிப்பிட்டார். "பயங்கரவாதத்தை ஒழிக்க அவர்களின் உதவியுடன் இந்த வாய்ப்பை நாம் பற்றிக்கொள்ள வேண்டும்," என்று கூறிய அவர், "இந்த பயங்கர நிலைமையை எதிர்கொள்ள" கட்டமைப்பு மாற்றங்கள் தேவை என்று, விரிவுபடுத்த்தாமல், மேலும் கூறினார். தவிர்க்க முடியாமல் இது பொலிஸ்-அரச இயந்திரத்தை மேலும் ஊதிப் பெருக்குவதையே இது அர்த்தப்படுத்தும்.

ஞாயிற்றுக்கிழமை காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர். 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இறந்தவர்களுள் 45 பிள்ளைகள் மற்றும் சில இந்தியத் தொழிலாளர்கள், அதே போல் அமெரிக்க, ஐரோப்பிய, சீன மற்றும் ஜப்பானிய சுற்றுலா பயணிகளுமாக 48 வெளிநாட்டவர்களும் அடங்குவர்.

குண்டுத்தாக்குதலின் சில விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் கூற்றுப்படி, ஏழு தற்கொலை குண்டுதாரிகள் தேவாலயங்கள் மற்றும் ஆடம்பர ஹோட்டல்களின் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர். இஸ்லாமிய குழுவான தேசிய தௌஹீத் ஜம்மாத் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் உட்பட 40 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு (ISIS) அமைப்பு, குண்டுத் தாக்குதல்களுக்கு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டன. அவை "இஸ்லாமிய அரசு போராளிகளால்" நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. பிரசித்தியைப் பெரிதாக்குவதன் பேரில், இதற்கு முன்னர் ஐ.எஸ்.ஐ.எஸ். தான் செய்யாத தாக்குதல்களுக்கும் உரிமை கோரியுள்ளதாக பல கருத்தாளர்கள், தமது கட்டுரைகளில் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ். ஏதாவதொரு வழியில் தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளதா இல்லையா என்பது ஒரு புறம் இருக்க, காத்திரமான கேள்விகள் எஞ்சியுள்ளன. தாக்குதல் நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னரே தேசிய தௌஹீத் ஜம்மாத் அமைப்பு கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது என்ற தெளிவான எச்சரிக்கை கிடைத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்? என்பதற்கு அரசாங்கம் எந்த நம்பகமான விளக்கத்தை இன்னும் வழங்கவில்லை.

நடவடிக்கை எடுக்கப்படாமையை நியாயப்படுத்திய பாதுகாப்பு அமைச்சர் ஹேமசிறி பெர்னாண்டோ, அரசாங்கம் "அந்தளவு பெரிய" தாக்குதலை எதிர்பார்த்திருக்கவில்லை என கூறியதோடு "கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிக எண்ணிக்கையிலான தேவாலயங்களை பாதுகாப்பது சாத்தியமற்றதாக இருந்தது," என "உடனடியாக" மேலும் கூறினார்.

இந்த கருத்துக்கள் வஞ்சத்தனமான மற்றும் அபத்தமானவை. இலங்கையின் பாதுகாப்புப் படைகளானது எண்ணிக்கை அடிப்படையில் உலகின் மிகப்பெரிய இராணுவங்களில் ஒன்றாகும். அது, புலி பயங்கரவாதிகள் என அழைக்கப்படுவதை அடக்குவதற்கு ஒரு கொடூரமான யுத்தத்தை முன்னெடுத்தது. எனினும், இன்னமும் தேசிய தௌஹீத் ஜம்மாத் பற்றி விசாரிக்கவும், தேவாலயங்கள் ஒருபுறம் இருக்க எதையுமே பாதுகாக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசாங்கம் "அந்தளவுக்கு பெரிய" தாக்குதலை எதிர்பார்க்கவில்லை என்றால், அது எதை எதிர்பார்த்திருந்தது? ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை?

முழு அரசியல் ஸ்தாபகமும் பாதுகாப்புப் படைகளும் சிங்கள பௌத்த பேரினவாதத்தில் மூழ்கியுள்ளன, மற்றும் கடந்த காலத்தில் பொலிஸ் கண்டும் காணதது போல் இருக்க கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய பௌத்த தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்புகள் வைத்துள்ளன.

இலங்கை அரசாங்கமும் அரசும், துன்பத்தை அரசியல் நோக்கங்களுக்காகவும் பாதுகாப்பு படைகளின் பாய்ச்சலை நியாயப்படுத்தவும், ஞாயிறன்று நடைபெற்ற குண்டுத் தாக்குதல்கள் பற்றி கண்டும் காணாதது போல் இருந்துவிட்டனவா?

குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அனைத்து போட்டி அரசியல் கன்னைகளும், அதே போல் இராணுவமும், தங்கள் சொந்த நலன்களை மேம்படுத்த இந்த துயரத்தை சுரண்டிக்கொள்ள முனைகின்றன.

செவ்வாய் அன்று, இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க பிரகடனம் செய்ததாவது: "இந்த சூழ்நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதன் பேரில் இராணுவத்திற்கு ஒரு குறுகிய காலத்திற்காகவாவது இந்த அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.” இராணுவம் நிச்சயமாக எதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றது என்பது தெளிவாக இல்லை.

அமெரிக்க ஆதரவிலான ஆட்சி மாற்ற நடவடிக்கையின் மூலம் 2015 தேர்தலில் மஹிந்த இராஜபக்ஷவை தோற்கடித்து ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன அதிகாரத்திற்கு வந்தது முதல், கொழும்பு கடுமையான அரசியல் மோதலில் சிக்கியுள்ளது. தற்போது மோசமடைந்துவரும் பொருளாதார நெருக்கடி மற்றும் பெருகிய வர்க்க போராட்டங்களின் மத்தியில், சிறிசேன தானே பிரதமராக நியமித்த விக்கிரமசிங்கவுடன் மல்லுக்கு நிற்கின்றார்.

விக்கிரமசிங்க, பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்களை கட்டுப்பாட்டில் கொண்டுள்ள சிறிசேன மீது, குண்டுத் தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்காமைக்காக குற்றம் சுமத்தியுள்ளார். அதே நேரம், முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதை தடை செய்ய வேண்டும் என்ற சில அமைச்சர்களின் கோரிக்கைகளுடன், அரசாங்கம் தெளிவாக முஸ்லிம் விரோத பேரினவாதத்தை தூண்டிவிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பாராளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் இராஜபக்ஷ, பயங்கரவாத தாக்குதல்களுக்கு பொறுப்பாளி என அரசாங்கத்தை குற்றம் சாட்டினார். அது போரில் இராணுவ அதிகாரிகள் மற்றும் அவரது சகோதரரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோடாபய இராஜபக்ஷவும் ஆற்றிய பாத்திரத்தை அடக்கி வைத்துவிட்டதாக அவர் தெரிவித்தார். உண்மையில், முழு கொழும்பு ஸ்தாபகமும் பொறுப்பு சொல்ல வேண்டிய போர்க்குற்றங்கள் தொடர்பாக அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கொழும்பில் தனது செல்வாக்கை அதிகரிக்கவும் சீனாவின் செல்வாக்கை கீழறுக்கவும் இந்த குண்டுத் தாக்குதல்களை பயன்படுத்திக் கொள்ள அமெரிக்கா முற்படுகிறது. மஹிந்த இராஜபக்ஷ பெய்ஜிங்குடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்த காரணத்தால் வாஷிங்டன் அவரை எதிர்க்கின்றது. விக்கிரமசிங்கவின் கீழ், சீனாவின் இழப்பில் இலங்கை அமெரிக்காவுடன் தனது இராஜதந்திர மற்றும் இராணுவ உறவுகளை பலப்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இருவரும் விக்கிரமசிங்கவிற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு உதவி வழங்க வாக்குறுதியளித்தனர். எஃப்.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே கொழும்பில் தரையிறங்கி விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

தொழிலாளர்கள் அவசரகால நிலைமையை எதிர்ப்பதோடு ஆளும் வர்க்கத்தின் அனைத்து கன்னைகளதும் பிற்போக்கு சூழ்ச்சிகளையும் சதிகளையும் நிராகரிக்க வேண்டும். அவர்கள் அனைவரும் சர்வாதிகார ஆட்சியின் வடிவங்களை ஸ்தாபிக்கவும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கு முஸ்லிம்-விரோத பேரினவாதத்தை தூண்டிவிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கின்றனர். சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில் இன, மத பிளவுகளுக்கு அப்பால் தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தின் மூலம் மட்டுமே ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தை முன்நகர்த்த முடியும்.