ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan president steps up military crackdown

இலங்கை ஜனாதிபதி இராணுவ ஒடுக்குமுறையை முன்னெடுக்கிறார்

By K. Ratnayake 
27 April 2019

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வியாழக்கிழமை கூட்டிய அனைத்துக் கட்சி மாநாடு, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பயங்கரவாத குண்டு வெடிப்புகளை அடுத்து தீவு முழுவதுமான இராணுவ பொலிஸ் பாய்ச்சலை வலுப்படுத்துவதை மையமாகக் கொண்டிருந்தது.

அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்க "பாதுகாப்பு நடவடிக்கை மையம் ஒன்றைத் திறக்கப்" போவதாக சிறிசேன குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக செய்தியின் படி, இந்த அனைத்துக் கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட சகல கட்சிகளதும் தலைவர்கள், “பயங்கரவாத அச்சுறுத்தல்களை முழுமையாக ஒழிக்கவும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அத்துடன் சந்தேக நபர்களை கைது செய்யவும் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்."

சுருக்கமான அறிக்கையின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தலைமையிலான எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, இராணுவப் புலனாய்வுக் குழுவை வலுப்படுத்துவது உள்ளிட்ட 11 பிரேரணைகளை முன்மொழிந்துள்ளது.

முழு அரசியல் ஸ்தாபகமும், தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை நசுக்குவதற்காக பயன்படுத்தப்படவுள்ள பொலிஸ்-அரச நடவடிக்கைகளை, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் அமுல்படுத்துவதற்காக, ஞாயிறு நடந்த பயங்கர துன்பத்தை பற்றிக்கொண்டுள்ளது.

அனைத்துக் கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட சகல கட்சிகளும், நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்தக் கொடூரமான நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். இந்த கட்சிகளில், ஆளும் கூட்டணியில் உள்ள, சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.), பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.), தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.), அதேபோல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய இரண்டு முஸ்லீம் வகுப்புவாத கட்சிகளும் அடங்கும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பயங்கரவாத குண்டுத் தாக்குதல்கள் மூன்று பிரதான கிறிஸ்துவ தேவாலயங்கள் மற்றும் மூன்று சொகுசு ஹோட்டல்கள் இலக்கு வைத்து நடத்தப்பட்டன. எந்தவொரு விளக்கமும் அளிக்காமல், அதிகாரிகள் நேற்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை 350 முதல் 253 ஆக கணிசமானளவு குறைத்தனர். கொல்லப்பட்டவர்களில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவதோடு நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதுடன் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர்.

இஸ்லாமிய அரசு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள போதிலும், நேரடி ஆதாரங்கள் கிடையாது என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அரசாங்கமானது படுகொலைக்கு, இலங்கையில் உள்ள ஒரு இஸ்லாமிய அதிதீவிரவாதக் குழுவான தேசிய தௌஹீத் ஜம்மா'அத்தை குற்றம் சாட்டுவதுடன், அதற்கு சர்வதேச தொடர்புகள் இருப்பதாகவும் கூறுகிறது.

தாக்குதல் நடப்பதற்கான சாத்தியம் பற்றிய விபரங்களை ஏப்ரல் 4 அன்றே ஒரு வெளிநாட்டு புலனாய்வு முகமை அரசாங்கத்திற்கும் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆயினும், ஏப்ரல் 11 அன்றே பொலிஸ் அதிகாரிகளுக்கு மட்டும் இந்த எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளதுடன், பின்னர் பிரமுகர் பாதுகாப்புக்கு பொறுப்பாக உள்ள சில உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது.

முன்னணி கிறிஸ்தவ தேவாலயங்களில் தற்கொலைத் தாக்குதலை நடத்துவதற்காக தேசிய தௌஹீத் ஜம்மா'அத் திட்டமிடுவதாக அந்த தகவல் எச்சரித்தது. தாக்குதலுக்கு முன்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என்பதற்கு எந்தவொரு விளக்கத்தையும் யாரும் வழங்கவில்லை.

அதற்கு பதிலாக, அரசாங்கம் பலி ஆடுகளைத் தேடுகிறது. புதனன்று, பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஜனாதிபதியின் வேண்டுகோளை அடுத்து இராஜினாமா செய்தார். பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தரவை இராஜினாமா செய்ய சிறிசேனா கோரியுள்ளார்.

புதனன்று, இராணுவத்திற்கு பரந்தளவான அதிகாரங்களை வழங்கும் அவசர கால விதிகளை ஜனாதிபதி பிரகடனப்படுத்தியதற்கு அனைத்து பாராளுமன்றக் கட்சிகளும் ஆதரவளித்ன. இந்த அதிகாரங்களில் ஊர்வலம் மற்றும் கூட்டங்களை தடை செய்தல், பொது ஒழுங்குக்கு இடையூறுகள் ஏற்படுத்துவதை அல்லது அதிருப்தியை உருவாக்குவதை தடுத்தல் அல்லது கட்டுப்படுத்துதல், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தல், வாகனங்கள் உட்பட சொத்துக்களை கைப்பற்றுதல், மற்றும் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதும் அடங்கும்.

பாதுகாப்பு செயலாளரின் உத்தரவின் படி, பிடியாணை இல்லாமல் நபர்களை கைதுசெய்யவும் ஒரு வருடத்திற்கு மேலாக அவர்களை விசாரணையின்றி தடுத்துவைக்கவும் இராணுவத்துக்கும் பொலிசுக்கும் அதிகாரம் உள்ளது. ஒப்புதல் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் சான்றுகளாக பயன்படுத்த முடியும். கடந்த காலத்தில் சித்திரவதைகளைப் பயன்படுத்தியே ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

ஒரு அசாதாரண நடவடிக்கையில், சிறிசேன நேற்று மாலை நடத்திய ஒரு செய்தியாளர் மாநாட்டில், இராணுவம் தீவு முழுவதிலும் ஒரு பாரிய தேடுதலை நடத்துகிறது என்று அறிவித்தார். "நாட்டில் ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் சோதனைக்கு உள்ளாக்கப்படுவார். அடையாளம் தெரியாத நபர்கள் எவரும் இல்லை என்பதை உறுதிப்படுத்த, ஒவ்வொரு வீட்டிலும் நிரந்தர குடியிருப்பாளர்களின் பட்டியல்கள் உருவாக்கப்படும்."

இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து, நாட்டில் 10,000 க்கும் அதிகமானோர் நிலைகொண்டுள்ளனர். கடற்படை தனது படைகளை சேவையில் வைத்திருக்கும் அதே வேளையில், விமானப் படையானது பாதுகாப்பு கடமைகளுக்கு 1,000 க்கும் அதிகமான வீரர்களை அனுப்பியுள்ளது. இது இழிபுகழ் பெற்ற விசேட அதிரடிப்படை பிரிவுகள் உட்பட 70,000 பொலிஸ் படைக்கும் மேலதிகமான இராணுவ நிலைகொள்ளலாகும்.

அரசாங்கமும் பாதுகாப்புப் படைகளும் ஒரு சிறிய முஸ்லீம் தீவிரவாதக் குழுவை இலக்காகக் கொள்ளவில்லை, மாறாக முழு வெகுஜனங்களையும் குறிவைத்துள்ளது என்பது தெளிவாகிறது. "தமிழீழ விடுதலைப் புலி பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் போதும்" இதேபோன்ற வழிமுறைகள் பயன்படுத்தப்பட்டதாக கூறி இந்த நடவடிக்கையை சிறிசேன நியாயப்படுத்தினார்.

பிரிவினைவாத விடுதலைப் புலிகளுக்கு எதிரான மூன்று தசாப்தகால இனவாதப் போர், தமிழ் மக்களை நசுக்குவதற்கும், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்ட பல தசாப்தங்களாக தமிழர் விரோத பாரபட்சங்களின் உச்சக் கட்டமாக இருந்தது. இப்போது அந்த இரத்தக்களரி மற்றும் கொடூரமான போர் வழிமுறைகள் "பயங்கரவாதத்திற்கு எதிரான" போர் என்ற பெயரில் புதுப்பிக்கப்படுகின்றன.

தொழிலாள வர்க்க போராட்டங்களின் எழுச்சியின் நிலைமைகளின் கீழ் அரசாங்கம் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வைத் தூண்டி விடுகின்றது. அவர் "பயங்கரவாத தாக்குதல்களுக்கு பொறுப்பான இஸ்லாமிய குழுக்களை" தடை செய்வாரா என கேட்கப்பட்டதற்கு, அவசரகால சட்டத்தின் கீழ் அவர்கள் தடை செய்யப்பட்டிருந்தால், அவசரகாலம் நீக்கப்படும்போது அந்த தடையும் நீங்கிவிடும், என்று ஜனாதிபதி கூறினார்.

அமைப்புகளை நிரந்தரமாகத் தடை செய்யக் கூடியவாறு புதிய சட்டங்களை உருவாக்கச் சொல்லியுள்ளதாக சிறிசேன தெரிவித்தார். ஒரு கட்சி பொலிஸ்-அரசான  சிங்கப்பூர் போன்ற நாடுகளின் சட்டங்களை மாதிரியாக பின்பற்றுவது பற்றி அதிகாரிகள் கற்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

அரசாங்கம் வெளிநாட்டு பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்களின் ஆலோசனையையும் பெறுவதாகவும் சிறிசேன கூறினார். அமெரிக்கா ஏற்கனவே ஒரு எஃப்.பி.ஐ. குழுவை அனுப்பியுள்ளதோடு இலங்கையில் உள்ளூர் பாதுகாப்புப் படைகளுக்கு "ஆலோசகர்களாக" அமெரிக்க இராணுவத்தின் இந்திய-பசுபிக் கட்டளைத் தளத்திலிருந்து படைப்பிரிவும் தீவில் இறங்கியுள்ளது. பெய்ஜிங்கின் இழப்பில், கடந்த நான்கு ஆண்டுகளாக வாஷிங்டன் மேற்கொண்டு வருவது போல், அது கொழும்புடன் தனது இராணுவ மற்றும் அரசியல் உறவுகளை வலுப்படுத்திக்கொள்வதற்கு இந்த துயரத்தை சுரண்டிக்கொள்கின்றது.

அரசாங்கம் ஏப்பிரல் 21 அன்று முகநூல் மற்றும் யூடியூப் உட்பட சமூக வலைத் தளங்கள் மீது திணிக்கப்பட்ட நாடு தழுவிய தடையை இப்போதைக்கு அகற்றாது என சிறிசேன கூறினார். “சமூக ஊடகங்களின் சாதகமான நடத்தை இன்மை காரணமாக” தடையை அகற்றுவது தாமதிக்கப்படுவதாக அவர் கூறினார். எதிர்மறையான நடத்தை என்பது பற்றி எந்தவொரு தகவலையும் அவர் கூறவில்லை.

கொழும்பில் நிலவும் ஆழ்ந்த அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், ஒவ்வொரு கன்னையும் கடுமையான பொலிஸ்-அரச நடவடிக்கைகளுக்காக ஆரவாரம் செய்கின்றன.

சிறிசேன கடந்த அக்டோபரில், விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து அகற்றி அவருக்கு பதிலாக அவரது எதிரி இராஜபக்ஷவை பதவியில் அமர்த்தினார். சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்தமை அரசியலமைப்புக்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, அமெரிக்காவின் அழுத்தங்களின் கீழ், அவர் பிரதமராக விக்கிரமசிங்கவை அமர்த்த நிர்ப்பந்திக்கப்பட்டார்.

எனினும், அரசியல் உள்மோதல்கள் தொடர்கின்றன. நேற்று, இராணுவ உளவுத்துறையை "பலவீனப்படுத்திவிட்டதாக" ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கத்தை சிறிசேன குற்றம் சாட்டினார். அதை தான் எதிர்த்ததாக அவர் கூறிக்கொண்டார். தனது பங்கிற்கு, விக்கிரமசிங்கவும் குண்டுத் தாக்குதல் பற்றிய முன்னெச்சரிக்கையை அமைச்சரவைக்குத் தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

நேற்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் சகோதரரும் ஸ்ரீ.ல.பொ.ஜ.முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்பார்க்கப்படுபவருமான கோடாபய இராஜபக்ஷ, "தீவிரவாத இஸ்லாமை" தான் கட்டுப்படுத்துவதாக கூறினார். “தேசியப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை" கொடுக்கப்படவில்லை என அரசாங்கத்தை குற்றம் சாட்டிய அவர், "மனித உரிமைகள்" மற்றும் "தனி மனித சுதந்திரங்கள்" பற்றி அளவுக்கதிகமாக பேசப்படுகிறது என்று மேலும் தெரிவித்தார்.

புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் இறுதி கட்டத்தின் போது பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபாய இராஜபக்ஷ, கடைசி இராணுவ நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கும், நூற்றுக்கணக்கான தமிழ் மக்களையும் அரசாங்க விரோத விமர்சகர்களையும் கடத்தி "காணாமல்" ஆக்கிய இராணுவத்துடன் இணைந்த கொலைப் படைகளுக்கும் பொறுப்பாளியாவார்.

இந்த கருத்துகள், பயங்கரவாதத்தின் மீது அன்றி, தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழைகளின் பெருகி வரும் போராட்டங்களின் மீது கொடூரமாக பாய்வதற்கான தயாரிப்பில், யுத்த-கால பொலிஸ்-அரச இயந்திரங்களை துரிதமாக அமுல்படுத்துவது மற்றும் பலப்படுத்துவதன் பின்னணியில் இருப்பது என்ன என்பதற்கான இன்னுமொரு அறிகுறியே ஆகும்.