ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Looming economic crisis and class conflict

அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியும், வர்க்க மோதலும்

Nick Beams
18 April 2019

அமெரிக்க பெடரல் ரிசர்வ் அதன் நிதிக் கட்டுப்பாட்டுக் கொள்கையைத் தளர்த்தி பங்குச்சந்தையைக் கூடுதலாக ஊக்குவிக்க வேண்டுமென்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தொடர்ச்சியான அழைப்புகள், உத்தியோகபூர்வ சித்தாந்த மூடுதிரைக்குப் பின்னாலிருக்கும் பொருளாதார மற்றும் அரசியல் யதார்த்தத்தை அம்பலப்படுத்துகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ட்வீட் ஒன்றில் அடங்கியிருந்த அவரின் சமீபத்திய கருத்துக்களில், பெடரல் கடந்தாண்டு வட்டி விகிதங்களைத் இறுக்கி இருக்காவிட்டால் டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி தற்போதைய அதன் சாதனை அளவிலான மட்டங்களை விட 5,000 புள்ளிகள் அல்லது 10,000 புள்ளிகளே கூட அதிகமாக இருந்திருக்கும் என்று குறிப்பிட்டார். மத்திய வங்கி "பணத்தைப் புழக்கத்தில் விடும்" (quantitative easing) திட்டத்தை மறுபடி தொடங்க வேண்டுமென அவர் கோரினார். 2008 நிதியியல் பொறிவை அடுத்து இந்த திட்டத்தின் கீழ் தான் பெடரல் நிதியியல் சந்தைகளுக்கு ட்ரில்லியன் கணக்கில் வாரியிறைத்தது.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பங்குச்சந்தை பிரதான நிதியியல் இயங்குமுறையாக சேவையாற்றி உள்ளது, இதன் மூலமாக தான் அமெரிக்க ஆளும் வர்க்கம் முன்பில்லாத அளவில் செல்வவளத்தை உழைக்கும் மக்களிடம் இருந்து பணக்காரர்களுக்கு மறுபகிர்வு செய்துள்ளது. ஜனநாயக கட்சியின் கீழ் அத்துடன் குடியரசு கட்சி நிர்வாகங்களின் கீழும், கல்வித்துறை, மருத்துவக் கவனிப்பு மற்றும் ஏனைய சமூக சேவைகளில் வெட்டுக்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலைகள் மற்றும் கூலிகளில் இடைவிடாத தாக்குதல்களின் அடிப்படையில், 1985 க்குப் பின்னர் இருந்து டோவ் சந்தை 17 மடங்கு அதிகரித்துள்ளது.

ஒபாமாவின் கீழ், டோவ் சந்தை 250 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்தது. ட்ரம்பின் கீழ், அது கூடுதலாக 22 சதவீதம் உயர்ந்துள்ளது.

பள்ளிகள், மருத்துவக் கவனிப்பு, வீட்டு வசதி அல்லது ஓய்வூதியங்களுக்கு "அங்கே பணமில்லை" என்ற உத்தியோகப்பூர்வ தட்டிக்கழிப்பு பொய்யாகும், அதேவேளையில் நவீனகால பிரபுத்துவவாதிகளுக்கு அதிகமாக உல்லாச ஆடம்பர படகுகள், தனியார் தீவுகள் மற்றும் மன்ஹட்டன் ஆடம்பர அடுக்குமாடி வீடுகளுக்கும், இத்துடன் ஒரு புதிய இராணுவ ஆர்மெக்கெடோனுக்கான தயாரிப்புக்கு புதிய மற்றும் இன்னும் மரணகதியிலான அணுசக்தி அல்லாத ஆயுதங்கள் மற்றும் அணுஆயுதங்களுக்கும் கட்டுப்பாடில்லாமல் பணம் வாரியிறைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க சமூக மற்றும் அரசியல் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தின் மீதும் நிதியியல் செல்வந்த தட்டுக்களின் ஆட்சியைப் பலப்படுத்தி, செல்வவளம் மற்றும் வருவாய் சமத்துவமின்மை சாதனை மட்டங்களை எட்டியுள்ளது. “நடுநிலையாகவும்" “சுதந்திரமாகவும்" இருப்பதாக உத்தியோகபூர்வ பாசாங்குத்தனத்திற்குப் பின்னால், இக்காலக்கட்டம் நெடுகிலும் பெடரல் என்ன செய்து கொண்டிருந்தது என்பதை ட்ரம்ப சர்வ சாதாரணமாக பகிரங்கமாக அறிவிக்கிறார்—மேலும் அது இன்னும் கூடுதலாக அதை செய்ய வேண்டுமென்றும் கோருகிறார்.

பெடரலின் "சுதந்திரத்தை" ட்ரம்பின் கருத்துக்கள் ஊறுபடுத்துகின்றன என்ற அடித்தளத்தில், நியூ யோர்க் டைம்ஸிடம் இருந்தும் அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகத்தின் ஏனைய முக்கிய பிரிவுகளிடம் இருந்தும் அதற்கு ஆட்சேபணைகள் இருக்கிறதென்றால், அது அவர் கொள்கைகளின் அடிப்படை திசையுடன் எந்தவொரு கருத்து வேறுபாட்டால் அல்ல. ட்ரம்ப் அமெரிக்க மத்திய வங்கியை ஆளும் வர்க்கத்தின் கருவி என்பதிலிருந்து ஒட்டுமொத்தமாக அவரின் சொந்த கன்னைக்குரியதாக மாற்ற முயல்கிறாரே என்ற கவலையினால் ஆகும். ஆனால் ரியல் எஸ்டேட் மோசடியாளராக இருந்து ஜனாதிபதியாக ஆனவர் எந்த பிரிவுகளுக்காக பேசுகிறாரோ நிதியியல் ஒட்டுண்ணித்தனத்தின் அதே வடிவங்கள் மீது தான், ஆளும் உயரடுக்கின் ட்ரம்ப் எதிர்ப்பு கன்னைகளும் தங்களை நிலைநிறுத்தி உள்ளன.

பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களைப் பொருட்படுத்தாமல், விலைவாசியை நிலையாக உறுதிப்படுத்தி வைப்பதற்காகவும் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காகவும் நாணய கொள்கையை முறைப்படுத்துவதே பெடரலின் சட்ட அதிகாரமாகும். ஆனால் 1987 அக்டோபரில், அப்போது வோல் ஸ்ட்ரீட் ஒரே நாளில் 22 சதவீதம் வீழ்ச்சி அடைந்து, அதன் அப்போதைய தலைவர் அலன் க்ரீன்ஸ்பன் நிதியியல் அடைப்புகள் உடைத்து கொண்டு விட்டதாக அறிவித்த போது, அந்த பங்குச்சந்தை வீழ்ச்சிக்குப் பின்னர் இருந்து நிதியியல் சந்தைகளுக்குப் பெடரல் நேரடியாக முட்டுக்கொடுப்பதற்காக அதன் கொள்கைகளை வடிவமைத்து வருகிறது.

இது க்ரீன்ஸ்பன் நகர்வு என்றறியப்பட்ட ஒன்றாக மாறுவதற்கு இட்டுச் சென்றது: அதாவது சந்தைகள் தடுமாற தொடங்கும் போது, பெடரல் மலிவு பணத்திற்கு வழிவகைகள் செய்து அவற்றை ஊக்குவிப்பதற்காக உள்நுழைய தயாராக இருக்க வேண்டும். க்ரீன்ஸ்பன் 1996 இல் எதை "பகுத்தறிவற்ற களிப்பு" என்று குறிப்பிட்டாரோ அதை கடிவாளமிட ஒரு முயற்சி செய்தார், ஆனால் அது மீண்டும் ஒருபோதும் முயற்சிக்கப்படவில்லை என்றளவுக்கு நிதியியல் உயரடுக்குகளிடம் இருந்து எதிர்விளைவுகளைக் கண்டது.

அப்போதிருந்து, நிதியியல் குமிழி உருவாகி கொண்டிருப்பதைக் கூறுவது சாத்தியமில்லை என்பதும், சந்தைகளின் ஊகவணிக நடவடிக்கைகள் ஒரு நெருக்கடியை மேலுயர்த்திய போதும் அவற்றை ஆதரிக்க பெடரல் தலையீடு செய்து அவற்றை குதூகலமாக வைக்க வேண்டியிருக்கும் என்பதுமே உத்தியோகபூர்வ மந்திரமாக இருந்து வந்தது.

இந்த திட்டம் 2008 நிதியியல் பொறிவுக்குப் பின்னர் தீவிரமாக்கப்பட்டது, அப்போது அரசாங்கம் வங்கிகளைப் பிணையெடுக்க நூறு பில்லியன் கணக்கான டாலர்களை வாரி வழங்கியதுடன், பெடரல் அதன் பணத்தைப் புழக்கத்தில் விடும் கொள்கையைத் தொடங்கி, ஊகவணிகம் அளவுக்கு மீறி தொடர்வதையும் விரிவடைவதையும் உறுதிப்படுத்த ட்ரில்லியன் கணக்கான டாலர் அதிமலிவு பணத்தை வழங்கியது.

அதேநேரத்தில், பெருநிறுவன வரிகளைத் தொடர்ந்து குறைக்க வேண்டியிருப்பதாக வலியுறுத்தப்பட்டது. இப்போது இது, சமீபத்திய ஒரு பகுப்பாய்வு வெளிப்படுத்தியதைப் போல, 60 அமெரிக்க பெருநிறுவனங்கள், இலாபங்களில் பில்லியன் கணக்கான டாலர்களைக் குவித்துக் கொண்டு, 2018 இல் வரியே கட்டவில்லை என்பதோடு, சில நிறுவனங்கள் வரி திரும்ப பெறும் ஒரு நிலைமையில் போய் முடிந்துள்ளது.

அமெரிக்க பொருளாதாரம் பலமாக முன்னோக்கி நகர்ந்து வருகிறது மற்றும் பெடரல் அதை திரும்ப விட்டுவிடாமல் இருந்தால் மட்டுமே அது இன்னும் வேகமாக வளரும் என்ற கூற்று ட்ரம்பின் சமீபத்திய தலையீட்டுடன் சேர்ந்துள்ளது. ஆனால் பலத்தைச் சுட்டிக்காட்டுவதற்குப் பதிலாக, ட்ரம்பின் இறுதி எச்சரிக்கைகள் ஆழமடைந்து வரும் ஒரு நெருக்கடியையும் மற்றும் அமைப்புமுறைக்குள் இன்னும் கூடுதலாக பணத்தைப் பாய்ச்சாவிட்டால் இந்த நிதியியல் சீட்டுக்கட்டு மாளிகை பொறிந்துவிடும் என்பதையும் வெளிப்படுத்துகின்றன.

அமெரிக்க பொருளாதாரத்திற்கு அடியிலிருக்கும் பலம் குறித்த கூற்றுக்கள், அடிப்படை உண்மைகளுக்கு எதிரான பொய்களாகும். 2.25 சதவீதம் மற்றும் 2.5 சதவீதத்திற்கு இடையிலான தற்போதைய வட்டிவிகிதம் பொருளாதார வரலாற்றிலேயே மிகக் குறைந்த ஒன்றாக உள்ளது என்றாலும், ட்ரம்ப் நிர்வாகம் அதை குறைந்தபட்சம் 0.5 சதவீதம் வெட்ட விரும்புகிறது.

நிதியியல் ஊகவணிகத்தால் ஊதிப் பெரிதாகி உள்ள பங்குச்சந்தை, உடல்நலம் தொடர்ந்து மோசமானாலும் இன்னும் இன்னும் போதை வேண்டுமென கோரும் ஒரு போதைக்கு அடிமையானவரைப் போல, உள்ளது. இந்தாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்க நிதிய சந்தைகள் நலிவுக்கு அருகில் இருந்த போது மற்றும் பெடரல் வட்டி விகிதங்களை அதிகரிக்கும் அதன் கொள்கையை நிறுத்த வேண்டுமென வோல் ஸ்ட்ரீட் கோரிய போது, பெடரல் அதே அணியில் நின்றது மற்றும் அதன் தலைவர் ஜெரோமி பாவெல் வட்டி விகிதங்களை "வழமையாக்குவதற்கான" அதன் முயற்சிகளைக் கைவிடுவதாக அறிவித்தார், இது சமீபத்திய ஓட்டத்திற்கு இட்டுச் சென்று, டோவ் சந்தையை அதன் சாதனை உயரத்தின் புள்ளிகளுக்குத் தள்ளிச் சென்றது.

பெருநிறுவனங்களுக்கான வரி வெட்டுக்களில் ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் ஒப்படைக்கப்படுவது முதலீட்டை விரிவாக்கி பொருளாதாரம் வேகமாக முன்னேறுவதற்கு வழிவகுக்கும் என்றும், நல்ல-சம்பளத்தில் வேலைகளை வழங்கும் என்றும் 2017 இன் இறுதியில் ட்ரம்ப் கூறினார். இந்த பொய்யானது, வரி வெட்டுக்களுக்காக வழங்கப்பட்ட அந்த பணத்தின் பெரும்பகுதி, பங்குகள் வாங்கிவிற்பதிலும் மற்றும் செல்வந்தர்களின் காஜானாவுக்கும் அதிக பணத்தைப் பாய்ச்சுவதற்கு வேறு ஒட்டுண்ணித்தனமான வழிவகையாகவும் அம்பலப்பட்டுள்ளது.

ட்ரம்பின் "அமெரிக்கா முதலில்" திட்டத்தின் வெற்றியைக் குறித்த அவர் கூற்றுகள் ஒருபுறம் இருக்க, அமெரிக்க பொருளாதாரம் எதைச் சார்ந்துள்ளதோ அந்த உலகளாவிய பொருளாதாரம், 2017 இல் ஒரு சிறிய மேல் நோக்கிய திருப்பத்திற்குப் பின்னர், இப்போது குறிப்பிடத்தக்க ஒரு கீழ்நோக்கிய சரிவை அனுபவித்து வருகிறது.

சர்வதேச நாணய நிதியம் அதன் சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கையில் உலகளாவிய வளர்ச்சிக்கான அதன் உத்தேச மதிப்பீட்டை வெட்டியதுடன், 70 சதவீத உலக பொருளாதாரம் கீழ்நோக்கி வீழ்ச்சி அடைந்து வருவதாக எச்சரித்தது, இந்த இயல்நிகழ்வு அமெரிக்கா உட்பட அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் ஒருங்குவிந்துள்ளது. இந்த எச்சரிக்கைகள், 2019 பொருளாதார வளர்ச்சியைப் பாதியாக குறைத்து வெறும் 0.5 சதவீதமாக முன்மதிப்பீடு செய்த ஜேர்மன் அரசாங்கத்தின் புதன்கிழமை அறிவிப்பில் அடிகோடிடப்பட்டது.

அதிகரித்து வரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களுக்கான அலையை எரியூட்டி, அவர் ஜனாதிபதி ஆவதற்கு வாக்களித்த கிராமப்புற பகுதிகள் என்றழைப்படுபவைகளில் மட்டுமின்றி, மாறாக நாடெங்கிலும், அவற்றை ஒரு சமூக வெடிப்பாக மாற்றி விடக்கூடிய, ஒரு பின்னடைவு அல்லது பொருளாதாரத்தில் கணிசமான வளர்ச்சிக்குறைவுக்கான சாத்தியக்கூறால் ட்ரம்ப் நிர்வாகம் நடுங்குகிறது.

இத்தகைய அச்சங்கள் வெள்ளை மாளிகையைக் கடந்து நீண்டிருக்கின்றன. சமீபத்திய ஒரு கட்டுரையில், தனியார் முதலீட்டு நிறுவனம் Bridgewater Associates இன் தலைவரும் பல கோடி பில்லியனருமான ரே டாலியோ, மக்களின் பொருளாதார நிலைமைகளில் ஒரு "மிகப் பெரிய பிளவு" இருக்கையில், ஒரு கீழ்நோக்கிய சரிவானது மோதலுக்கும் மற்றும் "ஒருவிதமான அல்லது வேறு ஏதோமாதிரியான புரட்சிகளுக்கு" இட்டுச் செல்லும் என்று எச்சரித்தார்.

வட்டி விகிதங்கள் ஏற்கனவே வரலாற்றளவில் குறைவாக உள்ள நிலையில், டாலியோ கூறுகையில் அவர் "குறிப்பாக அடுத்த பொருளாதார கீழ்நோக்கிய சரிவை மாற்றி அமைப்பதற்கான தகைமை மத்திய வங்கிகளிடம் மட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்ற நிலையில், அது என்ன மாதிரியாக இருக்கும் என்று கவலைக் கொள்வதாக" தெரிவித்தார்.

எல்லாவற்றிற்கும் மேலாக சோசலிசத்திற்கு எதிரான ட்ரம்பின் சுய-பிரகடனம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ஆளும் உயரடுக்கின் இருகட்சிகளது தாக்குதல் இரண்டுக்கும் அடியில் இருப்பது, தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வரும் சோசலிச மனோநிலை மீது ஆளும் உயரடுக்கிற்குள் அச்சம் நிலவுகிறது என்பது தான்.