ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

වත්තේ ජල මූලාශ්‍ර විකුනා දැමීමට එරෙහි ව ටිලරි වතු කම්කරුවෝ විරෝධය පල කරති

இலங்கை: சாஞ்சிமலை தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட தண்ணீர் வளத்தை விற்பதை எதிர்க்கின்றனர்

M. Thevarajah
26 April 2019

இலங்கையின் மத்திய பெருந்தோட்டப் பகுதியில், டிக்கோயா, சாஞ்சிமலை தோட்டத் தொழிலாளர்கள், தமது தோட்டத் தண்ணீர் வளங்களை, அத்தோட்டத்திற்கு அருகாமையில் உள்ள தேயிலை வில்லைகளை உற்பத்தி செய்யும் தனியார் கம்பனிக்கு விற்பனை செய்வதற்கு எதிராக மார்ச் 13 முதல் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சாஞ்சிமலை, பொயிஸ்டன் நோர் வூட், கேர்க்கஸ்வோல்ட் ஆகிய தோட்டங்களை சேர்ந்த 15,000 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் இந்த நீர் வளத்தை உபயோகிக்கின்றன.

தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக இந்த எதிர்ப்பை முன்னெடுத்து வருகின்றனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) ஆகிய மூன்று தொழிற்சங்கள் இத்தோட்டத்தில் உள்ளன. ஆனால் இத்தொழிற் சங்கங்கள் சாஞ்சிமலை தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஏனய தோட்டத் தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கு மறுப்பதால், தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொழிலாளர்களின் போராடங்களை கட்டுபடுத்துவதற்காக, இதற்கு எதிராக இ.தொ.கா வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

சாஞ்சிமலை தொழிலாளர்கள், “அந்த தொழிற்சாலைக்கு தண்ணீர் திருப்பப்படுமாயின், வரட்சிக் காலத்தில் பாரிய தண்ணீர் பற்றாக் குறையை நாம் எதிர்கொள்ள வேண்டி வரும்” என உலக சோசலிச வலைத் தளத்திற்கு கூறினர். ஹட்டன் நீதிமன்றம் இந்த தண்ணீர் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ள போதும், தோட்ட நிர்வாகம் அதனை தொடர்வதற்கு முயற்சிக்கின்றது. “தோட்ட நிர்வாகம் இந்த திட்டத்தில் வேலை செய்யுமாறு எங்களை நிர்ப்பந்திக்கின்றது. ஆனால் நாம் அதில் வேலை செய்ய மறுத்துவிட்டோம். இதனால் தோட்ட நிர்வாகம் ஏப்ரல் 11 இலிருந்து எங்களுக்கு தோட்டத்தில் வேலை வழங்க மறுத்து வருகின்றது.

தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களை பிளவுபடுத்தவும் தோட்டங்களை துண்டாடவும் முயற்சிக்கின்றது. நீர் வளத்தை விற்பதுவும் இதன் ஒரு பாகமே ஆகும். கடந்த வருடம், இந்த தோட்டத்தில் வருமானப் பங்கீடு முறை அமுல்படுத்தப்பட்டது.

சாஞ்சிமலைத் தோட்டம் களனிவலி தோட்டக் கம்பனியின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. தோட்டத்தின் மேல் பிரிவிலும் கீழ் பிரிவிலும் 280 தொழிலாளர்கள் உள்ளனர். வருமானப் பங்கீடு முறை அமுல்படுத்தப்பட்ட பின்னர் தொழிலாளர்கள் பாரிய பிரச்சனைகளை முகம் கொடுக்கின்றார்கள். சிறு எண்ணிக்கையிலான தொழிலாளர்களே பழைய முறையிலான நாளந்த ஊதிய முறையில் இங்கு வேலை செய்கின்றார்கள். உழைப்புச் சுரண்டலை அதிகரித்ததன் மூலம் களனிவெலி தோட்டக்  கம்பனியானது 2017-2018 ஆண்டுகளில் 160 மில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டியுள்ளது.

களனிவெலி பெருந்தோட்டக் கம்பனியின் பொது முகாமையாளர் ரொஷான் இராஜதுரை, மலையக மக்கள் முன்னணி தலைவரும், இராஜாங்க அமைச்சருமான வி. இராதகிருஷ்னனுடன் தொலைபேசியில் உரையாடும் போது, சாஞ்சிமலைத் தோட்டம் நட்டத்தில் இயங்குவதாகவும் “தொழிலாளர்ள் தோட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் கீழ் வேலை செய்ய மறுப்பார்களாயின் தோட்டத்தை மூடவேண்டி வரும்”, எனக் கூறியுள்ளார்.

இலங்கை தேயிலை தொழிற் துறையில் ஆழமடைந்து வரும் நெருக்கடி மற்றும் உலக சந்தையில் அதிகரித்துவரும் போட்டி மற்றும் இலாபத்தில் தொடர்ச்சியான வீழ்ச்சினாலும், பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள், உற்பத்தித் திறனை அடிப்படையாகக் கொண்ட வருமானப் பங்கீடு முறையை அமுல்படுத்த கடந்த மூன்று வருடங்களாக முயற்சித்து வருகின்றன. எனினும், தொழிலாளரின் பாரிய எதிர்ப்பினால் அதனை முழுமையாக நடைமுறைபடுத்த கம்பனிகளால் முடியவில்லை. பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில், கடந்த ஜனவரியில் கையெழுத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில், வருமானப் பங்கீட்டு முறையை அமுல்படுத்த தொழிற்சங்கங்கள் இணங்கியுள்ளன.

தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, தமது நாள் சம்பளத்தை 100 சதவீதத்தால் அதாவது 500 ரூபாவிலிருந்து 1000 ரூபா வரை உயர்த்துமாறு கோரி, டிசம்பரில் உறுதியான போராட்டத்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் தொழிற்சங்கங்களால் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள். தோட்டக் கம்பனிகள் 40 சத சம்பள உயர்வு அளிப்பதாக உறுதியளித்தது. இறுதியாக தொழிலாளர்களுக்கு கிடைத்தது அற்ப 20 ரூபாய் உயர்வு மட்டுமே.

கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திட்ட தொழிற்சங்கங்களில் ஒன்றான இ.தொ.கா. வின் தலைவர்களில் ஒருவரான முத்து சிவலிங்கம், ஏப்ரல் 19 அன்று வீரகேசரி பத்திரிகையில், “தோட்டத் தொழில்துறை வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. இதனால் இ.தொ.கா. பெருந்தோட்டங்களை கிராமமாக மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றது. தேயிலை பயிர்செய்யும் நிலங்கள் தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கடப்பட வேண்டும். எங்களது சமூகம் நிலவுடமை சமூகமாக மாற்றப்பட வேண்டும்”, எனத் தெரிவித்தார்.

சாஞ்சிமலைத் தோட்டத்தில் கடந்த வருடம் வருமானப் பங்கீடு முறை அறிமுகப்படுத்தும் போது தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் படிப்படியாக அவர்களுக்கு சொந்தமாகும் எனச் சொல்லப்பட்டது. மாறாக, அவர்கள் நாட் சம்பளத்தில் பெற்ற சிறிய வருமானத்தையும் இழந்து விட்டார்கள். 

வருமான பங்கீடு முறையின் கீழ் தோட்டத் தொழிலளர்களுக்கும் நிலம் உடமையாக்கப்படமாட்டாது. மாறாக, தொழிற்சங்க அதிகாரிகளுக்கும், சிறிய வியாபாரிகளுக்கும் நிலம் உடமையாக்கப்படுவதுடன் தொழிலளர்கள் தமது வேலையை இழப்பதோடு மருத்துவ வசதிகள், சிறுவர் பராமரிப்பு போன்ற சமூக நலன்களையும் இழப்பர். மேலும், ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிகளும் அபகரிக்கப்பட்ட குத்தகை விவசாயிகளாக தொழிலாளர்கள் மாற்றப்படுவர். எல்லாவற்றுக்கும் மேலாக, தொழிலாளர்கள் சிதறடிக்கப்பட்டு அவர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்கு அடிப்படையான ஐக்கியப்பட்ட வல்லமையும் பலவீனமாக்கப்படும்.