ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The US boosts military ties with Sri Lanka

அமெரிக்கா இலங்கையுடன் இராணுவ உறவுகளை ஊக்குவிக்கிறது

By Vijith Samarasinghe 
17 January 2019

இலங்கையின் கிழக்குப் பகுதி துறைமுகமான திருகோணமலைக்கு அமெரிக்க ஏழாவது கடற்படை கப்பல்கள் மேற்கொண்ட சமீபத்திய விஜயங்கள், சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் போர்த் தயாரிப்பிற்குள் இந்த தீவு துரிதமாக ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது என்பதை தெளிவுபடுத்துகின்றன. ஜப்பானில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இந்த ஏழாவது கடற்படை, யுத்தத்துக்காக வடிவமைக்கப்பட்டதாகும். இதில் 60-70 கப்பல்கள், 300 விமானங்களோடு 40,000 இற்கும் அதிகமான படையினரும் அடங்குவர்.

டிசம்பர் மாத தொடக்கத்தில், அமெரிக்க கடற்படைக்கு ஒரு தளவாட மையத்தை அமைப்பதற்கான பென்டகனின் திட்டத்தின் ஒரு பகுதியாக, கிழக்கு இலங்கையில் உள்ள திருகோணமலைக்கு விமானந் தாங்கி கப்பலான யு.எஸ்.எஸ். ஜோன் சி. ஸ்டெனிஸ் விஜயம் செய்தது. ஆகஸ்ட் மாதம், தளவாட மையமாக பயன்படுத்துவது பற்றி துறைமுகத்தை மதிப்பீடு செய்வதற்காக மற்றொரு ஏழாவது கடற்படை பிரிவு கப்பலான யு.எஸ்.எஸ். ஏங்கரெஜ் வந்திருந்தது.

உலகின் இரண்டாவது ஆழமான இயற்கை துறைமுகமான திருகோணமலை, இந்திய சமுத்திரத்தில் பெரும் மூலோபாய இராணுவ பெறுமதியைக் கொண்டுள்ளது. இது இரண்டாம் உலகப் போரின் கடைசி ஆண்டுகளில், பிரிட்டிஷ் கிழக்கு கடற்படைக்கு கடற்படை கட்டளை மையமாக இருந்தது.

யு.எஸ்.எஸ். ஸ்டெனிஸின் வருகையைப் பற்றி கொழும்பில் ஒரு பெயரிடப்படாத இராஜதந்திரி, டிசம்பர் 29 அன்று, நிக்கி ஆசிய மீளாய்வுக்கு (Nikkei Asian Review) தெரிவித்ததாவது: "திருகோணமலை ​​ஒரு தர்க்கரீதியான தெரிவு, ஏனென்றால், இலங்கையில் இது மிக முக்கியமான மூலோபாய நில உடமையாகும். கடந்த ஆறு ஆண்டுகளில் சீனப் பிரசன்னம் மிக வெளிப்படையாகவும் பரவலாகவும் வளர்ச்சியடைந்துள்ள தெற்காசியாவின் இந்த பகுதி தொடர்பாக, வாஷிங்டனின் புதிய சிந்தனையின் சமிக்ஞைகளாக இவை உள்ளன."

ட்ரம்ப் நிர்வாகம் சீனாவிற்கு எதிரான தனது வர்த்தக யுத்த நடவடிக்கைகளை முன்நகர்த்துக்கின்ற நிலையிலேயே, துறைமுகத்தில் ஒரு தளவாட மையத்தை அமைப்பதற்கு வாஷிங்டன் நடவடிக்கை எடுக்கின்றது. டிசம்பர் 31, "ஆசியா மறு உறுதிப்படுத்தல் சட்டத்தில்" ட்ரம்ப் கையெழுத்திட்டார். இது, சீனாவிற்கு எதிராக ஆசியா முழுவதும் அமெரிக்க மூலோபாய நிலைப்பாட்டை பரந்தளவில் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

கடந்த அக்டோபர் இறுதியில், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை அந்த பதவியில் அமர்த்திதை அடுத்து, வெடித்த கன்னை மோதலுக்கான வாஷிங்டனின் பிரதிபலிப்பையும் கூட திருகோணமலையில் அமெரிக்க கடற்படை கவனக் குவிவு தெளிவுபடுத்துகிறது.

ஜனாதிபதியாக சீனாவுடன் நெருக்கமான உறவை பேணிவந்த இராஜபக்ஷவை, சிறிசேன பிரதமராக நியமித்ததை வாஷிங்டன் எதிர்த்ததுடன் விக்கிரமசிங்கவை மீண்டும் பதவியில் அமர்த்த அழைப்பு விடுத்தது.

2014-2015 ஆண்டுகளில், இராஜபக்ஷவை அகற்றுவதற்காகவும், சிறிசேனவை ஜனாதிபதியாக அமர்த்துவதற்காகவும் உள்ளூர் அரசியல் கூட்டாளிகளுடன் திரைக்குப் பின்னால் அமெரிக்கா செயற்பட்டிருந்தது. சிறிசேன மற்றும் விக்கிரமசிங்கவின் கீழ், இலங்கையானது அமெரிக்காவுடனான அதன் அரசியல் மற்றும் இராணுவ உறவுகளை பலப்படுத்தியது.

தனது விசுவாசத்தை நிரூபிக்க கடந்த ஆண்டு இறுதியில் இராஜபக்ஷ கூடுமானவரை முயற்சிகள் எடுத்த போதிலும், வாஷிங்டன் மற்றும் புது தில்லியும் அவர் பிரதமராக நியமிக்கப்பட்டதை எதர்த்தன. அமெரிக்காவின் அழுத்தத்தின் கீழும், அவர் பாராளுமன்றத்தை கலைத்தமை அரசியலமைப்பிற்கு முரணானது என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்தும், சிறிசேன இறுதியில் விக்கிரமசிங்கவை மீண்டும் பதவிக்கு கொண்டுவந்தார்.

டிசம்பர் 9 அன்று, அமெரிக்க கடற்படை, அதன் இந்து சமுத்திர நடவடிக்கைகளுக்கு திருகோணமலை தளபாட மையத்தின் மூலோபாய முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டியது. "தற்காலிக விமான தளபாட மையம் என்ற நிலைப்பாடு, விமானத் தளங்களைப் பயன்படுத்துவதற்கும், சிறிய கப்பல்களை பல்வேறு திசைகளுக்கு அனுப்புவதற்காக, மிகப்பெருமளவு கப்பல்களை நிறுத்தி வைப்பதற்குமான வசதியை கொடுப்பதோடு, சரியான இடம் மற்றும் சரியான நேரத்துக்கு தேவையான பொருட்களைப் பெறுவதன் மூலம் கடலில் கப்பல்களை தொடர்ச்சியாக இயங்க வைப்பதற்கும் அனுமதிக்கின்றது," என அதன் வலைத் தளத்தில் விளக்கியுள்ளது.

யு.எஸ்.எஸ்.சி. ஸ்டென்னிஸ் உடைய களஞ்சிய கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரியான அமெரிக்க கடற்படை லெப்டினன்ட் பிரைன் ஒரிட்ஸ் விளக்கியதாவது: "இந்த நடவடிக்கைகளின் முதன்மை நோக்கம், இராணுவ நடவடிக்கையின் போது தீர்க்கமான தேவைகளை விநியோகிக்கவும், இந்திய சமுத்திரத்தின் ஊடாகவும் அதற்குள்ளும் அமெரிக்க கடற்படை கப்பல்கள் இடம்மாறுவதற்கும் இயங்குவதற்குமான சேவைகளை வழங்குவதுமே ஆகும்… இரண்டாவது குறிக்கோள், அமெரிக்க கடற்படை தளத்தின் தளவாட மையங்கள் இல்லாத இடங்களில் தற்காலிக தளவாட மையங்களை ஸ்தாபிப்பதற்கு அமெரிக்க கடற்படைக்கு உள்ள இயலுமையை வெளிப்படுத்துவதாகும்."

கடந்த ஆண்டு அமெரிக்காவிற்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் ஐந்து முக்கிய கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல், யூ.எஸ்.எஸ். ஜோன் சி. ஸ்டென்னிஸ், அமெரிக்க மருத்துவ கப்பல் யு.எஸ்.என்.எஸ். மேர்சியும் திருகோணமலைக்கு விஜயம் செய்திருந்துடன் இலங்கை கடற்படைக்கும் யு.எஸ்.எஸ். எங்கரேஜிற்கும் இடையில் கடற்படை பயிற்சிகளும் நடைபெற்றிருந்தன. டிசம்பர் 21, இலங்கை கடற்படையுடனான கூட்டு வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக யு.எஸ்.எஸ். ரஷ்மோர் என்ற ஏவுதள கப்பலும் கொழும்புக்கு விஜயம் செய்திருந்தது. உலகின் மிகப்பெரிய சர்வதேச கடல்வழிப் போர் பயிற்சியான ஹவாயில் நடைபெற்ற பசிபிக் ரிம் கடற்படை பயிற்சியிலும் இலங்கை இராணுவம் பார்வையாளராக பங்குபற்றியது.

இந்து சமுத்திரத்தில் அமெரிக்க இராணுவ நடவடிக்கை அதிகரித்து வருவதானது சீனாவின் "முத்துக்களின் சரம்" என்ற துறைமுகங்கள் அமைக்கும் மூலோபாயத்திற்கான பிரதிபலிப்பு என்று நிக்கீய் ஆசிய மீளாய்வும் பிற ஊடக அறிக்கைகளும் வலியுறுத்துகின்றன. கடந்த அக்டோபரில் ஹட்சன் நிறுவனத்திற்கு ஆற்றிய ஒரு காத்திரமான உரையில், அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், பெய்ஜிங்கின் "கடன்-பொறி இராஜதந்திரம்" மற்றும் அது எவ்வாறு சிறிய நாடுகளை அரவணைக்கின்றது என்பதற்குமான உதாரணமாக இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை மேற்கோள் காட்டினார்.

இந்திய சமுத்திரத்தை மேலாதிக்கம் செலுத்தும் சீனாவின் முயற்சிகளுக்கு வாஷிங்டன் பிரதிபலிப்பதாக கூறிக்கொள்வது, போலியானதாகும். பெய்ஜிங்கில் உள்ள சீன ஆட்சியிடம், அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகளின் அதிகரித்துவரும் ஆக்கிரோஷமான பொருளாதார மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கு எந்த முற்போக்கான பதிலும் கிடையாது. அதன் "முத்துக்களின் சரம்" மூலோபாயம் என்பது, இந்திய சமுத்திரத்தில் உள்ள பூகோள மூலோபாய நட்பு நாடுகளை வென்றெடுத்துக்கொண்டு, அமெரிக்க தலைமையில் சீனா சுற்றிவளைக்கப்படுவதில் இருந்து தப்புவதற்கான ஒரு அவநம்பிக்கையான முயற்சியே ஆகும்.

அதன் கூற்றுகளுக்கு முரணாக, அமெரிக்காவானது இந்திய சமுத்திரத்தில் நீண்ட காலமாக நிறுவப்பட்ட கடற்படை மற்றும் இராணுவ மேலாதிக்கத் கொண்டுள்ளது. இந்தப் பகுதியில் கடற்படைப் போர்க் கப்பல்கள் அடிக்கடி பயணிப்பதுடன், பிரிட்டிஷ் இந்திய சமுத்திர பிராந்தியத்தில் டியாகோ கார்சியாவிலும் அதேபோல் அருகிலுள்ள பாரசீக வளைகுடாவிலும் முக்கிய இராணுவ தளங்களுடனும் இந்த மேலாதிக்கம் பேணப்படுகிறது.

அமெரிக்க நட்பு நாடான மற்றும் சீனாவின் எதிரியான இந்தியாவும், அந்தமான் தீவுகள் மற்றும் லாகாடிவ்ஸில் கடற்படை மற்றும் விமான தளங்களைக் கொண்டுள்ளதுடன், மொரிஷியசில் தளம் ஒன்றைக் கட்டியெழுப்பி வருகின்றது. சீசெல்ஸ், மடகாஸ்கர் மற்றும் ஓமானிலும் இந்தியா இயங்கும் ரேடார் கண்காணிப்பு வசதிகளையும் பேணிவருகின்றது.

2007 இல், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் சகோதரரான அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோடாபய இராஜபக்ஷவுடன், வாஷிங்டன் ஒரு நீண்டகால இருதரப்பு பெறுதல் மற்றும் இருதரப்புச் சேவை உடன்படிக்கை (Acquisition and Cross-Servicing Agreement - ACSA) ஒன்றில் கையெழுத்திட்டது. இந்த 10 வருட ஒப்பந்தமானது இலங்கை துறைமுகங்களுக்குள் எரிபொருள் விநியோகத்திற்காகவும் ஏனைய விநியோகங்களுக்காகவும் அமெரிக்க கடற்படைக் கப்பல்களை அனுமதிக்கின்றது. இந்த ஒப்பந்தத்தை பிரதமர் விக்கிரமசிங்க 2017 இல் புதுப்பித்தார்.

சிறிசேன-விக்கிரமசிங்க நிர்வாகத்தின் கடந்த நான்கு ஆண்டுகளில், இலங்கை கடற்-தரை படைப் பிரிவு ஒன்றை கொழும்பு நிறுவியதோடு, அமெரிக்கக் கடற்படையுடன் ஒருங்கிணைந்த கடற்படை பயிற்றுவிப்புகளையும் பயிற்சிகளையும் ஆரம்பித்துள்ளது.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள முக்கிய அமெரிக்க பங்காளிகளான இந்தியாவும் ஜப்பானும், திருகோணமலையில் கடற்படை தளங்களை ஸ்தாபிக்கும் சாத்தியங்களை ஆராய்கின்றன. ஜப்பானிய ஏகாதிபத்தியம், அதன் "சுதந்திரமான மற்றும் திறந்த இந்திய பசிபிக் மூலோபாயத்தின்" கீழ், மியான்மரின் டவாய் மற்றும் பங்களாதேஷின் மடர்பாரியுடன் சேர்த்து முதலீட்டிற்கான முக்கிய இந்திய சமுத்திர துறைமுகமாக திருகோணமலையை அடையாளம் கண்டுள்ளது.

ஆட்சியில் இருந்த இலங்கை அரசாங்கங்கள், சீனாவிற்கு எதிரான அமெரிக்கத் தலைமையிலான போர்த் திட்டங்களில் இலங்கையை அதிக அளவில் ஒருங்கிணைத்துள்ளன. சீனாவிற்கு எதிரான அமெரிக்க இராணுவ சுற்றிவளைப்பானது, இரு நாடுகளும் அணுவாயுத நாடுகள் என்ற வகையில், பேரழிவுகரமான விளைவுகளைத் தர அச்சுறுத்துகின்றன. யுத்தத்தின் மூல காரணமான முதலாளித்துவ அமைப்பு முறையையும், உலகை போட்டி தேசிய அரசுகளாக பிரித்து வைத்திருக்கும் அதன் காலங்கடந்த அமைப்பையும் தூக்கிவீசுவதை இலக்காகக் கொண்ட, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு போர்-எதிர்ப்பு இயக்கமே, அத்தகைய உலகளாவிய பேரழிவை தடுக்கக்கூடிய ஒரே சக்தி ஆகும்.