ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Australian Labor Party’s election debacle and the fight against the far-right

ஆஸ்திரேலிய தொழிற்கட்சியின் தேர்தல் தோல்வியும், அதிவலதுக்கு எதிரான போராட்டமும்

Oscar Grenfell
20 May 2019

சனிக்கிழமையின் ஆஸ்திரேலிய கூட்டாட்சி தேர்தல், எதிர்கட்சியான தொழிற் கட்சிக்கு ஒரு நாசகரமான தோல்வியாகவும், பிரதம மந்திரி ஸ்காட் மொரிசனின் அதிவலது தாராளவாத தேசிய கூட்டணி அரசாங்கமே அதிகாரத்திற்கு திரும்பி வருவதிலும் போய் முடிந்தது.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான பிரதிநிதிகள் சபையில் மொரிசன் ஒரு சிறிய பெரும்பான்மையுடன் அரசாங்கம் அமைக்கக் கூடும். செனட் சபையை அனேகமாக சுயேட்சைகள் மற்றும் வலதுசாரி ஜனரஞ்சகவாதிகள் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கலாம்.

அனைத்து ஊடக பண்டிதர்களும் தொழிற் கட்சியின் பெரும் வெற்றியை அனுமாதித்திருந்தனர். வாக்கு எண்ணிக்கைத் தொடங்குவதற்கு முன்னதாக, தொழிற் கட்சி தலைவர் பில் ஷார்டன் வரவிருக்கும் பிரதம மந்திரியாக பரந்தளவில் சித்தரிக்கப்பட்டார். சனிக்கிழமை இரவு நிறைவடைந்தபோது, “தோற்க வேண்டியிராத தேர்தலில்" தொழிற் கட்சியின் தோல்வியை மேற்பார்வையிட்டதற்காக அவர் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

பத்திரிகைகள் 2016 அமெரிக்க தேர்தலுடனான சமாந்தரங்களைச் சுட்டிக்காட்டின, அப்போது வரவிருக்கும் ஜனாதிபதியாக உலகளவில் அனுமானிக்கப்பட்டிருந்த ஹிலாரி கிளிண்டன் பாசிசவாத குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் ஆல் தோற்கடிக்கப்பட்டார்.

மொரிசன் ட்ரம்பும் கிடையாது ஷார்டன் கிளிண்டனும் கிடையாது, ஆனால் எதை மாற்ற வேண்டுமோ அதை மாற்றி, அடியிலிருக்கும் அதே சமூக மற்றும் அரசியல் இயக்கவியல் செயல்படுத்தப்பட்டன.

“நியாயமான" கொள்கைகளை ஏற்கவிருப்பதாக தொழிற் கட்சியினது வாதங்களைப் பாரியளவில் மறுத்தளிக்கும் விதத்தில் வாக்குகள் வழங்கப்பட்டிருந்தன. தேர்தல் நெடுகிலும், ஷார்டன், பெருநிறுவனமயப்பட்ட தொழிற்சங்கங்களில் உள்ள அவரின் கூட்டாளிகளுடன் சேர்ந்தவாறு, பணக்காரர்களுக்கான வரி முறிப்புகளைக் கண்டித்ததுடன், தொழிற்கட்சி உழைக்கும் மக்களின் நலன்களுக்காக ஆட்சி செலுத்தும் என்று அறிவித்தார்.

பல பத்தாண்டுகளாக நிதியியல் உயரடுக்கின் கட்டளைகளைத் திணித்து வந்துள்ள தொழிற்கட்சியால், தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் எந்தவொரு நம்பகமான முறையீடும் செய்ய முடியவில்லை.

2007 இல் இருந்து 2013 வரையில் பதவியில் இருந்த கெவின் ரூட் மற்றும் ஜூலியா கில்லார்டின் தொழிற் கட்சி அரசாங்கங்கள் ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே மிகவும் வலதுசாரி அரசாங்கங்களில் ஒன்றாக இருந்தன.

தொழிற் கட்சி, ஒரு தசாப்த கால கூட்டணி ஆட்சிக்குப் பின்னர், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாக அறிவித்து அரசாங்கம் அமைத்திருந்தது. பின்னர் அது நடைமுறையளவில் அனைத்து தொழில்துறை நடவடிக்கைகளுக்கும் தடைவிதித்ததுடன், சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் திட்டங்களுடன் ஆஸ்திரேலியாவை அணிச்சேர்த்தது, தொலைதூர பசிபிக் தீவுகளில் தரந்தாழ்ந்த அகதிகள் அடைப்பு முகாம்களை மீண்டும் திறந்தது, பொதுக்கல்வி, மருத்துவக் கவனிப்பு மற்றும் சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடுகளை வெட்டியது.

தொழிலாள வர்க்க வாக்காளர்களின் அதிஅவசர தேவைகளான வேலைகள், கூலி உயர்வுகள் மற்றும் நல்ல சேவைகளைப் பூர்த்தி செய்ய எதுவும் செய்யாத அதன் பிரயோஜனமற்ற தேர்தல் வாக்குறுதிகளைத் தொழிலாளர்கள் நிராகரித்திருந்த நிலையில், அவர்கள் தொழிற்கட்சியிலிருந்து கணிசமானளவுக்கு விலகி இருந்தார்கள். வேலை அழிப்பு தசாப்தங்களின் சுமையின் போது பிறந்த மற்றும் ஆழமடைந்து வரும் சமூக நெருக்கடியில் சிக்கி உள்ள தொழிலாள வர்க்க வாக்காளர்களிடையேயும் மற்றும் பிராந்தியளவிலும், தொழிற் கட்சிக்கு எதிரான விலகல் மிக அதிகபட்சமாக இருந்தன.

தொழிற் கட்சி மிகச் சரியாகவே பலராலும் ஒரு பெருவணிக கட்சியாக கருதப்படுகிறது. அது பொது செலவினங்களில் ஆழ்ந்த வெட்டுக்களைச் சமிக்ஞை செய்து, கூட்டணியை விட அதிகமாக இரண்டு முறை வரவு-செலவு திட்டக்கணக்கில் உபரியைக் கொண்டு வர பொறுப்பேற்றிருந்தது. பெருநிறுவன உயரடுக்கின் நலன்களுக்காக ஆட்சி செய்யும் ஓர் "ஒருங்கிணைந்த" கட்சியாக தன்னை காட்டிக் கொண்ட அது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்தை இராணுவ செலவுகளுக்கு ஒதுக்க சூளுரைத்தது.

உலகெங்கிலும் போலவே, ஆஸ்திரேலியாவிலும், மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் இடதை நோக்கி நகர்ந்து வருகிறார்கள் என்பதுடன், அதிகரித்தளவில் முதலாளித்துவத்திற்கு விரோதமாக மாறி வருகிறார்கள். ஆனால், தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு பாரிய சோசலிஸ்ட் இயக்கம் இல்லாததால், பெருவணிகத்திற்காக பெரும் வரி வெட்டுக்களை அறிமுகப்படுத்தவிருக்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூட்டணியை ஆழப்படுத்த இருக்கும், தீவிரமாக வளர்ச்சி குறைந்து வரும் ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்காக தொழிலாள வர்க்கத்தை விலை கொடுக்க செய்ய முயலும் மொரிசன் அரசாங்கத்தின் வசம் அது விடப்பட்டுள்ளது.

தீவிர வலதுசாரி எவங்கேலிய கிறிஸ்துவரான மொரிசன், குடியேற்றத்துறை அமைச்சராக இருந்த போது புலம்பெயர்ந்தோர் விரோத போக்கைத் தூண்டியதுடன், அடிப்படை ஜனநாயக உரிமைகளை மிதித்து நசுக்கினார், தடுப்புக்காவல் முகாம்களில் அகதிகள் கொடூரமாக கையாளப்படுவதற்கு இவரே பொறுப்பாக இருந்தார். அதிவலது மற்றும் பாசிசவாத கட்சிகள் தேர்தலில் குறைவான வாக்குகளே பெற்றிருந்த போதினும், அவை பலமடைவதற்குரிய பிற்போக்குத்தனமான சூழலை உருவாக்க, தாராளவாதிகளும் தொழிற் கட்சியும் இரண்டும் உதவியுள்ளனர்.

இந்த தேர்தல் முடிவுகள், போலி-இடது குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் முடுக்கி விட்ட திவாலான வாதங்களைக் குறித்த மற்றொரு காட்சிப்படுத்தலாக உள்ளன. அவை ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டனின் தொழிற்கட்சிகள் போன்ற கட்சிகளையும், அமெரிக்காவில் ஜனநாயக கட்சி மற்றும் ஐரோப்பாவில் சமூக ஜனநாயக கட்சி ஆகிய முதலாளித்துவ கட்சிகளையும் ஆதரிப்பதன் மூலமாக அதிவலதின் வளர்ச்சியை எதிர்க்க முடியும் என்று வாதிட்டன.

உலகெங்கிலும், அரசு எந்திரங்களால் செயலூக்கத்துடன் ஊக்குவிக்கப்படும் தீவிர வலதுசாரி கட்சிகள், “மத்திய-இடது" கட்சிகள் மற்றும் அரசாங்கங்கள் என்றழைக்கப்பட்டவையால் திணிக்கப்பட்ட கடுமையான சிக்கன நடவடிக்கைகள் உருவாக்கிய ஒரு சமூக நெருக்கடியைச் சாதகமாக்கி வருகின்றன. அதன் ஒரு விளைவாக, பாசிசவாத கட்சிகள் நாடாளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையில் ஆசனங்களை ஜெயித்து வருவதுடன், சில நாடுகளில், அரசாங்கமும் அமைத்து வருகின்றன.

பிரிட்டனில், ஆழமாக பிளவுபட்டுள்ள தெரேசா மே இன் பழமைவாத அரசாங்கம் ஜெர்மி கோர்பைனின் தொழிற்கட்சியினது சேவகமும் கோழைத்தனமும் இல்லையென்றால், பதவியிலேயே இருக்க முடியாது. பிரான்சில், இமானுவல் மக்ரோனின் "மிதமான" அரசாங்கம் வங்கிகளுக்குச் சார்பாக அதிக வெட்டுக்களைத் திணித்து வருவதால், இது பாசிசவாத தேசிய முன்னணி தன்னை சாமானிய மக்களின் பாதுகாவலனாக காட்டிக் கொள்வதற்கு உதவுகிறது.

அமெரிக்காவில், ட்ரம்ப் நிர்வாகத்தின் புலம்பெயர்ந்தவர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அதன் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்ற இராணுவ அச்சுறுத்தல்களை எதிர்க்க ஜனநாயக கட்சி மறுப்பதாலேயே அது பலமடைந்துள்ளது. மாறாக, ஜனநாயக கட்சியினரோ தொழிலாளர்களை இனம், பரம்பரை மற்றும் பாலியல் நோக்குநிலையின் அடிப்படையில் பிளவுபடுத்தி, செல்வ செழிப்பான உயர்மட்ட நடுத்தர வர்க்க அடுக்குகளின் நலன்களை முன்னெடுக்கும் நோக்கில், திவாலான அடையாள அரசியலுடன் மக்கார்த்தியிச ரஷ்ய-விரோத பிரச்சாரத்தை ஒன்று கலந்துள்ளனர்.

வரவிருக்கும் ஐரோப்பிய தேர்தல்களில் அதிவலது சக்திகள் இன்னும் கூடுதலாக முன்னேறலாம் என்பதற்கு ஆஸ்திரேலிய தேர்தல் முடிவு ஒரு வெளிப்படையான எச்சரிக்கையாகும். “தேசிய ஒற்றுமை" முறையீடுகள் மற்றும் ரஷ்ய-விரோத விஷமப் பிரச்சாரத்தால் குறிக்கப்பட்ட 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான ஜனநாயக கட்சி பிரச்சாரம் ட்ரம்பைப் பலப்படுத்த மட்டுமே செய்யும் என்பதற்கு இதுவொரு சமிக்ஞையாகும்.

சமூக சமத்துவமின்மை மற்றும் போருக்கு ஆதாரமான இந்த முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறையை ஒழிக்கும் நோக்கில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டமைப்பதே அதிவலது அபாயத்தை எதிர்த்து போராடுவதற்கான ஒரே வழியாகும். இதுபோன்றவொரு இயக்கத்திற்கான புறநிலை அடித்தளமானது, உத்தியோகப்பூர்வ அரசியல் அமைப்பு மீது சாமானிய மக்களுக்கு இருக்கும் அளப்பரிய விரோதத்திலும் மற்றும் சர்வதேச அளவில் வெடிப்பார்ந்த வர்க்க போராட்டங்கள் மீளெழுந்து வருவதிலும் அமைந்துள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி (SEP), ஆஸ்திரேலிய தேர்தலில், முதலாளித்துவத்திற்கு ஓர் உண்மையான மாற்றீட்டைத் தேடும் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் இருந்து முக்கிய ஆதரவை வென்றது. வாக்கு எண்ணிக்கை முடிவடையாத நிலையிலும், சோசலிச சமத்துவக் கட்சி போட்டியிட்ட நான்கு பிரதிநிதிகள் சபை ஆசனங்களுக்கான அதன் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் 500 இக்கு அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளனர். புதிய தெற்கு வேல்ஸ் செனட்டில், 1,000 க்கும் அதிகமான தொழிலாளர்களும் இளைஞர்களும் SEP க்கு வாக்களித்தனர். விக்டோரியாவில் இந்த எண்ணிகை 5,000 இக்கு அதிகமாகும்.

ஓர் உண்மையான மாற்றீட்டைத் தேடுகின்ற தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஒவ்வொருவரும், சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டத்தை வாசித்து, தொழிலாள வர்க்கத்தின் புதிய சோசலிச தலைமையாக அதைக் கட்டமைக்க அடுத்த படியை முன்னெடுக்குமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.