ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Chelsea Manning released, faces new imprisonment for refusing to testify against Assange

செல்சியா மானிங் விடுதலை செய்யப்பட்டார், ஆனால் அசான்ஜிற்கு எதிராக சாட்சியமளிக்க மறுத்தமைக்காக மீண்டும் சிறையில் அடைக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளார்

Niles Niemuth
10 May 2019

வேர்ஜீனியா சிறைச்சாலையில் 62 நாட்கள் கழித்து, இரகசிய செய்தி வெளியீட்டாளரான செல்சியா மானிங் வியாழக்கிழமை காலை விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்பு, மே 17 அன்று இன்னொரு இரகசிய விசாரணையின் முன் அவரை சாட்சியமளிக்க கோரி ஒரு புதிய அழைப்பாணையை பெற்றார். ஆகவே தான், அடுத்த வார ஆரம்பத்தில் அவர் மீண்டும் சிறைக்கு அனுப்பப்படலாம்.

வேர்ஜீனியாவின் கிழக்கு மாவட்டத்திலிருந்து ஒரு இரகசிய விசாரணையின் முன்பாக, விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜை எதிர்த்து சாட்சியமளிக்க மானிங் மறுத்தமையால் அவர் சிறையில் அடைக்கப்பட்டதுடன் அவரின் தண்டனைக் காலம் நேற்று முடிவடைந்தது. இன்னொரு இரகசிய விசாரணைக்கான அழைப்பானது மானிங்கை அதே நிலையில் வைத்து, ட்ரம்ப் அரசாங்கத்தின் கைகளில் அதனது கொடூரமான அணுகுமுறைக்கு திரும்பவும் அனுப்பவதற்கே வழிவகுக்கும்.

"செல்சி கேள்விகளுக்கு பதிலளிக்க தொடர்ந்து மறுத்துவிடுவார்," என்று அவருடைய வழக்கறிஞர் கூறியுள்ளார். "மேலும் அவர் சாட்சியமளிக்க மறுக்கிறார் என்பதற்கான சரியான காரணங்கள் உள்ளன" என்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி [Anthony] ட்ரெங்காவிற்கு நிரூபிக்க ஒவ்வொரு சட்டபூர்வ பாதுகாப்பையும் பயன்படுத்துவார்."

பென்டகன் கணினி வலையமைப்புக்களில் அநாமதேயமாக இருக்க அனுமதிக்க கூடிய கடவுச்சொல் ஒன்றை உடைக்க மானிங்கிற்கு உதவியமைக்காக அசான்ஜ் தற்போது அமெரிக்காவில் ஐந்து ஆண்டு கால தண்டனைக்கு உள்ளாகும் நிலைமையை எதிர்கொண்டுள்ளார். இருப்பினும், இன்னொரு இரகசிய விசாரணைக்கு அழைக்கப்படுவது என்பது மரண தண்டனையை சாத்தியமாக்கும் உளவுபார்த்தல் சட்டத்தின் கீழ் விக்கிலீக்ஸ் வெளியீட்டாளருக்கு எதிராக மேலும் குற்றச்சாட்டுக்கள் தயாரிக்கப்படுகின்றன என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

மானிங் திங்களன்று கூட்டாட்சி நீதிமன்றத்தில் தனது விடுதலையை ஆதரிக்கும் அரசியல் கொள்கைகள் பற்றிய ஒரு சக்திவாய்ந்த அறிக்கையை சமர்ப்பித்து, தனது சொந்த நலனுக்கு எவ்விதமான தீங்கு ஏற்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் இந்த அல்லது வேறு எந்த இரகசிய விசாரணையின் முன்பாக சாட்சியமளிக்க மாட்டார் என்று தெரிவித்தார்.

"நான் வெளியேறுவதற்கான சாவி என் கைகளில் தான் உள்ளது என்ற யோசனை அபத்தமானது," "இந்த தேவையற்ற மற்றும் அடக்குமுறை கட்டாய நடவடிக்கை காரணமாக, நான் எந்த விதத்திலும் பாதிக்கப்படுவேன்: நான் சிறைக்குச் செல்ல வேண்டும் அல்லது என் கொள்கைகளை காட்டிக் கொடுக்க வேண்டும்" என்று மானிங் விளக்கினார். "கொள்கைகளை காட்டிக் கொடுப்பது அரசாங்கம் கட்டியமைப்பதை விட மோசமான சிறை ஆகும்.”

மானிங் குற்றம் சாட்டப்படவில்லை அல்லது எந்தவொரு குற்றத்திற்காகவும் தண்டிக்கப்படவில்லை, மாறாக, ஒரு போலி பிணைக் குற்றம் மற்றும் அமெரிக்காவிற்கு சாத்தியமான நாடுகடத்தலிற்கு காத்திருக்கும் பிரிட்டனில் அதிகபட்ச பாதுகாப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அசான்ஜிற்கு எதிராக பயன்படுத்தப்படக்கூடிய சாட்சியை வழங்க கட்டாயப்படுத்தும் போலி நீதி விசாரணைக்கு அவரை உட்படுத்துவதே நோக்கமாகும்.

அவரது சிறைத் தண்டனையின் முதல் மாதத்தில், மானிங் தனிமையான சிறைச்சாலையில் வைக்கப்பட்டு, உளவியல் அதிர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவருக்கு போதுமான மருத்துவ பராமரிப்பு மறுக்கப்பட்டது.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய ஆவணங்களை விக்கிலீக்ஸிற்கு வழங்கியமைக்காக 31 வயதான முன்னாள் இராணுவ நிபுணர், 2013 ஆம் ஆண்டில் ஒரு நீதிமன்றத் விசாரணைக்கு உட்பட்டு - 35 ஆண்டு சிறைத் தண்டனையில், ஒரு ஆண்டு தனிச் சிறைத்தண்டனை உட்பட சிறையில் ஏழு ஆண்டுகள் இருந்தார். 2017 ஜனவரி மாதம் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடைந்தபோது அவர் விடுவிக்கப்பட்டார்.

மானிங் மற்றும் அசான்ஜ் மீதான அடக்குமுறை இரு கட்சியினரால் நடத்தப்பட்டது. இது ஒபாமா நிர்வாகத்தின் கீழ் தொடங்கியது மற்றும் 2017 ல் மானிங் ஒரு "நன்றியற்ற துரோகி", சிறையிலிருந்து விடுவிக்கப்படக் கூடாது என்று ட்வீட் செய்த ட்ரம்பின் கீழ் தொடர்கிறது.

வெனிசுவேலா மற்றும் ஈரானிலிருந்து சீனா மற்றும் ஆர்டிக் வரை உலகெங்கிலும் புதிய போர்களுக்கு அமெரிக்க தயாரிப்புக்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த யுத்தக் குற்றங்களை வெளிப்படுத்திய அனைவரையும் மௌனமாக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. வாஷிங்டனின் சட்ட விரோத ட்ரோன் கொலை திட்டத்தை பற்றி பத்திரிகைகளுக்கு இரகசிய தகவலை கசிய விட்டதற்காக வியாழக்கிழமை, முன்னாள் NSA உளவுத்துறை ஆய்வாளரான 31 வயதுடைய டானியல் எவரெட் ஹால், கைது செய்யப்பட்டார்.

மனிதாபிமானமற்ற தண்டனையை சகித்துக்கொள்வதற்கும், அரசாங்க கோரிக்கைகளை எதிர்ப்பதற்குமான மானிங்கின் தைரியம், ட்ரம்ப் நிர்வாகத்தின் பிடிகளில் மானிங்கை கைவிட்ட ஜனநாயகக் கட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள முதுகெலும்பற்ற கோழைகளுக்கும் முரணாக உள்ளது.

விடுவிக்கப்படுவதற்கான அவரது சக்தி வாய்ந்த வேண்டுகோள் பிரதான ஊடகங்களினால் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டது. மானி்ங்கை தவறாக நடத்தியமை பற்றி பிரதான செய்தித்தாள்களில் எந்த ஆசிரியர் தலையங்கங்களிலோ, அல்லது ஆசிரிய தலையங்க பத்திரிகை பக்க கருத்துக்களிலோ மற்றும் ஏகாதிபத்தியத்தின் "மனித உரிமைகள்" பாதுகாவலர்களிடமிருந்தோ எந்த கண்ணீரும் இல்லை.

மானிங் தண்டனையை (ஒரு முழு ஜனாதிபதி மன்னிப்பு இல்லாமல்) தனது சொந்த அரசியல் பாரம்பரியத்தை பாதுகாத்துக்கொள்ள இழிந்த முறையில் பயன்படுத்திய ஒபாமா, அவரது விசாரணை பற்றி ஒரு வார்த்தை கூடக் கூறவில்லை.

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான செனட்டர் பேர்னி சாண்டர்ஸ், உலக ஊடக சுதந்திர தினத்தில் "சுதந்திர ஊடகங்கள் இல்லாமல் சுதந்திரமான சமுதாயம் இருக்க முடியாது" என்று ட்வீட் செய்ததுடன் அசான்ஜ் அல்லது மானிங் பற்றிய எந்தவொரு கேள்விகளுக்கும் பதிலளிக்க மறுத்துவிட்டார். ஒரு மாதத்திற்கு முன்பு மானிங் பிணையில் விடுவிக்கப்பட வேண்டும் என்று ஒரு ட்வீட் செய்த பின்னர் அமெரிக்க சோசலிச ஜனநாயகக் கட்சியின் (DSA) உறுப்பினரான அலெக்ஸாண்ட்ரியா ஒக்காசியோ-கோர்டெஸ் அதேபோல் அமைதியாக உள்ளார்.

அசான்ஜின் விசாரணைகளையும், மானிங் கைவிடப்படுவதற்குமான ஆதரவையும் நியாயப்படுத்துவதற்காக அசான்ஜிற்கு எதிரான பாலியல் தாக்குதல்களின் போலித்தனமான குற்றச்சாட்டுகளை பயன்படுத்திக் கொள்ளும் பாலின மற்றும் பாலியல் அடையாள அரசியலைப் நடாத்தும் சோசலிசவாதிகள் எனக் கூறும் போலி இடதுகளின் அந்த நடுத்தர வர்க்க பிரிவினர் மீது விஷேடமான கண்டனம் உள்ளது.

சோசலிச ஜனநாயகக் கட்சியோ அல்லது சோசலிச மாற்றீடோ எந்தவொரு உத்தியோகபூர்வ அறிக்கையையும் தங்கள் வலைத் தளங்களில் வெளியிடவில்லை. அது கலைக்கப்படுவதற்கு முன்பு இந்த ஆண்டு தொடக்கத்தில், சர்வதேச சோசலிச அமைப்பு, தன்னுடைய பத்திரிகையான Socialist Worker இல் மானிங் கைதுசெய்யப்பட்ட எந்த ஒரு தகவலைக் கூட வெளியிடவில்லை. அதேவேளை, Jacobin பத்திரிகை மானிங் சிறையில் அடைக்கப்படுவதைப் பற்றி அவ்வப்போது தகவல்களை வெளியிட்டது, அசான்ஜை பாதுகாக்காமல் அவர்கள் அதை செய்துள்ளனர்.

அரசாங்கம் மற்றும் போலி இடதுகளால் கைவிடப்பட்டாலும், அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் மானிங்கிற்கு பரந்த ஆதரவு உள்ளது. திங்களன்று தனது அறிக்கையில், "சக ஊழியர்கள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், இராஜதந்திரிகள், செயற்பாட்டாளர்கள், தொழிற்சாலை தொழிலாளர்கள், முன்னாள்படையினர், பத்திரிகையாளர்கள், தொழிற்சங்க தலைவர்கள், கடை ஊழியர்கள், தோட்டக்காரர்கள், சமையல்காரர்கள், விமானிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரின் கடிதங்களால் அவரது மின்னஞ்சல்கள் நிரப்பப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டார்.

மானிங், அசான்ஜ் ஆகியோரின் ஆபத்தான நிலை பற்றி இன்னும் அதிகம் அறிந்தால் அவர்கள், இன்னும் கூடுதலான ஆதரவைப் வழங்குவார்கள் என்பதால்தான் ஊடகங்கள் அவர்களின் கைதுகளை குறைத்து வெளியிடுகின்றன அல்லது அசான்ஜ் விஷயத்தில் தனிப்பட்ட முறையில் அவரின் நடத்தையை இழிவுபடுத்துகின்றன.

அவர்களின் விடுதலைக்கான போராட்டம் இப்போது தீவிரமடைய வேண்டும். உலகெங்கிலும் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலகெங்கிலும் உள்ள அதன் பகுதியினரும் தொழிலாள வர்க்கத்தில் இந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றனர். போராட்டங்கள் சனிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு மெல்போர்ன் ஆஸ்திரேலியாவிலும், மற்றும் சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை, இந்தியாவில் நடைபெறும். ஒரு பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு லண்டனிலும் நடைபெறும்.