ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Opening report to Online International May Day Rally

The resurgence of class struggle and the fight for socialism

இணையவழி சர்வதேச மே தினப் பேரணியின் ஆரம்ப அறிக்கை

வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சியும், சோசலிசத்திற்கான போராட்டமும்

By David North
6 May 2019

உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான ICFI நடத்திய ஆறாவது வருடாந்தர மே தின பேரணியான 2019 சர்வதேச இணையவழி மே தினப் பேரணியை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) சனிக்கிழமை, மே 4 இல் நடத்தியது. இந்த பேரணியில் அந்த உலக கட்சியினதும் மற்றும் அதன் பிரிவுகளினதும் மற்றும் உலகெங்கிலுமான அதன் ஆதரவான அமைப்புகளினதும் 12 அங்கத்தவர்கள் முதலாளித்துவத்தின் உலக நெருக்கடி மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்க போராட்டங்களின் வெவ்வேறு அம்சங்களைக் குறித்து உரையாற்றினர்.

எதிர்வரவிருக்கும் நாட்களில், உலக சோசலிச வலைத் தளம் (WSWS) அந்த பேரணியில் வழங்கப்பட்ட உரைகளின் எழுத்து வடிவைப் பிரசுரிக்கும். இன்று நாம் உலக சோசலிச வலைத்  தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவருமான டேவிட் நோர்த் வழங்கிய ஆரம்ப அறிக்கையுடன் தொடங்குகிறோம்.

***>

21 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியின் புரட்சிகர கொந்தளிப்புகளுக்கான தோற்றுவாய்களை மறுகட்டமைப்பு செய்து விவரிக்கத் தொடங்க ஆரம்பித்து, எந்தப்புள்ளியில் முதலாளித்துவ அமைப்புமுறையின் உயிர்பிழைப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகின்றது என்பதை ஆளும் உயரடுக்கு தெளிவாக ஒப்புக்கொண்டது என்பதை அடையாளம் காண வரலாற்றாசிரியர்கள் முயன்று இன்னும் நீண்டகாலம் கடந்துவிட்டிராதபோது, அந்த கல்வித்துறை மேதாவிகள் அவர்களது மாணவர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்கள். வெகு காலம் காலத்திற்கு முன்னர் இல்லை, கடந்த வாரம் ஏப்ரல் 29-30, 2019 இல் தான் லாஸ் ஏஞ்சல்சில் நடத்தப்பட்ட மிக்கென் பயிலக வருடாந்தர கூட்டத்தில் அந்த கல்வித்துறை மேதாவிகள் அவர்களது மாணவர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்கள்.

பெறுமதியற்ற பங்குகள் விற்பனை மோசடியாளராக வசைபெயரெடுத்த, அக்கூட்டத்தை ஒழுங்கமைத்த மைக்கெல் மில்க்கென், சிறையிலிருந்து விடுதலை ஆன பின்னர் இருந்து, அவரது மதிப்பை மீட்டெடுப்பதற்காக பல பில்லியன் டாலர் கணக்கிலான அவரது செல்வவளத்தின் ஒரு பகுதியை மனிதாபிமானவாதியாகவும் மற்றும் சமூக தொலைநோக்குடையவராகவும் காட்டிக்கொள்ள செலவிட்டுள்ளார். இந்த முதலாளித்துவ பெருந்தகைகளின் அந்த கூட்டத்தில், சோசலிச பேராபத்து செல்வாக்கு செலுத்தியது. அவர்களின் செல்வவள குவியல்களின் முகட்டிலிருந்து உற்று நோக்கிய அவர்கள் தொலைதூர அடிவானத்தில் புயல் நெருங்கி வருவதைக் காண்கிறார்கள். “ஏதோவிதத்தில் சோசலிசம் மீண்டும் ஊர்ந்து வந்து கொண்டிருக்கிறது,” என்ற "இந்த கருத்து எனக்கு கவலையளிக்கிறது,” என்று கூகுள் ஸ்தாபகர் எரிக் ஷிமித் தெரிவித்தார். தனியார் முதலீட்டு நிதி நிறுவன பில்லியனர் கென் கிறிஃபின் ஒரு கருத்துக்கணிப்பு மீது கவனம் செலுத்த அழைப்பு விடுத்தார். திரையில் திரையிடப்பட்ட அதன் அச்சுறுத்தும் முடிவுகள், நூற்றாண்டின் திருப்பத்தில் (1980கள்-90 களில்) பிறந்தவர்களில் (millennials) 44 சதவீதத்தினர் ஒரு சோசலிச நாட்டில் வாழ விரும்புவதை எடுத்துக்காட்டின.

முதலாளித்துவ வர்க்கம் எதிர்கொண்டிருக்கும் அபாயம் Guggenheim Partners நிறுவனத்தின் நிதித்துறை நிர்வாகி அலென் சுவார்ட்ஸால் மிகவும் அப்பட்டமாக விவரிக்கப்பட்டது:

சராசரி நபரை எடுத்துப்பாருங்கள் ... அவர்கள் முன்னர் 50:50 ஆக இருந்ததை இப்போது 60:40 என்று பயன்படுத்துமாறு மிகவும் அடிப்படையாக கூறுகிறார்கள்; இது எனக்கு ஏற்புடையதல்ல.

வலதுசாரி மற்றும் இடதுசாரியைப் பார்ப்பீர்களேயானால், நிஜமாக என்ன வந்து கொண்டிருக்கிறது என்றால் வர்க்க போராகும். நூற்றாண்டுகள் நெடுகிலும் பெருந்திரளான மக்கள், உயரடுக்குகள் நிறைய குவித்து வைத்திருக்கிறார்கள் என்று நினைத்த போது நாம் என்ன கண்டோம், இரண்டு விடயங்களில் ஒன்று நடந்துள்ளது: செல்வவளத்தை மறுபகிர்வு செய்வதற்கான சட்டம் ... அல்லது சொத்துக்களைப் பகிர்வதற்கான புரட்சி. வரலாற்றுரீதியில் முன்னும் பின்னும் விவாதித்தாலும் அங்கே இரண்டே இரண்டு விருப்பத்தெரிவுகள் தான் உள்ளன, “இல்லை, எங்களுக்கு முதலாளித்துவம் தான் தேவை; இல்லை சோசலிசம் தான் தேவை" என்பதுதான், இதுதான் புரட்சியை உருவாக்குவது.

பத்திரிகை செய்திகளில் இருந்து முடிவுக்கு வருவோமேயானால், அதிகரித்து வரும் சமூக கோபத்தை எவ்வாறு கையாள்வது என்பதன் மீது ஏதோ ஒருவித விவாதம் நடந்து வருவதாக தெரிகிறது. பெரும்பான்மையினரின் கடுமையான கண்ணோட்டம் ஒரு முதலீட்டு நிறுவன செயலதிகாரியால் தொகுத்தளிக்கப்பட்டது, அவர் அறிவித்தார், “தண்டிக்கும் விதமான மறுபகிர்வு என்பது இயங்காது.” சிறுபான்மையினர் கண்ணோட்டம் ஒரு நிதியியல் சேவை செயலதிகாரியால் வெளியிடப்பட்டது, அவர் பைனான்சியல் டைம்ஸிற்குத் தெரிவித்தார்: “உலகத்தை சற்று பயங்கரமில்லாத இடமாக மாற்றுவதற்கு நான் 5 சதவீதம் கூடுதலாக வரி செலுத்துவேன்,” என்றார்.

சமூக புரட்சியின் அச்சுறுத்தலைக் குறைக்க பில்லியனர்களின் வருவாயில் 5 சதவீத வரி! இந்தளவிலான விட்டுக்கொடுப்புகள் தான், பெருந்திரளான மக்கள் அதிருப்திக்கு ஆளும் வர்க்க சீர்திருத்தவாதிகளின் மிகவும் தீவிர பிரிவினரின் தொலைநோக்குப் பார்வையாக உள்ளது! இதுதான் துன்பப்படும் பாரீஸ் மக்களுக்கு ரொட்டி இல்லையெனில் கேக்கை உண்ணட்டும் என்று மக்களின் கிளர்ச்சியைத் தணிக்க மகாராணி மரி அந்துவானெட் முன்மொழிந்த நிஜமான அணுகுமுறையாக இருந்தது.

எதிர்வரவிருக்கும் அழிவு குறித்து மில்க்கென் பயிலகத்தில் கலந்து கொண்டவர்களிடையே மேலோங்கி இருந்த உணர்வு, Poe இன் "கடல் நகரம்" கவிதை காவியத்தின் துன்பியலை நினைவூட்டுகிறது. அந்த கவிஞர் எச்சரித்தார்: “நகரின் ஓர் உயர்ந்த கோபுரத்திலிருந்து பார்க்கும்போது, மரணம், கீழே மிகப் பெரியதாக தெரிகிறது.”

ஆளும் வர்க்கத்தின் அச்சங்களுக்கு ஆழமான காரணங்கள் உள்ளன. கடந்தாண்டின் மே தின பேரணியில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அளப்பரிய வர்க்க போராட்டத்தின் மேலெழுச்சியை முன்கணித்தது. அந்த முன்கணிப்பு, கடந்த 12 மாதங்களின் சம்பவங்களில் ஊர்ஜிதப்பட்டுள்ளது. சமூக போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் உலகெங்கிலும் பரவி வருகின்றன. ஓராண்டுக்கு முன்னர், “மஞ்சள் சீருடை" என்ற வார்த்தை பளிச்சென தெரியும் பாதுகாப்பு உடை என்பதற்கு அதிகமாக வேறொன்றையும் குறிக்கவில்லை. இப்போதோ, பாரீசிலும் பிரான்ஸ் எங்கிலும் அரை ஆண்டுக்கும் அதிகமாக தொடர்ந்து கொண்டிருக்கும் பெருந்திரளான மக்கள் போராட்டங்களுக்குப் பின்னர், அந்த gilets jaunes (மஞ்சள் சீருடைகள்) சமூக சமத்துவமின்மை மற்றும் முதலாளித்துவம் மீதான மக்கள் எதிர்ப்புக்கு உலகெங்கிலும் அங்கீகரிக்கப்படும் ஓர் அடையாளமாக மாறியுள்ளது.

ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்கள் —அதாவது, இளைஞர்களின் கல்விக்குப் பொறுப்பான தொழிலாள வர்க்கத்தின் பிரிவு, அவ்விதத்தில் அவர்கள் இளம் தலைமுறையினரின் சமூக நனவை விழிப்பூட்டுவதில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கின்ற நிலையில்—அமெரிக்கா, போலாந்து, நெதர்லாந்து, இந்தியா, ஈரான், மெக்சிகோ, நியூசிலாந்து, துனிசியா மற்றும் சிம்பாப்வேயில் நடந்துள்ளன. சமூக சமத்துவமின்மை, வறுமை, எதேச்சதிகாரவாதம் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிரான எதிர்ப்பால் எரியூட்டப்பட்டு, இந்த வேலைநிறுத்த அலை அதிகரித்து வருவதுடன், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் இன்னும் பரந்த பிரிவுகளை அதன் உணர்வுக்குள் இழுத்து வந்து கொண்டிருக்கிறது.

இப்புவி எங்கிலும் காணக்கூடியதாக உள்ள, உலகெங்கிலும் அதிகரித்து வரும் சோசலிசம் மீதான ஆர்வம், வர்க்க போராட்டத்தின் நிஜமான புறநிலை தீவிரப்பாட்டினது பாரிய அரசியல் நனவின் பிரதிபலிப்பாகும். நாம் இந்த நிகழ்ச்சிப்போக்கின் ஆரம்ப கட்டத்தில் மட்டுமே உள்ளோம், பல தசாப்தகால அரசியல் தேக்கநிலைக்குப் பின்னர், போராட்டத்தின் இயல்பைக் குறித்தும் எந்த பாதையைத் தேர்ந்தெடுப்பது என்பதன் மீதும் தெளிவின்மையும், குழப்பமுமே கூட, இருக்கிறது என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் உலக சோசலிச புரட்சியின் தலைச்சிறந்த மூலோபாயவாதியான லியோன் ட்ரொட்ஸ்கி அதை சிறப்பாக விவரித்திருந்தார்:

பெருந்திரளான மக்கள், சமூகத்தை மறுகட்டமைப்பு செய்யும் ஒரு முன்பு தயாரிக்கப்பட்ட திட்டத்துடன் புரட்சிக்குள் நுழைவதில்லை, மாறாக பழைய ஆட்சியை இனியும் அவர்களால் சகித்துக் கொள்ளமுடியாது என்ற ஒரு கூர்மையான உணர்வுடன் செல்கிறார்கள். ஒரு வர்க்கத்தை வழிநடத்தும் அடுக்குகள் மட்டுமே ஒரு சமூக வேலைத்திட்டத்தைக் கொண்டிருக்கும், இதற்குமே கூட சம்பவங்களில் பரிசோதித்துப் பார்ப்பதும் மற்றும் பெருந்திரளான மக்களின் ஒப்புதலைப் பெறுவதும் அவசியமாகிறது. அவ்விதத்தில் புரட்சிக்கான அடிப்படை அரசியல் நிகழ்ச்சிப்போக்கானது, சமூக நெருக்கடியிலிருந்து எழும் பிரச்சினைகளை ஒரு வர்க்கம் படிப்படியாக புரிந்து கொள்ளச் செய்வதை உள்ளடக்கி உள்ளது — அதாவது அடுத்தடுத்த அணுகுமுறையைக் கொண்டு பெருந்திரளான மக்களைச் செயலூக்கத்துடன் நோக்குநிலை கொள்ளச் செய்வதாகும்.

சமூக தீவிரமயப்படல் மற்றும் அரசியல் நோக்குநிலையின் இந்த புறநிலை நிகழ்ச்சிப்போக்குத்தான் —முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாய் இருப்பவர்களிடம் இருந்து விலகி, சோசலிசத்தை நோக்கியும், மற்றும் பாரிய போராட்டத்திற்கான உண்மையான ஜனநாயக அமைப்புகளை உருவாக்குவதை நோக்கியும்— நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சிப்போக்கானது, முதலாளித்துவ சீர்திருத்தம் சாத்தியமில்லை, சுரண்டல் மற்றும் போருக்கான இந்த அமைப்புமுறையைத் தூக்கியெறியவதற்கு குறைவின்றி வேறொன்றும் அவசியமில்லை என்ற புரிதலுக்கு இட்டுச் செல்கிறது. ஆனால் தொழிலாள வர்க்கத்தின் இந்த அபிவிருத்தி அடைந்து வரும் இயக்கத்தினது வளர்ச்சி மற்றும் சக்தியின் மீதான நம்பிக்கை, ஆளும் உயரடுக்கு அது உணரும் அச்சுறுத்தல்களுக்கு விடையிறுப்பதற்காக முன்நிறுத்தும் அபாயங்களை எந்தவிதத்திலும் குறைமதிப்பீடு செய்வதற்குக் காரணமாக இருந்துவிடக் கூடாது. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அகராதியில் சோசலிசம் மீண்டும் நுழைகின்ற நிலையில், முதலாளித்துவ வர்க்கம், எதேச்சதிகாரவாதம் மற்றும் பாசிசவாதத்தின் சித்தாந்தம், மொழி மற்றும் நடைமுறைக்குப் புத்துயிரூட்டுகிறது.

இத்தாலி மற்றும் ஜேர்மனியில் முசோலினி மற்றும் ஹிட்லரை அதிகாரத்திற்குக் கொண்டு வந்த அதுபோன்ற பாரிய பாசிசவாத இயக்கங்கள் இங்கே இதுவரையில் இல்லை என்றாலும், முதலாளித்துவ சர்வாதிகாரத்தின் மிகவும் காட்டிமிராண்டித்தனமான வடிவங்களுக்கான ஒரு சமூக அடித்தளத்தை உருவாக்கும் முயற்சிகள் வேகமாக நடந்து வருகின்றன என்பதோடு, இந்த அபாயகரமான போக்கிற்கான உதாரணங்களை உலகெங்கிலும் காண முடிகிறது.

புலம்பெயர்வோர்-விரோத பேரினவாதத்திற்கான ட்ரம்பின் இடைவிடாத முறையீடுகள் சோசலிசம் மீதான அதிகரித்தளவிலான அவரின் விஷமத்தனமான கண்டனங்களுடன் பின்னிப் பிணைந்துள்ளன. பிரான்சில் ஜனாதிபதி மக்ரோன், மஞ்சள் சீருடையாளர்களுக்கு எதிராக பொலிஸ் மற்றும் இராணுவத்தை நிலைநிறுத்தி வருகின்ற அதேவேளையில், பாசிசவாத விச்சி ஆட்சியின் குற்றகரமான தலைவரும் பழைய நாஜி ஒத்துழைப்புவாதியுமான தளபதி பெத்தனை ஒரு தேசிய மாவீரராக நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துகிறார். இத்தாலியின் துணை பிரதம மந்திரி மத்தேயோ சல்வீனி பெனிடோ முசோலினி மீதான அவர் வியப்பை ஒளிவுமறைவின்றி வெளியிடுகிறார். பிரேசிலில், ஜனாதிபதி ஜயர் போல்சொனாரோ 1960 கள் மற்றும் 1970 களின் பயங்கரமான ஆட்சிக்காலத்தின் போது ஆயிரக் கணக்கானவர்களை சிறையில் அடைத்த, சித்திரவதை செய்த, படுகொலை செய்த சர்வாதிகாரத்தைப் பெருமைப்படுத்துகிறார். ஹங்கேரியில் விக்டொர் ஓர்பனின் Fidesz கட்சி, போலாந்தில் Jarosłav Kaczyński இன் "சட்டம் மற்றும் நீதி" கட்சி, நிச்சயமாக, ஜேர்மனியில் ஜேர்மனிக்கான மாற்றீடு (Alternative für Deutschland) ஆகியவை பாசிசவாத ஆட்சிகளை உருவாக்க முயலும் அதிகரித்து வரும் அமைப்புகளுக்கான மிகவும் நன்கு-அறியப்பட்ட எடுத்துக்காட்டுகளில் ஒரு சில மட்டுமே ஆகும்.

இத்தகைய இயக்கங்களின் எழுச்சியும் வளர்ச்சியும், ஜனநாயக அரசியலமைப்பு சட்ட விதிமுறைகள் மீதான விசுவாசமும் ஆதரவும் உலகெங்கிலும் ஆளும் உயரடுக்குகளுக்குள் முறிந்து, மிகவும் முன்னேறிய நிலையில் இருப்பதன் வெளிப்பாடுகளாக உள்ளன.

ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சியா மானிங் மீதான வழக்கு விசாரணைகள், இந்தியாவில் மாருதி சுசூகி தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது, மத்தாமோரொஸில் வேலைநிறுத்தம் செய்த மெக்சிக்கன் தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டமை, மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் மூர்க்கமாக கையாளப்படுவது ஆகியவை 1930 களைப் போலவே உலகை ஒரு வெறுக்கத்தக்க சிறைக்கூடமாக மாற்றுவதன் பாகமாக நடக்கின்றன.

இந்த அரசியல் பிற்போக்குத்தனம் அதிகரித்திருப்பதற்கான புறநிலை பொருளாதார மற்றும் சமூக அடித்தளம் என்ன?

கடந்த மூன்று தசாப்தங்களில், உலக மக்கள்தொகையில் ஒரு மிகச்சிறிய பிரிவுக்குள் முன்னொருபோதும் இல்லாதளவுக்கு ஏமாற்றிப் பறித்த செல்வவளம் மிக அதிக மட்டங்களில் திரண்டுள்ளது. உலக பங்குச்சந்தைகளில், அதுவும் குறிப்பாக அமெரிக்காவில் பங்கு மதிப்புகளில் மலைப்பூட்டும் அளவிலான அதிகரிப்பே, இந்த செல்வவள திரட்சிக்குப் பிரதான இயங்குமுறையாகும்.

பெருநிறுவன வருவாய்கள் என்று காரணங்காட்டி எது நியாயப்படுத்தப்படுகிறதோ அதற்கு அப்பாற்பட்டு, பங்கு விலைகள் தொடர்ந்து அதிகரிப்பதற்கு உத்தரவாதமளிப்பதே பொருளாதார கொள்கையின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது. குற்றகரமான ஊகவணிகத்தின் நேரடி விளைவான, 2008 முறிவு, பணத்தைப் புழக்கத்தில் விடும் (quantitative easing) வடிவில் நிதியியல் உயரடுக்கிற்கு மத்திய அரசாங்கத்தின் முழுமையான அடிபணிவால் தீவிரப்பட்டது.

2018 இன் இறுதியில், வட்டிவிகிதங்களில் செய்யப்பட்ட மிக சொற்ப உயர்வும் கூட வோல் ஸ்ட்ரீட்டில் குறிப்பிடத்தக்க விற்றுத்தள்ளல்களைத் தூண்டியது. இது ஏறத்தாழ உடனடியாக மேற்கொண்டு வட்டிவிகிதங்களை உயர்த்துவதற்கான அதன் திட்டங்களை பெடரல் ரிசர்வ் கைவிடுவதற்கு இட்டுச் சென்றது, அவ்விதத்தில் பங்கு விலை உயர்வுகளைத் தக்க வைக்க கட்டுப்பாடின்றி பணப்புழக்கம் வழங்குவதை அரசு தொடரும் என்பதை உறுதிப்படுத்தியது. பெடரல் ரிசர்வின் அடிபணிவுக்கு வோல் ஸ்ட்ரீட் பெருமிதத்துடன் மற்றொரு குறிப்பிடத்தக்க உயர்வைக் கொண்டு விடையிறுத்துள்ளது.

ஆனால் வோல் ஸ்ட்ரீட் நிதியியல் ஒட்டுண்ணித்தனத்திற்கான ஆதரவு, நிஜமான அரசியல் மற்றும் சமூக விளைவுகளையும் கொண்டுள்ளது. அதிகரித்து வரும் பின்னடைவு அழுத்தங்கள், தீவிரப்பட்டுள்ள வர்த்தப் போர் ஆகிய நிலைமைகளின் கீழ், பங்கு விலை உயர்வுகளைத் தக்க வைக்க தேவையான இலாப மட்டங்களைப் பெருநிறுவனங்களால் எவ்வாறு உருவாக்க முடியும், அல்லது, மிகவும் வெளிப்படையாக கூறுவதானால், எவ்வாறு சந்தைகளின் பொறிவைத் தடுக்க முடியும்? உண்மையில், ஜனாதிபதி ட்ரம்ப், டோவ் ஜோன்ஸ் சராசரி இன்னும் 10,000 புள்ளிகள் —அதாவது இன்னும் 40 சதவீதம்— உயர வேண்டுமென அறிவித்துள்ளார்.

அதை தொழிலாள வர்க்கம் மீதான சுரண்டல் மட்டங்களை பாரியளவில் தீவிரப்படுத்துவதன் மூலமாக செய்வதே இதற்கான பதிலாக உள்ளது. இது தான் பாசிசவாதம் மற்றும் போருக்குத் திரும்புவதன் அடியில் உள்ள புறநிலை உந்துதலாகும்.

நாடுகளுக்குள் ஜனநாயக விதிமுறைமீறல்கள் வெளிநாட்டு கொள்கை நடத்தையில் உள்ள முற்றுமுதலான குற்றவியல்தன்மையை பின்தொடர்கிறது. “சர்வதேச சட்டம்" என்ற வார்த்தை முன்னுக்குப்பின் முரணாக பைத்தியக்காரத்தனமாக ஆகிவிட்டது. அமெரிக்காவின் உலகந்தழுவிய நடவடிக்கைகள் அரசியல் குற்றவியல்தனத்தில் முடிவில்லா நடவடிக்கையாக உள்ளன. வெனிசுவேலாவை நோக்கிய ட்ரம்ப் நிர்வாகத்தின் நடத்தை 1939 இல் போலாந்து தொடர்பான நாஜி ஆட்சியின் நடத்தைக்குக் குறிப்பிடத்தக்க அளவில் ஒத்திருக்கின்றது.

ஜனநாயக கொள்கை நடத்தையில் அரசியலமைப்பு விதிமுறை மீறலும் மற்றும் வெளியுறவு கொள்கையில் அடாவடித்தனமான அணுகுமுறைகளை ஏற்பதும், இறுதி பகுப்பாய்வில், முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடியில் வேரூன்றி உள்ளன. ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள அதன் எதிர்விரோதிகளிடம் இருந்து அமெரிக்கா புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை முகங்கொடுத்திருக்கையில், அதன் உலகளாவிய மேலாதிக்க நிலையைப் பேணுவதற்கான அதன் பெரும்பிரயத்தன முயற்சிகளுக்கு, போருக்குத் தீவிரப்பட்டு செல்லும் ஒரு நிரந்தரமான நிலை அவசியப்படுகிறது.

இந்த பொறுப்பற்ற கொள்கை ட்ரம்ப் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி தொடரும். உண்மையில், ஜனநாயகக் கட்சி பிடித்துள்ள ரஷ்ய-விரோத விஷமப் பிரச்சாரம், வெள்ளை மாளிகையை அது மீண்டும் கைப்பற்றினால், ஓர் உலகப் போர் அபாயம் முன்பினும் கூடுதலாக இருக்கும் என்று சந்தேகிப்பதை நியாயமாக்குகிறது. பேர்ணி சாண்டர்ஸின் வெற்றி "சமாதானமான நியாயமான" ஏகாதிபத்தியத்தை உருவாக்கும் என்ற பிரமைகளை இன்னமும் விதைத்து வருபவர்களைப் பொறுத்த வரையில், கோட்பாடற்ற மற்றும் சந்தர்ப்பவாத அரசியலை நடத்தும் இவர், சீனா முன்னிறுத்தும் அமெரிக்க நலன்கள் மீதான அச்சுறுத்தலை குறைமதிப்பீடு செய்வதற்காக அவரின் அரசியல் போட்டியாளரான முன்னாள் துணை ஜனாதிபதி பைடனைக் கண்டித்துள்ளார் என்ற உண்மையைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

“பில்லியனர் வர்க்கத்திற்கு,” எதிராக சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பிதற்றி வரும் இந்த செனட்டரின் வனப்புரை சொல்லாடல்கள் என்னவாக இருந்தாலும், வர்த்தகப் போரை சாண்டர்ஸ் ஊக்குவிப்பதே அவரை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு உடந்தையாய் இருக்கும் ஒரு நாகரீக சேவகர் என்று முத்திரை குத்துவதற்கு போதுமானது. சாண்டர்ஸை, ஒரு புரட்சியாளராக ஊக்குவிப்பது ஒருபுறம் இருக்கட்டும், ஒரு சோசலிசவாதியாக ஊக்குவிப்பர்கள், ஓர் அரசியல் மோசடியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

முப்பதாண்டுகளுக்கு முன்னர், 1989 இல், நடந்த பல தொடர்ச்சியான சம்பவங்கள் அதற்கடுத்து வந்த தசாப்தங்களின் சமூக மற்றும் அரசியல் வாழ்வின் போக்கில் ஆழமாக செல்வாக்கு செலுத்தின. கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகள் தானே கலைத்துக் கொள்ள தொடங்கின. சீனாவில், மாவோயிச ஆட்சி பெய்ஜிங் தியானென்மன் சதுக்கத்தில் படுகொலைக்கு உத்தரவிட்டதன் மூலமாக பாரிய மக்கள் போராட்டங்களுக்கு விடையிறுத்தது.

இவ்விரு விடயங்களும் அரசியல் வடிவங்களில் வேறுவேறாக இருந்தாலும், பொருளாதார விளைவு என்பது முதலாளித்துவத்திற்குத் திரும்புவதாக இருந்தது. இரண்டாண்டுகளுக்குப் பின்னர், 1991 இல், கிரெம்ளின் அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தைக் கலைத்து முதலாளித்துவ மீட்சி நிகழ்ச்சிப்போக்கை பூர்த்தி செய்தது.

ஸ்ராலினிச ஆட்சிகளின் முறிவு, சர்வதேச முதலாளித்துவ வர்க்கத்தால் முதலாளித்துவத்திற்கு ஒரு மாற்றீடு சோசலிசம் என்பதைத் தீர்க்கமாக நிராகரித்ததன் மூலமாக புகழப்பட்டது. அதற்கடுத்து வந்த மூன்று தசாப்தங்களில் ஏற்பட்ட அரசியல் மற்றும் புத்திஜீவித பிற்போக்குத்தனத்தின் பல்வேறு வடிவங்கள் அந்த கருத்துருவின் அடித்தளத்திலேயே அபிவிருத்தி செய்யப்பட்டன. அந்த வார்த்தையாடல்களுக்கு அடித்தளத்தில் பொதிந்திருந்தது, ஸ்ராலினிச ஆட்சிகள் சோசலிசத்தைப் பிரதிநிதித்துவம் செய்தன என்ற பயங்கரமான வரலாற்று பொய்யாகும். ஸ்ராலினிசத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கிச இயக்கம் நடத்திய போராட்டத்தின் வரலாறு எந்தளவுக்குக் குறைத்து காட்டப்படுகிறதோ, திரித்துக் கூறப்படுகிறதோ அல்லது புறக்கணிக்கப்படுகிறதோ அந்தளவிற்குத் தான் அந்த பொய் தாக்குப்பிடிக்கும்.

ஆனால் முதலாளித்துவ அமைப்புமுறையின் முரண்பாடுகள் இப்போது தொழிலாள வர்க்கத்தின் பாரிய இயக்கத்தைப் புதுப்பிக்கும் நிலைமைகளை உருவாக்கி வருகின்றன. நான்காம் அகிலத்தின் வரலாற்று முன்னோக்கு —அதாவது இந்த சகாப்தம் முதலாளித்துவத்தின் மரண ஓலத்தின் சகாப்தம் என்பது—நிரூபணமாகி கொண்டிருக்கிறது. ஆனால் இந்த உறுதிப்படுத்தலை வெறுமனே ஆழ்ந்த சிந்தனையாக மட்டுமல்லாமல் ஒரு செயலூக்கமான மற்றும் புரட்சிகரமான அர்த்தத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

நான்காம் அகிலத்தின் பணி, உலகைக் குறித்து விளங்கப்படுத்துவது மட்டுமல்ல, மாறாக அதை மாற்றுவதாகும். உண்மையில், புறநிலை சம்பவங்களில் குறுக்கிடுகின்ற அபிவிருத்தி அடைந்து வரும் வர்க்க போராட்டத்தில், உலகெங்கிலுமான சோசலிச சமத்துவக் கட்சிகள் (SEP) செய்யும் நடைமுறை தலையீட்டினூடாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மார்க்சிச பகுப்பாய்வு மற்றும் புரட்சிகர நடைமுறை அதன் மிகவும் அரசியல்ரீதியான நனவுபூர்வமான வெளிப்பாட்டைக் காண்கிறது.

புறநிலையான புரட்சிகர சாத்தியக்கூறுக்கும் அதை முழுமைப்படுத்துவதற்காக ட்ரொட்ஸ்கிச இயக்கம் வகிக்கும் முக்கிய பாத்திரத்திற்கும் இடையிலான இடைத்தொடர்பு குறித்த இந்த புரிதலே, மே தின கொண்டாட்ட தருணத்தில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கான எமது அழைப்பு உத்வேகப்படுத்துகிறது.

சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுங்கள்!

சோசலிச புரட்சிக்கான உலக கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவைக் கட்டியெழுப்புங்கள்!