ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French public sector workers strike against Macron government attacks

பிரெஞ்சு பொதுப்பணித்துறை தொழிலாளர்கள் மக்ரோன் அரசாங்க தாக்குதல்களுக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் இறங்கினர்

By Anthony Torres
11 May 2019

நூறாயிரக் கணக்கான பிரெஞ்சு தொழிலாளர்கள், பொதுப்பணித்துறையை "நவீனமயமாக்குவது" மீதான இமானுவல் மக்ரோன் அரசாங்கத்தின் வரைவு சட்டத்தை எதிர்த்து நாடுதழுவிய பொதுப்பணித்துறை வேலைநிறுத்தின் பாகமாக வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.

அந்நடவடிக்கை நாளில் பங்கெடுக்க அழைப்பு விடுக்காவிட்டால் அந்த அரசாங்க-எதிர்ப்பு போராட்ட இயக்கத்தின் மீது தங்கள் கட்டுப்பாட்டை இழந்துவிடுவோம் என்று அஞ்சி, ஆறு மாதகால "மஞ்சள் சீருடை" போராட்டங்களுக்குப் பின்னர், அனைத்து தொழிற்சங்கங்களும் அதில் பங்கெடுப்பதற்கு அழைப்புவிடுக்க கடமைப்பட்டிருப்பதாக உணர்ந்தன.

மக்ரோன் 2022 இக்குள் 5.5 மில்லியன் உள்துறை சேவை வேலைகளில் இருந்து 120,000 வேலைகளை நீக்க சூளுரைத்துள்ளார். நீக்கப்படும் இந்த வேலைகள், தனியார் துறை மூலமாக ஒருமுறை பணிகளுக்கான குறைவூதிய ஒப்பந்த வேலைகளைக் கொண்டு பிரதியீடு செய்யப்படும். வேலை மற்றும் வேலை செய்யும் இடங்களுக்கு இடையே தொழிலாளர்கள் பலவந்தமாக மாற்றப்படுவார்கள் என்பதுடன், நீண்ட நேரம் வேலை செய்ய வைக்கப்படுவார்கள். இந்த சீர்திருத்தம் தேசிய நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றதும், ஜனவரி 1, 2020 இல் இருந்து நடைமுறைக்கு வரும்.

வியாழக்கிழமை 150 க்கும் அதிகமான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஆசிரியர்கள், சுங்கத்துறை அதிகாரிகள், பணி உதவியாளர்கள், செவிலியர்கள் மற்றும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் அணிதிரட்டப்பட்டிருந்தனர். பிரெஞ்சு அரசு தகவல்களின்படி, சுமார் 110,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர், அதேவேளையில் CGT தொழிற்சங்க கூட்டமைப்பு 250,000 பேர் பங்கெடுத்ததாக வாதிட்டது. மார்செய்யில் 3,000 போராட்டக்காரர்கள் (ஒரு தொழிற்சங்க ஆதாரம் குறிப்பிட்டது), லியோனில் 3,300 மற்றும் 5,300 க்கு இடையே, ரென்னில், மொன்பெலியே, போர்தோ, ஆங்கெர்ஸ், லீல், ஸ்ராஸ்பேர்க் மற்றும் பெர்பினியோனில் ஆயிரக் கணக்கானவர்கள் பங்கெடுத்திருந்தனர். தொழிற்சங்கங்களின் தகவல்படி, பாரீசில் 30,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் இருந்தனர்.

அதில் கலந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அதில் பங்கெடுப்பவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தி இருந்த தொழிற்சங்க எந்திரத்தின் மீது அவநம்பிக்கை கொண்டிருந்த போதினும், அவர்கள் அதில் பங்கெடுத்திருந்தனர். வெளியுறவுத்துறை செயலர் Olivier Dussopt, பொதுத்துறை சேவையில் வேலைநிறுத்தக்காரர்களின் எண்ணிக்கையை 3.3 சதவீதமாகவும், மருத்துவமனைகளில் 4 சதவீதமாகவும், மாநில பொதுத்துறை சேவைகளில் 11.4 சதவீதமாகவும் மதிப்பிட்டிருந்தார், அத்துடன் கல்வித்துறை "சீர்திருத்தத்திற்கு" எதிராக அணிதிரண்டிருந்த ஆசிரியர்களின் பலமான பங்களிப்பும் இருந்தது. ஆரம்பப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் முறையே 17.6 சதவீதம் மற்றும் 11.7 சதவீத வேலைநிறுத்தங்கள் இருந்ததாக கல்வித்துறை அமைச்சகம் அறிவித்தது.

ஓர் ஓய்வூபெற்ற பொதுத்துறை சேவை பணியாளரான அனிதாவுடன் பாரீசில் WSWS கலந்துரையாடியது. "பொதுச்சேவையைப் பாதுகாக்கவும், கடுமையான செயல்பாடுகளினூடாக வென்றெடுக்கப்பட்டுள்ள அனைத்து தேட்டங்களையும் பாதுகாக்கவும், தற்போது பின்பற்றப்பட்டு வருகின்ற கொள்கைகள் மீது நமது உடன்பாடின்மையை வெளிப்படுத்துவதற்காக அனைவருடன் சேர்ந்து நிற்கும் உரிமைக்காகவும்" அவர் வந்திருந்தார். “அங்கே பணம் இருக்கிறது, ஆகவே அதை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். உலகமயமாக்கம் என்பது, பொதுவாக மக்களின் மகிழ்ச்சிக்காக, உலகளவில் மனிதர்கள் அளவில் நாம் அதை பகிர்ந்து கொள்ள வேண்டும்.”

சமூக சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டம் முதலாளித்துவச் சுரண்டலை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலமாக செல்ல வேண்டும் என்று விவரித்த அனிதா: “நாம் அனைவரும் சமமாக இருக்க வேண்டும், ஆண்கள், பெண்கள், என்ன நிறத்தில் இருந்தாலும், எந்த நாட்டில் இருந்தாலும், நாம் எல்லோரும் மனித உயிர்கள். ஆனால் கொள்கை முடிவெடுப்பவர்களுக்கு இன்னமும் நிறைய பணம், நிறைய மூலதனம் தேவைப்படுகிறது. அவர்களால் மேற்கத்திய தொழிலாள வர்க்கத்தைச் சுரண்ட முடியவில்லை என்றால், அவர்கள் குறைவூதியத்தில் உற்பத்தி செய்து தங்கள் பைகளை நிரப்புவதற்காக, இந்தியாவிலும், ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் குழந்தைகளைப் பார்க்கிறார்கள்,” என்றார்.

பொபினி பிராந்திய நீதிமன்றத்தில் பணியாற்றும் ஜோர்ஜையும் WSWS நேர்காணல் செய்தது. “படுமோசமாக செயல்படும் கருவிகளை நாம் கொண்டிருக்கிறோம்,” என்று கூறிய அவர், “அவை பொருத்தமானவை இல்லை என்பதோடு, ஏற்கனவே நாம் அதிக சுமையில் இருக்கையில் அவை நமது பணியை இன்னும் அதிகமாக சிரமப்படுத்துகின்றன,” என்றார்.

“[பொதுத்துறை சேவை கூலிகளைத் தீர்மானிக்கும்] குறியீட்டு புள்ளி ஒன்பது ஆண்டுகளாக தேக்கமடைந்துள்ளது ... எங்களின் சம்பளத்தைத் தவிர மற்ற அனைத்தும் அதிகரிக்கின்றன,” என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

மக்ரோனின் தாக்குதல்கள் மீது ஜோர்ஜூக்கு எந்த பிரமைகளும் இருக்கவில்லை: “எவ்விதத்திலும் அவருக்கு அக்கறையில்லை. செல்வந்தர்கள் மக்ரோனுக்கு நிதியளிக்கிறார்கள், ஆகவே 'மஞ்சள் சீருடையாளர்கள்' குறித்து அவருக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர், அவரது பிரச்சாரத்திற்கு நிதி வழங்கிய செல்வந்தர்களுக்கான கொள்கையைத் தயாரித்து செயல்படுத்துகிறார். அவர் அவர்களுக்குச் சொந்தமானவர்,” என்றார்.

தொழிற்சங்கங்களது தற்போதைய முன்முயற்சியில் அவருக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்பதை ஜோர்ஜ் சுட்டிக்காட்டினார்: “இது நிஜமான பிரச்சினை. 'சமூக பேச்சுவார்த்தை' எதற்கும் பிரயோஜனமற்றது என்று நினைக்கிறேன். தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை அதில் சிக்கவைக்க வருகின்றன, சில தொழிற்சங்கங்கள் பணம் பெறும் அளவுக்குக் கூட செல்கிறது. பணியாளர்கள் மற்றும் மிக வறியவர்களின் உரிமைகள் சரிந்து வருவதை நாம் காணும் போதும் கூட, முதலாளிமார்களுடன் நாம் பொதுவான நலன்களைக் கொண்டிருக்கிறோம் என்று நம்ப வைக்கவே சமூக பேச்சுவார்த்தை நம்மை வழிநடத்துகிறது என்கின்ற நிலையில், தொழிலாளர்கள் ஒரு பொறியில் சிக்கியுள்ளனர். நம் கண் முன்னாலேயே நாம் முட்டாள் ஆக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். குறுகிய கால, அதிக ஆக்ரோஷமான போராட்ட வடிவங்களுக்குத் திரும்ப வேண்டும். 'மஞ்சள் சீருடையாளர்கள்' ஒரு தீர்வாக இருக்கலாம்,” என்றார்.

உலக சோசலிச வலைத்தளம் (WSWS) ஓர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் லூசில் உடனும் கலந்துரையாடியது, அவர் தெரிவிக்கையில், “இது, ஆசிரியர்கள் மட்டுமல்ல, அனைத்து பொதுத்துறை பணியாளர்களும் அக்கறை செலுத்தும் ஓர் ஆர்ப்பாட்டமாகும். அது, நமது அன்புக்குரிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னர் இருந்து ஒழுங்கமைக்கப்பட்டுள்ள பொதுச்சேவையின் முறிவுக்கு எதிரானது. இப்போது இது நிஜமாகவே நிஜமான தீவிரத்தன்மை கொண்ட ஏதோவொன்றாக மாறி வருகிறது. அங்கே பள்ளியில் தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன அது, குறிப்பாக உயர்நிலை பள்ளி மாணவர்களிடையே மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. மேலும் மருத்துவமனையிலும் அனைத்து பொதுத்துறை சேவைகளிலும் இது நடக்கிறது, அவ்விதத்தில் அவை தனியார் துறையின் நிலைமைகளுக்கு மாற்றப்படும்,” என்றார்.

அமெரிக்காவில் 2018 மற்றும் 2019 இல் ஆசிரியர்களது வேலைநிறுத்தங்கள் குறித்து வினவிய போது, அவர் "அந்த வேலைநிறுத்தங்களைப் பின்தொடர்ந்ததாகவும்" அவர்களின் போராட்டத்தை மதிப்பதாகவும் லூசில் பதிலளித்தார்: “நாங்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும் அந்தளவுக்கு அமெரிக்காவில் ஆசிரியர்கள் பாதுகாக்கப்படவில்லை. நான் ஐரோப்பாவில் ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்களைப் பின்தொடரவில்லை, ஆனால் இப்போது ஐரோப்பிய தேர்தல்களில் எங்கள் குரல் கேட்குமாறு செய்வது முக்கியமானது,” என்றார்.

“ஐரோப்பா ஆகட்டும் அல்லது உலகெங்கிலும் ஆகட்டும் நம் அனைவருக்கும் ஒரே தேவைகள் தான் உள்ளன,” என்றவர் நிறைவு செய்தார். “அவ்வளவு தான், நாம் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள், ஆனால் நம்மால் விட்டுக்கொடுக்க முடியாது,” என்றார்.

பொதுச் சேவைகள் அத்துடன் ஓய்வூதியங்கள் மீதான பிரெஞ்சு அரசாங்கத்தின் தாக்குதல்கள், தொழிலாளர்களின் கோரிக்கையைச் செவிமடுக்க மக்ரோனுக்கு எந்த உத்தேசமும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்றன. ஆறு மாதகால “மஞ்சள் சீருடையாளர்கள்" போராட்டங்களுக்குப் பின்னர், மக்ரோன், ஐந்தாம் குடியரசின் மிகவும் மக்கள் செல்வாக்கிழந்த ஜனாதிபதியாக அவரை ஆக்கியுள்ள பணக்காரர்களுக்குச் சாதகமான கொள்கைகளைத் திணிக்கவும் தீவிரப்படுத்தவும் உத்தேசித்துள்ளார். தொழிலாளர்களை நோக்கிய அவரின் மனோபாவம், “மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கான அனுமதியுடன், ஆபரேஷன் சென்டினெல் இல் சிப்பாய்களை நிலைநிறுத்திய போது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் அவர்களின் போராட்டங்களைத் தொழிற்சங்க எந்திரங்களின் கரங்களில் இருந்து எடுப்பது இன்றியமையாததாகும், அவை அரசாங்கத்தின் சிக்கனக் கொள்கைகளைப் பேரம்பேசி ஏற்றுக் கொள்கின்றன என்பதுடன், அவை "மஞ்சள் சீருடைகள்" போராட்டங்களுக்கும் விரோதமாக இருந்துள்ளன. இரண்டாவதாக கூறப்பட்டதானது தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக ஒழுங்கமைத்ததன் மூலமாக முன்னோக்கி செல்வதற்கான பல வழிகளை எடுத்துக்காட்டி உள்ளன. அவை மூர்க்கமான ஒடுக்குமுறையையும் மற்றும் ஊடகங்களில் கண்டனங்களையும் முகங்கொடுத்துள்ளன.

கடந்தாண்டு இரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை தனிமைப்படுத்தி குரல்வளையை நெரித்த தொழிற்சங்கங்களுக்கு, போராட்டத்தை ஒழுங்கமைக்கும் உத்தேசம் எதுவும் கிடையாது. “சமூக பேச்சுவார்த்தையின்" பாகமாக, பெருநிறுவனங்கள் மற்றும் அரசால் பில்லியன் கணக்கான யூரோக்கள் நிதியுதவி வழங்கப்பட்டு, அவை மக்ரோனின் கொள்கை மீதான எதிர்ப்புக்கு விரோதமாக உள்ளன, இந்த எதிர்ப்புகள் அவற்றினது ஜடரீதியான நலன்களை அச்சுறுத்துகின்றன. வியாழக்கிழமை பேரணியின் நோக்கம் வெறுமனே "இந்த சட்டமசோதா குறித்து தகவல் வழங்கவும், விழிப்புணர்வை அதிகரிக்கவும் மற்றும் எதிர்ப்பை அதிகரிக்கவும்" நோக்கம் கொண்டிருந்ததாக அவை அறிவித்தன.

மக்ரோனின் வெளிப்படையான இணங்காமையை முகங்கொடுத்த CGT இன் ஜோன்-மார்க் கனோன் கூறுகையில், “அரசாங்கத்துடன் சமூக பேச்சுவார்த்தைக்கான சாத்தியக்கூறுகள் செயலிழந்துவிட்டதாக" தெரிவித்தார்.

உண்மையில் தொழிற்சங்க எந்திரங்கள் தொழிலாளர்களின் மேலாளுமை அதிகரித்து வருவதைக் குறித்த அச்சத்தால் மட்டுமே இவ்வாரத்தின் வேலைநிறுத்தத்தை ஒழுங்கமைத்தன. தொழிற்சங்க அதிகாரிகள் பிரான்சிலும் ஐரோப்பா எங்கிலும் தொழிலாளர்களின் போராட்டங்கள் அதிகரித்து வருவதை நடுக்கத்துடன் பார்த்து வருகிறார்கள்.

Chalon sur Saône மருத்துவமனையில் செவிலியர்கள் மற்றும் செவிலியர்களின் உதவியாளர்கள் புதன்கிழமையில் இருந்து வேலைநிறுத்தத்தில் உள்ளனர். இந்த வேலைநிறுத்தம் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக தொடங்கப்பட்டதாக info.Chalon வலைத் தளம் குறிப்பிட்டது. அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் ஒருவர் நிலைமைகளை இவ்வாறு விவரித்தார்: “நாங்கள், ஒரு வருடத்தில், அவரச சிகிச்சைப் பிரிவு வளாகங்களுக்கு எந்த நோயாளியும் வராமல் வெறும் ஐந்து நாட்கள் மட்டுமே இருந்துள்ளோம், சிலநேரங்களில் அந்த வளாகங்களில் 18 நோயாளிகளாவது படுத்திருப்பார்கள்,” என்றார்.

நடந்து வரும் போராட்டங்களை ஒன்றுபடுத்த தொழிற்சங்கங்களில் இருந்து நனவுபூர்வமாக முறித்துக் கொண்டு, மக்ரோன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நிதியியல் செல்வந்த தட்டுக்கு எதிராக ஓர் அரசியல் போராட்டத்தை ஒழுங்கமைப்பதற்கு நடவடிக்கை குழுக்களை உருவாக்குவது அவசியமாகும்.

ஸ்ராலினிசத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு இருபத்தி எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், இது ஆளும் வர்க்க சித்தாந்தவாதிகளால் "வரலாற்றின் முடிவு" என்றும் வர்க்க போராட்டம் முடிந்துவிட்டது என்றும் தவறாக விவரிக்கப்பட்ட நிலையில், “மஞ்சள் சீருடையாளர்கள்" போராட்டமும் அத்துடன் பொதுத்துறை தொழிலாளர்களின் போராட்டமும் உலகெங்கிலுமான வர்க்க போராட்ட மீளெழுச்சியின் பாகமாக உள்ளன.

அமெரிக்கா, இங்கிலாந்து, கென்யா மற்றும் போலாந்தில் ஆசிரியர்கள் அணிதிரண்டுள்ளனர். “மஞ்சள் சீருடையாளர்கள்" இயக்கங்கள் போர்ச்சுக்கல், ஜேர்மனி மற்றும் அதற்கு அங்காலும் எழுந்துள்ளன. அல்ஜீரியாவிலும் சூடானிலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பாரிய இயக்கங்கள் இராணுவ சர்வாதிகாரங்களைத் தூக்கியெறியும் நோக்கில் உள்ளன. நிதியியல் பிரபுத்துவத்தினதும் மற்றும் அது அதிகாரத்திற்குக் கொண்டு வரும் அரசியல்வாதிகளினதும் இணங்காமையை முகங்கொடுத்திருக்கின்ற நிலையில், தொழிலாளர்களுக்கு புரட்சிகரப் பாதை மட்டுமே திறந்துள்ளது.