ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

With B-52s, carrier battle group in place, US war against Iran on a hair trigger

B-52 ரக விமானந்தாங்கிக் கப்பல் போர் குழுவின் பிரசன்னத்துடன், விரல் நுனியில் ஈரானுக்கு எதிரான அமெரிக்க போர்

By Bill Van Auken 
11 May 2019

வியாழனன்று, USS ஆபிரகாம் லிங்கன் விமானந்தாங்கிக் கப்பல் தாக்குதல் குழு சூயல் கால்வாய் ஊடாக செங்கடல் மற்றும் மத்திய கிழக்கின் மையப் பகுதிக்குள் நுழைகையில், நான்கு அணுவாயுதமேந்திய B-52 ரக போர் விமானங்களை உள்ளடக்கிய அமெரிக்க குண்டுவீச்சு தாக்குதல் படை ஒன்று கட்டாரில் அமெரிக்க விமானத் தளத்தில் அதே நாளில் தரையிறங்கியது. இந்த இரண்டு இராணுவ பிரசன்னங்களும் அப்பிராந்தியத்தை ஒரு பெரும் பேரழிவுகர புதிய போர் விளிம்பிற்குள் தள்ளும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.    


அல் உதெய்த் விமானத் தளத்திற்கு வந்தடைந்த B-52 ரக போர் விமானங்கள்

வாஷிங்டனின் புதிய சுற்று போர் வெறி அச்சுறுத்தல்களின் மத்தியில் இந்த பிரசன்னங்கள் நிகழ்ந்துள்ளன. அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பொம்பியோ வியாழனன்று விடுத்த அறிக்கையில், ஈரானுக்கு எதிராக “விரைவான மற்றும் தீர்க்கமான” இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு அமெரிக்கா தயாராகவுள்ளது என்று எச்சரித்தார்.

ஈரானின் கடற்கரைப் பகுதிகளுக்கு பேரழிவுகர மற்றும் சக்திவாய்ந்த ஆயுதங்களை பென்டகன் கொண்டு சேர்க்கின்ற நிலையில், “சமீபத்திய வாரங்களில் அதிகரித்தளவில் தொடர்ச்சியான அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈரான் ஈடுபட்டு வருவதுடன் அறிக்கைகளையும் விடுத்து வருகிறது” என்று கூறி அமெரிக்க இராணுவ கட்டமைப்பை பொம்பியோ நியாயப்படுத்தினார். என்றாலும், ஈரானின் அத்தகைய நடவடிக்கைகள் மற்றும் அறிக்கைகள் பற்றி எந்தவொரு உதாரணத்தையும் வழங்குவதற்கு அவர் அக்கறை காட்டவில்லை.

“அமெரிக்க நலன்கள் மற்றும் மக்களுக்கு எதிராக அவர்கள் அல்லது அவர்களது பினாமிகள் ஏதேனும் தாக்குதலைத் தொடுப்பதற்கான சமிக்ஞை தென்பட்டால் ஒரு விரைவான மற்றும் தீர்க்கமான அமெரிக்க பதிலடி கொடுக்கப்படும் என்பதை தெஹ்ரான் பிராந்தியம் புரிந்துகொள்ள வேண்டும்,” என்று பொம்பியோ எச்சரித்தார். மேலும், “இந்தளவிற்கு கட்டுப்பாட்டுடன் நாங்கள் இருப்பதால் இப்பிரச்சினையை தீர்க்க முடியாது என ஈரான் தவறாக எண்ணிவிடக் கூடாது. இன்று வரை, அந்த ஆட்சியின் இயல்பான தெரிவு வன்முறையாகவே இருந்து வருகிறது, எனவே ஆட்சியின் போக்கை மாற்றுவதற்கு போர் விரிவாக்கத்தை கைவிட்டு அதன் மூலம் வளமான எதிர்காலத்திற்கு ஒரு பாதை வகுக்கும்படி தெஹ்ரான் ஆட்சியாளர்களிடம் நாங்கள் கேட்கிறோம்,” என்றும் அவர் கூறினார்.

ஈரானின் “இயல்பான தெரிவு” வன்முறை என்று கூறப்படுவதற்கு எதிராக அமெரிக்க “கட்டுப்பாடு” குறித்த பேச்சு முற்றிலும் நம்பமுடியாத ஒன்றாகும். கடந்த 25 ஆண்டுகளாக பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் முடிவற்ற போர்களில் ஈடுபட்டுள்ள ஒரு அரசாங்கத்தைப் பற்றி பொம்பியோ பேசுகிறார், அத்தகைய போர்கள் ஒரு மில்லியனுக்கு அதிகமான உயிர்களை பலி கொண்டதுடன், ஒட்டுமொத்த சமூகத்தினரையும் அழிவில் ஆழ்த்திவிட்டது.

எப்போதும் போல, அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னை ஆக்கிரமிப்பின் பாதிப்பாளராகவும், அதன் இராணுவ அணிதிரட்டலை ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாகவும் காட்டிக் கொள்வதற்குத் தான் முயற்சிக்கிறது.

மத்திய கிழக்கு சார்ந்த அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு பொறுப்பாளியாக சமீபத்தில் நியமிக்கப்பட்ட அமெரிக்க மத்திய கட்டளையகத் தலைவரான (CENTCOM) கடற்படை ஜெனரல் ஃபிராங்க் மெக்கென்ஸி, ஜனநாயகங்களின் பாதுகாப்பிற்கான அறக்கட்டளையில் (Foundation for Defense of Democracies) வலதுசாரி, சியோனிச சார்பு சிந்தனை குழாமிற்கு மத்தியில் ஆத்திரமூட்டும் வகையில் உரையாற்றுகையில் பொம்பியோவின் கருத்துக்களை அப்படியே எதிரொலித்தார்.

“அமெரிக்க நலன்கள் மீதான எந்தவித தாக்குதலும் வலிமைமிக்க எதிர்ப்பை எதிர்கொள்ளும்,” என்று அறக்கட்டளையில் ஜெனரல் தெரிவித்தார், இது, ஈராக்கிற்கு எதிராக தனது போர் கொள்கையை பாதுகாப்பதற்காக ஜோர்ஜ் டபிள்யூ புஷ் ஒரு மன்றமாக பயன்படுத்தியது. எண்ணெய் வளமிக்க மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு இரு கட்சி ஆதரவை பிரதிபலிக்கும் சிந்தனைக் குழாம் அதன் ஆலோசனைக் குழுவில், ஜனநாயகக் கட்சி தேசியக் குழுவின் முன்னாள் தலைவர் டொன்னா பிரேசிலையும் உள்ளடக்கியுள்ளது.

இதற்கிடையில், ட்ரம்ப் நிர்வாகம், ஈரானுக்கு எதிரான மற்றொரு சுற்று பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. புதனன்று, வெள்ளை மாளிகை, ஈரானின் இரும்பு, எஃகு, அலுமினியம் மற்றும் தாமிர தொழில்களுக்கு எதிராக ஒருதலைப்பட்ச மற்றும் மேலதிக பிராந்திய பொருளாதாரத் தடைகளை திணிப்பதற்கான ஒரு நிர்வாக உத்தரவை பிறப்பித்தது, இந்த உத்தரவு, அப்பொருட்களை விற்பனை செய்யும் எவரும் அத்துடன் அத்தகைய விற்பனைக்கு நிதி வழங்கி ஊக்குவிக்கும் நிதி நிறுவனம் எதுவும் அமெரிக்க சந்தைகளில் இருந்து நீக்கப்படுவது உட்பட அமெரிக்க பழிவாங்கலை எதிர்கொள்ள நேரிடும் என்று அச்சுறுத்துகின்றது.

இந்த புதிய பொருளாதாரத் தடைகள் என்பவை, சீனா, தென் கொரியா, ஜப்பான், இந்தியா மற்றும் துருக்கி போன்ற நாடுகள் அனுமதியின்றி ஈரானிய எண்ணெய் கொள்முதலை தொடர்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த விலக்குகளை மே 1 அன்று வாஷிங்டன் இரத்து செய்ததைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டவையாகும். அதாவது, ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிகளை “சூன்ய” நிலைக்கு குறைப்பதே அமெரிக்க அறிவிப்பின் நோக்கமாகும்.

ஓராண்டுக்கு முன்னர் இதே மாதத்தில், ஈரானுக்கும், மற்றும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜேர்மனி, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட கூட்டு விரிவாக்க செயல் திட்டம் (Joint Comprehensive Plan of Action-JCPOA) என்றழைக்கப்பட்ட உடன்படிக்கையை ட்ரம்ப் நிர்வாகம் ஒருதலைப்பட்சமாக இரத்து செய்தது. மேலும் ஈரானிய பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கவும், அதன் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான நிலைமைகளை உருவாக்கி அதை ஒரு கைப்பாவை ஆட்சியைக் கொண்டு பிரதியீடு செய்யவும் நோக்கம் கொண்டுதான் ஒருதலைப்பட்ச அமெரிக்க பொருளாதாரத் தடைகளின் விரிவாக்கத்தை செயல்படுத்தியது.        

இதற்கிடையில், அமெரிக்க கடல் போக்குவரத்து நிர்வாகம் (US Maritime Administration-MARAD) வியாழனன்று வெளியிட்ட ஒரு பரிந்துரையில், பாரசீக வளைகுடா பகுதியில் போருக்காக வளர்ந்து வரும் கட்டமைப்புகளில் எண்ணெய் கொள்கலன்கள் உட்பட, அமெரிக்க வர்த்தகக் கப்பல்கள் இலக்கு வைக்கப்படலாம் என எச்சரிக்கிறது. ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிகளுக்கு எதிராக நெருக்கடிமிக்க தடையாணைகளை வாஷிங்டன் அதிகரித்து வருவதை குறிப்பிட்டு, இந்த பரிந்துரை பின்வருமாறு எச்சரிக்கிறது:

“ஈரான் அல்லது அதன் பினாமிகள், செங்கடல், பாப்-எல்-மன்தீப் ஜலசந்தி, அல்லது பாரசீக வளைகுடாவில் எண்ணெய் கொள்கலன்கள் உட்பட வணிகக் கப்பல்கள் அல்லது அமெரிக்க இராணுவ கப்பல்களை இலக்கு வைத்து பதிலடி கொடுக்கக் கூடும். அமெரிக்க படைகள் மற்றும் நலன்களுக்கு எதிராக தாக்குதல் நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஈரான் பெரிதும் தயாராக இருப்பதாக அறிக்கைகள் காட்டுகின்றன.”

பொம்பியோவின் எச்சரிக்கைகளைப் போலவே, ஒரு ஒட்டுமொத்த அமெரிக்க போருக்கான சாக்குப்போக்கை உருவாக்குவதற்கு நோக்கம் கொண்டதான இந்த ஆலோசனையும் ஐயத்திற்கு இடமில்லாத ஒரு ஆத்திரமூட்டலாகத் தான் உள்ளது.

ஈரான் மீது குண்டுகளை பொழிவதற்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்த பொம்பியோ மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்புச் செயலர் ஜோன் போல்டன் இருவரும், சிரியா மற்றும் ஈராக்கில் ஷியா போராளிகள் தொடங்கி மற்றும் யேமனில் ஹௌத்தி கிளர்ச்சியாளர்கள், லெபனோனில் ஹெஸ்பொல்லா மற்றும் பாலஸ்தீனிய காசா பகுதியில் ஹமாஸ் போராளிகள் வரையிலான தெஹ்ரானின் “பினாமிகள்” என வாஷிங்டன் கருதுபவர்கள் மூலம், மத்திய கிழக்கில் எங்கேனும் அமெரிக்க துருப்புக்கள் அல்லது “அமெரிக்க நலன்கள்” மீது தொடுக்கப்படும் அனைத்து தாக்குதல்களுக்கும் எதிராக ஈரான் மீது ஒரு பேரழிவுகர தாக்குதலை அமெரிக்கா கட்டவிழ்த்துவிடும் என எச்சரித்துள்ளனர்.

வாஷிங்டனின் பிரதான பிராந்திய நட்பு நாடுகள் குறிப்பாக இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா போன்ற இரண்டும், பென்டகன் அல்லது சிஐஏ, அல்லது அந்த விடயத்திற்காக, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுப்பதை விரும்புகின்றன, அத்துடன் இந்நாடுகளில் எந்தவொன்றும், ஒட்டுமொத்த போரை தொடங்குவதற்கான சாக்குப்போக்காக ஒரு ஆத்திரமூட்டலை அரங்கேற்றக்கூடிய திறன்படைத்தவையாக உள்ளன.

கடந்த வாரம், உயர்மட்ட ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள், ஈரானுக்கு எதிரான போர் கட்டமைப்புக்கள் குறித்து விவாதிக்க வேர்ஜினியா, லாங்க்லியில், சிஐஏ தலைமையகத்தில் வழக்கத்திற்கு மாறான ஒரு உயர் மாநாட்டு கூட்டத்தை நடத்தினர் என்று NBC செய்தி ஊடகம் தெரிவித்தது. அக்கூட்டத்தில், சிஐஏ இயக்குநர் கினா ஹாஸ்பெல், இடைக்கால பாதுகாப்புச் செயலர் பாட்ரிக் ஷானஹான், பணியாளர்களின் கூட்டுத் தலைவர்கள் குழுவின் தலைவர் ஜெனரல் ஜோ டன்ஃபோர்ட், வெளியுறவுச் செயலர் பொம்பியோ, தேசிய புலனாய்வு இயக்குநர் டான் கோட்ஸ் மற்றும் ஏனையோர் கலந்து கொண்டதாக அமெரிக்க அதிகாரிகள் இணையத் தளத்திற்கு தெரிவித்தனர்.

மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு விமானந்தாங்கிக் கப்பல் போர் குழுவையும், குண்டுவீசி தாக்கும் படையையும் அனுப்பி வைத்திருப்பதற்கு போலிக்காரணமாக பயன்படுத்தப்படும் “அமெரிக்க நலன்கள்” என்பதன் மீது தாக்குதல் நடத்த ஈரானியர்கள் திட்டமிட்டு இருப்பதாக குற்றம்சாட்டியது பற்றிய “புலனாய்வு” குறித்து கூட்ட பிரிவில் விவாதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் NBC க்கு தெரிவித்தனர். ஈராக்கில் 2003 அமெரிக்க படையெடுப்பிற்கு முன்கூட்டியே “பேரழிவு ஆயுதங்கள்” பற்றிய பேச்சுக்களை ஊதி பெரிதாக்கியது போல, வரவிருக்கும் ஈரானிய “ஆக்கிரமிப்பு” என்ற கூற்றுக்களை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்களும் புனையப்பட்டவையாக உள்ளன.

லாங்க்லியில் சிஐஏ பதுங்கு குழியில் எதைப் பற்றி இந்த அதிகாரிகள் பேசிக் கொண்டிருந்தனர்? சிஐஏ இன் முன்னாள் செயற்பாட்டு அதிகாரிகளும் இராணுவ அதிகாரிகளும், “இரகசிய நடவடிக்கைகள்” தொடர்பான மிகவும் உணர்ச்சிமிக்க திட்டங்களை விவாதிக்க சிஐஏ தலைமையகத்தில் இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்படுவது சாதாரணமான ஒன்று தான்” என்று NBC க்கு தெரிவித்தனர். அத்தகைய நடவடிக்கைகள், ஈரானுக்கும் அதன் அரசாங்கத்திற்கும் எதிராக எடுக்கப்படவுள்ளதா, அல்லது ஒரு அமெரிக்க தாக்குதலுக்கு தொடர்ந்து காட்டப்படவிருக்கும் போலிக் காரணமாக மத்திய கிழக்கில் எங்காவது ஒரு “தவறான துவக்க” நடவடிக்கை எடுப்பதை பயன்படுத்தலாம் என்பதற்காக எடுக்கப்படவுள்ளதா?

ஈரானுக்கு எதிரான வாஷிங்டனின் அச்சுறுத்தல்களை குணாம்சப்படுத்தும் பொறுப்பற்ற மற்றும் குற்றவியல் தன்மைகள், ஆழமடைந்து வரும் சமூக பதட்டங்கள், பொருளாதார ஸ்திரமின்மை மற்றும் அமெரிக்க முதலாளித்துவத்தை அலைக்கழிக்கும் அரசியல் நெருக்கடி போன்றவற்றின் வெளிப்பாடாக உள்ளன, இதனை ஆளும் நிதிய தன்னலக்குழு இராணுவ வன்முறையிலான வெடிப்பாக வெளிநோக்கி திசைதிருப்ப முனைந்து வருகிறது.

ஈரானுக்கு எதிரான ஒரு போர், ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் “பெரும் வல்லரசு” போட்டியாளர்களாக கருதும் ரஷ்யா மற்றும் சீனா உட்பட, அனைத்து பெரும் வல்லரசுகளையும் உள்ளிழுத்து, 2003 இல் நடத்தப்பட்ட கொடூரமான இரத்தம் தோய்ந்த ஈராக் போரின் தாக்கத்தை மங்கச் செய்யும் வகையிலான ஒரு அணுவாயுத மூன்றாம் உலகப் போருக்கான அச்சுறுத்தலுடன் மனித குலத்தை நேருக்கு நேர் நிறுத்தும் அபாயம் உள்ளது.