ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

German Young Socialist leader unleashes storm of debate about socialism

ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியினது இளைஞர் அமைப்பின் தலைவர் சோசலிசம் குறித்து விவாதப் புயலைக் கிளப்புகிறார்

By Peter Schwarz
11 May 2019

Die Zeit வாரயிதழின் சமீபத்திய பதிப்பின் ஒரு பேட்டியில், சமூக ஜனநாயகக் கட்சியினது (SPD) இளைஞர் அமைப்பான ஜேர்மனியின் Jusos இன் தலைவர் Kevin Kühnert தன்னை ஒரு "சோசலிஸ்ட்" என்று கூறிக் கொண்டதுடன், “முதலாளித்துவத்தை வெற்றிகொள்வதற்கும்" மற்றும் நிறுவனங்களை "கூட்டு உற்பத்திமயமாக்கலுக்கும்" ஆதரவாக பேசினார். இந்த பேட்டி ஊடகங்களில் கருத்துரைகளின் புயலைக் கட்டவிழ்த்துவிட்டது.

ஊடகங்களினதும் மற்றும் Kühnert இன் சொந்த SPD கட்சியினதும் முதல் விடையிறுப்புகள் அதிகரித்தளவில் விரோதமாக இருந்ததுடன், கம்யூனிசத்திற்கு எதிரான எதிர்ப்புடன் சீறின. ஆனால் மிக சமீபத்தில் Kühnert சற்று ஆதரவைப் பெற்றுள்ளார்.

அன்ன வில் (Anne Will) என்பவரால் நடாத்தப்படும் ஞாயிற்றுக்கிழமை இரவு தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சியில், Kühnert அவர் கண்ணோட்டங்களை விரிவாக விளக்க அனுமதிக்கப்பட்டார். மிகப் அதிகளவில் உறுப்பினர் எண்ணிக்கையைக் கொண்டுள்ள வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாநில SPD இன் தலைவர் Sebastian Hartmann பின்வருமாறு கூறினார்: “நமக்கு அடிப்படையிலேயே ஒரு புதிய பொருளாதார அமைப்பு தேவைப்படுகிறது. நெறிமுறையற்ற சந்தை நமது எதிர்ப்பாளராக இருக்கிறது.” ஜேர்மன் பொருளாதார ஆராய்ச்சி மையத்தின் (DIW) தலைவர் Marcel Fratzscher உம் Kühnert க்கு ஆதரவாக பேசியதுடன், “சமூக சந்தை பொருளாதாரம் அது செயல்பட வேண்டிய விதத்தில் செயல்படவில்லை,” என்று அறிவித்தார்.

Kühnert இன் எதிர்ப்பாளர்களும் சரி ஆதரவாளர்களும் சரி எதில் உடன்பட்டிருக்கிறார்கள் என்றால், முதலாளித்துவத்தின் பாத்திரம் மீது அடிப்படை கேள்விகள் எழுப்பும் SPD இளைஞர் அமைப்பின் தலைவரை ஒரு தீவிர சோசலிசவாதியாக சித்தரிப்பதற்கான அவர்களின் முயற்சிகளில் உடன்படுகிறார்கள். அவரது விமர்சகர்களில் சிலர் விஷத்தைக் கக்கினாலும், மற்றவர்கள் தங்களின் பெருந்தன்மையான உடன்பாட்டை வெளிப்படுத்துகிறார்கள்.

இரண்டு தரப்புமே தொழிலாள வர்க்கம் தீவிரமயப்படுதல் மீதான பயத்தால் உந்தப்பட்டுள்ளன. மக்கள்தொகையில் பெரும்பான்மையினர், குறிப்பாக இளம் தலைமுறையினர், சோசலிசத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பதை சமீபத்திய பல ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. 20 மில்லியன் மிக வறிய குடும்பங்களுக்குரிய செல்வவளத்தை மிகப்பெரும் செல்வந்தர்களின் 45 குடும்பங்கள் உடைமையாக்கி கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில், வேலையில் இருப்பவர்களில் 40 சதவீதத்தினர் அபாயகரமான படுமோசமான வேலைகளில் ஈடுபட்டுள்ள ஒரு சமூகத்தில், வெடிக்கும் அளவிலான வாடகையினால் வீட்டுவசதி பெற முடியாதவாறு செய்து வருகின்ற ஒரு சமூகத்தில், முதலாளித்துவம் என்ற வார்த்தை ஒவ்வொருவருக்கும் ஆத்திரமூட்டும் வார்த்தையாக மாறியுள்ளது.

Kühnert இன் எதிர்ப்பாளர்கள் முதலாளித்துவம் மீதான எந்தவொரு விமர்சனத்தையும் பூதாகரமாக்குகின்ற அதேவேளையில், Kühnert உம் அவரைப் பாதுகாப்பவர்களும் சோசலிச கருத்துகள் மீது அதிகரித்து வரும் ஆதரவைப் பாதிப்பில்லாத வழித்தடங்களில் திருப்பிவிட முயன்று வருகிறார்கள். Kühnert இன் முன்மொழிவுகளில் சோசலிசமும் இல்லை புரட்சிகரத்தன்மையும் இல்லை என்பதே யதார்த்தமாக உள்ளது. அது முற்றிலுமாக சோசலிச விருப்பங்களை நசுக்குவதை ஒரே நோக்கமாக கொண்டுள்ளன. அவை SPD எப்போதும் இதே நோக்கங்களுக்காக பயன்படுத்தி வந்துள்ள குழப்பமான இட்டுக்கட்டப்பட்ட கருத்துக்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன.

“எழுபதுகள், எண்பதுகளில் வாக்குறுதியளிக்கப்பட்ட நலன்புரி அரசினை ஒரு மேம்பட்ட வடிவத்தில் மீளமைப்பதே" அவரின் பிரதான அக்கறை என்று Die Zeit இக்கு Kühnert அறிவிக்கிறார். பொருளாதாரத்தின் முக்கிய பிரிவுகள் உட்பட, “வாழ்வின் அனைத்து பிரிவுகளையும் ஜனநாயகமயப்படுத்துவதற்கு" ஆதரவாக அவர் வாதிடுகிறார். பணியாளர்கள் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் ஒரு பங்கைக் கொண்டிருக்கவும், “இலாபங்களின் பங்கீட்டை ஜனநாயகரீதியில் கட்டுப்படுத்தப்படவும்" அவர் முன்மொழிகிறார். “கூட்டு உற்பத்தி முறையின் வடிவம் இல்லாமல்,” “முதலாளித்துவத்தைக் கடந்து செல்வதைச் சிந்திக்கவே முடியாது,” என்றவர் கூறுகிறார்.

“மற்றவர்களின் வீட்டுக்காக" ஒருவர் சுரண்டப்படுவதன் அடிப்படையில் வாழ்வை உருவாக்குவது, ஒரு "நியாயமான வியாபார மாதிரி" இல்லை என்றவர் விவரிக்கிறார். ஆகவே, “ஒவ்வொருவரும் அவரவர் வாழ்வதற்கு தேவைப்படும் அதிகபட்ச வாழ்விடத்தை மட்டுமே கொண்டிருக்க வேண்டும்,” என்கிறார்.

உண்மையில், பணியாளர்களை-அடிப்படையாக கொண்ட சொத்து திரட்சி, கூட்டு-தீர்மான முறை, பணியாளர்களுக்கான பங்கு வெளியீடு அல்லது கூட்டுறவு நடவடிக்கைகள் போன்ற கோஷங்களின் கீழ் சமூக ஜனநாயகக் கட்சி SPD இதுபோன்ற சீர்திருத்தவாத கருத்துருக்களை அவ்வபோது முன்னெடுத்துள்ளது. இதுபோன்ற முன்மொழிவுகளுக்கும் சோசலிசத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சோசலிசம் என்பது முதலாளித்துவ சமூக கட்டமைப்புக்குள் படிப்படியான சீர்திருத்தங்களின் விளைவல்ல, மாறாக முதலாளித்துவத்தின் அடித்தளமாக இருக்கும் உற்பத்தி சாதனங்கள் மீதான தனிச்சொத்துடைமையை ஒழிப்பதாகும்.

வங்கிகள் மற்றும் பெரியளவிலான தொழில்துறையை பொதுவுடைமைக்கு மாற்றி அவற்றை உழைக்கும் மக்கள் கட்டுப்பாட்டில் நிறுத்துவது மட்டுமே ஒரு சோசலிச சமூகத்திற்கான நிலைமைகளை உருவாக்கும். இந்த அடிப்படையில் தான், இலாபத்திற்கான முதலாளித்துவ உந்துதலுக்குப் பதிலாக, சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான உற்பத்தியை ஒழுங்கமைப்பதும், பகுத்தறிவார்ந்த ஜனநாயக திட்டமிடல் மூலமாக சந்தையின் நாசகரமான அராஜகவாதத்தைக் கடந்து வருவதும், சோசலிச சமூகங்களின் அமைதியான சர்வதேச கூட்டுறவுடன் உலக சந்தையைப் பங்கிடுவதற்கான வன்முறை மோதலைப் பிரதியீடு செய்வதும் சாத்தியமாகும். முதலாளித்துவவாதிகளின் தரப்பிலிருந்து வரும் இடைவிடாத எதிர்ப்பின் முன்னால், பெருந்திரளான மக்களை அணித்திரட்டுவதன் அடிப்படையில் தொழிலாளர்களின் ஓர் அரசால் மட்டுமே இதுபோன்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும்.

Kühnert ஆணித்தரமாக இதுபோன்றவொரு முன்னோக்கை நிராகரிக்கிறார். அவரின் Die Zeit நேர்காணலில், சமூக மேலெழுச்சியையோ அல்லது ஒரு புரட்சியையோ அவர் கோரவில்லை என்பதை வலியுறுத்துவதில் அவர் தயக்கம் காட்டவில்லை, அதை அவர் "எரியும் தடையரண்களுடன்" ஒப்பிடுகிறார். இதற்கு பதிலாக அவர் "படிப்படியாக ... நல்லிணக்கத்தின் அடிப்படையில் ஒரு சுதந்திரமான, சமநிலைப்பட்ட சமூகத்தின் முன்மாதிரிக்கு நெருக்கத்திற்குச் செல்ல" விரும்புகிறார். அவர் வெளிப்படையாக முதலாளித்துவ சந்தையைப் பாதுகாக்கிறார்: “சோசலிசம், சந்தை இயங்குமுறைகளுடன் செயல்படும், செயல்பட வேண்டும்.” “திட்டமிட்ட பொருளாதார அம்சங்கள்" “புதிய கண்டுபிடிப்புகள் அனைத்தையும் தடுக்கும் விளைவைக் கொண்டிருக்கும்" என்ற அடித்தளத்தில் அவற்றை அவர் நிராகரிக்கிறார்.

சமூக ஜனநாயகக் கட்சியினது இளைஞர் அமைப்பில் Kühnert இன் தலைமை தற்செயலானது அல்ல. இந்த கட்சி ஜேர்மனியில் சோசலிசத்தை அறிமுகப்படுத்தும் என்ற கருத்தே கூட அபத்தமானது. அது முதலாளித்துவத்தை அழிப்பதிலும் பார்க்க வேண்டுமானால் தற்கொலை செய்து கொள்ளும். 1914 இல் அதன் சொந்த வேலைத்திட்டத்தை காட்டிக்கொடுத்து முதலாம் உலக போரில் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தை SPD ஆதரித்ததற்குப் பின்னர், ஜேர்மனியில் அது முதலாளித்துவ ஆட்சியின் மிக முக்கிய தூண்களில் ஒன்றாக இருந்துள்ளது.

1918 நவம்பர் புரட்சியின் போது, சோசலிச தொழிலாளர்களின் மேலெழுச்சிகளை மூர்க்கமாக நசுக்கவும் மற்றும் அவர்களின் தலைவர்களான கார்ல் லீப்னெக்ட் மற்றும் ரோசா லுக்செம்பேர்க்கைப் படுகொலை செய்யவும், SPD ஜேர்மன் இராணுவத் (Reichswehr) தலைவர்களுடன் இணைந்தது. அதற்கு பதினைந்தாண்டுகளுக்குப் பின்னர், நாஜிக்களை எதிர்த்து போராட SPD அதன் அங்கத்தவர்களை அணித்திரட்ட மறுத்தது. அதற்கு பதிலாக அது ஜேர்மன் அரசின் மீதும் மற்றும் ஹிட்லரைச் சான்சிலராக நியமித்த ஜனாதிபதி வொன் ஹின்டென்பேர்க் மீதும் நம்பிக்கை வைத்தது.

இரண்டாம் உலக போருக்குப் பின்னர் சமூக ஜனநாயகக் கட்சி முற்றிலும் மதிப்பிழந்த ஜேர்மன் முதலாளித்துவ அமைப்புமுறையை அதன் அடியிலிருந்து மீண்டும் நிலைபெறச் செய்ய உதவியதுடன், கடந்த 20 ஆண்டுகளின் போது அது பெரும் குறைவூதிய துறையை உருவாக்குவதிலும், ஓய்வூதியங்களை வெட்டுவதிலும், பொலிஸ், உளவுத்துறை சேவைகள் மற்றும் ஆயுதப்படைகளை ஆயுதமயப்படுத்துவதிலும் அரசாங்கத்தில் முன்னணி பாத்திரம் வகித்துள்ளது, அதேவேளையில் தொழிலாள வர்க்கத்தை விலையாக கொடுத்து வங்கிகளை மீட்பதிலும் முக்கிய பாத்திரம் வகித்துள்ளது.

உண்மையிலேயே சோசலிசத்திற்காக போராட விரும்புவர்கள் அனைவரும் இந்த வரலாற்றுடன் தங்களைப் பரிச்சயப்படுத்திக் கொண்டு, தொழிலாள வர்க்க இயக்கத்தின் வெற்றிகள் மற்றும் தோல்விகள் இரண்டில் இருந்தும் மூலோபாய படிப்பினைகளைப் பெற வேண்டும். பழிக்கஞ்சாத தொழில்முறை நிபுணரான Kühnert ஆல் தன்னை ஒரு சோசலிசவாதியாக காட்டிக் கொள்ள முடிகிறது ஏனென்றால் இன்றைய இளம் தலைமுறையின் அனுபவமின்மை மற்றும் அறியாமையை அவர் சாதகமாக்கிக் கொள்கிறார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் மற்றும் அதன் ஜேர்மன் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியும் (SGP) மட்டுமே, முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்காக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடி வரும் ஒரே கட்சியாகும். நாங்கள் ரஷ்ய அக்டோபர் புரட்சி, ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் இடது எதிர்ப்பின் போராட்டம் மற்றும் அனைத்து போலி-இடது போக்குகளுக்கு எதிராகவும் நான்காம் அகிலத்தின் மார்க்சிச பாதுகாப்பு ஆகியவற்றின் தொடர்ச்சியான பாரம்பரியத்தில் நிற்கிறோம்.

எங்களின் ஐரோப்பிய தேர்தல் பிரச்சாரத்தை ஆதரிக்குமாறும், SGP மற்றும் நான்காம் அகிலத்தில் இணையுமாறும் WSWS இன் அனைத்து வாசகர்களுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.