ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ආන්ඩුව පොලිස් රාජ්‍යයක් දෙසට ගන්නා පියවර සමග ධනපති මාධ්‍ය පෙල ගැසෙයි

அரசாங்கத்தின்  பொலிஸ்-அரசு நோக்கிய முன்னெடுப்புடன் முதலாளித்துவ ஊடகங்கள் அணித்திரளுகின்றன

By Vijith Samarasinghe
9 May 2019

ஏப்ரல் 21 அன்று நடந்த பயங்கரவாத குண்டுத் தாக்குதலின் பின்னர், முதலாளித்துவ பத்திரிகைகளும் ஏனைய ஊடகங்களும் அரசாங்கத்தின் பொலிஸ்-அரசு முன்னெடுப்புடன் ஏகமனதாக அணிதிரண்டுள்ளன. சம்பவத்தின் பின்னர் அரசாங்கம் நடைமுறைப்படுத்திய சமூக ஊடகங்களின் மீதான தடையையும் செய்தி தணிக்கையையும் அனுமதித்த அவை, தற்போது நாட்டில் நடைமுறையில் இருக்கும் பொலிஸ் - இராணுவ சுற்றி வளைப்புகளையும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான ஆத்திரமூட்டல்களையும்  அதிகரிக்குமாறு  வலியுறுத்துகின்றன.

"தேசிய தவ்ஹீத் ஜமாத்" எனும் இஸ்லாமிய அடிப்படை வாத இயக்கத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் பிரதான ஹோட்டல்களை இலக்கு வைத்து உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொண்ட மிலேச்ச குண்டுத் தாக்குதலில் 250 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதோடு 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அதற்கு சில நாட்களுக்கு பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ். அல்லது இஸ்லாமிய இராஜ்யம் எனும் சர்வதேச பயங்கரவாத அமைப்பு உரிமை கோரி அறிக்கை ஒன்றை விடுத்தது.

பாதுகாப்பு துறையின் உயர் அதிகாரிகளும் ஆளும் மற்றும் எதிர்கட்சி பிரதான அரசியல் வாதிகளில் ஒரு பகுதியினரும் இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக சம்பவத்தினத்துக்கு முன்னரே தெரிந்திருந்தும் வேண்டுமென்றே அதை அலட்சியம் செய்துள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த குண்டுத் தாக்குதளை உடனடியாக சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அரசாங்கம் நாடெங்கிலும் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தி ஒடுக்குமுறை "பயங்கரவாத தடைச் சட்டத்தையும்” அமுலுக்கு கொண்டுவந்துள்ளது. இந்த கொடூர சட்டத்தின் கீழ் யாரையும் எதேச்சதிகாரமாக கைதுசெய்து வழக்கின்றியே தடுத்து வைக்க பொலிசுக்கும் இராணுவத்துக்கும் அனுமதியளிக்கப்படுகின்றது.

ஊடக சுதந்திரம் தகவல் அறியும் உரிமை போன்றவற்றுக்கு எதிரான தாக்குதலுடனேயே அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. முகநூல், யூடியூப், வாட்ஸஅப் உட்பட சமூக ஊடகங்கள் அனைத்தும் ஒரு வாரத்துக்கும் மேலாக முழுமையாக தடை செய்யப்பட்டிருந்ததோடு  அரச செய்தி திணைக்களத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை மாத்திரமே பிரசுரிக்குமாறும் ஊடக நிறுவனங்களுக்கு நிர்பந்தத்துடன் கூடிய வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

சமூக ஊடகங்களுக் ஊடாக பிரசுரிக்கப்படும் "அவசியமற்ற" விடயங்களை தடைசெய்வது தொடர்பாக அந்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருப்பதாக கடந்த வாரம் பத்திரிகையாளர் மாநாடொன்றினை நடத்தி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

இந்த அபிவிருத்திகளை எதிர்க்காமல் இருப்பது ஒரு புறம் இருக்க, கேள்வி கூட எழுப்பாமல் முதலாளித்துவ ஊடகங்கள் அரசின் தேவைக்கு ஏற்றவாறு நேரடியாக அணிதிரண்டு நிற்கின்றன. அரச மற்றும் தனியார் ஊடகங்களில் சகல செய்திகளும் மக்களை பீதிக்குள்ளாக்கும் வகையிலேயே சூட்சகமாக தயாரிக்கப்படுகினறன. பத்திரிகைகளில் முன்பக்கம் முழுதிலும் முஸ்லீம் வீடுகளிலும் பள்ளிவாசல்களிலும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் கூரிய வாள்கள், கத்திகளின் பெரிதாக்கப்பட்ட படங்களுடன் முஸ்லீம் மக்கள் தொடர்பாக சந்தேகத்தையும் குரோதத்தையும் உருவாக்கும் தலைப்பு செய்திகளுமே பிரசுரிக்கப்பட்டன.

சில தொலைக் காட்சி அலைவரிசைகள் தற்கொலை குண்டுதாரிகள் அந்த இடங்களுக்கு பிரவேசிக்கும் காட்சிகளுடன் கூடிய சி.சி.டி.வி. காட்சிகளை பல நாட்களாக காலை முதல் மாலை வரை ஒளிபரப்பின. தாக்குதல் நடந்த அன்றே, பாதுகாப்பு துறையினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இடங்களுக்கு, யுத்த கால கட்டத்தில் அவர்களால் நடித்துக்காட்டப்ட்ட "யுத்த களத்தின் செய்திகள்" போன்றவற்றை காட்சிப் படுத்தும் குரூர கற்பனைகளுடேனேய ஊடக குழுக்கள் விரைந்து சென்றன.

அவசரகால சட்டத்தை பயன்படுத்திக்கொண்டு வீடுகளுக்குள் நுழையும் இராணுவ-பொலிஸ் குழுக்களுக்கு பின்னால் ஓடி, தனியார் வீடுகளுக்குளேயே நுழைந்துகொண்டு அவர்கள் சோதணையிடுவதை பதிவு செய்து தற்போது அவர்கள் சோதனைக்குள்ளாகும் வீட்டாரை ஒரேடியாக குற்றவாளிகளாக்கி ஊடகங்கள் ஒளிபரப்பு செய்கின்றன.

நாட்டின் அனைத்து பிரதான பத்திரிகைகளும் தமது ஆசிரியர் தலையங்கத்திலும் பிரதான கட்டுரைகளிலும் பாதுகாப்பு நிறுவனத்துக்கு தமது நிபந்தனையற்ற பக்கச் சார்பினையும் ஆதரவினையும் பிரகடனப்படுத்தியுள்ளன. முதலில் மெல்லிய நடுநிலைவாத போர்வையில் நுழைந்து கொண்டிருந்த பத்திரிகைகளும் இந்த ஜனநாயக விரோத தாக்குதலை மேலும் செயலூக்கத்துடன் முன்னெடுத்து செல்வது எவ்வாறு என்பது தொடர்பாக அரசுக்கு ஆலோசணை வழங்க முன்வந்துள்ளன.

டெய்லி மிரர் பத்திரிகை ஏப்பிரல் 22 அன்று வெளியிட்ட ஆசிரியர் தலையங்கத்தில் யுத்ததின்போது யுத்த குற்றத்திற்காக பாதுகாப்பு பிரிவின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருப்பதையிட்டு, "புலனாய்வு பிரிவினரை வேட்டையாடியமை"யும் அதற்றக்கூடாக பாதுகாப்பு படை "பாரிய பலவீனத்துக்கு உள்ளாக்கியது" எனக் கூறி, அரசாங்கத்தை கடுமையாக குற்றம் சாட்டியது. "இராணுவமயத்தை அகற்றுதல் போருக்கு பிந்திய ஒரு தர்க்க ரீதியான விடயமாயினும், முழுமையாக பாதுகாப்பை கருத்தில்கொள்ளது விட்டமை ஒரு மடத்தனம்" என அது மேலும் குறிப்பிட்டது.

சிங்கள பௌத்த அரசியல்வாதிகளுடன் மிக நெருங்கிய தொடர்புடைய தி ஐலண்ட் பத்திரிகை, "நீதி ஒரு கழுதை" என்ற தலைப்பில் ஏப்பிரல் 26 அன்று பிரசுரித்த மற்றுமொரு ஆசிரியர் தலையங்கத்தில், நீதி மற்றும் அடிப்படை உரிமைகளுக்கும் அடிபணிந்து, அரசாங்கம் தேசிய தவ்ஹீத்  ஜமாத்  போன்ற  அமைப்புகளை முன்கூட்டியே வேட்டையாடத் தவறிவிட்டது, என குற்றம் சாட்டியது.

2016 இல் "பயங்கரவாத" சந்தேக நபர் ஒருவரை இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு பலவந்தமாக கொண்டு செல்வதற்காக (வழக்கத்துக்கு முரணான நடவடிக்கை) அரசாங்கம் சட்ட விதிகளுக்கு மாறாக உதவி வழங்கிய சம்பவமொன்றை சுட்டிக்காட்டி, சர்வதேச சக்திகளின் தேவைக்காக நாட்டின் சட்டத்தை தேவையான விதத்தில் திரித்துக்கொள்ள முடியுமாயின், நாட்டின் தேவைக்காக அவ்வாறு செய்யத் தயங்குவது ஏன்? என அந்த ஆசிரியர் தலையங்கம் கேட்டிருந்தது.

தாக்குதலின் ஒரு வரத்துக்குப் பின், பிரதான ஞாயிறு சிங்கள பத்திரிகைகளின் பெரும்பான்மையானவை, தமது ஆசிரியர் தலையங்கங்களில், அரசாங்கம் முப்பது ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததைப் போல் "முஸ்லீம் அதிதீவிரவாத பயங்கரவாதத்துக்கு" முடிவு கட்ட பாதுகாப்பு படைகளுக்கு சந்தர்ப்பத்தை வழங்கி, அவற்றை நிபந்தனையின்றி பலப்படுத்த வேண்டும் என அறிவித்தன. திவயின பத்திரிகை, "பிரிவினைவாதத்துக்கு எதிராக மூன்று தசாப்தங்களாக பூமியின் மீது மேற்கொண்ட போராட்டம்" தற்போது இஸ்லாம் அதிதீவிரவாத "மனித பலி பூஜைக்கு எதிரான ஒரு போராட்டமாக" மாற்றமடைந்து உள்ளதாகவும், அதற்காக ஒரு சக்திமிக்க தலைமை அவசியம் என்றும் குறிப்பிட்டிருந்தது.

தாக்குதல் நடந்து இரண்டு வாரங்களுக்குப் பின்னர், கடந்த ஞாயிறன்று, பெரும்பான்மையான பத்திரிகைகள் இராணுவ-பொலிஸ் செயற்ப்பாடுகளை தளர்த்தாது முன்னெடுத்துச்செல்ல வேண்டும், என அரசுக்கு ஆலோசனை வழங்க தனது ஆசிரிய தலையங்கத்தை தியாகம் செய்திருந்தன. ஞாயிறு லங்காதீப ஆசிரிய தலையங்கம், "முஸ்லீம் அதிதீவிரவாதிகள் இரண்டாம் கட்ட தாக்குதலுக்கு" தயாராவதாக பீதியை கிளப்பியிருந்தது. "புலிகள் இயக்கம் 30 ஆண்டுகளில் செய்த பொருளாதார நட்டத்தினை முஸ்லீம் தீவிரவாதிகள் ஒரே நாளில் செய்தனர்" என்று முற்றிலும் அடிப்படையற்ற தகவலுடன் முஸ்லீம் விரோத ஆத்திரமூட்டலை பலப்படுத்தும் வகையில் ஒரு ஆசிரிய தலையங்கத்தை தீட்டியிருந்தது.

கடந்த ஞாயிறு திவயின பத்திரிகையும், "அத்தியாயம் முடிந்தது: புத்தகத்தை மூடி வைப்போமா" என்ற ஆசிரிய தலையங்கத்திலும் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்களின் பொருளாதார இழப்பீடுகளை கருத்தில் கொண்டு, அதற்கு எதிராக அதி உச்ச தாக்குதலை கட்டவிழ்த்து விடும்படி ஆளும் வர்க்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் இராணுவ தளர்வு செய்துள்ளது, யுத்தக் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குகிறது அல்லது பாதுகாப்பு பிரிவினருக்கு தமக்கு விரும்பியவாறு செயற்பட இருந்த சுதந்திரத்தை குறைத்துள்ளது போன்ற தர்க்கங்கள், அப்பட்டமான பொய்யாகும். 2015 இல் அதிகாரத்துக்கு வந்ததிலிருந்து, சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் பாதுகாப்பு செலவினங்களை அதிகரித்து வந்துள்ளது மாத்திரமல்லாது, வடக்கு-கிழக்கு பிரதேசத்தை தொடர்ச்சியாக இராணுவ நிர்வாகத்தின் கீழ் பேணி வருகின்றது.

ஒரு சில கீழ்மட்ட அதிகாரிகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள யுத்த குற்ற வழக்குகள், உண்மையான குற்றவாளிகளை பாதுகாப்பதற்காக செய்யப்படும் அப்பட்டமான பொய் நடவடிக்கையாகும். மேலும், என்றும் இல்லாதவாறு தற்போதைய அரசாங்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும் அதன் பிராந்திய உதவியாளர்களுடனும் தமது இராணுவ உறவுகளை அபிவிருத்தி செய்துவருகின்றது. தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் கூட்டு யுத்த பயிற்சிகள் மூலமாகவும் அது இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் யுத்த தயாரிப்புடன் விரைவாக அணிதிரண்டுள்ளது.

அரசாங்கத்தின் தாக்குதலுக்கு மத்தியில், பொதுஜன அதிருப்தி மற்றும் வர்க்கப் போராட்டமும் நாளாந்தம் வளர்ச்சியடைவதையிட்டு ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும் பீதியடைந்துள்ளது. கடந்த வருடத்தில் அடுத்தடுத்து வேலை நிறுத்த அலை கிளம்பியதோடு ஒரு இலட்சத்துக்கும் அதிகமான தோட்டத் தொழிலாளர்கள் குறைந்தபட்ச சம்பளமாக 1,000 ரூபாய் கோரி இன்னும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர், புகையிரத தொழிலாளர்கள், தாதிமார் மற்றும் பல்லாயிரக் கணக்கான ஆசிரியர்களினதும் பரந்த வேலைநிறுத்த போராட்டங்கள் வெடிக்கத் தயாராக இருந்தன.

குண்டு வெடிப்பினால் ஏற்றப்பட்ட அழிவினை பற்றிக்கொண்டு இவ்வாறு பலப்படுத்திக்கொண்ட அரச ஒடுக்குமுறை இயந்திரம், இப்போதே பொதுமக்களுக்கு எதிராக குரூரமாக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. பல்கலைக்கழக விடுதிகளுக்குள்ளும் மாணவர் சங்க காரியாலயங்களுக்கு உள்ளும் "சோதனை நடவடிக்கை"களுக்காக நுழையும் இராணுவமும்-பொலிஸ்சும், மாணவ செயற்பாட்டாளர்களை வேட்டையாட ஆரம்பித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்துடன் கூடிய சுவரொட்டி ஒன்று அலுவலகத்தில் இருந்ததாக குற்றம் சாட்டி, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர்கள் இருவர் கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலைகளுக்கு மத்தியில் முதலாளித்துவ ஊடகங்கள், அரச ஒடுக்குமுறைக்கு உதவி வழங்குவதோடு, முஸ்லீம் மக்களுக்கும் ஏனைய சிறுபான்மை இனங்களுக்கும் எதிரான அட்டூழியங்களுக்கு வழிசமைப்பததற்கும் நடைமுறையில் தலையீடுசெய்கின்றன.

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத தாக்குதலுடன் முதலாளித்துவ ஊடக நிறுவனங்கள் நேரடியாக அணிதிரள்வதானது, தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை தவிடுபொடியாக்குவதற்காக பொலிஸ்-அரசு வழிமுறையை நோக்கி மாறுவதற்கு ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்திற்கும் உள்ள தேவையையும் ஒருமைப்பாட்டையும் தெளிவுபடுத்துகிறது.