ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan writer imprisoned at instigation of Buddhist extremists

இலங்கை எழுத்தாளர் பௌத்த தீவிரவாதிகளின் தூண்டுதலால் சிறை வைக்கப்பட்டுள்ளார்

By our correspondents 
13 April 2019

இலங்கையில் விருது வென்ற எழுத்தாளர் சக்திக சத்குமார, ஏப்ரல் 1 அன்று பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு பொல்கஹவெல நீதிபதியின் தீர்ப்பினைத் தொடர்ந்து, ஏப்பிரல் 23 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். எழுத்தாளரை ஏப்ரல் 9 அன்று நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தப்பட்ட போது, நீதிபதி சிறைவாசத்தை நீடித்தார்.

சக்திக சத்குமார

இரண்டு பிள்ளைகளின் தந்தையான 33 வயதான சத்குமார, அவரின் முகநூலில் பதிவிட்ட ஒர் சிறுகதையில், பௌத்தத்தினை அவமதித்தார் எனக் கூறி பௌத்த தீவிரவாத குழுக்கள் கொடுத்த புகாரினைத் தொடர்ந்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரின் கைதானது ஜனநாயக உரிமைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் மீதான அப்பட்டமான தாக்குதலாகும். நாட்டின் ஆளும் வர்க்கத்தினதும் அதன் கட்சிகளதும் முழுமையான ஆதரவினை அனுபவிக்கும் பௌத்த அமைப்புக்கள், இலங்கை சமுதாயத்தின் ஒவ்வொரு அம்சத்தின் மீதும் தனது மேலாதிக்கத்தைத் திணிக்க முயற்சிக்கின்றன.

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியும் மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பும், ஜனநாயக உரிமைகள் மீது அதிகரித்து வருகின்ற தாக்குதல்களின் ஒரு பாகமாக சத்குமாரவின் கைது மற்றும் அவரின் தொடரும் தடுத்து வைப்பையும் கண்டனம் செய்கின்றன. தொழிலாளர்கள் இளைஞர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனை கொண்ட புத்திஜீவிகளை அவரின் உடனடியான விடுதலையைக் கோருவதற்கு நாங்கள் அழைப்பவிடுக்கின்றோம்.

கவிதை மற்றும் பிற இலக்கியப் படைப்புகளை எழுதியுள்ள சத்குமார, 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சிறந்த சிறுகதைக்கான பரிசினை வென்றதோடு மேலும் இரு சந்தர்ப்பங்களில் வடமேல் மாகாண விருதினையும் வென்றார். கைது செய்யப்பட்ட நேரத்தில் பொல்கஹவெல பிரதேச நிர்வாக அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக அவர் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

கொழும்பிற்கு அருகில் பொல்கஹவெல பகுதியில் உள்ள இரண்டு பௌத்த அமைப்புக்கள், சத்குமாரவின் சமீபத்திய சிறுகதையான அர்த (அரை) பௌத்தத்தினை விமர்சிப்பதாகவும் அவமதிப்பதாகவும் உள்ளது என்று பொலிசில் புகார் செய்தனர். இந்தக் கதையானது பௌத்த மதகுருவினருக்குள் ஓரினச்சேர்கை இருப்பதாக மறைமுகமாக சுட்டிக்காட்டுகின்றது.

பெப்ரவரி 25 அன்று கொழும்பிற்கு அருகில் உள்ள பத்தரமுல்லவில் அமைந்துள்ள பௌத்த தகவல் மையம் சத்குமாரவிற்கு எதிரான நடவடிக்கையினை கோரி இலங்கை பொலிஸ் மா அதிபர் புஜித ஜெயசுந்தரவுக்கு கடிதம் எழுதியது.

தகவல் மையத்தின் நிர்வாக இயக்குனரரும் பிக்குவுமான அகுலுகலே ஸ்ரீ ஜினாநந்த, பிரிட்டிஷ் காலனித்துவத்தின் போது ஸ்தாபிக்கப்பட்ட ஒரு சட்டமான நாட்டின் குற்றவியல் சட்டம் 291b இனையும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய  ஐ.நா. ஆதரவு சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) பிரிவு 3 ஐயும் எழுத்தாளர் மீறியுள்ளார் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஐ.சி.சி.பி.ஆர். பிரிவு 3 கூறுவதாவது: "எந்தவொரு நபரும் யுத்தத்துக்கு அல்லது பாகுபாடு, விரோதம் அல்லது வன்முறைக்கு தூண்டுகோலாக அமைந்த தேசிய, இன அல்லது மத வெறுப்புக்கும் பரிந்துரைக்க கூடாது”. குற்றவியல் சட்டத்தின் 291b இன் கீழ், “எந்தவொரு இனத்தினதும் மத உணர்வுகளை வேண்டுமென்றே வன்மத்துடன் அவமதிப்பது” ஒரு குற்றமாகும்.

ஐ.சி.சி.பி.ஆர். பிரிவு 3 இன் கீழ் கைது செய்யப்பட்டு குற்றம் சுமத்தப்பட்ட எவருக்கும் மேல் நீதிமன்றத்தினால் மட்டுமே பிணை வழங்க முடியும் –அதுவும் விதிவிலக்கான சூழ்நிலைகளில். பௌத்த பேரினவாதிகளும் பொலிசாரும் சரத்குமாரவிற்கு கடுமையான தண்டனையை கொடுப்பதை நோக்கமாகக் கொண்டே இந்த குறிப்பிட்ட சட்டத்தினை தெரிவு செய்துள்ளனர். குற்றவாளி ஆக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

பிற நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டு தசாப்தங்களின் பின்னரே மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக என்ற இந்த ஐ.நா. உடன்படிக்கை, 2007 இல் இலங்கையில் தயக்கத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனாலும், ஐ.சி.சி.பி.ஆர். முழுவதும் இலங்கை சட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை.

ஏப்ரல் 9 அன்று சத்குமாரவின் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பல பௌத்த பிக்குகள் நீதிமன்றத்திற்கு அருகில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். சரத்குமாரவிற்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் எஸ். டீ. ஜயந்த, பொலிசார் அர்த சிறுகதையையும் ஏனைய தொடர்புடைய தகவல்களையும் கூட சமர்ப்பிக்கவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

“பொதுவான ஒழுக்க பிரச்சினைகளில்” நீதிமன்றம் தலையீடு செய்யக் கூடாது அல்லது ஒரு தனி நபரை கைது செய்து நியாயமற்ற தகவல்களின் அடிப்படையில் அவர்களது தனிப்பட்ட சுத்திரத்தை மறுப்பதற்கு பொலிசுக்கு “இரப்பர் முத்திரை ஆகிவிடக் கூடாது, என அவர் வாதிட்டார். “விசாரணைக்கு” மேலும் நேரம் தேவை என்று பொலிசார் கோரிய பின்னர், சத்குமாரவுக்கு ஏப்ரல் 23 வரை விளக்கமறியலில் விதிக்கப்பட்டது.

பௌத்தத்தினை அவமதித்தார் என்ற அடிப்படையில் சத்குமார மீது நடத்தப்பட்டுள்ள ஜனநாய-விரோத தாக்குதலானது ஒரு தனி சம்பவம் அல்ல. கடந்த ஆகஸ்டில், அரசாங்கத்தின் பௌத்த விவகார அமைச்சர், “பௌத்தத்தை அவமதிக்கின்றது” என்ற மேம்போக்கான குற்றச் சாட்டில் பிரசித்திபெற்ற திரைப்பட தயாரிபடபாளர், காட்சிக் கலைஞருமான மாலக தேவப்பிரியவின் கனட பஹரக் (காது நிறைந்த காட்சிகள்) என்ற ஒரு வானொலி நாடக தொடரை தடை செய்ய உத்தரவிட்டார்.

பௌத்த தீவிரவாத குழுக்களில் இருந்தான முறைப்பாட்டினைத் தொடந்தே பிரிவு 291a மற்றும் 291b இனை மீறியதாக தனக்கெதிராக பொலிஸ் வழக்கு பதிந்தது என, கடந்த மாதம் டெயிலி மிரர் பத்திரிகைக்கு தேவப்பிரிய தெரிவித்தார்.

தொழிலாளர்கள் இளைஞர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கின்ற அனைவரும் இந்த அபிவிருத்திகளை தீவிரமாக எடுக்க வேண்டும். இலங்கை ஆளும் உயரடுக்குகள், தொழிலாள வர்க்கத்தை இன, மத கோடுகளில் பிரிப்பதற்கும் அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்கும் சிங்கள பௌத்த மேலாதிகத்தினை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தள்ளது.

இலங்கை அரசியலமைப்பு ஒரு இனவாத ஆவணமாகும். 1948 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வ சுதந்திரத்தின் பின்னர் தமிழர்-விரேதப் பாகுபாடு தொடங்கியதோடு தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களின் பிரஜாவுரிமை இல்லாதொழிக்கப்பட்டது. 1956ல் பெரும்பாண்மைச் சிங்களவர்களின் மொழியான சிங்களம் மட்டும் அரச மொழியாக ஆக்கப்பட்டதுடன், 1972 அரசியலமைப்பில் பௌத்தத்துடன் சிங்களத்துக்கும் “மிக முண்னணி” இடம் வழங்கப்பட்டிருந்தது.

கொழும்பின் தமிழ் சிறுபாண்மைக்கு எதிராக உக்கிரமாக்கப்படும் பாராபட்சங்கள், மூன்று தசாப்த கால யுத்தத்தில் உச்ச கட்டத்தை அடைந்நது. 1983 இல் தொடங்கிய யுத்தம், பிரிவினை வாத தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவத் தோல்வியுடன் 2009 இலேயே முடிவடைந்தது.

ஒரு தசாப்தத்திற்கு முன்னர் உருவான பொதுபல சேன (பௌத்த படைகள்), இராவண பலகாய, சிங்ஹ லே (சிங்கத்தின் இரத்தம்) போன்ற தீவிரவாத பௌத்த குழுக்களுக்கு, முன்னால் ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்தினரால் ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.

தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் ஏனைய மதக் குழுக்களுக்கு எதிரான ஆத்திரமூட்டல்களுக்கு பேர் போன இந்த அமைப்புக்கள் தற்போதய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் இரணில் விக்கிரமசிங்கவின் கீழும் சுதந்திரமாக விடப்பட்டுள்ளனர்.

இலங்கை ஆளும் வர்க்கம் ஒரு பாரியளவான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியினை எதிர்கொள்கின்றது. பெருகி வருகின்ற சர்வதேச கடன்கள், சரிந்து வரும் பொருளாதாரம், சர்வதேச நாணய நிதியத்தினால் பரிந்துரைக்கப்பட்ட சிக்கன நடவடிக்ககைகளுக்கு அத்கரித்து வருகின்ற தொழிலாள வர்க்க எதிர்ப்புக்கும் அரசாங்கம் முகங்கொடுத்துள்ளது.

அபிவிருத்தியடைந்து வருகின்ற சமுகப் பதட்டங்களின் மத்தியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதைப்பொருள் மீதான போர் என்ற பதாதையின் கீழ், ஆயுதப் படைகளையும் பொலிசையும் அணிதிரட்டியுள்ளார். அரசாங்கத்தின் பாரிய விளைவுகளைக் கொண்ட பயங்கரவாத-எதிர்ப்பு மசோதா மற்றும் ஏனைய நடவடிக்கைகளுடன், இந்த நகர்வானது, ஒரு பொலிஸ் அரசுக்கான அடித்தளத்தை உள்ளடக்கியுள்ளது.

சக்திக சத்குமாரவின் கைது மற்றும் சிறைவாசம் மற்றும் கலைச் சுதந்திரத்தின் மீதான ஏனைய தாக்குதல்கள் சர்வாதிகார ஆட்சி வடிவத்தினை நோக்கிய கொழும்பின் நகர்வின் மற்றொரு வெளிப்படுத்தலாகும்.