ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Macron government fabrication of “yellow vest” hospital attack in Paris collapses

பாரிஸில் மருத்துவமனை மீது “மஞ்சள் சீருடை”யாளர்களின் தாக்குதல் எனும் மக்ரோன் அரசாங்க இட்டுக்கட்டல் நிலைகுலைகிறது

By Will Morrow
4 May 2019

“மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டக்காரர்கள் மே தினத்தன்று பாரிஸில் Pitié-Salpêtrière மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தினர் என்பதான மக்ரோன் அரசாங்கத்தின் இட்டுக்கட்டப்பட்ட செய்தி ஒரு சீட்டுக்கட்டைப் போல சரிந்து விழுவதற்கு 24 மணி நேரத்திற்கும் குறைவாகவே பிடித்தது. சமூக சமத்துவமின்மைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை குற்றவியல் கலகங்களாக சித்தரிப்பதற்கும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஒரு பிரெஞ்சு போலிஸ் அரசை மக்ரோன் கட்டியெழுப்புவதை ஊக்குவிப்பதற்குமான இன்னுமொரு பொய்யாக அது அம்பலப்பட்டிருக்கிறது.

சம்பவ நிகழ்வுகள் புதன்கிழமை மாலை 4 மணிக்கு சற்று மேலாக, பாரிஸ்’ 13ம் வட்டாரத்தில் உள்ள Boulevard de l’Hôpital வீதியில் நடந்தன. அந்நாளில் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த 40,000க்கும் அதிகமானோரில் ஒரு பகுதியாக ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களால் அந்த வீதி நிரம்பியிருந்த அந்நேரத்தில் கலகத் தடுப்பு போலிசார் அடர்த்தியான அந்த மக்கட்திரளுக்குள்ளாக கண்ணீர் புகையை வீசி ஒரு பீதி அலையைத் தூண்டினர்.

சம்பவ இடத்தில் இருந்த, வலது-சாரி பத்திரிகையான Le Figaro இன் ஒரு செய்தியாளரான Wladimir Garcin-Berson, அங்கே “கண்ணீர் புகையின் ஒரு அலை இருந்தது, காற்று சுவாசிக்கவியலாததாக ஆனது” என்று ட்வீட் செய்தார். மூச்சுத்திணறச் செய்த அந்த வாயுவுக்குத் தப்பியோடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மருத்துவமனை வளாகத்தின் உலோக நுழைவாயிலை பலவந்தமாகத் தள்ளித் திறந்ததைக் காட்டுகின்ற காணொளிகள் அதன்பின் சமூக ஊடகங்களில் பதிவாகின. பல டஜன் மக்கள் மருத்துவமனை கட்டிடங்களில் ஒன்றில் தஞ்சம் காண முயன்று, ஆனால் அலுவலர்களால் திருப்பியனுப்பப்பட்டு, அதன்பின் கைது செய்யப்பட்டனர்.

ஒரு சில மணி நேரங்களுக்குள்ளாக, இந்த சம்பவம், பிரெஞ்சு உள்துறை அமைச்சரான கிறிஸ்தோஃப் காஸ்டனெரின் வார்த்தைகளில் சொல்வதானால், கலகக்காரர்கள் மருத்துவமனை மீது நடத்திய ஒரு “தாக்குதலாக” உருமாற்றப்பட்டு விட்டிருந்தது. காஸ்டனெர் புதனன்று மாலை நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் -இதில் அவர் black bloc அராஜகவாதிகளின் சிறு குழுக்களை பாரிய ஆர்ப்பாட்டங்களுடன் ஒன்றுகலக்க முனைந்தார்- “மக்கள் ஒரு மருத்துவமனையை தாக்கியிருக்கின்றனர். செவிலியர்கள் அவசர சிகிச்சைப் பிரிவைப் பாதுகாக்கும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாயினர். அவசர சிகிச்சைப் பகுதியை காப்பாற்ற எங்களது போலிஸ் படைகள் உடனடியாகத் தலையிட்டன” என்று அறிவித்தார்.

ஒரு மணி நேரத்திற்குப் பின்னர், காஸ்டனெர் ட்வீட் செய்தார்: “இங்கே Pitié-Salpêtrière இல் ஒரு மருத்துவமனை தாக்கப்பட்டிருக்கிறது. சுகாதாரப் பணியாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாக்க அனுப்பப்பட்ட ஒரு போலிஸ் அதிகாரி காயமடைந்திருக்கிறார்.” திட்ட உறுதியுடனான காஸ்டனெர் கலகத் தடுப்பு போலிசாருடன் கைகுலுக்குகின்ற மற்றும் சுகாதாரப் பணியாளர்களுடன் மருத்துவமனை படுக்கை தொகுதி வழியாக நடந்து செல்கின்ற விரிகோண மற்றும் நெருக்கநிலை புகைப்படங்கள் இந்த ட்வீட் உடன் இடம்பெற்றிருந்தன.


புதன்கிழமை இரவு உள்துறை மந்திரி காஸ்டனெர் பதிவிட்டது (Credit Christophe Castaner)

மக்ரோனின் ஒற்றுமை மற்றும் சுகாதாரத்திற்கான அமைச்சரான அன்னியேஸ் புஸான் (Agnès Buzyn) இந்த நிகழ்வை “சொல்லத்தகாதது” என்றும்  “கண்ணியமற்றது” என்றும் அழைத்தார்.

“அங்கே சிலர் தஞ்சம் பெற விரும்பியிருக்கலாம், மற்றவர்கள் திருட விரும்பியிருக்கலாம்” என்ற அவர், தான் இரண்டாவதாகக் கூறியதற்கு ஆதாரமான எந்த சாட்சியத்தையும் வழங்கவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்களின் இரத்த-வெறியாக சொல்லப்படுவதற்கு வலுச்சேர்க்கும் நோக்கத்துடன், அதேநேரத்தில் அதேமருத்துவமனையில் ஒரு போலிஸ் அதிகாரி காயம்பட்டு சிகிச்சை பெறும் செய்திகள் வெளியாகின, ஒரு ஒருங்கிணைந்த பழிவாங்கல் தாக்குதலின் குறியாக அவர் இருந்திருக்கக் கூடும் என்று மறைமுகமாகக் குறிப்பிடும் விதமாக.

பிரான்சிலும் சர்வதேச அளவிலுமான ஊடகங்கள், உண்மையில் என்ன நடந்தது என்பதை விசாரணை செய்யும் அக்கறை கொஞ்சமும் இன்றி, மக்ரோன் அரசாங்கத்தின் கூற்றுக்களை உடனடியாக ஒப்பித்தன, ஊதிப் பெருக்கிக் கூறின.

The Local இன் பிரெஞ்சு பதிப்பு, “'சொல்லத்தகாதது’: மே 1 ஆர்ப்பாட்டங்களின் போது டஜன் கணக்கிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் பாரிஸ் மருத்துவமனை ஒன்றிற்குள் பலவந்தமாக நுழைந்தது ஏன்?” என்ற தலைப்புடன் ஒரு செய்தியை பிரசுரித்தது. பிரிட்டனில் முர்டோக்குக்கு சொந்தமான சன் பத்திரிகை “உயிர் வாழ்வுக்கு ஆபத்து: ஆவேசம், இளவரசி டயானா இறந்த பாரிஸ் மருத்துவமனைக்குள் மஞ்சள் சீருடை ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிரடியாக நுழைந்தனர்” என்று செய்தி வெளியிட்டது. “டஜன்கணக்கான ‘black blocs இனர்” மருத்துவமனைக்குள் பலவந்தமாக நுழைந்தனர் என்று Le Figaro அறிவித்தது.

அரசின் பிரச்சார ஊதுகுழலாக ஊடகங்களின் பங்களிப்பிற்கு மிகச்சிறந்த உதாரணமாக அரசாங்க செய்தி சானலான France Info இன் செய்தி அமைந்திருந்தது. ”Pitié-Salpêtrière இல் ஊடுருவல்: ‘பேச்சுவார்த்தைக்கு சாத்தியமற்று இருந்தது’ என்று மருத்துவமனை இயக்குநர் கூறுகிறார்” என்ற தலைப்பிட்ட அதன் செய்தி, ஒரு தலைமறைப்பு அணிந்த மனிதர் வாயிலை ஒரு உலோகக் கம்பியால் தாக்குகின்ற ஒரு பதாகைப் புகைப்படத்தைக் கொண்டிருந்தது.

இந்தக் கட்டுரை வெளியான சில மணி நேரங்களுக்குள்ளாக, அந்த படத்தை எடுத்த புகைப்படக் கலைஞரான Geoffrey VdH, அப்புகைப்படம் அதே நாளில் ஆனால் முற்றிலும் வேறானதொரு இடத்தில், பாரிஸ் போலிஸ் தலைமையகம் ஒன்றின் வெளியில் எடுக்கப்பட்டதாகும் என்று ட்வீட் செய்தார்.

அதனையடுத்து அந்தப் படத்தை அச்செய்தியில் இருந்து அகற்றிய France Info, ஒரு மருத்துவமனைக்கு வெளியில், சம்பவம் நடந்த இடத்தில் இருந்து வேறானதொரு கட்டிடத்தில் ஒரு மனிதர் அச்சுறுத்தும்விதமாக சுத்தியலை ஆட்டிக்காட்டுகின்ற ஒரு புகைப்படத்தை பிரதியிட்டது.

Liberation இன் “CheckNews” பிரிவு ஆவணப்படுத்தியிருந்தவாறாக, இந்தப் படமானது, சுத்தியலுடன் இருந்த அந்த மனிதரை டஜன்கணக்கான “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டக்காரர்கள் கோபத்துடன் எதிர்கொண்டு இத்தகைய ஆத்திரமூட்டலை அவர்கள் அனுமதிக்க முடியாது என்று அவரிடம் கூறுகின்றதைக் காட்டுகின்ற பகுதி கீழிருந்து வெட்டப்பட்டிருந்தது. முழுமையான புகைப்படம் அதேநாளில் Le Parisien இல் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

சமூக ஊடகங்களில் சம்பவம் குறித்த ஏராளமான காணொளிகள் வெளியானதைத் தொடர்ந்து, வியாழக்கிழமைக்குள்ளாகவே, மக்ரோன் அரசாங்கத்தின் பொய்கள் அனைத்தும் மிகவும் உருக்குலைந்து விட்டிருந்தன. மருத்துவமனை தொழிலாளர்களில் ஒருவர் எடுத்த ஒரு காணொளியில், ஆர்ப்பாட்டக்காரர்களின் ஒரு குழுவினர் கலகத் தடுப்பு போலிசாரின் துரத்தலில், போலிசால் தாக்கப்படும் மிரட்சி வெளிப்பட, மருத்துவமனை வளாகத்தினுள் ஓடுவதையும், ஒரு கட்டிட நுழைவாயிலுக்குச் செல்லும் படிக்கட்டில் ஏறுவதையும், மேல் நடைபாதையில் நிற்பதையும் காட்டுகிறது.

மருத்துவமனை அலுவலர்கள், அந்த குழுவினரிடம் இது அவசர சிகிச்சைப் பிரிவு என்பதையும் தீவிர சிகிச்சை பெறும் நோயாளிகள் இருக்கின்றனர் என்பதையும் கூறி அவர்களை உள்ளே விட மறுக்கின்றனர். கட்டிடத்திற்குள்ளாக மருத்துவமனை அலுவலர்கள் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளும் குரலும் கேட்கிறது. “பயந்து ஓடி வருகிறார்கள், பயப்படுறார்கள்” என்று ஒருவர் சொல்ல அதற்கு மற்றவர் சொல்கிறார்: “ஆமாம், அவங்க (போலிஸ்) விரட்டி வர்றாங்க”. இன்னொருவர் சொல்கிறார்: “அவர்களுக்கு தெரியாது [இது அவசர சிகிச்சை பிரிவு என்று], வெளியே போறதுக்கு ஏதாவது வழியிருக்கான்னு தான் அவர்கள் பாக்கிறார்கள்”. தாங்கள் ஒருபோதும் மிரட்டப்படவில்லை என்பதை விடாப்படியாக வலியுறுதுக்கின்ற நேர்காணல்களையும் மருத்துவமனை தொழிலாளர்கள் கொடுத்திருக்கின்றனர்.

காணொளியில் மொத்த சம்பவமும் ஒரு சில நிமிடங்களுக்குள்ளாகவே முடிந்து விடுகிறது. போலிஸ் வந்து எந்த மோதல்களும் இன்றி ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்கிறது. அரசாங்கத்தின் கட்டுக்கதை நிலைகுலைந்ததை அடுத்து, கைதான அனைத்து 32 பேருமே நேற்று விடுதலை செய்யப்பட்டனர், இவர்களில் பெரும்பாலானோர் இளம் பல்கலைக்கழக மாணவர்கள் என்று கூறப்படுகிறது. காஸ்டனெர் “தாக்குதல்” என்ற வார்த்தையை தான் பயன்படுத்தியிருக்கக் கூடாது என்று ஒப்புக்கொண்ட பின், பொய்சொன்னதாக அவர்மீது குற்றம்சாட்டுபவர்களை கோபத்துடன் கண்டனம் செய்திருக்கிறார். பல கட்சிகள் அவர் இராஜினாமா செய்யக் கோரியிருக்கின்றன.

இந்த விவகாரம் ஒரு அத்தியாவசியமான அரசியல் யதார்த்தத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மக்ரோன் அரசாங்கம், அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியால் தலைமை கொடுக்கப்பட்டு சர்வதேச அளவில் அதன் சக அரசாங்கங்கள் செய்வதைப் போலவே, இணையத்தையும் சமூக ஊடகங்களையும் தணிக்கை செய்வதற்கும், அரசாங்கங்களும் பெருநிறுவனங்களும் கட்டுப்பாட்டில் கொண்டிராத மாற்று செய்தி ஆதாரங்களை தொழிலாளர்கள் அணுகாமல் தடுப்பதற்கும் ”பொய்ச் செய்தி”யை எதிர்த்துப் போராடுவதான போர்வையை பயன்படுத்துகிறது. ஆனால் உண்மையில், அரசாங்கமும் பெருநிறுவன ஊடகங்களில் இருக்கும் அதன் ஊதுகுழல்களும் தான் பொய்ச் செய்திகளின் உண்மையான பரப்புரையாளர்களாக இருக்கிறார்கள்.

நடக்காத ஒரு மருத்துவமனை தாக்குதல் குறித்த மக்ரோன் அரசாங்கத்தின் பொய்கள் ஒரு திட்டவட்டமான நோக்கத்திற்கு சேவைசெய்கின்றன: அரசாங்கத்திற்கான இடது-சாரி எதிர்ப்பு அத்தனையையும் அவதூறு செய்வது அதனை தார்மீக கண்டிப்புக்குள்ளாக்குவது மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இப்போது கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கும் போலிஸ்-அரசு வன்முறையை நியாயப்படுத்துவது.

பிப்ரவரியில், ஒரு “மஞ்சள் சீருடை”க்கும் வலது-சாரி யூத வருணனையாளரும் சியோனிஸ்டுமான அலன் ஃபிங்கில்குரோட் (Alain Finkielkraut) க்கும் இடையிலான ஒரு கீழ்த்தரமான வாய்ச்சண்டையும் இதேபோல ஒட்டுமொத்த “மஞ்சள் சீருடை” இயக்கத்தையும் யூதவிரோதமானதாக அவதூறு செய்வதற்காக பயன்படுத்தப்பட்டது.

மார்ச் மாதத்தில் சாம்ப்ஸ் எலிசே இல் நடைபெற்ற வன்மையான மோதல்களின் போது கடைகளைப் போலிசார் சூறையாடியது படமெடுக்கப்பட்டது, அத்தனை சூறையாடல் பழிகளையும் “மஞ்சள் சீருடை”யாளர்கள் மீது சுமத்தியும் அந்த வீதியில் ஆர்ப்பாட்டங்களைத் தடைசெய்தும் மக்ரோன் இதற்கு எதிர்வினையாற்றினார். அதன்பின் அரசாங்கம், பயங்கரவாதத் தடுப்பு Operation Sentinel படைவீரர்களை சுடும் அதிகாரத்துடன் ”மஞ்சள் சீருடை” போராட்டக்காரர்களுக்கு எதிராக நிறுத்த உத்தரவிட்டது.

Pitié-Salpêtrière மீதான “தாக்குதல்” குறித்த இந்த கொடுமையான இட்டுக்கட்டல் கதையின் நிலைகுலைவானது, இந்தக் கதையை பரப்பிய பெருநிறுவன ஊடகங்களை மட்டுமல்ல, “மஞ்சள் சீருடை”யாளர்களுக்கு எதிராக தீவிரமடைகின்ற ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவதற்கு மக்ரோன் அரசாங்கம் பயன்படுத்தி வந்திருக்கும் நிரூபணமற்ற குற்றச்சாட்டுகள் அத்தனையையும் நம்பகத்தன்மை இழக்கச் செய்கிறது.