ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

CHAPTER FOUR

The Struggle for Productivity of Labour

அத்தியாயம் நான்கு

உழைப்பின் உற்பத்தித்திறனுக்கான போராட்டம்

பணமும் திட்டமும்

அரசின் நிலைப்பாட்டில் இருந்து சோவியத் ஆட்சியை ஆராய நாம் முயற்சித்தோம். இதேபோன்றதொரு பகுப்பாய்வினை பண சுற்றோட்டத்தின் நிலைப்பாட்டிலும் இருந்து நாம் மேற்கொள்ளலாம். அரசு மற்றும் பணம், இந்த இரண்டு பிரச்சினைகளுமே தங்களுக்குள் ஏராளமான பொது பண்புகளைக் கொண்டிருக்கின்றன, இரண்டுமே இறுதிப் பகுப்பாய்வில் பிரச்சினைகளின் பிரச்சினையான ‘உழைப்பின் உற்பத்தித்திறன்’ என்பதில்தான் வந்து முடிகின்றன. பணத்தின் நிர்ப்பந்தம் போலவே அரசின் நிர்ப்பந்தமும் வர்க்க சமுதாயத்தின் மரபுச்சொத்துக்களாகும். இச்சமுதாயம் மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவுகளை பாதுகாப்பதற்கு, அனைத்து வழிபடல்களின் மிகவும் ஆபத்தான அரசை, அதன் பற்களுக்கு இடையில் மாபெரும் கத்தியுடன் நியமித்த பின்னர், மூடநம்பிக்கையான, மதரீதியான அல்லது மதசார்பற்ற வழிபாட்டு (fetishm) வடிவங்களில் தவிர வேறு வழிகளில் விளக்குதற்கு திராணியற்றதாகும். ஒரு கம்யூனிச சமுதாயத்தில் அரசும் பணமும் மறைந்துபோகும். அவற்றின் படிப்படியான உதிர்வு சோசலிசத்தின் கீழ் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும். அரசு பாதி அரசாக மாறியிருக்கின்ற, பணம் தனது மந்திர சக்தியை இழக்கத் தொடங்கியிருக்கின்ற அந்த வரலாற்றுத் தருணத்தில் மட்டும்தான் சோசலிசத்தின் உண்மையான வெற்றி குறித்து நம்மால் பேச முடியும். அதன் அர்த்தம் என்னவென்றால் சோசலிசமானது, முதலாளித்துவ வழிபாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டுவிட்ட நிலையில், மனிதர்களுக்கு இடையில் இன்னும் பிரகாசமான, சுதந்திரமான மற்றும் பயனுள்ள உறவுகளை உருவாக்கத் தொடங்குகிறது என்பதாகும்.

பணத்தை "ஒழிப்பது", கூலிகளை "ஒழிப்பது", அல்லது அரசு மற்றும் குடும்பத்தைக் "கலைத்துவிடுவது" போன்ற அராஜகவாத குணாம்சத்துடனான கோரிக்கைகள் எல்லாம் எந்திரத்தனமான சிந்தனைக்கான மாதிரிகளாக மட்டுமே ஆர்வம் கொள்ளத்தக்கவை ஆகும். பணத்தை தன்னிச்சையாக "ஒழித்து விட” முடியாது, அதேபோல்தான் அரசையும் பழைய குடும்பத்தையும் தன்னிச்சையாகக் “கலைத்து விட”வும் முடியாது. அவை தமது வரலாற்று பணியை செய்து களைத்து, தமது பாத்திரத்தை ஆற்றி ஓய்ந்து உதிர வேண்டும். சமூக செல்வத்தின் சீரான வளர்ச்சியானது இருகால் உயிரினங்களான நம்மை, ஒவ்வொரு கூடுதல் நிமிட உழைப்பைக் குறித்த நமது கஞ்சத்தனமான மனோபாவத்தையும், அத்துடன் நமக்கு கிடைக்கும் பங்கீட்டு அளவு குறித்த நமது அவமானகரமான அச்சத்தையும் மறக்கச் செய்கின்ற அந்த கட்டத்தில் மட்டுமே பணத்தின் மீதான வழிபாட்டிற்கு மரணஅடியானது கொடுக்கப்பட முடியும். மனிதனுக்கு சந்தோஷத்தை கொண்டு வருவதற்குரிய அல்லது அவனைத் துயரத்தில் தள்ளுவதற்குரிய தனது திறனை இழந்து விட்டபின், பணமானது, வெறுமனே புள்ளிவிவர நிபுணர்களின் வசதிக்கும் திட்டமிடல் நோக்கங்களுக்கும் மட்டுமே உரிய பற்றுச்சீட்டுகளாக பயன்படும் நிலைக்கு மாறி விடும். இன்னும் கூடுதலான எதிர்காலத்தில், அந்த பற்றுச்சீட்டுகளுக்கும் கூட அவசியமின்றிப் போகலாம். அந்தப் பிரச்சினையை முழுமையாக வருங்கால சந்ததிகளிடம் நாம் விட்டு விடலாம், அவர்கள் நிச்சயமாக நம்மை விட புத்திசாலிகளாக இருப்பார்கள்.

உற்பத்திச் சாதனங்கள் மற்றும் கடன்களின் தேசியமயமாக்கம், உள்நாட்டு வர்த்தகத்தின் கூட்டுறவுமயமாக்கம் அல்லது அரசுமயமாக்கம், வெளிநாட்டு வர்த்தகத்தில் ஏகபோகம், விவசாயத்தில் கூட்டுற்பத்தி முறை, பரம்பரைச் சொத்து குறித்த சட்டம் — இவையெல்லாம் தனிநபர் பணக்குவிப்பின் மீது கடுமையான வரம்புகளைக் கொண்டுவந்திருப்பதோடு, தனியார் மூலதனமாக (அநியாய வட்டிக்கு விடப்படுகின்ற, வர்த்தகரீதியான மற்றும் தொழிற்சாலை மூலதனமாக) அது மாறுவதற்கும் முட்டுக்கட்டை போடுகிறது. இருந்தபோதிலும், உள்ளபடியே சுரண்டலுடன் பிணைப்புகொண்ட பணத்தின் இச்செயல்பாடுகள் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சியின் ஆரம்பத்தில் கலைக்கப்படுவதில்லை, மாறாக ஒரு திருத்தியமைக்கப்பட்ட வடிவத்தில் அவை, சர்வவியாபக வர்த்தகரும், கடனளிப்பவரும் மற்றும் முதலாளியுமாக இருக்கின்ற அரசுக்கு மாற்றப்படுகின்றன. அதே சமயத்தில், மதிப்பிடும் ஒரு அளவாக, பரிவர்த்தனை சாதனமாக மற்றும் கட்டணத்தை செலுத்தும் ஊடகமாக, பணத்தின் மிக அடிப்படையான செயல்பாடுகள் பராமரிக்கப்படுவதோடு மட்டுமன்றி, அவை முதலாளித்துவத்தின் கீழ் இருந்ததை விடவும் பரந்தவொரு செயற்பாட்டுக் களத்தையும் பெறுகின்றன.

நிர்வாகரீதியான திட்டமிடல் தனது சக்தியை போதுமான அளவிற்கு வெளிப்படுத்தியிருக்கிறது, அதோடு சேர்த்து அதன் வரம்புகளையும் வெளிப்படுத்தியிருக்கிறது. ஒரு முன்கூட்டிய பொருளாதாரத் திட்டம் என்பது, அதிலும் 170 மில்லியன் மக்கள்தொகையையும் நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடையில் ஒரு ஆழமான முரண்பாட்டையும் கொண்டதொரு பின்தங்கிய நாட்டில், ஒரு மாறாத வேதவாக்காக இருக்க முடியாது; மாறாக நிறைவேற்றத்தின் போது சரிபார்க்கப்படவும் மறுசீரமைக்கப்படவும் அவசியமாக்குகின்ற ஒரு கிட்டத்தட்ட நெருக்கமான அனுமானமாகத் தான் இருக்க முடியும். உண்மையில் நாம் ஒரு நியதியாகவே கொள்ளலாம்: எந்த அளவிற்கு "அச்சுப்பிசகாமல்" ஒரு நிர்வாகப் பணி பூர்த்தி செய்யப்படுகிறதோ, அந்த அளவிற்கு பொருளாதாரத் தலைமை மோசமாக இருக்கிறது என்று அர்த்தம். திட்டங்களை நெறிப்படுத்துவதற்கும் செயல்படுத்துவதற்கும் இரண்டு நெம்புகோல்கள் தேவை: முதலாவது, ஆர்வமுள்ள வெகுஜனங்கள் தாமாகவே தலைமைத்துவத்தில் உண்மையாகப் பங்கேற்பு செய்கின்ற வடிவத்திலான அரசியல் நெம்புகோல், சோவியத் ஜனநாயகம் இல்லாமல் இது சிந்திக்கவும் முடியாதது; இரண்டாவது, முன்கூட்டித் திட்டமிடப்பட்ட கணக்கீடுகளை ஒரு உலகளாவிய சமான மதிப்பின் உதவியோடு உண்மையாக சரிபார்க்கும் வடிவத்திலான நிதித்துறை நெம்புகோல், ஒரு ஸ்திரமான பண அமைப்புமுறை இன்றி இது சிந்திக்கவும் இயலாதது.

சோவியத் பொருளாதாரத்தில் பணத்தின் பாத்திரம் என்பது இன்னும் நிறைவு பெறவில்லை என்பது மட்டுமல்ல, மாறாக நாம் ஏற்கனவே கூறியிருப்பது போல, அதற்கு இன்னும் நீண்டதொரு வளர்ச்சி மீதமிருக்கிறது.

முதலாளித்துவத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையிலான இடைமருவு சகாப்தத்தை மொத்தமாக எடுத்துப் பார்த்தால், வர்த்தகம் குறைக்கப்பட வேண்டும் என்பதல்ல மாறாக அது அசாதாரண மட்டத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என்றே அது அர்த்தமளிக்கக் கூடியதாகும். தொழிற்துறையின் அத்தனை பிரிவுகளும் தங்களை உருமாற்றிக் கொண்டு வளர்ச்சி காண்கின்றன. புதியவை தொடர்ந்து எழுகின்றன, அத்துடன் அவை அனைத்துமே தம்மிடையிலான உறவுகளை அளவுரீதியிலும் பண்புரீதியிலும் வரையறுத்துக் கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றன. முழுநிறைவு விவசாயப் பொருளாதாரத்தையும் மற்றும் அதேசமயத்தில் மூடிய குடும்பக் கட்டமைப்பையும் கலைப்பது என்பது, முன்னர் விவசாயி இன் எல்லைக்குள் அல்லது அவரது தனி வசிப்பிடத்தின் சுவர்களுக்குள் செலவிடப்பட்டு வந்த உழைப்புசக்தி அத்தனையும் சமூக பரிவர்த்தனையின் வட்டத்திற்குள் அதாவது அதன் நேரடி விளைவான பணச்சுழற்சிக்குள், இடம் மாற்றப்படுவதைக் குறிக்கிறது. வரலாற்றில் முதன்முறையாக அனைத்து தயாரிப்புகள் மற்றும் சேவைகளும் ஒன்றுக்காக இன்னொன்று என்ற வகையில் பரிவர்த்தனை செய்யப்படத் தொடங்குகின்றன.

இன்னொரு புறம், திட்டமிடுகின்ற அமைப்பினில் உற்பத்தியாளர் மற்றும் நுகர்பவரின் நேரடியான தனிமனித நலன்களையும் மற்றும் அவர்களது தன்முனைப்பையும் —நம்பகத்தன்மை மற்றும் நெகிழ்வை வாடிக்கையாகக் கொண்ட பணம் என்ற கருவியை தனது சேவையில் கொண்டிருந்தால் மட்டுமே இது பயனுள்ள வகையில் தன்னை வெளிப்படுத்தும்— சேர்க்காமல் ஒரு வெற்றிகரமான சோசலிசக் கட்டுமானம் என்பது நினைத்துப் பார்க்கவும் முடியாதது. தொழிற்துறையின் அத்தனை துளைகளிலும் தடையின்றி ஊடுருவத்தக்க ஒரு துல்லியமான அளவீடு இல்லாமல், அதாவது ஒரு ஸ்திரமான பண அலகு இல்லாமல், உழைப்பின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதும் அதன் உற்பத்திப்பொருட்களது தரத்தை மேம்படுத்துவதும் சற்றும் அடையவியலாதவையாகும். ஆகவேதான் இடைமருவு பொருளாதாரத்திலும், முதலாளித்துவத்தின் கீழ் இருப்பது போன்றே, மொத்த சட்டபூர்வ பணமும் தங்கத்தினை அடிப்படையாகக் கொண்டதாய் இருக்கிறது என்பது தெளிவாகிறது. மற்ற அத்தனை பணமுமே ஒரு பதிலீடு மட்டுமே. நிச்சயமாக, சோவியத் அரசு பண்டங்களின் பெருந்திரட்சியைக் கொண்டிருக்கின்ற அதேநேரத்தில் பணம் அச்சடிக்கும் எந்திரத்தையும் தன் கரங்களில் கொண்டிருக்கிறது. இருப்பினும், அது நிலைமையை மாற்றி விடவில்லை. பண்டங்களது விலைகளின் விடயத்திலான நிர்வாகரீதியான கையாளல்கள் கொஞ்சம் கூட உள்நாட்டு அல்லது வெளிநாட்டு வர்த்தகத்துக்கான ஒரு ஸ்திரமான நாணய அலகினை உருவாக்கவோ அல்லது பிரதியீடு செய்துவிடவோ இல்லை.

ஒரு சுயாதீனமான அடிப்படை, அதாவது, தங்கத்தின் அடிப்படை, இல்லாத நிலையில், சோவியத் ஒன்றியத்தின் பண மதிப்புமுறையானது அத்தியாவசியமான வகையில், ஏனைய பல முதலாளித்துவ நாடுகளில் உள்ளதைப் போலவே, ஒரு மூடிய தன்மையைக் கொண்டிருக்கிறது. உலக சந்தையைப் பொறுத்த வரை ரூபிள் என்பதே இருக்கவில்லை. இந்த பண முறையின் எதிர்மறையான அம்சங்களை ஜேர்மனி அல்லது இத்தாலியை விடவும் சோவியத் ஒன்றியத்தால் கூடுதல் இலகுவாகத் தாக்குப்பிடிக்க முடிகிறதென்றால், வெளிநாட்டு வர்த்தகத்தின் மீதான ஏகபோகத்தைக் கொண்டிருப்பது அதற்கு ஒரு பகுதிக் காரணமாகின்றது. நாட்டின் இயற்கைச் செல்வமே அதற்கு பிரதான காரணம். இதுமட்டுமே தன்னிறைவுப் பொருளாதாரத்தின் பிடியில் மூச்சுத்திணறாமல் இருப்பதை சாத்தியமாக்குகிறது. ஆயினும் வரலாற்றுக் கடமையாக முன்நிற்பது, வெறுமனே மூச்சுத்திணறலைத் தவிர்ப்பது மட்டுமன்று, மாறாக, உலகச் சந்தையின் மிக உயர்ந்த சாதனைகளுக்கு நேருக்கு நேர் நின்று, நேரத்தின் மிகப்பெரும் சேமிப்பை, அதன்விளைவாக கலாச்சாரத்தின் மிக உயர்ந்த மலர்ச்சியை, உத்தரவாதமளிக்கக் கூடிய முழுக்க முழுக்க பகுத்தறிவான, ஒரு சக்திவாய்ந்த பொருளாதாரத்தை உருவாக்குவது ஆகும்.

சுறுசுறுப்பான சோவியத் பொருளாதாரத்திற்கு, தொடர்ச்சியான தொழில்நுட்பப் புரட்சிகள் மற்றும் பெரும் அளவிலான பரிசோதனைகளின் ஊடாக அது கடந்து சென்று கொண்டிருக்கும் சமயத்தில், வேறு எந்த தொடர் சோதிப்புமுறையை விடவும் ஒரு ஸ்திரமான மதிப்பு அளவீட்டின் மூலமான ஒன்று அவசியமாய் இருக்கிறது. சோவியத் பொருளாதாரம் ஒரு தங்க ரூபிளைக் கொண்டிருந்திருக்குமாயின், ஐந்தாண்டுத் திட்டங்களின் முடிவுகள் இப்போதிருப்பதைக் காட்டிலும் ஒப்பிட முடியாத மட்டத்திற்கு மிகவும் சாதகமாக இருந்திருக்கும் என்பதில் தத்துவரீதியாக இம்மியளவும் சந்தேகமிருக்க முடியாது. ஆனால், அத்தகையதொரு நிர்ணயம் இல்லாமல் போனது என்பதே உண்மையாக இருக்கிறது. ஆனால் நீங்கள், இருப்பதைக் கொண்டு சந்தோஷப்படுவோம் என்று இருந்து விடக்கூடாது, ஏனென்றால் அது இன்னும் கூடுதலான பொருளாதாரத் தவறுகளுக்கும் இழப்புகளுக்கும் இட்டுச் செல்லும்.

“சோசலிச” பணவீக்கம்

சோவியத் பண முறையின் வரலாறு வெறுமனே பொருளாதார சிக்கல்களின், வெற்றிகள் மற்றும் தோல்விகளின் வரலாறு மட்டும் அல்ல, மாறாக அதிகாரத்துவ சிந்தனையின் ஊசலாட்டங்களின் ஒரு வரலாறும் தான்.

புதிய பொருளாதாரக் கொள்கைக்கு (NEP) மாறிச்செல்வதுடன் தொடர்புபட்டு 1922-24 ஆம் ஆண்டில் ரூபிள் மீட்சி செய்யப்பட்டமையானது நுகர்வுப் பொருட்களின் விநியோகத்தில் "முதலாளித்துவ உரிமை நிர்ணயங்கள்" மீட்சி செய்யப்பட்டதுடன் நேரடியாய் பிணைந்ததாய் இருந்தது. வசதிபடைத்த விவசாயியை நோக்கிய பாதை தொடர்ந்த வரை, செர்வோனெட்டுகள் (தங்க நாணயங்கள்) அரசாங்கத்தின் கவலைக்குரிய விடயமாக இருந்தது. இதற்கு நேரெதிராய், ஐந்தாண்டு திட்டத்தின் முதல் காலகட்டத்திலோ, பணவீக்கத்தின் அனைத்து மடைகளும் திறந்து விடப்பட்டன. 1925 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 0.7 பில்லியன் ரூபிள்களாக இருந்ததில் இருந்து, 1928 இன் தொடக்கத்தில் மொத்த பணப் புழக்கம் 1.7 பில்லியன் ரூபிள்கள் என்ற கணிசமான தொகையாக உயர்வு கண்டிருந்தது. இது ஏறக்குறைய போர் சமயத்தில் ஜாரிச ரஷ்யாவில் இருந்த காகிதப் பணப்புழக்கத்திற்கு ஒத்த அளவாக இருந்தது — ஆனால் அதன் முந்தைய உலோக அடிப்படை இல்லாமல். அடுத்தடுத்த ஆண்டுகளில் பணவீக்கக் கோடு எவ்வாறு இருந்தது என்பது பின்வரும் தொடர்ச்சியில் காண்பிக்கப்படுகிறது: 2.0 — 2.8 — 4.3 — 5.5 — 8.4! இறுதி எண்ணிக்கையான, 8.4 பில்லியன் ரூபிள்கள் என்பது 1933 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எட்டப்பட்டது. அதன் பின் மறுயோசனை மற்றும் பின்வாங்கல்களின் வருடங்கள் வந்தன: 6.9 — 7.7 — 7.9 பில்லியன் ரூபிள்கள் (1935).

1924 ஆம் ஆண்டில் ரூபிளின் உத்தியோகபூர்வ பரிவர்த்தனை மதிப்பு 13 பிராங்குகளாக இருந்தது, 1935 ஆம் ஆண்டில் அது 3 பிராங்குகளாக, அதாவது 1924 மதிப்பின் நான்கில் ஒரு பங்குக்கும் குறைவாய், அல்லது பிரெஞ்சு பிராங் போரினால் மதிப்புக் குறைக்கப்பட்டிருந்த அளவுக்கு, குறைக்கப்பட்டு விட்டிருந்தது. பழைய மாற்றுவிகிதம் மற்றும் புதிய மாற்றுவிகிதம் இரண்டுமே மிகவும் நிபந்தனைக்குட்பட்ட தன்மையுடையவை; உலக விலைகளில் ரூபிளின் கொள்முதல் திறனானது இப்போது 1.5 பிராங்குகளுக்கு சமானமாகக் கூட இல்லை. எவ்வாறாயினும் இந்த மதிப்பிறக்கமானது, 1934 வரை சோவியத்தின் செலாவணி மதிப்பானது என்ன ஒரு அதிவேகத்தில் கீழிறங்கிக் கொண்டிருந்தது என்பதைக் காட்டுகிறது.

தனது பொருளாதார சாகசத்தனத்தின் உச்சத்தில், ஸ்ராலின், புதிய பொருளாதாரக் கொள்கையை (NEP) —அதாவது சந்தை உறவுகளை— “நரகத்திற்கு அனுப்ப” உறுதியளித்தார். ஒட்டுமொத்த ஊடகங்களும், 1918 ஆம் ஆண்டில் போலவே, சந்தை வணிகம் “நேரடி சோசலிச விநியோகம்" மூலம் இறுதியாக பிரதியீடு செய்யப்படுவது குறித்தும் இதன் வெளித்தோற்ற அடையாளமாக உணவு அட்டைகள் இருப்பது குறித்தும் எழுதின. அதேசமயத்தில், பணவீக்கம் என்பது சோவியத் அமைப்புமுறைக்கு இணக்கமில்லாத ஒரு நிகழ்வு என்பதாக நிராகரிக்கப்பட்டது. “சோவியத் செலாவணியின் ஸ்திரத்தன்மையானது”, 1933 ஜனவரியில் ஸ்ராலின் கூறினார், "அரசின் கைகளில் இருக்கும் அபரிமிதமான நுகர்பொருள் கையிருப்பு ஸ்திரமான விலைகளில் புழக்கத்தில் விடப்பட்டிருப்பதன் மூலம் அடிப்படையாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது". இந்த தெளிவற்ற பொதுப்படைக் கருத்தானது எந்த மேலதிக அபிவிருத்தியையோ அல்லது விளக்கத்தையோ பெறவில்லை என்பது ஒருபுறம் இருக்க —சொல்லப் போனால் பாதி இந்தக் காரணத்தாலேயே— இது பணம் குறித்த, அல்லது, இன்னும் துல்லியமாக சொல்வதென்றால், அது நிராகரித்த அதே பணவீக்கம் குறித்த சோவியத் தத்துவத்தின் அடிப்படை விதியாக ஆக்கப்பட்டு விட்டது. அதன்பின் செர்வோனெட்டுகள் (தங்க நாணயங்கள்) ஒரு உலகளாவிய சமானமதிப்பாக அல்லாமல், மாறாக பாவனைப்பொருட்களது “அபரிமிதமான” எண்ணிக்கையளவின் உலகளாவிய நிழலாகவே நிரூபணமானது. அத்துடன் அது பிற எந்த நிழலையும் போலவே, தன்னை நீட்டிக் கொள்வதற்கும் குறுக்கிக் கொள்வதற்குமான உரிமையைக் கொண்டிருந்தது. ஆறுதல்படுத்தலுக்கான இந்த கருத்தியல் ஏதாவது பொருள் கொண்டிருந்ததாயின் அது இதுதான்: சோவியத்தின் பணம் பணமாக இருப்பதில் இருந்தே நீங்கிவிட்டது; அது இனியும் மதிப்பின் ஒரு அளவீடாக சேவை செய்யவில்லை; "ஸ்திரமான விலைகள்" என்பது அரசு அதிகாரத்தால் பெயர்சூட்டப்படுகின்றன; செர்வோனெட்டுகள் (தங்க நாணயங்கள்) திட்டமிட்ட பொருளாதாரத்தின் ஒரு மரபான பெயரட்டையாக, அதாவது ஒரு உலகளாவிய விநியோக அட்டையாக மட்டுமே இருக்கின்றன. சுருக்கமாய் சொல்வதென்றால் சோசலிசம் "இறுதியாகவும் திரும்பவியலாமலும்" வெற்றி பெற்றிருக்கிறது.

இவ்வாறாக போர் கம்யூனிச காலகட்டத்தின் மிகுந்த கற்பனாவாதக் கண்ணோட்டங்கள் ஒரு புதிய பொருளாதார அடித்தளத்தின் மீது —நிச்சயமாய் முன்னதை விட சற்று உயரமானது தான், ஆனாலும் கூட பண சுழற்சியை கலைத்துவிட இயலுமளவிற்கு இன்னும் போதுமானதாக இருக்கவில்லை— மீண்டும் மீட்சி செய்யப்பட்டன. ஒரு திட்டமிட்ட பொருளாதாரத்தைக் கொண்டிருக்கையில், பணவீக்கம் குறித்து அச்சப்படத் தேவையில்லை என்பதான ஒரு கருத்து ஆளும் வட்டாரங்களை முழுமையாக பீடித்திருந்தது. இது ஏறக்குறைய, கப்பலில் திசைகாட்டும் கருவி இருப்பதால் ஓட்டைக்கசிவு குறித்த அபாயம் எதுவும் இல்லை என்று சொல்வது போலத் தான். நடைமுறையில் பணத்தாள் பணவீக்கம் என்பது தவிர்க்கவியலாமல் கடன் பணவீக்கத்தை உருவாக்குகிறது; உண்மையான அளவுகளை கற்பனை அளவுகளைக் கொண்டு பதிலிடுகிறது; திட்டமிட்ட பொருளாதாரத்தை உள்ளிருந்து அரிக்கிறது.

பணவீக்கம் என்பது உழைக்கும் மக்களைப் பொறுத்தவரை ஒரு பயமுறுத்தும் வரியாகி விடுகிறது என்பதைச் சொல்லவும் அவசியமில்லை. அதன் உதவியோடு சோசலிசம் சாதித்திருப்பதாகக் கூறப்படும் அனுகூலங்களைப் பொறுத்தவரையில், அவை மிகவும் சந்தேகத்திற்குரியவையாக இருக்கின்றன. நிச்சயமாக, பொருளாதாரம் தனது துரித வளர்ச்சியை தொடர்ந்தது உண்மை தான், ஆனால் மிடுக்கான கட்டுமானத்தின் பொருளாதார செயல்திறனானது புள்ளிவிவர அடிப்படையில் மதிப்பிடப்பட்டதே தவிர பொருளாதார அடிப்படையில் மதிப்பிடப்படவில்லை. ரூபிள் மீதான கட்டுப்பாட்டைக் கொண்டிருந்ததன் மூலம் —ரூபிளுக்கு மக்கள்தொகையின் பல்வேறு அடுக்குகளிலும் மற்றும் பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகளிலும் தன்னிச்சையான பல்வேறு மாறுபட்ட கொள்முதல் சக்திகளை வழங்கி— அதிகாரத்துவமானது தனது வெற்றிகளையும் தோல்விகளையும் புறநிலையாக அளவிடுவதற்கு அவசியமான கருவியை தனக்கு இல்லாமல் செய்து கொண்டது. சரியான கணக்கு வைப்புகள் இல்லாமையானது —காகிதத்தில் "வழமையான ரூபிள்" உடனான சேர்க்கையுடன் மூடிமறைக்கப்பட்டு— நடைமுறையில் தனிநபர் விருப்பத்தின் வீழ்ச்சிக்கும், உற்பத்தித்திறன் சரிவுக்கும் மற்றும் பொருட்களின் தரத்தில் இன்னும் கூடுதலான வீழ்ச்சிக்கும் இட்டுச் சென்றது.

முதலாவது ஐந்தாண்டுத் திட்ட சமயத்தில், இந்தக் கேடானது அச்சுறுத்தும் விகிதாசாரங்களை எடுத்தது. 1931 ஆம் ஆண்டு ஜூலையில் ஸ்ராலின் தனது பிரபலமான "ஆறு நிபந்தனைகளை" அறிவித்தார். தொழில்துறை உற்பத்திச் செலவைக் குறைப்பதுதான் அவற்றின் பிரதான நோக்கமாய் இருந்தது. இந்த நிபந்தனைகளில் (தனிநபர் உற்பத்தித்திறனுக்கேற்ற ஊதியம், உற்பத்தி-செலவின கணக்கு போன்றவை) புதிது ஏதுமில்லை. "முதலாளித்துவ உரிமை நிர்ணயங்கள்” புதிய பொருளாதாரக் கொள்கை (NEP) விடியலின்போது முன்னெடுக்கப்பட்டிருந்தன; 1923 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கட்சியின் பன்னிரண்டாவது பேரவை மாநாட்டில் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தன. இவற்றைக் குறித்து ஸ்ராலின், 1931 ஆம் ஆண்டில் தான், மூலதன முதலீடுகளின் செயல்திறன் வீழ்ச்சியின் பாதிப்பின் கீழ்தான், உணரத் தள்ளப்பட்டிருந்தார். அடுத்து வந்த இரண்டு ஆண்டுகளில், இந்த "நிபந்தனைகளின்" தீர்வுத்திறனைப் பேசாத கட்டுரையே சோவியத் ஊடகங்களில் வரவில்லை. இதனிடையே, பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்க, அதனால் விளைகின்ற நோய்கள் இயல்பாக குணப்படுத்தவியலாததாக இருந்தன. பாழாக்குவோருக்கும் சதிசெய்வோருக்கும் எதிரான கடுமையான அடக்குமுறை நடவடிக்கைகள் எல்லாம் விடயங்களை முன்னேற்றுவதில் மிகக் குறைந்த அளவிலேயே உதவின.

"தனிநபர் அடையாளமற்ற நிலை"க்கும் மற்றும் “சமப்படுத்தலுக்கும்” அதாவது அநாமதேய "சராசரி” உழைப்பு மற்றும் அதேபோல் அனைவருக்கும் "சராசரி" ஊதியத்திற்கும் எதிரான ஒரு போராட்டத்தை திறந்து கொண்டே, அதிகாரத்துவமானது, அதே சமயத்தில், உழைப்புசக்தி உள்ளிட்ட அத்தனை பண்டங்களுக்கும் பணத்தை கொண்டு மதிப்பிடுவதை அர்த்தமளிக்கும் புதிய பொருளாதாரக் கொள்கையை (NEP), ”நரகத்திற்கு” அனுப்பிக் கொண்டிருந்தது என்ற உண்மை இப்போது கிட்டத்தட்ட நம்பவியலாததாக தெரிகிறது. ஒரு பக்கத்தில் "முதலாளித்துவ நிர்ணயங்களை" மீட்சி செய்து கொண்டு, மறுபக்கத்தில் அவற்றின் கீழான ஒரேயொரு பிரயோசனமான பயனையும் அவர்கள் அழித்துக் கொண்டிருந்தார்கள்.

வர்த்தகத்தை "மூடிய விநியோக நிலையங்களை" கொண்டு பதிலீடு செய்த நிலையிலும், அத்துடன் விலைகளில் முழுமையான குழப்பம் நிலவியதுமான நிலையிலும், தனிமனித உழைப்புக்கும் தனிமனிதக் கூலிகளுக்கும் இடையிலான அனைத்துத் தொடர்புகளும் அவசியமாய் காணாமல் போயின, அதனுடன் சேர்ந்து தொழிலாளியின் தனிமனித ஆர்வமும் காணாமல் போனது.

பொருளாதார கணக்குவைப்புகள், தரம், உற்பத்திச் செலவு மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவை தொடர்பான கடுமையான உத்தரவுகள் காற்றில் பறந்து கொண்டிருந்தன. ஆனால், தீயநோக்கத்துடன் ஸ்ராலினின் ஆறு பரிந்துரைகளை பூர்த்தி செய்யாததுதான் அனைத்து பொருளாதார நெருக்கடிகளுக்கும் காரணம் என்று அறிவிப்பதில் இருந்து தலைவர்களை இது தடுத்துவிடவில்லை. பணவீக்கம் குறித்த மிகுந்த எச்சரிக்கையூட்டும் குறிப்புகளையும் கூட அவர்கள் ஒரு அரசகுற்றத்தைப் போல பார்த்தனர்.

இதேபோன்றதொரு கவனத்துடன், பல சமயங்களில் அதிகாரிகள், பள்ளி சுகாதாரம் சம்பந்தப்பட்ட விதிகளை ஆசிரியர்கள் மீறுவதாக குற்றம் சாட்டிய அதே சமயத்தில், சவர்க்காரம் (சோப்பு) இல்லை என்பதை ஆசிரியர்கள் அதற்கு பதிலாகக் குறிப்பிடுவதற்கு தடைவிதித்தும் வைத்திருந்தார்கள்.

செர்வோனெட்டுகளின் தலைவிதி குறித்த பிரச்சினை கம்யூனிஸ்ட் கட்சியின் பிரிவுகளுக்கு இடையிலான மோதலில் ஒரு பிரதான இடத்தைப் பிடித்திருந்தது. எதிர்ப்பாளர்களின் மேடையானது (The platform of the Opposition-1927) "பண அலகின் நிபந்தனையற்ற ஸ்திரத்தன்மைக்கு ஒரு உத்தரவாதத்தை" கோரியது. இந்த கோரிக்கை தொடர்ந்து வந்த ஆண்டுகளின் முக்கிய கருப்பொருளாகவும் இருந்தது. “மூலதன முதலீடுகளை துணிச்சலுடன் குறைப்பதின்” விலைகொடுத்தேனும் "பணவீக்க நிகழ்வுப்போக்கை இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்துங்கள்”, “ஒரு ஸ்திரமான நாணாயமதிப்பு அலகை மீட்சி செய்யுங்கள்”, என்று 1932 ஆம் ஆண்டில் எதிர்ப்பாளர்களின் வெளிநாட்டு பத்திரிகை அங்கம் எழுதியது. "ஆமை வேகத்தை" ஆதரிப்பவர்களும் முழுதுரித தொழிற்துறைமயமாக்கத்தை ஆதரிப்பவர்களும் தற்காலிகமாக இடம் மாறி நின்றது போல் தோற்றமளித்தது. சந்தையை "நரகத்திற்கு" அனுப்பிக் கொண்டிருப்பதாக தற்பெருமை பேசப்பட்டதற்கு பதிலளிக்கும் விதமாக, "பணவீக்கம் என்பது ஒரு திட்டமிட்ட பொருளாதாரத்தின் தொற்றும் ஒரு நோய்" என்று அறிவிப்புப் பலகை தொங்க விட அரசின் திட்டக் குழுவுக்கு எதிர்ப்பாளர்கள் தரப்பு பரிந்துரை செய்தது.

• • •

விவசாயத் துறையிலும், பணவீக்கம் குறிப்பிடத்தக்க பின்விளைவுகளைக் கொண்டுவந்தது.

விவசாயக் கொள்கையானது இன்னும் வசதியான விவசாயியையே நோக்கியதாக இருந்த ஒரு காலகட்டத்தில், புதிய பொருளாதாரக் கொள்கையின் (NEP) அடிப்படையில் திட்டமிடப்பட்ட, விவசாயத்துறையின் சோசலிச உருமாற்றமானது, பல தசாப்த காலத்தின் பாதையில் கூட்டுற்பத்தி அமைப்புகளின் மூலமாக சாதிக்கப்பட்டு விடும் என்றே அனுமானிக்கப்பட்டது. கொள்முதல் செய்வது, விற்பனை செய்வது மற்றும் கடன் செயல்பாடுகள் என அடுத்தடுத்த செயல்பாடுகளை ஏற்றுக் கொள்ளும் கூட்டுறவு அமைப்புகள், நீண்ட காலப் போக்கில், உற்பத்தியையும் கட்டாயம் சமூகமயமாக்கி விடும், இவை மொத்தமும் சேர்ந்து "லெனினின் கூட்டுறவுத் திட்டம்" என அழைக்கப்பட்டது. ஆனால் நடைமுறையிலான அபிவிருத்தியோ, நாம் கண்டது போல், வன்முறை கொண்டு குலாக்முறையை அகற்றல் மற்றும் முற்றுமுழுதான கூட்டுப்பண்ணைமயமாக்கல் ஊடக ஒரு முற்றிலும் மாறுபட்டதும் ஏறக்குறைய நேரெதிரானதுமான ஒரு பாதையைப் பின்தொடர்ந்தது. தேவையான சடரீதியான மற்றும் கலாச்சார நிலைமைகளைத் தயார்படுத்துவதுடன் இயைந்து, தனித்தனியான பொருளாதார செயல்பாடுகளை படிப்படியாக சமூகமயமாக்குவது பற்றி அதற்குப்பின் எதுவும் பேசப்படவில்லை. விவசாயத்துறையில் கம்யூனிச ஆளுகையை உடனடியாக எட்டி விடலாம் என்பதைப் போன்றதொரு விதத்தில் கூட்டுற்பத்திமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் உடனடிப் பின்விளைவாய் கால்நடைகள் பாதிக்கும் அதிகமாக குறைந்து போனது மட்டுமல்ல, அதை விடவும் முக்கியமாக, கூட்டுற்பத்திப் பண்ணைகளின் உறுப்பினர்களிடையே சமூகமயமான சொத்து மற்றும் தமது சொந்த உழைப்பின் விளைபொருட்கள் குறித்த ஒரு முழுமையான அலட்சியம் உண்டாகியது.

அரசாங்கம் ஒரு ஒழுங்குமுறையற்ற பின்வாங்கலை மேற்கொள்ளத் தள்ளப்பட்டது.

அவர்கள் திரும்பவும் விவசாயிகளுக்கு கோழிகள், பன்றிகள், ஆடுகள் மற்றும் பசுக்களை தனிமனித உடைமைகளாக விநியோகித்தனர். பண்ணைகளைச் சுற்றியிருந்த பகுதிகளில் அவர்களுக்கு தனிச்சொத்துக்காய் நிலங்களை அளித்தனர். கூட்டுப்பண்ணை உற்பத்தி படச்சுருள் பின்நோக்கி ஓடத் தொடங்கியது.

இவ்வாறாக, சிறுசிறு தனிநபர் விவசாய உடைமைகளை மீட்சி செய்ததன் மூலம், விவசாயியின் தனிமனிதப் போக்குகளை விலை கொடுத்து வாங்கமுயன்று, அரசு, ஒரு சமரசத்தை மேற்கொண்டது. கூட்டுற்பத்திப் பண்ணைகள் தொடர்ந்து இருந்தன என்பதால், மேலோட்டமான பார்வையில், இந்த பின்வாங்கல் இரண்டாம்நிலை முக்கியத்துவத்தையே கொண்டிருப்பதாக தெரியலாம். உண்மையில், அதன் முக்கியத்துவம் மிகைமதிப்பீடெனக் கூறமுடியாததாய் இருந்தது. கூட்டுற்பத்திப் பண்ணை கனவான்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தால், ஒரு சராசரி விவசாயியின் அன்றாட தேவைகள் கூட்டுற்பத்திப் பண்ணையில் அவரது பங்களிப்பு மூலமானதைக் காட்டிலும் அதிகமாய் “அவரது சொந்த நிலத்தில்” அவரது உழைப்பின் மூலமாகவே பெருமளவுக்கு பூர்த்தி செய்யப்படுவதாக இருக்கின்றன. தனிநபர் நிறுவனரீதியான ஒரு விவசாயியின் வருமானம், குறிப்பாக நவீன தொழில்நுட்ப விவசாயம், பழ விளைச்சல் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவற்றில் அவர் ஈடுபடும்போது, அதே விவசாயி கூட்டுற்பத்தி வழியாக சம்பாதிப்பதைக் காட்டிலும் பெரும்பாலும் மும்மடங்கு அதிகமானதாக இருக்கிறது. சோவியத் ஊடகங்களிலேயே சாட்சியம் பெற்றதான இந்த உண்மையானது, ஒரு பக்கத்தில் பத்து மில்லியன் கணக்கான மனித சக்தி, குறிப்பாக பெண்களுடையது, சிறுசிறு நிறுவனங்களிடம் முழுக்கவும் காட்டுமிராண்டித்தனமாக வீணடிக்கப்படுவதையும், மறுபக்கத்திலோ கூட்டுற்பத்திப் பண்ணைகளில் இன்னமும் உழைப்புசக்தியின் மிகவும் குறைந்த உற்பத்தித்திறன் நிலையே தொடர்ந்து கொண்டிருப்பதையும் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

பெரிய-மட்டத்திலான கூட்டுற்பத்தி விவசாயத்தின் தரத்தை உயர்த்த வேண்டுமென்றால், விவசாயியிடம் அவர் புரிந்து கொள்ளும் மொழியில் பேச வேண்டியது —அதாவது, சந்தைகளை மீண்டும் நிலைநிறுத்துவதும், அத்துடன் பரிவுடனான வரிகளில் இருந்து வர்த்தகத்திற்குத் திரும்புவதும்— சுருக்கமாகச் சொல்வதென்றால், சாத்தானிடம் முன்னதாய் அவசரப்பட்டு அனுப்பி விட்டிருந்த புதிய பொருளாதாரக் கொள்கையை (NEP) திரும்பவும் கேட்பது மீண்டும் அவசியமாகியது. இவ்வாறாய் ஓரளவுக்கு ஸ்திரமான பண கணக்குவைப்பு முறைக்கு மாறுவது என்பது விவசாயத்தின் கூடுதலான அபிவிருத்திக்கு அத்தியாவசிய நிபந்தனையாக ஆகியது.

ரூபிளின் மறுசீரமைப்பு

புத்தி எனும் ஆந்தை சூரியன் அஸ்தமித்த பிறகே பறக்கிறது என்பது நன்கறிந்ததே.

இவ்வாறாக பணம் மற்றும் விலைகளின் ஒரு "சோசலிச" முறை குறித்த தத்துவமானது பணவீக்கம் தொடர்பான பிரமைகள் மங்கிய பின்னர் தான் அபிவிருத்தி செய்யப்பட்டது.

ஸ்ராலினின் முன்கூறப்பட்ட தெளிவற்ற வார்த்தைகளை அபிவிருத்தி செய்வதில் இறங்கிய கடமைதவறாத பேராசிரியர்கள், சந்தை விலைக்கு நேரெதிரான விதத்தில், சோவியத் விலையானது, பிரத்யேகமான ஒரு திட்டமிடல் அல்லது உத்தரவிடல் குணாம்சத்தைப் பெற்றுள்ளதைப் போன்று ஒரு முழுத் தத்துவத்தையே உருவாக்கி விட்டார்கள்.

அதாவது, இது பொருளாதார ரீதியானதாய் அல்லாமல், நிர்வாக ரீதியான ஒரு செயல்பாடு, ஆகவே இது சோசலிசத்தின் நலன்களின் பேரில் மக்களின் வருவாயினை மறுவிநியோகம் செய்வதில் மேம்பட்ட சேவையாற்றுகிறது. இந்தப் பேராசிரியர்கள் விளக்க மறந்தது என்னவென்றால், உண்மையான செலவுகளை அறியாமல் எப்படி நீங்கள் ஒரு விலைக்கு "வழிநடத்த" முடியும், அத்துடன் அனைத்து விலைகளும் அதிகாரத்துவத்தின் விருப்பத்தை வெளிப்படுத்துமேயன்றி செலவிடப்பட்ட சமூகரீதியாய் அவசியமான உழைப்பின் அளவை வெளிப்படுத்தாது என்ற நிலையில் எவ்வாறு உண்மையான செலவுகளை நீங்கள் மதிப்பிட முடியும்? யதார்த்தத்தில், மக்களின் வருவாயை மறுவிநியோகம் செய்வதற்கு, வரிகள், அரசின் நிதிநிலை ஒதுக்கீடு மற்றும் கடன் அமைப்பு ஆகிய வலிமையான இயக்குகோல்களை அரசாங்கம் தன் கைகளில் கொண்டுள்ளது. 1936 ஆம் ஆண்டுக்கான செலவினங்களுக்கான நிதிநிலை ஒதுக்கீட்டின் படி, பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு நிதியாதாரம் அளிக்க 37.6 பில்லியன் ரூபிள்களுக்கும் அதிகமாய் நேரடியாகவும், மற்றும் பல பில்லியன் ரூபிள்கள் மறைமுகமாகவும், ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தேசிய வருவாயின் ஒரு திட்டமிட்ட விநியோகத்திற்கு நிதிநிலை ஒதுக்கீடும் கடன் பொறிமுறையுமே முழுக்கப் போதுமானவையாக இருக்கின்றன.

அத்துடன் விலைகளைப் பொறுத்தவரை, அவை அன்றைய நாளின் உண்மையான பொருளாதார உறவுகளை எத்தனை நேர்மையாக வெளிப்படுத்தத் தொடங்குகிறதோ, அத்தனையளவுக்கு அது சோசலிசத்தின் நலனுக்காய் சிறப்பான சேவையாற்றுவதாக இருக்கும்.

இந்த விடயத்தில் அனுபவம் தனது தீர்க்கமான முடிவை சொல்லி விட்டிருக்கிறது. “வழிகாட்டு” விலைகள் என்பது கல்வியறிஞர்களின் புத்தகங்களைக் காட்டிலும் உண்மை வாழ்க்கையில் குறைவாகவே தாக்கம்மிக்கதாக இருக்கிறது. ஒரே பண்டத்திற்கு வெவ்வேறுவகை விலைகள் நிர்ணயிக்கப்பட்டன. இந்த வகைகளுக்கு இடையிலான அகன்றபெரும் இடைவெளிகளில், அனைத்து வகை ஊகம், பாரபட்சம், ஒட்டுண்ணித்தனம் மற்றும் பிற மலிவு நடத்தைகளும், விதிவிலக்காக என்பதை விட விதியாக என்று சொல்லுமளவிற்கு, இடம் பிடித்துக் கொண்டன. அதேநேரத்தில், ஸ்திரமான விலைகளின் சீரான நிழலாக இருக்க வேண்டிய செர்வோனெட்டுகள், உண்மையில் தமது சொந்த நிழலுக்கு அதிகமான வேறேதுமில்லை என்றாகின.

ஒரு கூர்மையான பாதை மாற்றத்தை மேற்கொள்வது திரும்பவும் அவசியமானது, இந்த முறை பொருளாதார வெற்றிகளால் வளர்ச்சியுற்ற சிக்கல்களின் விளைவாக. 1935 ஆம் ஆண்டு ரொட்டி அட்டைகளை ஒழித்ததுடன் இது தொடங்கியது. அக்டோபர் மாதத்திற்குள்ளாக பிற உணவுப் பொருட்களுக்கான அட்டைகளும் ஒழிக்கப்பட்டன. 1936 ஆம் ஆண்டு ஜனவரிக்குள்ளாக பொதுநுகர்வு தொழில்துறை உற்பத்திப் பொருட்களுக்கான அட்டைகளும் ஒழிக்கப்பட்டன. நகரமும் கிராமமும் அரசுடன் கொண்டிருந்த பொருளாதார உறவுகளும் அத்துடன் அவை ஒன்றுடனொன்று கொண்டிருந்த பொருளாதார உறவுகளும், பணத்தின் மொழிக்கு மாற்றப்பட்டு விட்டன. நுகர்வுப் பொருட்களின் அளவுகள் மற்றும் தரத்தின் மூலமாக பொருளாதாரத் திட்டங்கள் மீது மக்கள் செலுத்தக்கூடிய செல்வாக்கின் ஒரு உபகரணமாக ரூபிள் இருக்கிறது. வேறு எந்த வகையிலும் சோவியத் பொருளாதாரத்தை விளக்க சாத்தியமில்லை.

அரசின் திட்டக் குழுவின் தலைவர் 1935 டிசம்பரில் பின்வருமாறு அறிவித்தார்:

"வங்கிகளுக்கும் தொழில்துறைக்கும் இடையிலான பரஸ்பர உறவுகளின் அடிப்படையிலான நடப்பு அமைப்புமுறை திருத்தியமைக்கப்பட வேண்டும், வங்கிகள் ரூபிள் மூலமான கட்டுப்பாட்டை தீவிரத்துடன் நடைமுறைப்படுத்தியாக வேண்டும்”.

இவ்வாறாக நிர்வாகரீதியான திட்டம் குறித்த மூடநம்பிக்கையும் நிர்வாகரீதியான விலைகள் குறித்த பிரமைகளும் தகர்த்தெறியப்பட்டன. நிதித்துறையில் சோசலிசத்தை நெருங்குவது என்பது, ரூபிள் ஒரு விநியோக அட்டையை போலாகின்றது என்பதை குறிப்பதாகும் என்று கொண்டால், 1935 இன் சீர்திருத்தங்கள் சோசலிசத்தில் இருந்தான ஒரு விலகலாகவே கருதப்பட வேண்டும். ஆயினும் யதார்த்தத்தில் அப்படியொரு மதிப்பீடு ஒரு கொச்சையான பிழையாகவே அமையும். விநியோக அட்டை ரூபிளால் பிரதியீடு செய்யப்பட்டமையானது கற்பனைகளின் ஒரு நிராகரிப்பாகவும், முதலாளித்துவ விநியோக வழிமுறைகளுக்கு திரும்புவதன் மூலமாக சோசலிசத்திற்கான முன்நிபந்தனைகளை உருவாக்குவதன் அவசியத்தை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட செயலாகவும் மட்டுமே இருக்கிறது.

1936 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடந்த மத்திய நிறைவேற்றுக் குழு கூட்டத்தின் அமர்வு ஒன்றில், நிதித்துறை மக்கள் ஆணையர் அறிவித்தார்: "சோவியத் ரூபிள் உலகின் வேறு எந்த நாணய மதிப்பும் இல்லாத அளவுக்கு ஸ்திரமாய் இருக்கிறது". இந்த அறிவிப்பை வெறும் தற்பெருமை மட்டுமே எனக் கருதுவது தவறாகி விடும். சோவியத் ஒன்றியத்தின் அரசு நிதிநிலையறிக்கை வருடாந்திர செலவினங்களை விட அதிகமான வருவாய் அதிகரிப்பால் சமநிலைப்பட்டிருக்கிறது. நிச்சயமாக, வெளிநாட்டு வர்த்தகம், அதனளவில் கணிசமானதாயில்லை என்றாலும் கூட, ஒரு செயலூக்கமான சமநிலையை அது அளிக்கிறது. அரசு வங்கியின் தங்க கையிருப்பு 1926 இல் 164 மில்லியன் ரூபிள் மதிப்பளவுக்கு இருந்ததில் இருந்து இப்போது ஒரு பில்லியனுக்கும் அதிகமான ரூபிள் மதிப்பளவுக்கு உயர்ந்திருக்கிறது. நாட்டில் தங்க உற்பத்தி துரிதமாக அதிகரித்துச் சென்று கொண்டிருக்கிறது. 1936 ஆம் ஆண்டில், தொழில்துறையின் இந்த பிரிவு உலகில் முதலிடம் பிடிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மீட்சி செய்யப்பட்ட சந்தையின் கீழ், நுகர்வுப்பொருள் புழக்கத்தின் வளர்ச்சி வெகு துரிதமடைந்திருக்கிறது. காகிதப் பணவீக்கம் உண்மையில் 1934 இல் நிறுத்தப்பட்டது. ரூபிளின் ஒரு குறிப்பிட்ட ஸ்திரத்தன்மைக்கான கூறுகள் நிலவுகின்றன. இருப்பினும், மக்கள்’ நிதித்துறை ஆணையரின் அறிவிப்பு கணிசமான மட்டத்திற்கு நம்பிக்கையின் ஒரு பணவீக்கமாக விளக்கப்பட்டாக வேண்டும். பொதுவான தொழில்துறை வளர்ச்சியில் சோவியத் ரூபிள் ஒரு வலிமையான ஆதரவைக் கொண்டிருக்கிறது என்ற அதேநேரத்தில், சகிக்கவியலாத அளவுக்கான பெரும் உற்பத்திச் செலவு அதன் உணர்வுமிக்க பகுதியாக இருக்கிறது. சோவியத் உழைப்பின் உற்பத்தித்திறன் உலகின் மற்ற பகுதிகளின் உழைப்பின் உற்பத்தித்திறனை விஞ்சி, அதன்விளைவாய், ரூபிள் பதட்டமின்றி  அந்திம காலத்து அமைதி காக்கின்ற அந்தத் தருணத்தில் இருந்துதான் ரூபிள் மிக ஸ்திரமான மதிப்பாக ஆக இயலும்.

தொழில்நுட்பரீதியான ஒரு நிதிக் கண்ணோட்டத்தில் பார்த்தால், ரூபிள் மேலாதிக்க நிலைக்கு உரிமை கோர இயலும் நிலை இப்போதும் குறைந்தளவே உள்ளது. ஒரு பில்லியன் ரூபிளுக்கும் அதிகமாக தங்க கையிருப்பு இருக்கின்ற அதேவேளையில், எட்டு பில்லியன் ரூபிளுக்கான வங்கி நோட்டுகள் நாட்டில் புழக்கத்தில் இருக்கின்றன. ஆக, தங்கத்தின் பின்புல ஆதரவு வெறும் 12.5 சதவீத அளவுக்குத் தான் இருக்கிறது. அரசு வங்கியில் இருக்கும் தங்கமானது அச்சடித்த நோட்டுகளுக்கான அடிப்படையாக இருப்பதை விடவும் போர் நோக்கங்களுக்கென ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கைநுழையமுடியாத ஒரு கையிருப்பு என்ற தன்மையைத்தான் மிக அதிகமாய் கொண்டிருக்கின்றது. தத்துவரீதியாகப் பார்த்தால், நிச்சயமாய், அபிவிருத்தியின் ஒரு உயரிய கட்டத்தில், உள்நாட்டு பொருளாதார திட்டங்களை துல்லியமானதாக்கவும் மற்றும் வெளிநாடுகளுடன் பொருளாதார உறவுகளை எளிமையாக்கவும் சோவியத்துகள் தங்கத்தின் நாணயமதிப்பிற்கு திரும்புவதை சாத்தியமற்றதாக சொல்லிவிட முடியாது. இவ்வாறாக, பணத்தாளானது தனது உயிரை விடுவதற்கு முன்னதாக, இன்னுமொரு முறை தூய தங்கத்தின் ஜொலிப்புடன் மின்னக்கூடும். எவ்வாறாயினும் இது உடனடி எதிர்காலத்திற்கான பிரச்சினை இல்லை.

உடனடி எதிர்காலத்தில், தங்க நாணயமதிப்பிற்குச் செல்வது குறித்து பேச்சிருக்க முடியாது. இருப்பினும், எந்த மட்டத்திற்கு, அரசாங்கம் தங்கக் கையிருப்பை அதிகப்படுத்துவதன் மூலம் முழுக்க தத்துவரீதியான பின்புல ஆதரவு தான் என்றாலும்கூட அந்த ஆதரவின் சதவீதத்தை அதிகப்படுத்த முயலுகிறதோ, எந்த மட்டத்திற்கு வங்கிக் காகித பணப் புழக்கத்தின் வரம்புகள் அதிகாரத்துவத்தின் விருப்பத்தினால் அல்லாமல் புறநிலையாக தீர்மானிக்கப்படுகிறதாய் ஆகிறதோ, அந்த மட்டத்திற்கு சோவியத் ரூபிள் குறைந்தபட்சம் ஓரளவுக்கேனும் ஸ்திரத்தன்மையை எட்ட முடியும். அது மட்டுமே கூட மிகப்பெரும் அனுகூலம் தரக்கூடியதாய் இருக்கும். வருங்காலத்தில் பணவீக்கம் உறுதியாக நிராகரிக்கப்படும் நிலையில், பணத்தாளானது, தங்க நாணயமதிப்பின் அனுகூலம் இல்லாவிடினும் கூட, முந்தைய வருடங்களில் அதிகாரத்துவ அகநிலைவாதத்தினால் பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தப்பட்டிருந்த ஆழமான பல காயங்களை குணப்படுத்த உதவ முடியும் என்பதில் சந்தேகமில்லை.

ஸ்டக்ஹானோவ் இயக்கம்

"அனைத்துப் பொருளாதாரமும்” அதாவது, நாகரிகத்தின் அனைத்துக் கட்டங்களிலும் இயற்கையுடனான அனைத்து மனிதப் போராட்டமும் "இறுதிப் பகுப்பாய்வில் இக்காலகட்டத்தின் பொருளாதாரமாகின்றது" என்றார் மார்க்ஸ். வரலாற்றின் ஆரம்பகட்டமானது உழைக்கும் நேரஅளவை குறைப்பதற்கான ஒரு போராட்டமேயன்றி வேறொன்றுமில்லை. சுரண்டலை ஒழிப்பதை மட்டும் கொண்டு சோசலிசம் நியாயப்படுத்தப்பட்டு விட முடியாது; சமுதாயத்திற்கு முதலாளித்துவம் உறுதியளிப்பதை விடவும் உயரிய ஒரு நேரமிச்சப்படுத்தலை அது உறுதியளித்தாக வேண்டும். இந்த நிபந்தனை பூர்த்தியாகாமல் வெறுமனே சுரண்டல் மட்டும் அகற்றப்படுவது என்பது வருங்காலமற்ற ஒரு கேலிக்கூத்தான அத்தியாயமாகத்தான் இருக்க முடியும். சோசலிச வழிமுறைகளை செயலுறுத்துவதிலான முதலாவது வரலாற்றுப் பரிசோதனை அதில் இருக்கின்ற மகத்தான சாத்தியங்களை வெளிப்படுத்தியிருக்கிறது. ஆயினும் சோவியத் பொருளாதாரமானது, கலாச்சாரத்தின் மிகவும் விலைமதிப்பற்ற மூலப்பொருளான நேரஅளவை சிறந்த முறையில் பயன்படுத்தக் கற்றுக்கொள்வதில் இருந்து இன்னும் வெகுதூரத்தில் இருக்கிறது. நேர மிச்சப்படுத்தலுக்கான முக்கிய ஆயுதமான இறக்குமதிசெய்யப்பட்ட தொழில்நுட்பம், அது தனது சொந்த முதலாளித்துவ நாடுகளில் இயல்பாகத் தருகின்ற தரத்தினை சோவியத் மண்ணில் தருவதற்கு இன்னும் தவறிக் கொண்டிருக்கிறது. அந்த அர்த்தத்தில், அனைத்து நாகரிகங்களுக்கும் தீர்மானகரமானதாய், சோசலிசம் இன்னும் வெற்றி அடையாதிருக்கிறது. வெற்றி பெற முடியும், வெற்றி பெற்றாக வேண்டும் என்று அது காட்டியிருக்கிறது. ஆயினும் இன்னும் அது வெற்றி பெற்றிருக்கவில்லை. இதற்கு நேர்மாறாய் கூறப்படும் அத்தனை திட்டவட்டமான கூற்றுகளும் அறியாமை மற்றும் அரைவேக்காட்டுத்தனத்தின் விளைபொருட்களே.

மோலோட்டோவ் —நியாயமாய் சொல்லப்பட வேண்டும்— சில சமயங்களில், ஏனைய சோவியத் தலைவர்களை விடவும் சம்பிரதாய வார்த்தைகளில் இருந்து சற்று கூடுதலாக சுதந்திரமாய் விடயங்களை வெளிப்படுத்தக் கூடியவர். அவர் 1936 ஜனவரியில் மத்திய நிறைவேற்றுக் குழுவின் அமர்வு ஒன்றில் அறிவித்தார்:

"நமது சராசரி உழைப்பின் உற்பத்தித்திறன் இன்னமும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அளவுகளுக்கு கணிசமாய் கீழே இருக்கிறது".  

இந்த வார்த்தைகளை பின்வருமாறு துல்லியமாக்குவது நல்லது: உதாரணமாக,

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை விடவும் மூன்று, ஐந்து, மற்றும் சிலசமயங்களில் பத்து மடங்கும் குறைவாய் உற்பத்தித்திறன் இருக்கிறது, அதற்கேற்ப நமது உற்பத்திச்செலவு கணிசமான அளவு அதிகமானதாக இருக்கிறது.

அதே உரையில், மோலோட்டோவ் பின்வருமாறான மிகப் பொதுவான ஒரு ஒப்புதலையும் செய்தார்:

"நமது தொழிலாளர்களின் சராசரி கலாச்சார நிலையானது இன்னமும் ஏராளமான முதலாளித்துவ நாடுகளின் தொழிலாளர்களின் சராசரி கலாச்சார நிலையைக் காட்டிலும் மிகவும் பின்தங்கியதாய் இருக்கிறது".

சராசரி வாழ்க்கைத்தரமும் தான் என்பதும் இத்துடன் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். போகிறபோக்கில் கூறப்பட்ட இந்த தெளிவான வார்த்தைகள், கணக்கிலடங்காத அரசு அதிகாரிகளின் தம்பட்ட அறிவிப்புகள், மற்றும் வெளிநாட்டு "நண்பர்களின்" தேனூறிய புகழ்மழைகளை எத்தனை இரக்கமற்ற வகையில் மறுதலிக்கிறது என்பதை விளக்கவும் அவசியமில்லை!

உழைப்பின் உற்பத்தித்திறனை உயர்த்துவதற்கான போராட்டமும் அதனுடன் சேர்ந்து பாதுகாப்பு குறித்த கவனமும் தான் சோவியத் அரசாங்கத்தின் செயல்பாட்டின் அடிப்படை உள்ளடக்கமாக இருக்கிறது. சோவியத் ஒன்றியத்தின் பரிணாம வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில் இந்தப் போராட்டம் பல்வேறு குணவியல்புகளை எடுத்து வந்திருக்கிறது. முதலாவது ஐந்தாண்டுத் திட்டம் மற்றும் இரண்டாவதின் தொடக்க கால ஆண்டுகளின் போது செயலுறுத்தப்பட்ட வழிமுறைகள், "அதிர்ச்சி தொழிலாளர் படையணி முறை” ("shock brigade-ism") இன் வழிமுறைகள் ஆகியவை தொடர்ந்த வலியுறுத்தம், தனிநபர் முன்னுதாரணம், நிர்வாக அழுத்தம் மற்றும் அனைத்து வகையான குழு-ஊக்கப்படுத்தல்கள் மற்றும் சலுகைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தன. 1931 ஆம் ஆண்டின் “ஆறு நிபந்தனைகளின்” அடிப்படையில் உற்பத்திக்கேற்ற ஊதிய முறையின் ஒரு வகையினை அறிமுகப்படுத்துவதற்கு நடைபெற்ற முயற்சிகள், நாணய மதிப்பின் ஸ்தூலமற்ற தன்மை மற்றும் பலநிலை விலைகளுக்கு எதிராய் வெற்றி காண முடியாமல் தோற்றன. அரசின் பொருள் விநியோக முறை, வித்தியாசப்படுத்தப்பட்ட தொழில் மதிப்பீட்டு முறையை அதாவது “உயர்அந்தஸ்து முறை” (premium system) என்ற, சாராம்சத்தில் அதிகாரத்துவத்தின் தற்குறித்தனத்தை மட்டுமே அர்த்தமாய் கொண்டிருந்த, ஒன்றைக் கொண்டு இடம்பெயர்த்திருந்தது. தாராளமான சலுகைகளுக்கான சண்டையில், ‘துடிப்பான தொழிலாளர் படையணி’யின் பதவிநிலைகளில் சிறப்பு செல்வாக்கைக் கொண்டு ஏய்ப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. காலப்போக்கில், மொத்த அமைப்புமுறையும் அதன் சொந்த நோக்கங்களுக்கு முழு எதிரானதாக ஆகியிருந்தது.

விநியோக அட்டை முறை ஒழிக்கப்பட்டமை, ரூபிள் ஸ்திரப்பட தொடங்கியமை, விலைகள் ஒருமைப்பட்டமை ஆகியவை மட்டுமே உற்பத்திக்கேற்ற ஊதிய முறையை செயல்படுத்துவதற்குரிய நிலைமைகளை உருவாக்கின. இந்த அடிப்படையில், அதிர்ச்சி தொழிலாளர் படையணி-வாதம் ஸ்டக்ஹானோவ் இயக்கம் என்று அழைக்கப்படும் ஒன்றைக் கொண்டு பிரதியிடப்பட்டது. இப்போது மிக உண்மையானதொரு அர்த்தத்தை பெற்றிருந்த ரூபிளை விரட்டிப் பிடிக்கும் முயற்சியில், தொழிலாளர்கள், தாங்கள் வேலை செய்யும் எந்திரங்கள் மீது அதிக அக்கறை கொள்ளவும், தங்களது வேலை நேரத்தை கூடுதல் கவனத்துடன் பயன்படுத்தவும் தொடங்கினார்கள். ஸ்டக்ஹானோவ் இயக்கம் ஒரு பெரும் மட்டத்திற்கு உழைப்பை தீவிரப்படுத்துவதாகவும் மற்றும் வேலை நாளை நீட்டுவதையும் அடிப்படையாக கொண்டது. வேலைநேரம் அல்லாததாக சொல்லப்படுகின்ற நேரத்திலும், ஸ்டக்ஹானோவ் தொழிலாளர்கள் தங்களது வேலைமேசைகள் மற்றும் கருவிகளை ஒழுங்குபடுத்துவது மற்றும் மூலப்பொருட்களை அடுக்குவது போன்றவற்றிலும், தொழிலாளர் அணித்தலைவர்கள் தங்கள் அணிகளுக்கு வழிகாட்டல்கள் வழங்குவது போன்றவற்றிலும் ஈடுபடுகின்றனர். இவ்வாறாக ஏழு மணி நேர வேலை என்பது வெறும் பெயரில் மட்டுமே இருக்கிறது.

உற்பத்திக்கேற்ற ஊதியம் என்பது சோவியத் நிர்வாகிகள் கண்டுபிடித்த ஒரு இரகசியம் அல்ல. கண்ணுக்குப் புலப்படும் நிர்ப்பந்தம் இன்றி நரம்புகளை அழுத்துகின்ற இந்த முறையானது "முதலாளித்துவ உற்பத்தி வழிமுறைகளுக்கு மிகப் பொருத்தமான ஒன்று” என மார்க்ஸ் கருதினார். தொழிலாளர்கள், இந்தப் புதுமையை அனுதாபமற்று மட்டுமன்றி முற்றுமுதலான குரோதத்துடனும் எதிர்கொண்டனர். அவர்களிடம் இருந்து வேறு எந்த எதிர்வினையையும் எதிர்பார்ப்பது என்பது இயல்புக்கு மாறானதாய் இருக்கும். சோசலிசத்தில் உண்மையான ஆர்வம் கொண்டிருப்பவர்களும் ஸ்டக்ஹானோவ் இயக்கத்தில் பங்கேற்றுள்ளார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆயினும், பிழைப்புவாதிகள் மற்றும் ஏய்ப்போர்களின் எண்ணிக்கையை விட அவர்கள் எந்தளவுக்கு அதிகம் இருக்கிறார்கள், அதிலும் குறிப்பாக நிர்வாக வட்டத்தில், என்பதைக் கூறுவது கடினமாய் இருக்கும். ஆனால் தொழிலாளர்களின் பாரிய எண்ணிக்கையிலானோரைப் பொறுத்தவரை அவர்கள் புதிய ஊதிய முறையை ரூபிளின் கோணத்திலிருந்து பார்க்கிறார்கள், அந்தத் தொகை குறுகிக் கொண்டிருக்கிறது என்றே அவர்கள் பெரும்பாலும் உணரத் தள்ளப்படுகிறார்கள்.

"சோசலிசத்தின் இறுதியான மற்றும் திரும்பவியலாத வெற்றிக்கு" பின்னர் சோவியத் அரசாங்கம் உற்பத்திக்கேற்ற ஊதிய முறைக்குத் திரும்புவது என்பது முதல் பார்வையில் முதலாளித்துவ உறவுகளுக்கு பின்வாங்குவது போன்று தோற்றமளிக்கக் கூடும் என்றபோதும், யதார்த்தத்தில் —ரூபிளின் மறுசீரமைப்பு விடயத்தில் நாம் கூறியதை இங்கே திரும்பக் கூற அவசியமாயிருக்கிறது— இது சோசலிசத்தைக் கைகழுவுவது குறித்த பிரச்சினை அல்ல, மாறாக கொச்சையான பிரமைகளை கைவிடுவது பற்றிய பிரச்சினை மட்டுமே. கூலி ஊதியத்தின் வடிவம், நாட்டின் உண்மையான வள ஆதாரங்களுடன் மேம்பட்டதொரு தொடர்புநிலைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது, அவ்வளவே. "சட்டம் ஒருபோதும் பொருளாதார கட்டமைப்புக்கு உயரியதாய் இருக்க முடியாது".

எவ்வாறாயினும், சோவியத் ஒன்றியத்தின் ஆளும் தட்டு இன்னமும் ஒரு சமூக பூச்சை பூசிக்கொள்ளாமல் இதை செய்யமுடியாது. 1936 ஆம் ஆண்டு ஜனவரியில் மத்திய நிறைவேற்றுக் குழுவுக்கு அளித்த ஒரு அறிக்கையில், அரசின் திட்டக் குழுவின் தலைவர் மிஸ்லோக் பின்வருமாறு தெரிவித்தார்:

"உழைப்புக்கான ஊதியத்தின் சோசலிசக் கோட்பாட்டை [!] எட்டுவதற்கான ஒரே உண்மையான சாதனமாக ரூபிள் ஆகிக் கொண்டிருக்கிறது".

பழைய மன்னராட்சியில் பொது சிறுநீர் கழிப்பிடங்கள் வரையிலும் மன்னர் பெயரில் அழைக்கப்பட்டது என்பது உண்மைதான் என்றாலும் அதற்காக, ஒரு தொழிலாளர் அரசில் எல்லாமே தானாகவே சோசலிசத்தன்மை பெற்றதாகி விடுகிறது என்று அர்த்தமல்ல.

ரூபிள் என்பது சோசலிச சொத்து வடிவங்களின் அடித்தளத்தின் மீதே என்றாலும் கூட, உழைப்பிற்கான ஊதியத்தின் முதலாளித்துவக் கோட்பாட்டை எட்டுவதற்கான "ஒரே உண்மையான சாதனமாக" இருக்கிறது. இந்த முரண்பாடு ஏற்கனவே நமக்கு பரிச்சயமான ஒன்று தான். "சோசலிச" வகை உற்பத்திக்கேற்ற ஊதியம் என்ற புதிய புனைகதையை ஸ்தாபிப்பதில், மிஸ்லோக் சேர்த்துக் கொண்டார்: "ஒவ்வொருவரும் தங்களால் இயலுமானளவிற்கு உழைப்பதும், அவரது உழைப்புக்குத் தக்கபடி ஊதியத்தைப் பெறுவதும் சோசலிசத்தின் அடிப்படைக் கோட்பாடாக இருக்கிறது". இந்த கண்ணியவான்கள் தத்துவங்களைத் திரிப்பதில் நிச்சயமாய் சளைப்பவர்களல்ல! ரூபிளை விரட்டிப் பிடிப்பதைக் கொண்டு உழைப்பின் வேகம் தீர்மானிக்கப்படும் போது, அவர்கள் "தங்களால் இயலுமான அளவுக்கு" —அதாவது அவர்களின் நரம்புகள் மற்றும் தசைகளின் நிலைமைகளுக்கு ஏற்ப— தங்களை செலவிடுவதில்லை, மாறாக அவற்றை மீறிய வகையில்தான் செலவிடுகிறார்கள். நிலைமைகளின் அடிப்படையிலும், கட்டாய அவசியத்தை குறிப்பிட்டுக் காட்டியும் மட்டுமே இந்த வழிமுறை நியாயப்படுத்தப்பட முடியுமே தவிர, மாறாக அதனை "சோசலிசத்தின் அடிப்படைக் கோட்பாடாக" அறிவிப்பது என்பது ஒரு புதிய உயர்ந்த கலாச்சாரம் குறித்த சிந்தனையை சிடுமூஞ்சித்தனத்துடன் நன்கறிந்த முதலாளித்துவ கழிசடையில் அமுக்கி மிதிப்பதாகும்.

ஸ்டக்ஹானோவ் இயக்கத்தை "சோசலிசத்தில் இருந்து கம்யூனிசத்திற்கு உருமாறுவதற்குத் தேவையான நிலைமைகளின் ஒரு தயாரிப்பு" என்று முன்வைப்பதன் மூலம் ஸ்ராலின் இந்தப் பாதையில் மேலும் ஒரு அடி முன்சென்றிருக்கிறார். நிர்வாக வசதிக்குத் தக்கவாறு சோவியத் ஒன்றியத்தில் பிரயோகிக்கப்படுகின்ற இந்தக் கருத்துகளுக்கு விஞ்ஞானபூர்வமான ஒரு வரையறை அளிப்பது எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது என்பதை வாசகர்கள் இப்போது காணக்கூடும். உறுதியாக சோசலிசமானது அல்லது கம்யூனிசத்தின் அடிமட்ட நிலையானது உழைப்புசக்தியின் அளவின் மீதும் மற்றும் நுகர்வின் அளவின் மீதும் ஒரு கறாரான கட்டுப்பாட்டைக் கோருகிறது என்பது உண்மைதான். ஆனால் இந்த நோக்கத்திற்கு அது, மூலதனத்தின் சுரண்டல் மேதாவித்தனத்தால் கண்டுபிடிக்கப்பட்டவற்றை விடவும் மனிதாபிமானமிக்க கட்டுப்பாட்டு வடிவங்களைத்தான் எச்சந்தர்ப்பத்திலும் ஏற்கிறது. ஆனால் சோவியத் ஒன்றியத்திலோ, முதலாளித்துவத்தில் இருந்து இரவல் பெற்ற ஒரு தொழில்நுட்பத்தில் பின்தங்கிய மனிதவளம் என்ற மூலப்பொருளை முரட்டுத்தனமான வகையில் பலாத்காரமாகப் பொருத்துவது என்பதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் நிர்ணயங்களை சாதிப்பதற்கான ஒரு போராட்டத்தில், உற்பத்திக்கேற்ற ஊதியம் போன்ற சுரண்டலின் மரபான வழிமுறைகள், முதலாளித்துவ நாடுகளின் சீர்திருத்தவாத தொழிற்சங்கங்களும் கூட அனுமதிக்கத் துணியாத வகையான வெளிப்பட்ட மற்றும் முரட்டு வடிவங்களில் செயலுறுத்தப்படுகின்றன. சோவியத் ஒன்றியத்தில் தொழிலாளர்கள் "தங்களுக்காகத் தான்" வேலை செய்கிறார்கள் என்ற கருத்தானது வரலாற்றுவழிக் கண்ணோட்டத்திலும், தொழிலாளர்கள் எதேச்சாதிகார அதிகாரத்துவத்தின் ஊசலாட்டத்திற்கு கீழ்ப்படியக் கூடாது —இதனைக் கூற நாமும் எதிர்பார்த்திருப்போம்— என்ற நிபந்தனையிலும் மட்டும்தான் உண்மையாக இருக்க முடியும். எவ்வாறெனினும், உற்பத்தி சாதனங்களை அரசுடைமையாக்குவது மட்டுமே சாணத்தை தங்கமாக்கி விடுவதில்லை அல்லது மனிதன் என்ற மகத்தான உற்பத்திசக்தியை ஓடாய் தேய்ந்து போகச் செய்கின்ற கொத்தடிமை அமைப்பைச் சுற்றி ஒரு புனித ஒளிவட்டத்தை உருவாக்கி விடுவதில்லை. "சோசலிசத்தில் இருந்து கம்யூனிசத்துக்கு உருமாறுவதற்கான" தயாரிப்பைப் பொறுத்தவரை, அது துல்லியமாக எதிர்முனையில் இருந்துதான் தொடங்கும்: அதாவது உற்பத்திக்கேற்ற ஊதியத்தை அறிமுகப்படுத்துவதில் இருந்து அல்ல, மாறாக அதனை காட்டுமிராண்டித்தனத்தின் எச்சமாகக் கருதி ஒழிப்பதில் இருந்து.

• • •

ஸ்டக்ஹானோவ் இயக்கத்தின் நன்மைதீமைகளை பட்டியலிடுவதற்கு இது மிக முன்கூட்டிய காலமாக இருக்கின்றபோதிலும், இந்த இயக்கத்தினது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஆட்சியினது குணநலனின் சில பண்புகளை தனித்துவப்படுத்திக் காட்டுவதென்பது ஏற்கனவே சாத்தியமானதாகவே இருக்கிறது. தனிப்பட்ட தொழிலாளர்களது சில சாதனைகள் சோசலிசத்திற்கு மட்டுமே எட்டக்கூடிய சாத்தியங்களின் சான்றாக மிகவும் சுவாரஸ்யமளிக்கக் கூடியவையாக இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் இந்த சாத்தியக்கூறுகளில் இருந்து ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் மட்டத்தில் அவற்றை எட்டுவதென்பது ஒரு நீண்டநெடும் பாதையாகும். ஒரு உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கு இன்னொன்றின் மீது நெருங்கிய சார்பு கொண்டிருக்கும் நிலையில், தொடர்ச்சியாய் உயர்ந்த உற்பத்தியளவை தனிநபர் முயற்சிகளால் மட்டும் சாதித்திட முடியாது. தனிப்பட்ட தொழிற்சாலைகளுக்குள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான உறவுகளில் இரண்டிலுமே உற்பத்தி மறுஒழுங்கு செய்யப்படாமல் சராசரி உற்பத்தித்திறனின் உயர்வானது சாதிக்கப்பட முடியாது. தவிரவும், மில்லியன் கணக்கான மக்களை தொழில்நுட்பத்திறனில் சிறிய மட்டத்திற்கு உயர்த்துவது என்பது சில ஆயிரம் திறமைசாலிகளை ஊக்குவிப்பதை விடவும் மிகமிகக் கடினமானதாகும்.

சோவியத் தொழிலாளர்கள் திறனில் பின்தங்கி இருப்பதாக தலைவர்களே கூட சில சமயங்களில் புகார் செய்வதை நாம் கேட்டிருக்கிறோம். இருப்பினும் அது பாதி உண்மை மட்டுமே, அதிலும் சிறிய பாதி மட்டுமே ஆகும். ரஷ்யத் தொழிலாளி உற்சாகமானவன், தனித்துவம் மிக்கவன் மற்றும் கொடையளிக்கப் பெற்றவன். எந்த ஒரு நூறு சோவியத் தொழிலாளர்களையும் எடுத்து, உதாரணத்திற்கு அமெரிக்க தொழில்துறையின் சூழலுக்கு மாற்றுவோமானால், அநேகமாய் சில மாதங்களில் ஏன் சில வாரங்களிலேயே கூட, அவர்கள் அதே துறையில் பணியாற்றும் அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு பின்தங்கி இருக்க மாட்டார்கள். சிக்கல், உழைப்பின் பொதுவான ஒழுங்கமைப்பில் தான் இருக்கிறது. நவீன உற்பத்திக்கடமைகளுக்கு சோவியத்தின் நிர்வாக பணியாளர்கள் வழமையாக தொழிலாளர்களை விடவும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்தனர்.

ஒரு புதிய தொழில்நுட்பத்தின் உதவியில், உற்பத்திக்கேற்ற ஊதியமானது இப்போது மிகக் குறைவாக இருக்கும் உழைப்பின் உற்பத்தித்திறனை தவிர்க்கவியலாமல் படிப்படியாக உயரே இட்டுச் செல்ல வேண்டும். ஆனால், இதற்கு அவசியமான அடிப்படை நிலைமைகளை உருவாக்குவது என்பது தொழிற்சாலை மேற்பார்வையாளர் (ஃபோர்மேன்) தொடங்கி கிரெம்ளின் மாளிகை தலைவர்கள் வரையிலும் நிர்வாகத்தின் மட்டத்தை உயர்த்துவதற்குக் கோருகிறது. ஸ்டக்ஹானோவ் இயக்கம் வெகு சிறு அளவில்தான் இந்தக் கோரிக்கையை பூர்த்தி செய்கிறது. ஏறிக் கடக்க முடியாத பிரச்சினைகளை மரணகரமான வகையில் தாவிக் கடப்பதற்கு அதிகாரத்துவம் முயற்சி செய்கிறது.

உற்பத்திக்கேற்ற ஊதியம் அதனிடம் இருந்து உடனடியாக எதிர்பார்க்கப்படும் அதிசயங்களை தானாகவே கொடுத்து விடுவதில்லை என்பதால், ஆக்ரோஷமான நிர்வாக அழுத்தம் ஒன்று, ஒருபக்கத்தில் சிறப்புச் சலுகைகள் மற்றும் பகட்டு விளம்பரங்கள் மற்றும் மறுபக்கத்தில் அபராதங்கள் சகிதமாக, அதன் உதவிக்கு ஓடி வருகிறது.

ஸ்டக்ஹானோவ் வாதிகளுக்கு எதிர்ப்பு காட்டியதாக, அவர்களுக்கு எதிராக சதி செய்ததாக மற்றும் சில சமயங்களில் அவர்களைக் கொலை செய்ததாகவும் கூட குற்றம்சாட்டப்பட்டு தொழில்நுட்ப பொறியியல் பணியாளர்களுக்கும் மற்றும் தொழிலாளர்களுக்கும் எதிராய் மேற்கொள்ளப்பட்ட பாரிய அளவிலான ஒடுக்குமுறைகளால், இந்த இயக்கத்தின் முதல் படிகள் சமிக்கையளிக்கப்பட்டன. இந்த ஒடுக்குமுறைகளின் கடுமையே அந்த எதிர்ப்பின் வலிமைக்கு சாட்சியம் கூறுவதாக உள்ளது. சதி என்று சொல்லப்பட்டதான இதனை மேலதிகாரிகள் அரசியல் எதிர்ப்பு என்று விளக்கினர். யதார்த்தத்தில், இது பெரும்பாலும், தொழில்நுட்ப, பொருளாதார மற்றும் கலாச்சார சிக்கல்களில் —இவற்றின் கணிசமானதொரு பகுதி அதிகாரத்துவத்தில் தனக்கான ஆதாரத்தைக் கொண்டிருந்தது— தான் வேரூன்றியிருந்தது. இந்த "சதி" விரைவிலேயே வெளிப்பட முறியடிக்கப்பட்டது: அதிருப்தியுற்றிருந்தவர்கள் பயமுறுத்தப்பட்டார்கள்; விடயம் புரிந்தவர்கள் வாய்மூடச் செய்யப்பட்டார்கள். கேள்விப்பட்டிராத சாதனைகள் குறித்த தந்திகள் பறந்தன. யதார்த்தத்தில், இது தனிநபர் முன்னோடிகள் குறித்த பிரச்சினையாக இருந்த வரையிலும், தொழிற்சாலை நிர்வாகங்கள், உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிவான விதத்தில், தமது வேலையை அசாதாரண முன்யோசனைகளுடன் ஒழுங்கமைத்தன, சுரங்கத்திலும் தொழிற்கூட்டமைப்பிலும் இருக்கும் மற்ற தொழிலாளர்கள் அதற்கான விலை கொடுக்க நேர்ந்தபோதிலும். ஆயினும் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திடீரென்று "ஸ்டக்ஹானோவ் தொழிலாளர்களாக" எண்ணிக்கையிடப்படும்போது, நிர்வாகம் முழுக் குழப்பத்தில் ஆழ்கிறது. உற்பத்தியின் ஆட்சியை குறைந்த காலத்திற்குள் ஒழுங்கமைக்கும் வழி தெரியாமல், புறநிலையாக அதைச் செய்ய இயலுமையின்றி, உழைப்புசக்தி மற்றும் தொழில்நுட்பம் இரண்டையும் அது மீறுவதற்கு முயல்கிறது. கடிகாரச் சுழற்சி வேகம் குறைகையில், அது சிறிய சக்கரங்களை ஊசி கொண்டு தள்ளி விடுகிறது. "ஸ்டக்ஹானோவ்" நாட்கள் மற்றும் பத்து-நாள் காலங்களின் காரணமாக, பல நிறுவனங்களில் முழுமையான குழப்பம் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்டக்ஹானோவ் தொழிலாளர்களின் எண்ணிக்கைப் பெருக்கத்துடன் கைகோர்த்து பெரும்பாலும் நிறுவனங்களின் பொதுவான உற்பத்தித்திறன் அதிகரித்திருக்கவில்லை மாறாக குறைந்திருக்கிறது என்ற, முதல் பார்வையில் திடுக்கிட வைப்பதாக இருக்கின்ற ஒரு உண்மைக்கு, இது விளக்கமளிக்கின்றது.

தற்சமயம், இந்த இயக்கத்தின் "வீறுமிக்க" காலம் கடந்து விட்டிருக்கிறது என்பது வெளிப்படை. அன்றாட நெருக்கல் தொடங்குகிறது. கற்றுக் கொள்வது அவசியம். குறிப்பாக மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பவர்கள் கற்றுக் கொள்வதற்கு அதிகம் இருக்கிறது. ஆனால் அவர்கள்தான் கற்பதற்கு மிகவும் ஆர்வம் குறைந்தவர்களாய் இருக்கிறார்கள்.

சோவியத் பொருளாதாரத்தின் அத்தனை கூட்டமைப்புகளையும் இழுத்துப் பிடித்து முடக்குகின்ற அந்த சமூகக் கூட்டமைப்பின் பெயர் — அதிகாரத்துவம்.