ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Following European elections: EU summit haggles over top jobs

ஐரோப்பிய தேர்தல்களைத் தொடர்ந்து: ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு தலைமை பதவிகளுக்கு பேரம் பேசுகிறது

By Peter Schwarz 
31 May 2019

ஐரோப்பிய தேர்தல்களுக்கான கடைசி வாக்குப்பதிவு நிலையங்கள் கூட வெளிப்படையாக இன்னமும் மூடப்பட்டிருக்காத நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பதவிகளை ஆக்கிரமிப்பதற்காக அரசாங்க தலைவர்களிடையே முரண்பாடுகள் வெடித்தது. செவ்வாயன்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்கால தலைவர்கள் தொடர்பாக கலந்துரையாட புருசல்ஸிஸ் ஒரு உச்சி மாநாட்டை கூட்டினார்கள்.

எந்த முடிவும் எடுக்கப்படாமலே கூட்டம் முடிவுக்கு வந்தது. முரண்படும் நலன்கள் குறுகிய காலத்தில் சமரசம் செய்யக்கூடியவையல்ல. முரண்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் தெரியாமல் தவிர்ப்பதற்காக, தற்போதைய ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டுஸ்க் இடம் ஜூன் மாத இறுதியில் அடுத்த ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு முன்னர் முன்மொழியப்பட்ட பெயர்களின் பட்டியலை தயாரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது.

மொத்தத்தில், ஐந்து உயர்மட்ட பதவிகள் பணயத்தில் உள்ளன:

• ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்,

• ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர்,

• ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர்,

• ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கையின் பிரதிநிதி

• ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவர்.

முதல் மூன்றும், குறிப்பாக, கணிசமான அதிகாரங்களைக் கொண்டிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் 32,000 அதிகாரிகளையும் ஊழியர்களையும் கட்டுப்படுத்துகிறார், இது ஐரோப்பிய ஒன்றியத்தில் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கும் புருஸ்ஸல்ஸில் 25,000 செல்வாக்குள்ளவர்களுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளது. பெரும்பாலும் எந்த ஜனநாயக கட்டுப்பாட்டிற்கும் வெளியே, இந்த எந்திரம் ஐரோப்பிய அரசியல் மற்றும் பொருளாதார வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் கணிசமான செல்வாக்கை செலுத்துகிறது.

ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) ஐரோப்பிய ஒன்றியத்தின் நாணயக் கொள்கையை தீர்மானிக்கிறது. ஐரோப்பிய ஆணையத்தைப் போலன்றி, மத்திய வங்கி சுதந்திரமானது, இதன் பொருள் அது தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களிடமிருந்து வரும் எந்த கட்டுப்பாடுகள் அல்லது உத்தரவுகளுக்கும் கட்டுப்பட்டதல்ல. நிதியியல் பிரபுத்துவத்தின் நெருங்கிய சுற்றுவட்டத்திற்குள்ளேயே நாணயக் கொள்கை நிர்ணயிக்கப்படுகிறது, அங்கிருந்தே ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் வழக்கமாக வருவார்.

ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைவர், அரசாங்கத் தலைவர்களின் கூட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் ஏனைய அமைச்சர்களின் கூட்டங்களை நடத்துவதற்கும் பொறுப்பானவர் ஆவார், எனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான நிறைவேற்று மற்றும் சட்டபூர்வ காலப்பகுதிகளுக்கு முக்கிய பொறுப்பானவர், இருப்பினும் இறுதியாகக் கூறப்பட்ட பொறுப்பு ஐரோப்பிய பாராளுமன்றத்துடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

இதுவரை, பாராளுமன்றத்தில் எப்போதும் பெரும்பான்மை கொண்டிருந்த கிறிஸ்துவ ஜனநாயகவாதிகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகள், தங்களுக்குள்ளே பதவிகளை பங்கிட்டுக் கொண்டனர். தற்போது பதவிகளை ஆக்கிரமித்திருப்பவர்களில் மூவர் (ஆணைக்குழு தலைவர் ஜோன் குளோட் ஜுங்கர், கவுன்சில் தலைவர் டுஸ்க் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற தலைவர் அந்தோனியோ தஜானி) பழமைவாத ஐரோப்பிய மக்கள் கட்சி (EPP) உறுப்பினர்களாவர். ECB தலைவர் மாரியோ திராகி ஒரு கட்சியின் உறுப்பினராக இல்லாதபோதும், EPP உறுப்பினர்கள் சில்வியோ பெர்லுஸ்கோனி, அங்கேலா மேர்க்கெல் மற்றும் நிக்கோலா சார்க்கோசி ஆகியோர் அவரை 2011 ல் அதிகாரத்திற்கு கொண்டுவர உதவினர். ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு கொள்கை பிரதிநிதி ஃபெட்ரிகா மொஹெரெனி ஒரு சமூக ஜனநாயகவாதி ஆவார்.

EPP யின் உயர்மட்ட அதிகாரிகளின் ஆதிக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது ஜேர்மனியின் கணிசமான செல்வாக்கை உறுதி செய்தது. அங்கே EPP இன் அங்கேலா மேர்க்கெல், பெரும்பாலும் சமூக ஜனநாயகக் கட்சியுடனான ஒரு கூட்டணியோடு 14 ஆண்டுகளாக அதிகாரத்தைக் கொண்டுள்ளார்.

ஆயினும், சமூக ஜனநாயகவாதிகள் பிரான்ஸிலும், இத்தாலியிலும் அதிகாரத்தை இழந்துள்ளனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பிய பாராளுமன்றத்தில், பழமைவாத மற்றும் சமூக ஜனநாயகவாதிகள் 751 ஆசனங்களில் 332 அல்லது 44 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளனர். பழைய பாராளுமன்றத்தில், அவர்கள் 401 ஆசனங்களை கொண்டிருந்தனர். பெரும்பான்மையை உறுதிப்படுத்த, அவர்கள் இப்போது தாராளவாதிகள் அல்லது பசுமைக் கட்சியினரின் ஆதரவை சார்ந்துள்ளனர்.

இந்த அனைத்து கட்சிகளுக்கும் இடையேயான அரசியல் வேறுபாடுகள் மிகக் குறைவானவையாகும், சமீபத்திய ஆண்டுகளில், அவர்கள் அனைவரும் தீவிரமாக வலது பக்கம் திரும்பியுள்ளனர். அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கனக் கொள்கைகள், அதன் இராணுவத்தை மீழ ஆயுதமயமாக்கல், ஒரு பொலிஸ் அரச எந்திரத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனிதாபிமானமற்ற அகதி கொள்கைகளை அமுல்படுத்துதல் ஆகியவற்றிற்கு ஆதரவு கொடுத்துள்ளனர். தொடர்ந்தும் அவர்கள் அவ்வாறே செயல்படுவர்.

வலது நோக்கிய இந்த நகர்வானது ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளான தேசியப் பிளவுகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன், அவை அதிகரித்துவரும் ஆக்கிரோஷ தன்மையைக் கொடுத்துள்ளது. ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பிளவுபட்ட பல போட்டி பிரிவுகளில் இது வெளிப்பாட்டைக் காண்கிறது.

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், ஜேர்மனிய ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். மாறாக, ஜேர்மன் அதிபர் மேர்க்கெல், தேர்தலில் கட்சியின் முன்னணி வேட்பாளராக இயங்கிய EPP இன் மான்ஃபிரட் வேபருக்கு ஆதரவை வலியுறுத்தியுள்ளார். அரசாங்கத்தின் தலைவர்கள் ஆணையத்தின் தலைவரை முன்மொழிகின்றனர், ஆனால் அவர்கள் பாராளுமன்ற பெரும்பான்மை ஆதரவை பெற வேண்டும்.

பிரான்சில், EPP என்பது குறிப்பிடத்தக்கது அல்ல. அதன் பிரதிநிதியான குடியரசுக் கட்சியினர், வெறும் 8 சதவீத வாக்குகளையே பெற்றனர். சோசலிஸ்ட் கட்சி இன்னும் மோசமாக 6.2 சதவிகிதத்தை மட்டுமே வென்றது, மரின் லு பென்னின் அதி-வலது தேசிய பேரணியின் 23.3 சதவிகிதத்திற்கு அடுத்தபடியாக, மக்ரோனின் சொந்தக் கட்சியான குடியரசை நோக்கி அணிவகுப்போம் (LREM) 22.4 சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. மக்ரோனின் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தாராளவாத குழுவில் சேர்ந்தமையால், அதன் பிரதிநிதித்துவத்தை 105 ஆசனங்களுக்குக் கொண்டு வந்தது.

செல்வாக்கு மற்றும் பதவிகள் பற்றிய சர்ச்சைகள் ஆழ்ந்து செல்லும் மோதல்களால் இயக்கப்படுவதோடு, நீண்ட காலமாக வளர்ந்து வருகின்றன. ஐரோப்பிய ஒன்றிய நிதியக் கொள்கையை ஒருங்கிணைப்பதற்கான முயற்சியில் மக்ரோன் பலமுறையும் பேர்லினில் இருந்து எதிர்ப்பை சந்தித்தார். ஒரு ஐரோப்பிய இராணுவத்தை உருவாக்குவதற்கான திட்டங்கள் மற்றும் பேர்லின், பாரிஸ் இரண்டும் ஆதரிக்கும் ஒரு அமெரிக்காவிலிருந்து சுயாதீன ஐரோப்பிய ஆயுத தொழில்கள் நிறுவப்படுவதிலும் எதிர்ப்புக்கள் உள்ளன. பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சவுதி அரேபியாவிற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதை ஜேர்மனி தற்காலிகமாக நிறுத்தியபோது பாரிஸ் சீற்றம் அடைந்தது. பிரெக்ஸிட் பிரச்சினையில் ஒரு கடுமையான போக்கை மக்ரோன் ஏற்றுக்கொள்கையில், மேர்க்கெல் பிரிட்டனுக்கு சலுகைகளை வழங்க தயாராக இருப்பதாக கூறினார்.

வேட்பாளர்களின் பட்டியலை முன்மொழியும் டுஸ்க்கின் கோரிக்கையுடன், இந்த முரண்பாடுகள் இப்போது திரைக்குப் பின்னால் உக்கிரமடைகின்றன, மேலும் ஒரு அருவருப்பான சமரசத்திற்கு இணங்க முடியும்.

பணயத்தில் உள்ள உண்மையான பிரச்சினைகளைப் பற்றி பொதுமக்களுக்கு முறையாக பொய் சொல்லப்படுகிறது. உதாரணமாக, கடந்த ஐரோப்பிய தேர்தல்களில் அறிமுகப்படுத்தப்பட்ட, ஆனால் எந்த சட்ட அடிப்படையையும் கொண்டிருக்காத, முன்னணி வேட்பாளர்களின் கொள்கையை குறிப்பிடுவதன் மூலம் வேபருக்கான ஆதரவை ஜேர்மன் அரசாங்கம் நியாயப்படுத்தியது. இதன் விளைவாக, அவர்கள் ஜனநாயக தன்மையை பெறுகிறார்கள் என வாதம் செல்கிறது.

இந்த வாதம் வெளிப்படையாக அபத்தமானது. தேர்தலில் ஐரோப்பா முழுவதுமான வாக்குகளில் கால் பகுதியை விட குறைவாக பெற்ற வேபர், தனது கட்சியின் உள்வட்டத்தின் முன்னணி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜேர்மனியில் கூட 32 சதவிகித வாக்காளர்கள் மட்டுமே ஆணையத்தின் தலைவர் பதவிக்கு வேபருக்கு ஆதரவு தருகின்றனர், ஆனால் 59 சதவிகிதத்தினர் எதிர்க்கின்றனர் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

வேபரை நியமனம் செய்ய மேர்க்கெல் வலியுறுத்துகிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் பதவிக்கு, தற்போதைய Bundesbank தலைவரும் சிக்கன நடவடிக்கைக்கான கடும்போக்காளராக பார்க்கப்படுபவருமான ஜென்ஸ் வைட்மானை அவர் ஏற்றுக் கொள்ளும் பரிந்துரைகள் உள்ளன.

தற்போது போட்டி விவகாரங்களுக்கான ஐரோப்பிய ஒன்றிய ஆணையராக உள்ள மார்கரெட் வெஸ்டேஜர் ஆணையத் தலைவர் பதவிக்கு மற்றொரு சாத்தியமான போட்டியாளராக உள்ளார். தாராளவாத குழுவின் டேனிஷ் உறுப்பினர் என்பதால் மக்ரோனின் ஆதரவையும் மேலும் ஆணையத்தை தலைமை தாங்கும் முதல் பெண் என்ற ரீதியில் பசுமைவாதிகளாலும் அவர் ஆதரிக்கப்படலாம்.

உயர்மட்ட பதவிகள் மீதான பேரம் மாதங்கள் ஆகலாம் என்று சில அவதானிகள் நம்புகின்றனர். எனினும், ஒரு விஷயம் தெளிவாக உள்ளது: திரைக்குப்பின்னே புதிய ஆணைக்குழு தயாரிப்பது எதுவாக இருந்தாலும், அதன் முன்னோடிகளால் செயல்படுத்தப்பட்ட அதே வலதுசாரி, தொழிலாள வர்க்க விரோத கொள்கைகளையே அது தொடரும்.