ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

“It’s been hell for the world”
US Army tweet provokes outpouring of antiwar sentiment

 “இது உலகிற்கு நரகமாக இருந்து வருகிறது”

அமெரிக்க இராணுவத்தின் டுவீட் போர் எதிர்ப்பு உணர்வுகளின் வெளிப்பாட்டை தூண்டுகின்றது

George Marlowe
28 May 2019

“எப்படி இராணுவ சேவை உங்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது?” என்று கடந்த வாரம் ஒரு டுவிட் செய்தியில் அமெரிக்க இராணுவம் கேட்டபொழுது அது எதிர்பார்த்திருந்த பதிலைப் பெறவில்லை. இராணுவத்திற்கு வாழ்த்துகளுக்கு பதிலாக, உலக அளவிலான யுத்தம் பற்றிய கொடூரமான யதார்த்தம், வார இறுதியில் நினைவுநாள் மீதான அமெரிக்க இராணுவ வாதத்தின் ஆண்டுவிழா கொண்டாலின் பொழுது வெளிப்பட்டது.

திங்கட்கிழமை இரவு அன்று, அமெரிக்க இராணுவத்தின் கேள்விக்கு பதிலாக 11,000 க்கு மேற்பட்ட கருத்துக்கள் வந்திருந்தன. யுத்தத்தை உயர்த்துவதற்காக ஆளும் செல்வந்த தட்டாலும் ஊடகங்களாலும் பயன்படுத்தப்பட்ட பொய்கள் மற்றும் வெற்றுரைகள், மில்லியன் கணக்கான உயிர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள வாழும் நரகத்தை விவரிக்கும் கதைகளால் தவிடுபொடி ஆயின.

திங்கட்கிழமை இரவு பிரதான செய்திகளால் கவரப்படும் பதிலானது, அறிவிழந்த மூர்க்க குணத்திற்கு வழமையாக அர்ப்பணித்துக்கொள்ளும் நாளில் ஒரு ஒற்றை அரிதான நிகழ்வாக, அந்த அளவுக்கு மிகப் பாரிய அளவினதாக இருந்தது. இந்த நிகழ்வானது அமெரிக்க இராணுவவாதத்தின் பரந்த உலகத் தாக்கத்தின் வெளிப்பாடாக உலகம் முழுவதும் தலைப்பு செய்திகளாகவும் வெளிப்பட்டன.

படையினர் தற்கொலை, மன அழுத்தம், வன்முறை, தொடர்ச்சியான திகில் கனவுகள், பிந்தைய மன உளைச்சல் சீர்குலைவு, போதை மருந்துகள் உட்கொள்ளல், பழக்கத்திற்கு அடிமை, போதைப்பொருள், கற்பழிப்பு மற்றும் ஆணையக அதிகாரிகளால் பாலியல் தாக்குதல், போதுமான சுகாதார பாதுகாப்பு இன்மை, தலைமுறை அதிர்ச்சி, இரசாயன பொருட்களுக்கு ஆட்படுத்திக்கொள்ளல், போர்க் குற்றங்கள் ஆகிய இவை வெளிப்பட்ட திகிலூட்டும் கதைகளில் சில.

இராணுவத்தினர் தற்கொலைகள் மிவும் பொதுவானவையாக இருந்தன. ஷேன்பர்லியின் கதை பலரால் பல்வேறு வடிவங்களில் திரும்பக் கூறப்பட்டன. “உயர்நிலைப் பள்ளிக் காலத்திலிருந்து எனது சிறந்த நண்பராய் விளங்கியவருக்கு மனநல சிகிச்சை மறுக்கப்பட்டது மற்றும் அவர் அரிதாகத்தான் இயங்கமுடியும் என்ற அளவிற்கு அத்தகைய ஆழ்ந்த அதிர்ச்சியைக் கொண்டிருந்தாலும், ஈராக்கிற்கு மூன்றாவது சுற்றுக்கு திரும்புமாறு நிர்பந்திக்கப்பட்டார்” என ஷேன் எழுதினார். “அவர் அங்கு அனுப்பப்படுவதற்கு இருநாட்கள் முன்னர் கையளவு தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டு, தலையில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார்.”

PTSD, கடுமையான மன அழுத்தம், கவலை தனிமை என்பதை Combat Cocktail என்று சீன் அழைத்ததை விவரித்தார். தற்கொலை முயற்சிகள். தீராத ஆத்திரம். அது என் மூத்த மகனுடனும் பேரனுடனும் உள்ள எனது உறவை இழக்க வைத்தது. அது எனது நபர்கள் சிலரை இழக்க வைத்தது. எப்படி இராணுவ சேவை என்னைப் பாதித்தது? எனது குடும்பத்தைக் கேளுங்கள்.

போருக்கான பொது சம்மதத்தை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொய்களும் கூட எதிர்க்கப்பட்டன. பகைவர்களை உருவாக்கி மற்றும் அப்பாவி குடிமக்களைக் கொல்லும் போரில் அப்பாவி அமெரிக்கர்களை தூண்டி விடாதீர்கள்” என ஒருவர் எழுதினார். “அனைத்துப் போர்களிலும் இருந்து ஒரு இலாபத்தையும் நீங்கள் பெறவில்லை. அது உலகுக்கு நரகமாகவே இருந்து வருகிறது.”

செய்தி ஊடகம் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தால் இராணுவம் தீவிரமாகப் புகழப்படுவதைப் பொறுத்தவரை, இராணுவத்தில் பீரங்கித் தீனியாகப் பயன்படுத்தப்படுபவர்களுக்கு பொதுவாக தங்களது ஏழ்மையிலிருந்து தப்பிக்கவும் கல்லூரிப் பட்டம் பெறுவதற்கான வாய்ப்புமாக அவை இருக்கின்றன. பொதுவான ஒரு பொருளாதார அணுகுமுறையாக இருக்கின்றன. உண்மை என்னவென்றால், அவர்கள் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் நண்பர்களின் தலைமுறையினருடன் முடங்கிப்போய், உடைந்து, திகில் அடைந்தவர்களாயினர்.

கடந்த ஆண்டில் 5,500 க்கும் மேலான படையினர்கள் தங்களை தாங்களே மாய்த்துக் கொண்டு விட்டனர் மற்றும் செயலூக்கமான இராணுவப் பணியில் தற்கொலைகள் 2018ல் அமெரிக்க இராணுவத்தில் மட்டும் 138 ஆக, அதுவும் எல்லா காலத்தையும் விட உயர்வானதாக இருந்தது.

வெளியுறவுத் தொடர்புகள் பற்றிய குழுவால் 2018ல் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று, ஆண்டுக்கு 38,400 டாலருக்கும் குறைவான வருமானம் உள்ள குடும்பங்களிலிருந்து இராணுவத்திற்கு எடுக்கப்பட்ட படையினர்கள் 19 சதவீதம் எனக் கண்டறிந்தது. 60 சதவீதத்திற்கும் அதிகமான ஆட்சேர்ப்பு, 61,403 டாலருக்கும் குறைவான ஆண்டு வருமானம் உடைய குடும்பங்களிலிருந்தும், 80 சதவீதத்திற்கும் மேலானவர்கள் 80,912 டாலருக்கும் குறைவான ஆண்டு வருமானம் உடைய குடும்பங்களிலிருந்தும் வந்துள்ளனர் என்று கண்டறிந்தது. ஆய்வானது, இந்த போர்களில் பங்கேற்ற முதல் உயர் 5 சதவீதத்தினர் அல்லது உயர் 1 சதவீதத்தினரது மட்டங்களைக் காட்டவில்லை. ஆனால் அவர்கள் ஒரு சிறிய சிறுபான்மையினராக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

டுவிட்டரில் தீட்டிய அமெரிக்க இராணுவத்தின் பல கருத்துரையாளர்கள், 1933ல் புகழ்பெற்ற வகையில் ஒப்புக்கொண்ட மேஜர் ஜெனரல் Smedley Butler இன் கருத்துக்களைக் குறிப்பிட்டனர், “போர் என்பது ஏவுகணை போல. உள்ளே உள்ள சிறு குழுதான் இது என்ன என்பதை அறியும். அது பரந்த மக்களைப் பலியிட்டு வெகு சிலரின் நலன்களுக்காக நடத்தப்படுகிறது.”

அமெரிக்காவிலும் சர்வதேச ரீதியாகவும் தொழிலாளர்கள் மத்தியில் போருக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. ஆயினும், மற்ற ஒவ்வொரு அரசியல் பிரச்சினை போலவே, மக்களின் பரந்த பெரும்பான்மையினரின் உண்மையான நலன்கள் உத்தியோகபூர்வ அரசியல் வாழ்க்கையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளன.

2003 ஈராக் படையெடுப்புக்கான தயாரிப்பின்போது, இந்த உணர்வானது உலகம் முழுவதிலும் உள்ள மில்லியன் கண்கான மக்களிடமிருந்து பரந்த ஆர்ப்பாட்டங்களில் வெளிப்பாட்டைக் கண்டது. ஈராக் போருக்கான எதிர்ப்பானது ஜனநாயகக் கட்சியின் பின்னே திருப்பிவிடப்பட்டு, 2008ல் பராக் ஒபாமாவை தேர்வு செய்ததில் அது உச்சத்தைத் தொட்டது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற புஷ் நிர்வாகத்தின் திட்டத்தை நீட்டித்து, ஒபாமா லிபியா மற்றும் சிரியா உட்பட ஏழுக்கும் அதிகமான நாடுகளில் தாக்குதல் நடத்தினார் மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல் மூலம் ஆயிரக்கணக்கான அப்பாவிக் குடிமக்களைக் கொன்றார்.

ட்ரம்ப் நிர்வாகமானது தற்போது 1500 துருப்புக்களை மத்திய கிழக்குக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது மற்றும் ஈரானின் “முடிவு” பற்றி அச்சுறுத்துகிறது. அவரது நிர்வாகம் அறிவித்துள்ள “வல்லரசு” மோதல் கொள்கை, உலகை மூன்றாம் உலகப் போருக்குள் தள்ளும் வகையில், ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிரான பெரிய அளவிலான மோதலையும்கூட தயார் செய்துவருகிறது.

2017ல், ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழுள்ள படையினர் விவகாரத் துறையானது சுகாதார பராமரிப்பை தனியார்மயப்படுத்தும் முயற்சியில் 1100 க்கும் அதிகமான வசதிகளை மூடிவிட முன்மொழிந்துள்ளது. 2020 வரவு-செலவு திட்டத்தில் படையினர் விவகாரத்திற்கு 220 பில்லியன் டாலர்களே ஒதுக்கப்பட்டன, ஆனால் 718 பில்லியன் டாலர்களுக்கு மேல் பென்டகனால் கோரப்பட்டது, இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 5 சதவீதம் அதிகமானது. இந்தப் போக்கு தொடர்ந்தால், அடுத்த பத்தாண்டில் போருக்கு 7 ட்ரில்லியன் டாலர்களுக்கும் மேலாக செலவழிக்க நேரும்.

மேலும் ட்ர்ம்ப் நிர்வாகமானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை அம்பலப்படுத்தியற்காக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்க்கு எதிரான பிரச்சாரத்தை ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன், உக்கிரப்படுத்தி வருகிறது.

ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்ப்பிற்கான எதிர்ப்பை, அவரது நிர்வாகமானது ரஷ்யாவிற்கெதிரான மிக மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை ஏற்க வேண்டும் மற்றும் சிரியா மற்றும் மத்திய கிழக்கில் போரை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில்தான் பெரும்பாலும் முன்வைக்கின்றனர். ஜனநாயகக் கட்சியினர் இராணுவம் மற்றும் உளவுத்துறை முகமைகளின் கட்சிகளாக தங்களை நிலைநிறுத்த முற்பட்டுள்ளனர், குடியரசுக் கட்சி செனெட்டர் காலஞ்சென்ற பரம போர்வெறியரான ஜோன் மெக்கெயின் ஐ நாயகன் என்று பாராட்டிப் புகழ்கின்றனர்.

ஜனநாயகக் கட்சியை சுற்றியுள்ள உயர் நடுத்தர வர்க்கத்தின் அமைப்புக்களும் மற்றும் சலுகை மிக்க நடுத்தர வர்க்கமும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிடிவாதமிக்க ஆதரவாளர்களாக மாறியுள்ளனர்.

அமெரிக்க இராணுவத்தின் டுவீட்டிற்கான பதிலில் வெளிப்படுத்தப்பட்ட உணர்வுகள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வடிவத்தை எடுத்தாக வேண்டும் மற்றும் எடுக்கும். போருக்கு எதிரான பரந்த எதிர்ப்பானது சமத்துவமின்மைக்கும் சுரண்டலுக்கும் எதிராக அமெரிக்காவிலும் சர்வதேச ரீதியாகவும் வளர்ந்து வரும் தொழிலாளர் போராட்டங்களுடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். சோசலிசத்திற்கான வளர்ந்து வரும் ஆதரவு ஏகாதிபத்தியத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிரான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு நனவான அரசியல் இயக்கத்துடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும்.