ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan workers need a socialist program to defeat Colombo’s police-state preparations

கொழும்பின் பொலிஸ்-அரசு தயாரிப்புக்களை தோற்கடிக்க இலங்கை தொழிலாளர்களுக்கு ஒரு சோசலிச வேலைத்திட்டம் தேவை

By the Socialist Equality Party (Sri Lanka) 
12 June 2019

ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களை அடுத்து இலங்கையின் ஆளும் தட்டின் பல்வேறு பிரிவுகளுக்கும் அரசாங்கத்தின் மூன்று பிரதான தூண்களுக்கும் —அரசியலமைப்பு, நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறைக்கும்— இடையே ஒரு அரசியல் யுத்தம் வெடித்ததுள்ளது.

கிட்டத்தட்ட 300 பேரைக் கொன்ற, 500 க்கும் அதிகமானோரை காயப்படுத்திய தற்கொலைத் தாக்குதல்களை, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு உள்ளூர் இஸ்லாமிய அடிப்படைவாத தேசிய தவுஹீத் ஜம்மாத் (NTJ) குழுவுடன் ஒருங்கிணைந்து நடத்தியிருந்தது.

குண்டுவெடிப்பு தொடர்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாராளுமன்ற தெரிவுக் குழுவின் விசாரணைக்கு வழங்கப்பட்ட சாட்சிகள், அரசியல் தலைவர்களுக்கும் மற்றும் பொறுப்பான பாதுகாப்பு ஸ்தாபகத்திற்கும் நன்கு தெரிந்தே இந்த தாக்குதல்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்பதை அம்பலப்படுத்தியுள்ளன.

கடந்த வெள்ளியன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து, பாராளுமன்ற தெரிவுக் குழுவின் விசாரணை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று கோரியதுடன், விசாரணை அவரை அவமதிப்பதை நோக்கமாக கொண்டுள்ளதாக அறிவித்தார்.

பாராளுமன்ற விசாரணையானது தேசிய பாதுகாப்பை சீர்குலைப்பதோடு பயங்கரவாத தாக்குதல்கள் சம்பந்தமாக ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற வழக்குகள் அதன் மூலம் மதிப்பீடு செய்யப்படுவதாக அமைகின்றது என்று சிறிசேன கூறிக்கொண்டார். பின்னர் அவர் அமைச்சரவை கூட்டங்கள் உட்பட அனைத்து அரசாங்க நடவடிக்கைகளையும் புறக்கணிப்பதாக அச்சுறுத்தியதோடு, பின்னர் தான் தனியாக வேலை செய்யப்போவதாக கூறினார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சரவை அமைச்சர்களும் சிறிசேனவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தனர். பாராளுமன்ற சபாநாயகர் அலுவலகம் ஒரு பத்திரிகை அறிக்கையை வெளியீட்டு தெரிவித்ததாவது: "நிலையான கட்டளைகளின் கீழ் பாராளுமன்ற தெரிவுக் குழுவை நியமித்த பாராளுமன்றத்திலேயே பத்திரிகையாளர்களை அனுமதிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது. பாராளுமன்றத்திற்கு முடிவு எடுக்கும் அதிகாரமும் உள்ளது.”

எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த இராஜபக்ஷ தலைமையிலான ஆளும் உயரடுக்கின் மற்றொரு பிரிவும் பாராளுமன்ற தெரிவுக் குழுவை எதிர்த்ததோடு தேசிய பாதுகாப்பு தகவல்களை பகிரங்கமாக வெளிப்படுத்துவதாக குற்றம்சாட்டியது.

இலங்கையின் போட்டி கன்னைகள் மற்றும் பாதுகாப்புக் கருவிகளும் "தேசிய பாதுகாப்பு" பற்றிய காட்டும் கவலை, பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்துவது பற்றியது அல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்திற்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிராக சதி செய்வதற்கு தங்களுக்கு உள்ள "உரிமையை" பாதுகாப்பது பற்றியதாகும். சிறிசேன, விக்கிரமசிங்க மற்றும் இராஜபக்ஷவும் பயங்கரவாத தாக்குதல்கள் சம்பந்தமாக தங்களின் சொந்த குற்றம் பகிரங்கமாக அம்பலப்படுத்தப்படுவதை பற்றி அச்சமடைந்து, ஒருவருக்கொருவர் கடுமையாக குற்றம் சாட்டிக்கொள்கின்றனர்.

உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தாக்குதல்கள் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதோடு, ஒரு இந்திய புலனாய்வு நிறுவனத்தால் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் வெளிப்பட்டுள்ளன. சிறிசேன, விக்கிரமசிங்க மற்றும் ஏனையவர்களுக்கும் நடக்கவுள்ள குண்டுத் தாக்குதல்கள் பற்றி அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர்கள் தங்களது சொந்த பிற்போக்கு நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்காக அதை அனுமதித்துள்ளனர். இருப்பினும், இந்த நிலைமை திருப்பித் தாக்கி, அரசியல் நெருக்கடியை அவர்கள் எதிர்த்ததை விட இன்னும் கடுமையாக உக்கிரப்படுத்தியுள்ளது.

கடந்த வார சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் கூறியதாவது: “முன்னாள் பாதுகாப்பு செயலாளர், முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் தேசிய புலனாய்வுத் துறைத் தலைவரும் பாராளுமன்ற தேர்வுக் குழுவின் முன்னால் கடந்த சில நாட்களாக வழங்கிய சாட்சிகள் அந்தளவுக்கு நாட்டை உலுக்கியுள்ளது. அது இந்த நடவடிக்கை மீதான நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது; அதனால் அதிகாரப் பொறுப்பு மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்வதில் உள்ள இயலுமை மற்றும் திறமையையும் –அல்லது குறைபாடு- கேள்விக்குள்ளாக்கியுள்ளது."

அதன் வரலாறு காட்சிப்படுத்தியுள்ளவாறு, முதலாளித்துவ ஆட்சியை பாதுகாக்க இலங்கையின் ஆளும் வர்க்கம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எதை வேண்டுமானாலும் செய்யும். இலங்கையில் 1953 இல் நடந்த ஹர்த்தால் என்று அழைக்கப்படும் வெகுஜன வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் போது கிளர்ச்சி செய்த தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். வடக்கிலும் கிழக்கிலும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கிட்டத்தட்ட 30 ஆண்டுகால கொழும்பின் யுத்தத்தில், பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 1988-1990 இல் தீவின் தெற்கில் 60,000 சிங்கள கிராமப்புற இளைஞர்கள் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.

அமெரிக்க தலைமையிலான "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" மற்றும் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியா மீதான அதன் ஆக்கிரமிப்புக்களை இலங்கையின் அரசியல் ஸ்தாபகம் ஆர்வத்துடன் ஆதரித்தது. எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் ஆதிக்கம் செலுத்துவதற்கான இந்த யுத்தங்களில் மில்லியன் கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன.

அவர்களது தந்திரோபாய வேறுபாடுகளுக்கு அப்பால், இலங்கை முதலாளித்துவத்தின் அனைத்துப் பிரிவுகளும், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த இனவாதத்தை பயன்படுத்துவதிலும் ஒரு பொலிஸ்-அரசை ஸ்தாபிப்பதற்கான நகர்விலும் ஒற்றுமையாக உள்ளன.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து நடந்த வட்ட மேசை கலந்துரையாடலில் அனைத்து பாராளுமன்றக் கட்சிகளும் பங்கு பற்றியதோடு, நாடு முழுவதும் அவசரகால ஆட்சியையும் அடக்குமுறை நடவடிக்கைகளையும் திணிக்க ஆதரவளித்தன. இப்போது இவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளன. நீவானின் பிடி ஆணையின்றி தனிநபர்களை கைதுசெய்து தடுத்து வைப்பதற்கு அனுமதிக்கும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தையும் சிறிசேன மீண்டும் அமுல்படுத்தியுள்ளார்.

2009 இல் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், இப்போது இந்த அதிகாரங்களுடன், பல பத்தாயிரக்கணக்கான படைகளும் மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் நாடெங்கிலும் பெரும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு கண்காணிப்பு வலையமைப்பு ஒன்று வேலைத் தளங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் மூன்றாம் கல்வி நிறுவனங்களிலும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் புதிய "பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள்" தயாரிப்பில் உள்ளன. "பொய்யான செய்திகளை" தடுத்தல் என்ற சாக்குப் போக்கின் கீழ், இலங்கையில் இணையம் மற்றும் சமூக ஊடக பிரவேசத்தின் மீதான முன்னைய கட்டுப்பாடுகளை நிரந்தரமாக்குவதற்கான நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஆளும் மற்றும் எதிர் கட்சிகளும் செய்தி ஊடகங்களின் உதவி மற்றும் உடந்தையுடன் திட்டமிட்ட இஸ்லாமிய பீதியை ஊக்குவித்து வருகின்றன. இந்த திட்டமிட்ட பிரச்சாரம் ஏற்கனவே நாட்டின் சிறுபான்மை முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையை விளைவாக்கியுள்ளது. இதனால் ஒருவர் கொல்லப்பட்டு, பலர் காயமடைந்துள்ளதோடு பரவலாக சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்களை பாதுகாப்பு படையினர் கண்டும் காணாதது போல் இருந்துவிட்டனர்.

முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அரச படைகளின் தலைமையின் கீழ், பொது பல சேனா மற்றும் சிஹல ராவய போன்ற தீவிர அதிவலதுசாரி பெளத்த பிக்குகளும் சிங்கள இனவாத குழுக்களும் பலம் பெறுகின்றன. கடந்த வாரம் முஸ்லீம் சமூகத்திற்கு எதிரான அதிகரிக்கப்பட்ட வன்முறை அச்சுறுத்தலுக்கு பிரதிபலிக்கும் வகையில் ஒன்பது முஸ்லிம் அமைச்சர்களும் தங்கள் பதவிகளில் இருந்து விலகினர்.

முஸ்லீம்-விரோத பேரினவாதத்தின் நோக்கம், தொழிலாள வர்க்கத்தை இன ரீதியாக பலவீனப்படுத்தி, பிரித்து, பொலிஸ்-அரச ஆட்சிக்கான நிலைமைகளை உருவாக்குவதாகும். இலங்கையில் வரலாறு இன்னும் கொடூரமான முறையில் தன்னை மீண்டும் வெளிப்படுத்துகிறது. தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக மூன்று தசாப்தகால இனவாத போரை நடத்தியதன் மூலம், இலங்கை ஆளும் வர்க்கம் மக்களுடைய சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை கிழித்தெறிய முஸ்லீம்-விரோத உணர்வை தூண்டிவிட முற்படுகிறது.

இலங்கை ஆளும் வர்க்கத்தின் பிற்போக்கு திருப்பமானது சர்வதேச அபிவிருத்திகளின் சூழலில் மட்டுமே புரிந்து கொள்ளப்பட முடியும். உலக சோசலிச வலைத் தளம் இந்த ஆண்டு ஜனவரி 3 அன்று விளக்கியவாறு: "1930களில் இருந்ததைப் போல், அனைத்து நாடுகளின் முதலாளித்துவ உயரடுக்குகளும் தமது இராணுவ மற்றும் பொலிஸ் அரச எந்திரத்தை கட்டியெழுப்புவதுடன் சமூக பதட்டங்களை திசைதிருப்பவும் தனது ஆட்சியை பாதுகாத்துக்கொள்ளவும் தீவிர தேசியவாதம் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான இனவெறியை தூண்டுகின்றன..."

"ஆனால் மற்றொரு சமூக சக்தியானது இப்போது அரசியல் அரங்கில் நுழைந்துள்ளது. மிக நீண்ட காலமாக அடக்குமுறைக்கு உட்பட்ட மற்றும் ஓரங்கட்டப்பட்டிருந்த தொழிலாள வர்க்கம், தனது சொந்த சுயாதீன நலன்களை வலியுறுத்தத் தொடங்குகிறது. பிரான்ஸ் அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவிலான வெகுஜன சமூக போராட்டங்களின் வெடிப்பு, ஒரு புதிய புரட்சிகர காலத்தின் தொடக்கத்தை அடையாளம் காட்டுகிறது. "(2019 இல் சர்வதேச வர்க்கப் போராட்டத்திற்கான மூலோபாயமும் முதலாளித்துவ பிற்போக்குத்தனத்திற்கு எதிரான அரசியல் போராட்டமும்).

தீவு முழுவதும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் அமைதியின்மை வளர்வதைக் கண்டு இலங்கை ஆளும் வர்க்கம் பீதியடைந்துள்ளது. இது வாழ்க்கை நிலைமைகள் மீதான பெருகி வரும் தாக்குதல் சம்பந்தமாக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பும் விரோதமும் தலைதூக்கி வருவதன் ஒரு வெளிப்பாடாகும்.

2015 ஜனவரியில், அதிகாரத்தில் இராஜபக்ஷ ஆட்சிக்கு எதிராக வளர்ச்சி கண்டு வந்த வெகுஜன எதிர்ப்பின் மத்தியில், போலி இடதுகள், தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் மத்தியதர வர்க்கத்தின் பிரிவுகளின் முழு ஆதரவுடன் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தது. ஜனாதிபதியாக இருந்த இராஜபக்ஷவை அகற்றுவதற்காக அமெரிக்காவால் திட்டமிடப்பட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையின் நோக்கம் சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் போர் தயாரிப்புகளின் பாதைக்கு இலங்கையை கொண்டு வருவதே ஆகும்.

2018 இறுதியில், சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் முக்கிய பிரிவினர், கிராமப்புற ஏழைகள் மற்றும் மாணவர்களும் பெருகிய முறையில் தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் இறங்கியமை, சிறிசேன-விக்கிரமசிங்கவின் ஐக்கிய அரசாங்கத்தை முறித்துவிட்டது.

இந்த வளர்ந்து வரும் இயக்கத்தைக் கண்டு பீதியடைந்த சிறிசேன, கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் விக்கிரமசிங்கவை அகற்றி இராஜபக்ஷவை அந்தப் பதவியில் இருத்தி ஒரு பாராளுமன்ற சதியை அரங்கேற்றினார். எனினும் இராஜபக்ஷவின் வருகையை வாஷிங்டன் எதிர்த்ததோடு, பாராளுமன்றத்தை கலைக்கும் சிறிசேனவின் அவநம்பிக்கையான நடவடிக்கையை அரசியலமைப்புக்கு முரணானது என உச்சநீதிமன்றம் அறிவித்தது. விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு சிறிசேன நிர்ப்பந்திக்கப்பட்டார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக, இலங்கையை ஒரு முக்கிய இந்திய பெருங்கடலின் கடல் தளமாக தனது மூலோபாயத் திட்டத்திற்குள் இணைப்பதற்காக, பென்டகன் கொழும்புடன் நெருக்கமான இராணுவ உறவுகளை கட்டமைத்து வந்துள்ளது. வாஷிங்டன், ஈஸ்டர் ஞாயிறன்று ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தைப் பின்பற்றி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கான உடனடி பிரதிபலிப்பாக எஃப்.பி.ஐ. முகவர்களை "புலன்விசாரணை செய்ய" அனுப்பி வைத்தது. இப்போது வாஷிங்டன், பயங்கரவாத-எதிர்ப்பு நவடிக்கைகளுக்கு "உதவுதல்" என்ற பெயரில், துருப்புக்களை நிரந்தரமாக நிலைநிறுத்துவதற்கு ஒரு "படை நிறுத்தல் உடன்படிக்கையை" ஏற்படுத்திகொள்ள நெருக்கி வருகின்றது.

உலகளாவிய பொருளாதாரத்தின் ஆழமடைந்துவரும் நெருக்கடி இலங்கையில் பாரியளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு சர்வதேச மூலதனத்தின் கொள்ளையடிப்பு கோரிக்கைகளை துரிதமாக செயல்படுத்த கொழும்புக்கு மேலும் மேலும் அழுத்தம் கொடுக்கின்றது.

கடந்த வருடம், கடன்பத்திர சேவை அரசாங்க வருவாயில் 108 சதவீதத்தை உறிஞ்சியது. சர்வதேச நாணய நிதியமானது நிதியப் பற்றாக்குறையை குறைப்பதற்காக, சமூக செலவினங்களில் பெரும் வெட்டுக்கள், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், மேலும் மலிவு ஊதியங்களை சுமத்துதல் ஆகியவற்றை முன்னெடுக்க கோருகின்றது. ஒரு ஈவிரக்கமற்ற வர்க்க-யுத்த தாக்குதல் மற்றும் சர்வாதிகார வழிமுறைகளை முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே இந்த கோரிக்கைகளை அமுல்படுத்த முடியும்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து இலங்கை சமூகங்களின் முதலாளித்துவக் கட்சிகள் இந்த கொடூரமான நிகழ்ச்சி நிரலில் எந்த முரண்பாட்டையும் கொண்டிருக்கவில்லை.

வருங்காலத்தில் நடக்க கூடிய பயங்கரவாத தாக்குதல்கள் பற்றிய ஆதாரமற்ற கூற்றுக்களை பயன்படுத்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, இப்போது நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தை திரும்பப் பெறவேண்டாம் என்று கோருகிறது. இதேபோல், கொழும்பு ஸ்தாபகத்தின் மற்றொரு கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) "இஸ்லாமிய தீவிரவாதத்தை" ஒடுக்குவதற்கு முழு ஆதரவு கொடுக்கின்றது.

நவ சம சமாஜக் கட்சி (ந.ச.ச.க.), முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சி (ஐ.சோ.க.) உள்ளிட்ட இலங்கை போலி இடது குழுக்கள், ஏப்ரல் 21 நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் சம்பந்தமான பிரதிபலிப்பில் வலதுபுறம் நகர்ந்து, ஆளும் உயரடுக்கின் "அதிதீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்துக்கான" அழைப்பை முழுமையாக அரவணைத்துக்கொண்டுள்ளன.

தொழிற்சங்கங்கள், தமது பங்கிற்கு, தொழிலாளர்களின் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை கைவிட்டதுடன் போர்க்குணமிக்க தொழிலாளர்களை உளவுபார்க்க பயன்படுத்தப்படும் "பாதுகாப்புக் குழுக்கள்" எனப்படுவதை அமைப்பதற்கும் ஆதரவளிக்கின்றன.

கொழும்பிலான அரசியல் நெருக்கடி, இராணுவ-பொலிஸ் ஆட்சி வடிவத்தை நோக்கிய நகர்வுக்கு எதிராக, அனைத்து உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக, தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக தீர்க்கமாகத் தலையீடு செய்ய வேண்டியதைக் கோருகிறது. தொழிலாள வர்க்கம், தொழிலாளிக்கு எதிராக தொழிலாளியை நிறுத்துகின்ற அனைத்து வகையான தேசியவாதத்தையும், பேரினவாதத்தையும் நிராகரிக்கப்பதோடு, அவசரகால ஆட்சி மற்றும் அனைத்து ஒடுக்குமுறை சட்டங்களையும் அகற்றக் கோர வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக தனது சொந்த நடவடிக்கைக் குழுக்களை வேலைத் தளங்களிலும் பெருந்தோட்டங்களிலும் மற்றும் தொழிலாள வர்க்க குடியிருப்புகளிலும் அமைத்துக்கொள்வதோடு கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்களதும் ஆதரவை வெற்றிகொள்ளவும் வேண்டும் என தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விடுகிறது.

முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பு முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம் மட்டுமே, அரசியல் பிற்போக்கைத் தோற்கடித்து இல்லாமல் செய்ய முடியும். அதாவது வங்கிகள், பெருந்தோட்டங்கள் மற்றும் பெரும் வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதோடு, அனைத்து வெளிநாட்டு கடன்களையும் இரத்து செய்வதுடன் ஏகாதிபத்திய இராணுவ எந்திரத்தை முழுமையாக வெளியேற்றுவதுமாகும்.

சர்வதேச சோசலிசத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த போராட்டம் அபிவிருத்தி செய்யப்பட முடியும் -அதாவது தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிச குடியரசு ஒன்றியங்களுக்கான போராட்டத்தின் பாகமாக, தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்திற்கான போராட்டமாகும். இதுவே சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டமாகும். தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களை சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து, இந்த முன்னோக்கிற்காக போராடுவதற்கு கட்சியை ஒரு வெகுஜன புரட்சிகரக் கட்சியாக கட்டியெழுப்புமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.