ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Mass protests as Trump visits the UK

The fight against Trump must become the struggle for socialism

ட்ரம்ப் பிரிட்டனுக்கு விஜயம் செய்கையில் பாரிய போராட்டங்கள்

ட்ரம்புக்கு எதிரான போராட்டம் சோசலிசத்திற்கான போராட்டமாக ஆக வேண்டும்

Chris Marsden
4 June 2019

பிரிட்டன் எங்கிலும் பத்தாயிரக் கணக்கானோர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அரசு விஜயத்தை எதிர்த்து வருகின்றனர்.

உத்தியோகபூர்வ பகட்டாரவாத காட்சிகள் மற்றும் துதிபாடல்களின் குமட்டல் உண்டாக்கும் காட்சிப்படுத்தல், ட்ரம்புக்கும் அவர் உருவில் வெளிப்படும் பாசிசவாத அரசியலுக்கும் மக்களிடையே பெருகி வழியும் விரோதத்துடன் கூர்மையாக முரண்பட்டு நிற்கின்றன. ட்ரம்ப் பிரதம மந்திரி தெரேசா மே யை இன்று சந்திக்கவிருக்கின்ற நிலையில், இலண்டனில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்று எதிர்பார்க்கப்படுகிறது, அத்துடன் ஏனைய போராட்டங்களும் நாடெங்கிலுமான சிறுநகரங்கள் மற்றும் நகரங்களில் நடந்து வருகின்றன.


இலண்டனில் 10 டவுனிங் தெருவில், ஜூன் 4, 2019 அன்று பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரெசா மே உடன் ஒரு கூட்டு பத்திரிகையாளர் மாநாட்டில் ஜனாதிபதி டொனால்ட் ஜே. டிரம்ப் பங்கேற்கிறார். (உத்தியோகபூர்வ வெள்ளை மாளிகையின் புகைப்படம் ஷீலா கிரெய்க்ஹே மூலம்)

மில்லியன் கணக்கானவர்களைப் பொறுத்த வரையில், பில்லியனர்களின் பிரமாண்டமான செல்வசெழிப்புடனும், சமூக நல வழிவகைகளை வெட்டுவதுடனும், புலம்பெயர்ந்தோர்-விரோத மற்றும் முஸ்லீம்-விரோத இனவாதத்துடன் ட்ரம்ப் தொடர்புபட்டுள்ளார். அவர், பிரான்சில் மரீன் லு பென், இத்தாலியில் மத்தேயோ சல்வீனி, ஹங்கேரியில் விக்டொர் ஓர்பன் மற்றும் பிரிட்டனில் பிரெக்ஸிட் கட்சி தலைவர் நைஜல் ஃபாராஜ் போன்ற பிரமுகர்களில் பிரதிநிதித்துவம் செய்யப்படும், உலகந்தழுவிய அதிவலதினது மீளெழுச்சியின் தலைமை பிரதிநிதியாக விளங்குகிறார்.

சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் எதிராக ட்ரம்பின் அச்சுறுத்தல்களால் முன்னெடுக்கப்படுகின்ற, அதிகரித்து வரும் போர் அபாயம் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக தொழிலாளர்களும் இளைஞர்களும் எதிர்த்து போராட விரும்புகின்றனர். ஆனால் எதிர்விரோத முதலாளித்துவ அதிகாரங்கள் மற்றும் கட்சிகள் அனைத்தும் கூர்மையாக பாதுகாப்புவாத நடவடிக்கைகள், மீள்ஆயுதமயப்படுத்தல் மற்றும் எதேச்சதிகாரத்தைநோக்கி திரும்பி வருகின்ற நிலையில், அதுபோன்றவொரு போராட்டத்திற்கான முன்நிபந்தனையானது அவற்றுடன் ஒரு கூட்டணி அமைப்பதற்கான அனைத்து அழைப்புகளையும் நிராகரிக்கிறது.

புலம்பெயர்வு கொள்கை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ட்ரம்பின் தாக்குதல்களுக்காக, ட்ரம்பை எதிர்ப்பதாக அரசியல் வட்டாரத்தின் முன்னணி பிரமுகர்கள் கூறிக் கொள்கின்றனர். கன்னை உள்மோதல்கள் நிறைந்த தொழிற் கட்சிக்குள்ளே உள்ள கடுமையான எதிர்விரோத சக்திகள் கூட அவை "ட்ரம்புக்கு எதிராக ஒன்றுதிரள" பாசாங்கு செய்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதியின் "இனவாத மற்றும் வெறுப்பு நிறைந்த வாய்சவடால்" காரணமாக ட்ரம்பைக் கௌரவிக்கும் நேற்றைய அரசு விருந்தில் அவர் கலந்து கொள்ளப் போவதில்லை என்று தொழிற் கட்சி தலைவர் ஜெர்மி கோர்பின் ஏப்ரலில் அறிவித்திருந்தார். அவர் இன்று இலண்டனில் நடக்கவுள்ள போராட்டத்தில் உரையாற்ற உள்ளார். நிழலமைச்சரவையின் வெளியுறவு செயலர் எமிலி தோர்ன்பெர்ரி ட்ரம்பை ஒரு "இனவாத பாலியல் வேட்டைதாரி" என்று முத்திரை குத்தினார். இலண்டன் நகரச்சபை தலைவர் சாதிக் கான், அதிவலதிடமிருந்து "அதிகரித்து வரும் உலகளாவிய அச்சுறுத்தலின் படுமோசமான முன்னுதாரணங்களில் ஒருவருக்கு" எதிராக அவர் நிலைப்பாட்டை அறிவித்தார்.

இவை பெரிதும் வெற்றுரைகள் தான். விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜின் எதேச்சதிகார கைது சித்திரவதைக்கு வழிவகுக்கும் என்று ஐ.நா. வரையறுக்கின்ற நிலைமைகளின் கீழ், அதற்கு அவர்கள் உடந்தையாய் இருப்பதே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முன்னால் இந்த பிரமுகர்கள் சரணாகதி அடைவதைத் தெளிவுபடுத்துகிறது. உலகின் பிரதான அரசியல் கைதி அடைத்து வைக்கப்பட்டுள்ள அந்நகரின் நகரசபை தலைவர் கான் அதுகுறித்து எதுவும் குறிப்பிடவே இல்லை, அதேவேளையில் கோர்பின் மற்றும் தோர்ன்பெர்ரி அவரை ஸ்வீடனிடம் கைமாற்றுவதற்கு அழைப்புவிடுத்து அசான்ஜ் மீதான வேட்டையாடலுக்குப் பின்னால் அணிவகுத்துள்ளனர்.

பெருவணிகங்களின் சதிகார பிரதிநிதிகளாக இருக்கும் அவர்களுக்கு, உத்தியோகபூர்வ அரசியல் இன்னும் கூடுதலாக வலதுக்கு நகர்கின்ற நிலையிலும் பெருந்திரளான மக்களின் அரசியல் உணர்வு கூர்மையாக இடதுக்கு நகர்ந்து வருகிறது என்பது நன்றாகவே தெரியும் என்ற இந்த உண்மையைத் தான் அவர்களின் ட்ரம்ப்-எதிர்ப்பு வாய்சவுடால் எடுத்துக்காட்டுகிறது. ட்ரம்புக்கான அவர்களின் எதிர்ப்பில் எந்தவிதமான கோட்பாட்டு உள்ளடக்கமும் இல்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையே, அனைத்திற்கும் மேலாக ஜேர்மனிக்கு இடையே, பதட்டங்கள் முறியும் புள்ளியில் உள்ள நிலைமைகளின் கீழ், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நலன்களை எந்தளவுக்குச் சிறப்பாக பாதுகாப்பது என்பது தான், ட்ரம்ப் மற்றும் பிரிட்டனுக்குள் உள்ள அவரின் கூட்டாளிகள் உடனான அவர்களின் மோதலில் உள்ள நிஜமான கருப்பொருளாகும்.

பிரிட்டன் வெளியேறுவதை ஆதரிக்கும் டோரிக்கள், பிரெக்ஸிட் கட்சி மற்றும் சோசலிஸ்ட் கட்சி போன்ற அவர்களின் "இடதிலிருந்து வெளியேறும்" அனுதாபிகள், சோசலிச தொழிலாளர் கட்சி, Counterfire மற்றும் ஜோர்ஜ் கலோவே போன்ற தனிநபர்கள் 2016 சர்வஜன கருத்து வாக்கெடுப்பை ஏற்றுக் கொள்ளும் "நிஜமான ஜனநாயகவாதிகளாக" தங்களைக் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் ஐரோப்பாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கூட்டணியை மீளப்பலப்படுத்த வேண்டும் என்பதே பிரெக்ஸிட் இன் நிஜமான திட்டநிரல் என்பதை ட்ரம்ப் தெளிவுபடுத்தி உள்ளார்.

எல்லைக்கு இணங்கிய விதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முறித்து கொள்வதற்கான ஒரு வழிவகையாக ட்ரம்ப் 2016 இல் பிரெக்ஸிட் ஐ அரவணைத்தார். சீனா மற்றும் ரஷ்யாவுக்குப் பக்கவாட்டில் ஐரோப்பாவை அமெரிக்க மேலாதிக்கத்திற்கு ஒரு புவிசார்-மூலோபாய அச்சுறுத்தலாக நிறுத்தி, ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு "எதிரியாக" அவர் வர்ணித்தார். அவர் இவ்வார அரசு விஜயத்திற்கு முன்னதாக, பழமைவாத கட்சியின் தலைவராகவும் பிரதம மந்திரியாகவும் மே ஐ பிரதியீடு செய்ய கடுமையாக வெளியேறுவதை ஆதரிக்கும் பிரெக்ஸிட் ஆதரவாளரான போரிஸ் ஜோன்சனை ஆதரித்தும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் முறித்துக் கொள்வதன் மீது பேச்சுவார்த்தைகள் நடத்த ஃபாராஜிற்கு அழைப்பு விடுத்தும், ரூபோர்ட் முர்டோச்சின் Sun மற்றும் Sunday Times இல் மீண்டும் பிரெக்ஸிட் குறித்து பேசியிருந்தார்.

பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு பின்வருமாறு ஆலோசனை வழங்கி, ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கிய அவரின் பகைமையை ட்ரம்ப் தெளிவுபடுத்தினார்: “அவர்களுக்குத் தேவையானது அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்றால், நானாக இருந்தால் வெளியேறி விடுவேன்,” என்றார். அமெரிக்கா உடனான ஒரு வர்த்தக உடன்படிக்கை ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தத்தில் ஏற்படும் பிரிட்டனுக்கான எந்தவொரு இழப்பையும் அதிகமாகவே ஈடுசெய்யும் என்றும், அது ஓராண்டை விட "மிகவும் விரைவாக" அது முடிவு செய்யப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார். “பிரிட்டனுடன் ஒரு நம்பகமான வர்த்தக பங்காண்மை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறு நம்மிடம் உள்ளது... அது ஐரோப்பிய ஒன்றியத்தை விட மிகவும் பெரிதாக இருக்குமென நினைக்கிறேன்,” என்றவர் அறிவித்தார்.

ட்ரம்ப் பின்னர் எச்சரிக்கையில், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துடன் சேர்ந்து "Five Eyes” வலையமைப்பின் பாகமாக அமெரிக்காவுடன் உளவுத்தகவல் பகிர்ந்து கொள்வதை, சீனாவின் ஹூவாய் உடன் அதன் 5ஜி வலையமைப்பில் செயலாற்றுவதன் மூலமாக ஆபத்துக்கு உள்ளாக்காமல் பிரிட்டன் "மிகவும் கவனமாக" இருக்க வேண்டுமென எச்சரித்தார்.

அவரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன், பிரெக்ஸிட் "நேட்டோவில் குறிப்பாக மற்றொரு பலமான சுதந்திரமான நாட்டை பெற்றிருக்க நமக்க உதவும், அது நேட்டோவை இன்னும் திறன்கூடியதாக ஆக்க உதவும் என்பதோடு, அதற்கு கூடுதல் பலமாக இருக்கும்" என்று Daily Telegraph இக்குத் தெரிவித்து, அதுபோன்றவொரு கூட்டணியின் இராணுவ பரிமாணங்களைத் தெளிவுபடுத்தினார்.

ட்ரம்ப் போர்ட்ஸ்மவுத்தில் பிரிட்டிஷ்-தலைமையிலான ஒரு நிகழ்வில் இணைந்து, ஐரோப்பாவை அலட்சியம் செய்ய புதன்கிழமை D-தின நினைவுவிழாவையும் பயன்படுத்தினார். ஜேர்மன் ஆக்கிரமித்திருந்த கண்டத்தின் மீது போர் தொடுக்க இந்த போர்ட்ஸ்மவுத்தில் இருந்து தான் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் துருப்புகள் அனுப்பப்பட்டன.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கதியை அமெரிக்காவுடன் மிகவும் நெருக்கமாக இணைப்பதன் மீதிருக்கும் எதிர்ப்புத்தான் அந்த அரசியல் பிரமுகர்களை ட்ரம்பின் ஜனநாயக எதிர்ப்பாளர்களாக தங்களைக் காட்டிக்கொள்ள உந்துகிறது. அவர்கள் அமெரிக்காவுக்கு எதிராக முழுமையாக ஜேர்மனி மற்றும் பிரான்சுக்குப் பின்னால் தங்களை அணிசேர்த்துக் கொள்ள முயலவில்லை, பிரத்யேகமாக ஐரோப்பாவுக்குள் பிணைக்கப்படுவோமோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். அதற்கு பதிலாக, ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளைப் பேணுவதற்கான அவர்களின் முயற்சிகள் மிகத் தெளிவாக ஜனநாயகக் கட்சியினரால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் அமெரிக்க ஏகாதிபத்திய பிரிவுக்கான ஒரு முறையீட்டுடன் சேர்ந்திருந்தன, இவர்கள் ட்ரம்பின் தன்னிச்சைவாதம் வாஷிங்டனின் நலன்களை அபாயத்திற்கு உட்படுத்துவதால் அதை எதிர்க்கிறார்கள்.

கார்டியன் பத்திரிகையின் இராஜாங்க விவகாரங்களுக்கான பதிப்பாசிரியர் Patrick Wintour விவரித்தார்: “1941 இல் அட்லாண்டிக் சாசனத்தில் கையெழுத்திட்டதில் இருந்து, பிரிட்டிஷ் வெளியுறவு கொள்கையின் மைய நெறிமுறை என்னவாக இருந்ததென்றால் பிரிட்டன் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படும், அல்லது அட்லாண்டிக் கடந்த நாடுகளுக்கு இடையிலான உறவுகளின் திருப்பத்திற்கு முன்னெடுப்பாளராக செயல்படும்... அமெரிக்காவுடனும் மற்றும் எதிர்கால சந்தைகளுடனான தொடர்புகளைப் பலப்படுத்துவதற்கான பேச்சுக்கள் அனைத்தையும் பொறுத்த வரையில், ஐரோப்பாவுக்கான பாலம் சரிந்து செப்பனிட முடியாத நிலை அடையும் என்ற எச்சரிக்கையை வலியுறுத்துபவர்களிலும், அமெரிக்க வர்த்தக உடன்படிக்கை ஐரோப்பிய சந்தைகளின் இழப்பை ஈடுகட்டும் என்ற ட்ரம்பின் அறிவுறுத்தலை ஏளனம் செய்பவர்களிலும் பலர் Whitehall இருக்கக்கூடும்,” என்றார்.

வெளியேறவிருக்கும் தாராளவாத ஜனநாயகக் கட்சி தலைவர் வின்ஸ் கேபிள் பைனான்சியல் டைம்ஸிற்குக் கூறுகையில், ட்ரம்ப் “அரசாங்கங்களின் 'உலகளாவிய பிரிட்டன்' எந்த மூலோபாயத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளதோ அந்த சர்வதேச விதியின் ஒழுங்கை அழிக்க அவரால் ஆன அனைத்தும் செய்து கொண்டிருக்கிறார்... இருதரப்பு வர்த்தக சமநிலைகளை அடிப்படையாக கொண்ட திரு ட்ரம்பின் குரூரமான வணிகவாதம், வர்த்தக உபரி கொண்ட பிரிட்டன் போன்ற நாடுகளுக்குப் பொருந்தாது... அவரின் குரூரமான பாதுகாப்புவாதம் உலகை அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போரின் விளிம்பில் நிறுத்தி உள்ளது, இத்துடன் ஆபத்தான நிலையில் பிரெக்ஸிட் பிரிட்டன் மோதலுக்கு இடையே சிக்கியுள்ளது,” என்றார்.

கோர்பினை, பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான "முக்கிய" உறவைக் குறித்து குறிப்பிட்டும், “நலன்கள் சம்பந்தமான எல்லா விடயங்களையும் விவாதிக்க" அவர் ஜனாதிபதி உடனான ஒரு சந்திப்பை வரவேற்பதாக குறிப்பிட்டும், ஏகாதிபத்திய வெளியுறவு கொள்கை மீதான பரிசீலனைகள், கோர்பினை ட்ரம்பின் அரசு விஜயத்திற்கு எதிரான அவர் குறைகூறல்களை மட்டுப்படுத்த இட்டுச் சென்றது. அரசில் இருந்தால், அவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் உறவுகளைப் பேணுவதற்கு என்னென்ன அவசியமோ அதெல்லாம் செய்வார், இது நேட்டோவுக்கான அவரின் பொறுப்புறுதியிலும் மற்றும் பிரிட்டனின் அமெரிக்க-கட்டுப்பாட்டிலான நிலம், நீர், வான்வழி தாக்குதல் நடத்தும் அணுஆயுத ஏவுகணை அமைப்புமுறையை விடாது தக்கவைத்திருப்பதிலும் ஊர்ஜிதப்பட்டுள்ளது.

என்ன தான் பெரும் வாய்சவடால் கூச்சல் பயன்படுத்தப்பட்டாலும், வரலாறு, அனைத்திற்கும் மேலாக 1930 களினது, என்ன நிரூபிக்கிறது என்றால் எதிர்விரோத ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான சூழ்ச்சி கொள்கைக்கு ஒரேயொரு முடிவு புள்ளி தான் இருக்கிறது. இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய "விதிகள்-அடிப்படையிலான" ஒழுங்கமைப்பு திரும்பப் பெற முடியாதவாறு முறிந்துள்ளது, இது மீண்டுமொருமுறை போர் அபாயத்தைக் கொண்டு வருகிறது. “மற்றவர்களைச் சார்ந்திருக்கும் காலம் முடிந்துவிட்டன,” என்றும், “அவசியமான களத்தில் ஐரோப்பா செயல்படும் விதத்தில் ஒரு ஐரோப்பிய தலையீட்டு பிரிவை நாம் உருவாக்க வேண்டும்,” என்றும் ஜேர்மனியின் அங்கேலா மேர்க்கெல் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

சிக்கன நடவடிக்கைகள், அதிவலதின் பிற்போக்குத்தனம் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிராக போராடுவதில் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஆளும் உயரடுக்களில் தொழிலாள வர்க்கத்திற்கு எந்த கூட்டாளியும் கிடையாது. ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், தொழிலாளர்கள் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை முகங்கொடுத்துள்ளதுடன், அனைத்து ஐரோப்பிய அரசாங்கங்களிலும் அவர்களின் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுகின்றன. ஐரோப்பாவின் பிரதான பெருநிறுவனங்களும் வங்கிகளும் அவர்களின் அமெரிக்க போட்டியாளர்களுடனும் ஏனைய போட்டியாளர்களுடனும் போட்டியிட கூடிய நிலையில் இருக்க வேண்டும், அவர்களின் இராணுவங்கள் முன்பினும் அதிக உயிர்பறிக்கும் போர் ஆயுதங்களை ஏந்தி இருக்க வேண்டும் என்பதே ஆளும் உயரடுக்கள் அனைத்தினதும் ஒரே கவலையாக உள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான சமூக மற்றும் அரசியல் தலையீட்டுக்காக நிற்கின்றன.

அமெரிக்க ஆக்ரோஷம் ரஷ்யாவையா அல்லது சீனாவையா எதன் மீது அதிகமாக ஒருமுனைப்பட்டிருக்க வேண்டும் என்பது தான் அவர்களின் கருத்து வேறுபாடுகள் என்பதை வலியுறுத்தியும், ஆளும் வர்க்கத்தில் உள்ள ட்ரம்ப்-எதிர்ப்பு கன்னையின் வெற்றி போருக்கான மாற்று வழியை மட்டுமே வழங்கும் என்று எச்சரித்தும், அமெரிக்காவில், ஜனநாயகக் கட்சி மற்றும் ட்ரம்புடன் அவர்களின் மோதலில் உள்ள குடியரசு கட்சியின் பிரிவுகளது "அரண்மனை ஆட்சிக்கவிழ்ப்பு சதி" மூலோபாயம் குறித்து சோசலிச சமத்துவக் கட்சி எச்சரித்துள்ளது.

அதிவலதின் மீளெழுச்சிக்கு எதிரான போராட்டம் ஐரோப்பிய அரசாங்கங்கள் மற்றும் அவர்களின் கொள்கைகளுக்கு எதிராக திரும்பி இருக்க வேண்டும் என்பதை ICFI இன் ஐரோப்பிய பிரிவுகள் வலியுறுத்தி உள்ளன. முதலாளித்துவத்திற்கு எதிராக பிரிட்டன், ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியமே இதன் அர்த்தமாகும்—இந்த போராட்டம் ஏற்கனவே உலகெங்கிலும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு வெடிப்பில் கட்டவிழ்ந்து வருகிறது.

லியோன் ட்ரொட்ஸ்கி வலியுறுத்தியதைப் போல, தொழிலாள வர்க்கத்தின் பணி "போர் வரைபடத்தை அல்ல, மாறாக வர்க்க போராட்ட வரைபடத்தைப் பின்தொடர" வேண்டும். இதன் அர்த்தம், ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்தை முன்னெடுக்க, ICFI இன் கட்சிகளைப் புரட்சிகர தலைமையாக கட்டமைப்பதாகும்.