ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The US and China on a collision course

ஒரு மோதல் போக்கில் அமெரிக்காவும் சீனாவும்

Andre Damon
3 June 2019

பெய்ஜிங் ஒரு பொருளாதார மற்றும் புவிசார்மூலோபாய போட்டியாளராக உயர்வதை முடக்க போர் நடத்த அது தயாராகி வருவதை அமெரிக்கா, பல்வேறு தொடர்ச்சியான ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில், தெளிவுபடுத்தி வருகிறது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான "பனிப்போர்" இந்த வாரயிறுதி வாக்கில் சிங்கப்பூரில் நடந்த வருடாந்தர ஷாங்கிரி-லா பாதுகாப்பு உச்சி மாநாட்டில் ஒரு "கொதிப்பான" போராக மாறுவதை நோக்கிய ஒரு பிரதான அடியை எடுத்தது. உயர்வுநவிற்சி அல்லாத கூற்றில் பைனான்சியல் டைம்ஸ் எழுதுகையில், “வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் மீது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே அதிகரித்து வரும் பிரச்சினை, இராணுவ மோதல் அல்லது முற்றுமுதலான போர் அபாயத்தை அதிகரித்து வருகிறது,” என்று எழுதியது.

அதுபோன்றவொரு மோதலில் குறுக்கே சிக்கி இருக்கும் பசிபிக் நாடுகளது பிரதிநிதிகள், எப்போது வேண்டுமானாலும் ஏற்படக்கூடிய ஒரு புதிய பசிபிக் போருக்கான சாத்தியக்கூறு குறித்து அந்த உச்சிமாநாட்டில் எச்சரித்தனர்.

 “ஆகவே முதலாம் உலகப் போரைப் போல மற்றொரு சர்வதேச மோதலுக்குள் கண்ணைமூடி செல்லக்கூடிய சாத்தியக்கூறே எங்களின் மிகப்பெரிய அச்சமாக உள்ளது,” என்று பிலிப்பைன்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் டெல்பின் லொரென்ஜானா தெரிவித்தார். “நமது பொருளாதார சுதந்திர வலையமைப்புகள் முறிந்து வருவது, போருக்கு இட்டுச் செல்லக்கூடிய மோதல் அபாயம் அதிகரித்து வருவதுடன் சேர்ந்து வருகிறது,” என்றார்.

சீனாவை இராணுவரீதியில் சுற்றிவளைக்கவும் மற்றும் பொருளாதாரரீதியில் அதை முடக்கவும் அமெரிக்க அதிகாரிகளின் முயற்சிகளைத் தொடர்வதற்கு அவர்கள் அந்த உச்சி மாநாட்டைப் பயன்படுத்தினர், அதனுடன் சேர்ந்து தற்காலிக அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் பாட்ரிக் ஷானஹன் அறிவிக்கையில் சீனா "இப்பிராந்தியம் எங்கிலுமான அரசுகளின் அத்தியாவசிய நலன்களுக்கு மிகப்பெரிய நீண்டகால அச்சுறுத்தலாக" இருக்கும் என்றார்.


அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பலின் தாக்கும் படைப்பிரிவு (படம்: அமெரிக்க கடற்படை)

ஒரு சில நாட்களுக்கு முன்னர் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், வெஸ்ட் பாயிண்டில் இராணுவ பட்டதாரி மாணவிகள் முன்னால் உரையாற்றுகையில், இந்த பட்ட வகுப்புகள் முடிவதற்குள் பசிபிக்கிலும், ஐரோப்பாவிலும் மற்றும் அமெரிக்காவிலும் போர் ஏற்படலாம் என்ற அனுமானத்தை வெளியிட்டார்.

“உங்கள் வாழ்வில் ஏதேனும் ஒரு சமயத்தில் நீங்கள் அமெரிக்காவுக்காக போர்க்களத்தில் சண்டையிட்டு கொண்டிருப்பீர்கள் என்பது நடைமுறையளவில் நிச்சயமானது ... வட கொரியா தொடர்ந்து சமாதானத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கையில், மற்றும் அதிகரித்தளவில் இராணுவமயப்பட்ட சீனா இப்பிராந்தியத்தில் நமது பிரசன்னத்திற்குச் சவால்விடுத்து வருகின்ற நிலையில், கொரிய தீபகற்பம் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்திய சண்டையில் உங்களில் சிலர் இணைவீர்கள். உங்களில் சிலர் ஐரோப்பாவில் சண்டையில் இணைவீர்கள். அங்கே ஆக்ரோஷமான ரஷ்யா பலவந்தமாக சர்வதேச எல்லைகளை மாற்றி வரைய முனைகிறது. உங்களில் சிலர் இந்த அரைகோளத்தில் சேவையாற்றவும் கூட அழைக்கப்படலாம்.

“அத்தகைய நாட்கள் வரும் போது, நீங்கள் துப்பாக்கிகளின் சத்தத்தை நோக்கி நகர்ந்து, உங்கள் கடமையைச் செய்வீர்கள், நீங்கள் சண்டையிட்டு ஜெயிப்பீர்கள் என்பது எனக்கு தெரியும்,” என்றார்.

அமெரிக்காவின் நடவடிக்கைகள் அசாதாரணமானரீதியில் பொறுப்பற்றதும் ஆத்திரமூட்டுவதும் ஆகும். அதன் வல்லாதிக்கத்திற்கு ஒரு சவாலை முகங்கொடுக்கையில், அது அதன் விருப்பத்திற்குச் சீனாவை அடிபணிய நிர்பந்திக்க இராணுவ படைபலம் உள்ளடங்கலாக அது வாரியிறைக்கக்கூடிய ஒவ்வொரு கருவியையும் பயன்படுத்த முயன்று வருகிறது. அதேநேரத்தில் இராணுவ வழிவகைகள் மூலமாக அதன் உலகளாவிய மேலாதிக்கக் கொடியைப் பறக்கவிடுவதற்காக, வெனிசுவேலாவில் அதன் ஆட்சி மாற்ற நடவடிக்கை மற்றும் மத்திய கிழக்கில் ஈரானை "எதிர்கொள்ள" கூடுதல் துருப்புகளை அனுப்புதல் உட்பட உலகெங்கிலும் மோதல்களை அமெரிக்கா தீவிரப்படுத்தி வருகிறது.

சீனப் பாதுகாப்புத்துறை செயலர் Wei Fenghe அவரின் சொந்த இராணுவ பிதற்றல்களைக் கொண்டு அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு விடையிறுத்தார், “இறுதி கோட்டைக் கடக்கும் அபாயத்தை யாரேனும் எடுத்தால், [மக்கள் விடுதலைப் படை] உறுதியாக நடவடிக்கை எடுக்கும் என்பதோடு, எல்லா எதிரிகளையும் தோற்கடிக்கும்,” என்றுரைத்தார். தாய்வானில் பிரிவினைவாதத்தைத் தூண்டிவிடுவதற்காக அமெரிக்காவை எச்சரித்த அவர், “யாரேனும் தாய்வானை சீனாவில் இருந்து பிரிக்க துணிந்தால், சீன இராணுவத்திற்கு வேறு வழியில்லை என்ன விலை கொடுத்தேனும் சண்டையிடும்,” என்றார்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பிளவுகள் "சீனா 2025 தயாரிப்பு" என்றழைக்கப்படும் சீன அரசு திட்டத்தில் மையமிட்டுள்ளன. இத்திட்டம், வழிவழியாக அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் மேலாதிக்கம் கொண்டிருந்த துறைகளான உயர்மதிப்பு கூட்டப்பட்ட உயர்-தொழில்நுட்ப உற்பத்திக்குள் சீனத் தொழில்துறையைக் குறிப்பிடத்தக்க அளவு விரிவாக்குவதற்கு எதிர்நோக்குகிறது.

சீன நிறுவனங்கள், சமீபத்திய தசாப்தங்களில், ரோபாடிக்ஸ், மொபைல் போன்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு உட்பட உயர்-தொழில்நுட்ப துறைகளில் கணிசமான அபிவிருத்திகளைத் செய்துள்ளன. இந்த அபிவிருத்தியானது, இந்தாண்டின் இறுதியில் உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமாக மாறி வருகின்ற சீன மொபைல் போன் மற்றும் தொலைதொடர்பு நிறுவனம் ஹூவாயின் வளர்ச்சியில் மிகவும் நேரடியாக எடுத்துக்காட்டப்பட்டது.

கடந்த மாதம், அமெரிக்கா ஹூவாயின் மென்பொருள் மற்றும் துணைபொருட்களை விற்பதிலிருந்து அமெரிக்க நிறுவனங்களுக்குத் தடைவிதித்து, ஆப்பிள் மற்றும் சாம்சுங்கிற்கு ஓர் உலகளாவிய போட்டியாளராக ஆவதிலிருந்து நடைமுறையளவில் அதை அழிக்க நகர்ந்தது. அந்நிறுவனம் ஆண்ட்ராய்ட் இயங்குத்தளத்தையும் அதனுடன் தொடர்புபட்ட சேவைகளையும் பயன்படுத்த முடியாதவாறு கூகுள் முடக்கியது, அதேவேளையில் பிராட்காம் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் ஹூவாய் உற்பத்தியைத் தொடர்வதற்கு அவசியமான அவற்றின் சிப்களை இனி அதற்கு விற்கப் போவதில்லை என்று அறிவித்தன.

இந்நகர்வு ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இரு கட்சிகளிடம் இருந்தும் பரந்த ஆதரவைப் பெற்றுள்ளது. சீனா ஓர் உலகளாவிய தொழில்நுட்பத்தில், அவ்விதத்தில் இராணுவத்திலும், அமெரிக்காவிற்கு இணையாக ஆவதில் இருந்து அதை தடுக்க வேண்டும் என்பதில் அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள் ஓர் ஒருமித்த கருத்தொருமைப்பாடு உருவாகி வருகிறது.

அமெரிக்க-சீன பதட்டங்களின் அதிகரிப்பானது தியானென்மென் சதுக்க படுகொலையின் 30 ஆம் நினைவாண்டு தினத்திலும் மேலோங்கி இருந்தது. தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் 1989 போராட்டங்களுக்கு எதிராக இரத்தந்தோய்ந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்திய Wei, அந்த போராட்டங்கள் "மத்திய அரசு நசுக்க வேண்டியளவுக்கு அரசியல் கொந்தளிப்பாக இருந்தன, அது சரியான கொள்கை தான்,” என்றார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “இதன் காரணமாக, சீனா ஸ்திரப்பாட்டை அடைந்துள்ளது, நீங்கள் சீனாவுக்கு விஜயம் செய்து பார்த்தால் வரலாற்றின் பகுதியை உங்களால் புரிந்து கொள்ள முடியும்,” என்றார்.

ஆனால் "ஸ்திரப்பாட்டின்" இந்த மூன்று தசாப்தங்கள் —சீனாவை நடைமுறையளவில் அமெரிக்கா மற்றும் உலக முதலாளித்துவத்தின் ஒரு மிகப்பெரும் மலிவு உழைப்புக்கூடமாக மாற்றியுள்ள நிலையில்— மிகப் பெரும் விலை கொடுத்தே வந்துள்ளன. சீனா ஓர் ஏகாதிபத்திய நாடல்ல. அது வெளிநாட்டு பெருநிறுவன முதலீடு மற்றும் நிதியைச் சார்ந்துள்ளது. இப்போதோ, ஓர் அணுஆயுதமேந்திய அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதற்காக அது எந்தளவுக்கும் செல்ல தீர்மானகரமாக உள்ள நிலையில், சீனா மீண்டுமொருமுறை அதன் மைய நலன்களுக்குக் குறுக்காக வந்துள்ளது.

தியனென்மென் சதுக்க படுகொலைக்குப் பின்னர் உடனடியாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) எழுதியது, “சீனாவில் ஒடுக்குமுறை ஏகாதிபத்தியங்களினது நேரடி நலன்களுக்காக நடத்தப்படுகின்றன. சீனத் தொழிலாளர்களைத் தாக்குவதில், அந்த அதிகாரத்துவம் 'தொழில் நெறிமுறைகளை' மீட்டமைக்கவும் மற்றும் முதலாளித்துவ மீட்சி கொள்கைகளுக்கும் மற்றும் அது தோற்றுவித்துள்ள கட்டுக்கடங்கா சுரண்டல் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் பாரிய எதிர்ப்பை ஒடுக்கவும் ஏகாதிபத்தியங்களின் முகவராக இருந்து செயல்பட்டு வருகிறது,” என்று குறிப்பிட்டது.

முதல் புஷ் நிர்வாகம் அந்த படுகொலைக்குப் பகிரங்கமாக கண்டனம் கூறிய போதும், அந்த சம்பவம் "உள்நாட்டு விவகாரம்" என்றும், “அவ்விரு நாடுகளின் இன்றியமையா நலன்களுக்கான" சீனா-அமெரிக்கா உறவின் மதிப்பை உறுதிப்படுத்தி இருப்பதாகவும் அது இரகசியமாக சீன அரசாங்கத்திற்குத் தெளிவுபடுத்தியது.

ICFI இன் அறிக்கை தொடர்ந்து குறிப்பிட்டது, “குரூரமான கம்யூனிச-விரோத பிரச்சாரத்திற்காக அவற்றைச் சாதகமாக்கிக் கொள்ளும் முயற்சியில், சீனத் தொழிலாளர்களின் சிதைந்த உடல்கள் மீது ஏகாதிபத்தியம் குரூரமாக திருப்தி கொள்கிறது, அதேவேளையில் பத்து பில்லியன் கணக்கான டாலர் மதிப்பிலான நேரடி முதலீடு மூலமாகவும் சீன மண்ணில் ஏற்கனவே செயல்படும் கூட்டு நிறுவனங்கள் மூலமாகவும், இந்த மூர்க்கமான அரசு ஒடுக்குமுறையை இன்னும் அதிக இலாபங்களாகவும் உயர்ந்த சுரண்டல் விகிதங்களாகவும் மாற்றலாம்,” என்று குறிப்பிடுகிறது.

துல்லியமாக இது தான் நடந்தது. டெங் ஜியோபிங்கின் 1992 தெற்கு சுற்றுப்பயணத்தில் அவர் சீனத் தொழில்முனைவோரை "பணக்காரர்கள் ஆக" ஊக்குவித்தார், அப்பயணத்தைத் தொடர்ந்து சீனாவில் அமெரிக்க முதலீடு உப்பியது, அது அமெரிக்க பெருநிறுவனங்களுக்கு ஓர் இலாப வெகுமதிக்கு இட்டுச் சென்றதுடன், சீனத் தொழிலாள வர்க்கத்தின் சுரண்டல் மூலமாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட அடுக்குகள் சிறப்பாக செழிப்பாகின.

அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஓர் ஏற்பாட்டைச் செய்து கொள்வதும் மற்றும் பங்காண்மையில் இருப்பதும் சீனாவின் தேசிய முன்னேற்றத்திற்கு ஒரு சமாதானமான பாதையை வழங்கும் என்ற முன்னணி சீனப் பிரமுகர்களின் வாதங்கள் ஒரு வெற்றுக்கனவு என்பது நிரூபணமாகி உள்ளது.

சீன அதிகாரிகள் அமெரிக்க கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டால், அது சீனப் பொருளாதாரத்தைப் பாரியளவில் வெடிக்கச் செய்து, பாரிய வேலைவாய்ப்பின்மையை உருவாக்கி போராட்டங்கள் மற்றும் அரசியல் கொந்தளிப்பை உண்டாக்கும். ஆனால் விரைவிலேயோ அல்லது தாமதமாகவோ, அமெரிக்காவிற்கு எதிராக நிற்பது என்பது அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான ஒரு போரில் சண்டையிடுவதாகும், இதில் இருதரப்பிலும் மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்படுவார்கள் என்பதே நம்பத்தகுந்த காட்சியாக இருக்கும்.

தியனென்மென் சதுக்கப் படுகொலைக்கு முப்பதாண்டுகளுக்குப் பின்னர், முதலாம் உலக போர் வெடித்த பின்னர் லெனின் அடையாளம் கண்ட ஏகாதிபத்திய விதிகள் உலகமயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தியால் ஒன்றுமில்லாமல் போய்விட்டன என்ற அனைத்து வாதங்களும் பொய்யென நிரூபணமாகி உள்ளன. உலகை மீண்டும் பிளவுபடுத்துவதற்கான ஒரு புதிய வேட்கையால் உந்தப்பட்டுள்ள முதலாளித்துவ அமைப்புமுறை ஒரு புதிய உலகப் போரை நோக்கி தவழ்ந்து கொண்டிருக்கிறது.

மனிதநேயத்திற்கும் இந்த பேரழிவுக்கும் இடையே நிற்கும் ஒன்றே ஒன்று சர்வதேச தொழிலாள வர்க்கமாகும். சீனா, அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள், ஏகாதிபத்திய போருக்கு மூலக் காரணமான முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் அவர்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்துவது அவசர அவசியமாகும். இது சீனாவிலும் உலகெங்கிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரிவுகளை ஏகாதிபத்திய போருக்கு எதிரான ஒரு தொழிலாள வர்க்க இயக்கத்தின் முன்னணிப்படையாக கட்டமைப்பதை அர்த்தப்படுத்துகிறது.