ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Severe water shortage afflicts Chennai, India’s fourth-largest metro area

கடுமையான தண்ணீர் பற்றாக்குறையில் இந்தியாவின் நான்காவது பெரிய பெருநகரப் பகுதியான சென்னை

By Arun Kumar 
25 June 2019

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரமும், இந்தியாவின் நான்காவது மிகுந்த மக்கள்தொகை கொண்ட பெருநகரப் பகுதியுமான சென்னை கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பாளர்கள் சிறிதளவு தண்ணீரைப் பெறுவதற்கே இரவு முழுவதும் வரிசையில் காத்துக்கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தொழிலாள வர்க்கமும் மற்றும் ஏனைய ஏழை குடும்பங்களும் தான் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.


சென்னை குடிநீர் வாரியத்திடமிருந்து தண்ணீர் பெற காத்திருப்போரின் ஒரு பகுதியினர்

இதற்கு அதிகாரிகள் வெறுமனே பருவமழை பொய்த்துப் போனதை காரணம் காட்டுகின்றனர் என்றாலும், சென்னை பெருநகரப் பகுதியில் வசிக்கும் 13 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எதிர்கொள்ளும் இந்த தண்ணீர் பற்றாக்குறைக்கு உண்மையான பொறுப்பு பெருவணிக அரசியல் ஸ்தாபகத்திடம் தான் தங்கியுள்ளது. அடுத்தடுத்த மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள், அது தற்போதைய ஆளும் இந்து மேலாதிக்க பாரதிய ஜனதாக் கட்சி (பிஜேபி) தலைமையிலானது அல்லது எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி மற்றும் பிரதான தமிழ் பிராந்தியவாத கட்சிகளான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK) மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) தலைமையிலானது என எந்த தலைமையும் உழைக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து குற்றவியல்தனமான அலட்சியத் தன்மையுடனேயே இருந்து வருகின்றன.


சென்னை குடியிருப்பாளர்கள் ஒரு பொது நிலத்தடி தண்ணீர் குழாயில் இருந்து தண்ணீர் எடுக்கின்றனர்

இந்திய உயரடுக்கு, அதன் இராணுவம் பாகிஸ்தானுக்குள்ளே “துல்லிய தாக்குதல்”களை நிகழ்த்தியது குறித்து பெருமையடித்துக் கொள்வதோடு, அது இந்தியாவின் அணுவாயுத கட்டமைப்பிற்கும் பிற அதிநவீன ஆயுதங்களை கொள்முதல் செய்வதற்கும் பில்லியன் டாலர்களை செலவிடுகிறது. மேலும் அது, வெளிநாட்டு மற்றும் உள்ளூர் முதலீட்டாளர்கள் கோரும் உள்கட்டமைப்பு வசதிகளை கட்டமைப்பதற்காகவும் பில்லியன்களை செலவு செய்து வருகிறது. ஆயினும்கூட, மக்களின் மிக அடிப்படைத் தேவையான குடிதண்ணீரை வழங்குவது குறித்து இந்தியாவின் முதலாளித்துவ ஆளும் உயரடுக்கு இந்தியாவின் நீர்வளங்களில் முதலீடு செய்வதற்கும் அவற்றை நிர்வகிப்பதற்கும் விருப்பமில்லாமலும் திறனில்லாமலும் இன்னமும் இருந்து வருகின்றன.

நீர் நெருக்கடி குறித்து சென்னையில் பல பகுதிகளிலும், அத்துடன் தமிழ்நாடு எங்கிலும் பல நகரங்களிலும் கிராமங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன, இதனுடன் கூட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் கடுமையான வெப்ப அலையின் தாக்கத்திற்கும் உள்ளாகியுள்ளன. சென்னையில் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் வரை எட்டியுள்ளது.

தண்ணீர் கிடைக்க வழியில்லாத ஆற்றவொண்ணா நிலையில் மக்கள் தண்ணீர் வழங்கக் கோரி அரசு போக்குவரத்து பேருந்துகளை தடுத்து நிறுத்தி போராடும் பல சம்பவங்கள் அங்கு நடந்து கொண்டிருக்கின்றன என்பதுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலைமறியலில் ஈடுபடும்போது அவர்களை கலைப்பதற்கு பொலிஸ் முயலுகையில் பல மோதல்களும் அங்கு நிகழ்ந்துள்ளன.

சென்ற புதனன்று, தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோயம்புத்தூரில் மாநகராட்சி தலைமையகத்திற்கு வெளியே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து குறைந்தது 550 பேர் கைது செய்யப்பட்டனர். வெற்று தண்ணீர் பாத்திரங்களை வைத்துக்கொண்டு போராடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், தவறாக நிர்வாகம் புரியும் மற்றும் அலட்சிய பாவனையுடன் இருக்கும் அதிகாரிகளை குற்றம்சாட்டினர்.


நள்ளிரவில் தண்ணீர் பெற வரிசையில் குடும்பங்கள்

இந்த தண்ணீர் நெருக்கடியினால் சென்னை நகர குடியிருப்பாளர்களின் வழமையான தினசரி நடவடிக்கைகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. சென்னை மாநகராட்சி கிட்டத்தட்ட தண்ணீர் விநியோகத்தை நிறுத்திவிட்ட நிலையில், குடிப்பதற்கும், சமைப்பதற்கும், குளிப்பதற்கும் மற்றும் சலவை செய்வதற்கும் என தங்களது அனைத்து தேவைகளுக்கும் பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி எடுத்துச் செல்வதற்கென நடுஇரவிலேயே அமைக்கப்படும் நீண்ட வரிசைகளில் குடும்பங்கள் காத்து நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஓரளவு வசதிபடைத்த குடியிருப்பாளர்கள் தங்களது சொந்த கிணற்றுத் தண்ணீரை பயன்படுத்துகின்றனர் அல்லது அவர்களால் போத்தல் தண்ணீரை விலைக்கு வாங்க முடியும் என்ற நிலையில், தொழிலாள வர்க்கமும் மற்றும் ஏழை மக்களும் தான் இதனால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.சென்னைக்கு தண்ணீர் வழங்கி வந்த ரெட் ஹில்ஸ் ஏரி, சோழாவரம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் பூண்டி நீர்த்தேக்கம் போன்ற நான்கு உள்ளூர் நீர்வளங்கள் உண்மையில் முற்றிலும் வறண்ட நிலங்களாக மாறிப் போயுள்ளன.


சென்னைக்கு தண்ணீர் வழங்கி வந்த நான்கு நீர்வளங்களில் ஒன்றான ரெட் ஹில்ஸ் ஏரி, ஆனால் தற்போது அவை அனைத்தும் இருக்கின்றன என்றாலும் முற்றிலும் வறண்டு கிடக்கின்றன

லாரி மூலம் நகரத்திற்கு விநியோகிக்கப்படும் தண்ணீர், தேவைக்கு மிகக் குறைவாகவே உள்ளது. சமைப்பதற்கு கூட தண்ணீர் தட்டுப்பாடு உள்ள நிலையில், உணவகங்களில் இருந்து உணவை பெறுவதற்கு மிகவும் பற்றாக்குறையாக இருக்கும் பணத்தை செலவிடும் நிலைக்கு பெரும்பாலானோர் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். ஆனால், உணவக முதலாளிகள் பலரும் தண்ணீர் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் டாங்கர்கள் மூலம் தண்ணீரை வாங்குவதற்கு அதிகம் செலவு செய்யவேண்டியுள்ளதால் அதை ஈடுகட்டுவதற்கு உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளனர். ஏனையோர் உணவகங்களை மூடுவதற்கு கூட தீர்மானித்து விட்டனர்.

விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களும் கூட தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்கின்றனர். சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அவர்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணி செய்வதற்கு உத்திரவிட்டுள்ளன. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள சில நகரவாசிகளும் கிராமவாசிகளும் அவர்களது வீடுகளை விட்டுவிட்டு, தண்ணீர் வளம் மிக்க பிற பிராந்தியங்களில் உள்ள அவர்களது உறவினர்கள் அல்லது நண்பர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

பெரும்பாலான உயர் நடுத்தர வர்க்க மற்றும் முதலாளித்துவ குடும்பங்கள் அவர்களது சொந்த ஆழ்துளை கிணறுகளை சொந்த செலவில் ஆழப்படுத்துவதன் மூலம் தண்ணீரைப் பெறுகின்றனர். ஆயினும், பருவமழை பெய்யாத காரணத்தாலும், மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் தனியார் கிணறுகளின் விரைவான திட்டமிடப்படாத விரிவாக்கத்தினாலும் தற்போது பாதிப்புக்குள்ளாகி அவர்கள் நிலத்தடி நீரை பெற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

அத்தகைய ஆழ்துளை கிணறுகளை உருவாக்க முடியாத நிலையில், தொழிலாள வர்க்கமும் மற்றும் ஏழை குடும்பங்களும் பொது குழாய்களில் கிடைக்கும் குறைந்தளவு தண்ணீரை சார்ந்துள்ளனர். இந்த நெருக்கடிக்கு முன்பு கூட, சென்னை மாநகராட்சி மூலம் விநியோகிக்கப்படும் குழாய் தண்ணீரில் கழிவுநீர் கலந்து அசுத்தமடைந்துள்ளதால் துர்நாற்றமடிக்கிறது என்றும் சுகாதாரமற்ற நீராக அது உள்ளது என்றும் அடிக்கடி பொது மக்கள் புகார் கொடுத்து வந்துள்ளனர். என்றாலும் நகர அதிகாரிகள் இந்த புகார்களை புறக்கணித்து வந்துள்ளனர் என்பது, நகரத்தின் பெரும்பான்மை மக்களின் அடிப்படை ஆரோக்கியம் குறித்த அவர்களது குற்றவியல் புறக்கணிப்பைக் காட்டுகிறது.

ஒரு பரந்த தண்ணீர் நெருக்கடியால் நாட்டின் பெரும்பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடுமையாக பாதிப்படைந்த இந்திய நகரங்களின் மத்தியில் சென்னை கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. வடக்கில் தேசிய தலைநகரமான புது தில்லி, மேற்கில் மஹாராஷ்ட்ரா மற்றும் குஜராத் மாநிலங்கள், மற்றும் தெற்கில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரப்பிரதேசம் மாநிலங்கள் என அனைத்து பகுதிகளும் கடுமையான தண்ணீர் பஞ்சத்திற்கு முகம் கொடுக்கின்றன. பல மில்லியன் மக்கள் அவர்களது தினசரி தேவைகளை பூர்த்தி செய்வதற்கான தண்ணீரைப் பெறுவதற்கே போராடி வருகின்றனர், மேலும் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் விவசாயத்தைச் சார்ந்திருக்கும் நிலையில், கிராமப்புற பொருளாதாரமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

சமீபத்தில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது பிஜேபி இன் மத்திய அரசாங்கம், நீர் நெருக்கடியை ஒரு “ஊடக மிகைப்படுத்தல்” என்று நிராகரித்துவிட்டது. ஜூன் 17 அன்று, நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், “இமாச்சலப் பிரதேசம் மற்றும் பிற பகுதிகளில் உள்ள அணைகளிலும் நீர்த்தேக்கங்களிலும் போதுமான அளவு தண்ணீர் உள்ளது. ஊடகங்கள் மிகைப்படுத்துகின்ற அளவிற்கு தண்ணீர் நெருக்கடி அவ்வளவு மோசமாக இல்லை,” என்று தெரிவித்தார்.

சேகாவத்தின் கருத்துக்கள், மோடி அரசாங்கமும் மேலும் அது பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய உயரடுக்கும் இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து கொண்டுள்ள அவற்றின் இழிவான அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. ஜூன் 15 அன்று பிஜேபி அமைச்சர் கூறிய கூற்றுக்களுக்கு முரணாக, மத்திய நீர் ஆணையத்தின் தரவுகளை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட ஒரு பகுப்பாய்வின் படி, நாடு முழுவதிலுமாக உள்ள 91 நீர்த்தேக்கங்களில், 85 சதவிகித நீர்த்தேக்கங்கள் அவற்றின் கொள்ளளவில் 40 சதவிகிதத்திற்கும் குறைவான நீர் மட்டங்களைக் கொண்டுள்ளன, மேலும் 65 சதவிகித நீர்த்தேக்கங்கள் அவற்றின் கொள்ளளவில் 20 சதவிகிதத்திற்கும் குறைவான நீர் மட்டங்களைக் கொண்டுள்ளன.

தனது பிஜேபி மத்திய அரசாங்க கூட்டணியினர் கூறுவது போலவே, தமிழ்நாடு முதலமைச்சரும் மற்றும் அஇஅதிமுக கட்சியின் தலைவருமான கே.பழனிசாமி, “குறிப்பாக ஊடகங்களில் பெரிதுபடுத்தப்பட்ட அளவிற்கு இந்தப் பிரச்சினை அவ்வளவு பெரியதல்ல,” என்று கூறி, சென்னை மற்றும் மாநிலம் முழுவதிலும் நிலவும் தண்ணீர் நெருக்கடி குறித்த முக்கியத்துவத்தை குறைத்துக் காட்ட முயற்சித்துள்ளார். இந்நிலையில், வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதையும், பருவமழை பொய்த்துப் போனதையும் தான் அவர் குற்றம் சாட்டினார்.

தனது சொந்த அரசியல் ஆதாயத்தை முன்னிட்டு எதிர்க்கட்சியான திமுக, மாநில அரசாங்கத்தின் “அலட்சியமும்” “நிர்வாக தோல்வியும்” தான் இதற்கு காரணம் என்று குற்றம்சாட்டி இந்த பிரச்சினையை சுரண்டுவதற்கு முனைகிறது. பெருவணிக காங்கிரஸ் கட்சி மற்றும் ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உடனான கூட்டணியில் ஏப்ரல்-மே தேர்தல்களில் போட்டியிட்ட திமுக, நீர் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில அரசாங்கத்தை வலியுறுத்த ஜூன் 22 அன்று மாநிலம் தழுவிய போராட்டங்களை ஒழுங்கு செய்திருந்தது.

காலநிலை மாற்றம் உள்ளிட்ட காலநிலை பிரச்சினைகள், சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா அதிகபட்ச வெப்பநிலையையும் மிக அடிக்கடி ஏற்படும் வறட்சியையும் எதிர்கொள்வது உட்பட தண்ணீர் மட்டங்களை பாதிக்கச் செய்துள்ளன. ஆயினும், நீர்ப்பாசனம் உட்பட, மக்களின் அடிப்படை தேவைகளுக்காக, நீரை சேமிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் சரியான உள்கட்டமைப்பை உருவாக்க மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் இரண்டும் தவறியது தான் தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளிலும் நிலவும் தண்ணீர் பஞ்சத்திற்கு பொதுவான மூலகாரணமாகிறது. மத்தியிலும் மற்றும் மாநில அளவிலும் தற்போது ஆளும் கட்சிகளாக இருக்கும் பிஜேபி மற்றும் அஇஅதிமுக கட்சிகள் முதல் முன்னர் அதிகாரத்தில் இருந்த அவற்றின் முன்னோடி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் திமுக வரையிலுமான அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்துக் கட்சிகளும் இதற்கு முழுமையான பொறுப்பாளிகளாகின்றனர்.

தண்ணீர் பாதுகாப்பு குறித்த ஒரு இந்திய அரசு சாரா அமைப்பான FORCE நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைவருமான ஜ்யோதி ஷர்மா சென்னை தண்ணீர் நெருக்கடி பற்றி குறிப்பிடுகையில், பருவமழை இடைவெளிகளின் போது பயன்படுத்தும் வகையில் மழைநீரை சேமிப்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ளதை சுட்டிக்காட்டினார். “மண் மிக வேகமாக செறிவடைகிறது,” என்று ஷர்மா விவரித்தார். “உங்களிடம் நீரை மீண்டும் பயன்படுத்துவதற்கான அமைப்புமுறைகள் கிடையாது, ஆறுகள் நிரம்பியோடுகின்றன, தண்ணீர் தேங்குவதற்கு இடம் கிடையாது - ஒட்டுமொத்த தண்ணீரும் நகரத்திற்கு வெளியே தொலைவில், கடலில் சென்றடைகிறது என்றும் அவர் கூறினார்.

இந்த உத்தியோகபூர்வ அலட்சியம் பெரும்பான்மையினருக்கு பேரழிவுகர விளைவுகளை ஏற்படுத்தும் அச்சுறுத்தலை கொண்டுள்ளது. மோடியின் தலைமையிலான இந்திய அரசாங்க சிந்தனைக் குழாமான இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவனம் (National Institute of Transforming India-NITI Aayog) சென்ற ஆண்டில் விடுத்த ஒரு அறிக்கை, வரவிருக்கும் தசாப்தங்களில் சென்னையில் சுத்தமான தண்ணீர் கிடைக்காது என்று எச்சரித்தது. மேலும், சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர், ஹைதராபாத், விஜயவாடா, அமராவதி மற்றும் சோலாப்பூர் உட்பட 21 பிரதான இந்திய நகரங்கள் 2020 ஆம் ஆண்டளவில் நிலத்தடி நீர் இல்லாத நிலையை எதிர்கொள்ளும் என்றும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது.

அத்தகைய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், மோடியோ அல்லது அஇஅதிமுக அரசாங்கமோ அல்லது வேறு ஏதோவொரு தொடர்புடைய அரசு அமைப்போ தற்போதைய நெருக்கடியை சமாளிக்கும் வகையிலான எந்தவித தீவிர நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.