ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Judge Emma Arbuthnot refuses to recuse herself in show trial of Julian Assange

நீதிபதி எமா ஆர்பத்நோட் ஜூலியன் அசான்ஜ் மீதான போலிநாடக விசாரணையில் தன்னை விலக்கிக் கொள்ள மறுக்கிறார்

By Thomas Scripps
11 July 2019

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜின் அமெரிக்க நாடுகடத்தல் விசாரணைகளில் இருந்து தன்னை விலக்கிக் கொள்ள நீதிபதி எமா ஆர்பத்நோட் மறுத்துவிட்டார். இதுதான் “வர்க்க நீதி” போல தோன்றுகிறது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் தலைமை நீதிபதியும் மற்றும் மூத்த மாவட்ட நீதிபதியுமான ஆர்பத்நோட், பிப்ரவரி 25 அன்று வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் மீண்டும் தொடங்கப்படவுள்ள நிலையில், அசான்ஜிற்கு எதிரான ஒரு போலிநாடக விசாரணைக்கு அவர் தலைமை தாங்குகிறார் என்பதை உறுதிப்படுத்துவதற்கு அடிப்படை சட்டக் கொள்கைகளை அவர் மீறி வருகிறார். அசான்ஜ் நாடுகடத்தப்பட்டால், 175 ஆண்டு கால சிறை தண்டனையை வழங்கும் உளவுத்துறை குற்றச்சாட்டின் கீழ் அவர் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வார். மேலும் சில குற்றச்சாட்டுக்கள் நிலுவையில் உள்ளன, அது மரண தண்டனையையும் உள்ளடக்கியது.


எமா ஆர்பத்நோட்

 

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 2018 இல் வெளியிடப்பட்ட “நீதித்துறை நடத்தை வழிகாட்டி” இவ்வாறு தெரிவிக்கிறது: “நீதித்துறை சுதந்திரம் என்பது ஒரு ஜனநாயக சமுதாயத்தில் நமது அரசாங்க அமைப்பின் ஒரு மூலக்கல்லாகும் என்பதுடன், சட்ட விதிகளின் கீழ் குடிமகனின் சுதந்திரம் மற்றும் உரிமைகளுக்கான பாதுகாப்பாகவும் அது உள்ளது. நீதித்துறை, தனிநபர்களாகவும் சரி, ஒட்டுமொத்தமாகவும் சரி அரசாங்கத்தின் சட்டமன்ற மற்றும் நிர்வாக பிடிகளிலிருந்து சுதந்திரமானதாக இருக்க வேண்டும்.”

இதன் அடிப்படையில் ஆர்பத்நோட் தாமாகவே விலகியிருக்க வேண்டும்.

அவரது கணவர் ஜேம்ஸ் நோர்விச் ஆர்பத்நோட் கோமான்கள் சபையின் ஒரு கன்சர்வேட்டிவ் உறுப்பினராவார். அவர் பிரிட்டிஷ் ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு சேவைகளுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டவர், இவரது குற்றவியல் நடவடிக்கைகள் விக்கிலீக்ஸால் அம்பலப்படுத்தப்பட்டன.

லார்ட் ஆர்பத்நோட் ஒரு டோரி பாராளுமன்ற உறுப்பினராக, 2005 மற்றும் 2014 ஆண்டுகளுக்கிடையில், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பிரிட்டனின் ஆயுதப்படைகளை மேற்பார்வையிடும் அமைப்பான, பாதுகாப்பு தேர்வு குழுவின் தலைவராக இருந்தார். அப்போது, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடந்து கொண்டிருந்த இராணுவ நடவடிக்கைகளையும், அத்துடன் லிபியாவிலும் சிரியாவிலும் நடந்த ஆட்சி மாற்றத்திற்கான போர்களையும் கண்காணிப்பது அவரது பணியாக இருந்தது.

அவர் தற்போது பாதுகாப்புத்துறை ஆயுத உற்பத்தியாளர் Thales இற்கான இங்கிலாந்து ஆலோசனைக் குழுவின் இணைத் தலைவராக உள்ளார் என்பதுடன், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான ராயல் ஒருங்கிணைந்த சேவைகள் நிறுவனத்தின் (Royal United Services Institute for Defence and Security Studies – RUSI) ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் உள்ளார். மேலும், லார்ட் ஆர்பத்நோட், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஆலோசனை நிறுவனமான SC Strategy இன் ஒரு முன்னாள் இயக்குநராவார், அங்கு அவர் இணை இயக்குநர்களான லார்ட் கார்லைல் மற்றும் சர் ஜான் ஸ்கார்லெட் ஆகியோருடன் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.

கார்லைல், M15 இன் முக்கிய பாதுகாவலர் ஆவார், இவர், உத்தரவாதமின்றி இணைய இணைப்பு பதிவுகளை பிரிட்டிஷ் அரசு அணுகுவதற்கு உதவுவதான (ஸ்னூப்பர்ஸ் சாசனம் என்று புனைப்பெயரிடப்பட்ட) புலனாய்வு அதிகாரச் சட்டம் 2016 ஐ ஆதரித்தார். மேலும் அவர், எட்வார்ட் ஸ்னோவ்டென் சட்டவிரோத பாரிய அரசு கண்காணிப்பை அம்பலப்படுத்தியது “ஒரு குற்றவியல் செயலுக்கு வழிவகுத்தது” என்றும் விவாதித்தார். பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அமல்படுத்துவதை அவர் மேற்பார்வையிட்டார் என்பதுடன், வடக்கு அயர்லாந்தில் தேசிய பாதுகாப்பு நடைமுறைகளை மீளாய்வு செய்தார்.

ஸ்கார்லெட், M16 இன் முன்னாள் தலைவரும், மற்றும் அரசாங்கத்தின் கூட்டு புலனாய்வு குழுவின் (Joint Intelligence Committee-JIC) தலைவரும் ஆவார். அவர், “மொத்த தகவல்தொடர்பு தரவுகளை சேகரிப்பதற்கான” இரகசிய சேவைகளின் உரிமைக்காக வாதிடும் ஒரு அறிக்கை தயார் செய்யப்படுவதை மேற்பார்வையிட்டார் என்பதுடன், ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் குறித்த “ஏமாற்று ஆவணத்தை” தொகுப்பதற்கு அவர் பொறுப்பாளியாக இருந்தார்.

லார்ட் ஆர்பத்நோட் மற்றும் அவரது சகாக்களின் நடவடிக்கைகள் ஆயிரக்கணக்கான விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தல்களுக்கு உட்பட்டவை. விக்கிலீக்ஸ் தரவுத்தளத்தில் Thales பற்றி அண்ணளவாக 2,000 குறிப்புக்களும், மேலும் RUSI க்கு அண்ணளவாக 450 குறிப்புக்களும் உள்ளன. அதில், 50 க்கும் மேற்பட்ட பதிவுகள் ஆர்பத்நோட் பற்றி இருப்பதைக் காணமுடியும்.

அசான்ஜின் சட்டக் குழுவும், சித்திரவதை தொடர்பான ஐ.நா. அமைப்பின் சிறப்பு அறிக்கையாளர் நில்ஸ் மெல்ஸரும் விவாதித்துக் கொண்டது போல, இந்த “நலன்கள் பற்றி பலமான மோதலுக்கு” லேடி ஆர்பத்நோட் அசான்ஜ் வழக்கில் இருந்து விலகி நிற்க வேண்டியது அவசியம். அவரது கணவரின் முழு அரசியல் வாழ்க்கையும் விக்கிலீக்ஸ் பரிந்துரைத்த வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை நசுக்குவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

“நீதித்துறை நடத்தை வழிகாட்டி” வெளிப்படையாக இவ்வாறு கூறுகிறது: “ஒரு நீதிபதி குடும்பத்தின் நெருங்கிய உறுப்பினர் ஒருவர் அரசியலில் செயலூக்கத்துடன் செயல்படுகிறார் என்றால், சில நடவடிக்கைகளில், அந்த அரசியல் செயல்பாடு நீதிபதியின் சொந்த பக்கச்சார்பற்ற தன்மை குறித்து கவலைகளை எழுப்பக்கூடும் என்ற நிலையில், அரசியல் நிகழ்ச்சிப்போக்கிலிருந்து அவர் விலகி அதற்கேற்ப செயல்பட வேண்டும்.”

மேலும், “ஒரு கட்சிக்கு எதிரான தனிப்பட்ட விரோதமும் கூட தகுதியிழப்புக்கு கட்டாயப்படுத்தும் ஒரு காரணமாகும்.”

அசான்ஜ் மீதான ஆர்பத்நோட்டின் பகைமை பகிரங்கமாக தெரிந்த ஒன்றாகும். ஈக்வடோர் தூதரகத்தில் இருந்து அவர் கைதுசெய்யப்பட்ட சில மணித்தியாலங்களுக்குப் பின்னர், ஏப்ரல் 11 அன்று தண்டனை வழங்கப்படுவதற்கு முன்னர், வெளியீட்டாளரும் பத்திரிகையாளரும் அவர் முன்பு ஆஜரானபோது, அவரை “தன்னை போற்றிப்புகழ்பவர்” என்று ஆர்பத்நோட் தாக்கினார் —சட்ட நடவடிக்கைகளின் போது கருத்துப்பதிவை அவர் உருவாக்கியிருக்க முடியாது என்பதுடன், அது அப்பட்டமாக அநீதியானது. அசான்ஜ் ஸ்வீடனில் பாலியல் பலாத்கார “குற்றச்சாட்டுக்கு” ஆளானார் என்று கூட அவர் தவறாகக் கூறினார்— அசான்ஜ் தன்மீது ஒருபோதும் குற்றம் சாட்டப்படவில்லை என்று கூறி தலையீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

அசான்ஜ் மீதான கவனிக்க வேண்டியதான இங்கிலாந்து கைது ஆணைக்கு எதிரான சென்ற ஆண்டின் முறையீட்டின் போது (அதன் பின்னர் சுவீடனில் பூர்வாங்க விசாரணைகளை நிறுத்தியது), அசான்ஜ் “சட்டவிரோத” மற்றும் “தன்னிச்சையான தடுப்புக்காவலுக்கு” பலியானார் என்ற ஐ.நா.வின் 2015 தீர்ப்பை ஆர்பத்நோட் கேலி செய்தார். “சூரிய ஒளி” மற்றும் “திறந்த பால்கனி”யை அவர் அணுக முடிவதாக பொய்யாக கூறினார் – ஆனால் இவை எதுவும் உண்மை இல்லை.

எந்தவொரு சட்ட வாதமும் ஆர்பத்நோட் தன்னை தற்காத்துக் கொள்ள செய்யாது. அவரது குடும்பத்தின் ஊடாக பாதுகாப்பு சேவைகள் உடன் அவர் கொண்டிருந்த தொடர்புகள் தான் இந்த வழக்கை மேற்பார்வையிடுவதற்கு அவர் தேந்தெடுக்கப்படுவதற்கான மிக முக்கிய காரணமாகும். அசான்ஜை அமெரிக்காவிற்கு இடமாற்றம் செய்ய பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்திற்கு அனுமதியளிக்கும் ஒரு அதிகாரி தேவை, இது ஒரு அசாதாரண கையளிப்புக்கு வழிவகுக்கும்.

ஆங்கில நீதிமன்ற வழக்குகளில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொண்ட நீதிபதிகளின் முந்தைய இரண்டு வழக்குகள் விக்கிலீக்ஸின் நிறுவனர் வழக்கிற்கு முற்றிலும் மாறுபட்டது.

முதலாவது ஆர்பத்நோட்டையே பற்றியது. ஆகஸ்ட் 2018 இல், SC Strategy மற்றும் அதன் வாடிக்கையாளரான கட்டார் முதலீட்டு ஆணையம் வழியாக தனது கணவருக்கு வாடகை வாகன போக்குவரத்து நிறுவனத்தில் வணிக ஆர்வம் இருந்தது பற்றி அப்சேர்வர் பத்திரிகை வெளிப்படுத்தியதை அடுத்து, ஊபெருக்கு (Uber) எதிரான வழக்கில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. ஒரு நீதித்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்: "இந்த இணைப்பு பற்றி அவரிடம் தெரிவிக்கப்பட்டவுடன், அவர் வழக்கை மற்றொரு நீதிபதியிடம் ஒப்படைத்தார். நீதிபதிகள் முற்றிலும் பக்கச்சார்பற்றவர்கள் மட்டுமல்ல, ஆனால் அவ்வாறு கருதப்படுவது அவசியம்."

அசான்ஜ் விடயத்தில் இதுபோன்ற கவலைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. பிரதான ஊடகங்களில் ஒரு கட்டுரை கூட, 2018 ஆம் ஆண்டில் ஆர்பத்நோட்டின் நடவடிக்கைகளுக்கு இன்றைய செயல்களுக்கும் இடையிலான வெளிப்படையான முரண்பாட்டை புகாரளிக்கவில்லை.

இரண்டாவது சம்பவம், 1998 இல், ஸ்பெயினில் தனது குற்றவியல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள, சிலியின் முன்னாள் சர்வாதிகாரியும், சித்திரவதையாளரும், மரணதண்டனையாளருமான அகுஸ்டோ பினோசேயின் ஒப்படைப்பு முயற்சியின்போது ஒரு நீதிபதி வழக்கிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள தவறினார்.

லார்ட் ஹாஃப்மேன், இந்த வழக்கின் ஒரு கட்சியாக இருந்த மனித உரிமைகள் குழுவான சர்வதேச மன்னிப்பு சபை உடனான தனது தொடர்புகளை தெளிவுபடுத்த தவறியதற்காக லார்ட் ஹாஃப்மேன் கடுமையாக தாக்கப்பட்டார். அவர் தன்னார்வ அடிப்படையில் தொண்டு நிறுவனத்தின் நிதி திரட்டும் சேவையின் தலைவராக இருந்துள்ளார். பினோசே அவரது குற்றங்களின் போது ஒரு நாட்டின் தலைவராக இருந்ததால் வழக்கு தொடரப்படுவதில் இருந்து அவருக்கு விலக்கு உரிமையை உறுதி செய்த உயர்நீதிமன்றத் தீர்ப்பை இரத்து செய்வதற்கு ஆதரவாக வாக்களித்த, ஐந்து நீதிபதிகளில் மூன்று பேரில் ஹாஃப்மேனும் ஒருவராவார். பினோசேக்கு எதிரான பெரும்பாலான குற்றச்சாட்டுக்களை குறிப்பிடத்தக்க தகுதிகள் செல்லாததாக்குகின்றன என்ற நிலையில், முன்னோடியில்லாத வகையில், பினோசேக்கு எதிரான கோமான்களின் சபையின் தீர்ப்பு (ஹாஃப்மேன் சம்பந்தப்பட்டது) ஐந்து நீதிபதிகளால் முறியடிக்கப்பட்டு, மேலும் ஒரு வருடம் கழித்து மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

லார்ட் பிரவுன் வில்கின்சன் தலைமையிலான நீதியரசர்கள், அசான்ஜ் வழக்கிலிருந்து ஆர்பத்நோட் தாமே விலகிக் கொள்வதற்கு முற்றிலும் தேவைப்படும் வாதங்களை உருவாக்கினர். முன்னதாக, ஒரு வழக்கில் இருந்து ஒரு நீதிபதி தானாகவே தகுதி நீக்கம் செய்யப்பட்டாரா என்பது அதன் முடிவில் அவர் நிதிய ஆர்வம் கொண்டிருப்பதைப் பொறுத்தது. லார்ட் பிரவுன் வில்கின்சனின் முடிவு, நிதி அல்லாத “நலன்களின்” தளர்வான வகைகளுக்கு அல்லது “காரணங்களுக்கான” ஆதரவுக்கு விண்ணப்பிப்பது குறித்து தானே தகுதியிழக்கும் கொள்கையை நீட்டித்தது.”

மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய மாநாட்டின் 6வது பிரிவின் கீழ் நியாயமான விசாரணைக்கான உரிமை அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது என்ற பினோசேயின் கூற்றை இரத்து செய்த தீர்ப்பை ஏற்றுக்கொண்டது, மேலும், “பக்கச்சார்பற்ற தன்மைக்கு அஞ்சுவதற்கு ஒரு நியாயமான காரணமுள்ள எந்தவொரு நீதிபதியும் பின்வாங்க வேண்டும்” என்றும் இது தெரிவிக்கிறது.

ஹாஃப்மேனின் கண்டனங்கள் மிருகத்தனமானவை. ‘நீதி மட்டும் வழங்கப்படக் கூடாது, மாறாக அது பார்க்கும்படி வழங்கப்பட வேண்டும்’ என்ற அடிப்படைக் கொள்கையை மீறியதற்காக லார்ட் ஹாஃப்மேனை ஐந்து நீதியரசர்கள் விமர்சித்தனர் என்று ஜனவரி 16, 1999 அன்று கார்டியன் பத்திரிகை தெரிவித்தது. பேரழிவு தரும் விமர்சனம், ஒரு சட்ட தலைவராக லார்ட் ஹாஃப்மேனின் எதிர்காலம் குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தியது.”

மேலும் கார்டியன் பத்திரிகை இவ்வாறு தொடர்ந்து தெரிவித்தது, “சட்டப் பள்ளியின் முதல் ஆண்டில் ஒவ்வொரு மாணவரும் கற்றுக்கொண்ட ஒரு அடிப்படை நீதித்துறை கோட்பாட்டை லார்ட் ஹாஃப்மேன் புறக்கணித்ததாக நீதிபதிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே நன்கறியப்பட்ட விதி, இந்த நூற்றாண்டில் ஐக்கிய இராஜ்யத்தில் எந்தவொரு சிவில் நீதிமன்றமும் அதை மீறியதற்காக ஒதுக்கப்பட்ட தீர்ப்பைக் கொண்டிருக்கவில்லை… என்று லார்ட் ஹோப் தெரிவித்தார். ‘பிரதிவாதியாகவோ அல்லது வழக்குத்தொடுநராகவோ ஒரு சிறிய தனிப்பட்ட அக்கறை கொண்ட ஒரு வழக்கை விசாரிக்க கூடாது என்பதை நீதிபதிகள் நன்கறிவார்கள்,’ என்றும் லார்ட் ஹோப் தெரிவித்தார்.

"ஜெனரல் பினோசே மீதான வழக்குத் தொடரப்படலாம் என்ற லார்ட் ஹாஃப்மனின் தீர்க்கமான வாக்கெடுப்பு உறுதிசெய்யப்பட்டால், நீதி நிர்வாகத்தின் நேர்மை குறித்த பொது நம்பிக்கை ஆட்டம் கண்டுவிடும் என லார்ட் ஹட்டன் கூறினார்."

ஜனவரி 2000 இல், பிளேயரின் தொழிற் கட்சி அரசாங்கத்தின் உள்துறை மந்திரி ஜாக் ஸ்ட்ரா, பாரிய படுகொலையாளனை பாதுகாக்க தலையிட்டு, பினோசேயின் உடல்நலக்குறைவு காரணமாக ஒப்படைப்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, பாராளுமன்ற மேலவையின் முடிவை இரத்து செய்தார். பினோசே மார்ச் 3 ஆம் தேதி சிலிக்குத் திரும்பி, சாண்டியாகோ விமான நிலையத்தில் தரையிறங்கினார், அங்கு அவர் சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து, தனது பாசிச ஆதரவாளர்களின் ஆர்ப்பரித்த பாராட்டைப் பெற்றார்.

தெளிவாகக் கூறுவதானால், “நீதித்துறை பக்கசார்பற்ற தன்மை” என்பது ஒரு மிருகத்தனமான சர்வாதிகாரியையும் மற்றும் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நீண்டகால கூட்டாளியையும் பாதுகாக்கும்போது ஒரு விடயம். ஆளும் வர்க்கத்தின் குற்றங்களை அம்பலப்படுத்திய உலகப் புகழ்பெற்ற பத்திரிகையாளரை துன்புறுத்துவது மற்றொரு விடயமாகும்.

ஏகாதிபத்தியத்தின் பார்வையில், காலனித்துவ பாணியிலான வெற்றிகர போர்களை தொடரவும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான பூகோள அளவிலான தாக்குதலுக்கும் என்ன விலை கொடுத்தாவது அசான்ஜின் தலை பொறுப்பாக்கப்படும். அவரை எப்போதும் மவுனமாக்குவதற்கு, நீதித்துறை மட்டுமல்லாமல், முழு அரசு எந்திரம் மற்றும் அதன் ஊடக பாதுகாவலர்களும் சேர்ந்து, அனைத்து ஜனநாயக மற்றும் தாராளவாத பாசாங்குகளிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொள்கின்றனர்.

ஆர்பத்நோட் தாமாகவே விலகிக் கொள்ள வேண்டும் என்ற அசான்ஜ் ஆதரவாளர்களின் கோரிக்கைகளுக்கு சோசலிச சமத்துவக் கட்சி ஆதரவளிக்கிறது. ஆனால் அசாஞ்சை விடுவிக்கும் திறன் கொண்ட ஒரே சக்தி, ஆளும் வர்க்கத்திற்கும் அதன் நீதித்துறைக்கும் எதிரான ஒரு கூட்டு அரசியல் போராட்டத்தில் அணிதிரட்டப்பட்ட சர்வதேச தொழிலாள வர்க்கம்தான் என்று நாங்கள் எச்சரிக்கிறோம்.