ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Hundreds of thousands protest on the streets of Hong Kong

ஹாங்காங்கின் வீதிகளில் நூறாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்

By Peter Symonds 
2 July 2019

நகர நிர்வாகத்தின் ஜனநாயக விரோத முறைகளுக்கு எதிராக போராடவும் மற்றும் ஜூலை 1, 1997 அன்று பிரிட்டன் தனது முன்னாள் காலனியை சீனாவிடம் ஒப்படைத்ததற்கான ஆண்டு தினத்தை நினைவுகூரவும் என நேற்று ஹாங்காங்கின் வீதிகளில் அரை மில்லியனுக்கு அதிகமான மக்கள் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஹாங்காங்கில் இருந்து சீனாவின் முக்கிய பகுதிக்கு குற்றவாளிகளை நாடுகடத்துவதற்கு அனுமதிப்பதற்கு முன்மொழியப்பட்ட சட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்ட மூன்றாவது பாரிய ஆர்ப்பாட்டமாக நேற்றைய அணிவகுப்பு இருந்தது. இந்த மசோதா மீதான விவாதம் காலவரையின்றி இடைநிறுத்தம் செய்யப்படும் என்று ஹாங்காங்கின் உயர் அதிகாரியான தலைமை நிர்வாகி கேரி லாம் (Carrie Lam) அறிவித்த போதிலும், ஜூன் 16 அன்று, நகரின் மக்கள்தொகையில் ஒரு கால்பங்கிற்கு அதிகமான மக்கள் அதாவது மதிப்பீட்டின் படி 2 மில்லியன் பேர் ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொண்டனர்.

லாம் நிர்வாகம் மீதான பரவலான மக்கள் விரோதப் போக்கினை நேற்றைய பெரும் ஆர்ப்பாட்டம் நிரூபிக்கின்றது என்பதுடன், அரசியல் எதிர்ப்பாளர்களை சீனாவிற்கு நாடுகடத்துவதற்கும் மேலும் விமர்சகர்களையும் எதிரிகளையும் ஹாங்காங்கில் வைத்து அச்சுறுத்துவதற்கும் கூட இந்த சட்டம் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள், இந்த சட்டத்தை முழுமையாக திரும்பப் பெறுவதற்கும், லாம் இராஜினாமா செய்வதற்கும், அத்துடன் முந்தைய ஆர்ப்பாட்டங்களின் போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நீக்குவதற்கும் கோரினர்.

திங்கள்கிழமை மாலை, நூற்றுக்கணக்கான இளம் போராட்டக்காரர்கள் ஹாங்காங்கின் சட்டமன்ற சபையின் (LegCo) அறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து, சுவர்கள் மீது கிராஃபிட்டிகள் மீது தாறுமாறாக கிறுக்கியதுடன் அங்கிருந்த சித்திரங்களையும் சீர்குலைத்தனர். நள்ளிரவுக்குப் பின்னர், வெளியே கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிசார் கண்ணீர்புகைகளை பயன்படுத்தினர், மேலும் தொடர்ந்து கட்டிடத்தை பலமாகத் தாக்கி மீதமுள்ள ஆக்கிரமிப்பாளர்களையும் வெளியேற்றினர். அப்போது பெரும்பாலான ஆர்ப்பாட்டக்காரர்கள் லெகோ அறையை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் எவ்வளவு பேர் கைதானர்கள் மற்றும் காயமடைந்தார்கள் என்பது தெரியவில்லை.

குற்றவாளிகளை நாடுகடத்தும் சட்டம் அவர்களது நலன்களை அச்சுறுத்துவதாக கவலைப்படும் பான்-ஜனநாயகவாதிகள்   என்றழைக்கப்படும் ஹாங்காங்கின் பெருநிறுவன மற்றும் தொழில்முறை உயரடுக்கினரை பிரதிநிதித்துவப்படுத்தும்  பழமைவாத எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை பொறுத்தவரை குற்றவாளிகளை நாடுகடத்தும் சட்டம் அவர்களது நலன்களை அச்சுறுத்துவதாக கவலைப்படுகிறார்கள். இவர்கள் லெகோவை ஆக்கிரமிக்க வேண்டாம் என்று கோரியதை இளைய ஆர்ப்பாட்டக்காரர்கள் புறக்கணித்தனர். இந்த பான்-ஜனநாயகவாதிகள் கடந்த காலங்களில் சமரசம் செய்துகொள்வதற்கான தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்பதுடன், பெய்ஜிங் சார்பு நிர்வாகத்துடனும் மற்றும் சட்டமன்றத்தில் ஆதிக்கம் செலுத்தும் சட்டமன்ற உறுப்பினர்களுடனும் இவர்கள் ஒப்பந்தங்கள் செய்து கொள்கிறார்கள்.

பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்த குடை குழுவான சிவில் மனித உரிமைகள் முன்னணி (Civil Human Rights Front) என்ற அமைப்பு, எந்தவொரு கோரிக்கையையும் நிறைவேற்றத் தவறியதற்காக லாம் மீது குற்றம்சாட்டுகிறது. “இதுவரை பதிலளிப்பது குறித்து அவர் எந்தவித நேர்மையையும் காட்டவில்லை அல்லது பதிலளிக்கவில்லை,” என்று அது கூறியது, மேலும், அவரது மறுப்பு “இளைஞர்களை விரக்தியடையச் செய்துவிட்டது” என்றும் சேர்த்துக் கூறியது.

லெகோ கட்டிடத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வேறுபட்ட நோக்கங்களை கொண்டவர்களாகவும் மற்றும் ஒரு தெளிவான அரசியல் முன்னோக்கு இல்லாதவர்களாகவும் இருக்கின்றார்கள். தன்னை ஹென்றி என்று மட்டும் அடையாளம் காட்டிக் கொண்ட வாயு முகமூடி அணிந்திருந்த ஒருவர், சில எதிர்ப்பாளர்கள் உடைப்பதை எதிர்க்கக்கூடும், என்றாலும் அது “ஒரு தேவையான தீமை” ஆகும் என்று ஃபினான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்தார். மேலும் அவர், “எங்களில் ஒரு மில்லியன் பேர் அமைதியாக அணிவகுத்துச் சென்றோம், ஏன் இரண்டு மில்லியன் பேர் கூட அமைதியாக அணிவகுத்துச் சென்றோம், ஆயினும் அரசாங்கம் இன்னமும் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை” என்றும் கூறினார்.

ஒரு கட்டத்தில் லெகோ அறைக்குள் பிரிட்டிஷ் காலனித்துவ-கால கொடி ஒன்று காட்டப்பட்டது. பிற இடங்களில் “ஹாங்காங்கை விடுதலை செய்” என்ற பதாகைகள் உயர்த்திப் பிடிக்கப்பட்டன. ஆயினும், பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியை புகழ்ந்து பேசுவதோ அல்லது ஹாங்காங்கின் பிராந்தியவாதத்தை ஊக்குவிப்பதோ ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுவதற்கான அரசியல் வழிகளை வழங்கவில்லை. மாறாக, ஹாங்காங்கின் ஜனநாயகத்திற்கான போராட்டம் சீனா முழுவதுமான தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கான போராட்டத்துடன் முற்றிலும் பிணைந்துள்ளது.

நாடுகடத்தல் சட்டம் இடைநிறுத்தப்பட்ட போதிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நீடித்திருக்கின்றன என்ற உண்மை, அணிவகுப்பு மற்றும் பேரணிகளை ஊக்குவிக்கும் ஆழமான பிரச்சினைகளை சுட்டிக்காட்டுகிறது. வீட்டுவசதி, நலன்புரி மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகளின் பற்றாக்குறையின் விளைவாக மிகப்பரந்த சமூக பிரச்சினைகளை ஹாங்காங் எதிர்கொண்டுள்ள நிலையில், உலகின் மிகவும் சமூக சமத்துவமற்ற நகரங்களில் ஒன்றாக அது உள்ளது.

சென்ற வெள்ளிக்கிழமை South China Morning Post பத்திரிகையில் குறிப்பிடுகையில், வர்ணனையாளரான ஆல்பெர்ட் செங், ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அடிப்படை சமூக பிரச்சினைகளுக்கு அது தீர்வு காண வேண்டியுள்ளது என்று பெய்ஜிங்கிற்கும் அதன் ஹாங்காங் நிர்வாகத்திற்கும் எச்சரிக்கையுடன் அறிவுறுத்தினார். மேலும், “செல்வ இடைவெளி மற்றும் சமூகத்தில் உயர்ச்சியடைய இயலாமல் இருப்பது போன்றதான நகரத்தின் நீண்டகால பிரச்சினைகளைச் சமாளிப்பதில் அரசாங்கத்தின் திறமையின்மை, இளைய தலைமுறையினரிடையே விரக்தியை உருவாக்கியுள்ளதுடன், வீதிகளில் இறங்கி போராடுவதற்கும் அவர்களைத் தூண்டுகிறது,” என்று எழுதினார்.

இத்தகைய தொடர்ச்சியான போராட்டங்கள் அரசியல் நெருக்கடியை உருவாக்குகின்றன, அதாவது லாம் நிர்வாகத்திற்கு மட்டுமல்லாமல், பெய்ஜிங்கில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) ஆட்சிக்கும் சேர்த்து நெருக்கடியை உருவாக்குகின்றன. ஆர்ப்பாட்டங்கள் பற்றிய எந்தவொரு செய்தியும் பரவாமல் தடுப்பதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி எடுக்கின்ற போதிலும், ஹாங்காங்கில் நிலவும் அரசியல் அமைதியின்மை சீனாவின் முக்கிய பகுதிக்கும் பரவக்கூடும் என்று அதன் தலைமை அஞ்சுகிறது.

வாஷிங்டனின் மூர்க்கமான வர்த்தக மற்றும் பொருளாதார யுத்தத்தையும், மற்றும் தென் சீனக் கடலிலும் மற்றும் தைவான் ஜலசந்தியிலும் அமெரிக்க இராணுவ ஆத்திரமூட்டல்களையும் எதிர்கொள்ளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்துவம் எதிர்கொள்ளும் பெருகிவரும் பிரச்சினைகள் மற்றும் இக்கட்டான நிலைகளை இந்த எழுச்சி மேலும் கூட்டுகிறது. அதிகரித்துவரும் வேலையின்மை மற்றும் சமூக அமைதியின்மையை தவிர்ப்பதற்கு அவசியம் என்று நீண்டகாலமாக பேசப்பட்டு வந்த வளர்ச்சி விகிதங்கள் 8 சதவிகிதத்திற்கு கீழே வீழ்ந்துள்ள நிலையில், சீனப் பொருளாதாரம் தொடர்ந்து மந்தமடைந்து வருகிறது.

சீன ஆளும் வட்டாரங்களின் ஆழ்ந்த கவலைகளை பிரதிபலிக்கின்ற வகையில், சீனப் பிரதமர் லி கெக்கியாங் மார்ச் மாதம் காங்கிரஸை பின்வருமாறு எச்சரித்தார்: “கல்வி, சுகாதாரம், முதியோர் பராமரிப்பு, வீட்டுவசதி, உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு, மற்றும் வருமானப் பகிர்வு போன்ற பல துறைகளில் இன்னமும் மக்களின் அதிருப்தி நிலவுகிறது. சென்ற ஆண்டில் பல பொது பாதுகாப்பு சம்பவங்களும் பெரும் பணியிட விபத்துக்களும் நிகழ்ந்ததை காண முடிந்தது.”

சீன கம்யூனிஸ்ட் கட்சி  ஆட்சி தொழிலாள வர்க்கத்தின் ஒரு அரசியல் இயக்கம் தொடர்பாக அச்சமடைந்துள்ளது. ஆட்சியின் சந்தை சார்பு கொள்கைகளின் விளைவுகளுக்கு எதிரான சீனத் தொழிலாளர்களின் பரந்த எதிர்ப்பை நசுக்குவதை நோக்கமாக கொண்டு நடத்தப்பட்ட ஜூன் 4-5 தியானமென் சதுக்க படுகொலையின் 30 ஆம் ஆண்டு நினைவுகூரலைப் பற்றிய எந்தவொரு குறிப்பையும் இல்லாதொழிப்பதற்கு மிக நீண்டகாலமாக இது முயன்று வந்தது. தொழிலாளர்களின் இன்றைய எந்தவொரு பரந்த இயக்கமும் 1989 ஐ காட்டிலுமான ஒரு மிகப்பரந்த அளவிலான ஆர்ப்பாட்டத்தை வெடிக்கச் செய்யும்.

ஹாங்காங் ஆர்ப்பாட்டங்கள் சீனா முழுவதிலும் மற்றும் பிற இடங்களிலும் ஸ்திரமற்ற தன்மையை தூண்டுவதற்கான சாத்தியப்பாடு மேற்கத்திய தலைநகரங்களின் மட்டுப்படுத்தப்பட்ட பிரதிபலிப்பினால் விளங்கப்படுத்தக்கூடியதாக உள்ளது. ஆர்ப்பாட்டங்களை தணிப்பதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கவும் பேச்சுவார்த்தைகளை நடத்தவும் ஐரோப்பிய ஒன்றியம் கோரியது, அதேவேளையில் தனது இராணுவவாத நிலைப்பாட்டினால் இழிபுகழ் பெற்ற ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன், சீனா “அதன் சர்வதேச கடமைகளை கடைபிடிக்க வேண்டும்” என்று வெறுமனே அழைப்பு விடுத்தார்.

சென்ற வாரம் ஹாங்காங்கில் நடந்த சிறிய ஆர்ப்பாட்டங்கள், ஜி20 உச்சிமாநாட்டில் நாடுகடத்தல் சட்டம் பற்றிய பிரச்சினையை எழுப்புமாறு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளிடம் கோரியது, ஆனால் அவை புறக்கணிக்கப்பட்டன. தங்களது சொந்த மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களை முன்னெடுப்பதற்கான ஒரு வழிமுறையாக மட்டும் கருதி “மனித உரிமைகள்” குறித்த பிரச்சினையை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் ஏகாதிபத்திய சக்திகளை ஹாங்காங்கில் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்காக போராடுபவர்கள் நம்பமுடியாது.

ஸ்ராலினிச சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு எதிரான மற்றும் உண்மையான சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கான ஒரு ஒருங்கிணைந்த அரசியல் போராட்டத்தை ஒழுங்கமைப்பதற்காக சீனா முழுவதுமான தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்ப வேண்டியது அவசியமாக உள்ளது. இதற்கு, 20 ஆம் நூற்றாண்டு முழுவதும், சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஸ்ராலினிசத்தின் அனைத்து குற்றங்கள் மற்றும் காட்டிக்கொடுப்புகள் பற்றிய விளக்கத்தை அடித்தளமாக கொண்டிருக்க வேண்டும்.